மஞ்சுளா சுவாமிநாதன்

“இந்தாங்க அம்பிகா காபி எடுத்துக்கோங்க!” என்று ஒரு டம்ளரைப் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு மற்றொரு டம்ளரில் காபியை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தாள் இந்து.

“சூடா குடிங்க வாங்க, அப்புறம் பாத்திரம் தேய்க்கலாம்” என்று இந்து கூற, குழாயை மூடிவிட்டு டம்ளரை எடுத்துவந்து இந்துவின் எதிரில் சுவரை ஒட்டியபடி தரையில் அமர்ந்து காபியைப் பருகினாள் அம்பிகா.

“எத்தனை முறை உங்க கிட்ட சேர்ல உட்காருங்க, கீழே உட்காராதீங்கன்னு சொல்லியிருக்கிறேன்?”

“அக்கா, உங்கள மாதிரி எல்லாரும் கெடையாது, இங்க பழகிட்டு, வேற வீட்டுல போய் சோபாவுல உட்கார்ந்தா பெரிய பிரச்சனை ஆயிடும், இப்படியே இருந்து பழகிட்டேன், பரவாயில்ல விடுங்க! என்  வீட்டுக்காரருக்கு உங்கள போல பேச பிடிக்கும். அவர் எலக்ட்ரிக் வேலை பார்க்கப் போகிற இடத்தில் எல்லாம் சேர்ல தான் உட்காருவாரு. சொன்னா நம்ப மாட்டீங்க, சின்னதா மடிக்கிற மாதிரி ஒரு ஸ்டூல் எடுத்துட்டு தான் வேலைக்கு போவார். அவங்க வீட்ல உட்கார வுடலன்னா, இவரே போட்டுட்டு உட்காந்துப்பாரு. ரொம்ப ரோசம்!”

“நீங்களும் அவரைப் போலத் தான் இருக்கணும்.”

“அட நீங்க வேற அக்கா, ஊருக்குத் தான் உபதேசம் பண்ணுவார், ஆனா, இவருடைய யோக்கியதை எனக்கு தான் தெரியும். எங்க ஊர் முருகர் கோவில்ல வருஷாவருஷம் தை பூசத்துக்கு காவடி எடுப்பார், அப்போ எல்லார் வீட்ல இருந்தும் தண்ணீர் வாங்கி குடிக்கமாட்டார், குறிப்பிட்ட வீடுகளில் தான் தண்ணீர் குடிப்பார். என்ன கூட எல்லா மனுசங்க கிட்டயும் சகஜமா பேசாதன்னு கோவிச்சுக்குவாரு. இவரை யாரும் குறைவா நடத்த கூடாது, ஆனா, இவர் மத்தவங்கள குறைவா நடத்துவாரு. எப்படி இருக்கு பாருங்க நியாயம்?” என்றாள் அம்பிகா.

இப்படிப் பேச ஒரு தனி தைரியமும், மனப் பக்குவமும் வேண்டும் என்று நினைத்தாள் இந்து. சொந்த ஊர், சொந்தமாக நிலங்கள், ஊரிலே வீடு என்று இந்துவிற்கு எதுவும் கிடையாது. அவளது தந்தை வழி தாத்தாவும் சரி, தாய் வழி தாத்தாவும் சரி, சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தவர்கள். தாத்தா சென்னையில் சொந்தமாக ஒரு வீடு, அதுவும் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியபோது அவருக்கு வயது அறுபதைக் கடந்திருந்தது.

இந்துவிற்கு ஓரளவிற்கு சாதிகள் பற்றி புரியவே வயது முப்பது ஆகிவிட்டது. சில கதைகளும், அரசியல் மற்றும் சமூக விவாதங்களும், இட ஒதுக்கீடு குறித்த சர்ச்சைகளும் ஆரம்பத்தில் அவள் மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், இப்போது அவளால் பல தரப்பு வாதங்களையும் நிலையான மனதுடன் குறைந்தபட்சம் கேட்கவாவது முடிகிறது.

“அக்கா நீங்க சென்னையிலேயே பிறந்து வளர்ந்துட்டீங்க, உங்களுக்கு ஊர் பக்கம் எல்லாம் சனங்க எப்படி இருக்காங்கன்னு தெரியாது. காசு பணம் என்னதான் வெச்சிருந்தாலும், அரசாங்க உத்தியோகம், டாக்டர்னு, எத்தனை உசரத்துக்கு போனாலும், சாதியை வெச்சு தான் அங்க மதிப்பு. அந்தந்த சாதிக் காரங்க தனித்தனியா தான் இருபாங்க. தெருத் தெருவா பிரிந்து தான் இருப்பாங்க. என்ன தான் நண்பர்களாகவே இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத ஒரு கோடு அங்க இருக்கும். அதை இரண்டு பேருமே தாண்ட மாட்டாங்க.” என்றாள் அம்பிகா தெளிவாக. இந்துவிடம் மட்டும் அம்பிகா இதுபோன்ற விஷயங்களைத் தயக்கம் இன்றி பகிர்ந்து கொள்வாள்.

“எப்ப மாறும் அம்பிகா இதெல்லாம்? எங்க வீட்ல யாரையும் சாதி வெச்சு தாழ்த்தி பேசமாட்டாங்க, இருந்தாலும் கண்ணுக்குத் தெரியாத ஓர் ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்தது. அதை என்னால மறுக்க முடியாது. இன்னிக்கு என் பசங்க உங்களை ஆண்டின்னு கூப்பிடறாங்கல்ல? என்னோட சின்ன வயசில், என்  வீட்டில் வேலை செஞ்ச அம்மாவைப் பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன். அது தப்புன்னு எனக்கு அப்போ தோணல. என் அம்மாவும் அப்பாவும் சொல்லித்தரல. சமீபத்தில் ஒரு படத்தில், தன் அம்மாவை, அவங்க வேலை செய்கிற வீட்டில் இருக்கிற பையன் பேர் சொல்லிக் கூப்பிடும் போது கோபப்படும் ஒரு சிறுவனைப் பார்த்தேன். அந்த காட்சி என்னை உலுக்கிடுச்சு…

எவ்வளவோ விஷயங்களை அப்படியே கேள்வி கேட்காத ஏத்துகிட்டேன். என் அப்பா வண்டி துடைக்கப் போனா, ‘நான் துடைக்கிறேன் சாமி’ என்று யாராவது ஓடி வந்து துடைப்பாங்க, இத்தனைக்கும் நாங்க அதுக்கெல்லாம் ஆள் போடற அளவுக்கு வசதியான குடும்பம் கூட இல்ல. என் அப்பா போய் யாருக்காவது இது போல வண்டி துடைப்பாரான்னு நான் அப்போ யோசிக்கல, ஆனா, இப்போ எனக்கு அதெல்லாம் உரைக்குது, உறுத்துது!” என்ற இந்து அதற்கு மேல் பேச முடியாமல் நிறுத்திக்கொண்டாள்.

“என் அம்மா பூ வித்தாங்க, நானும் என் கூட பிறந்தவர்களும் ஏழு பேர், நீங்க நம்ப மாட்டீங்க, எனக்கு என் பிறந்த நாளே தெரியாது. எங்க அம்மாவுக்கு அதுக்கு கூட நேரம் இல்லாமல் ஓடினாங்க. அந்த வறுமையிலும் அவங்க மனசில் இருந்த சாதி ஒழியல! எந்த நிலையிலேயும் தனக்கு கீழ இருக்கிறவங்கள மேல இருக்கிறவன் இழிவாகத்தான் இன்னமும் நடத்தறான். சாதி, பணம், அதிகாரம்… இது எல்லாமே அடக்குமுறைகளோட வெவ்வேறு முகங்கள்.

படித்தால் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையில் என் பசங்களை என் சக்திக்கு மீறி செலவு செய்து பிரைவட் ஸ்கூல்ல படிக்க வைக்கிறேன். நாளைக்கு அவங்க ஒரு பெரிய கம்பெனில, கம்ப்யூட்டர் எல்லாம் வெச்சுகிட்டு வேலைக்கு போகணும், அவங்க வேலை செய்கிற எடத்துலயாவது அவனுகள ஒரு பய இழிவா நடத்தக்கூடாது!” என்ற அம்பிகாவின் கண்கள் எதிர்காலக் கனவுகளுடன் மின்னின.

அம்பிகாவுடனான உரையாடல் இந்துவின் மனதைப் பிசைந்தது. ‘எனக்குத் தெரியாது, என் வீட்டில் சாதி பற்றியே பேச மாட்டார்கள்,’ என்று அவள் கூறியதில் ஓரளவிற்கு உண்மை இருந்தாலும், சில பொய்களும் சேர்ந்தே இருந்ததை அவள் அறிந்திருந்தாள். இந்துவின் வீட்டைப் பொருத்த வரை இரண்டே சாதிகள் தான். சாக்கடை அடைப்பை சுத்தம் செய்பவர்கள், குப்பைகளை அப்புறப்படுத்தும் துப்புரவுத் தொழிலாளர்கள் என்றால் இன்னும்  மரியாதை குறைவாக நடத்துவார்கள் அவள் வீட்டில். அவர்களுக்கு காகித கோப்பைகளில் தேநீர் தருவது, தண்ணீர் கேட்டால் கூட பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொடுத்துவிட்டு அதனைப் பிற்பாடு குப்பையில் போடுவது என்று அவள் பார்த்தே அவளது பாட்டியும், அம்மாவும், மாமியாரும் செய்த காரியங்களை கண்டும் காணாதது போல வாய் மூடி இருந்திருக்கிறாள்.

எனக்கு எல்லா மனிதர்களும் சமமானவர்கள் தான், என் வீட்டுப் பெரியவர்கள் தெரிந்து எந்தத் தவறும் செய்யவில்லை என்று அம்பிகாவிடம் அவள் அடிக்கடி கொடுத்த சப்பைக்கட்டை நினைத்து அவளுக்குக் கூசிற்று. உடல் முழுவதும் ஓர் அருவருப்பு பரவியது. அம்பிகாவிற்கு என்ன இது புரியாதா? சேரில் உட்காருங்கள் என்று வாய் நிறைய சொன்ன அவளால் ஒருமுறை கூட அவளுக்குச் சமமாக அம்பிகாவை சோபாவில் அமரவைக்க மனம் வரவில்லையே என்ற நினைப்பு அவளை மேலும் கொன்றது.

இந்து வசிக்கும் குடியிருப்பில் வீடுகள் முந்நூற்றுக்கும் அதிகம். அங்கே ஒவ்வொரு வீட்டிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை, இதர கழிவுகள் என்று பிரித்துத் தர வேண்டும். இந்த வேலையையும், குடியிருப்பின் பொது இடங்களையும் சுத்தம் செய்யவும் ஒரு குழுவாக சில பெண்கள் வேலை செய்கின்றனர். அதில் ஓர் அம்மா, அவரது பெயர் கூட இந்துவிற்குத் தெரியாது, அவரைப் பார்த்து, “எப்படிம்மா இருக்கறீங்க? சாப்டீங்களா?” என்று மின்தூக்கியில் பார்த்த போது ஒரு முறை விசாரித்தாள் இந்து. அன்றிலிருந்து இந்துவை எப்போது பார்த்தாலும் ஆத்மார்த்தமாக சிரித்துப் பேசுவது, ஒவ்வொரு சமயம் ஒரு ரோஜா மலரைக் கொண்டு அவளிடம் தருவது என்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி இந்து மீது அன்பாக இருந்தார் அவர். அந்த அன்பிற்கு காரணம் புரியாமல் பல நாட்கள் தவித்திருக்கிறாள் இந்து.

ஒரு முறை, குப்பை எடுக்கும் போது யாரோ உடைந்த கண்ணாடி பாட்டிலை அப்படியே போட்டு விட்டார்கள், குத்திவிட்டது என்று இரத்தம் வழிய இந்துவிடம் வந்து முறையிட்டாள் அந்த அம்மா. குழந்தையை சமாதானம் செய்வதைப்போல, “அறிவு கெட்டவர்கள்! நான் அசோசியேஷன் குரூப்ல இதைப் பத்தி எழுதறேன். வாங்க மருந்து போடறேன்” என்று அழைத்து, அண்டிசெப்டிக் கிரீம் மற்றும் பேண்ட்டேஜ் போட்டு அனுப்பினாள். அதற்குப் பிறகு ரோஜாக்கள் தருவது அதிகமானது.

நிலைகொள்ளாமல் பல்வேறு நினைவுகளை அசை போட்ட இந்து, திடீரென்று ஓர்  உத்வேகத்துடன்  துப்புரவு பணியாளர்களை வீட்டிற்குத் தாம்பூலம் வாங்கிக்கொள்ள அழைத்தாள். அப்போது நவராத்திரி. தினமும்  பெண்களை அழைத்து சுண்டல், தாம்பூலம், ரவிக்கை துணி என்று கொடுத்தவள், அன்று அவர்களை குங்குமம் கொடுத்து வீட்டிற்கு அழைத்தாள். குங்குமம் வாங்கிக்கொண்ட பெண்கள், “நாங்க மொத்தம் பன்னிரண்டு பேர்? வரலாமா?” என்றனர்.

“எல்லாரும் வாங்க!” என்று மனதார அழைத்த இந்து, வீட்டிற்குச் சென்று ரவிக்கை துணிகளை தாம்பூலத்துடன் சேர்த்து பன்னிரண்டு எடுத்து வைத்தாள்.

நவராத்திரி என்பதால் அவள் வீட்டில் மங்கலப் பொருட்கள் நிறைந்து இருந்தன. பெரிய சட்டி ஒன்றை எடுத்து கேசரி கிண்டினாள். அதற்குள் அந்த பெண்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். அனைவரையும் இந்து வரவேற்க, சில பெண்கள் சந்தோஷமாக வந்து கொலு படிகளுக்கு எதிரே அமர்ந்தனர். சிலர், தயங்கியபடி நின்றனர். “அம்மா, உங்களுக்குக் கால் வலிக்குதுன்னு நினைக்கிறேன், சோஃபால உட்காருங்க!” என்று ஒரு வயதானவரைப் பார்த்து கூறினாள் இந்து. சற்று தயங்கியபடி அந்த பெண் சோஃபாவில் அமர, அருகில் நின்றுகொண்டிருந்த மேலும் மூவர் சென்று சோஃபாவில் அமர்ந்தனர். மற்ற பெண்கள் இப்போது சற்று சுவாதீனமாக உணர்ந்தனர்.

“இந்த அம்மா கொலு வைப்பாங்களே? நம்மள கூப்பிடுவாங்களான்னு நேத்து தான் கேட்டேன்!” என்று துடுக்காக ஓர் இளம் பெண், ரோஜா தரும் அம்மாவையும், இந்துவையும் பார்த்தபடி கேட்டாள். இந்துவிற்கு அந்த குடியிருப்புக்கு வந்த நான்கு ஆண்டுகளில் முதன் முறையாக அவர்களை வீட்டிற்கு அன்று அழைத்தது ஓர் குற்ற உணர்ச்சியை கொடுத்தது. “இனிமேல் வருஷாவருஷம் கூப்பிடறேன்!” என்றாள். அந்த பெண்கள் அவர்களுக்குள் ஆனந்தமாகப் பேசி, சிரித்து, கலாட்டா செய்து கொண்டே கேசரி சாப்பிட்டதும், தேநீர் அருந்தியதும் பார்க்க பார்க்க இந்துவிற்கு மனதில் இனம் தெரியாத ஆனந்தம் பொங்கியது.

குங்குமச் சிவப்பு புடவைகளைச் சீருடையாக அணிந்த அவர்கள் தாம்பூலம் வாங்கி விடைபெற்ற சமயம் அவர்கள் அனைவரும் தேவியர்களாக இந்துவிற்குக் காட்சியளித்தனர். உணர்ச்சிப் பெருக்கில் அவர்கள் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினாள் இந்து. இத்தனை தலைமுறைகளாக நாங்கள் உங்களை அவமரியாதை செய்ததற்கு மன்னியுங்கள் என்று அவள் மனம் மனதார வேண்டியது. கண்களிலிருந்து கண்ணீர் பிரவாகமெடுத்தது. அந்த பெண்களில் வயதானவர்கள்  சிலர் அவளது மன்னிப்பை ஏற்றுக் கொண்டது போல அவர்களும் கண்கலங்கினர். கொலு படிகளுக்கு அருகே இந்து பூஜை செய்திருந்த மீனாட்சியின் முன் இருந்த பூக்களை அவர்கள் இரு கைகளிலும் எடுத்து இந்துவின் மேல் பூமாரிப் பொழிந்தனர்.

000

மஞ்சுளா சுவாமிநாதன் :

 நான் முதலில் ஓர் வாசகர். எனக்கு  சமூகக் கதைகள் மற்றும் கட்டுரைகள் படிப்பது மிகவும் இஷ்டம். மூன்று ஆண்டுகள் ‘அடையார் டைம்ஸ்’ என்ற ஆங்கில செய்தித் தாளில் துணையாசிரியராக  பணி புரிந்தேன். மங்கையர் மலர் மின் இதழிலும் சில காலம் பணியாற்றினேன். கோவிட் ஊரடங்கு எனக்கு புத்தகங்கள் படிக்க ஓர் வரப்பிரசாதமாக அமைந்தது. வாஸந்தி, ஜெயகாந்தன், சிவசங்கரி, ரசவாதி, எஸ்.ரா ஆகியோரின் எழுத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு இப்போது தமிழில் சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் எழுதி வருகிறேன். மங்கையர் மலர், கல்கி, அமுத சுரபி , கலைமகள், குவிகம் மின்னிதழ், இலக்கியபீடம், வாரமலர், ராணி ஆகிய இதழ்களில் எனது கதைகள் மற்றும் கட்டுரைகள்  பிரசுரம் ஆகி உள்ளது. தொடர்ந்து தற்கால சமூகப் பிரச்சனைகள், வாழ்வியல் மாற்றங்கள் குறித்து கதைகள் எழுதவேண்டும் என்பதே என் ஆசை.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *