இறைவன்களுக்காகப் பேசுபவன்

துங்கன்

வாடாத அந்தப் பூச்சரத்தைத் தூக்கியெறிந்துவிட்டு அமைதியாக பெருமூச்சுவிட்டு தொடரியில் கோடையிலும் கார்வண்ணம் உடுத்திய ஆடையுடைய பெண் என்னெதிர் இருக்கையில் வந்து அமர்ந்தாள். தயக்கத்துடன் பார்த்து மெல்ல தலை நிமிர்ந்தபோது அவளும் பார்த்தாள். கண்பேசிய பின்பு மெல்ல வார்த்தைகளால் பேசுவதற்கு ஆரம்பித்தேன் அவளிடம். அவளும் அதே முனைப்புடன்தான் இருக்கிறாள் என்பதை அறிந்து.

சமயம் மீது மூர்க்கத்தனமான அன்பு வைத்திருப்பதை அவள் பேசிய இரண்டு நிமிடத்திலேயே தெரிந்துகொண்டேன். அருகில் இருக்கும் அவள் தோழி விவிலியத்தைப் புரட்டி ஓய்வாகத் தூங்கும் தேவாவை எழுப்பிக் கொண்டு இருந்தாள். வலது புறம் இருக்கும் தோழனைப் பார்த்து என் பெயரைச்சொல்லி அறிமுகம் செய்துகொண்டேன்.

அவன் பெயருக்குப் பதிலாகத் ‘திருச்சிற்றம்பலம்’ என்று அறிமுகத்தை ஆரம்பித்தான். மேலும், அவளிடம் பேசும்போது அவளுடுத்திய ஆடை அவர்களின் அடையாளமென நம்பவும் வைக்கப்பட்டுயிருக்கிறது என்று புரிந்துகொண்டேன். நம்பியும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள் எத்தனையோ பதுமைகள்.

கோடையும் கார்காலமும் அவளுக்கு அவர்களுக்குக் கிடையாது போலும்.மார்க்கம் சொல்வதே சரியென்பாள் அது தவறு என்றாலும். இறைவன் ஒருவனே என்பாள் அந்த இறைவனும் அவளுடைய மார்க்கம் சொல்லும் இறைவன் என்பாள் சரி‍, இதை உன் தோழர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்றால்

நீ இறைவனைப் பழிக்கிறவன்

நீ இறைவனைத் தூக்கியெறிந்தவன்

மதக்கலவரத்தை ஏற்படுத்துகிறவன்

இறையாண்மையைக் களைபவன்

என்றெல்லாம் சகட்டுமேனிக்குச் சமயத்தில் திட்டுவாள்

சரி இதெல்லாம் விடு, நீ ஏன் இறைவனைத் தூக்கி எறிந்தாய் என்றேன். அது நானல்ல நீதான் என்றாள். நான் ஏன் தூக்கி எறியப்போகிறேன் இருந்தால் தானே தூக்கி ஏறிவேன் என்றேன். பார்த்தாயா தூக்கெறிந்து பேசுகிறாய் என்றாள்‌ உண்மையை எவ்வளவு காலங்கள்தான் மறைப்பது மறைத்தே வைத்திருக்கவும் முடியும். ஆம், நான் தூக்கி எறிந்து பேசுகிறேன்தான் நீ, நீங்கள் தூக்கி எறிந்த இறைவன்களுக்காக மட்டுமே நான் பேசுகிறேன், நான் பேசுவேன் பேசுபவனும்.

00

துங்கன்.

என்னுடைய பெயர் நீ.இராதாகிருஷ்ணன். ‘துங்கன்’ என்ற புனைப்பெயரில் கதை மற்றும் கவிதை எழுதி வருகிறேன். கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் படித்து வருகிறேன்.  கவிதை நூல் தொகுப்பு ஒன்றை வெளியீட்டு இருக்கிறேன். 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *