-ரேவதி பாலு

                           மேல் போர்ஷனிலிருந்து டமால் டுமீல் என்று பாத்திரங்கள் வீசியெறியப்படும் சப்தம்.  தொடர்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் சராமாரியான வசவுகள்!  நாராசம் தாங்காமல் காதுகளை பொத்திக் கொண்டாள்  விசாகா. அவள் கவனித்தவரை  ரேகா, விஜய் ரெண்டு பேருக்குமே ஒரு விஷயத்திலும் பொறுமையில்லை.  ஒருவர் சொல்வதை மற்றொருவர் காது கொடுத்து கேட்பது இல்லை. 

              கீழ்த்தளம்  முதல் மாடி, என்று இரண்டு  பகுதிகளாக  உள்ள அந்த வீட்டில் கீழே  விசாகா,   மாடியில் விசாகாவின் ஒரே  அருமைப் பெண் ரேகாவும் மாப்பிள்ளை விஜயும். கல்யாணம் ஆன நாளாய் ரேகா இங்கே தான் குடியிருக்கிறாள்.  விசாகா தான், சொந்த வீட்டிலேயே ஒரு இடம் இருக்கும்போது வெளியே போய் ஏன் இருக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்து குடி வைத்தாள்.  ரெண்டு வருடத்திற்கு முன் அவள் கணவன் இறந்து விட, அவளும் ரேகாவும்  தான் கீழ் போர்ஷனில் இருந்தார்கள். ரேகாவிற்கு  கல்யாணம் ஆனதும், அவளை   மாடி போர்ஷனில் குடி வைத்து விட்டாள் விசாகா.

            ரேகாவும் விஜயும் காதல் கல்யாணந்தான்  செய்து கொண்டார்கள்.  இருவரும் ஒரே அலுவலகம். கல்யாணம் ஆகி  ஹனிமூனுக்கு தாய்லாந்திற்கு  சென்று விட்டு வந்தார்கள்.  சில மாதங்கள்  சென்றிருக்கும்.  அப்புறம் தினமும் சண்டை தான்.  சச்சரவு தான்.  தினமும் அவனை விவாகரத்து செய்து விடப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறாள் ரேகா.

                       விசாகாவிற்கு என்ன செய்து ஏது செய்து  அவளை தடுக்க முடியும்  என்றே தெரியவில்லை. ஒரே பெண் என்று மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டோமோ  என்று தன்னையே நொந்து கொள்கிறாள்.  இந்த கண்றாவியெல்லாம் பார்க்காமல் கணவர்  போய் சேர்ந்து விட்டார். ஒரு மத்திய அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்யும் விசாகாவிற்கு  இன்னும் இரண்டு வருடங்கள் சர்வீஸ் இருக்கிறது.  அவளும் கணவரும் இடம் வாங்கி பார்த்து பார்த்து கட்டிய வீடு தான் இது.

                                     ரேகா அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியம், ”அம்மா! ஒரேயொரு லைப் தான் இருக்கு எல்லோருக்கும்.  அதை என் இஷ்டப்படி தான் வாழ முடியும்.  எனக்குப் பிடிக்காத காரியங்களை ஒருபோதும் என்னால செய்ய முடியாது.  என்னை யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது. எனக்கு  ஒருத்தரை பிடிக்கலைன்னா  அவங்களோட வாழ முடியாது!”

                                  விசாகாவிற்கு எரிச்சலாக  வரும் அவள் வார்த்தைகளை கேட்டு.

                                  “வாழ்க்கைன்னா அதுல ஒரு ஒத்துமை, அனுசரணை இருக்கணும்.  குடும்பம்னா வீட்டில உள்ளவங்களோட ஒரு சுமுகம் இருக்கணும்.  எப்பப் பார்த்தாலும் எதிராளியை எடுத்தெறிஞ்சு பேசிக்கிட்டு குற்றம் குறையையே சொல்லி கிட்டிருந்தால் எப்படி ஒருத்தரோட வாழ முடியும்?”

                                  “கல்யாணத்தை வாழ்க்கைத் துணையை அமைச்சுக்கொ டுக்கிறதுன்னு தான் பெரியவங்க சொல்வாங்க தெரியுமா? அதுக்கு வாழ்க்கை முழுசும் ஒருத்தருக்கொருத்தர் துணையா இருக்கிறதுன்னு அர்த்தம். நீயே  யோசிச்சு பாரேன், நாங்க எல்லோரும் எப்படி இருந்தோ ம்னு.  முன்ன பின்ன தெரியாத ஒருத்தரை கல்யாணம் பண்ணி கிட்டு நம்ம வீட்டை விட்டு அவங்க வீட்டுக்குப் போயி அந்த மனுஷங்களையெல்லாம் பழக்கம் பண்ணி கிட்டு புரிஞ்சிக்கிட்டு வாழ முயற்சித்து ……………”               

                    “பூமர் அம்மா!  பிளீஸ் ஸ்டாப் இட் !” காதைப் பொத்திக் கொண்டாள் ரேகா.

           “நீயெல்லாம் அப்படியா? பிடிச்சிருக்குன்னு சொல்லி தானேடி கல்யாணம் செஞ்சுகிட்ட? லவ் பண்ணும்போது பிடிச்சிருந்தது தானே?  வாழ்க்கை என்றால்  எல்லாம் எப்போதும் நீ நினைச்ச  மாதிரி இருக்காதுடீ.   குடும்ப வாழ்க்கையில நிறைய ஒருத்தருக்கொருத்தர்  விட்டுக் கொடுத்து கொண்டு போக வேண்டியிருக்கும்.  அப்படியிருந்தால் தான் வாழவே முடியும்.”.

            “அம்மா!” அலறினாள் ரேகா.

                                “நீ எப்போதும் உங்க தலைமுறை கதையையே சொல்லிக்கிட்டு இருக்காதே.  இந்த அட்ஜஸ்ட்  பண்ணிக்கிறது, விட்டுக் குடுக்கிறது எல்லாம் கேக்கவே அலுப்பா இருக்கு.  உலகம் எங்கேயோ  போயிடிச்சு. நீங்க பூமர்.  நாங்க எல்லாம் ஜென்ஸி தலைமுறையை சேர்ந்தவங்க.  எங்களால  எங்க  மனசுக்கு பிடிச்சதை மட்டும் தான் செய்ய முடியும். வீ ஹாவ் ஒன்லி ஒன் லைப்  மா. அந்த வாழ்க்கையை எப்படி பொருத்தமில்லாத ஒருவனோட சேர்ந்து வாழ்ந்து வீணாக்க முடியும்.  நீயே சொல்லு !” என்றாள்  ரேகா.

    “காதல் கல்யாணம் நீதானே பண்ணிக்கிட்டே? அப்போ எவ்வளவு சந்தோஷமா கணவனோடு இருக்கணும்? அதை விட்டு விட்டு  எல்லாத்துக்கும் கோவிச்சிக்கிட்டு,  சண்டை போட்டு,  டிவோர்ஸ் டிவோர்ஸ்னு தெனம் கூப்பாடு போட்டுக்கிட்டிருந்தா,  அது என்ன வாழ்க்கை?  நீயே சொல்லு!”

                                “நான் நிச்சயம் இந்த ஆளை டிவோர்ஸ் செய்யத் தான் போறேன்.”

       ரேகா விர்ரென்று போய் விட்டாள்.

                                      கொஞ்ச நாளாக விஜய்யை காணவேயில்லை.  ஒரு வாரம் கழித்து அவளுடன் வேலை செய்யும் ராஜன் வீட்டுக்கு  வர ஆரம்பித்தான். ரேகா அவனோடு கலகலப்பாக சிரித்து பேசுவது கீழே விசாகா போர்ஷன் வரை கேட்கும். சில நாட்கள் அவன் அங்கேயே தங்கி விடுகிறான்.  பொழுது விடிந்து அவன் போவதை விசாகாவே பார்த்திருக்கிறாள். ‘இது என்ன உறவுன்னே புரியலையே?” என்று நொந்து கொண்டாள்.

                      அன்று ஆத்திரம் தாங்காமல் ரேகாவை கூப்பிட்டு கேட்டாள் விசாகா. “என்னடி இதெல்லாம்? நீ செய்யறது உனக்கே நல்லா இருக்கா? விஜய் எங்கே காணும்? இவனை ஏன் வீட்டுக்கு கூப்பிட்டு கூத்தடிச்சிட்டி ருக்கே? “

                                “அம்மா! நா விஜய்யை டிவோர்ஸ் பண்ணறேன்.  வக்கீலை பார்த்து ஏற்பாடெல்லாம் பண்ணியாச்சு. சீக்கிரம் கெடச்சிடும்.  ராஜன் என்னோட டியரெஸ்ட் ஃப்ரெண்ட்.  இனிமே அவனோட தான் இருக்கப்போறேன்.”

                                  “அப்படீன்னா  அவனை டிவோர்ஸ் பண்ணிட்டு இவனை கல்யாணம் செஞ்சுக்கப்போறியா?”

                                 “:இல்லேம்மா.  இனிமே அதெல்லாம் கெடையாதும்மா.  காலமெல்லாம் மாறிப் போச்சு.   புடிச்சிருந்தா சேர்ந்து வாழ வேண்டியது தான்.”

             “என்னது? சேர்ந்து வாழறதா?“ விசாகா விக்கித்து போய் நின்றாள்.

                                  ரேகா சிரித்துக் கொண்டே “அம்மா! நிறைய அழுக்கு துணி சேர்ந்து போச்சு.  கொஞ்சம் வாஷிங் மெஷின் போட்டுடு மா! வரட்டுமா?  பை!’ சொல்லி விட்டு போய் விட்டாள்.

                                  ‘நா என்ன இவளுக்கு வெச்ச ஆளா? அழுக்கு துணியாம்.    வாஷிங் மெஷின் போடணுமாம்! எப்படி வெக்கம் இல்லாம சொல்லிட்டு போறா பாரு!’ விசாகா மன அழுத்தம் தாங்காமல் ஒரு முடிவுக்கு வந்தவளாக பெங்களூருக்கு தன் சகோதரி உஷா  வீட்டுக்கு கெளம்பிப் போனாள்.  உஷா தன் தங்கைக்கு நிறைய சமாதானம்  சொல்லி தேற்றினாள்.

                                                “ஊர் உலகமே தலை கீழா மாறிப் போச்சுடீ. வெளிநாட்டில எல்லாம், சொல்லவே கூசறதுடீ, ஆம்பளையும் ஆம்பளையும், பொம்பளையும் பொம்பளையும் கல்யாணம் பண்ணிக்கிறாங்களாம்.”

                        “சிவ, சிவா!. கேட்க முடியலியே! அருவருப்பா இருக்கே!” விசாகா காதைப் பொத்திக்கொண்டாள்.

                                     விசாகா ஊருக்கு திரும்பி வந்தபோது ரேகா போர்ஷன்ல ஒரே சிரிப்பு கும்மாளம், நிறைய குரல்கள் கேட்டன. ரேகாவின் தோழி  மாலதி  படியேறிப் போவதை பார்த்து விசாகா அவளை கூப்பிட்டாள்.

                                ‘என்ன விசேஷம் மேலே?”

                                ‘உங்களுக்கு தெரியாதா ஆன்ட்டி? ரேகாவுக்கு டிவோர்ஸ் கெடச்சிடுச்சு.  அந்த செலிபிரேஷன் தான் இன்னைக்கு.”

                                விசாகா ஒன்றும் புரியாமல் விழித்து கொண்டு நிற்க,

                                ‘அட! இதெல்லாம் கூட உங்களுக்கு தெரியாதா?’ என்பதைப் போல ஒரு பார்வை பார்த்து விட்டு “ நிறைய பேர் ஹோட்டல்ல ஃபிரண்ட்ஸ் எல்லாம் கூப்பிட்டு கொண்டாடுவாங்க.  ரேகா வீட்டிலேயே செய்யறா. .”

                                “என்னது?  டிவோர்ஸ் கெடச்சதுக்கு செலிபிரேஷனா? எப்படி அது?”

                                  “அதுவா? ஒண்ணுமில்ல ஆன்ட்டி.. மொதல்ல கல்யாண ஆல்பத்திலிருந்து எல்லா போட்டோசும் எடுத்து ஒவ்வொண்ணா கிழிச்சு போடுவாங்க. இப்போ சுதந்திரமா ஆயிட்டாங்க இல்லே.  அப்புறம் ஃபிரண்ட்ஸ் கூட சந்தோஷமா கேக் வெட்டி சிரிச்சு பேசி பாடி ஆடி கொண்டாட்டம் தான். நான் மேலே போறேன் ஆன்ட்டி.  ரேகா எனக்காக காத்துக் கிட்டிருப்பா. “

                                மேலேயிருந்து ‘ஆஹா ஓஹோ என்று ஆர்ப்பட்டமாக கூச்சல்.  ‘சியர்ஸ் சியர்ஸ் என்ற குரல்கள் நடுநடுவே கண்ணாடி டம்ளர்கள் உரசும் சத்தத்துடன்.  அந்த ஆல்பத்திற்கும் புகைப்படக்காரருக்கும் எத்தனை ஆயிரங்கள் தான் செலவழித்தோம் என்று நினைவுக்கு வந்தது விசாகா விற்கு.

                                முதல் நாள் இரவு அமர்க்களம் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஓய் ந்து மறுநாள் காலை சிறிது வெட்கம், கூச்சமின்றி ரேகா கீழே வந்து “அம்மா!” என்று உற்சாகமாக அவளை கட்டிக் கொண்டபோது மிகவும் சிரமப்பட்டு தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் பொறுமையாக இருந்தாள். முகத்தை ஒன்றுமே நடக்காதது போல சாதாரணமாக வைத்துக் கொள்ள முயற்சித்தாள்.

            “ஹை! இன்னிக்கி பருப்பு உசிலியாம்மா?  வாழைப்பூவை பார்த்ததுமே கண்டுபுடிச்சிட்டேன் பார்த்தியா?” என்று உற்சாகமாக ரேகா கேட்டபோது   வெறுமே தலையை ஆட்டினாள்.

                                அவள் அலுவலகம் சென்ற பிறகு, ‘இனிமேலும் பொறுத்துப் போகப்போவதில்லை. காலம் மாறிப் போச்சுன்னா அதுக்கு தகுந்தபடி நானும் தானே மாறணும்?  எனக்கும் இருப்பது ஒரு வாழ்க்கை தானே?’  விசாகா ஒரு முடிவுக்கு வந்தாள்.  காலை அலுவலகம் சென்றதும் பெங்களூருவுக்கு  மாற்றல் கேட்டு விண்ணப்பித்தாள்.

                                மேலதிகாரி வியந்து போனார். “என்னாச்சும்மா உங்களுக்கு?  இன்னும் இரண்டு வருடந்தான்  சர்வீஸ் இருக்கு.  இப்போ போயி ஊரை விட்டு போறேன்னு சொல்றீங்க?” என்றார்.  விசாகா மௌனமாக ஒரு புன்சிரிப்பை பதிலாக உதிர்த்தாள்.

                                ‘எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்னும் கோட்பாடு அவளுக்கு ஒத்து வராததால் அப்படி வாழ நினைக்கும் தன் மகள் ரேகாவை விட்டு விலகி வாழ தீர்மானம் செய்து விட்டதை அவரிடம் சொல்ல முடியாதே’ என்று நினைத்து கொண்டாள்.

                                வெகு சீக்கிரமே அவள் நினைத்ததை செய்ய அவளுக்கு ஒரு வாய்ப்பு வந்தது.

                                ரேகா அடுத்த வாரம் அவளிடம் வந்து அலுவலக வேலையாக ஆன் சைட் ப்ராஜக்ட் ஒன்று இரண்டு மாதங்களுக்கு இருப்பதால் அவளும் ராஜனும் இரண்டு நாட்களில்  ஆஸ்திரேலியா செல்லப் போவதாக அறிவித்தாள்.

    விசாகா மடமடவென்று காரியங்கள் செய்ய ஆரம்பித்தாள். விளம்பரம் கொடுத்து தன் வீட்டை கீழேயும் மேலேயும் சேர்த்து ஒரு கம்பெனிக்கு வாடகைக்கு விட்டாள்.  ஒரே ஒரு சின்ன அறையில்  ரேகாவின் சாமான்களை போட்டு வைத்து, அவள் இரண்டு மாதங்களுக்கு பின் வந்து கேட்டால் கொடுக்கும்படி சொன்னாள்.

       அவள் அலுவலகத்தில் கர்நாடக மாநிலத்தில் ஹூப்ளியில் தான்  காலியிடம் இருப்பதாக அறிவித்து அவள் சம்மதம் கேட்டார்கள். அவள் சம்மதித்ததும் அலுவலகத்திற்கு அருகிலேயே  குவார்ட்டர்ஸும் ஏற்பாடு செய்யப்பட,  அடுத்த வாரமே அங்கே போய் ட்யூட்டியில் சேர்ந்து கொண்டாள்.  புதிதாக ஒரு அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு தன் சகோதரிக்கு மட்டும் அந்த எண்ணை கொடுத்தாள்.

         ‘நேற்று பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே  தீர்மானிக்கும்போது,  நான் இவர்கள் எல்லாம் வேண்டாம்  என்று என் வாழ்க்கையை  தீர்மானிப்பது தப்பு ஒன்றும் இல்லையே? எனக்கும் இருப்பது ஒரு வாழ்க்கை தானே?‘

            ‘இரண்டு வருடங்களில் ஓய்வு பெற்ற பின் என்ன செய்யப் போகிறோம்?’  என்ற கேள்வியும் மனதில் வராமல் இல்லை.  ‘அப்பப்ப வாழ்க்கையில ஒரு வழி வரும்.  அந்த நேரத்தில் பார்த்துக்கலாம் ‘ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

                                ஹூப்ளியில்  சீதோஷ்ணம் குளு குளு என்று அவளுக்கு புத்துணர்ச்சியை ஊட்டியது.  காலையில் மரங்களடர்ந்த அந்த மத்திய அரசு குடியிருப்பில் நடைபயிற்சி  செய்யும்போது மனது குதூகலமாக இருந்தது. .  புது ஊரில் புது சூழ்நிலையில் அவளுக்கே அவளுக்கென்று ஒரு வாழ்க்கை.  உற்சாகமாக வேலைக்கு கிளம்பினாள் விசாகா.

00

ரேவதி பாலு           

இவர் பி.எஸ். என். எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். முப்பத்தெட்டு வருடங்களாக எழுதிவருகிறார். தமிழில் வெளியாகும் எல்லா வார, மாதப் பத்திரிகைகளிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. சிறுகதை, குறுநாவல், நாடகம் என்று பத்திரிகைகள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றிருக்கிறார். இலக்கிய சிந்தனை அமைப்பு நடத்தும் மாதாந்திர சிறந்த சிறுகதைக்கான பரிசு இருமுறை கிடைத்திருக்கிறது. தற்போது எழுத்தாளர் சிவசங்கரி – குவிகம் இணைந்து நடத்தும் இலக்கிய சிந்தனை அமைப்பின் மே மாதத்திற்கான சிறந்த சிறுகதை பரிசு கிடைத்திருக்கிறது. சென்னை வானொலியிலும், தொலைக்காட்சியிலும் இவருடைய நாடகங்கள் ஒலி, ஒளிபரப்பாகியுள்ளன. இதுவரை ஒன்பது  சிறுகதை தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிக கட்டுரை தொகுப்பு நூல் மற்றும் ஒரு சமூக கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகி இருக்கிறது

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *