ரா.சண்முகவள்ளி      

​ நம்ம வாழ்க்கையில எத்தனை விதமான வாசங்கள், இல்ல?

 நுரைபொங்கும் டிகிரிகாப்பியின் வாசம், பொக்கைவாயில் ஒட்டுமொத்த சிரிப்பையும் அடக்கியபடி தவழும் குழந்தையின் மேனியிலிருந்து வரும் பால்வாசம், முதல் மழையில் தன்னைத் தொலைத்த வண்டல்மண்ணிலிருந்து வரும் மண்வாசம், வேலை முடிந்து நடுச்சாமம் வீடு திரும்பும் அப்பா வாங்கிவந்து ஊட்டும் பரோட்டாவின் வாசம் என நம்மை ஆட்கொள்ளும் வாசங்கள் ஏராளம். இப்படி நம் உணர்வோடும் உயிரோடும் கலந்துபோன சில வாசங்களுக்கு அடையாளம் கிடையாது. ஆனால் வாசங்கள் பலருக்கு அடையாளமான கதை உண்டு. அந்தக் கதைகளின் வரிசையில் நிச்சயம் மூக்கையாவுக்கும் இடம் உண்டு. ஏனெனில் அவர் வாசங்களின் மன்னர்.

​பொழுது விடிந்தும் விடியாமல் அந்த ஊரையே ஆக்கிரமிப்பு செய்திருந்த செய்தி இதுதான் — மூக்கையா இறந்து போனார் என்பதுதான். ஊரே சோகத்தில் மூழ்கி இருந்தது. அனைவரும் மூக்கையா வீட்டுக்கு படையெடுக்கத் தொடங்கினார்கள்.

​அந்த ஊரிலேயே பெரிய வீடு மூக்கையாவின் வீடுதான். வீட்டின் முன்புறம் இருக்கும் பெரிய இரும்புக் கதவைத் திறந்து உள்ளே வந்தாள் வெள்ளச்சி. ஆங்காங்கே ஆண்கள் கூடி நின்றிருந்தனர். முற்றத்தின் நடுவில் கிடந்த நார்க் கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தார் மூக்கையா.

 அவரின் தலைமாட்டில் நிறைநாழியின் வாய் கொள்ளாத அளவுக்கு நெல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இரண்டு வாழைப்பழத்தையும் வெற்றிலை சீவலையும் வைத்து விளக்கையும் ஏற்றிவைத்திருந்தனர். ரோஜா மணம் வீசும் ஊதுபத்தியின் வாசம் வீட்டை முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்திருந்தது.

​நல்லவேளையாக மூக்கையா உயிருடன் இல்லை. ஒருவேளை அவர் மட்டும் உயிரோடு வர நேர்ந்தால், எலி மூத்திரம் பட்டுப் பிடித்த பச்சைக்கரைபோகாத நாழிக்கும், எண்ணெய் ஒழுகிட எரிந்து கொண்டிருக்கும் விளக்கிற்கும் நிச்சயம் வசவு கிடைத்திருக்கும்.

​இப்போது அதுகுறித்த பயம் தேவையில்லை; ஏனெனில் அவர் வரப்போவதில்லை.

​கட்டிலைச் சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் முந்தானையால் வாயைப் பொத்தியபடி மூக்கை உறிஞ்சிக் கொண்டு இருந்தனர்.

​”ஐய்யா, என்ராசாஆஆ என்னைய விட்டு போயிட்டீகளே!” என்று ஒப்பாரி வைத்தபடி வந்த வெள்ளச்சியின் வருகையால் புதிதாக உயிர்பெற்றது போல சுற்றியிருந்த அனைத்து பெண்களும் மீண்டும் அழத் தொடங்கினார்கள்.

​வெள்ளச்சியும், மூக்கையாவும் ஒரு பருவத்து ஆட்கள் தான். மூக்கையாவுக்கு ஒன்றிரண்டு வயது கூட இருக்கலாம் அவ்வளவுதான். ஒரு வகைக்கு மூக்கையா வெள்ளச்சிக்கு அத்தை மகன் முறை வரும். அதனால் உரிமையோடு மூக்கையாவின் மாரில் படுத்து அழத் தொடங்கினாள்.

​சிறிது நேரத்தில் அனைவரின் அழுகையும் மட்டுப்பட்டது. மீண்டும் முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு மூக்கை உறிஞ்சியபடி இருந்தனர்.

பொதுவாக இழவு வீட்டில் துக்கம் அனுசரிக்க ஆட்கள் வரும்போது அழத் தொடங்குவதும், பிறகு அழுகை மட்டுப்படுவதும் இயல்பான ஒன்று. பிரிந்த ஒரு உயிர்க்காக தொடர்ந்து அழுது இருக்கும் உயிரை இழக்க யார் தான் விரும்புவார் சொல்லுங்கள்?.

​கேந்தியும், ரோஜாவும் கலந்த மாலையோடு வந்த மீசைக்கார பெருமாளின் வருகையில் மீண்டும் அழுகுரலும் ஒப்பாரியும் கேட்கத் தொடங்கியது. மாலையை மூக்கையாவின் உடலுக்கு அணிவித்து அவரின் பாதங்களைத் தொட்டு வணங்கியவர் சில அடி தூரம் சென்று நின்று கொண்டார்.

​”ஓடி ஓடி உழைச்ச மனுஷன், யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காதவரு,” என்று மீசைக்காரப் பெருமாள் கூற,

​”இனி இப்படி ஒரு மனுஷனைப் பாக்க முடியுமா? யாரையும் அதிர்ந்து ஒரு வார்த்தை பேச மாட்டாரு,” என்றபடி இடுப்பில் இருந்த பூ மார்க் பீடியைப் பற்றவைத்தார் பரமசிவம்.

​மூக்கையாவின் இரு மகன்களும் அவருக்கு இறுதிச்சடங்கிற்கான வேலையில் தீவிரமாக இருந்தனர். பெண் கொடுத்தவர்களும், பெண் எடுத்த உறவுகளும் அரிசிப்பை,பலசரக்கு சாமான் ரோஜாப்பூ மாலை, கோடித்துணி சகிதமாக வந்து தங்களின் கட்டுப்பட்டி கடமையைச் செவ்வனே செய்தனர்.

​மூக்கையா மேலத்தெருவில் வந்தால் கீழத்தெரு வரை வீசும் அவரின் வாசம். தினமும் குளித்து முடித்ததும் வீட்டின் ஆளுயரக் கண்ணாடி முன் நின்று அவர் கிளம்புவது என்பது திருவிழாக் காலங்களில் ஊர்வலம் வரும் சப்பரத்திற்குச் செய்யப்படும் அலங்காரத்தைப் போல நெடுநேரம் எடுக்கும். இடுப்பில் வெள்ளை நிற வேஷ்டியுடன் முன்டா பனியனை அணிந்தபடி ஆளுயரக் கண்ணாடி முன் நிற்பவர், கியூட்டிக்குரா பவுடரைக் கைகளில் கொட்டி இரு அக்குள்களிலும் பூசிக்கொள்வார். பின்னங்கழுத்து, மார்பு என அனைத்து இடங்களிலும் பரவலாகப் பவுடரைப் பூசியபின் தான் மேல் சட்டையையே அணிவார். கட்டம் போட்ட கர்ச்சிப் ஒன்றில் பவுடரைக் கொட்டி அதனை நீளவாக்கில் மடித்து அவரின் சட்டை காலரின் உள்பக்கமாக வைத்துக்கொள்வார். இதெல்லாம் போதாது என்று சந்தனமணம் கமழும் வாசனைத் திரவியத்தை உடலில் அடித்துக்கொள்வார். அவரின் ஒப்பனைகள் முடியும் வரை அந்த இடமே நறுமணத்தில் சுற்றியிருப்பவரை மூச்சிறைக்க வைத்துவிடும். எப்போதும் சவரம் செய்த முகமும், வெள்ளை வேஷ்டி, வெள்ளைச் சட்டை எனப் பார்க்கவே தோரணையாக வலம் வருபவரைக் காணும் அனைவருக்கும் ஒருவித ஈர்ப்பு கலந்த மரியாதை வரும்.

​இன்று அவரின் உடலில் மொய்த்துக் கொண்டிருக்கும் ஈக்களைக் கூட துரத்தும் உணர்வற்றுக் கிடந்தார் அந்த முற்றத்தில்.

​இதுவரைக் கியூட்டிகுராவின் வாசனையைத் தாங்கிவந்த அவரின் தேகம் முதல்முறையாகப் பிரேதத்தின் வாசனையைச் சுமக்கத் தொடங்கியது. அந்த வாசனை மற்றவர்களுக்கு நாற்றமாக மாறத் தொடங்கியதும் அதனைக்கட்டுக்குள் கொண்டுவர ரோஜாவாசனைக் கொண்ட அகர்பத்திகள் ஒரு கொத்தாக ஏற்றி வைக்கப்பட்டது. எனினும் அவ்வப்போது வீசும் காற்றில் அந்தப் பிரேதவாசம் அனைவரின் நாசியையும் சற்று உரசித்தான் பார்த்தது.

​ஒருமுறை கொல்லையில் மாவாட்டிக் கொண்டிருந்த நல்லம்மாளிடம் இரகசியம் கேட்பது போல பேசத் தொடங்கினாள் வெள்ளச்சி.

​”எக்கா உன்கிட்ட ஒன்னு கேப்பேன், கோச்சுக்கக் கூடாது.”

​”என்னடி பீடிகையெல்லாம் பலமா இருக்கு? அப்படி என்னத்த கேக்கப்போறவ?”

​”அது வந்து…” என்ற அவளின் இழுவையைக் கண்டு சிரித்த நல்லம்மாள், “அதான் கேக்கனும்னு முடிவு பண்ணிட்டதான, அப்புறம் கேட்டுத் தொலைய வேண்டியதுதான, என்னத்துக்கு இப்படி தயங்குறவ?”.

​”அதும் சரிதான், உன்கிட்ட என்ன தயக்கம்? எக்கா, எம் மாமன் போடுற பவுடரு டப்பா ஏதாச்சும் பழசு இருந்தா கொடேன்,” என்றாள்.

​”என்னடி ஆட்டக் கடிச்சு மாட்டக் கடிச்சு கடைசில மனுஷனைக் கடிச்ச கதையா என் அடிமடியில கைய வைக்கிறவ?”.

​”அய்யோ நீ நினைக்கிற மாதிரிலாம் இல்லக்கா.”

​”அப்புறம் எதுக்குடி உனக்கு அது?”.

​”அது வந்து…” என்று தலையைச் சொரிந்தவளிடம், “இந்தா பாரு, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பேசிப் பழகு. இப்ப அதை எதுக்கு நீ கேக்குறவ?”.

​”இல்லக்கா, எம்புருஷன் இரவைக்கு கிட்ட வந்தா நாத்தம் தாங்கலக்கா. எப்ப பாரு அந்த பான்பராக்கை போட்டுப் போட்டு வாயத் திறந்தாலே ஒரே நாத்தம் தான் வருது. சரி மனுஷன் குளிச்சாவது தொலையுறானா… அதுவும் கிடையாதுக்கா. ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்கான்னு எண்ணி எண்ணி குளிக்கிறான்.

சந்தையில மூட்டை தூக்கி வந்த வேர்வை வாசம், அழுகிப்போன தக்காளி வாசமும் தான் அவன் கிட்ட வந்தா வருதுக்கா. அதுவும் முட்டைக்கோஸ் மூட்டையை தூக்கிட்டாம்னா அன்னைக்கு வரும் பாரு ஒரு நாத்தம் குடலைப் புடுங்குற மாதிரி! வீட்டுக்கு வந்து கைகால் அலம்புறை மாதிரி அவன் குளிக்கிற காக்கா குளியலுக்கு எந்த நாத்தமும் போகமாட்டுக்கா. அதோட இராத்திரி கிட்ட வந்தா குமட்டிக்கிட்டு வருது. அதான் நீ கொஞ்சம் பவுடர கொடுத்தா போட்டுக்கச் சொல்லுவேன்.”

​வெள்ளச்சியின் பேச்சைக் கேட்ட நல்லம்மாளுக்கு சிரிப்பு தாங்கவில்லை. அவளின் சிரிப்பைக் கண்ட வெள்ளச்சியோ கோபமாக, “ஏன்கா நான் சொல்லுறது உனக்கு சிரிப்பாணியா இருக்கோ இப்படி சிரிக்க?”.

​”அடியேய்! சிரிக்காம என்னடி பண்ண முடியும்? ஏன்டி, உழைச்சுக் களைச்சு வீட்டுக்கு வர்ற ஆம்பளைங்க மேல வேர்வை வாடை வர்றது சகஜம்தானே, அதுக்காக இப்படியா அலுத்துப்ப?”.

​”ம்ம்… நீ ஏன் சொல்ல மாட்ட? என் மாமனும் தான் ரைஸ் மில்லுக்கு போகுது, பொழுதன்னைக்கும் அங்கயேதான் கிடக்கு. ஆனா என்னைக்காவது அது மேல ஒரு வேர்வை வாடை வந்துருக்குமா?

 எம் மாமன் மேலத்தெருல நடந்தா கீழத்தெரு வரை மணக்கும்! உங்க தம்பி அப்படியா?”.

​”அடியேய்! இப்படி ஒருத்தர்கூட ஒருத்தரை ஒத்துப்பேசுறது என்ன பழக்கம்டி?”.

​”என்ன பண்ணச் சொல்லுறக்கா? நானும் இந்த மனுஷன்கிட்ட எத்தனையோ தடவை சொல்லிட்டேன், சுத்தபத்தமா இருக்கமாட்டுக்கானே,” என்று புலம்பியவள், ” என் மாமனாட்டம் இருக்காட்டாலும் அந்தந்த நேரத்துக்கு தக்கனவாவது மனுஷன் இருக்க வேண்டாமா?” என்றபடியே, “வீட்டுல சோலி கிடக்கு, நீ எதுவும் தப்பா நினைக்காம பழசு ஏதும் கிடந்தா எடுத்து வையிக்கா, நான் பெறவு வந்து வாங்கிக்கிடுறேன்,” என்றபடியே அங்கிருந்து அகன்றாள்.

​வெள்ளச்சியின் வார்த்தைகள் மட்டும் ரீங்காரமிடும் வண்டுகளாக அவளின் காதைக் குடைந்து கொண்டே இருந்தது. கல்யாணம் ஆன புதிதில் இவரின் இந்த நறுமணக் குளியல் ரசிக்கும்படி இருந்தாலும் போகப் போக ஒருவித ஒவ்வாமையை அவளுக்கு ஏற்படுத்தியது. கூடுதலாக ஒற்றைத் தலைவலியையும் பரிசளித்தது. அதனால் அவர் ஒப்பனைகள் செய்யும் நேரம் மட்டும் அவர்களின் அறைக்குள் அவள் விஜயம் செய்யவே மாட்டாள்.

​”ஏங்க, இம்புட்டு தூரம் இந்த பவுடரெல்லாம் போடணுமா? இந்த வாடை குமட்டிக்கிட்டு வருது, கொஞ்சம் குறைச்சா தான் என்ன?”

​நல்லம்மாளின் அத்தனை புலம்பல்களுக்கும் மூக்கையாவின் சிரிப்பு ஒன்றே பதிலாக வரும். வழமைபோல அவர் சிரித்து வைக்க,

​”அதான, நான் சொல்லி என்னத்த கேட்டுட்டீங்க… இத மட்டும் கேட்கவா போறீங்க… போங்க, உங்களால ஸ்கூல்ல பயலுக எல்லாம் நம்ம புள்ளைங்களை பேரைச் சொல்லி கூப்பிடாம ‘கியூட்டிகுரா, கியூட்டிகுரா’னு கேலி பேசுதுங்க,” என்றபடியே மூக்கையாவுக்கான உணவினைப் பரிமாறத் தொடங்கினாள்.

இரவினில் கூடிக்கூலவும் நேரத்தில் இருவர் மேனியிலிருந்து வரும் வேர்வைகள் கலந்துவரும் வாசத்தையோ, மூக்கையாவின் வேர்லை வாசத்தையோ நல்லம்மாள் நுகர்ந்ததே இல்லை. அவள் ஏங்கி தவித்த அந்த வாசம் அவளின் இறப்புவரை கிடைக்காத ஒன்றானது.

​மூக்கையாவின் ரம்மியமான நறுமணம் என்பது அவரின் குடும்பத்தைப் பொறுத்தவரை உண்ண மறுக்கும் குழந்தைக்கு வலுக்கட்டாயமாக ஊட்டப்படும் உணவைப் போல குமட்டிக்கொண்டு வந்து. அப்பாவின் வாசம் என்ன என்று அறிந்திடாத பிள்ளைகளாக, உழைத்து களைத்துவரும் கணவனின் வாசம் அறிந்திராத மனைவியாக தான் அவர்கள் இருந்தனர். மூக்கையாவை பொறுத்தவரை அது அவருக்கு அத்தனை முக்கியமான ஒன்றாக இருந்தது.

​மூக்கையாவிற்கு ஆறு வயது இருக்கையில் அவரின் அப்பா பக்கவாதத்தில் படுத்தபடுக்கையானார். மனநலம் குன்றிய மூக்கையாவின் ஆச்சி, அவரின் அப்பா என நோயாளிகள் சூழ்ந்த வீட்டில் வரும் மலமூத்திர வாடையும், மருந்துகளின் வாடையும் சூழ்ந்திருக்க, அதன் தாக்கத்தைத் தணித்திட எப்போதும் தரைகளை டெட்டால் ஊற்றித் துடைப்பதும், துணிகளுக்கு டெட்டால் ஊற்றுவதும் அவரின் அம்மாவின் வாடிக்கையானது.

​எப்போதும் வீட்டில் கமழும் இந்த வாசங்களுக்கு நடுவே மூச்சடைத்துப் போன மூக்கையாவின் நாசிக்கு ஆறுதலாக வந்து போகும் செல்வி அக்காவின் வாசம்.

செல்வியக்காவை இப்போது நினைத்தாலும் மூக்கையாவின் நினைவெங்கும் மணக்கும் கியூட்டிகுரா. மூக்கையாவின் அப்பாவிற்கு இருக்கும் உடல் உபாதைகள் போதாதென்று உபரியாக வந்து சேர்ந்த சர்க்கரை வியாதிக்கு இன்சுலின் ஊசி போட வரும் செல்வி அக்காவின் மீதிருந்து வரும் கியூட்டிகுரா பவுடர் வாசம் அவருக்கு புத்துணர்ச்சியளித்தது. தினமும் அவரின் வருகைக்காகக் காத்துக் கிடப்பார் மூக்கையா. அவர் ஊசி போட்டுவிட்டுச் செல்லும் வரை அவரின் பின்னாலேயே திரிவார்.

​”ஏம்மா, நீயும் செல்வி அக்கா மாதிரி நல்ல பவுடர்லாம் போட்டு இருக்கலாம்லா?”.

​”ஆமாலே! நானு உங்க செல்வி அக்காவாட்டம் பவுடர் போட்டு கமகமனு சுத்துனா உங்க அப்பனையும், ஆச்சியையும் யாரு பாக்குறதாம்? இவங்க ரெண்டு பேருக்கும் பீ ,மூத்திரம் அள்ளி, குளிப்பாட்டி மணப்படுத்தி அவங்களுக்கு சேவகம் பண்ணுறதுக்கே நேரம் பத்தல, இதுல நான் சீவி சிங்காரிக்கிறது எங்க நேரம் இருக்கு?” என்று அலுத்துக்கொண்ட அம்மாவின் பேச்சிலும் நியாயம் இல்லாமல் இல்லை.

​அள்ளி முடிந்த கொண்டையும், சுருங்கிப்போன சேலையைத் கரண்டைக்காலுக்கு மேல் தூக்கி சொருகியபடி, வியர்வையில் கலந்துபோன டெட்டால் வாசத்தோடு எப்போதும் கடுகடுவென இருக்கும் அம்மாவை ஒருமுறையேனும் செல்வி அக்கா போல வகிடெடுத்துச் சீவிய ஒற்றைப் பின்னல், விசிறி போல மடிந்து கணுக்கால் வரை மறைக்கும் சேலை, அனைத்திற்கும் மேலாக அவர் வெளிவாசல் கதவைத் திறப்பதை நடுகூடத்திற்கு அறிவித்திடும் கியூட்டிகுரா பவுடர் வாசத்தோடு ஒரு முறையேனும் தனது அம்மா இருந்திட வேண்டும் என்ற அவரின் ஆசை நிராசையாகப் போனது.

அவரின் இறுதிமூச்சு வரை கணவனையும், மாமியாரையும் கவனிப்பதில் தன்னைத் தொலைத்தவர், அவர்களின் இறப்புக்குப் பின் படுக்கையில் விழுந்தார். அவரின் மரணம் வரை மூக்கையா மீது டெட்டால் வாசம் வீசத் தொடங்கியது.

​மூக்கையாவினுடைய அம்மாவின் மரணத்திற்குப் பின்னர் அவரின் வீட்டில் மருத்துவத் தேவைக்குக் கூட டெட்டாலைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து வந்தார்.

​தன் பால்யத்தை நினைக்கையிலெல்லாம் ஒவ்வாமையை ஏற்படுத்திய அந்த வாசங்களை விரட்டியடிக்கப் பிற்பாடு அவர் கையில் எடுத்த ஆயுதம்தான் கியூட்டிகுரா பவுடரும், வாசனைத் திரவியங்களும்.

​ஊர் வழக்கப்படி நீர்மாலை சென்றுவந்த மகன்கள் கொண்டுவந்த தாமிரபரணி தண்ணீரில் மூக்கையாவைக் குளிப்பாட்டி, அவர் விருப்பமான ஜவ்வாது தெளித்து, கியூட்டிகுரா பவுடரை அப்பி மூக்கையாவின் பிரேதத்தைத் தூக்க ஆயத்தமானார்கள்.

​வெள்ளச்சியும், சுற்றியிருந்த மற்ற பெண்களும் மூக்கையாவைச் சூழ்ந்துகொண்டு அழ,

​குடியானவன் இசக்கி தான், “ஏம்மா, இப்படியே அழுதுட்டு இருந்தா எப்படி? அடுத்து ஆகவேண்டியதைப் பாக்கவேண்டாமா?” என்று அனைவரையும் விலக்கிவிட்டான்.

​பச்சை ஓலையில் தலைப்பின்னல் போல வேயப்பட்ட பாடைக்குள் அவரை மாற்றினர். மூத்த மகன் கொள்ளிக்குடம் தூக்கி முன்னே நடக்க, உறவுகளின் அண்ணன் தம்பி முறை வந்து பாடையைத் தூக்கினர். அவர்கள் நடக்கத் தொடங்கிய சில நொடிகளிலேயே மழை பெய்யத் தொடங்கியது.

​ஊரின் முச்சந்தியில் (மூன்று வழிப்பாதை) வழிகாட்டி பாண்டம் சடங்கிற்காகப் பாடையை இறக்கினர். மூக்கையாவின் மூத்த மகன் தான் ஏந்தி வந்த கொள்ளிச் சட்டியில் (பானையில்) தானியங்கள், காசு, நீர் வைத்துச் சில வழிபாட்டு முறைகளைச் செய்து, அந்தப் பானையை அங்கேயே உடைத்த நொடி பெரும் ஆரவாரத்தோடு வந்து விழுந்தது ஒரு இடி! அனைவரும் பயந்து ஒதுங்கினர். நேரம் கடந்தது; மழை மட்டும் விடுவதாக இல்லை. மின்னலும் இடியும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக்கொண்டு வர, மழை எதற்கும் கருணை காட்டாது வெள்ளமெனப் பொழிந்தது.

​முச்சந்தியில் இருந்த பால்பண்ணையில் இருந்து கொட்டிய மழையில் அடித்துக்கொண்டு வந்தது மாட்டுச் சாணமும், மூத்திரமும் கலந்து வந்த மழைநீர். கரைபுரண்ட வெள்ளமாய் அந்த நீர் மூக்கையாவின் பிரேதத்தை நனைத்தது. முச்சந்தி செம்மண்ணும் மழைநீரில் குழப்பிய சந்தனமாய் அவரின் வெள்ளை வேஷ்டியில் அப்பிக்கொண்டது.

​இதுவரை அவர் மேனியில் தொற்றிக்கொண்டிருந்த கியூட்டிகுரா பவுடரும், ஜவ்வாதும் கரைந்து ஓடிட… மூத்திரவாடை அவரைச் சூழ்ந்துகொள்ள, கரண்டைக்கு மேலே ஏறிய காவி நிறம் ஊறிப்போன வேஷ்டியுமாய் பாடையில் படுத்திருந்தார்.

​கடந்த இரண்டு வருடமாக அவர் படுத்த படுக்கையாக இருக்கையில் கூட வீட்டின் கூடத்தில் தனக்கான ஓர் கட்டிலில் படுத்துக்கொண்டு இருந்தவரையில் கூட இப்படி இல்லை. உயிர் ஊசலாடிக் கொண்டு படுக்கையிலேயே அவர் இயற்கை உபாதைகளைக் கழிக்கையில் கூட அப்பாவாகத் தெரிந்தார். ஈக்கள் மொய்க்காமல், எறும்புகள் அண்டாமல் பாதுகாக்கப்பட்டார். அவருக்கு விருப்பமான கியூட்டிகுரா பவுடர் எப்போதும் தனது நறுமணத்தால் அவரை ஆரத்தழுவியபடியே இருந்தது. அவரை அவராக எடுத்துக்கொள்ள விருப்பட்ட இயற்கை ஒரு மழையின் மூலம் அவரின் மொத்த வேஷத்தையும் கலைத்துபோட்டது. உயிரிழந்த உடலுக்கு மதிப்பு என்பது அம்புட்டுதானே.

​”அம்புட்டுத்தான்! மழை விட்டுடுச்சு, வாங்க வந்து தூக்குங்கப்பா,” என்றபடி முன்னே வந்தான் குடியானவன் இசக்கி.

000

ரா.சண்முகவள்ளி

கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன்.

இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம்,  வானவில், நான் போன்ற  மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *