1

தன்னிகருக்கு யாருமில்லை

தனக்குப் பிறகும் எவருமில்லை

என்பார் அவர்

அவரைச் சுற்றிலும்கூட

யாருமில்லை என்பதை

அவருக்குச் சொல்வார்

யார்…

யாருமில்லை.

2

கடைசியாக

அவன் மகிழ்ச்சியாக இருந்த

பொழுதுகளை நினைத்துப் பார்க்கிறான்

துக்கம் கொப்பளிக்கிறது

மகிழ்ச்சியாக இருந்ததாக

நினைத்திருக்கிறான்

புத்தொளி வகுப்பில்

குருஜி அப்படித்தான் சொன்னார்

மகிழ்ச்சியாக இருப்பதாக

நினைத்துப் பார்க்கவே

உனக்கெல்லாம்

குருஜி தேவையா என்று

நெருங்கிய நண்பன்

நேற்று கேட்டது

கன்னத்தில் அறைந்த ஓசை போல

இப்போதும் அவனுக்குள்

ஒலித்துக்கொண்டிருக்கிறது.

இன்றைய வகுப்பில்

எல்லோரும் கண்களை

மூடியிருந்தார்கள்

இவன் மட்டும்

ஒற்றைக் கண்ணை

லேசாகத் திறந்து பார்த்தான்

மகிழ்ச்சியாக இருந்தார்

குருஜி.

அவனுக்குள்

இன்னும் துக்கம்

மகிழ்ச்சியை

இரண்டு கண்திறந்து

பார்க்கமுடியவில்லையே என்ற

ஏக்கம்.

3

ஜன்னல் வழியாக

உள்ளே வந்த வெயில்

அவன் காலுக்குக் கீழே

பரவியிருந்தது

காலைத் தூக்கி

ஆட்டிப் பார்த்தான்

அது வெயிலின் பரப்பை

சுருக்கியது

ஏதோ யோசனை…

காலைத் தூக்கி

பக்கத்திலிருந்த ஸ்டூலில்

வைத்துக்கொண்டு பார்த்தான்

வெயிலின் பரப்பு

குறையாமல் அப்படியே இருந்தது

காலுக்கு கீழே

இருப்பதாலேயே

எல்லாமும்

நம் விருப்பத்துக்கு

சுருங்கி விரியாது.

4

மனவெளியில்

எத்தனையோ ஒலிகள்

எண்ணற்ற பம்புசெட்டுகள்

ஒரே நேரத்தில் இயங்குவது போல

ஓசைகள் குறையும் நேரம்

எண்ணற்ற கேள்விகள்

கேள்விகள் குறையும் நேரம்

மீண்டும் ஓசைகள்

மனத்தின்

ஓயாத இரைச்சலை

யார் நிறுத்துவது?

மீண்டும்

கேள்வி நேரம்

யாருக்கும் முடியவில்லை.

5

நான்

யாருக்கு ஆதரவு என்பதில்

எனக்குள் குழப்பம்

ஒருவழியாக

தெளிவு பிறந்தது

என்னைவிடக் குழப்பத்திலிருந்த

அவருக்குத்தான் ஆதரவு

மீண்டும் குழப்பம்

எனக்கு நானே

ஆதரவில்லையா…?

உண்டு, உள்ளிருந்து

சரி சரி

அது…

வெளியிலிருந்து.

6

ஒவ்வொரு

சிறிய அசைவிலும்கூட

மனிதர்கள்

பெரும்பள்ளங்களை

தோண்டுகிறார்கள்

ஒவ்வொரு

சிறிய வாய்ப்பிலும்கூட

மனிதர்கள்

இன்னொரு மனிதனின்

நெஞ்சில் ஏறிச் செல்கிறார்கள்

பேரசைவுகளிகூட

சாத்தியமில்லா பலவற்றையும்

சிறிய அசைவுகளில் 

செய்துவிடுகிறார்கள்

உங்களுக்கு அதிர்ஷ்டமிருந்தால்

அவர்களின்

அசைவற்ற பொழுதுகளில்

வாழ்ந்துகொள்ளுங்கள்

அவசர அவசரமாக.

7

ஒவ்வொருவரும்

ஓர் சமூகமாக வாழ்கிறார்கள்

இதற்கிடையில்

மனிதனாக மட்டும் வாழ்பவர்களின்

இடம் என்ன?

ஏதோ சமூகம் பார்த்து

போட்டுக் கொடுத்தால்

நன்றாக இருக்கும்….

***

சுகதேவ் –

மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *