1
,
சில நேரங்களில் ஒவ்வாமை
சிலர் நிறங்களை அறிய உதவும்
நெருக்கத்தின் இறுக்கமதை
அளவிட உதவும்
புன்னகைக்குப் பின் உள்ள
கசப்புகளைக் கண்டறியும்
மதிப்பதாய் கூறும்
வஞ்சகத்தை வெளிப்படுத்தும்
பொய்யாய்ப் பழகியதை
தோலுரித்துக் காட்டும்
துரோகத்தின் பரிசாக
அன்புடனே வழங்கப்படும்
ஒரு தட்டில் மரியாதையையும்
மற்றொரு தட்டில் பாராமுகத்தையும்
நீட்டக்கூடும்
நம் நிலை என்னவென்ற
புரிதலை உண்டாக்கும்
எவ்வடிவில் வந்தாலும்
உண்மை நிலையறிய உதவும்
மொத்தத்தில் ஒவ்வாமை
நன்றே.
2
,
சற்றே மனம் சுருங்கிய நிலை
பிச்சியாய் இன்றைய நிகழ்வுகளை
தள்ளி நின்று பார்க்கும் சூழல்
,
எடுத்த பணியைத் திறம்பட
முடிக்கும் துடிப்பு மட்டுப்பட்டது
எனக்கென்ன என்ற மனநிலை
மெல்ல தலைதூக்க முற்பட்டது
,
சாத்தானும் தேவனும் முண்டியடிக்க
கோபமும் இரக்கமும்
மாறி மாறி வந்தன
,
தொண்டைவரை எழும்பிய சொற்கள்
ஒன்றுகூட்டி விழுங்கிய எச்சிலில்
ஒளிந்து கொண்டன
,
ஒவ்வொரு நிகழ்விற்குப் பிறகும்
கொதித்தடங்கும் இயல்பு மட்டும்
என்றுமே மாறுவதில்லை.
00

பா. கங்கா
கங்கா, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இராணி மேரிக் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை நிறைஞர் பட்டம் பெற்றவர். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் பட்டத்துக்குப் பிந்திய பட்டயப்படிப்பை முடித்தவர். தற்போது தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். 2022 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசின் பாராட்டுப் பதக்கமும் 2023 ஆம் ஆண்டில் கவிதைப் பிரிவில் தேசியக் கலைகள் மன்றத்தின் தங்கமுனை விருதும் பெற்றவர். 2025 ஆம் ஆண்டில் சிறுகதைப் பிரிவில் தேசியக் கலைகள் மன்றத்தின் தங்க முனை விருதில் மூன்றாம் பரிசைப் பெற்றவர். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழா சிறுகதைப் போட்டிகளிலும் கவிமாலை அமைப்பின் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார். தமிழ் முரசு, தி சிராங்கூன் டைம்ஸ், மக்கள் மனம் ஆகிய சிங்கப்பூர் இதழ்களிலும் செம்மலர், நுட்பம், வலசை, சிற்றுளி முதலிய தமிழக இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. 2024ஆம் ஆண்டில் இவரது முதல் நூலான நீராம்பல் கவிதைத் தொகுப்பு வெளியானது. ஆசிய நாகரிகங்கள் அருங்காட்சியகத்தின் 2024ஆம் ஆண்டு ‘தி லைன் ஆஃப் பெஸ்ட் ஃபிட்’ என்று பெயரிடப்பட்ட நிகழ்விற்காக இஞ்சி வடிவ தேநீர் பாத்திரம் என்ற களிமண் சிலைக்குப் பொருத்தமாக இவருடைய ‘சலனமாகும் தேநீர்’ என்ற கவிதையும் இடம்பெற்றது. 2025ஆம் ஆண்டு ‘காதல் துதி’ என்ற கவிதைத் தொகுப்பு வெளியீடு கண்டது.

