- பித்ரூ
உங்களுக்கும்
எனக்கும்
எந்த உறவும் இல்லை
என்றபோதும்கூட
வருடாவருடம்
வாருங்கள்
இதே நாளில்
படையல் அளிப்பேன்
அடித்துக்கொள்ளாமல்
என்னைப் பிய்த்துக்கொண்டால் சரி.
2. இருட்பூனை
தெரியாமலும் கூட
வெற்று
பண்டப்பாத்திரங்களைப்
புரட்டி
தடபுட சத்தமெழுப்பாதீர்
ஒலியின்
வெளிச்சத்தில்
இருள் பூனைகள்
அகப்பட்டு விடும்.
- தயதுசெய்து
என் முன் அழாதே
அனுதாபத்தில் வேண்டுமானால்
வருந்துவேன்
அடடா என ரசித்து
கவிதை எழுதுவேன்
ஓவியத்தில் உட்படுத்தி
சிரிக்கவும் செய்வேன்
தயவுசெய்து
என் முன் அழாதே
ஆறுதலாய் அரவணைக்கவோ
அறிவுரைக் கூறி
கழுத்தறுக்கவோ
முன்வராது இந்த சீவன்
இவ்வளவுக்குப் பின்னும்
அழுது தீர்க்க
நீ ஆயத்தமாவது
ஒரு மனிதநேயமற்றச் செயல்.
4.ஒருவனே தேவன்
எங்கும் இருக்கலாம்
உனதருகில் கூட
மெய்யாலுமே சொல்கிறேன்
இப்போது உங்களிடம்
பேசிக்கொண்டும் இருக்கலாம்
நான்
நானே ஏக இறைவன்
பூஜைகளும்
தொழுகைகளும்
ஜெபங்களும்
எல்லாம் எனக்காகவே
என்னை நிந்தித்தே
கவலை வேண்டாம்
எல்லாருமே என்னால் அருளப்படுவீர்
நாத்திகர்களே
உங்களுக்கும் என் அருள்
இறுதியில்
உங்களின் வசைச் சொற்களுக்கும்
ஆளாக வேண்டும்
எல்லாவற்றையும் சுமக்கத் தயார்
அனைத்தும் முன்னமே யாம் அறிவோம்
யாவற்றையும் உணர்த்தவே
தூதனாக
மானுட உருவில் பிரவேசிக்கும்
இக்கடவுளுக்கு
ஒரு புன்னகையும்
ஒரு துளிக் கண்ணீரையும்
ஒரு சேர சிந்துங்கள்
பொறுத்தருள்க
உடன் வருகிறேன்
தனியாக
அந்தச் சாலையைக் கடக்க
பயமாக இருக்கிறது.
00
