1
மகரக் கட்டை
உடைந்துவிட்டது அவனுக்கு
முகரக் கட்டையைப் பாரு
உருப்படாது
திட்டிக்கொண்டிருந்தார் அப்பா
இப்பவோ எப்பவோன்னு
கிடக்கு இந்தக் கட்டை
பாட்டி தன்னில்
புலம்பிக்கொண்டிருந்தாள்
எரிச்சலுடன்
வெளியே செல்ல ஆயத்தமானான்
வாடி வாடி நாட்டுக்கட்டை
வசமா வந்து மாட்டிக்கிட்ட
பண்பலை வானொலியில்
பாட்டு ஒலித்தது
வெளியே வந்தான்
செம்மரக் கட்டை கடத்தல்
ஆந்திராவில் தமிழர்கள் கைது
பக்கத்து வீட்டுக்காரர்
சத்தம் போட்டு
நாளிதழ் படித்துக்கொண்டிருந்தார்
அதெல்லாம் பழைய மரக்கட்டை
உளுத்துப் போயிருக்கும் மாத்தணும்
எதிர் வீட்டுக்காரர் யாரிடமோ
சொல்லிக் கொண்டிருந்தார்
அவன் கட்டையால்ல இருப்பான்
டூவீலரில் சென்றவர்
பின்னால் உட்கார்ந்திருந்தவரிடம்
பேசிக் கொண்டிருந்தார்
பேசணும்ல
கட்ட மாதிரி கிடந்தா எப்படி
டீ கடையில்
புகை பிடித்துக்கொண்டே
நியாயம் பேசிக்கொண்டிருந்தான்
ஒருவன்
இவன் மனத்தில்
ஒருவன் ஒலி…
திரும்பி நடந்தான்.
2
மரங்கள்
சாய்ந்து கிடக்கின்றன
நந்தவனத்தில்
வெறும் புற்கள் மட்டும்
நிறைந்திருக்கின்றன
மிச்சமிருக்கும் செடிகளில்
முன்பில்லா
புதுவண்ணப் பூக்கள்
அத்தனையும் ஏ.ஐ. வினை
இனி
பூமாலை கட்ட முடியாது
பூவைப் போல
மாலை கட்டலாம்
வாசனையும் வரும்
ஒரே பூவிலிருந்து
பல வாசனை
ஆம்.
ஒவ்வொரு பூவும்
ஒரே பூவே.
3
ஜென்ஸி தலைமுறையிடம்
யாரும் வைத்துக்கொள்வதில்லை
அவர்கள் என்ன செய்வார்களென
யாருக்கும் தெரியாது
ஏதாவது செய்வார்கள் என்பது
சிலரது நம்பிக்கை
எதையாவது செய்துவிடுவார்களோ என்பது
சிலரது அச்சம்
எப்படியாவது செய்துவிடுவார்கள் என்பது
சிலரது எதிர்பார்ப்பு
செய்யாமல்
எப்படி இருக்க முடியும்?
செய்வார்கள் அல்லது
செய்துவிடுவார்கள்.
4
மனநலம் தேடி
உளவியல் நிபுணரிடம்
செல்கிறார்கள் மனிதர்கள்
ஒவ்வொருவரும் அவரவர்
மனநலத்தை துருவினால்
கடைசியாக
முழு மனநலத்துடன் இருந்தது
நினைவிருக்குமா?
தெரியவில்லை
வாரம் ஒரு முறை
மூன்று லார்ஜ் பாப்கார்ன்கள் கொறிக்க
குடும்பத்துடன் படம் பார்ப்பதோ
நள்ளிரவில் தேடிச் சென்று
ஐஸ் க்ரீம் சாப்பிடுவதோ
மனநலத்துடன் உடல்நலத்தையும்
சேர்த்துப் பாதிக்கலாம்
மனநலம் காப்பது
ஒரு தொடர் முயற்சி
முதலில்
உங்களுக்குள்ளே
தேங்கிக்கிடக்கும்
இடிபாடுகளைச் சரிசெய்யுங்கள்.
5
அதிகாரம்
பக்கத்தில் குவிந்திருக்கும்போது
தேவைக்கேற்ப மட்டும்
பயன்படுத்தினால்
அவன் மனிதன்
அவசியம் எழுந்தாலும்
அதிகாரத்தை ஏவாமல்
எதிர்கொண்டால்
அவன் மாமனிதன்.
அதிகாரம்
தன்னை நோக்கி பாயும்போது
நிலைகுலையாமல் நிற்பவன்
ஞானி.
6
சைக்கிளிலும் டூவீலரிலும்
தின்பண்டங்கள் விற்று
பிழைப்பை நடத்தும் ஒருவர்
வீட்டிற்கு சென்றவுடன்
எப்படிப் பாதுகாப்பார்
அவற்றை?
அவரது குழந்தைகள்
தினமும் கேட்டு
அடம்பிடித்தால்
எப்படிச் சமாளிப்பார்?
இதற்காக
அன்றாடம் அவர்கள் தூங்கிய பிறகு
வீடு திரும்ப முடியுமா?
இல்லையெனில்
அவர்களில் விழிக்கும்முன்
வியாபாரத்துக்கு கிளம்ப முடியுமா?
சில்லறை வியாபாரம் என
சொல்லிக் கடக்கிறோம்
கடையடைத்துவிட்டு
வீட்டிற்குப் போகலாம்…
கடையையே
வீட்டிற்கு எடுத்துச் செல்பவர்களின்
சவால்கள்….
நாம் நினைத்துப் பார்ப்பதற்கும்
மேல்.
7
ரயில்களில்
வழியை அடைத்துக்கொண்டு
அமர்ந்திருப்பதை
தட்டிக் கேட்கும் பயணியை
அடாவடிப் பேர்வழிகள்
அவமதித்து அனுப்புகிறார்கள்
இதர பயணிகள்
சின்ன உரசல்கூட இல்லாமல்
தங்கள் அமைதியைப் பாதுகாப்பதில்
முனைப்பு காட்டுகிறார்கள்
அவ்வளவுதான்
நமது
பொது நியாயம்
அத்துமீறுபவர்களை
சிந்தாமல் சிதறாமல்
கட்டிக் காக்கும்.
*****

சுகதேவ் –
மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

