மத்தியஸ்த பாடுகள்.
கடைசி கேவலும்
நின்றுவிட்டப்பிறகு
யாவரும்
பெரு மூச்சைவிட்டார்கள்.
அவர்
பிணமாகிப்போனார்.
பிறகவர்
சாமியாக்கப்பட்டார்.
இவனில் மூத்தவன்
சாமிக்கு வடம் பிடித்தான்.
இவனில் இளையவன்
வேறொன்றுக்கு
கொடி பிடித்தான்.
பிறகவனுக்கு
தெரிந்தவரெல்லாம் சாமியானார்கள்.
இவன்
இப்பொழுதெல்லாம்
சாமிகளின் மீது
அலுப்பு கொண்டான்.
இப்படியாகத்தான்
அவன் நாத்திகவாதியானான் என்றால்
அதிலொன்றும் சுரத்தில்லைதான்.
எங்கோ இடறி
தனக்குள்
விழுந்தவனை
இவர்கள்
இப்பொழுது
சாமி என்றார்கள்.
இவன்
தன்னை
சவமென்றான்.
அடக்கம் செய்ய
எல்லோரும்
தயங்கினார்கள்.
அப்போ
நீங்கள் எல்லாரும்
சவமென்றான்
அவன்.
அடக்கம் செய்யவாவென ஆர்ப்பரித்தான்.
அவர்கள் அவனைப் பைத்தியமென்றார்கள்.
இவர்களை
அவன்
பைத்தியமென்றான்.
மூத்தவனுக்கு வடம் பிடிக்கவும்
இளையவனுக்கு
கொடி பிடிக்கவும்
வாய்ப்பாகப் போனது.
சுவாரசியம் கூட்டும்
இவர்களுக்கு
மத்தியிலிருந்துதான்
எதுவும் புரியாமல்
இந்தக் கவிதையை
நான்
எழுதிக்கொண்டு இருக்கிறேனென
சொல்லும்
என்னிடம் தான்
எதுவுமே புரியவில்லை
என்கிறீர்கள்.
புரிந்து மட்டும்
நாம்
எதைக்
கிழித்தோம்
சொல்லுங்கள்.
***
வார்த்தைக்குள் வாழ்ந்து.
அநேக வார்த்தைகள்
அதனழகினில் ஈர்க்கும்
பிம்பமற்ற சிலிர்ப்பாக.
,
வேறெந்த வார்த்தையும்
இவ்வித
இளைப்பாறுதலைத் தரவில்லை
எப்பொழுதும்.
,
உனக்கு முன்பான
இம்மொழியில்
இதன் சாயலாவது இருந்திருக்குமாவென தெரியவில்லை
என் அறிவுக்குறைவால்.
,
வாதைகள் சூழாத கூடாரத்திற்கான ஸ்தோத்திரங்களில்
உன் வரவிற்கான
நேசமில்லை
வாய்ப்பாடாக ஆனதால்.
,
வாய்க்காமல்
கிடக்கிறது
ஹிருதய சுத்திகரிப்புகளற்று
தரிசனம் பெறாத
துயரங்கள்.
,
யுகம் முடியும்வரை
இனியொருவருக்கு
குத்தகைக்கு கூட
கொடுக்க முடியாமல்
இருக்கிறது
இவ்வார்த்தை
பரம்பரை சொத்தாக
உனக்கென பாவிப்பதால்.
,
நிகர் செய்திடாத
நேசத்தில்
நீ
வரும் நாளில்
நான்
உயிர்த்தெழத்தான்
வேண்டும்
உன் முகம் காண.
***
அனலிடை காலம்.
இம்முறை
உன்னை சுமந்து வரும் வார்த்தைகள்
எதுவும் செய்யும் என்னை நிலைமாற்றி.
பிரயத்தனப்பட்டுதான்
கழிகிறது கணங்கள் யாவும்
நீயற்ற துயரமாக..
இப்புறப் பாடுகளின்
விதியை நொறுக்கி.
இணையும்
தருணம் வாய்க்கத்தான்
உயிர்த்திருக்கிறேன்
நெடும் பாலைவன
சிறு செடியாக
தனித்து.
***
பிசகியபொழுதின் பிதற்றல்.
இரவை அருந்தி
மொழியாக்கும்பொழுதில்
முன்னகர்ந்து வரும்
எதுவும்
இரவாக இல்லை
இக்கணம்வரை.
,
கானக மௌனத்தில்
திளைத்த
வண்ணத்துப்பூச்சி
சிறகசைக்க செய்வதறியாதபொழுது
வானத்தில் மிதக்கிறது
வண்ண ஒளி
வீசி
குழந்தையின் கனவில்
குதூகலித்து.
,
பிடி தளர்ந்த
பாறையின் கரைதழுக்குள்
பிணக்குவியல்கள்
காணாத
மீட்பில்
எழும்பு கூடுகளாக எழுகிறது
தந்தத்தை தானாமிட்ட விலங்குகள்
பிளிறி.
,
அறிவு புகட்டும்
கூடங்கள்
யாவிலும்
உண்ட உணவில்
செறிக்காமல்
படிகிறது
தாய் மொழியின்
படிமங்கள்
தற்கொலையின் சாட்சியென
பிறகொரு காலத்தின்
தேடலாக.
,
தழுவாத தூக்கத்திற்கான
உபகார பொருட்கள்
சங்கடமற
பரிமாறுகிறது
இணையான
இன்னொன்று
ஆவி பறக்கும்
அணுக்கத்தில்
சுவையற்று.
,
தெளிவற்ற
நினைவிற்குள்
தேடியெடுத்த
யாவும்
தொடராக
இல்லாமல் போவதற்கு
நான் என்ன செய்வேன்
இரு கூறு
உலகின்
இன்னலில்
யாவும்
அதுவாக
இல்லாத போது.
***