1. இருவாய்ச்சி:

,

கைகால்களில் கொஞ்சம்

நகங்கள் வளர்ந்து விட்டாலும்

‘வாய்ச்சி மாதிரி ஏன்

நகம் வச்சுருக்க?’ என்று

அம்மா கடிந்து கொள்வாள்

,

வாய்ச்சி என்று

அம்மா சொல்வது

இருவாய்ச்சி பறவையின் அலகுகளைத்தான்

,

நெடுநாள் வளர்த்த

நகம்போல் வளைந்து

கூர்மையாக இருக்கும்

அதன் அலகுகள்

,

குளித்து முடித்தவுடனே

நகங்களைக் களையச் சொல்வாள்

அம்மா எப்போதும்

,

அப்போதுதான்

அந்த நீர்மைக்கு நகங்கள்

இலகுவாக வெட்ட வரும்

நீர் தெளித்து முடியை

மடக்கி வாருவது போல

,

உகிர்களைப் போல் தான்

ரோமங்களும்

நீர்மை என்னும்

தாய்மைக்குத்தான்

மடங்கும் நுடங்கும்.

0

2. எண்ணூறு குலவை:

,

பரிச சேலையை வைக்கும் நார்ப்பேழையை

சுமந்து கொண்டு

ஒருசிறுமி வர

மற்ற சிறுமிகள் எல்லாம்

அவளைச் சூழ்ந்துகொண்டு

வருவார்கள்

முளை தாண்ட

வரி வசூல் செய்ய

,

பயறு சிறுபயறு

காரா மணிபயறு என்ற பாடலை அனைவரும் பாடிக்கொண்டே

வருவார்கள்

,

நம்மூரு மாரியாத்தா

பட்டறையைத் திறந்து

படியளக்க வாரா

என்று பாடல் வரிகள் தொடரும்

,

இருபத்தொரு

மஞ்சள் கிழங்குகள்

எண்ணூறு குலவைகள்

,

எல்லாம் பண்டமாக இருந்த காலத்தில்

பணம் என்பதே இல்லை

,

அதனால்தான் சிறுமிகள்

இன்னும் கேட்கிறார்கள்

நாட்டில் விளைந்த

நல்ல பண்டம்

புதுப்பண்டம்

,

பயறுகள் வாங்கி

முளை தாண்டி விட்டால்

அழகாக வளர்வது

அவள் பாவம்

தினம் நீர்ஊற்றி

வளர்ப்பவர்கள் எல்லாம்

செல்வ முளைமாரிகள்

செல்வ முளைப்பாரிகள்.

0

3. முரண் தொடை:

,

அப்பா தனது முதல்

பெண் குழந்தைக்கு

‘மல்லிகா’ என்று

பெயர் சூட்ட விழைந்ததாக

அம்மா சொல்வாள்

,

ஆனால் அது

பழங்காலத்துப் பெயர் என்று

அம்மா மறுதலித்தாளாம்

,

பின்னர் ‘ரம்யா’ என்று

பெயர் சூட்டினர்

,

ஆசைப்பட்டதுபோல்

ஒரு பெயரை

வைக்கவும் முடியவில்லை

ஆசைப்பட்டதுபோல்

நம்பெயரும் அமைவதில்லை

எல்லாம் முரண்தான்

,

நித்தியகல்யாணிக்கு

சுடுகாட்டுமல்லி என்பது

எவ்வளவு பெரிய முரண்.

0

4. சுடர்விழி:

,

சுடரில் பிடித்தது

அடி நீலமா இல்லை

முடி மஞ்சளா என்றேன்

,

கருங்குவளையா இல்லை

சரக்கொன்றையா என்று கேட்டால்

எதைச் சொல்வது என்கிறாய்

,

உன் சரக்கொன்றை மேனியில்

கண்கள் மட்டும் கருங்குவளை

,

அக்னி சாட்சி

அருந்ததி காட்சி

,

சுடர் அகலுக்கு விழி

ஒளி சுடரின் மொழி.

0

5. மிஞ்சி:

,

அலைகள் போல்

கொலுசு சப்தமிட்டாலும்

மெட்டி என்பது

ஆழ்கடல் மௌனம்

 ,

மிஞ்சி என்று

மெட்டியை மிழற்றுகிறாய்

,

நான் அதை

கால்விரல்

கணையாழி என்கிறேன்

,

ஆழி என்றால்

சக்கரமும்

சாகரமும்

,

ஆலிங்கனத்தில்

கலைந்த கலிங்கத்தை

மிஞ்சியைக் கொஞ்சிவிட்டு

சீர்செய்வது

எஞ்சிய மீதியல்ல

சரசத்தை விஞ்சிய

சரணம்

,

பல்லவி போல்

ஒவ்வொரு முறை

தோன்றினாலும்

சரணங்கள் புதிது

கிரணங்கள் இனிது.

0

மு.ஆறுமுகவிக்னேஷ், Pharm D., (Doctor of pharmacy).

விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி சொந்த ஊர். மருந்தியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். காற்றுவெளி, நுட்பம், வாசகசாலை, திறவுகோல், கொலுசு, ஆனந்த விகடன், ஆவநாழி, போன்ற இணைய மற்றும் அச்சு இதழ்களில் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. தற்போது சொந்த ஊரில் மருத்துவ துணி (surgical dressings and bandage) உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளேன். தமிழ் இலக்கிய ஆர்வம் மிகுதியாக உண்டு. தொடர்ந்து தமிழ் இலக்கிய நூல்களை வாசித்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *