தேவவிரதன்
பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின், பெரும்பாலும், ஒருவரது தொடர்பு அலுவல் செய்த இடத்தில் இருந்து அறுந்து விடுகிறது ; ஓர் சில முக்கியமான விஷயங்கள் தவிர. அப்போது நண்பர்களாக இருந்தவர்களின் தொடர்புகளும் அப்படியே. கொஞ்ச நாட்களுக்கு அடிக்கடி சந்தித்தோ பேசிக்கொள்வதும், நாளடைவில் குறைந்து போகிறது. அதுவும் இந்த கால கட்டத்தில் பிள்ளைகளும் பெண்களும் வெளி நாடுகளுக்கு சென்று தங்கி விடுவதாலும், இவர்கள் அங்கே சென்று வருவதுமாகவும் இருப்பதால், ஆபீஸ் நண்பர்கள் தொடர்பு காலப்போக்கில் கரைந்து விடுகிறது.
இதை நான் குற்றமாக பதிவு செய்யவில்லை. நிஜத்தையே சொல்கிறேன்.
அதோடு அந்தஸ்தும், வாழும் வாழ்க்கையின் சுக துக்கங்களும் இந்த தொடர்புகளை பாதிப்பதை நான் பார்த்து வருகிறேன்.
என்னோடு நண்பராக இருந்த ஒருவர், ஓய்வு பெற்றபின் அவரது சொந்த ஊரான மைசூரில் சென்று ஓர் அமைதியான சூழலில் வாழ்க்கையை அமைத்து கொண்டு விட்டார். நான் கூட ஓர் முறை சென்று அங்கு சுகமாக இருக்கும் அவரையும், அவரது மனைவியையும் சந்தித்து விட்டு வந்தேன். பெண், பிள்ளை ? இருவருமே அமெரிக்காவில்.
சமீபத்தில் நான் அவரிடம் பேச முயற்சித்த போது, அவர் குரலில் உற்சாகம் இல்லை. ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்ற கேள்விக்கு ‘எதோ இருக்கிறோம்,’ என்ற பதிலுடன் தொடர்பை துண்டித்து விட்டார். நான் மறுபடி முயலவில்லை. பின்னர் மற்றொருவர் அவரிடம் பேசியபோது அவருடைய கண்புரை அறுவை சிகிச்சை சரியான முறையில் செய்யப்படவில்லை என்றும் அவர் மனைவி கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு என்றும் கேள்விப்பட்டேன். வருத்தமாக இருந்தது.
நிச்சயம் அவர் அந்த நிலையில் பழைய நண்பர் ஒருவருடன் உரையாடும் மனநிலையில் இருந்திருக்க மாட்டார்.
பண வசதிக்கு குறைவு இல்லை. சிகிச்சைக்கு பஞ்சமில்லை. ஆனால் அருகில் எவருமே இல்லை என்பது பெரும் துக்கம்தானே?
பலர் பண வசதி இல்லாமல், உடல் நலமும் குன்றி அவதியுறுவதையும் நான் பார்க்கிறேன். பண வசதி உள்ளவர்களுக்கும், இல்லாதவர்க்கும் இதில் எந்த வேற்றுமையும் இல்லை.
ஆனால், பணம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாகிறதா?
‘இல்லை’. என்பதை சமீபத்தில் நான் கேட்ட சமாச்சாரம் உறுதி செய்தது.
ஓரிரு மாதங்களுக்கு முன் என் அலுவலகத்தில் மிக நல்ல பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவரின் மனைவி தவறி விட்டார். அவருக்கு பல நண்பர்கள். அவர்கள் அனைவரும் வந்து துக்கம் விசாரித்து சென்றனர். ஆனால், அவருக்கென்று நெருக்கமாக அவர் வேலையில் இருந்த நாட்களில் இருவர். ஒருவர் பெண். மற்றவர் சற்று இளையவர், ஆண்.
இந்த துக்க சம்பவத்திற்கு பின் அவரே இவர்கள் இருவருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘உங்களை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு இருக்கிறது. நாம் மூவரும் எதாவது ஓர் ஹோட்டலில் சென்று மதிய உணவு சேர்ந்து உண்ணலாம். உங்களுடன் சந்தித்து மனம் விட்டு பேசியது போல் இருக்கும்,’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இவர்களும், அவர் மனதின் ஆதங்கத்தை புரிந்து கொண்டவர்களாக சம்மதம் தெரிவித்தார்கள். ஆனால், அந்த சந்திப்புக்கு பிறகு அந்த இருவரில் ஒருவரை பார்த்தபோது கேட்டேன்.
‘எப்படி இருக்கிறார் நண்பர்? ஓரளவு சோகத்தில் இருந்து வெளியில் வந்து விட்டாரா?’ என்று கேட்டேன்.
ஆனால், அந்த நண்பரின் பதில் கேட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
‘ஐய்யயோ..அதை என் கேட்கிறீர்கள்? ஒரு பெரும் வேதனையாக ஆகி விட்டது என்றார். ‘ஏன், எப்படி?’ என்றேன்.
‘அவர் துக்கம் மனைவி தவறியதில் இல்லை. அவர் மகன் இப்போது அவரை படுத்தும் பாடும், சண்டையும் தான் வருத்துகிறது.’ என்றார்.’
‘ஏன்? ‘
‘அவர் பிள்ளை அவரிடன் இருக்கும் அத்தனை சொத்தையும் அவன் பெயருக்கு மாற்றும்படி சண்டை போடுகிறானாம்.’
‘அவன் ஒரே மகன்தானே? இதில் சண்டை போட என்ன இருக்கிறது?’ என்றேன் நான் வியப்புடன்.
‘இல்லை. அவருக்கு ஓர் மகளும் இருக்கிறாள். இவருக்கு இவர் இருக்கும் வீடு தவிர இரண்டு ‘பென்ட் ஹவுஸ்’ என்று சொல்லப்படும் ஒவ்வொன்றும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு வீடுகள் இருக்கின்றனவாம். அவற்றை உடனே, இப்போது இருக்கும் வீட்டுடன் சேர்த்து என் பெயரில் மாற்றுங்கள்.’ என்று ஒரே வற்புறுத்தலாம். அதோடு பெண்ணுக்கு ஒன்றும் தரக்கூடாது என்று அடாவடித்தனமாக பேசுகிறானாம்.’ என்று புலம்பினார்.
அது மட்டும் எனக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை; வேலையில் இருந்த நாட்களில், மிக மென்மையாகவும், நாசுக்காகவும், மிதமான அதிகார தோரணையில் பேசுவார் அவர். அவர் அன்று சற்று உரக்க, அவருடைய பழைய பேசும் நாசுக்கு இல்லாமல்,, அருகில் உள்ளவர்கள் சற்று திரும்பி பார்க்கும் வகையில் பேசினார் என்பது இன்னும் அதிர்ச்சியை தந்தது.
எனக்கு உண்மையிலேயே வியப்பாக இருந்தது.
பணம் பெரிசில்லை; பாசம்தான் பெரிது என்று பேசும் இந்த தேசத்து மனிதர்கள் இவர்கள்? எப்படியும் இவர்களுக்கே வரப்போகிற சொத்தை அடைய இத்தனை அவசரமும், ஆங்காரமுமா?
எப்படி இருந்தாலும் தரப்போகிறவருக்கும் இத்தனை துக்கமும், ஆற்றாமையுமா?
அவருக்கும், தன் உடலும், மனமும், அறிவும் நல்ல நிலையில் இருக்கும்போதே ஏன் இந்த சொத்து விவகாரங்களை பிள்ளைகளின் விருப்படி முடித்து விடக்கூடாது? அதில் ஏன் வீண் தயக்கம் காட்ட வேண்டும்? மனிதர்களின் குணங்கள் இப்படித்தான் இருக்கும் என்று வரையறுத்து சொல்ல முடியாது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.
அதோடு அவரது சோகக்கதை கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்களுக்கு தொடர்ந்து கேட்டதில் தலைவலியை தந்து விட்டது’ என்றார்.
அந்த காலம் என்றில்லை; இந்த காலம் என்றில்லை. எல்லா காலங்களிலும் பணம்தான் முக்கியம். அதானல்தான், பணம் இருப்பவன் வீட்டிலும் சண்டை; இல்லாதவன் வீட்டிலும் சண்டை.
பணமா, பாசமா?
இதில் பாசமாவது, பந்தமாவது, கலாசாரமாவது?
நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் பசப்பு வார்த்தைகள். அவ்வளவே.
00

இயற் பெயர் ஜி. சுவாமிநாதன். மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமகன். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் நல்ல பரிச்சயம் உண்டு. நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் ‘தேவவிரதன்’ என்ற என் புனைப்பெயரில் தமிழின் பல பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. எழுதுவது தவிர படிப்பது, இசை, மற்றும் ஓவியம் இவற்றிலும் தேர்ச்சி உண்டு. ‘தி ஹிந்து’ பத்திரிகையில் பல ஆண்டுகளாக கர்நாடக இசை விமர்சனங்களை எழுதி வருகிறேன். வலைத்தள தொடர்பு வந்தபின் ஆங்கிலத்தில் முக நூலிலும், பல சமூக, இலக்கிய, திரைப்படங்கள் பற்றிய குறிப்புகளையும் அவ்வப்போது பதிவு செய்து வருகிறேன். இலக்கியம், எழுத்து, இசை, ஓவியம் இவற்றுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் உறவுகளே இன்றும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை.

