கடல் காற்றில் வெக்கை கூடிய நாளில்
ஆலா பறக்காத
திசை நோக்கி பார்க்கிறேன்.
,
சிப்பி உடலை மூடிக் கொண்டது
மழைத்துளிகளை பெற சம்மதிக்கவில்லை.
,
நத்தையும் ஆமையும்
உடலைக் கூட்டுக்குள்
கொண்டு செல்வது போலல்ல
சிப்பி மூடிக் கொண்டது.
,
அவள் அன்றைய நாளில்தான்
குருத்தோலை பின்னிக் கொண்டிருந்தாள்.
,
மெழுகுத்திரியிலிருந்து புறப்பட்ட
உயிர்த்தெழப் போகும் ஒளியை
அந்தச் சிப்பிக்குள் செலுத்தி விட முயற்சித் கொண்டிருந்தேன் நான்.
,
உருகிய மெழுகு சிந்தி
ஏசுவின் உடலை வரைந்திருந்தது
அப்போது
எனதுடல் ஒளியாகி
முருகனின்
புத்தரின்
வள்ளலாரின்
உடலாகவெல்லாம் மாறி மாறி காட்சி தந்தது
நான் இப்போது
ஒளியாகி உயிர்த்தெழுகிறேன்.
,
பிரபஞ்சம் முழுதும்
எனது ஒளியுரு
சிப்பி மெல்ல திறந்து
என்னை
உள்ளிருத்தி மூடிக் கொண்டது
முத்தாகும்
அழுத்தத்தில்
சலமனற்று
உடல் ஒளிர்கிறது
மெழுகின் சுடராக நின்று
எரிகிறேன்.
00

துவாரகா சாமிநாதன்
கல்லூரி பேராசிரியராக பதினெட்டு ஆண்டுகால பணி. புடுதுணி கவிதை தொகுப்பு, ’வாத்து’ ’மூக்குத்தி’ ஆகிய இரண்டு சிறுகதை தொகுப்பு, ’ஆய்வாளன்’, சப்த கன்னிகள்- நாவலும் முன்பாக வெளிவந்துள்ளது. கற்பி கல்விப்பேரியக்கம் நிறுவனம், வேதா அறக்கட்டளை நிறுவனங்களின் தலைவராக இருக்கிறார். சொந்த ஊர் முத்துப்பேட்டை. (திருவாரூர் மாவட்டம்) புதுக்கோட்டையில் வசித்து வருகிறார்.

