ரா.சண்முகவள்ளி

​அந்தி சாயும் மாலை வேளை. அடுப்பாங்கரையில் கோழிக்குழம்பு கொதித்துக்கொண்டு இருந்தது. மங்கலம் கலங்கிய விழிகளை முந்தானையில் துடைத்தபடி, அம்மிக் குழவியை ஆவேசமாகத் தூக்கி நைக்கத் தொடங்கினாள். மேலும் கீழுமாக குழவியை இழுத்து அவள் அரைக்கத் தொடங்குகையில்,

​”ம்மாஆஆஆ.., ம் மாஆஆஆஆ” என்ற முனங்கல் அறைமுழுவதும் ஒலித்தது.

​”இதோ வந்துடுறேன் டா…” என்றபடியே அம்மியை முன்னுமாக பின்னுமாக இழுத்து வேகம் கூட்டி அரைத்துக் கொண்டிருந்தாள். அடுத்த சில நொடிகளில் முனங்களின் சத்தம் கூடவே, அம்மியினை அப்படியே விட்டுவிட்டு நேராக கூடத்திற்கு வந்தாள்.

​”ஏம்லே கத்திக் கூப்பாடு போடுறவன்? இங்கன தான இருக்கேன். செவனீனு தூங்கித்தொலையேம்லே!” என்றபடி அவனது எச்சிலைத் துடைத்துவிட்டு, மறுபடியும் அடுப்பாங்கரைக்குள் நுழைந்தாள்.

​ஓடு வேயப்பட்ட இரண்டு அறைகள் கொண்ட வீடு அது. முதல் அறை உண்ணவும் உறங்கவும் என்றாகிட, இரண்டாவது அறை சமையல் முதல் சகலத்திற்கும் உகந்தாகிட, அவர்கள் இருவருக்குமான உலகமே அதோடு முடிவடைந்தது. மங்கலம், மாடசாமி இருவரின் மணவாழ்வும் பனிகால மழைப்போல சட்டென்று முடிவுக்கு வந்தது. அதன் பலனாகக் கிடைத்த அமுதவிஷம் தான் மாரியப்பன். ஐந்து வயதுக்கு மேல் வளர மாட்டேன் என அடம்பிடிக்கும் மனதையும், இருபத்தி இரண்டு வயதைத் தொட்டுவிட்ட பூத உடலையும் கையாளத் தெரியாமல் திண்டாடி வரும் செல்லமகனோடு நித்தமும் அவள் படும் பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல.

​மாடசாமி முழுநேரக் குடிகாரன் கிடையாது தான் என்றாலும், உடல் அலுப்பைக் காரணம் காட்டி அடிக்கடி குடித்து விட்டு வருவான். வீட்டுக்கு என்ன தேவையோ அதைச் செவ்வனே செய்துவிட்டு, மீதம் எஞ்சியதை வைத்து வயிறாரக் குடிப்பவன். ஒருநாள், போதையின் வீரியம் அடங்கும் முன்னே கல் குவாரிக்கு வேலைக்குப் போனவன் வெடி விபத்தில் சிக்கி பிணமாக வந்துசேர்ந்தான். கணவனின் சடலத்தைக் கண்டு மாரடித்து அழுது புலம்பிய மங்கலத்தின் அருகில், எதுவும் அறியாமல் சிரித்தபடி அமர்ந்திருந்தான் நான்கு வயது மாரியப்பன். பிறப்பு என்றால் என்ன, இறப்பு என்றால் என்ன? அறியாத வயது அது.

​அதோ இதோ என்று நாட்கள் வேகமாக ஓடிவிட மாரியப்பனுக்கும் ஏழு வயதைத் தொட்டது. ஆனால், இன்னும் இயற்கை உபாதையைக் கூடச் சரியாகச் சொல்லத் தெரியாமல் ஆடையிலேயே கழித்தான். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோடு விளையாட விட்டால் அடித்து வைக்கிறான் என்ற குறையால் எங்கும் அவனை விட்டுச் செல்ல முடிவதில்லை. கங்காரு குட்டியைச் சுமப்பது போல அவனைத் தன்னுடனே வேலைக்கு அழைத்துக் கொண்டு செல்பவளுக்கு, வயல் வேலைகளிலும் பெருத்த சிரமம் ஏற்பட்டது.

​”அடியேய் மங்கலம்! பிள்ளைனா அப்படி இப்படித்தான் இருக்கும். அதுக்காக இப்படியா கங்காரு குட்டிக்கணக்கா மடியில கட்டிக்கிட்டு திரியிறவ? கொஞ்ச நாளைக்கு பல்லக் கடிச்சிகிட்டு பால்வாடியில விட்டுப் பழக்கு” என்றாள் அனஞ்சி.

​”ஆமா மங்கலம், நாலு பிள்ளைகளோட பழகுனாதான் அவனும் எல்லாத்தையும் கத்துக்குவான். இப்படி உன் முந்தானையிலயே முடிஞ்சி வச்சுக்கிட்டு எத்தனை நாளைக்குக் குண்டியக் கழுவி விடுவ சொல்லு? எட்டு வயசாகப்போகுது” என்ற வசந்தியின் பேச்சில் உள்ள நியாயம் புரியாமல் இல்லை.

​பால்வாடியில் சேர்ப்பது என்ற திடமான முடிவோடு, சில நாட்களுக்கு முன் மாரியப்பனைக் கொண்டு போய் விட்டாள். அவனை அங்கு விட்டுவிட்டு நிம்மதியாக வயலுக்குக் களையெடுக்க வந்தாள். ஆனால், மூன்று மணியளவில் மகனை அழைக்கச் சென்றவளுக்குக் காணக் கிடைத்த காட்சி நெஞ்சை உடைத்தது. பால்வாடி வாசலின் ஓரத்தில் தனியாக அமர்ந்திருந்தான் அவள் மகன். அருகில் சென்றவளுக்குச் சிறுநீரும் மலமும் கலந்த வீச்சம் நாசியைத் துளைத்தது.

​”என்னம்மா புள்ளைய வளத்து வச்சுருக்கீங்க? ஒன்னுக்கு ரெண்டுக்கு வந்தா சொல்லக்கூடத் தெரியாதாக்கும்? சரி, இருந்துட்டானேன்னு கழுவி விடலாம்னு கிட்ட போனா அடிக்கிறான். இனிமேல் இவனை பால்வாடிக்கு விடாதீங்கம்மா. மத்த பிள்ளைங்களோட அம்மாலாம் எங்கள சத்தம் போடுறாங்க” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தாள் பால்வாடி ஆயாம்மாள்.

​”சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்கம்மா. உங்க பையனுக்கு வயசுக்கு ஏத்த மனவளர்ச்சி இல்லை. மத்த பசங்கள ரொம்ப அடிக்கிறான். நீங்க எதுக்கும் டவுண் பெரியாஸ்பத்திரிக்கு போயி டாக்டர்கிட்ட காட்டிப் பாருங்க” என மங்கலத்தின் மேல் இரக்கம் கொண்டு பேசினாள் பால்வாடி டீச்சர்.

​மறுநாளே பெரியாஸ்பத்திரிக்கு மாரியப்பனைக் கூட்டிக்கொண்டு சென்றாள். மருத்துவரும் அவனை நன்கு பரிசோதித்துவிட்டு, மங்கலத்திடம் பேச ஆரம்பித்தார்.

​”உங்க பையனுக்கு மனவளர்ச்சி குறைபாடுமா. அவனோட மூளை இன்னும் kangaroo நான்கு வயதுக் குழந்தையோட வளர்ச்சியிலதான் இருக்கு. இவனை மாதிரியே இருக்குற பசங்க இருக்குற காப்பகத்துல சேர்த்துவிடுங்க. அங்க இவனை நல்லா பாத்துப்பாங்க” என்றார்.

​மருத்துவர் பரிந்துரைத்த ஹோமிற்கு நேராக வந்து நின்றாள். சகலத்தையும் விசாரித்து முடித்தவர்கள், இறுதியாக ஒரு பெரும் தொகையைப் பராமரிப்புக்காகக் கேட்டார்கள். அதிர்ந்தே போனாள் மங்கலம். அவள் வாழ்நாளில் அத்தனை பெரிய தொகையைக் கண்டதே இல்லை. “டாக்டர் ரெகமண்டேஷன்ல வந்திருக்கீங்கன்னுதான் குறைச்சுக் கேக்கறோம்மா. நல்லா யோசிச்சுட்டு சொல்லுங்க” என்றபடி அந்த அதிகாரி நகர்ந்தார்.

​காப்பகத்தையும் மகனையும் மாறி மாறிப் பார்த்தவள், மகனை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். மகனின் நலனுக்காகத் தன் தலையை விற்றாவது அந்தத் தொகையைக் கட்டிவிட வேண்டும் என்பது அவளின் ஆசைதான். ஆனால், அவளின் தலைக்கு அவ்வளவு பணம் கொடுக்கும் புண்ணியவான் அந்த ஊரில் எவன் இருக்கிறான்? என்ன செய்வது? இறக்க முடியாத சுமையைச் சுமப்பதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது? மீண்டும் சுமக்கத் தயாரானாள் மங்கலம்.

​தன்னால் இயன்ற அளவுக்கு அவனுக்கு இயற்கை உபாதைகளைச் சொல்லக் கற்றுக்கொடுத்தாள். சோற்றுப் பருக்கைகளை அள்ளி உண்ணக் கற்றுக்கொடுத்தாள். அத்தனையையும் முடிந்தவரை அவனும் கற்றுக்கொண்டான்.

​வீட்டை விட்டு வெளியே வேலை எனச் செல்ல முடியாத நிலை. அக்கம் பக்கத்து வீடுகளில் பீடி சுற்றும் பெண்களுக்கு பீடி மடக்கி கொடுப்பாள். பூக்கட்டி கொடுப்பாள். இன்ன வேலை தான் என்றில்லை, வயிற்றைக் கழுவ ஏதாவது ஒன்று; யாரையும் ஏமாற்றாத ஒன்று, அவ்வளவு தான். அவள் பீடி சுற்றும் போது வாசலில் உள்ள தங்க அரளிச் செடியில் உள்ள பூக்களைப் பறித்து விளையாடுவான். அது என்னவோ அந்தப் பூக்கள் மீது கொள்ளைப்பிரியம் அவனுக்கு. யாரையும் அந்தச் செடியைத் தொடக்கூட விடமாட்டான். சில நேரம் அந்தக் காய்களைப் பறித்து விளையாடுவான். “அடியேய் எவடி இவ அரளிச்செடியை வாசல்ல வச்சுட்டு இருக்குறவா, அவன் பாட்டுக்கு விளையாட்டு வாக்குல கடிச்சுத் திண்ண சொல்லத்தெரியுமா என்ன?” தங்க அரளிச்செடி அருகில் அவனைக் கண்டாலே அனஞ்சி இப்படித் தான் மங்கலத்தை ஏசுவாள்.

​வயதும் வாழ்வும் போட்டி போட்டுக்கொண்டு ஓட, மாரியப்பன் பதின்ம வயதைத் தொட்டான். வயதுக்கேற்ற ஹார்மோன்களின் வளர்ச்சி அவனை இரவுகளில் துடிக்கவைத்தது. இரவுகளில் விழித்துக்கொள்ளும் அவனின் ஆண்மையின் உந்துதலைச் சரிசெய்யும் வழி தெரியாது தவிக்கத் தொடங்கினாள் மங்கலம்.

​பகல் பொழுதெல்லாம் அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு தெருக்களில் வலம் வருபவன், இரவானால் தாயின் மார்பில் பால் தேடும் பச்சைப் பிள்ளையாக, அவளின் வாசத்தில் வசதியாக உறங்கினான். சற்றே அவள் விலகிப் படுத்தாலோ, இரவில் சிறுநீர் கழிக்கச் சென்றாலோ அவள் வரும் வரையில் “அம்மா.. அம்மா..” என்று கதறியவண்ணம் இருப்பான்.

​கொதித்துக் கொண்டிருந்த குழம்பைக் கிண்டிவிட்டபடி முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டவளின் நினைவுகள், சில மாதங்களுக்கு முன்னால் நடந்த அந்தச் சம்பவத்தை நோக்கி நகர்ந்தது.

​ஒழுங்காகப் பொத்தான்கள் போடப்படாத சட்டை, முழங்கால் வரை இருக்கும் அரைடவுசர், எண்ணெய் ஏற்காத சிகை, வாயில் வடியும் உமிழ்நீருமாக எப்போதும் காட்சிதருவான் மாரியப்பன். சட்டையின் நுனியை கைகளால் திருகியபடியே கேட்கும் கேள்விகளுக்குப் புன்னகையை மட்டுமே பதிலாய்த் தருவான்.

​வெள்ளிக்கிழமை வந்தால் போதும், மாரியப்பனை கூட்டிக்கொண்டு வாய்க்காலுக்கு வந்துவிடுவாள் மங்கலம். மாரியுடன் அவள் வாய்க்காலுக்கு வருவதென்பது பாகனோடு வரும் யானையைப் பார்ப்பது போல வேடிக்கையாக இருக்கும் அந்தத் தெருப் பசங்களுக்கு. அவனைச் சுற்றி வந்தபடி முன்னும் பின்னும் ஓடி, “ஏய் லூசுப் பயலே…” என அவனைக் கேலி செய்தபடி வருவார்கள். “ஏலேய்! அடிவாங்காம ஓடிப் போயிருங்க, இல்ல உங்க அம்மைட்ட சொல்லிடுவேன் பாத்துக்கோ” எனச் சிறுவர்களை ஏசியபடியே மங்கலம் வாய்க்காலுக்கு வருவாள்.

​வாய்க்கால் நீருக்குள் கால் வைக்க அஞ்சிப் பயப்படுபவனை, தன் பலம் மொத்தத்தையும் திரட்டி வாய்க்காலுக்குள் இழுத்து நிறுத்துவாள். அவனின் அரைடவுசரைக் கழட்டித் துண்டைக் கட்டுவதற்குள் அவளின் திராணி எல்லாம் காலாவதியாகிவிடும். நீரில் மூழ்கிக் குளிக்கத் தெரியாதவனை நிற்கவைத்து, தான் கொண்டுவந்த கப்பைக்கொண்டு நீரை மோண்டு மேனியெங்கும் ஊற்றி, உடலுக்கு சோப்பும், தலைக்குச் சீயக்காயும் போட்டுத் தேய்த்துக் குளிப்பாட்டுவாள். அவனை ஆற்றுப்படுத்தி, கரையேற்றி, வாய்க்கால் ஓரத்தில் அமர்ந்திருக்கும் பிள்ளையாரை வணங்கச் செய்து, நெற்றி நிறையத் திருநீறைப் பூசிவிட்டு வீட்டுக்கு அழைத்து வருவாள்.

​ஆனால், அன்று அப்படி விடிந்திருக்கக் கூடாது என்பதுதான் அவளின் மனக்குமுறலாக இப்போது வரை இருக்கிறது.

​வழக்கம் போலப் பீடி சுற்றுபவர்களோடு அமர்ந்து கதை பேசிக்கொண்டு இருந்தாள் மங்கலம். அருகில் அமர்ந்திருந்த மாரியப்பன், சட்டென்று தன் அரைடவுசரின் ஜிப்பை கழட்டி, அவனின் ஆண் உறுப்பைத் தடவத் தொடங்கினான். சுற்றியிருந்த பெண்கள் முகம் சுழித்தவாறு மங்கலத்தைப் பார்க்க, அவளோ பதறிப்போய், “ஏலே செத்த மூதி! என்ன பண்ணுறவன்?” என்றபடி அவனின் உடையைச் சரிசெய்ய முயன்றாள். அவனோ அவளைச் சரிசெய்ய விடாமல் அடம்பிடித்தான். ஒருவழியாக உடையைச் சரிசெய்து முடிக்கவும், அதுவரை பேசிக்கொண்டு இருந்தவர்கள் அதன் பிறகு அவசர அவசரமாகப் பீடி சுற்றத் தொடங்கினர்.

​மீண்டும் அவன் தனது ஜிப்பைக் கழற்றவும், இந்த முறை அருகில் இருந்த அனஞ்சி, “ஏலேய்! அவ இப்ப தானல போட்டுவிட்டா, நீறு மறுபடியும் ஏன்டா கழட்டுற?” என்று அதட்டினாள். ஆனால், அவன் எதையும் காதில் வாங்காமல், தன் உறுப்பை வெளியில் எடுத்து அதை நீவியபடி இருக்க, முகம் சுழித்தவாறு அங்கிருந்த பெண்கள் எழுந்து செல்லத் தொடங்கினர்.

​அப்போது ‘பளார்’ என்ற சத்தம் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தனர். மங்கலம் தான் மாரியப்பனின் கன்னத்தில் அடித்திருந்தாள். அடிவாங்கியும் அவனின் கையை அங்கிருந்து எடுக்காமல் இருக்க, கோபத்தின் உச்சியில் அவனின் தோளில் ஆவேசமாக அடிக்கத் தொடங்கினாள். சட்டென்று தன் பூதக் கரங்களால் மங்கலத்தைத் தள்ளிவிட்டவன், பதிலுக்குத் தன் தாயையே ஓங்கி அடிக்கத் தொடங்கினான். பீடித் தட்டைக் கீழே வைத்துவிட்டு ஓடிவந்த அனஞ்சி, தாயையும் மகனையும் கஷ்டப்பட்டுப் பிரித்துவிட்டாள். வழக்கத்திற்கு மாறான அவனின் இந்த மிருகத்தனமான செயலுக்கான உளவியலைப் புரிந்துகொள்ளும் அளவுக்குப் பீடி சுற்றும் அவளுக்கோ, மங்கலத்திற்கோ அறிவு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

​அதன் பிறகான நாட்களில் மங்கலம் பெண்கள் இருக்கும் இடத்திற்கு அவனை அழைத்துச் செல்வதைத் தவிர்த்தாள். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவனின் இந்த வேகம் அதிகரித்துக்கொண்டே வந்தது.

​”என்ன மங்கலம், ரெண்டு நாளா வெளில ஆளையே காணும்?” என்றபடி மங்கலத்தின் வீட்டுக்குள் வந்தாள் அனஞ்சி.

​”அத ஏங்கா கேக்குற… ரெண்டு நாளா மேலுக்கே சரியில்லை. எதையும் வாயில வைக்க முடியல. மசக்கைக் காரிக்கு வர்ற மாதிரி கொமட்டிக்கிட்டு வருது. உடம்பும் அசதியாவே இருக்கு” என்று கூறியபடியே பாயில் இருந்து எழுந்து அமர்ந்தாள் மங்கலம்.

​இருபது பேரும் பேசிக்கொண்டிருக்கையில், அனஞ்சியின் அருகில் வந்து அமர்ந்தான் மாரியப்பன். அடுத்த நொடி, யாரும் எதிர்பாராத விதமாக அனஞ்சியைக் கட்டிப்பிடித்து, தன் பலத்த உடலால் அவளை முழுவதுமாகத் தன்னுள் அணைத்தான். பருந்தின் கூர்மையான நகங்களுக்குள் அகப்பட்டக் கோழிக்குஞ்சைப் போல அவனுள் சிறைபட்டுப்போனாள். பயத்திலும் அருவருப்பிலும் அலறியபடி தன் பலத்தைத் திரட்டி அவனைத் தள்ளிவிட்டவள், மங்கலத்தின் வீட்டில் இருந்து விறுவிறு என்று ஓட்டமும் நடையுமாக வீடுவந்து சேர்ந்தாள். வீட்டு வாசலில் இருந்த தொட்டித் தண்ணீரை மொண்டு தலையில் ஊற்றியபடி, “பாவிப் பய! இப்படியா பண்ணுவான்? அவன் கைய கால ஒடச்சி அடுப்புல வைக்க…” என்று புலம்பியபடியே தலைமுழுகினாள்.

​வீட்டை விட்டுப் போகும் நேரத்தில் அனஞ்சி மங்கலத்தைப் பார்த்த அந்தப் பார்வையில் தெரிந்த அருவருப்பையும் அவமானத்தையும் மங்கலத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. விதியை நொந்தபடி தரையில் அமர்ந்தவளின் மூடிய விழிகளையும் தாண்டி கண்ணீர் ஆறாக வடிந்தது. தாயின் அழுகையைக் கண்டவன், ஏதும் அறியாமல் அவளின் கண்ணீரைத் துடைக்க முயல, “செத்துப்போயேம்லே! ஏம்லே இப்படி என் மானத்த வாங்குற? செத்துத் தொலையேன் மூதி!” என்று அவனை வெறி பிடித்தவள் போல அடிக்கத் தொடங்கினாள்.

​தாயின் கண்ணீருக்கும், தன்னை அடிப்பதற்கும் காரணம் தெரியாத அந்த இருபத்தி இரண்டு வயதுக் குழந்தை அழத் தொடங்கியது. அதைக் கண்ட பெத்த மனம் இளகியது. அவனை அணைத்தபடி மங்கலமும் அழ, அந்த ஓட்டு வீடெங்கும் மங்கலத்தின் கையறு நிலையே அழுகையாக எதிரொலித்தது.

​இரு தினங்களுக்குப் பின் சந்தையில் அனஞ்சியைக் கண்டாள் மங்கலம். வலியச் சென்று பேச முயன்றவளிடம், அனஞ்சி முகத்தைத் திருப்பிக் கொண்டு விலக முயன்றாள்.

​”என்ன அனஞ்சி… அன்னைக்கு புள்ள ஏதோ தெரியாம பண்ணிட்டான். அதுக்காக இப்படி முகத்தக் காட்டுனா எப்படி? உனக்குத் தெரியாதது ஒன்னுமில்லை. அவன் கெட்ட பய கிடையாது அனஞ்சி. ஏதோ பொல்லாத நேரம் இப்படி அவன பாடா படுத்துது…” என்று மகனுக்காக வாதாடியவளின் வலியை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது.

​”இதோ பாரு மங்கலம், சொல்லுறேனு கோவப்படாத. உம்மவன் போக்கு இப்ப சரியில்லை. வாய்க்காலுக்குப் போற வார பொம்பளைங்க பின்னாடியே நோட்டம் விட்டுட்டுத் திரிஞ்ச அவன் தாத்தன் புத்தி அப்படியே இருக்கு. உம் புருஷன் வகையறால ஆம்பளைங்க எவனும் ஒழுக்கம் இல்ல. உன் நல்ல நேரம், உம் புருஷன் மட்டும் தான் அதுல தப்பிப் பொறந்தவன். ஆனா உம் மவன் அப்படி இல்ல, அவனுக்கு அவன் தாத்தன் இரத்தம். அவன இப்படி கூட வச்சிருக்கிறது உனக்கும் நல்லது இல்லை, இந்த ஊருக்கும் நல்லது இல்லை. நீ அவன எங்கையாவது கொண்டு போய் சேர்த்துவிடு. நாளைக்கே நீ கண்ண மூடிட்டா இவன் நிலைமைய யோசிச்சுப் பாரு!” என்றுவிட்டு விறுவிறுவென நடந்து சென்றுவிட்டாள்.

​வீடு வந்த மங்கலத்தின் செவிகளில் அனஞ்சியின் வார்த்தை சாட்டையடியாக மீண்டும் மீண்டும் ஒலித்தது. “நாளைக்கு நமக்கு பின்னாடி இவனுக்குன்னு யாரு இருக்கா? இந்த உலகம் இவனை வாழவிடுமா… வாழவிடுறது என்ன, மொதல்ல மனுஷனா கூட பாக்காதே மிருகமாத்தான பார்க்கும்…” என்ற சிந்தனையில் உழன்றவளை, வீட்டின் அருகில் இருந்த தங்க அரளிமரத்தில் அமர்ந்தபடி கரைந்து கொண்டிருந்த காகம் கலைத்தது.

​எதையோ செய்ய முடிவெடுத்தவளாகக் கண்களைத் துடைத்தாள்.

​பக்கத்துத் தெருவில் இருக்கும் சலீம் பாய் கடைக்குச் சென்று, மாரியப்பனுக்குப் பிடித்த கோழிக்கறி வாங்கிவந்து சமைத்தாள். கொதித்து எழும்பிய குழம்பில், தான் அரைத்து வைத்திருந்த அரளிவிதை விழுதை மொத்தமாகக் கொட்டிக் கலக்கினாள். கரண்டியால் ஒரு கிண்டு கிண்டி, அடுப்பை அணைத்து மூடி வைத்தாள்.

​உறங்கிக் கொண்டிருந்த மாரியப்பனைத் தட்டி எழுப்பினாள். தட்டில் சோறிட்டு, அதன் மேல் மணக்க மணக்கக் கறிக்குழம்பை ஊற்றி அவன் அருகில் வந்து அமர்ந்தாள். சோற்றையும் குழம்பையும் பிசைந்தவளின் கரங்கள் நடுங்கத் தொடங்கின. நடுங்கிய கரங்களில் இருந்து சிதறி விழுந்த சோற்றுப் பருக்கைகளை அள்ளி வாய்க்குள் அதக்கியபடி, தன் தாயைப் பார்த்துப் பல்லக் காட்டிச் சிரித்தான் மாரியப்பன்.

​நீண்டதொரு பெருமூச்சை உள்ளிழுத்தபடி, முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள். ஒரு பெரிய கவளத்தை அள்ளி அவனுக்கு ஊட்டினாள். மறுகவளத்தைத் தன் வாய்க்குள் இட்டவளின் மனமெங்கும், இத்தனை ஆண்டுகளாகத் தான் அவனுக்காகப் பட்ட ரணங்கள் அனைத்தும் நிழலாடி மறைந்தன.

​மறுநாள் விடியலில் தங்க அரளிகள் மாரியப்பனின் வருகைக்காகக் காத்திருந்தது.

000

 ரா.சண்முகவள்ளி

கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன்.

இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம்,  வானவில், நான் போன்ற  மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *