~ பட்டியூர் செந்தில்குமார்
1
காரவீடு என்று கேட்டாலே போதும். அந்த ஊரில் ஒரு சின்னக் குழந்தை கூட “இந்தா இந்த காளியம்மன் கோயில்ல இருந்து, மேற்காம நடந்து தெக்காம பார்த்த தெரு வரும். அதுலருந்து நேரா போங்க ஒங்களுக்கே தெரியும்” என்று சொல்லிவிடும். அந்த சிறிய கிராமத்தில் அந்த வீடு ஒன்றுதான் காரவீடாக இருந்தது. நிறைய ஓட்டு வீடுகளும், சில ஓலைகுடிசை வீடுகளும் இருந்தன.
அந்த காரவீட்டின் வராண்டாவில் நாட்டாமை, சொந்தக்காரர்கள், பெரியவர்கள் சிறியவர்கள் என எல்லோரும் துக்கம் நேர்ந்ததைப் போல விசாரித்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார்கள்.
பெண்கள் காதோடு காதாக வைத்து தங்களுக்குள் எதையோ பேசிக்கொண்டார்கள்.
“அவனுக்கு அவ்ளோதான் கூறுவாடு இல்லைனா இப்படி பண்ணிருப்பானா” என்று வயசாளிகள் இரண்டு பேர் கால்நீட்டி அமர்ந்தபடி பேசிக்கொண்டே வெத்தலையை போட்டு மென்று கொண்டிருந்தார்கள்.
மேல்காற்று தெரு புழுதியை அள்ளி வீசிக் கொண்டிருந்தது.
அப்போதுதான் அவனும், அவனுடைய மனைவியும் குழந்தையோடு வந்தார்கள். இவர்களை கண்டு அங்கிருந்தவர்கள் அமைதியாகிவிட்டார்கள்.
“நாங்க உசுரோட இருக்கோமா இல்ல செத்துட்டோமா னு பாக்க வந்தீகளா”..
“உனக்கும் ஒரு புள்ள இருக்கே… இந்தப் பச்சமண்ணு என்ன பாவம் செஞ்சது ஒனக்கு? தழுதழுத்த குரலில் அழுதுகொண்டே அவனையும், அவன் மனைவியையும் பார்த்துக் கேட்டாள் வள்ளி.
அவள் இடுப்பிலிருந்த ஒன்றரை வயது குழந்தையின் வலது தோள்பட்டையில் ஒரு ரூபாய் நாணய அளவுக்குக் காயம் இருந்தது. தோல் கருத்துக் கொப்புளமாக வீங்கி உடைந்திருந்தது.. தன் தாயின் அழுகுரலைக் கேட்ட குழந்தை வாய் கோணிக்கோணி காயத்தின் வலியினாலும் அழத் தொடங்கியது.
அந்த அழுகுரல் கேட்டதும் அங்கிருந்தவர்களின் கண்கள் கலங்கின.
அத்தனை பேரின் பார்வையும் அவன் முகத்தில் குவிந்திருந்தது. அருகில் வந்து அவன் மனைவி அமர்ந்து, குழந்தையை மடியில் தூங்க வைத்திருந்தாள்.
என்ன நடந்தது என்று அவளுக்கு புரியவில்லை.
அவன் செய்த காரியம் அவனுக்குத் தெரியும். ஆனால், அதைச் செய்தவன் தான்தான் என்று ஒப்புக்கொள்ளும் துணிச்சல் மட்டும் அவனிடம் இல்லை.
“அதுக்கு நாலு அடினாலும் அடிச்சிருக்கலாமே…” இப்படி ஒரு காரியத்தைச் செய்ற அளவுக்கு உனக்கென்னப்பா கோபம்?.. சத்தமாக கேட்டார் கூட்டத்திலிருந்த பெரியவர் ஒருவர்.
அவன் எதுவும் பேசவில்லை. முகம் சிவந்திருந்தது. நெற்றியில் வழிந்த வியர்வையை கை விரல்களால் துடைத்தெறிந்தான். பேயறைந்தவன் போல வாசற்படிக்கு அருகே கல்தூண் பக்கத்தில் தலைகவிழ்ந்து தரையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.
2
ஒரு வாரத்திற்கு முன்பு
ஆடி மாதம். மேல்காற்று புழுதியை அள்ளி வீசிக்கொண்டிருந்தது.
காலையிலேயே தீ கங்குகளை அள்ளிக் கொட்டியதைப்போல கடுகடுத்த முகத்தோடு இருந்தான் பாண்டி
“கல்யாணம் முடிஞ்சி நாலு வருசமாச்சி. நமக்குனு ஒரு புள்ள இருக்கு. இன்னும் ஒன்னாமண்ணா காடு கரைனு வேல பாக்கமுடியாது தனிக்குடித்தனம் போவனும்” என்று அவன் மனைவி சாந்தி அடிக்கடி சொல்வாள். அப்படி பேசும்போதுதான் ஒருநாள் அவர்களுக்குள் சண்டை வந்து, கோபத்தில் அவள் பிறந்த ஊரான கடம்பூருக்கு குழந்தையோடு போய் பத்து நாள் ஆகிவிட்டது.
அதை நினைத்துக் கொண்டு வராண்டாவில் பேசாமல் அமர்ந்திருந்தான்.
சில நேரம் பேசும்போது வார்த்தைகள் திக்கும். சேவலின் தலையில் பூ சிவந்து கன்றிப்போயிருப்பதைப்போல முகம் இருக்கும். அப்படியிருந்தால் அவன் கோபமாக இருக்கிறான் என்று சொல்லிவிடலாம்.
அன்று அவன் முகத்தைப் பார்த்து ஏதோ கோபத்தில் இருக்கிறான் என்பதை உணர்ந்த கெங்கையா, தெருவை நோக்கிய வராண்டா கல்தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.
முகத்தில் ஒரு பக்கம் நெற்றியிலிருந்து புருவம், கண், மூக்கு, கன்னம் வரைக்கும் தோல் சிவந்திருக்கும். அது ஏன் அப்படியிருக்கிறது என்று கருப்பாயி பாட்டியிடம் கேட்டால் போதும்.
“அவன் என் வயித்துல இருக்கும்போது வடக்காட்டுப் பொழியில யானைக்கரடு புல்லு நல்லா பச்சத் தண்ணியா வளந்து கெடந்தது. காளமாட்டுக்குப் புல்லு அறுக்கத் தாத்தா அந்தப் பொழியில ஒருபக்கம் இருந்து இடது கை நெறைய புல்லைப் பிடிச்சு, வலது கையால தரையை ஒட்டி அறுத்துட்டு இருந்தாரு. அப்ப திடீருனு ஒரு நல்ல பாம்பு அவருக்கு முன்னால புஸ்…ஸ்… புஸ்…ஸ் னு தலையைத் தூக்கிப் படம் எடுத்து நின்னுருக்கு. உடனே கையிலிருந்த பன்னரிவாளைக் கொண்டு ஒரே போடு… தலையிலேயே வெட்டிட்டாரு. தலை ரெண்டா பொளந்து ரத்தம் சிந்தித் தரையில விழுந்துருச்சி. பெறகு அங்கனயே ஒரு குழியத் தோண்டிப் பால் ஊத்திப் பொதைச்சிட்டோம். அந்தத் தோசம்தான் அவன் மூஞ்சியெல்லாம் அப்படி செவந்திருக்கு…” என்பாள்.
வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஆணும் பெண்ணுமாகத் தெருவில் ஆடு மாடுகளைப் பிடித்துக்கொண்டு மேய்ச்சலுக்குக் கிளம்பிப் போனார்கள்.
“என்னடா பாண்டி… நேரமாகலையா? யோசனை பண்ணிக்கிட்டே உக்காந்துருக்க… சாப்பிட்டு உழவடிக்கப் போ…” என்று எண்ணெய் தேய்த்த தலையை வாரிக்கொண்டே கேட்டார் அவனது தகப்பனார் கெங்கையா.
அப்போதெல்லாம் கரிசல் காட்டில் காளை மாடுகளை ஏர் பூட்டி உழவடிப்பார்கள்.
சாரத்தை மடித்துக் கட்டி, தலை குனிந்தபடி, சட்டை அணியாத உடம்பில் கழுத்தில் மாலையைப்போலத் மெல்லிய சிவப்பு நிற துண்டைப் போட்டுக்கொண்டு வாசற்படியோர கல் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தான்.
“வீடு கொடுக்காத ஒங்களுக்கெல்லாம் உழவடிக்கப் போகணுமாக்கும்…” என்று முகத்தில் அறைந்த மாதிரி சொன்னான்.
சீப்பில் இருந்த முடியை எடுத்துக்கொண்டே,
“அதான் தை மாசம் வரைக்கும் ஒன்னா இரு… வெள்ளாமை எடுத்து வீடு கட்டித் தாரேன்னு சொல்லுதம்ளாடா…” என்று மெதுவான குரலில் சொன்னார் கெங்கையா.
வீட்டுக்கு முன்னால் தொழுவத்தில் கட்டிக்கிடந்த காளைமாடுகள் நின்றபடியே ஒன்றுக்கொன்று கொம்புகளால் “மடார்… மடார்…” சத்தத்தோடு முட்டிச் சண்டை போட்டுக்கொண்டிருந்தன.
எதுவும் காதில் விழாததுபோல் இருந்தான் பாண்டி.
அப்போது வேப்பங்குச்சியால் பல் விளக்கிக்கொண்டே வந்தான் பாண்டியின் அண்ணன் குருசாமி.
குருசாமியைப் பார்த்து கெங்கையா,.
“இந்த மாட்டுக்கு ஒரு கட்டு நாத்துக்கூளம் கொண்டு வந்து போடுடா. காடியில கூளம் இல்லாமச் சண்ட போட்டுக்கிட்டு கிடக்கு…” என்றார்.
அவன் கூரை வீட்டுக்கு மேற்கே ஒரு ஓட்டு வீட்டைப்போல இருக்கும் நாத்துக்கூளப் படப்பிலிருந்து ஒரு கட்டு நாத்துக்கூளக்கட்டை உருவிக்கொண்டு வந்தான். கட்டைப் பிரித்து, காடிக்குள் தனித்தனியாக இரண்டு மாட்டுக்கும் உதறி உதறிப் போட்டான்.
தொழுவத்திலிருந்து அவன் தலையைச் சுற்றி மேலே பறந்த பிள்ளைக்குளவியை கைகளால் விரட்டிவிட்டு வந்தான்.
“ஏலே பாண்டி… என்னாச்சுல ஒனக்கு? உழவுக்குப் போகலையா?” என்று கேட்டான்.
அதற்குக் கெங்கையா,
“தை மாசம் வரை பொறுடா… வீடு போட்டுருவம்னு சொல்றேன். கேக்க மாட்டேங்கிறான்…” என்றார்.
வாசலில் உட்கார்ந்திருந்த பாண்டியைப் பார்த்து குருசாமி,
“ஆறு பேருல இன்னும் ரெண்டு பேரு கல்யாணம் முடிக்காம இருக்காங்க. ஒனக்கு மட்டும் கார வீட்டுல எப்படி பங்கு தர முடியும் இப்பவே?” குரல் கொஞ்சம் உயர்த்திச் சொன்னான்.
“எல்லாரும் நல்லா இருக்காங்க… நான் மட்டும்தான் என் பொண்டாட்டி பிள்ளைனு தனியா வீடில்லாம இப்படி இருக்கேன்.உனக்கு வீடு இருக்குனு கெட்டிக்காரத்தனமா சொல்லுதயா?” ஆவேசப்பட்டான் பாண்டி.
அவன் மூச்சில் அனல் வீசியது.
“அண்ணன் இப்படி சொல்லிட்டானே” என்கிற ஆத்திரம் மனதுக்குள் கொந்தளித்தது. இயலாமையும் கோபமும் சேர்ந்து முகத்தை ரத்தம்போலச் சிவக்கச் செய்தது. முகத்தை ஒரு பக்கமாகத் திருப்பிக்கொண்டான் பாண்டி.
“எங்களுக்கு நாங்களாத்தானே வீடு கட்டிக்கிட்டோம்? வேற யாரு கட்டிக்கொடுத்தா?” வேணும்னா நீயே வீடு கட்டிக்கோ.”.என்று குருசாமி சொல்ல, அண்ணனுக்கும் தம்பிக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது.
தொழுவத்துக்கு அடுத்த சமையலறையிலிருந்து, “ப்பூ…ஊஊ… ப்பூ…ஊஊ…” என்று கருப்பாயி அடுப்படியில் புகை சூழ ஊதுகுழல் சத்தம் கேட்டது.
இருவருக்கும் அடிதடி ஆகிவிடுமோ என்று பயந்த கெங்கையா,
“குருசாமி, நீ வீட்டுக்குப் போடா…” என்றதும், பேசாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து காரவீட்டுக்குப் பின்னால் இருக்கும் தன் கூரை வீட்டை நோக்கிப் போனான்.
“ஏலே பாண்டி, நான் சொல்றதைச் சொல்லிட்டேன். அதுக்கு மேல உன் பிரியம்போல செஞ்சிக்கோ…” என்று சொன்ன கெங்கையா, வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்துகொண்டு, “ரேசன் கடையில மண்ணெண்ணெய் ஊத்துதாங்களாம். கட்டாரங்குளம் வரை போயிட்டு வந்திருதேன், கருப்பாயி…” என்று மனைவியிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
உச்சிவெயிலில் மேல்காற்று புழுதியைச் சுருட்டி வீசியது. பாண்டி தன் துணிமணிகளை எடுத்துக்கொண்டு மனைவியின் ஊரான கடம்பூருக்குக் கிளம்பினான்.
போகும்போது யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவன் மனத்தில் ஒரு வன்மம் மட்டும் தங்கிவிட்டது.
3
ஒரு வாரம் கழித்து,
பாண்டி கடம்பூரிலிருந்து ஊருக்குப் புறப்பட்டபோது, அவனுடைய மனத்தில் இருந்த கோபம் தணியவில்லை.
அதற்குள் அது வேறு வடிவம் எடுத்திருந்தது.
அண்ணன் தன்னை அவமானப்படுத்திவிட்டான். தகப்பனார் தன் கஷ்டத்தைப் புரிந்துகொள்ளவில்லை. எல்லோரும் தன்னைத் தனியாக விட்டுவிட்டார்கள் என்று அவனாகவே முடிவு செய்திருந்தான்.
அந்த எண்ணத்தோடு இரவு ஒன்பது மணியளவில் இடைசெவல் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினான்.
அதே பேருந்திலிருந்து இறங்கிய இரண்டு இளைஞர்கள் வேகமாக நடந்தார்கள். பெரியவர் ஒருவர் மெதுவாக நடந்து போனார்.
சாலையோரம் ஒரு மரத்தின் இருளில் குத்துக்காலிட்டு சிறுநீர் கழித்தான். செடிகளின் இருளில் சிள்வண்டுகளின் இரைச்சல் அதிகமாக இருந்தது. ஒரு பீடியைப் பற்ற வைத்தான். அதற்குள் இளைஞர்களும் பெரியவரும் சிறிது தூரம் கடந்து போய்விட்டார்கள்.
பஸ் நிறுத்தத்திலிருந்து அவன் ஊருக்கு நான்கு கிலோமீட்டர் தூரம். காட்டுப் பாதையில் மேற்குப் பார்த்து நடந்துதான் போக வேண்டும்.
இடையில் சத்திரப்பட்டியை கடந்து ஒரு நீண்ட ஓடை அவன் ஊரை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. வற்றிய ஓடையின் இரு கரைகளிலும் வளர்ந்திருந்த வேலிமரங்களின் கிளைகள் மேல்காற்றில் உராயும் சத்தம் அவன் காதுக்குள் இரைச்சலிட்டதைப்போல இருந்தது.
ஓடையைக் கடந்து கரையேறும் பாதைக்குப் பக்கத்தில் ஒற்றைப் பனைமரம் ஒன்று இருந்தது. அதில் தொங்கிய காய்ந்த ஓலைமட்டை காற்றுக்கு அசைந்து மரத்தை உரசிக்கொண்டிருந்தது. அதன் சத்தம் அவனுக்குத் திடீரெனப் பயத்தை உண்டாக்கியது. உடம்பு புல்லரித்தது. திரும்பி போய்விடலாமா என்று நினைத்தான்.பின்பு அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேகமாக நடந்தான்.
காட்டுக்குள் சென்ற ஒற்றையடிப் பாதை, கொஞ்ச தூரத்துக்குப் பிறகு மாட்டு வண்டித்தடத்தில் இணைந்தது.
அந்தத் தடத்தில் நடக்கும்போது, மேல்காற்றுக்கு முதுகு காட்டிக் கிழக்குப் பார்த்துத் திரும்பி ஒரு பீடியைப் பற்ற வைத்தான். புகையை இழுத்து ஊதிக்கொண்டே நடந்தான். ஊரை நெருங்க நெருங்க அவனுடைய பயம் நீங்கியது.
அவன் மனசுக்குள் பலவிதமாக யோசித்தான்.
கம்மாக்கரையைத் தாண்டினால் ஊருக்குள் சென்றுவிடலாம். ஆனால், கம்மாக்கரையிலேயே ஆள் நடமாட்டம் இல்லாத ஓரிடத்தில், அந்த இருட்டில், ஒரு வெட்டவெளியில் அமர்ந்து கொஞ்ச நேரம் ஓய்வெடுத்தான். தூரத்தில் ஒரு ஆட்காட்டிப் பறவை சத்தமிட்டுக்கொண்டே அவன் தலைக்கு மேலே பறந்து சென்றது. ஊருக்குள் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது.
கம்மாக்கரையிலிருந்து இறங்கி ஊரை நோக்கி நடந்தான். வேலிமரங்கள் அரைப்பனை உயரத்துக்கு வளர்ந்து தரிசாகக் கிடந்த கொண்டல் நாயக்கர் புஞ்சை வழியாக, ஒற்றையடிப் பாதையில் போனால் காரவீட்டுக்குப் போய்விடலாம் என்று எண்ணினான்.
தோல் செருப்பு போட்டிருந்ததால் பாதையில் கிடந்த முள்கள் “நெருக்… நெருக்…” என்று சத்தம் வந்தது. ஊருக்கு வடக்கே நாய்கள் குரைக்கும் சத்தம் பக்கத்தில் கேட்டது. மேல்காற்றில் வளர்ந்த வேலிமரங்கள் கிழக்காகச் சாய்ந்து அசையும்போது, “மொரு… மொரு…” என்று கிளைகள் உடைவதைப்போலச் சத்தம் அவனுக்கு அச்சுறுத்துவதுபோல் இருந்தது.
இரவு இன்னும் ஆழ்ந்திருந்தது.
காரவீட்டின் கிழக்கே இருண்ட சுவர்ப்பக்கம் நின்று எட்டிப் பார்த்தான். வீட்டு வராண்டாவில் எந்த அசைவும் இல்லாமல் எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.
மெல்ல அடி எடுத்து வைத்து மேற்குப்புறம் இருந்த அறைக்குப் போகும்போது தொழுவத்தில் படுத்திருந்த காளை மாடுகள் “திடு..திடு..” வென சத்தத்தோடு எழுந்து நின்றது. தொழுவின் இருட்டுக்குள் நின்று கொண்டு உறக்கத்திலிருப்பவர்களை கவனித்தான். எந்த அசைவும் இல்லை.
மெதுவாக படியேறி கொண்டி போடாமல் சாத்தி வைத்திருந்த கதவை சத்தமில்லாமல் தள்ளி உள்ளே நுழைந்தான். அறையின் மேற்குப்புறம் மூடியிருந்த கண்ணாடிச் சன்னல் வழியாகத் தெருவிளக்கின் வெளிச்சம் ஓரளவுக்கு உள்ளே விழுந்திருந்தது.
வடக்கு பார்த்த வாசல் கதவுக்கு இடதுபக்கம், இடுப்பு உயரத்திலிருந்து நான்கு அடி உயரத்தில் நான்கு கதவுகள் வைத்திருந்த அந்தக் காலத்துச் சன்னல் இருந்தது. அதன் ஓரத்தில் ஒரு சிம்னிவிளக்கு அணைந்திருந்தது. பக்கத்தில் சிம்னியில் படிந்திருந்த கரும்புகையைத் துடைப்பதற்காக ஒரு துணி வைக்கப்பட்டிருந்தது. அவனுக்கு தேவையான துணியை கிழித்து எடுத்துக் கொண்டு மீதி துணியை அங்கே வைத்துவிட்டான்.
அவனுடைய கைகள் சற்றே நடுங்கின.
அந்த நிமிடத்தில் திரும்பிப் போய்விடலாமா என்று ஒரு கணம் தோன்றியது.
கிழித்த துணியை விளக்கிலிருந்த மண்ணெண்ணெயில் நனைத்து எடுத்துக் கையில் சுருட்டி வைத்துக்கொண்டான். அவசரத்தில் மண்ணெண்ணெய் துணியிலிருந்து சில துளிகள் சிந்தி அது சுவரில் கீழே வழிந்து பரவியது. மண்ணெண்ணெய் வாசம் அறையில் வீசியது.
யாராவது விழித்துவிடுவார்களோ என்ற அவசரத்தில் கதவருகே வந்து கவனித்தான். கெங்கையா, கருப்பாயி, பேரக்குழந்தைகள் என அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.
ஒரு பூனையைப்போல மெதுவாக வெளியேறி, காரவீட்டின் இருண்ட பகுதியான கிழக்குப் பக்கம் தெற்கே பார்த்து நடந்தான்.
காரவீட்டின் பின்புறம்தான் குருசாமியின் ஓலையால் வேய்ந்த கூரை வீடு வடக்கு பார்த்து இருந்தது. அந்த வீட்டின் மேல் காரவீட்டின் நிழல் இருட்டாக விழுந்திருந்தது. தெருவிளக்கின் வெளிச்சத்தையும் உயரமான காரவீடு மறைத்தபடி நின்றது. அந்த இருட்டு பாண்டிக்கு சாதகமாக அமைந்தது.
கூரைவீட்டிற்கும் நாத்துக்கூளப் படப்பிற்கும் இடையே ஒரு லாரி போகும் அளவு தெருப்பாதை இருந்தது. அங்குமிங்கும் பார்த்துவிட்டு நாத்துக்கூளப்படப்பு பக்கத்தில் போய் அதிலிருந்து ஆளுயர நாத்துக்கூளக்கட்டை உருவிக்கொண்டு வந்தான்.
கூரைவீட்டின் பின்புறம் தெற்குப் பக்கம் சுவரோரமாக நாத்துக்கூளக்கட்டைச் சாய்த்து நிறுத்தினான். அது ஓலையை உரசும் சத்தமில்லாமல் மெதுவாக கூரை முகட்டின் ஓலையும் நாத்துகூளக்கட்டின் உயரமும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருந்த இடத்தில் மண்ணெண்ணெய்த் துணியை மெதுவாகத் திணித்தான்.
இரண்டாவது தீக்குச்சியில் தீப்பிடித்தது.
ஆடி மாதம் என்பதால் மேல்காற்றும் அடித்துக்கொண்டிருந்தது. தீ “சட சட” என்ற சத்தத்தோடு எரியத் தொடங்கியது. இருட்டாகக் கிடந்த தெரு திடீரென வெளிச்சமானது. ஊருக்குள் இருந்த நாய்கள் குரைத்துக்கொண்டே ஓடிவந்தன.
அங்கிருந்து உடனே களத்துமேட்டில் புகுந்து, டிரான்ஸ்பார்மர் வழியாக தெற்கே பார்த்துக் குண்டுக்கிழவனுடைய வேலிக்காட்டுக்குள் போகும் ஒற்றையடிப் பாதை வழியாக வேகமாக ஓடினான்.
கூரைவீட்டுக்குள் தரையில் பாய் விரித்து தொட்டிலுக்கு பக்கத்தில் படுத்திருந்தாள் வள்ளி
கூரையின் மேற்புறம் எரிந்து, வீட்டின் உட்புறத்தில் “சடார்” என வெடித்த மூங்கில் துண்டு கீழே விழுந்து தொட்டிலில் தூங்கிகொண்டிருந்த குழந்தையின் வலது தோள்பட்டையில் விழுந்தது,
குழந்தை வீறிட்டு அலறி அழுதது.
உடனே வள்ளி எழும்பிவிட்டாள்
ஐய்யய்யோ.. தீ… ..தீ …
“வீடு தீ பிடிச்சி எரியுதே..”பதறி போய் அலறினாள்.
பக்கத்தில் நார்க்கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த அவளது கணவனை எழுப்பினாள்.
புகை வீட்டிற்குள் அதிகமாக பரவியிருந்தது.
தீயின் வெக்கையும் அளவுக்கு அதிகமானது.
வீறிட்டு அழுத குழந்தையைத் தொட்டிலில் இருந்து தூக்கியதும் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடினாள்.
குருசாமி கதவு நிலைக்கு மேலே மண்சுவரில் வைத்திருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு, இடுப்பிலிருந்த சாரத்தைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு வேகமாக வெளியே ஓடிவந்தான்.
முற்றத்தில் சுவரோரம் இருந்த கோழிக்கூண்டை திறந்துவிட்டான். குஞ்சுகளோடு கோழி தெருபக்கமாக ஓடியது.
நாய்கள் அளவுக்கு அதிகமாகக் குரைக்கத் தொடங்கியது.
முற்றத்திலிருந்து தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த வீட்டின் பின்பக்கச் சுவரோரமாக ஓடிப் பார்த்தான் குருசாமி.
தீயின் வெளிச்சத்தில் எரிந்து கருகிய நாத்துக்கூளக்கட்டு ஒன்று சுவரோரமாகச் சரிந்து கிடந்தது.
அதைப் பார்த்ததும் குருசாமிக்கு சந்தேகம் வந்தது.
யாரோ திட்டமிட்டுத்தான் தீ வைத்திருக்க வேண்டும் என்று அவன் மனசுக்கு தெரிந்தது.
யார் அவன் என்று தேடி பிடிக்க வேண்டும் என்ற பரபரப்போடு இருட்டிற்குள் இடது கையால் டார்ச்லைட்டை அடித்துக்கொண்டு, வலது கையில் அரிவாளை ஓங்கியபடி நாத்துகூளப்படப்பைச் சுற்றி ஓடித் தேடினான். யாருமில்லை.
ஊருக்குத் தெற்கே களத்துமேட்டு வழியாக டிரான்ஸ்பார்மர் வரைக்கும் சாமி வேட்டைக்குப் போவது போலச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே ஓடி வந்தான்.
யாரும் கண்ணில் படவில்லை.
அதற்குள் தீ பாதிக் கூரையைச் சாம்பலாக்கிவிட்டிருந்தது. கூரையின் ஒரு பக்கம் எரிந்து மேல்காற்றுக்கு அடுத்தடுத்து முன்னேறிக்கொண்டு எரிந்தது தீ.
அதற்குள் வள்ளி அழுத கைக்குழந்தையை இரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு வடக்கே காரவீட்டை நோக்கி ஓடினாள்
“யத்தே… எந்திரிங்கத்தே…” என்று அலறி சத்தம் போட்டு அழுதாள்.
காரவீட்டு வராண்டாவில் படுத்திருந்த கெங்கையாவும் கருப்பாயியும்,
“என்னம்மா… என்னாச்சி?” என்று பதறிக்கொண்டு எழுந்தார்கள்.
கருப்பாயி தலைமுடியைக் கொண்டை போட்டுக்கொண்டே எழுந்து, சேலை முந்தானையை இடுப்பில் சொருகியபடி ஓடி வந்தாள். தீ எரியும் வீட்டைப் பார்த்து இரண்டு கைகளாலும் தலையில் அடித்துக்கொண்டே,
“சண்டாளப் பாவி! குடும்பத்தோட எரிச்சிக் கொல்லப் பாத்தானே!” என்று திட்டினாள்.
பக்கத்து வீட்டுக்குப் பக்கம் ஓடிப்போய்,
“ஏம்மா மாடத்தி… சம்முயா… எந்திரிச்சி வாங்கடா! குருசாமி வீடு தீப்பிடிச்சிருச்சி… எந்திரிச்சி வாங்கடா!” என்று அலறியபடி கதவைத் தட்டினாள்.
கெங்கையா கைத்தடியோடு மெல்ல நடந்து வந்தார்
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து வயதான பெரியவர்களும் சிறுவர்களும், ஆண்களும் பெண்களும், இளவட்டங்களுமாக நாலாபக்கமிருந்தும் ஓடி வந்தார்கள்.
அதே நேரத்தில் குண்டுக்கிழவனுடைய வேலிக்காட்டை அடுத்து இருந்த உப்போடையைக் கடந்து விட்டான் பாண்டி.
அங்கிருந்து தெற்கே அஞ்சுபனைத்தாவு கரிசல் காட்டுப் பக்கம் அந்த நள்ளிரவில் ஒரு டிராக்டர் உழவடித்துக்கொண்டிருந்தது. அதன் தூரத்து விளக்கொளிக்கு முன்னால், உழவு மண் கட்டிகளுக்கு நடுவே குறுக்கிட்டு ஓடினான். அந்த வெளிச்சத்திலிருந்து மறைந்து நல்லதண்ணீர்க் குட்டைப் பக்கம் போய் நின்று, ஊரைத் திரும்பிப் பார்த்தான்.
அவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.
தீ ஒரு பனை உயரத்துக்குப் பற்றியெரிந்தது.
ஊருக்குள் அவரவர் வீட்டிலிருந்த குடங்களில் உப்புத்தண்ணீரைக் கொண்டுவந்து தீயின் மீது வீசி ஊற்றினார்கள்.
ஊர்க் கிணற்றில் தண்ணீரை இறைத்து இறைத்து குடங்களில் நிரப்பிக்கொண்டிருந்தார்கள்.
இளவட்டங்களும் பெண்களும் வரிசையாகத் தண்ணீர்க் குடங்களைச் சுமந்துகொண்டு வந்து, இடையில் மற்றவர்களிடம் கைமாறிக் கொடுத்தனுப்பினார்கள்.
மேல்காற்றில் தீ கொழுந்துவிட்டு ஆவேசமாக எரிந்துகொண்டிருந்தது.
இளவட்டங்கள் பெரியவர்கள் என அந்த ஊரே எவ்வளவு முயன்றும் குடத்துத் தண்ணீரால் யாராலும் தீயை அணைக்க முடியவில்லை.
தீயின் வெளிச்சத்தில் எல்லோரும் தங்கள் வீடு எரிவதைப்போல நின்று பார்த்தார்கள். அவர்களின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வருவது தெரிந்தது.
சிறுவர்கள் தங்களை அறியாமலேயே வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்கள்.
அசுர வேகத்தில் ஒரு வீட்டையே தீ சாம்பலாக்கி இருந்தது.
கெங்கையா ஒரு ஓரமாகக் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தார்.
தன் மகனும் மருமகளும் குழந்தையும் குடியிருந்த வீடு, தன் கண் முன்னால் சாம்பலாகிக்கொண்டிருந்ததை பார்த்த தாங்க முடியாத துயரம் அவர் முகத்தில் படர்ந்திருந்தது.
அவர் எதுவும் பேசவில்லை.
கருப்பாயி பக்கத்தில் குருசாமியும் வள்ளியும் அழுதுகொண்டிருந்த குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார்கள்.
இறக்கையை படபடவென அடித்து சேவல் கூவும் சத்தம் வடக்குத் தெருவிலிருந்து கேட்டது.
வந்திருந்த பெரியவர்கள் சிறியவர்கள் ஆளாளுக்கு எதை எதையோ ஆறுதல் சொல்லிவிட்டு அவர்களுடைய வீட்டிற்கு திரும்பினார்கள்.
4
மறுநாள் விடியற்காலை
தீ அணைந்திருந்தது.
வீடு மட்டும் சாம்பலாகிக் கிடந்தது.
மேல்காற்றில் சாம்பல் பறந்துகொண்டிருந்தது.
வள்ளி எரிந்த வீட்டுக்குள் நுழைந்து ஒவ்வொன்றாகப் பார்த்தாள்.
பிறந்த வீட்டிலிருந்து சீதனமாகக் கொண்டுவந்த அம்மி இரண்டாக உடைந்திருந்தது. குழவிக்கல்லின் கைப்பிடி ஒரு பக்கம் முறிந்திருந்தது.
உரலின் வாய்ப்பகுதி உடைந்து, அதன் உள்ளே சாம்பல் கலந்த தண்ணீர் தேங்கியிருந்தது.
ஒரப்பட்டி துருப்பிடித்ததுபோலக் கிடந்தது. மண்குடங்கள் உடைந்து ஓடுகளாகச் சிதறியிருந்தன.
ஆசை ஆசையாக வாங்கிய பூப்போட்ட சேலைகள் எரிந்து கருகியிருந்தன. குழந்தையின் துணிமணிகள் கரிந்து உருகிக் கட்டிகளாகக் கிடந்தன.
சமையலறையில் எவர்சில்வர் தட்டுகளும் கிண்ணங்களும் கறுத்துக் கிடந்தன. சோறு வைத்திருந்த அலுமினியப் பாத்திரம் நெளிந்திருந்தது.
அதெல்லாம் பார்த்து அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
ஒரு வீட்டை இழப்பது என்பது ஓலைகளையும் சுவர்களையும் இழப்பது மட்டுமல்ல. நாள்தோறும் கையில் எடுத்துப் பயன்படுத்திய பொருட்களோடு சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கையையே இழப்பதுதான் என்பதை அந்தச் சாம்பலுக்குள் நின்றபோது அவள் உணர்ந்தாள்.
குருசாமி எதுவும் பேசாமல் கருகிய பாத்திரங்களை ஓரிடத்தில் சேர்த்துவைத்தான்.
பக்கத்து வீட்டு சண்முகையா அங்கே வந்தார்.
“ஏய் குருசாமி, எரிஞ்சுபோனதைப் பார்த்துட்டே இருந்தா வேலைக்கு ஆகாது? சாம்பலையும் கரிக்கட்டையையும் அள்ளிப் போட்டுட்டு வீட்டை சுத்தம் செய்வோம். இப்படியே கிடந்தா மனசுக்கு இன்னும் கஷ்டமா இருக்கும்.” சொல்லிக்கொண்டே இரும்புச் சக்கை வரட்டியைக் கொண்டுவரப் போனார்.
சண்முகையா எப்போதுமே குருசாமிக்கு துணையாக நிற்பவர். மரம் வெட்டினாலும், கூரை வேய்ந்தாலும், வயலில் வரப்பு வெட்டினாலும் இருவரும் சேர்ந்துதான் செய்வார்கள்.
அன்று மட்டும் அவர் வழக்கத்தைவிட அதிகமாகப் பேசினார். குருசாமி மனம் உடைந்து போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்.
வள்ளியும், குருசாமியும் தீயில் கறுத்துபோன பாத்திரங்களை எடுத்துக்கொண்டு காரவீட்டை நோக்கி நடந்தார்கள்.
அங்கே ஏற்கெனவே ஊர் நாட்டாமையும் பெரியவர்களும் உறவினர்களும் கூடியிருந்தார்கள்.
தீ விபத்து பற்றிய செய்தி ஊரெங்கும் பரவியிருந்தது.
“யாரு இப்படிச் செஞ்சிருப்பா?”
“வீட்டுக்குள்ள ஆளுங்க இருக்கும்போதே தீ வைக்கிற அளவுக்கு யாருக்கு வன்மம் இருக்கும்?” என்று ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
குருசாமி மட்டும் அமைதியாக இருந்தான்.
அவனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
அந்த நேரத்தில்தான் பாண்டி தன் மனைவி குழந்தையோடு ஊரிலிருந்து வந்தான்.
கெங்கையா, கருப்பாயி முகத்தைப் பார்த்தான். குருசாமியின் முகத்தைப் பார்த்துவிட்டு தலையை குனிந்து கொண்டே வாசற்படி அருகே கல்தூண் பக்கத்தில் அமர்ந்தான்
அப்போதுதான் வள்ளி தன் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி,
“உனக்கும் ஒரு புள்ள இருக்கே… இந்தப் பச்சமண்ணு என்ன பாவம் செஞ்சது ஒனக்கு?
நாங்க செத்துப் போயிருந்தா ஒங்கள சும்மா வுட்டுருவாகளா..?
தழுதழுத்த குரலில் அழுதுகொண்டே அவனையும், அவன் மனைவியையும் பார்த்துக் கேட்டாள் வள்ளி. அவளுடைய இடுப்பிலிருந்த குழந்தை காயத்தின் வலி தாங்காமல் அழுதது.
“சனியனே எப்ப பாத்தாலும் கிராவுதயே.. அதான் நடுத்தெருவுல வந்து நிப்பாட்டிட்டியே” என்று அவர்கள் மேலிருந்த கோபத்தில் அவள் குழந்தையை வைதாள்.
யாரும் பாண்டியைப் பார்த்து பேசவில்லை.
அந்த அமைதியே அவனுக்குள் அச்சத்தை ஏற்படுத்தியது.
பக்கத்து வீட்டு மாடத்தி வள்ளியைப் பார்த்து,
“என்ன வள்ளி, பச்சப்புள்ளைய வைதுக்கிட்டு இருக்க. அதுக்கு என்ன தெரியும்? அது அழுது கத்தப்போயிதான நீயும் ஒன் புருஷனும் முழிச்சுப் பார்த்தீங்க? அது அழாம இருந்திருந்தா கூரை எரிஞ்சி விழுந்து அமுக்கிருக்கும்லா?..”
என்று சொல்லிவிட்டு வள்ளியிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டாள்.
“அப்பா அம்மாவைப் பார்க்கணும்… அநாதைப் பிள்ளையா ஆகக்கூடாதுன்னு தெய்வமா அழுது எழுப்பிக் காப்பாத்தியிருக்கு இந்தப் புள்ள!”
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் வள்ளி அமைதியானாள்.
பாண்டி தலை குனிந்திருந்தான்.
குருசாமி அவனைப் பார்த்தான்.
“நாத்துக்கூளப்படப்புல இருந்து நீதாம்ல தெனமும் மாட்டுக்கு நாத்துக்கூளம்கட்டு உருவிக்கிட்டு வருவ. அந்த நாத்துக்கூளக்கட்டு எரிஞ்சு கிடந்தப்பவே உன் மேல சந்தேகம் வந்துச்சு.
தீ வைச்சவனைத் தேடி அன்னைக்கி ராத்திரி களத்துமேட்டுலயும் படப்புப் பக்கமும் தேடினேன். கண்ணுல தட்டுப்படல.”
அவன் சிறிது நேரம் நிறுத்தினான்.
பாண்டி பதில் சொல்லவில்லை.
அவனுடைய மனைவி உடனே பேசினாள்.
“எங்கூர் கடம்பூர்லதான் நேத்து ராத்திரி இருந்தாரு. அதுக்குள்ள திட்டாம்தரமா குத்தம் சொல்லாதீங்க.” என்றாள்.
கருப்பாயி அப்போது குறுக்கிட்டாள்.
பாண்டியைப் பார்த்து கை நீட்டி,
“காரவீட்டுல சிம்னி வெளக்குக்குப் பக்கத்துல கரியைத் துடைக்கிறதுக்காகத் துணி வைச்சிருந்தோம். அந்தத் துணி கிழிஞ்சிருக்கு. விளக்கிலிருந்த மண்ணெண்ணெய் சிந்தி சுவரெல்லாம் வழிஞ்சி நனைஞ்சி கெடக்கு”..
“இதல்லாம் தெரிஞ்சவன்தான் வந்து பண்ணமுடியும். உன்னத் தவிர வேற ஊர்லருந்தா எவனும் கட்டுச்சோறு கட்டிக்கிட்டு வரான்” ஆவேசமாகச் சொன்னாள்
பாண்டி முகத்தில் நெற்றியில் வியர்வை அரும்பியது.
அங்கிருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
அவன் தன்னைச் சமாளித்துக்கொள்ள முயன்றான். ஆனால், அவன் கண்கள் யாருடைய பார்வையையும் நேராகச் சந்திக்கவில்லை.
அந்தத் தயக்கமே கூட்டத்தினரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.
வள்ளியின் தம்பி மாடசாமி கூட்டத்திலிருந்து திடீரென எழுந்து
“அவன்தான் தீயை வச்சான்னு தெரிஞ்சு போய்ச்சில்லா. போலீஸ்ல கேசு கொடுத்து உள்ள தள்ளனும். ஒரு குடும்பத்தயே உசுரோட கொல்ல பாத்திருக்கான். அவனைச் ச்சும்மா விடக்கூடாது!” என்று கத்திக்கொண்டே பாண்டியை நோக்கி பாய்ந்து வந்தான்
அங்கிருந்த பெண்கள் அவனைத் தடுத்தார்கள்.
சண்முகையா அவனைப் பிடித்துக்கொண்டு,
“கோவத்துல எதையாவது செஞ்சிட்டா ஒன்னுயில்லாட்ட ஒன்னு ஆகிப்போயிரும்யா. நிதானமா இரு மாடசாமி!” என்று அதட்டினார்.
அப்போது கெங்கையா எழுந்தார்.
பாண்டியைப் பார்த்தார்.
அவருடைய முகத்தில் கோபமும் அவமானமும் துயரமும் கலந்திருந்தன.
“அவனை ஒண்ணும் சொல்ல வேண்டாம்டா குருசாமி…”
“அவன் தப்பு செஞ்சிட்டான்.”
அந்தச் சொற்கள் கெங்கையாவின் வாயிலிருந்து வந்தபோது அவருடைய குரலும் தழுதழுத்தது.
தகப்பனார் சொன்னதும் குருசாமி அமைதியாகிவிட்டான் .முகத்தில் கோபம் இருந்தது. ஆனால், அந்தக் கோபத்துக்குப் பின்னால் வேறொரு வலியும் இருந்தது.
கெங்கையா பாண்டியை நோக்கித் திரும்பினார்.
“ஏலே பாண்டி, ஒரு நிமிஷம்கூட இங்கன இருக்கக்கூடாது. உன் பொண்டாட்டி பிள்ளையைக் கூட்டிக்கிட்டுப் போல. போற இடத்திலயாச்சும் மப்பு பண்ணாம இருந்து காலத்த கழி ..”
அவன் மனைவி குழந்தையைத் தூக்கிக்கொண்டாள்.
“வாங்க, ஊருக்குப் போவம்.”
அவள் கணவனை முறைத்துப் பார்த்தாள்.
பாண்டி எழுந்தான். யாரையும் பார்க்காமல் தன் தவறை உணர்ந்து அவள் பின்னால் கிழக்கே பார்த்து நடக்க ஆரம்பித்தான்.
மேல்காற்று புழுதியை அள்ளி வீசியது.
அந்த நேரத்தில் கெங்கையாவின் பேரன் செந்தில்வேல், வராண்டாவில் அமைதியாக அமர்ந்திருந்த குருசாமியைப் பார்த்தான்.
“என்ன சித்தப்பா, அவரு இவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்காரு. நீங்க அவர ஒண்ணுமே சொல்லலையே?” என்றான்
அங்கிருந்த பெரியவர்கள் அவனை அதட்டி
“பெரியவங்க பேசிக்கிட்டிருக்கும்போது இடையில ஏன் பேசுற? நீ சும்மா இருடா.” என்றார்கள்
குருசாமி மெதுவாகத் தலையை நிமிர்த்தினான்.
அவனுடைய கண்களில் கண்ணீர் முட்டியிருந்தது.
துண்டால் கண்களைத் துடைத்துக்கொண்டே சொன்னான்
“என்னடா செய்ய? எங்கூடப் பிறந்துட்டானே அவன்…”
அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை குருசாமி.
அங்கிருந்து கிளம்பி போன பாண்டிக்கு அதன் பின்னான இரவுகளில் உறக்கம் போயிருந்தது.
000

பட்டியூர் செந்தில்குமார்
கோவில்பட்டி அருகே அகிலாண்டபுரம் பட்டியூர் கிராமத்தைச் சார்ந்தவர் பட்டியூர் செந்தில்குமார். தற்போது துபாயில் பணிபுரிந்து வருகிறார்.
இவரின் முதல் ஹைக்கூத் தொகுப்பு “பறக்க ஆயத்தமாகும் குருவி” இடையன் – இடைச்சி நூலகம் வெளியீடாக 2021 ஆம் ஆண்டு வந்துள்ளது.

