கோசின்ரா
1
கொல்கத்தாவிலிருந்து பிரிந்து வந்து எத்தனையோ வருடங்கள் ஆகி விட்டது.ஆனால் அந்த வாழ்க்கையை மறக்க முடியவில்லை. குடும்பத்தை விட்டு ஆறு வருடங்கள் கொல்கத்தாவில் வாழ்ந்தேன். இரண்டே வருடத்தில் சென்னைக்கு மாற்றல் கிடைத்து விடுமென்ற நம்பிக்கையில் சென்றேன். நினைப்பதெல்லாம் நடப்பதில்லை.
ஒரே வீட்டில் வாழ்ந்தவர்களை தனித்தனியாக பிரித்து வெவ்வேறு திசைகளில் தள்ளி விடுகிறது வாழ்க்கை. அப்படியொரு தள்ளப்பட்ட வாழ்க்கைதான் என் கொல்கொத்தா வாழ்க்கை. அந்த வாழ்க்கையை முழுமையாக வாழவில்லை.
மனம் இப்பொழுது நினைக்கிறது. இன்னும் கொஞ்சம் நன்றாக வாழ்ந்திருக்கலாமென்னும் ஆசை இருக்கிறது. நினைத்துப்பார்த்தால் அந்த வாழ்க்கைக்கு என்னை அர்த்தமென்றே தெரியாமல் அது வாழ்க்கையா அல்லது பிழைப்பா என்ற குழப்பமே மிஞ்சுகிறது. இன்னொருமுறை வாய்ப்பு கிடைத்தாலும் பருவ வயதில் தவற விட்ட வாழ்க்கையை முதுமை வயதில் வாழ்வது சாத்தியப்படுமா தெரியவில்லை.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கொல்கத்தாவில் வாழ்ந்த வாழ்கையின் கடைசி கட்டம் அது. அன்று இறுதி நாளுக்கு முந்தைய நாள் இரவு. அது மறக்க முடியாத நாளாகி விட்டது.
ஒரு நாள் சாதாரணமாக கடந்து போவதும் முக்கியமான நாளாவதும் அந்த நாளில் நடக்கும் சம்பவங்களே தீர்மாணிக்கின்றன. அன்றும் அப்படித்தான் என் நண்பர்கள் சால்ட்லேக்கில் ஒரு பெரிய ஹோட்டலில் எனக்கு இரவு விருந்து அளித்தார்கள். அந்த இடம் நான் தங்கிருக்கும் வீட்டிலிருந்து முப்பது கிலோ மீட்டர்கள் தூரத்திலிருந்தது.அந்த பார்ட்டியை முடித்துக்கொண்டு தாமதமாக பிரின்ஸ் அன்வர்ஷா சாலையில் உள்ள வீட்டிற்கு வந்தேன். அங்குதான் என் ஆறாண்டு வாழ்க்கை கழிந்தது. வீட்டு உரிமையாளர் பாராதீப் துறைமுகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நான் மட்டுமே அந்த வீட்டில் தங்கியிருந்தேன்.
ஒவ்வொருவரும் பிரிவை ஒவ்வொரு விதமாக கொண்டாடுவார்கள், நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து என்னுடன் உணவருந்துவதில் அந்தப்பிரிவை கொண்டாடினார்கள். அன்றைக்கு பத்துக்கு மேற்பட்ட நண்பர்கள் வந்திருந்தார்கள். எல்லாம் அரசு அதிகாரிகள். வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள் இதை ஏற்பாடுகள் செய்தவர் என்மதிப்புக்குரிய நண்பர் வெண்பா அப்பர் தமிழ் பெயர்தான்.
இந்த பார்ட்டி ஆரம்பித்தவுடன் பேசியதெல்லாம் அரசியல்.. தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் துறை சார்ந்த பொதுவான விஷயங்கள்.
தமிழ் நாட்டை விட்டு எத்தனை மைல்கள் தூரமிருந்தாலும் அதன் அரசியல் நடவடிக்கைகள் தொலைவில் வாழும் தமிழருக்கு பேசு பொருளாகத்தான் இருக்கும். சிலது நம் மனதை அதிகமாக பாதிக்கும். அன்றும் அப்படித்தான்,தூத்துகுடி துப்பாக்கி சூட்டைப்பற்றி பேசிக்கொண்டிருந்த போது என் நெருங்கிய நண்பரால் மேற்கொண்டு பேச முடியாமல் அழுதார் அந்தக் கொடூரமான துப்பாக்கி சூடு அவரை பாதித்தது. மனம் பதை பதைக்க வைத்தது.அழுவதெனில் அழட்டும். அந்த அழுகை ஆண்ரஆயில் அவர் இறுக்கமெல்லாம் கரையட்டும். இளகிய மனம் படைத்தவர்கள் அழுகையின் மூலமாகத்தான் தன்னை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.
சிலர் கேட்கலாம் ஒரு அதிகாரி அழலாமா அப்படி கேட்பவர்கள் மடையர்கள். அதிகாரி ஏன் அழக்கூடாது. ஒரு துயரம் சம்பவம் நடந்தால் அடுத்து என்ன செய்வதென்பது வேறு .தனிப்பட்ட மனிதனாக அழுவது வேறு அதற்காக அரசன் அழக்கூடாது, மந்திரிகள் அழக்கூடாது என்று சொல்வது சரியல்ல. சில வெத்து வேட்டுகள் இரக்கமின்றி சொல்லலாம். ஆண்கள் அழக்கூடாதென்று சொல்லி அவர்களை அழ விடாமல் இறுக்கமாக இருக்க வைத்து விடுகிறார்கள். அழுகை வந்தால் அழுது விடுவது நல்லது.
திரும்பி வரும் வழி முழுக்க வெவ்வேறு விதமான உணர்ச்சிகள். ஒரு நொடி மனம் முழுக்க சென்னை போகப்போகின்றேன் என மகிழ்ச்சி மறு பக்கம் பழகிய ஆறு வருடங்களாக என்னைப் பத்திரமாக பார்த்துக்கொண்ட கொல்கொத்தாவை விட்டு பிரிகிறேன் என்பது வருத்தமாக இருந்தது. இப்பொழுதும் கொல்கத்தாவுக்கு நான் யாரென்று தெரியாது. அதற்கும் தெரிய வேண்டிய அவசியமுமில்லை. அப்படி தெரியும்படியான வாழக்கையை வாழவில்லை.
கொல்கொத்தாவுக்கு வந்து போகும் எத்தனையோ லட்சக்கணக்கான மனிதர்களில் நானும் ஒருவன். ஒரு வழி போக்கன்அவ்வளவுதான் ஆனால் இந்த வழி போக்கனை அரவணைத்து ஒரு தோழியைப்போல அத்தனை அன்பாக பார்த்துக்கொண்டது கொல்கொத்தா.
நான் பார்த்த கொல்கொத்தா கட்டிடங்களாலானதல்ல அது காலனியாதிக்கத்தின் நினைவுகளை சுமந்ததல்ல. அது துர்காவின் நீண்ட அழகான கரத்தை நினைவூட்டக்கூடியது. அதன் அழகிய விழிகளால் என்னை அட்படுத்தக்கூடியது. தன் நளினமான பார்வையால் என்னை ஆசீர்வதிக்கக்கூடியது
என்னைப் பொறுத்த வரை கொல்கொத்தா ஒரு ஆணல்ல. என் உள்ளம் கவர்ந்த ஒரு பெண் அவள் துர்க்கா வடிவானவள். ஒரே துர்காதான் ஆனால் வெவ்வேறு வடிவத்தில் மிளிர்கிறவள்,காட்சியளிக்கிறவள்
டல்ஹவுசி சதுக்கத்திலிருக்கும் என் அலுவகத்திலிருந்து தர்மஸ்தலா வந்தால் அங்கிருக்கும் கொல்கத்தாவின் முகம் வேறு. அப்படியே ஷியாம் பிரசாத் முகர்ஜி சாலையில் நடந்து காளிஹாட்டைத் தாண்டி ரவீந்திர சரோபர் வரை நடந்தால் நாம் பார்க்கும் கொல்கத்தாவின் முகங்கள் வேறு
அப்படியே இடது பக்கம் திரும்பி பிரின்ஸ் அன்வர்ஷா சாலையில் சவுத் சிட்டி மால் வரை நடந்தால் பார்க்கும் கொல்கொத்தா வேறு, அப்படி ராஷ்பிகாரி நிழற்சாலையில் நடந்தால் கரியஹாட் சந்திப்பு வரை என நாம் பார்க்கும் கொல்கொத்தாக்கள் வேறு வேறு. இந்த வித்தியாசத்தை அந்தந்த பகுதியில் துர்கா பூஜையின் போது காட்சியளிக்கும் துர்காவின் தோற்றங்களில் தெரிந்துக்கொள்ளலாம்
துர்காவைப்போல ஒரு தோழி கிடைத்தால் வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமாக இருக்குமென்று நினைத்ததுண்டு. என்னை வசீகரித்தவள் துர்கா. அவளை நான் கடவுளாக பார்க்க வில்லை. என் மனதுக்குப் பிடித்த என் தோழி. என்னுடன் இயல்பாக பேசக்கூடியவள்..எனக்கு பெங்காலி தெரியாது. ஆனால் துர்கா பேசும் பெங்காலி புரிகிறது. அவள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளித்திருக்கின்றேன். வருடத்தில் ஒருமுறைந்தான் துர்காவை பார்ப்பேன் நான் எந்த இடத்திற்கு போனாலும் அங்கே நின்றுக்கொண்டிருப்பாள் துர்கா.
கொல்கொத்தா என்பது துர்காவின் நிலப்பரப்பு.தாய் வழி சமூகத்தின் அடையாளம். ஆண்கள் கடவுளாக கோலோச்சுகிற நிலத்தில் தன் ஆகிருதியால் அழகின் வனப்பை எல்லோரிடமும் பகிர்ந்தளித்து வங்கத்தை ஆண்டுக்கொண்டிருக்கிறாள்
என் ஆசையெல்லாம் அந்த நிலம் கடைசி வரை துர்காவின் நிலமாக இருக்க வேண்டும் என்பதே. எந்த அரசியல் வந்தாலும் துர்காவின் இடுப்பு அரசியலை ஒன்றும் செய்ய முடியாது. அவளின் அரசியலை எதிர்க்கும் சக்தி யாருக்கு இருக்கிறது.
என் எண்ணத்தை தடை செய்வது போல யாரோ கதவு தட்டும் சப்தம். யாராக இருக்கும் நினைத்துக்கொண்டே கதவை திறந்தால் அவள் நின்று கொண்டிருந்தாள். துர்காவின் சாயலில் இருந்தாள். கொஞ்சம் நேரம்தான் நான் துர்காவின் நினைப்பிலிருந்து வந்து விட்டேன் வந்தவள் என் தோழி செளமியா.
கொல்கொத்தாவின் என் நினைவுகளில் ஒரு தூணாக இருப்பவள். என் இடைவெளிகளை நிரப்பும் காற்று. வீட்டிற்குள் வந்தவள் எப்போதுமில்லாமல் வந்தவுடன் என் கையை பிடித்துக் கொண்டாள். எனக்கு மாற்றல் ஆணை வந்தவுடன் மகிழ்ந்தாள் மறுகணம் அவள் நான் பிரிந்து விடுவேன் என்பது அவளுக்க உறைத்தது அதிலிருந்து என்னை சந்திக்கும் போதெல்லாம் பேசும் போதெல்லாம் அவள் அன்பை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துகிறாள். இதோ இப்பவும் என் கையை பிடித்துக் கொண்டிருப்பதன் மூலம் அவள் அன்பை உணர்த்துகிறாள்
என்ன விதமான அன்பு இது தெரியவில்லை. மரணத் தருவாயில் கிடக்கும் உடல் மீது செலுத்தும் இரக்கம் கருணை அன்பு பாசம் எல்லாவற்றையும் ஒரு பிரிவுக்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாள். அவளைப் பொறுத்தவரை இந்தப்பிரிவு தற்காலிகமல்ல. அது நிரந்தரம். அதை அவள் உணர்ந்திருக்கிறாள்.
பழகும் எல்லோரிடமும் மனம் விட்டு பேசி விட முடியாது. அதுவும் ஒரு பெண் மனம் திறந்து பேசும் போது அது எவ்வாறு புரிந்துக்கொள்ளப்படுமென்று பெண்களோடு பழகிய எல்லோருக்கும் தெரியும். சாதாரணப் பெண்களுக்கே இந்த நிலமை எனில் இவள் பேரழகி மனமும் அழகானவள். எந்த உடல் அழகு அவளின் முகவரியாக இருக்கிறதோ அந்த உடல் அழகு உண்மையான மனிதர்களின் நேசத்தை கண்டு பிடிப்பதற்கு தடையாக இருந்தது. பார்க்கும் எல்லோரும் அவள் அழகின் வாசலையே முதலில் தட்டுகிறார்கள்.
இதோ என் முன்னால் இதயம் கனத்து உட்கார்ந்திருக்கிறாள். அந்த அறையில் இருக்கும் ஒரே கட்டிலின் மீது என் கையை எடுத்து தன் கை மீது வெகு நேரம் வைத்திருந்தாள். நான் அவள் மனநிலையை குலைக்க விரும்பவில்லை.
அவள் பேசாமல் பேசிக்கொண்டிருக்கிறாள். அந்தப்பேச்சின் அர்த்தம் புரிகிறது. இது போல நெருக்கமாக இருக்கும் ஒரு இரவு இனி வாய்க்காது. அப்படி வாய்த்தாலும் இந்த மனநிலையும் ததும்பி வழியும் அன்பும் சத்தியமாக இருக்காது.
அவள் மனநிலையை அறிய முடிகிறது. நாளையிலிருந்து நம் சந்திப்புமில்லை. மெல்ல வாய் திறந்து பேசினாள். தனக்குத்தானே பேசிக்கொள்வதைப் போல. ’’நாளையிலிருந்து உங்களோடு நடந்து செல்ல போவதில்லை. கதை பேச முடியாது என் காயத்தை வலிகளை உங்களால் காது கொடுத்து கேட்க முடியாது. என் கதை முடிவை நோக்கி செல்லாமலே முடிந்து விடப்போகிறது. நான் எதிர் பார்த்ததுதான். என் கைகள் மீது கண்ணீர்த்துளிகள்.
நான் ஆறுதலாக அவளை என் மடி மீது படுக்க வைத்தேன். அன்பை அவள் முதலில் மெளனமாக வெளிப்படுத்தினாள், பிறகு வார்த்தைகளில் வெளிப்படுத்தினாள் இதோ இப்பொழுது கண்ணீரால் வெளிப்படுத்துகிறாள், இருட்டில் மறந்திருக்கும் வெளிச்சத்தை போல அவள் அன்பில் காதல் இருந்தது அவள் காதலில் கொஞ்க்சம் வெட்பம் இருந்தது. அந்த வெட்பம் அறை முழுக்க பரவி இருந்தது அவள் வாசனையைப்போல.
மீண்டும் தொடர்ந்தாள். பழையபடி மீண்டும் ஒரு சிறைக்குள் என்னை நானே அடப்படுக்கொள்ளப்போகின்றேன். நீங்கள் எனக்கு கிடைத்தது ஒரு கைதிக்கு கிடைத்த பரோல் வாழ்க்கை அவ்வளவுதான். பரோல் முடிந்து விட்டது. நான் விரும்பினாலும் இனி நான் இயல்பாக இருக்க முடியாது
எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். கடவுள் யாரை யாரோடு முடிச்சு போட வேண்டுமென்று அவர் முடிவு செய்து விட்டார். எனக்கு கிடைத்த வாழும் வாழ்க்கை நான் விரும்பிய வாழ்க்கையல்ல. அந்த விரும்பிய வாழ்க்கையை நான் எல்லோரிடமும் வாழ முடியாது. அப்படி வாழ்வதற்கு நான் வேசியல்ல என்றாள்.
நான் என்ன நினைத்தேனோ அதுவாக ஆக வில்லை. எனக்கென்று ஆஷா பாசங்கள் உண்டு. எனக்கே எனக்கென்று ஆசைகள் உண்டு. அந்த ஆசையை என மனம் கவர்ந்த ஒருவனிடம் நான் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் ஆனால் என்னால் யாரிடமும் பகிர முடியவில்லை.
கல்லூரி காலத்தில் என்னை விரும்பிய ஒருவனுக்கு என்னால் சம்மதம் தெரிவிக்க முடியவில்லை. பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணம் சரியாக அமையவில்லை.
பழகிய எல்லோரும் என் மீது இரக்கப்பட்டார்கள். இவ்வளவு அழகு இத்தனை நல்லப்பெண்ணாக இருக்கிறாய் உனக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா என்பதோடு நிறுத்திக்கொண்டார்கள். நான் எதுவும் பேச வில்லை. சில சமயங்களில் நான் ஆடும் மெளன ஆட்டம் எனக்கே வினையாக முடிந்திருக்கிறது.
இதெல்லாம் எனக்கு தெரிந்த கதைதான்.. தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள். அவள் தன் கதைப்பற்றி சொல்லும் போதெல்லாம் நான் அமைதியாய் இருந்திருக்கின்றேன்
இதுதான் வாழ்க்கை பொறுத்து போவென்றும் சொல்லியிருக்கின்றேன். எனக்குத்தெரியும் அது சரியான ஆறுதல் மொழியல்ல. வேறு என்ன சொல்வது.
உனக்கு நான் இருக்கின்றேன் என்று சொல்லலாம் சொல்லியிருக்கின்றேன் ஆனால் அந்த வார்த்தையின் அர்த்தம் எந்த அளவுக்கு செல்லும். ஒரு முறை பேசும் போது சொல்லியிருக்கிறாள். மூச்சுத் திணறலில் இருந்த என் வாழ்க்கைக்கு நீதான் என் ஆக்ஸிஜன் தந்து காப்பாற்றியவன்
கடவுளை அடைய வெவ்வேறு மதங்கள் இருக்கின்றன. ஆனால் எனக்குபிடித்த என் மரபணுவில் கலந்து விட்ட இந்து மதத்தில் நான் இருக்கின்றேன். அது போலத்தான் இந்த கொல்கொத்தாவில் நான் சொன்னால் என்னை இராணி மாதிரி பார்த்துக்கொள்ள நண்பர்கள் உண்டு. ஆனால் அவர்களிடம் சிரித்து பேசுவதோடு சரி.. நான் அழுவேன் என்று யாருக்கும் தெரியாது
பூக்களை பார்கிறவர்களுக்கு அதன் வாசனைதான் முக்கியம் அதன் வேரைப்பற்றி என்ன கவலை. நீருக்கான போராட்டங்களைப்பற்றி யார் கவலைப்படுவார்கள்.
ஆரம்பத்திலிருந்தே நீங்கள் என்னை தோழியாக பார்த்தது எனக்கு பிடித்திருந்தது. என்னை பாராட்டி பேசியவர்கள் மத்தியில் என்னை திட்டி பேசிய முதல் நபர் நீங்கள். என் அக்காவிடம் பேசும் போது உங்களைப்பற்றி சொன்னேன். யாரும் நம்பவில்லை.
அதெப்படி உன்னை மாதிரி ஒரு அழகான பெண்ணைப்பார்த்து விட்டு பேசாமல் இருக்க முடியும். அவர்கள் நம்ப வில்லை. அவர்கள் சொல்வதும் உண்மைதான் நீங்கள் முற்றும் துறந்த முனிவனல்ல. அதை முதல் சந்திப்பில் கண்டுக்கொண்டேன். ஆனால் அது மட்டுமே நீங்கள் இல்லையென்று என்று பேசி பேசி தெரிந்துக்கொண்டேன்
எத்தனை முறை சொல்லியிருக்கின்றேன், எனக்காக ஒரே ஒரு முறை விடுமுறை எடுங்கள் கோவிலுக்குப் போகலாம். உங்களோடு கொஞ்சம் நேரம் இருக்கலாமென்று நீங்கள் கேட்கவில்லை. இதோ கடைசி நாளும் வந்துவிட்டது. ஆனால் நான் கேட்டால் ஒரு வார, விடுமுறை எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்.
நான் என்னை எனக்கு நானே தீர்மானிக்கப்பட்ட ஒரு சிறைக்குள் தள்ளி விட்டிருக்கின்றேன். அதிலிருந்து வர விரும்புகின்றேன். என்னால் வரமுடியவில்லை. என்னுடைய எதிரி வேறு யாருமில்லை. நானே தான். அந்த சிறையிலிருந்து கொஞ்ச நட்கள் வெளியே வந்தேன் என்பதுதான் உண்மை.
அன்று இரவு என் மடியில் சாய்ந்துக்கொண்டு அவள் அழுதது இன்னும் என் நினைவில் இருக்கிறது, அடுத்த நாள் எனக்கு சென்னைக்கு விமானம் , நான் திரும்பி கொல்கத்தாவுக்கு வரப்போவதில்லை. இனி சந்திக்க முடியாதென்பதால் அந்த பிரிவின் வலியை அழுது தீர்த்தோம். பிரிவின் அழுகையில் வலிகள் கரைந்து விடுவதில்லை. ஒரு மரணத்தை அழுது தீர்ப்பதை போல நிரந்தப்பிரிவையும் அழுதுதான் தீர்க்க வேண்டும் அதுவும் ஆண் பெண் உறவின் பிரிவு சாதரணமானதல்ல.
ஒரு பெண்ணை பிரிவதென்பது வெறும் உடலைப் பிரிவதல்ல. அவள் இருக்கும் இடத்தை பிரிவது அவள் வாழும் வீட்டை பிரிவது அவள் நடந்து செல்லும் தெருவை பிரிவது அவள் புழங்கும் போக்கு வரத்துக்களை பிரிவது, அவள் வாழும் நகரத்தை பிரிவது.
அவளைப் பிரிவதென்பது அவள் வாசனையை பிரிவது அவள் மெளனத்தை பிரிவது அவளோடு நடக்கும் நடையை பிரிவது அவள் விரல்கள் காற்றில் வரையும் சித்திரங்களை பிரிவது.
நான் அவளிடமிருந்து பிரிந்து வந்து விட்டேன். அதுவொரு உடல் சார்ந்த பிரிவென்றுதான் நினைத்தேன். ஆனால் அதற்குப்பிறகு அவளிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை.
என்னை மறந்து விட்டாள் என்று நினைக்கவில்லை. மறக்க நினைத்தாலும் சில உறவுகள் உங்களுக்கு ஏதோவொரு சம்பவம் ஞாபகப்படுத்தி விடும் எத்தனையோ பெண்களிடம் பழகுகின்றோம். ஆனால் அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியில்லை. அவர்களுக்கு இந்தப்பிரிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அவளுக்கு அது பெரும் வலி அவள் இந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவாள் தெரியாது.
காலம் எல்லா காயங்களையும் ஆற்றும் என சம்பிரதாயமாக சொல்லி விடலாம். ஆனால் அது நிறைய காலத்தை எடுத்துக்கொள்ளும். இனி அவளுக்கு என்னை போல ஒருவன் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். ஆனால் இன்னும் சில காலத்திற்கு என் பிரிவு மிகப்பெரிய வெற்றிடம் என்பது எனக்கு தெரியும்.
யோசித்துப்பார்த்தால் அவளைப்போல கடவுள் கூட என்னிடம் நண்பனாக இருந்ததில்லை. என் மீது அத்தனை பாசமாக இருந்ததில்லை. கொல்கொத்தாவில் என் சுக துக்கங்களுக்கு ஆறுதலாக இருந்ததில்லை.
அவள் இடத்தை பிராணவாயுவை சுமந்து திரியும் ஒரு காற்று நிரப்பலாம். அவள் இடத்தை உயிர்களின் தாகத்தை தீர்க்கும் ஒரு நதி நிரப்பலாம். அவள் இடத்தை ஒரு பாதுகாப்பான ஒரு வீடு நிரப்பலாம். அவள் சாதரண மனிதப்பிறவிதான், ஆனால் எல்லாம் மாயங்களையும் நிகழ்த்துகிறவள். ஆய கலை அறுப்பத்திநான்கு கலைகளையும் கற்றவள் மட்டுமல்ல அதில் நிபுணத்துவம் பெற்றவளென்று சொல்லலாம்.. தன் பேச்சினால் தேன் கூட்டை கட்டி எழுப்புகிறவள். பெண் கடவுள்கள் பொறாமை படும் அழகு அவளுக்கு.
எனக்குள் விருட்சமாக கிளை பிரித்து நிற்கும் வானவில் அவள். என் மனதில் கூடு கட்டி சிறகடிக்கும் நினைவுப்பறவை என் உடலில் எந்த பக்கத்திலுமிருந்தும் நுழையும் ஆற்றலுள்ளவள். அவளைக் கண்டதும் அவளுடைய அழகை திருடும் வழி போக்கனாகத்தான் இருந்தேன்
ரோஜாக்கள் மலர்ந்து சிரிக்கும் போது எத்தனை ரம்மியமாக இருக்கிறது சிவப்பு கம்பளத்தை பச்சை விரிப்பின் மீது பரப்பி வைப்பது போல அந்த் அழகை கடந்து போகும் எல்லா வழி போக்கார்களும் ஒரு முறையாவது ரசிப்பார்கள். அப்படியொரு நடமாடும் ரோஜா தோட்டம் அவள் .
சலிப்பான பெரும் காட்டிலிருந்து எப்படியாவது தப்பித்து செல்லும் மனநிலையிலிருக்கும் போது ஆறுதலாக அந்தப்பக்கம் வரும் பறக்கும் கம்பளம் நம்மிடம் வந்து ஏறிக்கொள் எங்கே விட வேண்டும் என்று கேட்டால் எப்படி இருக்கும். அப்படி இருந்தது அவளின் முதல் சந்திப்பு.
அவளிடம் பேசி விட்டு பிரிவதென்பது ஒரு தற்காலிக சொர்க்கத்தை சந்திப்பது போலத்தான். இடைப்பட்ட நாள்கள் எது நடந்தாலும் அது முக்கியமற்றதாகி விடும்.
அவளைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் நடக்க ஆரம்பித்து விடுவேன். நடக்கும் போது அவளுடன் மனசுக்குள் பேசுவது பிடிக்கும். நானும் அவளும் அப்படி நடந்திருக்கிறோம். பகலில் அதிகாலையில் மாலையில் துர்கா பூஜையின் போது இரவு முழுக்க நடந்திருக்கின்றோம்.
கொல்கத்தாவில் காளிகாட் மெட்ரோவிலிருந்து ராஷ்பிகாரி அவென்யுவில் கரியாஹாட் வரை நடப்பது பிடிக்கும் மனிதர்கள் சாரை சாரையாக லேக் மார்கெட்டுக்கு வருவது போவதுமாக இருப்பார்கள். அவர்களை கடந்து செல்வது அத்தனை சுவாரஸ்யமானது
அவள் தெற்கு கொல்கத்தாவிலிருக்கும் எல்லா கோவிலுக்கும் கூட்டிச்செல்வாள். அங்கே சென்னையில் நடப்பது போன்று திசம்பர் மாதத்தில் இசைத்திருவிழா தியாகராஜர் மண்டபத்தில் நடக்கும். வேதபவன் சென்று என்னை அறிமுஹப்படுத்தியிருக்கிறாள். நன்றாக பெங்காலி பேசத்தெரிந்தவள்.
ஜனத்திரளின் நடுவே அவளோடு நடப்பது நமக்கு ஒரு விதமான மலர்ச்சி நாம் தனியல்ல. இந்த மாபெரும் ஜனத்திரளின் ஒரு பகுதி என்று தோன்றும்.. இந்த மனிதர்களின் நாமும் ஒரு பிரதி எனும் போது அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்.
தனிமையில் இருக்கும் மனிதனுக்கு கூட்டம் என்பது செய்தித்தாள் வாசிப்பது போல. எத்தனை விதமான முகங்கள் எத்தனை விதமான உணர்ச்சிகள். வீட்டுக்குள் இருந்தால் இதெல்லாம் பார்க்க முடியாது. இந்த உலகம் மனிதர்களால் இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் பேச்சினால் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்தச்சாலையில் பெரும்பாலும் பெங்காலியில் பேசிக்கொண்டு போகும் மனிதர்களிடையே நாங்கள் தமிழில் பேசிக்கொண்டு போவோம். யாராவது சிலர் மலையாளத்தில் பேசிக்கொண்டு கடந்து செல்வார்கள். எல்லாம் இயல்பாக இருக்கும்.
வீட்டில் எத்தனை பேசினாலும் வெளியில் நடந்து செல்லும் போது பேசுவது இறுக்கத்தை குறைப்பது போலிருக்கும். சில சமயம் வெளியில் பேசுகிறவர்கள் சண்டையிடுவார்கள் அவர்கள் கத்தி கத்தி பேசுவது நம்மை சீக்கிரம் அவர்களை கடந்து போகச் சொல்லும்.. கொஞ்சம் யோசித்தால் அந்த சண்டையின் ஆரம்ப முடிச்சு வீட்டிலிருந்து தொடங்கியிருக்கலாம்.
மலையாளிகள் தமிழர்கள் தெலுங்கர்கள் நடமாடும் அந்தப்பகுதியில் செளத் இந்தியன் கிளப் இருக்கும் தெருவரை சென்று அங்கிருக்கும் கரியாஹாட் மார்கெட்டில் ஏதாவது வாங்கி விட்டு வருவது நடைப்பயிற்சி மட்டுமல்ல.மனப்பயிற்சியும் கூட.
நடக்கும் போது எத்தனை விதமான மனிதர்களை பார்க்கின்றோம். எத்தனை விதமான பேச்சுகளை கேட்கின்றோம். கேட்க கேட்க ஆச்சரியமாக இருக்கும். மனிதர்கள் எல்லாவற்றையும் வெளியிலே பேசி முடித்து விடுவார்களா அல்லது வீட்டில் சென்று பேச அவர்களுக்கு சொற்கள் ஏதாவது மீதம் இருக்குமா.
வெளிப்புறப்பேச்சு என்பது புரளி பேசுவதிலிருந்து தொடங்கி அரசியல் சினிமா அக்கப்போர் கதைகள் அடுத்தவர் கதைகள் நாத்தனார் மாமியார் கதைகள் ஆபிஸ் கதைகள் என பேசும். கதைகளுக்கு சாமனியர்களிடம் பஞ்சமில்லை. அரசல் புரசலாக பேசும் காமக்கதைகளும் இருக்கும்.
பணக்கார மனிதர்களை விட சாமானியர்களிட்டமும் நடுத்தர வர்க்கத்திடமும் அதிகமான வித விதமான கதைகள் புழங்குகின்றன என்பது என் பார்வை.
எல்லாக் கதைகளிலும் ஒரு ஆற்றாமை அவதூறு கேலி கிண்டல் பாலியல் நகைச்சுவை இருக்கும். அந்தக்கதைகளை உட்கார்ந்திருக்கும் போது பேசுவதை விட நடக்கும் போது பேசுவது அதிக சுவாரசியத்தை கூட்டி வந்து விடுமென்பது என் கணிப்பு.
ஏனெனில் நடக்கும் போது பேசும் பேச்சில் மறைத்து வைத்திருந்த ரகசியத்தை கூட்டி வந்து விடும். உட்கார்ந்து பேசும் போது கொஞ்சம் எச்சரிக்கை உணர்வு வந்து விடுகிறதென்பதால் அதில் கொஞ்சம் இருண்ட பகுதிகள் இருக்க வாய்ப்புள்ளது.
மனிதன் நடக்கும் போது வேறோரு மனிதனாகி விடுகிறான். நடப்பது என்பது புறவெளியின் செயல்பாடு என்றாலும் பேசும் போது அவன் அகவெளியில் நடப்பவனாகின்றான்
நடக்கும் போது வாழ்க்கை ஒரு மாயை எனும் நினைப்பிலிருந்து வெளியே வந்து விடுகின்றோம். நடக்கும் போது நாம் பிரபஞ்சத்தின் துளியாகி விடுகின்றோம். நடப்பவர்கள் ஒரு ஞான நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் ஏதோவொன்றை புரிந்துக்கொள்கிறார்கள். அல்லது தெரிந்த ஒன்றை அறிந்துக்கொல்கிறார்கள். நடக்கும் போது இந்த உடலை ஆட்டி வைக்கும் இறைவனாகி விடுகின்றோம். இந்த உடல் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று தீர்மானிக்கின்றோம்.
ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும் போது பேசும் பெண்களைப்பாருங்கள் அதிக ஆற்றலோடு பேசுவார்கள். அந்தப் பேச்சு ஆழ்துளைக்கிணற்றில் தண்ணீர் ஊற்றி அடிக்கும் போது தண்ணீர் அடிபம்பில் ஆழத்திலிருந்து தண்ணீர் பீறீட்டுக்கொண்டு வெளியே வருவதைப்போல அடி மனசில் மறைந்திருக்கும் கதைகள் வாழ்வின் இருட்டுப் பகுதிகள் எல்லாம் நடந்துக்கொண்டு பேசும் போது அக வெளிச்சத்திலிருந்து புற வெளிச்சத்திற்குள் வந்து விழும்
அவளும் அப்படித்தான். தன் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க லேக் மார்கெட்டுக்கு வருவாள். வரும் போதெல்லாம் பேசுவாள். பேசுவதை கேட்டுக்கொண்டிருப்பேன் சில கதைகளில் அவள் இருப்பாள் சில கதைகள் அவளை ஏமாற்றிய உறவினர்களைப்பற்றிய கதைகள் இருக்கும். எல்லாக் காதையிலும் முடிவிலும் நிச்சயம் ஒரு கண்ணீர்துளி எட்டிப்பார்க்கும்.
அப்படி அவள் சொன்ன கதைகளின் வழியாகத்தான் அவள் குடும்பத்தின் மொத்த உறவுகளைப்பற்றி எனக்குத்தெரியும். அவளோடு இருக்கும் போது வாழ்க்கையை வெவ்வேறு கோணத்தில் அலசியிருக்கின்றோம். தன் வாழ்க்கையின் பெரும் ரகசியங்களை நடக்கும் போதுதான் உடைத்திருக்கிறாள். நடப்பது என்பது மனசின் உண்டியலை திறப்பது அல்லது உடைப்பது போல.நடந்து முடிக்கும் போது பாரம் கொஞ்சம் குறைந்திருக்கும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் அப்படியொரு உண்டியல் மனசில் இருக்கும் சில பெண்கள் அதை திறந்து காட்டாமல் வாழ்ந்து முடித்து விடுவார்கள், அதற்கு காரணம் அவர்கள் மனசின் உண்டியலை திறந்து காட்ட தோதான மனிதர்களை அவர்கள் சந்திக்கவில்லையென்பதுதான்.
தன் வாழ்நாளில் அவளுக்கு கிடைத்த தோதான மனிதன் நான் என்பதில் எனக்கு கொஞ்சம் பெருமைதான். அந்தப்பெருமைக்கு காரணம நானல்ல அவளுடைய அழகு.. ’’காதல் ஒண்ணும் நீங்க எழுதற கவிதையில்லை, ஒரு வரியை பொருந்தலனு திருத்தியோ அல்லது அடிச்சி எழுதரதுக்கு. அதுவொரு உணர்வு” என்பாள்.
நான் ஏதாவது சொன்னால் பரவாயில்லை பேசுங்க, நாமும் சாதாரண மனுஷங்கதானே. ஊர் உலகம் சொல்லும் பொதுப் புத்தியை தூக்கி சுமந்துகிட்டு அலையர சாதியின் பிரதிநிதிதான் நாம் என்பாள்.
எப்போது சாதரணமாக பேசுவாள் எப்போது தத்துவவாதியாக பேசுவாள் தெரியாது. திடீரென்று ஒரு நாள் துறபி போல ஆன்மீகம் பேசுவாள்.
எனக்குப் பேச பிடிக்கும் நாமெல்லோரும் சுவர்கள்தான். அதுவும் தனித்தனியான சுவர்கள். பேச்சுக்கள்தான் ஒவ்வொரு சுவரையும் இணைத்து வைக்குது.கொஞ்சநாள் கழித்து பார்த்தால் எல்லா சுவர்களும் இணைந்து அங்கொரு வீடு உருவாகியிருக்கும். அது பலமான வீடா அல்லது பலவீனமான வீடா என்பாள். அந்த வீடு எத்தனை மழைக்கு தாங்கும் தெரியாது. சில வீடுகள் ஆயிரம் புயல்களை சந்தித்தாலும் அப்படியே இருக்கும். சில கட்டப்பட்ட வீடு ஒரு மழைக்கு தாங்காது. எனக்கு அப்படிப்பட்ட மழைகளை தெரியும். இடிந்து போன வீடுகளை தெரியுமென்பாள்.
அவளைப்பொறுத்தவரை வீடு என்பது எத்தனை மகிழ்சியான ஒன்று. அது நம்மை புரிந்துக்கொண்ட சொந்தங்களால் நிறைந்திருக்க வேண்டும்.. நாம் அழுதால் ஏன் என்று கேட்க, கஷடப்பட்டால் ஆறுதல் சொல்ல, பசித்தால் உணவு கொடுக்க நீளும் கைகள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்பாள்.
அவள் கொஞ்சி கொஞ்சி பேசும் சம்பாஷணைகளின் உரையாடலுக்குள் யார் புதிதாக வந்தாலும் சுலபமாக நுழைந்து விடலாம். அந்த உரையாடலில் அத்தனை வழிகள் இருக்கும்.

அவளுடன் பேசிய முதல் நாள் எனக்கு நினைவிருக்கிறது. நான் கொல்கொத்தா போய் இரண்டும் மூன்று வருடங்கள் இருக்கலாம். அந்த நாள் மிகவும் சலிப்பாக இருந்தது. யார் கிட்டாவாது பேசினால் தேவலை என்று தோன்றியது. பழைய நண்பர்களிடம் திரும்பவும் பேசுவது போரடிக்கும் அந்த உரையாடல் மேலும் சலிப்பை ஏற்படுத்தலாம்.
யாராவது புதிய மனிதர்களிடம் பேசினால் நன்றாக இருக்கும் அப்போதுதான் அவள் நினைவுக்கு வந்தது. பேசினால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. யோசித்தேன். கொஞ்சம் தயங்கி தயங்கி அவள் எண்ணை எடுத்து ரொம்ப நேரமாக பார்த்துக்கொண்டிருந்தேன். பேசலாமா வேண்டாமா .அழைத்தால் ஒரு பெண் என்பதற்காக அழைப்பதாக தப்பாக நினைபார்களா ஒரே குழப்பமாக இருந்தது. சந்தித்து ஒரு வாரம்தான் ஆகியிருந்தது.
கடந்த வாரம் பாரதி தமிழ்ச் சங்க விழாவில் நடந்த பட்டிமன்றத்தின் போது பார்த்தது. அவர்களின் முக பானைகளும் பேச்சும் அத்தனை தேன் மாதிரி இருந்தது. அங்கே இருந்த நண்பர்கள் எல்லோரும் அவரை பாராட்டினோம். அவள் பேசிய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை ஆனால் பேச்சு நன்றாக இருந்தது.
பேச்சில் சில வகைகள் இருக்கும். சில பேச்சு இடி மாதிரி அவ்வளவு சத்தம். சில பேச்சு மின்னல் மாதிரி பளிச்சுன்னு இருக்கும். சிலரது பேச்சு மழை மாதிரி பெய்துக்கொண்டே இருக்கும் அவ்வளவு சரக்கு.. சிலரது பேச்சு கைக்குட்டை மாதிரி அத்தனை சிக்கனமாக இருக்கும் சிலரது பேச்சு வேட்டி மாதிரி எது தொடக்கம் எது முடிவும் தெரியாது, எது முன் பக்கம் எது பின் பக்கம் தெரியாது.
ஆனால் இவங்க பேசினது தேன் மழை மனதுக்கு இனிமை. கண்களுக்கு இதமாக இருந்தது. அவரின் நட்பு இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது சாத்தியமில்லை. அவருக்கு நிறைய ஆண் பெண் நண்பர்கள் இருந்தார்கள். அங்கே நான் மட்டும்தான் புதுசு.
பெண்களிடம் பழகும் போது கவனமாக இருக்க வேண்டும். ஒரு முயற்சி செய்து பேசி பார்க்கலாமென்று தோன்றியது. எதிர் மறையாக பதில் வந்தால் தவறுதலாக அழைத்து விட்டேன் என்று சொல்லிக்கொள்ளலாம் .அழைத்தேன்
ரிங் போனது,கொஞ்சம் படபடப்பாக இருந்தது என்ன வென்று கேட்டால் என்னவென்று சொல்வது அணைத்து விடலாமா என் யோசிக்கும் போதே அவள் எடுத்து விட்டார்.
’’ஒரு போன் நெம்பர் கொடுத்தால் பேச ஒரு வாரம் எடுத்துக்குவீங்களா’’ என்று சகஜமாக உரையாடலை தொடங்கி வைத்தாள். நான் என் பதட்டத்திலிருந்து விடுபட்டேன். நான் அழைத்தது லேண்ட் லைனில் அப்பொழுது அவள் எனக்கு அலை பேசி எண்ணை தரவில்லை.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீண்ட உரையாடல் கட்டானாது. மீண்டும் தொடர்புக்கொண்டு பேசினாள். அந்த நாள் இனிய நாளென்று மனதில் குறித்துக் கொண்டேன் .
அன்றைய சலிப்பு போய் விட்டதா தெரியவில்லை. ஆனால் உற்சாகம் அதிகமாக இருந்தது. அந்த உரையாடல்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து ரசித்தது நினைவிலிருக்கிறது. அவள் பேச்சின் நடுவே அவளுக்கு பிடித்தமான ஒரு பாடலை சொல்லியிருந்தாள்.
.சம்சாரம் என்பது வீணை என்ற பாடலை புதுசாய் கேட்பது போல கேட்டேன் அதற்கு அருஞ் சொற்பொருள் சொல்லிகொண்டிருந்தாள். சம்சாரம் மட்டுமல்ல காலமும் கூட வீணைதான் உங்களுக்கு என்ன ராகம் வேண்டுமோ அதை மீட்டும் விரல்கள் எலோரிடமும் உண்டு என்றாள்.
அந்த நாளின் இரவு உணவை சீக்கிரமாக தயாரித்து முடித்தேன். கனவுகளாலும் புதிய சொற்களாலும் நிரப்பப்பட்ட மனசை அதன் போக்கிலே விட்டேன்.. அவளின் சிரிப்பையும் பேச்சின் ஊடே வழிந்த குரலின் இனிமையையும் சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருந்தது. அந்த இரவு வழக்கத்திற்கு மாறாக நீண்டு போனது.
அன்றிரவு சரியாக பன்னிரெண்டு மணிக்கு குறுஞ்செய்தி வந்தது, இரவு வணக்கம் அகிலன் என்று செய்தி அனுப்பியிருந்தாள் அவள். அவள் தன்னை பெயரிட்டு அழைப்பதிலின்னும் கூடுதல் உற்சாகம் நெருக்கம் கூடுவதாக உணர்ந்த நாள் அது.
வாழ்க்கை உணர்வுகளால் பின்னப்படுகிறது. உணர்வுகள்தான் மனிதனை ஓரிடத்திலிருந்து இன்னொரு முனைக்கு கடத்தி செல்கின்றன. மகிழ்ச்சி மயக்கம் பயம் தோல்வி என வாழ்வின் சகல விதமான நிறுத்தங்களில் உணர்வுகள் நின்று செல்கின்றன. எல்லாவற்றுக்கும் உணர்வுகள் தான் காரணம்.
எந்த நிமிடத்திலும் காதலில் விழுந்து விடக்கூடிய மன நிலை. அவன் நினைவறையில் அவளுடைய சொற்கள் மழைத்துளிகளாய் பெய்துக்கொண்டிருந்தது. அவள் பெயரை முதன் முதலாக உச்சரித்துப்பார்த்தான்.. எப்போதே தமிழர்களிடமிருந்து விடை பெற்றுப்போன பழைய பெயர் அது. இப்பொழுது இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கிறது.
தமிழர்கள் முன் காலத்தை போலில்லாமல் நவீன காலத்தில் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களில் அதிகமாக சமஸ்கிருத வாடை இருக்கிறது.மேலும் என்ன பொருள் என்று தெரியாமலே சிலர் வைத்துக்கொள்கிறார்கள். சென்னை நகரத்தில் பிறந்த பெண்ணுக்கு வனஜா என்று பெயர் வைத்திருக்கிறார். அப்படியெனில் வனத்தில் பிறந்தவள் என்று அர்த்தம் அல்லது காட்டுப்பெண் என்று அர்த்தம்
நாம் நெடுங்காலமாக குழந்தைகளுக்கு இடும் பெயர்கள் மொழி சார்ந்து இருந்தன. அதன் வழியாக நாம் மொழி பண் பாட்டை காத்து வந்தோம். ஆனால் தற்பொழுது இடும் பெயர்கள் பெரும்பாலும் மதம் சார்ந்து இருக்கிறது. பெயர்களின் வழியாக மதத்தை அறிந்துக்கொள்ளலாம் ஆனால் மொழியை அறிந்துக்கொள்ள முடியாது. மதக் கலவரம் ஏற்பட்டால் பெயரைக்கேட்டு கொல்வது எளிதாக இருக்கும் பகைவர்களுக்கு.
ஆனால் அவளுக்கு மது என்ற பெயர் பொருத்தமாக இருந்தது அவள் மலரைப்போல் மணம் வீசினாள். சற்று அதிகமாக பூசினாற் போன்ற உடல்.. சற்று தடித்த கோடு போன்ற இதழ்கள். யாரையும் கவிழ்க்ககூடிய பேச்சு. அப்புறம் நன்றாக பருத்த மார்பு.
ஒரு பெண்ணை அவள் இல்லாத நேரத்தில் ரசிக்கலாமா மனதில் ஒரு எண்ணம் தோன்றி மறைந்தது. ரசிக்கலாம் ஏனெனில் நேற்று உரையாடலின் போது ஒரு வார்த்தை சொல்லியிருந்தாள். அது கூட சினிமா பாடல் வரிதான். ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதம்மா என்று.
உண்மைதான்.அவளை ரசிக்கும் மன நிலை அன்றைக்கு புதிதாக முளைத்திருந்தது அது வளரும் நிலையில் இருந்தது. அதெல்லாம் பழைய கதை அதற்குப்பிறகு எத்தனையோ சந்திப்புகள் பேச்சுகள்,பரிவர்த்தனைகள் .எல்லாமே நினைவுகள். வெறும் நினைவுகள். காலங்களை செலவழித்து வாங்கிய அத்தனையும் நினைவுகள்.
நினைக்க நினைக்க வாழ்க்கை ஆன்மீகமாகி விடும். எதை திரும்ப திரும்ப நினைக்கின்றோமோ அதில் ஆன்மீகத்தில் கூறுகள் இருக்கும்.அவளை நினைக்கின்றேன் அவள் கடவுளின் பிம்பம் ஆன்மிகத்தின் அடையாளம்.
ஒவ்வொரு பெண்ணும் ஒரு கடவுள், ஒவ்வொரு கடவுளுக்கும் மாயையோடும் ஆன்மிகத்தோடும் தொடர்பு இருக்குமானால் அது போன்ற தொடர்பு பெண்களொடும் இருக்கும். கடவுளுக்கொரு தத்துவம் இருந்தால் அது பெண்ணுக்கும் அது போல தத்துவம் இருக்கும்.ஏன்னெனில் கடவுளுக்கில்லாத கருப்பை பெண்களிடம் இருக்கிறது.
ஒரு பெண்ணோடு உரையாடும் போது அவள் தத்துவமாக இருக்கும் போது உரையாடுகிறீர்களா அல்லது ஆன்மீகமாக இருக்கும் போது உரையாடுகிறீர்களா அல்லது அவளின் மாயை புனைவு தோற்றத்தோடு உரையாடுகிறீர்களா என்பதை பொறுத்து பெண்கள் பற்றிய எண்ணம் மாறுபடும்.
நான் அவளைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கொரு கேள்வி தோன்றும் நான் அவள் அழகை கொண்டு அவளுடன் பழகுகின்றேனா அல்லது அவள் அறிவை மனதைக்கொண்டு அவளுடன் நெருக்கம் ஏற்படுகிறதா என்று .எனக்கு இரண்டு கேள்விக்கும் இரு விடைகள் கிடைக்கும்.
அவளுடைய கட்டுமானம் உடல் சாந்ததா மனம் சார்ந்தது அவள் உடம்பில் எது நாத்திகம் எது ஆத்திகம் கேள்வி கேட்க பிடிக்கும். அழகுக்காக அவள் இருப்பு இருக்கிறதா அல்லது அவள் மனதின் பிரதிபலிப்பா. அவள் மதம் சார்ந்து இயங்குகிறாளா மானுடம் சார்ந்து இயங்குகிறாளா. மதம் வேறு மானுடம் வேறு. அவள் இரண்டின் நிழல்.
எது அவள் அடையாளம் என்றால் உலகின் மிகப்பெரிய தத்துவமான பெண்ணியத்தின் மதிப்பு மிக்க பிரதி அவள். மதம் அவளை தன்னிஷ்டப்படி கட்டமைக்க நினைக்கிறது மானுடம் அவளை இயற்கையின் வரையறைப்படி கட்டமைக்க நினைக்கிறது அவள் இன்றும் ஒரு விவாதத்தின் பொருளாக இருக்கிறாள். ஆண்கள் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குகிறாள்.
நிறைய விவாதங்கள் நிறைய கருத்து மோதல்கள் எல்லாவற்றையும் தன் செயல் மூலம் ஒதுக்கி வைத்து விடுவாள். அப்படிப்பட்டவள் அமைதியாக கையை பிடித்துக்கொண்டு எதுவும் பேசாமல் உட்கார்ந்திருக்கிறாள் என்று எண்ணினேன். ஆனால் அவள் சத்தமில்லாமல் அழுதுக்கொண்டிருக்கிறாள்
கொஞ்சம் கொஞ்சமாக தோள் சாய்கிறாள் எனக்குள் நுழைகிறாள். என் இறுக்கம் உடையத்தொடங்குகிறது. அவள் கண்ணீரை துடைக்கின்றேன். எனக்கும் அழுகை வந்தது.அவள் என் அழுகையை துடைத்து விட்டாள் தன் உதடுகளால். அவள் காதலை அன்பை புரிந்துக்கொண்டேன் முழுமையாக. என்ன பிரயோசனம் நாளைக்கு அவளை பிரிந்து விடுவேன். விடைபெறும் நாளில் ஒரு பரிசளிக்கப்பட்ட முத்தம் ஒரு முத்தத்தின் கணக்கில் சேராது. அதை பிரிவு தன் கணக்கில் எடுத்துக்கொண்டு விடும்.
அவள் எனக்குள் இருக்கிறாள். நான் அவளுக்குள் இருக்கின்றேன். என்னிடமிருந்த ஒன்று அவள் இதயத்தில் கிடக்கிறது அது அவள் உடலெங்கும் பயணிக்கிறது. அவள் உடை கசாங்காமல் அப்படியே இருக்க என் உடலை அணிந்துக்கொண்டாள். நான் அவள் உடலை அணிந்துக்கொண்டேன்
அந்த இரவில் எங்களின் உடல்கள் உரையாடுவதை கவனித்துக் கொண்டிருந்தோம். அது சொற்களால் ஆனதல்ல. உடல் எப்படி பிரிவை வாசிக்கின்றன என்பதை பார்த்துக்கொண்டிருந்தோம். உடல்கள் கட்டிய பாலத்தின் மீது எங்கள் பிரிவின் உணர்ச்சிகளை நடக்க விட்டோம். இரவு முழுவதும் அது நடந்துக்கொண்டிருந்தது. மீண்டும் உடல்களை மாற்றிக்கொள்ளாமலே தூங்கி விட்டோம்.
அந்த இரவு நீண்டது இந்த நினைவுகளைப்போல.
00

கோசின்ரா
கோ.ராசேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர் கவிஞர் கோசின்ரா. கடந்த பதினைந்து வருடங்களாக கவிதை எழுதி வருகிறார். இவருடைய அரசியல் கவிதைகள் பிரபலமானவை. சமூக எதார்த்தங்களின் மீது இவருடைய உக்கிரமான பார்வை கவிதைகளாகிறது. என் கடவுளும் என்னைப் போல கருப்பு என்பது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. “சமூகத்தில் பிரச்னைகள் எழுகிற போதெல்லாம் என்னுடைய விமர்சனங்கள் கவிதைகளாக வெளிவருகின்றன” என்கிறார் .இவருடைய இரண்டாம் தொகுப்பு “ பூனையின் கடவுள்:” புது எழுத்து வெளியீடு.

