1
காற்றும் அலையும்
ஒழுங்கு செய்த
மணல் படிமத்தை
மனித நடமாட்டங்கள்
உருக்குலைக்கின்றன
அழித்தழித்து
அடித்தடித்து
அலை
மீண்டும் மீண்டும்
கேட்டுக்கொண்டேயிருக்கிறது
அழியாத தடத்தை
விட்டுச் செல்லும்
முதல் மனிதன்
யார்…?
2
எக்ஸ்பிரஸ் ரயிலின்
அதிவேகத்தில்
கண்ணிமைக்கும் நொடியில்
கடந்துபோன
அந்த ஊரின் பெயர்
என்னவாக இருக்கும்…
அங்கேயே நிற்கிறது
மனம்.
3
உண்டு முடித்து
கைகழுவிய பின்
கையில் ஒட்டியிருக்கும்
ஒற்றைப் பருக்கையை
சுண்டிவிடும் மனிதர்கள்
தட்டில் ஒட்டியிருக்கும்
கடைசிப் பருக்கையை
வழித்துச் சுவைக்கிறார்கள்
மதிப்பை நிர்ணயிக்கிறது
இடமும் காலமும்.
4
அசையும் நிழல்
நின்ற கணத்தில்
மனம்
எழுந்தசைகிறது
உள்ளும் புறமும்
கலந்தியங்கும் ரகசியம்
யாருமறியார்.
5
பாதியில்
கலைந்துபோன
கனவின் மிச்சத்தில்
அவன்
இன்னமும் வாழ்கிறான்
அதன் பிறகு
உறங்கவே இல்லை
மிச்சத்தின்
வீரியம் அப்படி.
அதிலேயே
இறுதிவரை
வாழ்ந்து முடித்துவிடுவானோ…
விடுவான்.
6
அந்த அழைப்பிதழில்
அவர் பெயரை
கொட்டை எழுத்துகளில் போடாதது
அந்த எழுத்தாளருக்கு வருத்தம்
கடைசியாக
கொட்டை எழுத்துகளில் போட்டது
அவருக்கு
இன்னும் நினைவிருக்கிறது
எத்தனை காலமானால் என்ன
கொட்டை, கொட்டைதான்
பழைய நினைவூற
தேற்றிக்கொண்டார்
கொட்டையின் மீதான
ஏக்கங்கள்
எப்போதும் தொடர்கின்றன.
***

சுகதேவ் – மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).