(எத்தியோப்பியா நாட்டுப்புறக் கதை)

ஷாராஜ்

டேஸாவு கடின உழைப்பாளி, ஆனால் அவனுடைய விளைநிலம், அந்த வருடம் பயிர் விளைவிக்க மறுத்தது போல வறண்டு போயிருந்தது. எத்தியோப்பியாவின் அந்த மலைப்பிரதேசம் முழுக்கவே இப்போது அப்படித்தான். வானம் கருணை காட்டவில்லை, மண்ணும் வெடித்திருந்தது. பயிர்கள் கடும் வெயிலால் வாடிக் கருகின. மக்கள் பசி, பட்டினிகளால் வாடினர்.

கிராமத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஒவ்வொரு இனக்குழு மக்களும் தங்களின் பாரம்பரிய முறைப்படி தத்தமது கடவுள்களை வேண்டினர். ஒருபுறம், ஓரோமோ (Oromo) இன மக்கள் ஒன்று கூடி, தங்களின் உயரிய கடவுளான ‘வாகா’ (Waaqa)-வை நோக்கிக் கைகளை உயர்த்தினர். அவர்கள் புனிதமான ‘ஓடோ’ (Odo) மரத்தின் அடியில் நின்று, “வானத்தின் அரசனே! தாகத்தால் துடிக்கும் எங்களைக் காப்பாற்ற ‘அய்யானா’ (Ayyaana) ஆவிகளை அனுப்ப மாட்டாயா?” என்று மன்றாடினர். அந்த மரத்தின் வேர்களில் பாலை ஊற்றி, பூமி குளிர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

மறுபுறம், ஓமோ பள்ளத்தாக்கின் ஹேமர் (Hamer) இன மக்கள், தங்கள் படைப்புக் கடவுளான ‘தும்மு’ (Tummu)-வை வேண்டி ஒரு சடங்கை நடத்தினர். இளைஞர்கள் வரிசையாக நின்று, தங்களின் கால்நடைகள் பெருகவும், நிலம் குளிரவும் வேண்டியபடி விசித்திரமான ஓசைகளை எழுப்பி சடங்கு நடனமாடினர். முர்சி (Mursi) பழங்குடியினரோ, தங்கள் உடலில் வெள்ளை மண்ணைப் பூசிக்கொண்டு, வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களின் நம்பிக்கைப்படி, ‘டுமு’ (Tumu) கடவுள் ஒரு வானவில் வடிவில் தோன்றினால் மட்டுமே வறட்சி நீங்கும் என்பதால், அவர்கள் அடிவானத்தை ஆவலுடன் பார்த்தனர்.

டேஸாவுவின் கவலை உச்சத்தை அடைந்தது. அவன் தன்னுடைய சிறிய குடிசையின் அருகில் அமர்ந்து, கடவுளிடம் வேண்டினான். “என் நிலத்தை நீ செழிக்க வைத்தால், அறுவடையில் பாதி உனக்குத் தருகிறேன்!”

அவனது வேண்டுதலுக்குப் பதிலாக, கடவுள்கள் எதுவும் பதிலளிக்கவில்லை.

அந்தப் பிரதேசத்தின் அடர்ந்த காடுகளில், ஃபால்கோ (Falko)  என்றழைக்கப்படும் ஒரு விசித்திரமான, பேராசை கொண்ட பேய் வாழ்ந்தது. ஃபால்கோ என்றால், பெரிய வயிறு. உணவின் மீதான அதன் பேராசை எல்லையற்றது. அது ஒருபோதும் வேலை செய்யாது. ஆனால், உணவையும் தானியங்களையும் திருடுவதில் சாமர்த்தியசாலி. மக்கள் அந்தத் தீய ஆவியிடமிருந்து அஞ்சி ஒதுங்கினர்.

நள்ளிரவில், டேஸாவுவின் குடிசைக்கு ஒரு பெரிய நிழல் வந்தது. அதுதான் ஃபால்கோ.

“டேஸாவு! உனது வேண்டுதலை எந்தக் கடவுளும் செவிமடுக்கவில்லை. எந்த தேவதைகளும் உன் மீது இரக்கப்படவில்லை. ஆனால், நான் உனது வேண்டுதலைக் கேட்டேன். நீ என்னிடம் வேண்டாவிட்டாலும், நான் உன் மீது இரக்கப்பட்டு, கருணையோடு உன்னைத் தேடி வந்திருக்கிறேன். நான் உனக்கு உதவுகிறேன். உன் விளைநிலத்தைச் செழிக்க வைக்கிறேன். என் மந்திர சக்தியால் உன் நிலத்தில் இந்த வருடம், உலகில் யாருமே பார்த்திராத அளவுக்குப் பயிர் விளையும். கடவுள்களிடன் சொன்னது போல, உனது அறுவடையில் பாதியை எனக்குக் கொடுத்தால் போதும்.”

டேஸாவு, ஃபால்கோவைக் கண்டு பயத்தில் நடுங்கினாலும், தன் மனைவி – மக்களைக் காப்பாற்றும் அவசியத்தை உணர்ந்தான்.

“சரி, ஃபால்கோ! நீ என் நிலத்தைச் செழிக்க வைத்தால், அறுவடையில் பாதியைத் தருகிறேன்.”

ஃபால்கோ இளித்தது. “சபாஷ்! ஒப்பந்தம் கையொப்பமானது. நீ அறுவடை செய்தவுடன், எனக்குரிய பாதியை உடனே கொடுத்துவிட வேண்டும்!”

டேஸாவு ஒப்புக்கொண்டான்.

*******

ஃபால்கோ, அன்று இரவே நிலத்தில் வேலை செய்ய ஆரம்பித்தது. அது மந்திரத்தால் உழுதது, உரம் போட்டது. விசித்திரமான பாடலைப் பாடி, விதைகளைத் தூவியது. விதைக்கும்போது, நிலத்தின் வளமைக்கான பெண் தெய்வமான ‘அடெடே’ (Atete)-வை ஏமாற்றிப் பெற்ற ரகசிய மந்திரங்களை முணுமுணுத்தது.

பொதுவாக, பெண்கள் தங்கள் குடும்பச் செழிப்புக்காக ‘அடெடே’ வழிபாட்டைச் செய்வார்கள். ஆனால் ஃபால்கோ, அந்தப் புனிதமான சக்தியைத் தன் பேராசைக்காகத் திருடிப் பயன்படுத்தியது.

விடியற்காலையில் டேஸாவுவின் நிலம் முழுவதும் பச்சை நிறச் செடிகளும், கொடிகளும் முளைத்திருந்தன.

அடுத்து வந்த வாரங்கள், அந்த கிராமமோ, பிரதேசமோ கண்டிராத வளர்ச்சியாக இருந்தது. டேஸாவுவின் நிலத்தில் இருந்த கோதுமை மற்றும் பார்லிக் கதிர்கள் தங்க நிறத்தில் மின்னின. ஒவ்வொரு செடியும் இரண்டு செடிகளுக்குச் சமமாக வளர்ந்தது. அந்தப் பயிர்களின் உயரம், ஹேமர் இன இளைஞர்கள் தங்கள்வீரத்தைக் காட்டத் தாண்டும் எருதுகளின் உயரத்தைவிட அதிகமாக இருந்தது. மற்ற கிராமவாசிகள் அதிசயத்துடன் பார்த்தனர்.

“டேஸாவு, நீ என்ன மந்திரம் செய்தாய்? உன் நிலம் மட்டும் இப்படிச் செழிக்கிறதே! இது வாகா (Waaqa) உனக்குத் தந்த வரமா? அல்லது டுமு (Tumu) உனக்கு நிலத்தின் ரகசியத்தைக் காட்டினாரா?” அவர்கள் வேடிக்கையாகக் கேட்டனர்.

உண்மையிலேயே அது மந்திரத்தில் விளைந்ததுதான் என்பதை அவன் வெளிக்காட்டவில்லை. ஃபால்கோவைப் பற்றிப் பேசவுமில்லை.

“கடின உழைப்பு மற்றும் ஒரு சிறிய ரகசியம்,” என்று மட்டுமே சொல்லிச் சமாளித்தான்.

கோடைகாலம் முடிவதற்குள் அறுவடையும் ஆகிவிட்டது. அவனது சிறிய நிலத்தில் மாபெரும் மகசூல். அது கிராமவாசிகள் அனைவருக்கும் உணவு கிடைக்குமளவுக்கு இருந்தது. ஒப்பந்தப்படி மகசூலில் பாதியை ஃபால்கோவுக்குக் கொடுத்தாலும், இவனுக்குக் கொழுத்த லாபம்தான். அதுவும் இந்த வறட்சிக் காலத்தில் தானியங்களை விற்றால் இரண்டு, மூன்று மடங்கு லாபம் கிடைக்கும்.

டேஸாவு பெருமகிழ்ச்சியடைந்தான். 

*******

பாகம் பிரிப்புக்காக ஃபால்கோ வந்தது.

டேஸாவு தனது அறுவடையை இரண்டாகப் பிரித்தான். ஒரு பகுதி ஃபால்கோவுக்கு, மறு பகுதி இவனுக்கு.

டேஸாவு நேர்மையானவன் என்பதால் வாக்களித்தபடி நடந்துகொண்டான்.

ஃபால்கோ, குன்று போலக் குவிந்து கிடக்கும் இரு பாகங்களையும் பார்த்து ஆனந்தச் சிரிப்புச் சிரித்தது. அதன் கண்கள் தானியங்களைப் பார்த்துப் பேராசையால் சுருங்கின.

“டேஸாவு,… ஒரு பங்கு எனக்குப் போதுமானதல்ல. உனது விளைச்சல் முழுதும் நான் எனது மந்திர சக்தியால் விளைவித்தது. எனவே, மகசூல் முழுவதும் எனக்குத்தான் சொந்தம்!”

டேஸாவு அதிர்ச்சியடைந்தான். “நீ சொன்னது பாதி மட்டுமே! நீ ஒரு ஒப்பந்தத்தை மீறுகிறாய்!”

“நான் ஒரு பேய். ஒப்பந்தங்கள் எனக்குப் பொருட்டல்ல!”

ஃபால்கோ தன் மாபெரும் உடலை அசைத்து, டேஸாவுவின் பங்கையும் திருடத் தயாரானது.

டேஸாவு, தன் குடும்பத்தைப் பசி, பட்டினி, பஞ்சத்திலிருந்து காப்பாற்ற வேண்டியிருந்தது. அச்சமடைந்தாலும், அவனது மனம் துரிதமாகச் செயல்பட்டது. அவசரமாக ஒரு புத்திசாலித்தனமான திட்டத்தைத் தீட்டினான்.

உறுதியான குரலில், “நில் ஃபால்கோ! நீ ஒரு பேய்; நான் ஒரு விவசாயி. உனக்குப் பேராசை இருப்பது உண்மை. ஆனால், நீ திருட வேண்டியதில்லை. நான் உனக்கு ஒரு புதிய ஒப்பந்தத்தை வழங்குகிறேன். நீ அதை முடித்தால், இந்த மகசூல் முழுவதுமே உனக்குச் சொந்தம்!”

ஃபால்கோ உடனடியாக நின்றது. அதன் பேராசை, கோபத்தைவிடப் பெரியது. “என்ன ஒப்பந்தம்? சீக்கிரம் சொல்!”

“நமக்குள் ஒரு பந்தயம். இந்த தானிய மூட்டைகளில் உனக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவையும் நீ தூக்கிக்கொள்ள வேண்டும். எனக்கு வேண்டிய அளவு நான் தூக்கிக்கொள்வேன். இருவரும் அவரவர் சுமையோடு, கிராம எல்லையில் உள்ள கல் கிணறு வரை ஓட வேண்டும். யார் முதலில் இலக்கை அடைகிறார்களோ, அவர்களுக்குத்தான் இந்த மகசூல் முழுவதும். ஆனால், ஒரு முக்கிய நிபந்தனை. நீ மந்திர சக்தியைப் பயன்படுத்தக் கூடாது.”

ஃபால்கோ சிரித்தது. “சரி. எனக்கு மந்திரம் வேண்டாம். நான் காற்றின் வேகத்தில் ஓடுவேன். நான் தயாராக இருக்கிறேன். ஆனால், ஒன்றைப் புரிந்துகொள். இது முட்டாள்தனமான பந்தயம். நீ தோற்றால், நான் உன்னையும், உன் குடும்பத்தாரையும் சாப்பிடுவேன்!”

டேஸாவு ஒப்புக்கொண்டான்.

*******

பந்தயம் தொடங்கியது. ஃபால்கோ, அந்தப் பிரம்மாண்டமான அறுவடையிலிருந்து கோதுமை, பார்லி, சோளம், மரவள்ளிக் கிழங்கு, காய்கறிகள் என அனைத்தையும் மூட்டை மூட்டையாக எடுத்துத் தன் முதுகில் சுமந்தது. ‘உனக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவையும்’ என டேஸாவு சொல்லியிருந்ததால், அது பேராசையோடு அவ்வளவு மூட்டைகளையும் எடுத்துக்கொண்டிருந்தது. பாரம் தாங்காமல் அதன் முதுகு வலித்தது; கால்கள் தள்ளாடின. இருந்தும் அது ஆவேசத்தோடு ஓடியது. அது ஓடும் வேகம், ஒரு சிறிய நிலநடுக்கத்தைப் போல பூமியை அதிரச் செய்தது.

டேஸாவு ஒரு சிறிய மூட்டையை மட்டும் எடுத்துக்கொண்டு, ஃபால்கோவுடன் ஓடத் தொடங்கினான்.

அது பக்கவாட்டில் திரும்பி அவனைப் பார்த்ததும் ஏளனமாகச் சிரித்தது. “அட, அற்ப மானிடப் பயலே! இந்தக் குட்டி மூட்டை தானியம் உனக்கும், உன் குடும்பத்துக்கும் போதுமா? இதற்கா இந்தப் பாடு? கேட்டிருந்தால் நானே உனக்கு இதைக் கொடுத்திருப்பேனே…!”

அந்தப் பேராசைப் பேயின் மூளைக்கு அவ்வளவுதான் எட்டும். அது தெரிந்துதானே டேஸாவு இப்படியொரு பந்தயத் திட்டமும், சாதுரியமான நிபந்தனைகளும் தீட்டினான்!

இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், “இது எனக்கும் என் குடும்பத்துக்கும் போதாதுதான். எனினும், என்னால் இதற்கு மேல் சுமக்க முடியாதே…!” எனப் பரிதாப முகத்தோடு சொன்னான்.

முதலில் ஃபால்கோ அவ்வளவு பாரத்தோடுமே வேகமாகச் சென்றது. ஆனால், போகப் போக, மூட்டைகளின் கனமும், உடலில் சோர்வும் அதிகரித்தன. டேஸாவுவின் முதுகில் இருந்தது சிறிய மூட்டை என்பதால் இலகுவாக ஓடினான். சற்று நேரத்தில் ஃபால்கோவைத் தாண்டிவிட்டான்.

ஃபால்கோ மூச்சு வாங்க, “ஏய், டேஸாவு! நீ எப்படி இவ்வளவு வேகமாக ஓடுகிறாய்? எனக்கு பாரத்தால் முதுகெலும்பே உடைந்துவிடும் போல் இருக்கிறது. அவ்வளவு கனம்!” என்றது.

“அது மூட்டைகளின் கனம் மட்டுமல்ல, ஃபால்கோ! உன் பேராசையின் கனமும்தான்!” என்றபடியே இன்னும் வேகமாக ஓடினான்.

சிறிது நேரத்தில் டேஸாவு கிராம எல்லையில் இருந்த கல் கிணற்றை முதலாவதாக அடைந்துவிட்டான். ஃபால்கோ இப்போதுதான் முக்கால் தூரம் வந்திருந்தது.

இவன் இலக்கை அடைந்ததுமே வெற்றி இவனுடையதாக ஆகிவிட்டது. அதன் பிறகு ஃபால்கோ அத்தனை மூட்டைகளைச் சுமந்தபடி ஓடிவர வேண்டியதில்லை. அங்கேயே இறக்கிவைத்துவிட்டு, தோல்வியை ஒப்புக்கொண்டால் போதும். ஆனால், அதைச் சிந்திக்கிற அளவுக்கு அதற்கு அறிவு இல்லை.

பெரும் சுமையால் தடுமாறி, உடல் தொய்ந்து, வேர்வை மழை சிந்தித் தெறிக்க ஓடி வந்துகொண்டிருந்தது. வாயில் நுரை தள்ள, மூச்சிரைத்தபடியே ஓடி வந்து, கிணற்றடியில் மூட்டைகளை இறக்கி வைத்தது. உடனே ‘தொஸ்க்’ எனச் சரிந்து நிலத்தில் விழுந்துவிட்டது.

“பந்தயத்தில் நான் வென்றுவிட்டேன். இனி மகசூல் முழுக்க எனக்குத்தான். சரிதானே!? மறுபடியும் நீ பேச்சு மாறினால், வேறு பந்தயம் வைத்துக்கொள்ளலாம்,” என்றான் டேஸாவு.

“ஐயையோ…! இன்னொரு பந்தயமா…?!” என அலறியது ஃபால்கோ. “வேண்டவே வேண்டாம்! உனது மகசூல் முழுதையும் நீயே எடுத்துக்கொள்! என்னை இதோடு விட்டால் போதும்!”

*******

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *