1

கண்ணாடியின் இரண்டாவது முகம்

கண்ணாடி

முகங்களைச் சேமிப்பதில்லை.

நாம் நகர்ந்த பிறகே

அது தன் தனிமையைப் பார்க்கிறது.

,

ஒரு முதிய பெண்

தினமும் அதன்முன் முடிசீவினாள்.

ஆண்டுகள் கழிந்து அவள் இல்லை.

ஆனால், சில நரைமுடிகள்

இன்னும் ஒளியின் மொழியில்

அசைந்துகொண்டிருக்கின்றன.

,

ஒரு குழந்தை

தன் முதல் சிரிப்பை ஒப்படைத்த நாளில்,

கண்ணாடி சற்று வட்டமானது.

,

உடைந்த கண்ணாடிகள் கூர்மையாவதன் ரகசியம்

அவை உடைந்ததால் அல்ல;

அதிகமான முகங்களைச் சுமந்ததால்.

,

இன்று நான் நின்றபோது

என் பிம்பம் வரவில்லை.

எனக்கு முன்பிருந்த வெற்றிடம்

என்னை உற்றுப்பார்த்தது.

நான் நகர்ந்த பிறகும்

அது அங்கேயே நின்றிருந்தது.

,

2

கதவின் மறுபக்கம்

,

ஒரு கதவு திறக்கப்படுவதில்லை.

அது

இரண்டு தனிமைகளுக்கு இடையே

தன் உடலை நிமிர்த்தி நிற்கிறது.

அதன் கைப்பிடியில்

எத்தனை கரங்கள் தங்கியிருந்தன என்பதைக்

கதவு எண்ணுவதில்லை.

அது

விட்டுச்செல்லப்பட்ட வெப்பங்களை மட்டுமே

சேகரிக்கிறது.

,

ஒருநாள் வீடு காலியானது.

நாற்காலிகள்

தங்கள் நிழல்களை மடித்துக்கொண்டன.

ஜன்னல்கள்

வெளிச்சத்தை மெதுவாகத் திருப்பியனுப்பின.

,

கதவு மட்டும்

யாரோ திரும்பிவருவார்கள் என்ற

மரத்தின் பழைய நம்பிக்கையுடன் நின்றிருந்தது.

காற்று அதைத் திறக்கவில்லை;

நினைவுதான் திறந்தது.

அப்போது அறைக்குள் நுழைந்தது மனிதனல்ல—

ஒரு வாசனை.

பிறகு ஒரு சிரிப்பு.

பிறகு பல ஆண்டுகளாய்ப் பேசப்படாத ஒரு பெயர்.

இறுதியாக அமைதி.

அது கதவை மூடாமல்

அதன் அருகில் உட்கார்ந்துகொண்டது.

,

அந்த இரவில்

கதவு முதன்முறையாகத் தன்னை

மரமென்று கனவுகாணவில்லை;

ஒரு பாதையெனக் கனவு கண்டது.

,

3

காலியான அறையின் ஒளி

,

அறையில் யாருமில்லை.

ஆனாலும் கதவு

மெதுவாகத் திறக்கிறது—

யாருக்காக என்று அதற்கே தெரியாமல்.

,

சுவர் கடிகாரம்

நேரத்தைக் காட்டுவதில்லை;

கடந்துபோன கைகளின் அசைவுகளைக்

கனவு காண்கிறது.

,

மேசை மீது கோப்பை.

அதில் தேநீரில்லை.

ஆனால், இரண்டு பேர் பேசாமல் இருந்த ஒரு மாலை

இன்னும் அதன் விளிம்பில் சூடாக இருக்கிறது.

,

ஜன்னலுக்கு வெளியே மரம்.

அதன் இலைகள் காற்றினால் அசையவில்லை;

யாரோ ஒரு பெயரை நினைத்தபோது அசைந்தன.

அந்தப் பெயர் யாருடைய வாயிலும் இல்லை;

மரம் அதைத் தன் வேர்களில் மறைத்துவைத்திருக்கிறது.

,

தரையில் விழுந்த சிறிய தூசித் துகள்

ஒளியில் மிதக்கிறது.

அது தூசியல்ல—

பல ஆண்டுகளுக்கு முன் இந்த அறைக்குள் நுழைந்த

ஒரு பிற்பகலின் கடைசி எச்சம்.

,

ஒளி

சிறிது சிறிதாக அறையை விட்டு வெளியேறியது.

ஆனால் ஒரு மூலையில்

இன்னும் தங்கியிருந்தது.

அது சூரியனுடையதல்ல—

இங்கு வாழ்ந்த ஒருவரின் இருப்பிலிருந்து கசிந்தது.

,

4

இடைவெளியின் வடிவம்

,

இரு சொற்களுக்கு இடையில்

கூடு கட்டிக்கொண்டிருந்தது

ஒரு பறவை.

இலக்கணம் அதைக் கவனிக்கவில்லை.

,

அந்த அமைதியைச்

சிறுவன் விரலால் தொட்டபோது

அவன் நகம் லேசாய் ஒளிர்ந்தது.

,

இரு இதயத்துடிப்புகளுக்கு நடுவே

யாரோ ஒரு கடலை

மடித்துவைத்திருந்தார்கள்;

மருத்துவர்களின் கருவிக்கு

அது கேட்பதேயில்லை.

,

பெண்ணொருத்தி தன் பெயரை

உறைவிடமாக்காமல்

ஜன்னலைத் திறந்தாள்;

அன்றிலிருந்து காற்று

அவள் குரலிலேயே வீசத் தொடங்கியது.

,

நான் கையில் எடுத்த கல்

எடையாக இல்லை—

என் மௌனத்தின்

பழம்பெரும் எழுத்தாய் இருந்தது.

,

இரவு வீட்டிற்குள் நுழையவில்லை;

விளக்கிற்கும் சுவருக்குமான இடைவெளியில்

சிறிது நேரம் அமர்ந்திருந்தது.

,

காலை வந்தபோது இருளை அல்ல,

ஒரு சிறிய இடைவெளியை மட்டும்

எடுத்துச் சென்றது.

,

அன்றிலிருந்து

எல்லா வாக்கியங்களும்

சற்று அநாதையாய்த் தெரிகின்றன.

00

ஈழக்கவி என்னும் புனைபெயரில் எழுதிவரும் ஏ. எச். எம். நவாஷ் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர்; சிறிதுகாலம் மெய்யியல் துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். நீண்டகாலம் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றி அண்மையில் பணி ஓய்வு பெற்றிருக்கிறார்.

1980களிலிருந்து கவிதை எழுதிவரும் ஈழக்கவியின் ஏவாளின் புன்னகை, இரவின் மழையில் ஆகிய கவிதைத் தொகுதிகள் இவரை குறிப்பிடத்தக்க ஈழத்துக் கவிஞர்களுள் ஒருவர் என நிறுவியுள்ளன. விமர்சகர், ஆய்வாளர் என்ற வகையில் கடந்த சுமார் இருபது ஆண்டுகளில் விரிவாகவும், ஏராளமாகவும். எழுதியுள்ளார். ஆறு சிறுகதைகள்: ஒரு பகுப்பாய்வு, பிரமிள் கவிதைகள் ஒரு நுண்ணிய உசாவல், அழகியல் மெய்யியல் ஆகிய இவரது நூல்கள் இவ்வகையில் முக்கியமானவைகள்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *