–அரவிந்தன் பெருமாள்
1.
மார்கழி மாதத்தின் இருள் விலகாத அதிகாலையில் பெய்கிற பனித் தூறல்களுக்கு இடையே இருவரும் நடந்து கொண்டிருந்த பொழுது அந்தச் சாலையில் இருபுறமும் வளர்ந்திருந்த புங்கை, தூங்குமூஞ்சி, வாத நாராயணன் மரங்கள் ஒன்றுவிட்டு ஒன்றாக நின்ற வரிசையினுடே பனி தவழ்வதைக் கண்டார்கள். விட்டலாச்சார்யாவின் படங்களில் வரும் பிசாசின் பல்வேறு வடிவங்களை வெள்ளையாய் நினைவுறுத்தியவாறு பனியானது நகர்ந்து கொண்டிருந்தது.
மலைப்பூக்கள் பூத்துக் குலுங்கும் ரம்மியமான மலையின் சூழலை, இந்தப் பெரு நகரத்திற்குள்ளே அமைந்துள்ள இப்பல்கலைக் கழகத்தில், இதுபோன்ற அதிகாலைப் பனியும் அடர்ந்த மரங்களும் பூச்செடிகளும் உள்ளடங்கிய சூழலே கொண்டுவரமுடியும்.
மரங்களின் கிளைகளுக்கு இடையே தவழ்ந்து வந்த பனி அவர்கள் ஆடைகளின் மீதும்,கையுறையற்ற கைகளின் விரல்களிலும் முகங்களிலும் படிந்தது. அவன் நீல நிற லோயரும் வெள்ளை டீ ஷர்ட்டும்,அவள் கறுப்பு நிறத்தில் லோயரும் மெரூன் நிற நெக் டீ ஷர்ட்டும் அணிந்திருந்தனர். அவளது கால்கள் பின்னி பின்னி நடந்தன. அவனது கால்களோ அதற்கு எதிர்மாறாக அகன்று அகன்று நடந்தன. அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் நடந்து செல்லும் வழியோர பூச்செடிகளின் இலைகளைத் தொட்டு இலைகளில் இருந்த பனித்திவலைகள் சிதறி அவர்களின் கைகளில் சில்லிட்டன. இதனால் இருவரும் கைகளை வீசி நடப்பதற்குப் பதிலாகத் தம் இரு கைகளையும் தத்தம் மார்புக்கு குறுக்கே மிருதுவாகக் கட்டிக்கொண்டபடி நடந்தார்கள்.
அவள் தான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.
“நாம் பழகறத உன்னோட ஃபிரண்ட்ஸ் என்னன்னு நினைக்கிறாங்க?
“யாரெல்லாம் என்னவெல்லாம் நினைக்கிறாங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா, திருநாவுக்கரசு மட்டும் தினமும் ‘அவங்களோட மாலை நேரத்தில் விடுதியில் சென்று பார்த்துவிட்டு வர்ற, அதேபோல வாக்கிங் போறோம்னு அதிகாலையிலேயே போயிடற, என்னதான்டா உங்க ஃபிரண்ட்ஷிப்னு அடிக்கடி கேட்டிருக்கிறான்”
“அதற்கு நீ என்ன சொன்ன?’
“நாங்க நல்ல பிரண்ட்ஸ்தான்டா” னு சொன்னேன்
“உங்கள் நண்பர்கள், தோழிகள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியுமா?
“நான் ஒரு இன்ட்ரோவர்ட். யார்கிட்டயும் பர்சனலா எதையும் ஷேர் பண்ணிக்கிறது இல்ல,சோ ,நோபடி ஆஸ்க்ட் மீ அபௌட் அஸ்”
இவ்வாறு அவள் சொல்லும் பொழுது இருள் விலக ஆரம்பித்திருந்தது. சூரியன் இன்னும் உதயமாகவில்லை.கிழக்கில் உதயகாலத்தின் செந்நிற தீற்றல்கள் அடிவானத்தில் தெரிய ஆரம்பித்தன. அவர்கள் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தின் கேட்டைக் கடந்திருந்தார்கள். பசும் புல்வெளிகளில் எக்சர்சைஸ் செய்து கொண்டிருந்தவர்களில் அத்லெடிக் மாணவன் ஒருவன் இவர்கள் கடந்து போவதைப் பார்த்துக் கையசைத்தான். பதிலுக்கு இவர்களும் கையசைத்தனர்.
“சரி, மற்றவர்கள் எப்படி நினைக்கிறாங்கன்னு நமக்கு கவலை வேண்டாம். ஆனால் கடந்த ஒரு வருட காலமாக நாம் பழகறோம். நம்மை நாம் எவ்வாறு நினைத்துக் கொள்கிறோம். நமக்கிடையிலான உறவு என்ன என்பதை நாம் வரையறுக்க வேண்டாமா? நீங்களே சொல்லுங்களேன்?’
ஒரே துறையில் அவள் அவனைவிட இரண்டு வயது மூத்தவளென்பதால் அவளை அவன் ‘நீங்கள்’ என அழைப்பது வழக்கம் .
அவள் தொடர்ந்தாள். “நீ ஓர் ஆண் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் கிடையாது. என்னைப் போலவே இருக்கக்கூடிய இன்னொரு ஜீவன் தான் நீ. அதுதான் உன்னை என்னிடம் நெருங்க வைத்திருக்கிறது. என்னைப் புரிந்து கொள்கிற ஒரு “சிஸ்டம்” ஆகத்தான் உன்னை நான் பார்க்கிறேன். அந்த சிஸ்டத்துக்குள்ளே ஒரு சமநிலை இருக்குன்னு நான் நம்புறேன். அந்த Equilibrium ஐ ஒரு சந்தோஷமான அனுபவமாகவும் பார்க்கிறேன். அந்தச் சமநிலை அனுபவப் பகிர்வுகள் நமக்குள்ள இருக்கிறதுனால தான் இந்த ஒரு வருடத்துக்கும் மேல நாம் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்”
“ஆனால் ஒன்று, வேறு எந்த நினைவை விடவும் உன்னைப் பற்றிய நினைவு ஒரு நாளில் அதிக நேரங்களில் இருந்து விடுவது உண்டு. அதைத் தவிர்க்கவே முடிவதில்லை. நாம் பேசிக் கொண்ட விஷயங்கள் நாம் பகிர்ந்து கொண்ட பால்ய அனுபவங்கள், பால்யத்தில் ஒருவருக்கொருவர் நிகழ்ந்த கசப்புகள், அவற்றிலிருந்து நாம் மீண்டு எழுந்த கதைகள் இப்படியெல்லாம் பகிர்வதற்கு ஓர் உறவு இருக்கிறது என்கிற நினைப்பே மகிழ்ச்சி அளிக்கக் கூடிய உறவாகத்தான், ஒரு கம்ஃபோர்ட் சிஸ்டமாகத்தான் நீ எனக்கு இருக்கிறாய்.”
“சிஸ்டமா? நான் என்ன கம்ப்யூட்டரா இல்ல ரோபோவா?” சிரித்துக்கொண்டான்.
‘உனது வெகுளியான பேச்சு, வெளிப்படையான நடத்தை, கண்களை நேருக்கு நேராகச் சந்தித்துப் பேசும் தைரியமான குணம் ஆகியவை எனது தந்தையை நினைவுபடுத்துபவை. அது கூட காரணமாக இருக்கலாம் உன்னுடனான எனது நெருங்கிய நட்புக்கு.சரி, நீ என்ன நினைக்கிறாய் சொல் பார்ப்போம்’
‘நான் என்ன நினைக்கிறது. அன்னைக்கு இண்டஸ்ட்ரியல் விசிட் போனப்போ எல்லாரும் பஸ்ல டான்ஸ் ஆடிட்டு ஜாலியா என்ஜாய் பண்ணிக்கிட்டே வந்தாங்க, நானும் தான் டான்ஸ் ஆடினேன். ஆனால் ஒருத்தவங்க மட்டும் ராபின் கூக்கின் “கோமா” நாவலைப் பிரித்து வைத்துக்கொண்டு படிச்சிட்டே வந்தாங்க. அவங்கள பார்த்த உடனே என்னடா இவங்க வித்தியாசமா இருக்காங்களேன்னு நெனைச்சுதான் உங்ககிட்ட வந்து புக்கை மூடிட்டு வந்து டான்ஸ் ஆடுங்கன்னு நான் பாட்டுக்கு பேசிட்டேன். நீங்க முறைச்சீங்களே ஒரு முறை. அதை இன்னிக்கு வரைக்கும் மறக்க முடியாது. அன்னைக்கு எப்படி இருந்திங்களோ அப்படியே தான் இன்னைக்கு வரைக்கும் இருக்கீங்க. இதுல நான் என்னன்னு உங்களோட உறவை நினைக்கிறது? ஒரு கைடா இருக்கீங்க சில நேரங்கள்ல ஒண்ணுமே புரியாத தத்துவங்களா பேசுற ஒரு ஃபிலாசஃபரா இருக்கீங்க. ஆனா ஃபாதர் எல்லாம் கிடையாது.” சிரித்துக்கொண்டான்
இப்பொழுது மலர் இதழ் பிரியாமல் ஒரு புன்னகை புரிந்தாள். அந்தப் புன்னகை அவள் சதைப்பற்றான மேல் மற்றும் கீழ் உதடுகளின் விரிதலில் இருந்து வந்ததா அல்லது மையிடப்பட்டு நீண்டு கிடக்கும் அந்தக் குண்டு குண்டு கண்களில் இருந்து வந்ததா என்று புரியாமல், அவள் கண்களை அப்பொழுது பார்க்க நினைத்தும் அவனால் நேருக்கு நேர் சந்திக்க இயலவில்லை.
”ஒரு நாளில் பெரும்பகுதி உங்களைப் பற்றிய எண்ணங்கள்தான் எனக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கு.”
பேசியபடியே கேண்டினின் குப்பை கொட்டும் இடத்திற்கு வந்திருந்தார்கள் அப்போது அவர்களை ஒரு கருப்பு நாய் கடந்து போனது கூடவே ஒரு வெள்ளை நாயும் அவ்விரண்டு நாய்களும் ஒன்றை ஒன்று கொஞ்சியபடியே விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றின் விளையாட்டை அவர்கள் பார்த்தும் பார்க்காதது போல கடந்தார்கள்.
“சரி சரி, இந்த மாதிரி சொல்றியே, இதை திருநாவுக்கரசிடம் சொல்லி இருக்கிறாயா.?
“இல்லை சொன்னதில்லை”
“சரி, இன்று போய் அவனிடம் சொல் இதுதான் எங்களுடைய உறவு என்று”
2.
மெஸ்ஸில் இரவு உணவை முடித்த பின் விளையாட்டு மைதானத்தின் ஓரமாக சிறு நடை போவது திருநாவுக்கரசு மற்றும் சூர்யா இருவருக்கும் வழக்கம். அவ்வாறே இன்றும் இருவரும் நடந்துகொண்டிருந்தார்கள். முப்பது அடி அகல தார் ரோடு.இருபுறமும் நன்கு வளர்ந்த புங்கை மரங்கள். அவற்றின் இடையிடையே எழும்பியிருந்த மின் கம்பங்களில் இருந்து வீழ்ந்த சோடியம் ஆவி விளக்கின் மஞ்சள் ஒளி முழுவதும் தார் ரோட்டில் இறங்காது விட்டு விட்டு இருளும் ஒளியும் கண்ணாமூச்சி விளையாடின.
காலையில் மலருடன் நடந்த உரையாடலைத் திருநாவுக்கரசிடம் தெரிவித்தான் சூர்யா. திருநாவுக்கரசு அமைதியாகக் கேட்டுக்கொண்டே வந்தான்.ஒரு கட்டத்தில்,
“டே மச்சான் அடல்ட்ஸ்ங்க ரெண்டு பேர் தொடர்ந்து ஃப்ரெண்ட்ஸாலாம் இருக்க முடியாதுங்கறது என் அபிப்ராயம். உண்மையச் சொல்லனும்னா நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் டீப்பா காதலிக்கிறீங்க ஆனா ரெண்டு பேருமே அதை வெளிக்காட்டிக்க மாட்றீங்க. இந்த ஒரு வருடமா நீங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமா பழகிட்டு வர்றத நானும் கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன். உனக்கு ஸ்டடிஸ்ல கான்சன்ட்ரேட் பண்ண முடியல. எந்த நேரமும் அவங்கள பத்தின நினைப்பாதான் உனக்கு இருக்கு. அவங்களும் ஒரு நாளின் பெரும் பகுதியில உன்னுடைய நினைவு இருக்கிறதா சொன்னதாச் சொல்ற. இது எப்படி வெறும் பிரண்ட்ஷிப்ல மட்டும் சாத்தியமாகும்? ஆதனாலதான் சொல்றேன், ஒண்ணு நீயாவது வெளிப்படுத்து. அல்லது அவங்களையாவது வெளிப்படுத்த வை. இதுதான் நிதர்சனம். ஓகேவா” என்றான்.
சூர்யாவுக்கு அவன் இவ்வாறு பேசியதற்குப் பிறகு ஒருவித குழப்பமும் ஆச்சர்யமும் உண்டானது ‘என்னடா இவன் நம்முடைய மனசுல இருக்குற எண்ணத்தை அப்படியே புட்டு புட்டு உடைக்கிறான்: என எண்ணிக்கொண்டான்.
நாளை காலையில் வாக்கிங் போகையில் மலரிடம் இவ்வளவு நாட்களாக சொல்லாமல் விட்டிருந்த, சொல்லவேண்டிய உணர்வான மலரின் மீதான தனது அளப்பரிய அருங்காதலை எப்படியாகிலும் வெளிப்படுத்திவிடவேண்டியதென நினைத்துக் கொண்டான். தூங்கியும் தூங்காமலும் அன்றைய இரவைக் கடந்து விடியலின் குயிலோசையைக் கேட்பதற்காகவே உறங்காமல் விழித்திருந்தான்.
3.
பனி படர்ந்த அதிகாலையில் அவளுக்காகத் திறந்த வெளி ஆடிட்டோரியத்திற்கு எதிரே இருக்கும் மின் கம்பத்தின் விளக்கு ஒளியின் கீழ் நின்று இருந்தான். அருகிருந்த தூங்குமூஞ்சி மரத்தின் அடர்ந்த கிளைகளினிடையே குயிலொன்று கூவிற்று. இன்று எப்படியேனும் மலரின் அந்தக் குண்டு விழிகளை நேருக்கு நேராக நோக்கி தமது எண்ணத்தை விருப்பத்தைச் சொல்லிவிடவேண்டுமெனத் தனக்குத்தானே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டான் .
சாம்பல் பனி சூழந்த அந்த ரம்யமான சூழலில், வானத்துக் கலவையான மேகங்களிலிருந்து வெளியேறும் ஓர் அழகிய பறவையைப் போல வெண்ணிற டி-ஷர்ட்,அடர் சாம்பல் நிற லோயர் சகிதம் அணிந்து நடந்து வந்தாள். நேற்றைய உடையை விட சற்றுத் தளர்வான உடையால் கொஞ்சம் பருத்துக் காணப்பட்டாள். மலரைப் பார்த்ததும் இவனது வயிற்றுப்பகுதியில் வெம்மை பரவ ஆரம்பித்திருந்தது. ஒருவருக்கொருவர் ‘குட் மார்னிங்’ சொல்லிக்கொண்டு இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். இருவரிடையேயும் அதிகாலையின் அமைதியைக் குலைக்காத மௌனம். இருவரின் காலணிகள் தார் ரோட்டில் உராய்ந்து நடக்கும் சத்தத்தை மட்டும் கேட்டபடியே நடந்தார்கள். மலர் தான் ஆரம்பித்தாள்.
“என்ன,திரு கிட்ட பேசுனியா?”
“பேசினேன்”
“என்ன பேசினே”?
“நம்ம என்ன பேசினமோ, அது எல்லாமே பேசினேன்”
“அதுக்கு அவன் என்ன சொன்னான்?”
திரு சொன்ன எல்லாவற்றையும் ஒன்று விடாமல் அப்படியே ஒப்புவித்தான்.
“பெரிய சைக்காலஜிஸ்ட் மாதிரி பேசி இருக்கான் அவனுக்கு கேர்ள் ஃபிரண்ட்ஸே கிடையாதா”
“ஆமாம்”
“அப்படின்னா அவன் அப்படித்தான் பேசுவான்.”
கண்கள் அகல விரியுமாறும் சிரித்துக்கோண்டே.,
‘டக்’கெனக் கேட்டாள்
“நீ என்ன லவ் பண்றியா”
திடீரென ஒரு பெருங்கல் வந்து தனது மண்டையை பிளக்கும் என அவனால் நினைக்கவே முடியவில்லை. அதைவிட லவ் பண்றியானு கேட்டுவிட்ட பிறகு அவள் சிரித்துக் கொண்டே நடந்தது அடுத்த கல் எப்போது தாக்குமோ என்ற எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியது.
“அப்படி எல்லாம் இல்லைங்களே”
“அப்புறம் ஏன் பதற்றமா இருக்க”
”பதற்றம் எல்லாம் ஒண்ணும் இல்லையே”
”ஆள பாரு, எல்லாம் உன் மூஞ்சிலயே தெரியுது”
“என்ன தெரியுது”
“என்ன தெரியனுமோ, அதான் தெரியுது” சொல்லிக்கொண்டே மீண்டும் சிரித்தாள்.
“சரி, நான் அவன்கிட்ட போய் என்ன சொல்லணும் இப்போ?”
“அவன்கிட்ட என்ன சொல்லனும்ங்றத அப்புறம் பார்க்கலாம். நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லேன்”
சூர்யா மலரை நேருக்கு நேராகப் பார்க்காமல்.
“இப்ப எதுக்கு இந்த கேள்வி?”
“மத்தவங்க என்ன நினைக்குறாங்கன்னு நினைக்கிறதவிட நீயும் நானும் ஒருவரையொருவர் என்னவா நினைக்கிறோம்ங்கறது முக்கியமில்லயா, அதனாலதான் கேட்கிறேன் சொல்லு”
“நேற்று நீங்க ‘சிஸ்டம்’ னு சொன்னீங்கல்ல,எனக்குப் புரியல. இது என்ன Machine relationship ஆ”?
வாய்விட்டுச் சத்தமாகச் சிரித்தாள் மலர். அவளது சிரிப்பின் போது தெரிந்த சிவந்த மேல் ஈறும், அதன் கீழான மேல் வரிசைப்பற்களும், உள் சென்ற தாமரை இதழ் நிற நாக்கும், கீழ்வரிசைப் பற்களும், விரிந்த சதைப்பற்றுள்ள வடிவான உதடுகளும் அவனை என்னவோ செய்தன.சுதாரித்துக்கொண்டு,
“நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு இப்பவாச்சும் இந்த மரமண்டைக்குப் புரியற மாதிரி சொல்லுங்க ப்ளீஸ்”.
“சூர்யா நேற்று நான் சொன்னதைத்தான் இப்பவும் உனக்குப் புரியற மாதிரி சொல்றேன். உன்னை எனக்குப் பிடிக்கும், ஏன்னா நீ என்ன மாதிரி, என் அப்பா மாதிரி.இன்னும் சொல்லனும்னா, நான் இவ்வளவு காலமாக பெரும் மதிப்புடனும்,பெருங்காதலுடனும் என்னோட எதிர்கால கணவராக நான் நினைத்துகொண்டிருக்கும் எனது சித்தப்பா மாதிரியும் நீ இருக்க. அதனாலயும் உன்னை எனக்குப் பிடிக்கும்” .
வாழ்வு எப்போதும் விசித்திரங்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும். காலமோ அந்த விசித்திரங்களை மனிதர்கள் எதிர்பார்க்காத சமயங்களில் அவிழ்த்துவிடும். மனிதன் அவிழ்க்கப்பட்ட விசித்திரங்களை உள்வாங்குவதில் எதிர்கொள்வவதில் மற்றும் விசித்திரங்களுக்கு எதிர்வினையாற்றுவதில் சாமர்த்தியசாலியாகவோ அப்பாவியாகவோ இருப்பான்.
சூர்யா ஒரே நேரத்தில் இரண்டு விதமான மனிதனாக ‘என்னது சித்தப்பாவா? பதற்றத்துடன் வாய் பிளந்து கேட்டான் .
‘ஆமா சித்தப்பாதான். அன்றைக்குக் கூட மகாபலிபுரத்துக்கு என்னை அழைத்துச் சென்றாரே. உன்னைக் கூப்பிட்டதுக்குக்கூட நீ வரவில்லையே. அவர்தான் குழந்தையிலிருந்தே என்னைப் பார்த்துக் கொண்டவர். என்னைப் புரிந்துகொண்டவர். அவரைத்தான் நான் காதலிக்கிறேன்“ நிதானமாகச் சொன்னவள் மேலும் தொடர்ந்தாள்.
‘உடனே பதறாத, ஆறு தலைமுறை தாண்டி அவர் எனக்குச் சித்தப்பாவா வர்றாரு அவரைப்போலத்தான் நீ இருக்குற, எனக்கும் அவருக்கும் திருமணமாகி ஒரு குழந்தை பிறந்தால் அவன் எப்படி இருக்க வேண்டும் என நான் நினைத்திருந்தேனோ அதே போலத்தான் நீ இருக்குற..அதனால உன்னை என்னோட முதல் குழந்தையாகத்தான் மகனாகத்தான் பார்க்கிறேன்”
இந்த வார்த்தைகளைக் கேட்க கேட்க சூர்யாவுக்கு கண்களின் முன்னே இருள் பரவுவதுபோல காட்சி உருவாகி மேலும் பதற்றமான நிலைக்கு மாறிப் பிறகு மெல்ல சுதாரித்து மீண்டு பேசலானான .
“முதல்ல மெஷின்னு சொன்னீங்க, இப்ப மகன்னு சொல்றீங்க. ஒரு நிலையில இல்ல நீங்க” என நிதானமாகச் சொன்னான். மேலும் சற்று நேர மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்தான். மலரின் நடையில் வேகம் சற்றுக் குறைந்திருந்தது .
அங்க உட்காரலாமா என ஒரு மரத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சுற்றுத் திண்டைக் காட்டினான். இருவருக்கும் இடையே ஐந்தடி இடைவெளி இருக்குமளவு இருவரும் விலகி அமர்ந்தனர்.
அவனுக்கு இந்த ஒரு வருட காலத்தில் எத்தனையோ முறை சொல்ல நினைத்துச் சொல்ல முடியாமல் பின் வாங்கியது போதும் என நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் திருநாவுக்கரசு அவனுள் தகித்துக் கொண்டிருந்த கங்கில் காற்றை ஊதிவிட்டான். தற்போது தான் காதலிக்கும் பெண் தன்னைக் காதலிக்காமல் வேறொருவரைக் காதலிப்பதாகச் சொல்லியபோது கங்கிக்கொண்டிருந்த தணல் சுடர் விட்டெரியலாயிற்று .
மலர் தனக்குக் கிடைப்பாளோ இல்லையோ, ஆனால், தான் அவளைக் காதலிப்பதை இந்தச் சூழ்நிலையை விட்டால் வேறெப்போதும் தெரியப்படுத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தவனாக,
”ஓகே சித்தப்பாவ நீங்க காதலிக்கிறீங்க .நான் உங்கள காதலிக்கிறேன். அப்படியே நீங்க உங்க முதல் மகனையும் காதலியுங்களேன்.”
‘வாட்?’
“ஐ லவ் யூ மலர் “
இப்போது பதற்றத்தை அவளுக்குப் பரிசளித்தான். எதிர்பாராத இந்தத் தருணத்தைக் கையாளத் தெரியாதவளாகவும் சற்று ஆச்சர்யத்துடனும் வயிற்றில் ஏற்படுகிற தெரியாத புதுவித உணர்வினாலும் மலரிடமிருந்து வார்த்தைகள் சிரமத்துடன் வெளிப்பட்டன.
“காதலிக்கறதுன்னா என்ன தெரியுமா எல்லாத்தையும் பகிர்ந்துக்கனும்”
“எல்லாத்தையும்னா?”
“உனக்குத் தெரியாதா?”
“தெரியும்தான் .அதனாலதான் கேட்டேன் .நீங்க சித்தப்பாவோட எல்லாத்தையும் பகிர்ந்துகிட்டீங்களா. இல்ல இனிமேதான் பகிர்ந்துக்கப்போறீங்களா?”
‘What nonsense you are talking Surya?’ கோபத்தில் கத்தினாள் மலர் .
“ஆமா இது நான்சென்ஸ்னா இவ்வளவு நாளா நாம் பழகியதும் நான்சென்ஸ்தான்” .ஏமாற்றத்தின் விளைவு அவனை அப்படிப் பேச வைத்தது .
மலர் இந்தச் சூழ்நிலையை அவனுக்கு எப்படி புரிய வைப்பது என்பது தெரியாமல் குழம்பினாள். எதிர்பாராத அவனது இந்த வெளிப்பாடு அவளை அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியது. தனது எந்தச் செயல் அல்லது எந்த வெளிப்பாடு தன்னை அவனுடைய காதலியாகப் பாவிக்கத் தூண்டியது என்றும் யோசித்தாள். நாம் தவறு செய்துவிட்டோமோ என்று குற்றவுணர்வில் குமைந்தாள் .
அவளுடைய மௌனத்தின்போது சூர்யாவும் தனக்குள்ளாகத் தான் தவறாக நினைத்துவிட்டோமோ, மலர் சாதாரணமாகத்தான் தன்னோடு பழகினாளோ என்றும் யோசித்தான். அந்த நேரத்தில் இருவரின் மௌனத்தையும் கலைத்தது அவர்களுக்கு அருகேயிருந்த வாதநாரயணன் மரத்திலிருந்து வந்த குயிலின் கூவலோசை.
“ம்க்ர்க்கும்“ எனத் தொண்டையைக் கனைத்தவாறு சூர்யாதான் அந்தக் கணநேர மௌனத்தை உடைத்தான்.
“சரி, நீங்க என்னை நினைச்சதும் நான் உங்களை நினைச்சதும் வேற வேற உறவுகள்ல. இந்தச் சூழல் யாருக்குமே வரக்கூடாது. இதுக்கு மேல இதயத்தில் இப்படி வேறுபட்ட உறவுச் சிந்தனையை வச்சுக்கிட்டு இயல்பாக என்னாலயும் இருக்க முடியாது. உங்களாலயும் இருக்க முடியாதுன்னு தோனுது. அதனால நாம பிரிஞ்சிடலாம்” என்று சொல்லிக்கொண்டே கூவும் குயிலைப் பார்க்க அண்ணாந்து நோக்கினான். வெண்விழி படலத்தில் ஊற்றெடுத்த விழிநீரை கீழே கன்னங்களில் வழியச்செய்யாது விழியிலேயே தேக்கிவைக்க அவன் அப்படி அண்ணாந்து பார்த்தான் .
மலருக்கு எதுவும் சொல்லத்தோன்றவில்லை. அவளுக்குள்ளும் கண்ணீரின் நதி ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
சிமெண்ட் திண்டில் அமர்ந்திருந்த சூர்யா எழுந்து நின்றான்.
“ஏன் எதுவும் சொல்ல மாட்டறீங்க”
“………..”
‘மலர், ஏதாச்சும் பேசுங்க’
‘………..’
சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாக தீர்க்கமாக அவளது நீர் தேங்கிய கண்களை நோக்கிக் கேட்டான்.
‘சரி, நீங்க தப்பா நினைச்சிக்கலன்னா, கடைசியா உங்ககிட்ட ஒண்ணு கேட்கட்டுமா ?’
“என்ன?”
“உங்களை ஒரே ஒரு முறை முதலும் கடைசீயுமாக அணைத்துக்கொள்ளட்டுமா?”
மலர் எழுந்தாள்.தன் இரு கைகளையும் அகல விரித்து “வா” என்றாள். .சூர்யா ஒரு சிறுவனைப்போல அவளது அபயக்கரங்களுக்குள் புகுந்தான். மலர் அவனை அப்படியே தன் நெஞ்சோடு அணைத்துத் தலையை வருடினாள். நின்ற நிலையிலிருந்து மெதுவாக மீண்டும் சிமெண்ட் திண்டில் அமர்ந்து தன் மடியில் சூர்யாவின் தலையைக் கிடத்தினாள். தலையைக் கோதினாள். அவர்களுக்கு நிழல் தந்த மரத்தின் கிளையில் கூவிக்கொண்டிருந்த குயிலொன்று தனது கூவலை நிறுத்தியிருந்தது, பிறகு இருவரும் எழுந்து தங்களுக்குள் அடங்கிக் கிடக்கும் கண்ணீரை அடக்க இயலாது தழுதழுத்தபடி ஒருவரை ஒருவர் பார்க்காமல் எதிரெதிர் திசையில் தனித்தனியே பிரிந்து நடக்கலாயினர்.. குயிலோசை இப்போது மீண்டும் இருவருக்கும் கேட்க ஆரம்பித்தது.
000

அரவிந்தன் பெருமாள்
தொன்னுறுகளின் பிற்பகுதியில் சிறுபத்திரிக்கைகளில் “தாமரைபாரதி”எனும் பெயரில் கவிதைகளில் பங்காற்றியவர் .இதுவரை தபுதாராவின் புன்னகை,உவர்மணல் சிறுநெருஞ்சி,காசினிக்காடு,இங்குலிகம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
கார்த்திகைச் சித்தர் எனும் பெயரில் கவிவிருத்தப்பாவில் “தெறுகலம்” எனும் சித்தர் பாடல்கள் நூல் வெளிவந்துள்ளது .
தற்போது அச்சு இணைய இதழ்களில் “அரவிந்தன் பெருமாள் “எனும் பெயரில் குறுங்கதைகள் ,சிறுகதைகள் எழுதிவருகிறார்.
தென்பெண்ணை ஆற்றுத் திருக்கோவிலூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது வசிப்பது சென்னையில்

