இத்ரீஸ் யாக்கூப்
துபாய் விமான நிலையம் டெர்மினல் இரண்டில் திருச்சி செல்லும் சக பயணிகளில் ஒருவனாக பாஸ்போர்ட் மற்றும் பயணச்சீட்டோடு அவன் நின்றுக் கொண்டிருந்தான். சங்கிலித் தடுப்புகளுக்கு ஏற்றவாறு குண்டூசி வளைவுகளோடு மடங்கி மடங்கி நீண்டிருந்த எங்கள் வரிசையை முழுதாய் ஒரு நோட்டம் விட்டேன். அதில் கணிசமான முகங்களில் கொண்டுச் செல்லும் லக்கேஜின் எடையைப் பற்றிய கவலைகளும் பதற்றங்களும் மெலிதாய் பீடித்திருந்ததை கவனித்தேன்.
பிரியமானவர்களுக்கு பார்த்துப் பார்த்து எத்தனைப் பொருட்கள் வாங்கிக் குவித்திருந்தாலும் போதாதுதானே? இதில் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் கெஞ்சலும் அன்புமாய் அவரவர் வீடுகளுக்கு உரிமையோடு கட்டிவிடும் கூடுதல் சுமைகள் வேறு சளைத்தவர்களை தர்மசங்கடங்களுக்கு உள்ளாக்கிவிடும். கோபிக்க ஒன்றுமில்லை அந்தந்த இடங்களுக்கு எல்லாமே இயல்பானதுதான்.
‘செக் இன்’ வரிசையில் வெகு சிலர் மட்டும் வெறும் கை லக்கேஜோடு அதிநாகரீகத் தோரணைகளோடு காட்சியளித்தனர். அதில் அவனும் ஒருவன். நான் அவனுக்கு பின் நின்றேன். அவனுக்கு முன் நின்றுக் கொண்டிருந்த வேறொரு நபர் அதிக சுமைகளோடு ஒரு வித பரிதவிப்போடு அவ்வப்போது திரும்பி அவனை ஏறெடுத்துப் பார்ப்பதும், அவன் தன்னை கவனிக்க நேர்ந்தால் தயக்கத்தோடு தலையைக் கவிழ்த்துக் கொள்வதுமாக மருகிக் கொண்டிருந்தார்.
அவர் கையில் கட்டியிருந்த தங்க முலாம் கடிகாரமும் சற்று தொள தொள சட்டையும், போட்டிருந்த பேன்டிற்கு சற்றும் பொருத்தமேயில்லாது துறுத்திக் கொண்டிருந்தன. ஒட்டி கறுத்த கன்னங்களும், பார்க்கும்போதே கணிக்க வைக்கும் சொரசொரப்பான கை, கால்களும் எனக்குள்ளும் அவரது பணி இன்னதாக இருக்கலாமென கணக்கீடுகள் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தன. அவரைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது.
நிலைமையும் கொஞ்சம் தீவிரம்தான் போலும், எப்படியோ ஒரு கட்டத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “தம்பி, லக்கேஜ் கொஞ்சம் கூடுதலாக உள்ளது. இந்த பெட்டியில் ஒரு பத்து, பன்னெண்டு கேஜி இருக்கும். உங்க டிக்கெட்ல கொஞ்சம் சேத்துக்க முடியுமா..? ரொம்ப புண்ணியமா போகும்…!” என்ற அவரது மானசீகமானக் கெஞ்சலை, “ஸாரி பிரதர்” என்ற ஒரு சிறிய புன்முறுவலில் மறுதலித்து விட்டான் அந்த உயர்ந்த மனிதன்.
ஏமாற்றமடைந்த அவரது முகத்தில் ஏற்கனவே இருந்து வந்த கவலைரேகைகள் நொடிகள் நகர, நகர கூடுதல் பரவலைக் காட்டத் துவங்கின. திரும்பித் திரும்பி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தார். வியர்ப்பது போல் உணர்ந்திருக்க வேண்டும், பேண்ட் பாக்கெட்டில் மடித்து வைக்கப்பட்டிருந்த ஓரங்களில் வெள்ளை – நீலம் பட்டைகளிட்ட சிவப்புக் கைக்குட்டையை எடுத்து மெதுவாய் இட்டிருந்த திருநீறு அழியாது நெற்றியிலும், முகத்திலும் பஞ்சைப் போல ஒற்றி எடுத்தார்.
அதே நேரம் நடுத்தர வயதை மதிக்கத்தக்க ஒரு பெண்மணி பெரிய பெரிய பெட்டிகளை டிராலியில் ஏற்றியிருந்தபடி கலவையான மனநிலையோடு செக் இன் கவுண்டரை நெருங்கிக் கொண்டிருந்ததை கூர்ந்து கவனிக்கலானான் அந்த உயர்ந்த மனிதன். நானும்தான்.
வயது நாற்பத்தைந்திருக்கும். முகம் கவலைகளையும் போராட்டங்களை மட்டுமே அதிகம் எதிர்கொண்டிருந்தது போல் கொஞ்சமும் கூட மிருதுவு இல்லாமல், குளங்களில் துணித் துவைக்க பயன்படுத்தப்படும் குட்டிக் குட்டி கல்மேடைகள் போல கன்னங்கள் இறுகிக் காட்சியளித்தன. அதில் ஓரிரு கீறல்களும், சில பருக் குழிகளும் சற்று ஆழ்ந்து நோக்க வைத்தாலும், என்னவோ அவர் முகத்தில் கவனிக்கத்தக்க ஒரு வசீகரமும், தீர்க்கமும் குடிக் கொண்டிருந்தன.
புர்கா அணிந்திருக்கவில்லை என்றாலும் அவர் அணிந்திருந்த சல்வார் கமீசும் தலையிலிருந்த முக்காடும், அவரது நம்பிக்கை சார்ந்த அடையாளத்தை பொது புத்தியளவில் யாராக இருக்கக்கூடுமென அனுமானிக்க முடிந்தது. ஒரு வேளை அப்படி இல்லாமலும் இருக்கலாம்.
கைகளில் இரண்டு இரண்டு புத்தம் புதிய பொன் வளையல்கள், முக்காடு ஒதுங்க தெரிந்த காதுகளில் முன்னே சொன்னதின் பளிச் மஞ்சள் பிரகாசத்தோடு பூவிதழ் தோடுகள்… கழுத்தில் தடிமனான ஒரே ஒரு தங்கச்சங்கிலி.
அவரது சற்று பருத்த நிலைத்தூண் போன்றதொரு தோற்றத்திற்கு உதிரம் உருமாறி மினுங்கிக் கொண்டிருந்த நெடுநாள் உழைப்பின் சிறுசிறு நகைகள் வாழ்நாள் பரிசு போலும் தெரிந்தன, பொன்னிறக் கண்ணீர் போலவும் உரிமைப்பட்டவர் யாருக்கோ வார்க்கப்படப்போகும் அறிகுறிகளையும் எடுத்துக்காட்டின.
டிராலியில் மலைகள் போல ஓங்கியிருந்த இரண்டு, மூன்று லக்கேஜ் பெட்டிகளுக்கும் தரைக்கும் வானுக்குமான உயரம் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் ஆரம்பத்தில் விவரித்திருந்தபடி இப்படி இங்கே தவிர்க்க முடியாத அன்பிற்காகவும், தனிப்பட்ட ஆசைக்களுக்காகவும், நிர்பந்தங்களுக்காகவும் வலுக்காட்டாய சுமைகளோடு பயணிப்பவர்கள் எத்தனையோ பேர்!
அதில் அடிமட்ட தொழிலாளிகளே அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு சென்று வரும் வழமையோ, வாய்ப்போ, சலுகை அல்லது பாக்கியங்களோ இவர்களில் பலருக்கும் அமைவதில்லை அல்லது அமைவதே இல்லை!
அதனால் ஊரிலிருந்து வரும் விண்ணப்பங்களும் எப்போதும் அடுக்கடுக்காய் குவியக் குவிய, அவற்றுக்கான உழைப்பும், பொருட் சேகரிப்பும் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓய்வு நேரங்களையும், சிறுவாட்டு சேமிப்புகளையும் அணுஅணுவாய் அரிக்கத் துவங்கிவிடும்!
போனில் பேசும்போது போலியாகச் சிரித்தும், வெளியில் வந்தால் நறுமணம் பூசி மறைத்துக் கொள்ளும் கழுதை பிழைப்புதான் பலரின் வெளிநாட்டு வாழ்க்கை அதில் ஒருவர்தான் முன்பு சொன்ன அதிக லக்கேஜோடு என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துக் கொண்டிருக்கும் அந்த அண்ணனும்.
அந்த பெண் ‘செக் இன்’னிற்கு செல்லும் வேளையில், ஐம்பது வயது மதிக்கத்தக்க உள்ளூர் அரபி ஒருவர் தேவலோக அங்கியை அணிந்தவராய் ஓட்டமும், நடையுமாக விரைந்து வந்தார். அவரைக் கண்டதும்தான் அந்த பெண் முகம் மலர்ச்சியானது. அவருக்கு ‘அஸ்ஸலாமு அலைக்கும் அரபாப்!’ என்று தனது பவ்யமும் விசுவாசமும் நிறைந்த முகமனை வெளிப்படுத்தினார். கூடுதல் லக்கேஜிற்கான பணத்தைப் பற்றி கவலைக் கொள்ள வேண்டாம், எல்லாவற்றையும் தான் பார்த்துக் கொள்வதாக அரபியில் சொன்னதும், அந்த பெண்முகம் பெருமிதமும் நிம்மதியும் அடைந்தது.
அந்த அரபி வந்ததும் தெரியவில்லை சென்றதும் தெரியவில்லை. ஆனால் அவரையே கண்காணித்துக் கொண்டிருந்த அந்த நாகரீக இளைஞனின் பார்வை அந்நேரம் வரை அவர்கள் இருவர் பற்றிய பெரும் வரலாறையே எழுதிக் கொண்டிருந்தது. ஆமாம், அவன் ஊகித்தது போல் அந்த பெண்மணி குறிப்பிட்ட அரபி வீட்டில் பணிப்பெண்ணாகத்தான் இருந்திருக்க வேண்டும். அந்த ஊகத்தில் சிறிதும் பிழையுமில்லை. ஆனால் அவர், அந்த அரபியின் எல்லா கட்டளைகளுக்கும் இணங்கிச் சென்றிருப்பார் என்று அவன் சிந்தனைகளில் பலாய் எண்ணங்களும் சேர்ந்து பயணித்ததுதான் பொறுத்து கொள்ள முடியாத பெரும் பாவம்!
‘ஏன் அந்த அரபி அவளிடம் அப்படிக் குழைந்தான்… பரிவுக் காட்டினான்? ‘ஆஹ், இங்கே தனியாளாக வேலைக்கு வரும் பெண்களைப் பற்றி தெரியாதா? எல்லாவற்றிற்கும் தயாராகத்தானே நாடு கடந்து நாடு இப்படி இந்த பெண்கள் பிழைக்க வருகிறார்கள்? வந்த இடத்தில் எல்லாவற்றிற்கும் வளைந்துக் கொடுக்காமலா இருந்திருப்பார்கள்? அதான் இவளை இப்படி கவனித்து அனுப்புகிறான்… ச்சே என்ன பெண்கள் இவர்கள்? இப்படிப்பட்ட பிழைப்பும் தேவைதானா? எப்படிதான் இவர்களை அவர்கள் வீட்டில் இப்படி முன் வந்து நம்பி அனுப்புகிறார்களோ..? வந்த இடத்தில் இவர்கள் செய்யும் சேட்டைகளும், அட்டூழியங்களும் யாருக்கு தெரியும்?’ என்று அவனது கீழ்மையான கற்பனைகளும், முணுமுணுப்புகளும் எல்லைகள் தாண்டிச் சென்றுக் கொண்டிருந்தன.
அருகில் நின்ற அந்த அண்ணனின் கூடுதல் லக்கேஜை நான் ஒப்புக்கொள்ள சம்மதித்தேன். ‘உள்ளே என்ன வச்சிக் கொண்டு வந்திருக்கானோ..! பார்சல் எங்காவது எக்குத்தப்பா மாறிப் போயி ஒரு முறை மாட்டுனாதான் இந்த மாதிரி லூசுப்…க்கெல்லாம் தெரியும்!’ என்று அவனுடைய திடீர் அங்கலாய்ப்பும், பாதி முணுமுணுப்போடு ஒலித்த வக்கிரமான சொல்லும் என்னை கடும் கோபத்திற்கு ஆளாக்கியது.

“கொஞ்சம் நகர்ந்துப் போறீங்களா..?” சற்று சத்தமாக குரல் கொடுக்க, திரும்பி ஒரு முறை முறைத்து விட்டு, கொழுத்த குண்டி தெரிய நகர ஆரம்பித்தான். அதே சமயம் அந்த பெண் தழும்புகள் மீறிய மகிழ்ச்சியான முகத்தோடு இம்மிகிரேஷனை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தார்.
அந்த சகோதரி இனி திரும்பி வர மாட்டார். அவருடைய மகன் இந்நேரம் படிப்பை முடித்திருக்க வேண்டும். மகளுக்கும் கூட திருமணமாகியிருக்கலாம். அவரை ஊரிலாவது இந்த சமூகம் ஒழுங்காகப் பார்க்குமா? பிள்ளைகளுக்காக, குடும்பத்தினருக்காக வந்த இடத்தில் ஒரு பணிப்பெண்ணாக எதிர்கொண்ட தனது வாழ்வியல் அல்லல்களோடும், துயர் தணியா தனிமையோடும், மறைத்துக்கொண்ட வேதனைகளோடும் அவர் பட்ட பாடுகளை பாடுகளாக அங்கீகரிக்குமா? அப்பழுக்கழுக்கற்ற தாயாகவும், சகோதரியாகவும், கணவனை இழந்த அல்லது இருந்தும் இல்லாத போராளியாகவும் கொண்டாடிப் போற்றி, செல்லும் காலம் வரை அவரது தியாயங்களை நினைத்துப் பார்க்குமா?
காட்டில் கூட பெண்சிங்கங்கள், சிறுத்தைகள்தானே அதிகம் இரையை கொண்டுவருகிறது; பெரும்பாலும் தன் பொறுப்பிலும், உழைப்பிலுமே குட்டிகளை வளர்த்தெடுக்கிறது! ஆனால் உலகமோ ஆணைத்தான் கடமையுணர்வும், வலிமையும் மிகுந்தவனாய் பொய்முரசு கொட்டுகிறது! இருவருமே பிள்ளைகளாய், பெற்றோர்களாய், உடன் பிறந்தவர்களாய், நண்பர்களாய், சமூதாயமாய் சமமானவர்கள்தான். அனைவருக்குமே இங்கே ஒரு கண்ணியம் உண்டு.
இப்படி நான் கூடுதல் உணர்ச்சிவசப்பட்டு பெண்களுக்காகப் பேச காரணமிருக்கிறது. அதுவும் அந்த இளைஞன் போன்றவர்களின் மனோநிலைகளையும், வலிந்து பரப்பக் கூடிய விஷமமான அனுமானங்களையும் நன்கு அறிவேன்.
அது என்னவோ தெரியவில்லை அந்த பெண்மணி போன்ற பெண்களைக் கண்டால் அவரை விட்டுவிட்டு அவரைச் சுற்றியுள்ள மனிதர்களையே முதலில் கூர்ந்து கவனிப்பேன். யாரும் அவர்களைப் பொருட்படுத்தவில்லையெனில், நிம்மதியாய் நானும் நகர்ந்துவிடுவேன். இல்லையென்றால் அத்தனை ஆண் வர்க்கத்தையும் அடிவயிற்றிலிருந்து எழும் பெரும் சீற்றத்தோடு ஒரு நொடி பொழுதில் எதிர்க்க ஆரம்பித்துவிடுவேன்.
ஏன் என்றுதானேக் கேட்கிறீர்கள்..?
அந்த அரபி வந்து அந்த பெண்மணியிடம் பேசிக் கொண்டிருந்தபோது, வழியனுப்பி வைத்தபோது அவன் பார்த்தப் பார்வை, அவனிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்த விஷமமான உதட்டோர ஏளனச் சிரிப்பு… யாரும் விளங்கவல்ல முணுமுணுப்பு… அதை எத்தனை பேரிடம் என் வாழ்வில் ஒரு மகனாக எதிர்கொண்டிருப்பேன்..!
எனக்கும் அப்படி ஒரு அம்மா இருந்தார்… வெளிநாட்டிலிருந்து எங்களுக்காக தன்னை வருத்திக்கொண்டு ஆண்டுக் கணக்கில் கஷ்டப்பட்டார். அவரையும் கூட முதுகிற்குப்பின் எங்கள் உறவுகளும், தெரிந்தவர்களில் பலரும் அப்படித்தானே பாவித்து வந்தார்கள்? ‘உன் அம்மா வெளிநாட்டில் என்ன வேலை செய்கிறாள்?’ என்ற கேள்விக்கு எத்தனை முறை விழித்திருப்பேன்! அவர்களது மலினமானச் சிரிப்பு பதில்களில் எத்தனை முறை தடுமாறியிருப்பேன்..! நிலைகுலைந்திருப்பேன்! பேரலை வீசமுடியாத கடலைப் போல உள்ளுக்குள்ளேயே கோடி முறை கொந்தளித்திருப்பேன்! இறுகி, இறுகி உப்புக்கட்டிகளாய் எத்தனை முறையோ வெடித்தழுதிருப்பேன்!
அந்த பெண்மணிக்கு நான் நினைத்துப் பார்த்தது போல மகன், மகள், மற்ற பின்புலங்கள் ஏதும் இல்லாமலும் இருக்கலாம்… இயல்பாகவே இதுபோன்ற தருணங்களில் என் அம்மாவையும், எளியவர்களையும் நினைவு கூறுவதை தவிர்க்க இயலவில்லை. ஊரைவிட்டு வந்தவனுக்கு ஆரம்ப நாட்களில் ஒவ்வொரு பருக்கையிலும் அம்மாவின் நினைவே ஆவியாய் பறக்கும்! பிறகு பிடித்த, பிடிக்காத உணவைக் கண்டால் ஏக்கத்தேடல் போல் அவ்வபோது வந்து செல்லும்.
அன்று என் அம்மா ஊருக்கு வந்தபோது இருந்த கனமில்லை இப்போது. அடிக்கடி ஊருக்குச் சென்று வருவதால் என் கையில் ஒரே ஒரு பேக் மட்டும் வைத்திருக்கிறேன். வழித்துணைக்கு பக்கத்தில் நின்ற சகோதரரின் சுமார் பத்துக்கிலோவிற்கு மேலான அன்பு. இந்த வாழ்க்கைக்கு இந்த பேறு போதாதா?
***

இத்ரீஸ் யாக்கூப்,
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். நுண்ணுயிரியல் முதுகலை பட்டதாரி. பணி நிமித்தம் தற்சமயம் அமீரகத்தில் வசித்து வரும் இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இணைய இதழ்களில் கதைகள், தொடர்கள் எழுதி வருகிறார். இதுவரை ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ என்ற நாவலும், ‘பிறைகள்’, ‘மழையில் நனையாத குடை’, மற்றும் ‘பிராத்தனைகள் தோற்பதில்லை’ எனும் தலைப்புகளில் சிறுகதைத் தொகுப்புகளும் வெளி வந்துள்ளன.

