நித்தியாவும் நிர்மலாவும்:
வளர்ப்புச் செடிகள் வளர்க்கும் அளவிற்கு
வாசலில் இடம் எப்போதும் இருந்ததில்லை
,
அதிகபட்சமாக வளர்த்த
வளர்ப்புப் பிராணி என்றாலும் கூட
அது அயிரை மீன்கள் தான்
,
மற்ற மீன்கள் எல்லாம் தெருவழியே விற்க வருபவர்
கொண்டு வரும் போது
மரித்தே இருக்கும்
அயிரைகள் மட்டுமே குறைவாக இருக்கும் நீரிலும் உயிரோடு துள்ளிக் கொண்டிருக்கும்
,
தாத்தனுக்குப் பிடிக்கும் என்று
குழம்பு வைக்க பாட்டி வாங்கிய
அந்த அயிரை மீன்களுள் ஐந்தாறை அவளுக்குத் தெரியாமல் எடுத்து
தண்ணீர் நிரப்பிய போத்தலில் இட்டு
பொரி போட்டு அதை வளர்த்த போது
கிடைத்த அந்தச் சிறுவயது மகிழ்ச்சி நித்தியமாக இருந்தது
,
ஓரிரு வாரங்கள் ஆன பின்
அந்த அயிரைகள்
செத்து மிதந்த போது
சிந்திய அந்தச் சிறுவயது கண்ணீர் நிர்மலமாக இருந்தது.
0
2. மரபணுக்கள்:
0
என்னிடத்தில் தனது அப்பாவை
சின்னதாக உணர்ந்த அம்மா என்னை
குட்டி அப்பு என்று தான் அழைக்கிறாள்
,
அக்காவிடத்தில் தனது அம்மாவை
சின்னதாக உணர்ந்த அப்பா அவளை
அம்முக்குட்டி என்று தான் அழைக்கிறார்
,
அப்பாவிற்கு பதில் அப்புவும்
அம்மாவிற்கு பதில் அம்முவும்
எவ்வளவு அழகான சொற்கள்
,
அப்பு என்றால் நீர் என்று பொருள்
இங்கே அது உயிர்திரவம்
அன்னை என்றால் அன்னம் போல
அம்மு என்றால் சோறு
,
மரபை மீறத் துடித்தாலும்
மொழியால் முழுமையாக
மரபை மீறிவிட முடியாது
,
சொற்கள் மொழியின்
மரபணுக்கள்.
0
3. தொடுவானம்:
,
தவழும் குழந்தைக்கு முன்
ஒரு பொம்மையை வைத்து
இதை வந்து தொடு என்று
அதன் அக்கா குழந்தையை
பணிக்கிறாள்
,
தொடுவதற்கு குழந்தை
தவழ்ந்து வரும்போது
பொம்மையை மேலும்
பின்னால் இழுத்து
தூரத்தை அதிகமாக்குகிறாள்
,
ஒருகட்டத்தில் குழந்தை
சடைந்து போகிறது
,
கண்களால் நாம்
தொட்டுக் கொள்ளும்
கடலும் வானமும்
தொட்டுக் கொள்ளும் இடமும் அப்படியே
,
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
என்பார்கள்
கண்களுக்கு எட்டியதும்
கைகளுக்கு எட்டுவதில்லை.
0
4. தீராநதி
,
தனது பிம்பத்தால்
நதியில் ஒரு
பால்வண்ணக் கூழாங்கல்லாக
முடியாத நிலவு
தேம்புகிறது
,
தேம்பும் நிலவை
கோதிவிட்டு வருடி விட
நாணலை மயிலிறகாய்
வளர்த்து விட்டிருக்கிறது நதி.
0
5. மஞ்சள் மகிமை:
,
புதுச்சட்டைகளுக்கு
மஞ்சள் வைக்கும்போதுஎல்லாம்
‘மஞ்சள் எல்லாம் வச்சிருக்கு புதுசா?’ என்று ஏதோ ஒரு சட்டையை அணிந்திருந்தபோது
நீ கேட்ட ஞாபகம் தான்
,
மஞ்சள்
மண்ணுக்கு அடியில்
விளைகிறது
இரகசியமாக
,
நீ முகத்தில்
பூசும் மஞ்சள்
வெள்ளிடைமலை
மற்றவை எல்லாம்
இலைமறை காய்
,
மாநிறம் என்பதே
மஞ்சள் நிறம் தான்
மாமைக்கவினைவிட
கருப்பு களையைவிட
மஞ்சள் மகிமை
நட்பாங் கிழமை.
00

மு.ஆறுமுகவிக்னேஷ், Pharm D., (Doctor of pharmacy).
விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி சொந்த ஊர். மருந்தியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். காற்றுவெளி, நுட்பம், வாசகசாலை, திறவுகோல், கொலுசு, ஆனந்த விகடன், ஆவநாழி, போன்ற இணைய மற்றும் அச்சு இதழ்களில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. தற்போது சொந்த ஊரில் மருத்துவ துணி (surgical dressings and bandage) உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளேன். தமிழ் இலக்கிய ஆர்வம் மிகுதியாக உண்டு. தொடர்ந்து தமிழ் இலக்கிய நூல்களை வாசித்து வருகிறேன்

