“என்ன மாடசாமி ஊருக்கு போறதுக்கு ஏற்பாடுலாம் பயங்கரமா இருக்கு போல” என்றபடி அறைக்குள் வந்தான் மோகன்.

          “ஆமாணே இப்பவே ஆரம்பிச்சாதான் போறதுக்குள்ள எல்லாம் வாங்கியர முடியும். அப்பறம் எனக்கு வாங்கல உனக்கு வாங்கலனு பஞ்சாயத்தாகும் எதுக்கு வம்பு அதான் என்னென்ன வாங்கனும்னு லிஸ்ட்டு போட்டு வாங்கிட்டு இருக்கேன்ணே”.

        “அதுவும் சரிதான் வெளிநாட்டு வேலைன்னு வந்ததும் தான் வந்தோம் எனக்கு கோடாரி தைலம் வாங்கிட்டுவா, டாட்ச் லைட்ட வாங்கு, சென்ட் வாங்குனு என்னமோ இங்க மட்டும் தான் கிடைக்கிற மாதிரி மனுசன போட்டு பாடா படுத்துறாங்கய்ப்பா. நம்ம பொழப்ப பாக்கவா இல்ல இவனுங்களுக்கு என்னவேணும் ஏது வேணும்னு கடைகடையா அலையவானு தான் தெரியல… , ஆமா நீ எப்ப கெளம்புற?”

         “நாளைக்கு பகல் டியூட்டி முடிச்சிட்டு கிளம்பனும் அண்ணே இராத்திரிக்கு ப்ளைட்டு “

        “சரி டா பாத்துபோயிட்டு வா இப்ப வா சாப்பிட போலாம்”.

       “வாரேண்ணே…..,” என்ற படியே மாடசாமியும் அறைக்கதைவை சாத்திவிட்டு கிளம்பலானான்.

         மாடசாமி பன்னிரெண்டு வரைக்கும் தான் உள்ளூர் பள்ளிக்கூடத்துல படிச்சான். அதுக்கு மேல படிக்க வைக்க வசதியும் இல்ல. வெளியூருக்கு போயி படிக்க விடமாட்டேனு அவ ஆத்தா பிடிவாதம் பண்ண இவனும் படிக்கனுங்கிற என்னத்தையே விட்டுட்டு ஊர சுத்திட்டு இருந்தான்.

           மாடசாமி அப்பனும் ஆத்தாளும் கூலி வேலைக்கு தான் போயிட்டு இருந்தாங்க. ஒருதடவ வாழைத்தார் இறக்க போன எடத்துல வரப்பு மேட்டுல காலு இடறி விழுந்துட்டான். அதுல காலு பிசகிட்டு. சுடலையால முன்ன போல வேலைக்கு போக முடியாம போகவும் அக்கா கல்யாணம், கூரைவீட்ட பிரிச்சு சென்டிங் போடனும் இப்படி முடிவடையாத குடும்பத்தேவை எல்லாம் இவன் தலைல வந்து விழுந்துச்சு.

         “கத்தார் பணத்துக்கு 1500 ரியால் சம்பளம் டே இந்திய மதிப்புபடி கிட்டத்தட்ட 30000 மாதம் கிடைக்கும் .ஆனா தங்க சாப்பாட்டுக்கு எல்லாம் நாம தான் பாத்துக்கனும். இப்ப நான் தங்கி இருக்கிற ரூம்க்கே நீயும் வந்துடு நாம வாடகைய ஷேர் பண்ணிக்கலாம்” அப்படினு பக்கத்து ஊருல சேகரு சொல்லவும் எத பத்தியும் மாடசாமி யோசிக்கல. இங்க இருந்தா எவன் குடுப்பான்? இந்த பணத்த அப்படினு யோசிச்சவன், கத்தார் போக முடிவு பண்ணிணான் . வழக்கம்போல அவன் ஆத்த “கருவேப்பிலை கொத்தாட்டம் ஒத்த பிள்ளைய வச்சிருக்கேன் இப்படி கண்காணத இடத்துக்கு அனுப்ப சொல்லுறியலேனு” அழுது பொழம்புன ஆத்தாளை சமாளிச்சு ஒரு வழியா கத்தாரு வந்து சேர்ந்தான்

      சேகரும் மாடசாமியும் பன்னெண்டாங்கிளாசு வரைக்கும் ஒன்னா படிச்சானுங்க. சேகருக்கு ரெண்டு அக்கா. ஆறாப்பு படிக்கும் போதே அவனோட அய்யனும் தவறிபோயிட்டாரு. பிறகென்ன படிப்ப முடிக்கவும் பொழப்ப பாக்கசொல்லி கத்தாருக்கு அனுப்பிவுட்டுட்டாக. 

  கத்தார் வந்ததுக்கு அப்பறமா தான் அவனேட அக்காக்கள் ரெண்டு பேருக்கும் கல்யாணத்த முடிச்சு வச்சான். அவ அப்பன் பங்கு பாகத்துல வந்த இடத்தைல வீட்ட கட்டுறதுக்கு அஸ்திவாரமும் போட்டுட்டான். 

            அதனால அவன் பேச்ச மல போல நம்பினான். எப்படியும் தலைமேல இருக்குற பாரத்த இறக்கி வச்சிடலாம்னு பயணம் போனான் கரம்பைல இருந்து கத்தாருக்கு.

 அவன் நினச்சமாதிரி சம்பளத்துக்கு ஒன்னும் கொறவில்ல ஆனா சாப்பாடு தான் சரிபட்டு வரல அவனுக்கு. ஊருல பழைய சோத்துக்கே கருவாட்டு தொக்கு, சின்ன வெங்காயம், சுண்ட குழம்பு, சின்னையன் லாலாகடை மிக்சர் அப்படினு வகைவகையா காரசாரமா தான் தின்பான். ஒத்த பய அதுவும் ஆம்பள புள்ளனுதும் அவனோட ஆத்தா மாரியம்மா அவன் மனசுகோனாம சாப்பாடு போடுவா. மதியம் சாப்பாட்டுக்கு என்ன காய் வச்சாலும் கூட ஒரு முட்டைய பொரிச்சு வச்சாத்தான் அவன் தொண்டைல இறங்கும். இல்லைனா ஆடுவான். அவனுக்காவே மாரியம்மா வீட்டுல ஐஞ்சாறு கோழிய கூட வளத்தா.

           மாடசாமி கத்தாரு வந்து ரெண்டு வருஷமாச்சு. வந்த புதுசுல காஞ்சு போன ரொட்டிய பாத்தவன் மூஞ்சு செத்து போச்சு.

    “என்ன டா முழிக்கிற?”…,

    “இல்லைணா நானும் வந்து ரெண்டு நாளா ரெண்டு வேல இத தான் குடுக்கிங்க. ஒரு வேல தான் சோறு கிடைக்கு. இதையே சாப்பிட முடியலணா.”

“ப்ளைட்டுல வரும்போதும் இப்படி தான் குடுத்தாங்கணா. நல்லா ஆயி போயி நாளு நாள் ஆகுதுணே. இத சாப்புட்டு சாப்புட்டு நாக்கு செத்துறும் போல இருக்குணே .”

      “அதுக்கு என்னபா பண்ண முடியும்? இங்க இது தான் பா சாப்பாடு. மூனு வேளையும் சோறு சாப்பிடனும்னா நாம வாங்குற சம்பளம் அதுக்கே சரியா போகிடும். அப்பறம் வீட்டுல இருந்து உனக்கு செலவுக்கு பணம் அனுப்ப சொல்லனும்.”

“கவலபடாம சாப்பிடுடா எல்லாம் போக போக பழகிடும். இங்க நாக்க வளத்தா நாம வாழ முடியாது டா. கிடைக்கிறத பசிக்கு நாலு வாய் உள்ள தள்ளிட்டு வேலைய பாக்க போயிடனும். அப்பதான் என்னத்தையாது ஊருக்கு அனுப்ப முடியும். நாம என்ன காலம் பூராவுமா இங்க இருக்க போறோம்? கடன அடச்சிட்டு நாலு காச சேர்க்கிற வரைக்கும் கண்ணமூடிட்டு இருக்கனும் டா”.

              காஞ்சி போன அந்த பன்ன பிச்சி விதியேனு வாய்ல போட்டவன் நெனப்பெல்லாம் ஊருக்கு போகனும் என்றுதான் இருந்தது. ஆனா வேலைக்கு சேர்க்கும் போது இரண்டு வருஷத்துக்கு ஒரு வாட்டி தான் ஊருக்கு போகனும்னு ஒப்பந்தம் போட்டு தான் வந்தான். அதனால இனி இந்த ரெண்டு வருஷமும் இந்த காஞ்சுபோன பன்னுதான்னு மனச தேத்திக்கிட்டு பன்ன உள்ள தள்ளுனான் மாடசாமி. அவன் நினைப்பெல்லாம் அவன் ஆத்தாவோட சமையல தான் சுத்திவந்தது.

      மாரியம்மா கைப்பக்குவம் அந்த ஊருல யாருக்கும் வராது. பாத்து பாத்து பக்குவமா செய்வா. அவ சமையல சாப்பிட்ட சாப்பிடுறவக ஆயுசுக்கும் அவளுக்கு அடிமையா தான் கிடப்பாக. அப்படி ஒரு ருசி அவ சமையல்ல.

            மாடசாமி வீட்டுக்கு ஒத்த வாரிசு. போதாதக்குறைக்கு அவ அப்பன் பேர தான் மவனுக்கு வச்ச. அதனால அவன் வாய்க்கும் வயித்துக்கும் வஞ்சகம் இல்லாம பாத்துக்கிட்டா.

           மாடசாமி வீட்டுல இருந்து பத்தடி தாண்டி இருக்குற எருக்குழி பக்கத்துல ஒரு புளியமரம் இருக்கும். நல்ல பூவும் பிஞ்சும் கொட்டி கிடக்குற சமயத்துல மரத்துல இருந்து பிஞ்ச புளியங்காய பறிச்சு வரமிளகாய்,கல்உப்பு சேத்து அம்மில வச்சு அரைச்சு தொவையலாரச்சி புல்லு தோசை சுட்டாக்க கொண்டா கொண்டானு நாக்கு கேக்கும். புல்லு தோசைக்கு இப்படினா நெல்லு தோசைக்கு கொப்பரை தோங்காயோட வரமிளகாய் காம்பாஞ்சி போட்டு, கல்உப்பு ,காஞ்ச புளி சேத்து அரைக்கிற தொவையலு தனி ருசி. இன்னும் பொரிகடலை வச்சு அரைக்கிற தொவையல், மல்லி ,கருவேப்பிலை தொவையல்னு தொவையல மட்டுமே விதவிதமா செய்வா.

 தன்னோட கைபேசி அடிக்கவும் சுயநினைவுக்கு வந்தவன் எடுத்து பாத்தான். கம்பெனில இருந்து தான் சவாரி வந்துருக்குனு கூப்பிடுறாங்க. பாத்ததுமே அவசர அவசரமா ஓடுனான். சவாரியெல்லாம் முடிஞ்சதும் வழக்கம்போல ரூம்கு வந்தான்.

   “என்ன மாடசாமி இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட”.

      “இன்னைக்கு சவாரி ஒன்னும் பெருசா வர்ல அதான் ஓனரு சீக்கரம் கிளம்ப சொல்லிட்டாரு”.

       “ஆமா நீ ஊருக்கு போறேனு கேள்விப்பட்டேன் “.

 “ஆமாண்ணே நாளைக்கு பகல் டியூட்டி முடிஞ்சதும் இராத்திரி ப்ளைட்டுல ஊருக்கு போறேன்ணே”.

       “எனக்கு ஒரு சின்ன உதவி செய்யனுமே!” என்றபடி இழுத்தான் சந்தோஷ்.

     “என்ன அண்ணே சொல்லுங்க உங்களுக்கு செய்யாமலா! என்னனு சொல்லுங்க  செஞ்சிடலாம்”.

” நாளைக்கு காலைல நா ஒரு பார்சல் தாரேன் அத கொண்டுபோயி ஏர்போட்டுல நம்மாளு வருவான் அவன்கிட்ட குடுக்க முடியுமா டே”.

   “சரிணே குடுத்துடுறேன் நீங்க மறக்காம கொண்டுவாங்க”

 “சரிப்பா நா கிளம்பறேன் எனக்கு டியூட்டிக்கு நேரமாச்சு. நீயும் படு இப்ப தான வந்த “என்றபடியே சென்றான் சந்தேஷ்.

           மாடசாமி கண்அயரும் நேரம் சரியாக அவனின் கைபேசி அழைத்தது .

        “எம்மோ எப்படி இருக்க….,”

      “நல்லாருக்கேன் யா…,”

   “நீ எப்படி இருக்க….,”

   “நல்லாருக்கேன் மா ….,”

   “நாளைக்கு ஊருக்கு வாரதான?…,”

     “இதையே எத்தனவாட்டிமோ கேப்ப நாளைக்கு இன்னேரத்துக்குலாம் ப்ளைட்டுல ஏறிருப்பேன் மா..,”

   “சரிய்யா தேவையானதெல்லாம் எடுத்து வச்சுக்கோ மறந்துறாம. அந்த தைல பாட்டில்ல கூட ரெண்டு வாங்கியாய்யா. எதிர்வீட்டு மாலதிக்கும் அவ ஆத்தாளுக்கும் வேணுமின்னு கேட்டா ..,”

    “சரிம்மா நான் எல்லாம் வாங்கிட்டேன் இப்ப தூங்க போறேன் இப்பதான் டியூட்டி முடிஞ்சி வந்தேன் பொறவு பேசுறேன்”.

     “சரிப்பா போய் தூங்கு வச்சுடுறேன்..,”

           பொழுது விடிஞ்சதும் மாடசாமி டியூட்டிக்கு கிளம்பிட்டு இருந்தான். நேற்று சொன்ன படியே பார்சலுடன் வந்து சேர்ந்தான் சந்தேஷ்.

         “மாடசாமி..,” என்றபடியே ரூம்வாசலில் நின்று அழைக்கவும் உள்ளே வருமாறு குரல் கொடுத்தான் .

       “இந்தாடே இது தான் நான் சொன்ன பார்சல். நீ ஏர்போட்டுல இறங்குனதும் அங்க நம்ம ஊருபய வந்து உங்கிட்ட பார்சல் வாங்கிக்குவான்.”

  “அவனுக்கு எப்படிணே என்ன அடையாளம் தெரியும்?”

“நான் உன் போன் நம்பரும் போட்டோவும் அனுப்பிருக்கேன் டே. அவன் உன்ன கண்டுபுடிச்சிடுவான். உன் செல்லுக்கும் அவன் போட்டோவும் போன் நம்பரும் அனுப்புறேன்” என்றபடியே சந்தேஷ் விடைபெற்றான்.

         வழக்கம்போல இல்லாம ரொம்ப உற்சாகமா வேலைக்கு வந்தான் மாடசாமி.

“என்ன மாடசாமி ஊருக்குபோற குஷில இருக்க போல” என்றபடி தனது ஐடி கார்டை போட்டுக்கொண்டான் ரவி.

      “ஊருக்கு போறதவிட இந்த பாழாப்போன ரொட்டிக்கிட்ட இருந்து விமோச்சனம் கிடைக்கிறதுல தானே சந்தோஷம்”

         “பார்டா என்னமோ திரும்ப இங்க வரப்போறதே இல்லைங்கிற மாதிரில சொல்லுறவன். எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் அப்பறம் திரும்ப வந்து இந்த பன்னுகூட தான் பஞ்சாயத்து பண்ணனும் டே பாத்துக்கோ.”

    “அட நீ வேற ஏம்பா அவன போட்டு படுத்துறவன்” என்றான் மோகன்.

   “பின்ன என்னப்பா நாமெல்லாம் இங்க கிடைக்கிற தின்னுட்டு உயிர் வாழல. இவன் என்னடானா வந்ததுல இருந்து இப்பவரைக்கும் பொலம்பியே சாவடிக்கிறான்”.

   “அட விடுப்பா சின்ன பய நல்ல்ச்ச் வாயிக்கு ருசியா சாப்பிட்டு வளந்தவனால சட்டுனு மாற முடியுமா?..,”

“அப்படி சொல்லுங்கணே. மூணு வேளையும் வத்தனையா திண்னவன காய்ப்போட்ட இப்படி தான் பொலம்புவேன்…,”

     “அடேய் நீ உசிர் வாழ சாப்பிடுறியா? இல்ல சாப்பிட உசிர்வாழுறியா?” என்றபடி சிரித்தான் ரவி.

          “ரெண்டுக்கும் தான்ணே…, இப்படி ராத்திரி பகலா வேலை பாத்து காவயித்து கஞ்சிகூட குடிக்க முடியலனா உசிர் வாழந்து என்ன பிரயோஜனம் சொல்லுங்க”.

       “சரி டே நீ ஆசப்படுற மாதிரி இன்னும் ஒரு மாசம் சாப்பிட போற. அதனால ஊருக்கு போறதுக்கு முன்னாடி எங்களுக்கு எல்லாம் டிரீட்டு வச்சிட்டுபோ”.

       “வச்சிட்டா போச்சு எல்லாருக்கும் மதிய சாப்பாடு எஞ்செலவு “

         “அப்பனா நான் சந்தோஷ்கிட்டயும் சொல்லிடுறேன் அவனும் வந்துடுவான். சவாரிக்கு நேரமாச்சு மதியம் பாக்கலாம்” என்றபடி நண்பர்கள் குழு கலைந்துசென்றது.

      சொன்னது போல மதிய உணவுக்கு நண்பர்கள் அனைவரும் உணவகத்திற்கு வந்தனர்.

              எல்லாருக்கும் மக்பூஸ் எனப்படும் கத்தாரின் பிரசித்தி பெற்ற உணவு பரிமாறப்பட்டது. மக்பூஸ் என்பது அரிசி, காய்கறி, ஆட்டு இறைச்சி அல்லது கோழி இறைச்சி சேர்த்து செய்யுற உணவு. அங்க கிடைக்கிற உணவுகளில் பரவலாக எல்லாருக்கும் பிடித்த உணவும் இது தான் என்பதால் அதையே ஆர்டர் செய்திருந்தனர்.

         உணவு பாமாறப்பட்டதும் தனக்கான உணவில் இருந்த கோழி இறைச்சியை சுவைத்த படியே ரவி தான் கேட்டான் “மாடசாமி இங்கையும் தான் நாக்குக்கு ருசியான சாப்பாடுலாம் இருக்கு ஆனா உனக்கு மட்டும் ஏன் அதெல்லாம் புடிக்க மாட்டுக்கு?”

       “அண்ணே சாப்பாடுனா என்னனு நினைச்சிங்க? உயிர் வாழுறதுக்காக மட்டும் சாப்பிடுறது கிடையாதுணே. அது நமக்கு ஒரு சந்தோஷத்த கொடுக்கனும் இங்க உள்ள சாப்பாட்டுல அப்படி ஒரு சந்தோஷத்த நான் அனுபவிச்சதே கிடையாதுணே”.

        “என்னடே இப்படி சொல்லிட்ட?”

  “அட ஆமாணே! எனக்கு இந்த கோழிக்கறிய பாத்த ஒரு சந்தோஷமும் வரல. இதுவே எங்காத்தா கோழிக்குழம்பு வைக்க கோழிய மஞ்சதூள போட்டுக்கழுவி, இஞ்சிபூண்டு ,சின்னவெங்காயம் தட்டிபோட்டு சட்டில வேகவிட்டுட்டு அப்படியே இந்த பக்கம் சீனா சட்டில மல்லி,வரமிளகாய்,மிளகு, சின்னசீரகம்,பெரிய சீரகம் பட்டை,லவங்கம் இப்படி மசாலா சாமனா எல்லாம் வறுத்து கடைசில கொப்பரை தேங்காயும் கூட போட்டு நல்ல வறுத்து அம்மில அரைச்சி குழம்ப கூட்டுனா வீடே மணக்கும். கடைசியா நல்லா கொதிச்சதும் நல்லெண்ணைல கடுகு, சின்னவெங்காயம்,கருவேப்பிலை லாம் போட்டு தாளிச்சு தலைல கொட்டு இறக்கி வச்சதும் வரும் பாருங்க ஒரு சந்தோஷம் அதுக்கு முன்னாடி இந்த சாப்பாடுலாம் நிக்க கூட முடியாதுணே.”

   “இங்க வைக்கிறாங்களே அதுக்கு பேருலாம் பரோட்டாவா? ஊருல நம்ம அப்துல் மாமா பரோட்டா கடைல போடுவாங்க பாரு அதுதான் பரோட்டணே “

“நாலு பரோட்டானு ஆடர் போட்டுட்டு போயி உக்காந்தா வாழை இலைய போட்டு தண்ணி தெளிச்சு கல்லுல இருந்து அப்படியே இலைல வந்து விழுகும் பரோட்டா. அத அப்படியே இந்த பக்கம் ரெண்டு தட்டு அந்த பக்கம் ரெண்டு தட்டு தட்டி பிச்சிபோட்டுட்டு அதுக்கு மேல கொதிக்கிற சால்னவ ஊத்தும்போது வரும் பாருங்க ஒரு சந்தோஷம் அதுக்கு சொத்தையே எழுதிவைக்கலாம். அந்த சால்னால கூட ஒரப்பு சால்னா ஒரப்பில்லாத சால்னானு ரெண்டு ரகம் ஊத்துவாக. தொட்டுக்க நறுக்குன பல்லாரியும் வைப்பாங்க. சால்னால வெரவி வெங்காயத்தோட நாக்குல வைக்கும் போது கண்ணுல சொர்க்கம் தெரியும்ணே….,”

       “டேய் நீ சொல்லும் போதே நாக்குல எச்சி ஊறுதுடா. என்ன பண்ண நாம குடுத்து வச்சது அவ்வளவு தான். காசு பணம் சம்பாதிக்க இப்படி வந்து நல்ல சோறு தண்ணி கூட இல்லாம கஷ்டப்படுறோம். ஆனா பாரு ஊருல இருக்குறவனுங்கலாம் உனக்கென்பா வெளிநாட்டுல இருக்கிற கைநிறைய சம்பளம் ராஜாவாட்டம் வாழ்க்கைனு பொசுங்குறானுங்க. அவனுங்களுக்கு என்ன தெரியுது நம்ப படுற கஷ்டம் “என்றான் மோகன்.

          “அப்பனா நீ ஊருக்கு போறது பரோட்டாவுக்கும் கோழிக்குழம்புக்கும் தான்னு சொல்லு ..”

               “அதுக்கும் தான். ஆனா ஊருக்கு போனுதும் மொத வேலையா ஆத்தாக்கிட்ட சொல்லி பழையசோறும் கத்திரிக்கா சுட்டு பிசைஞ்ச கிச்சடியும் தான் வாங்கி சாப்படனும் ணே”

        “எது எப்படியோ இன்னும் ஒரு மாசத்துக்கு   ஆசைப்பட்டதொல்லாம் சாப்பிட்டு அனுபவிச்சிட்டு வா, ஆனா ஒன்னுடா உன் வயசுல பசங்க கனவுல ஆசைப்பட்ட பொட்டபுள்ள நினைச்சு ஏங்குவாங்க. நீ என்னடானா இப்படி சாப்பாட்டுக்கு ஏங்குறியே.. சரியான சாப்பாட்டுராமன் டா நீ” என்றான் சந்தோஷ்.

       அதைக்கேட்ட மாடசாமி வாயெல்லாம் பல்லாக சிரித்தபடியே இருந்தான்.

000

ரா.சண்முகவள்ளி

கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன்.

இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம்,  வானவில், நான் போன்ற  மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *