1

ரகசியங்களில் ஒட்டியிருக்கும்

சிதறல்களைக்கூட

நுண்ணறியும் திறன்மிக்கவனாக

சொல்லிக்கொள்கிறாய்

ஆனாலும்

சுமக்க முடியாத

பொய் மூட்டையுடன்

சுற்றிச்சுற்றி வருகிறாய்

கீழே போடு

தட்டுத் தடுமாறி விழுந்து

மூட்டைக்கு அடியில்

சிக்கிக்கொள்ளப் போகிறாய்

பொய்யில் நசுங்கி

வீழ்ந்ததாக

வரலாறு பதிவேற்றும்.

2

அந்த நிகழ்வரங்கத்திலிருந்து

கடைசியாக வெளியேறியதால்

முதலில்

விசாரணைக்கு அழைக்கப்பட்டான்

அவன்.

குற்றப் புலனாய்வுக்கு

உரியவன்

முன்பே சென்றுவிட்டான்.

பெரிதும்

செய்யாத மனிதர்கள் மீதே

சந்தேகத்தின் நிழல்

உடனடியாக விழுகிறது.

செய்வினையாக

இருக்குமோ?

3

அரசியலில்

அவர் பார்க்காத களமில்லை

ஆனாலும்

குறையாமல் சூளுரைக்கிறார்.

கலைந்த கூட்டத்தை

பெருந்திரள் என்கிறார்

கண் முன்னே பறக்கும்

ஆடையை

காற்றாடி என்கிறார்.

மிச்சம் என்ன?

ஆத்தாடி என்கிறார்

யாரோ ஒருவர்.

4

தூணுக்கு மறைவில்

நிற்கும்போது

ஒரு பெண்ணுக்கு

ஏதோ ஒரு வகையில்

வசதியாக இருக்கலாம்.

தூண் மறைவு

ஓர் ஆணுக்கு

தப்பிக்கும் அரணாக இருக்கலாம்.

தூணுக்குப் பின்னால்

ஒளிந்து விளையாடும்போது

ஒரு குழந்தைக்கு

குதூகலமாக இருக்கலாம்.

ஒரு பெரியவருக்கு

தூணே

ஆதாரமாக இருக்கலாம்.

கடந்த காலத்தில் நடந்த

பெரும் களேபரத்தின்

சுவடுகள் ஏதுமின்றி

தூண்கள் அப்படியே நிற்கும்.

உறைந்த ரகசியங்களின்

உள்ளடக்கம் தூண்கள்

தூண்கள் பேசினால்

மனிதர்கள்

நிற்க முடியாது.

அதிலும்

கல்தூண்கள் பேசினால்

பெரும் கலகம்தான்.

5

முன்பெல்லாம்

வணக்கமும் கைகுலுக்கலும்

சந்திப்பின் அடையாளங்கள்

இப்போது

கட்டித் தழுவுகிறார்கள்

மனிதர்கள்

அதில் ஒட்டியிருக்கும் உறவை

தட்டிப் பார்த்தால்

கண்ணுக்குத் தெரியாத

தூசி போல பறந்து செல்கிறது.

உளமார்ந்த உறவு என்பது

அரிய வகைப் பட்டியலில்

தேடிப் பார்த்தால் கிடைக்கலாம்

தழுவலும் பெருநகையும்

காட்சிப் பிழை.

6

அதிகாரத்தை நோக்கி

மெல்ல, மெல்ல நெருங்குவதும்

பாய்ந்து, பாய்ந்து செல்வதும்

அவரவர் உரிமை

அதற்காக

அதுகாறும் பேசப்பட்ட

விழுமியங்கள்

நிற்கும் கால்களுக்கு

இடையிலேயே

மண்மூடிப் போகலாமா…

உங்களின்

வெளுத்த நிறத்தை

நாங்கள்

புத்தாடையாகவே

நினைத்துக் கொள்கிறோம்

எங்களுக்கு

மனப்பிராந்தி உண்டு

***

சுகதேவ் –

மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *