மகா.இராஜராஜசோழன்

 நான் மைதானத்தின் ஒரு பக்கம் நிற்கிறேன். மைதானத்தின் எதிர் பக்கம் நிற்கும் சொந்த மனிதர்களே யார் எனத் தெரியாமல் மறைந்துபோகும் தூரம் அவ்வளவு பெரிய மைதானம். இன்று ஞாயிற்றுக் கிழமை. வாரத்தின் ஆறு நாட்கள் உயிர் இல்லாமல் கிடக்கும் மைதானம் உயிர் பெற்றுவிடுகிறது மனித தலைகளால்.

ஒலி பெருக்கி வைத்து விளையாட்டு் வெற்றி ஓட்டத்தை ஆறு ரன், நான்கு ரன் என  அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அறிவிப்பு வருகிற பொழுதெல்லாம் மைதானத்தில் “ஓஓஓஓஓ” என்ற சத்தம் எழுகிறது. காற்றில் மரகங்கள் அசைகின்ற சத்தத்தைவிடவும் இந்தச் சத்தம் கூடுதலாக இருக்கிறது.

மரங்களில் வழக்கமாக அமர்ந்திருக்கும் பறவைகள் இல்லை. “அப்பா காக்கா ” என்று இயல்மொழி கைநீட்டிக் காட்ட முடியாமல் போனது இன்றைய நாள்.

செம்மொழியும் இயல்மொழியும்

நடுமைதானத்தில் புழுதி்மேல் எழ ஓடுகிறார்கள். செம்மொழி

செம்மொழி, இயல் ஓடாதிங்க” கத்திக்கொண்டே பின் தொடர்ந்து ஓடுகிறேன். இருவரும் வேகமாக ஓடி மைதானத்தில் நீளம் தாண்டுவதற்குக் கொட்டப்பட்டுள்ள மணல்பரப்பில் வீழ்ந்து உருள்கிறார்கள்.

அருகில் போய் அமைதியாகப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். “அப்பா அப்பா ஜாலியா இருக்குப்பா, நாகப்பட்டினத்துல கடல் மணல்ல விளையாடுறது போல இருக்குப்பா” என்கிறாள் செம்மொழி. இயல்மொழி சிரித்துக் கொண்டே மண்ணனை அள்ளி தன் தலையில் போட்டுகொண்டு மண்ணில் விழுந்து உருள்கிறாள்.

மாலை நேரம் சூரியன் அடங்கிக் கொண்டிருக்கிறது. வானம் சிவப்பாக மாறிவிட்டது . மண்ணில் விழுந்து உருண்ட செம்மொழி வானத்தைப் பார்த்துவிட்டாள் “அப்பா வானத்தைப் பாருங்க சிவப்பா அழகாகிட்டு, அங்க இருந்த சூரியன் எங்கப்பா போய் இருக்கும்” என்கிறாள் செம்மொழி.

அந்த மண்ணில் யாரோ விளையாடிவிட்டுப் போட்டுவிட்டுச் சென்ற உடைந்துபோன பொம்மையின் தலை, தேங்காய் சிரட்டை , மூடியில்லாத குளிர்பானப்பாட்டில் கிடந்தன.

இயல்மொழி மூடி இல்லாத பாட்டிலுக்குள் மண்ணைக் கொட்டி மீண்டும் கவிழ்க்கிறாள். மண் வேகமாகக் கீழே கொட்டுகிறது. மீண்டும் பாட்டிலை கவிழ்க்கிறாள் சிரிக்கிறாள்.

பெண் குழந்தை கையில் வயர்க்கூடை எடுத்துக் கொண்டு தன் தாயோடு வருகிறாள். கூடியில் தண்ணீர்ப்பாட்டில் இருக்கிறது. கூடையை ஓரமாக வைத்துவிட்டு “என்னையும் விளையாட சேத்துக்கங்க அக்கா” என்று செம்மொழியிடம் கேட்கிறாள். அவளும் தலை அசைத்துச் சேர்த்துக்கொள்கிறாள்.

மண்ணில் வீடுகட்டி விளையாடத் தொடங்கிவிட்டார்கள். தேங்காய்சிரட்டையால் மண்ணை அவள் தள்ள செம்மொழி கோபுரம் ஆக்குகிறாள். மண் பல நாள் வெயிலில் காய்ந்து புழுதியாகிக் கிடக்கிறது. செம்மொழிக்குக் கடற்கரை ஈர மணலில் வீடுகட்டி விளையாடி பழகியவள். அவளுக்குக் கடல் அலை மிகவும் பிடிக்கும் ஓடி ஓடி கடல் அலை தரும் சிப்பிகளைப் பொறுக்கிவந்து ஈரமணல் வீட்டில் பதித்து விளையாண்ட நினைவுகளில் மண்ணைக் குவித்து வீடாக்கும் முயற்சியில் தோற்றுப் போகிறாள். வறண்ட மண் வீட்டின் வடிவம் பெறாமல் சரிந்து சரிந்து போகிறது. “இந்த மண்ணுல சிப்பி இல்ல” என அந்தப் பெண்குழந்தை கேட்காமலேயே செம்மொழி தானே ஒரு பதிலைச் சொல்லிக்கொண்டு அருகில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து சரிந்து கிடந்த மண் குவியல் தலையில் சொருகி வைக்கிறாள்.

விழி பிதுங்கி, தலைமுடி விரிந்து, புன்னகை தொலைந்துகிடந்த பொம்மையை அந்தக் குழந்தை எடுத்துத் துடைத்துச் செம்மொழியிடம் கொடுக்கிறாள். செம்மொழி பொம்மையை வாங்கி அதன் தலைமுடியைச் சரி செய்து அதன் கண்ணில் வாயில்  ஒட்டியிருந்த மண்ணைத் துடைத்துவிட்டு சரிந்துகிடந்த மண்ணின் மீது சொருகி வைத்திருந்த குச்சியின் மீது தலையை மாட்டி வைக்கிறாள். பொம்மையின் தலை கழுத்துமுழுதும் குச்சிக்குள் நுழைய மண் மேட்டின் மீது சாயாமல் தாங்கி தலை மிர்ந்து நிற்கிறது.

நான் பொம்மையைப் பார்க்கிறேன். பொம்மை என்னைப் பார்க்கிறது. உடைந்து தொடுவார் இன்றி உயிர் இல்லாமல் கிடந்த பொம்மையின் தலைக்கு இப்போது உயிர் வந்திருக்கிறது. காற்றின் வேகத்தில் தலை அசைக்கிறது. உருளும் அதன் கண்கள் அங்கும் இங்கும் அசைகிறது. அந்தக் குழந்தைகள் இதை எல்லாம் பார்க்காமல் விதைகளைப் பொறுக்கிவந்து மணலில் புதைத்து விளையாடத் தொடங்கி இருந்தார்கள்.

ஒரு குழந்தை விதவிதமான பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களைக் கொண்டுவந்து விளையாடிக் கொண்டிருந்தது. இயல்மொழி நகர்ந்து நகர்ந்து அந்தப் பொம்மைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு என்னிடம் ஓடி வருகிறாள். அந்தக் குழந்தை “அப்பா என் பொம்மைய பாப்பா தூக்கிட்டுப் போறாப்பா” என்று அழுது கொண்டே பிடுங்க ஓடுகிறாள்.

“பாப்பா பாப்பா விடுபாப்பா பாப்பா விளையாடட்டும் விளையாண்டுட்டு கொடுப்பாங்க” எனக் கத்துகிறார். அழுதுகொண்டே திரும்பியக் குழந்தையின் பின்னாலேயே ஓடி வந்த இயல்மொழி பொம்மையை அந்தக் குழந்தையிடமே கொடுத்துவிட்டு நடப்பாதைச் சிமெண்ட்டில் ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாள். பதறிப்போய் “இயல் இயல்” எனப் பதறிச் சத்தமிட்டு அவளைத் தூக்க ஓடுகிறேன். கால் பட்டுப் பொம்மை தலையசைக்கிறது. அவளை எறும்பு கடித்துவிடாமல் தூக்குகிறேன். அழுகிறாள். அவளைத் தூக்கிக் கொண்டு பொம்மையைத் திரும்பிப் பார்க்கிறேன். பொம்மை குழந்தையின் அழுகையைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

மௌனம், அமைதி, தனிமை, அனாதை என எல்லாத் துயரத்தையும் உடைந்த நாள்களுக்குப் பின் சுமந்த பொம்மை இன்று குழந்தைகள் கைப்பட்டுச் சிரிக்கிறது. குழந்தைகளுக்கு எப்படிப் பொம்மையைப் பிடிக்குமே அப்படித்தான் பொம்மைக்கும் குழந்தைகளைப் பிடிக்கும் என்பது அதன் தலையசைவில் தெரிகிறது.

திரும்பிப்பார்க்கிறேன் செம்மொழி் குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரை ஊற்றி மண்ணை ஈரமாக்கி தேங்காய் சிரட்டைடையில் வைத்து அமுக்கிக் கவிழ்த்து நடப்பாதையில் இட்டிலிபோல உருவமாக்கி மண்ணை வைத்துவிட்டு் ” அப்பா நான் இட்டிலி சுட்டு இருக்கேன் சாப்படறீங்களா” என்று கேட்கிறாள். என் இளமைக்கால விளையாட்டு நினைவுகள் வந்து போகின்றன.

“எல்லாரும் வெளில போகலாம் மணி ஆகிட்டு்” இது மைதானத்தின் வாட்ச்மேன் குரல். இருள் சூழ்கிறது. மின்விளக்கு எரியத் தொடங்கிவிட்டன. கூட்டங்கள் இப்போது குறைந்துவிட்டது. காற்று வீசுகிறது; மைதானம் மனிதர்கள் இன்றி பெரும் மூச்சுவிடுகிறது. நாங்களும் இறுதியாக மைதானம் விட்டு வெளியேறுகிறோம்.

எங்களுக்குப் பின்னால் யாரே தேம்பித் தேம்பி அழுவது போல சத்தம் கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறேன். பொம்மை மட்டும் தனிமையில் கிடக்கிறது.

இப்போது  செம்மொழி கேட்கிறாள் “அப்பா அப்பா இரவாகிட்டுள அந்தப் பொம்மைக்குப் பயமா இருக்காதப்பா” என்று. நான் மௌனமாக இருக்கிறேன். அந்த அழுகைச் சத்தம் பொம்மையாகக்கூட இருக்கலாம்.

00

மகா.இராஜராஜசோழன்,

தமிழாசிரியர்.

குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர்.

பிறந்த ஊர் – சிதம்பரநாதபுரம்

வட்டம் – சீர்காழி

மாவட்டம் – மயிலாடுதுறை.

கல்வி – இளங்கலை அறிவியல் , இளங்கலைத் தமிழ், முதுகலைத் தமிழ், ஆய்வியல் நிறைஞர், இளங்கலைக் கல்வியல் கல்வி, பட்டயத் திருக்குறள்.

எழுத்துப்பணி

இந்து தமிழ் திசை நாளிதழ், அருஞ்சொல் இணைய இதழ், கீற்று இணைய இதழ், பொம்மி மாத இதழ் போன்றவற்றில் படைப்புகள் வெளிவந்துள்ளன.

நூல்கள்

1.   தாகத்தோடு பயணிக்கும் நதி – கவிதை நூல்

2.   சார் இது பேய் இது நீங்க – கட்டுரைத்தொகுதி

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *