ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
நாளுக்கு நாள் டென்ஷன் கூட்டிக்கொண்டே இருந்தது. ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகள் போதாது என்று தேவையற்ற புதிய பிரச்சனைகளால் குடும்பத்துக்குள் வேண்டாத வெறுப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்தது. இரண்டாவது தம்பி காஜாவின் கல்யாணத்துக்குப் பிறகு, நான் சொன்னதைப் போலவே உறவினர்களை பார்க்க பக்கத்து ஊருக்கு உம்மா போய்விட்டு வரும்போதெல்லாம் என் மனைவி ஜெமியின் தலை ஊருள ஆரம்பித்தது. உம்மாவுடன் உறவினர்கள் வீட்டுக்கு போகும்போது எங்கள் வீட்டில் நடப்பதையெல்லாம் பெரீமா மற்றும் சின்னம்மா வீடுகளில் ஜெமிதான் சொல்வதாக தம்பி காஜா உம்மாவிடம் புகார் தெரிவித்து, ”மைனீ சொல்றதுக்கு எம் பொண்டாட்டிய எதுக்குமா தேவையில்லாம திட்டுறீங்க?” என்று சண்டைக்குப் போனான்.
அவன் சொல்வதை நம்பிக்கொண்டு உம்மா ஜெமியை திட்ட ஆரம்பிக்க, என்னவள் என்னிடம் சொல்லி மிகவும் வருந்தினாள். சுர்ரென்று என் மண்டைக்கு ஏறியது கோபம். ”ஏம்மா, நீங்க பெரீமா வூட்டுக்குப் போகும்போதெல்லாம் இத்தன காலமா ஒங்க கூட ஜெமிதான வர்றா? அப்பவெல்லாம் இந்த பிரச்சன வரல! இப்ப மட்டும் எப்பிடி வருது? ஜெமி என்ன ஒங்க அக்கா ஊட்டுக்கு தனியா போயி சொல்லிட்டு வருதாக்கும்?” உம்மாவிடம் கோபத்துடன் கேட்டேன்.
“இன்னொருத்தி வரும்போதுதானே நாத்தம் வெளிய போகும்” என்று என் மனைவி ஜெமியை குற்றம் சொல்லும் தொனியில் உம்மா பதில் சொல்ல, “சரிமா, இனிமேல் எங்கயும் ஜெமிய கூட்டிட்டுப் போகாதீங்க.” என்று உம்மாவிடம் சொல்லிவிட்டு, “ஜெமி, இனி நீ உம்மகூட எங்கயும் போகக் கூடாது..” என்று என்னவளிடமும் கண்டிப்புடன் சொன்னேன். குடும்பத்தில் பிரச்சனையை சமாளிக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை.
பணம் மட்டும்தான் இதுவரை எங்கள் வீட்டில் பெரும் பிரச்சனையாக இருந்தது. இன்னொரு மருமகள் வந்ததும் குடும்பத்துக்குள் மெல்ல விரிசல் உருவாவதை உணர்ந்தேன். நெருங்கிய உறவினர் பெண்ணான நபீசாவை தம்பிக்கு எடுக்க வேண்டாம் என நான் அப்போதே உம்மாவிடம் மிக வலியுறுத்தி சொன்னேன். வாப்பாவும் கூட வேண்டாம் என்றுதான் சொன்னார். முதலில் பொண்ணை தாட்டிவிடலாம் பிறகு காஜாவுக்கு முடிக்கலாம் என வாப்பா எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். உம்மா கேட்கவே இல்லை. உம்மாவின் சொந்தம் விட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காகவே இந்தப் பெண்ணை எடுக்கவேண்டும் என்று அடம் பிடித்து உம்மா சாதித்துவிட்டது.
வாப்பா முன்புபோல இருந்திருந்தால் ஒரே அதட்டலில் உம்மா வாயைத் திறக்காமல் அடங்கிப்போயிருக்கும். உடல்நிலை சரியில்லாமல்போய் வேலைக்கும் போகாமல் வாப்பா மூலையில் ஒதுங்கியவுடன் யாரும் எதிர்த்துப் பேச முடியாத அளவுக்கு உம்மாவின் ஆட்டம் ஆரம்பித்துவிட்டது.
நான் கண்டிஷன் போட்ட பிறகு உறவினர் வீடுகளுக்கு உம்மா போகும்போது ஜெமியை அழைத்துச் செல்லாமல் தம்பி காஜாவின் மனைவி நபீசாவை அழைத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தது. நபீசா தன் வீட்டுக்குப் போயிட்டு வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சனை உம்மாவின் காதுக்கு வந்து கொண்டேதான் இருந்தது. என்ன சொல்லியும் நபீசா கேட்கவில்லை. தன் குணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை. ஒரு கட்டத்தில் உம்மாவும் கத்திக் கத்தி ஓய்ந்து போனது. பிறகு கோட்டமேடு போவதையே உம்மா நிறுத்திவிட்டது.
. ராஃப் காஸ்டிங்க் மற்றும் கரண்ட் கட் பிரச்சனையால் கம்பெனியில் நோ ஒர்க் பிரச்சனை ஏற்பட்டு இன்னும் சரியாகாததால் பொண்ணுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட மிகவும் சிரம்மப்பட்டுக் கொண்டிருந்தேன். வீட்டு செலவுக்கும் சரியாக பணம் கொடுக்க முடியாததால் என் மீது உள்ள கோபத்தை ஜெமி மீது காட்டிக்கொண்டிருந்தது உம்மா.
இந்த நிலையில் ஒருநாள் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, “நாம ரெண்டு பேரும் சேர்ந்து லோனுக்கு துணி கொடுக்குற ஏவாரம் செய்யலாமா இக்பால்? எனக்கு ஒரு ஆள் துணைக்கு வேண்டும். அதா ஒங்ககிட்ட கேக்குறன்” என்று ஆட்டோ ஓட்டும் நண்பர் அய்யூப் திடீரென்று என்னிடம் கேட்டார்.
கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு திரும்பி குமாரை பார்த்தேன். எங்கள் வீட்டருகில் குடியிருக்கும் என் இனிய நண்பர் இவர். “என்ன இக்பால், நல்ல ஐடியாதானே சொல்றாரு நண்பர், அவரோட கூட்டு சேர்ந்துக்கோ” என்றார் குமார்.
முரளியும், “ஆமடா, ஒனக்குத்தா இப்ப ஒர்க் ஷாப்ல சரியா வேலயே இல்லயே. பேசாம அவரோட சேர்ந்து துணி பிஸ்னஸ் செய்யி” என்றான்.
எனக்கிருக்கும் சூழ்நிலைக்கு நல்ல ஐடியாதான். ஆனால் முதல் போட பணம் வேண்டுமே. பிரச்சனையே அதுதானே. என்ன செய்வது/ யோசிக்க ஆரம்பித்தேன்.
“என்னடா யோசிக்கிற?” என்றான் முரளி.
“உடனே பணம் வேனுமல்லடா” என்றேன். பிறகு அய்யூபிடம், “நா இப்ப எவ்வளவு போடணும்?’ என்று கேட்டேன்.
“மொதல்ல ஆளுக்கு மூணு மூணு போடலாம் இக்பால்” என்றார்.
”சரி. நாளைக்கு சொல்றங்க” என்றேன்.
வீடு வந்து என்னவளிடம் விவரம் சொன்னேன். “நல்ல ஐடியாங்க. தனியா இதெல்லாம் உங்களுக்கு செய்யத் தெரியாது. ஒர்க் ஷாப் வேலய உட்டுட்டு வேற ஏதாச்சும் செய்யணும்னு நீங்க சொல்லிட்டுத்தானே இருந்தீங்க? இப்ப தானா தேடி வருது. யோசிக்காம அய்யூப் அண்ணன் கூட சேந்து இத பண்ணுங்க..” என்றாள் ஜெமி.
“பண்ணலாம்னு ஈஸியா சொல்லிட்டே. பணத்துக்கு என்ன பண்றது? மூவாயிரம் கேக்குறார்” என்றேன்.
சற்றும் யோசிக்காமல் உடனே, “என்னோட செயின் ஒன்னு தர்றேன். அத மூவாயிரத்துக்கு வச்சு பணம் குடுங்க” என்றாள் ஜெமி.
“ரகமத்துக்கு கல்யாணம் எல்லாம் இருக்கும். இப்பப் போயி செயின வட்டிக்கு வைக்கச் சொல்றியே. ஏற்கனவே உங்கிட்ட இந்த செயினும், இன்னொரு சின்ன செயினும்தா இருக்கு. உடனே திருப்ப முடியாது. வேண்டாம். உம்மாவும் வேண்டாம்னுதா சொல்லும் ஜெமி”
“உம்மா ஒன்னும் திட்டாது. ‘ஏவாரத்துக்குத்தானங்க வக்கிறோம் ஏற்கனவே சரியா வேல இல்லாம இரிக்கீங்க. திடீர்னு ஒங்க பிரண்டு ஓங்ககிட்ட கேக்குறாருனா, இது மூலமா நல்லது நடக்க அல்லாஹ் நாடியிரிப்பாங்க. யோசிக்காம ஏறங்குங்க.”
ஜெமி சொல்வதும் சரியாகத்தான் இருந்தது. திடீர்னு அய்யூப் எங்கிட்ட ஏன் கேட்கணும்? அவருக்கு வேறு எத்தனையோ நண்பர்கள் இருக்கிறார்கள். உம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு, நகையை வைத்து பணம் கொடுக்கலாம் என முடிவு செய்தேன்.
உம்மாவிடம் துணி லோனுக்கு கொடுக்கும் வியாபாரம் செய்யும் விவரத்தைச் சொன்னேன். “நகைய அடமானம் வச்சு அப்பிடி துணி ஏவாரம் செய்யணுமாக்கும்? ஒனக்கெல்லாம் அது சரி வராது” என்றது உம்மா. தனியாகச் செய்யவில்லை. நண்பர் ஒருவருடன் சேர்ந்துதான் செய்கிறேன் என்று சொல்லி உம்மாவிடம் சம்மதம் பெற்றேன். வாப்பாவும் சம்மதித்து, “பாத்து செய்ப்பா..ஏதோ நல்லது நடந்தா செரி” என்றார்.
என்னவளின் செயினை மூவாயிரத்துக்கு அடகு வைத்து, பணத்தை அய்யூப்பிடம் கொடுத்தேன். ஒரு ஞாயிறன்று இருவரும் கடைவீதி சென்று அவருக்குத் தெரிந்த துணிக்கடையில் பத்தாயிரம் ரூபாய்க்கு மொத்தமாக கொள்முதல் செய்து ஆறாயிரம் ரூபாயை முன் பணமாக கொடுத்தோம். என் வீட்டில் வைத்துதான் முதல் வியாபாரத்தை ஆரம்பித்தோம். நண்பர்கள் குமாரும், முரளியும் ஆளுக்கு ஒரு செட் பேண்ட் ஷர்ட் துணி எடுத்தார்கள். பக்கத்து வீட்டு பெண்கள் இருவர் சேலை எடுத்தார்கள். வாரம் அல்லது மாதம் ஒரு தொகையை கொடுக்க வேண்டும்..மொத்த தவணைக் காலம் மூன்று மாதங்கள் என நிர்ணயம் செய்தார் அய்யூப். என் பக்கம் நானும்,அவர் பக்கத்தில் அவரும் வசூல் செய்வது எனவும் முடிவு செய்து கொண்டோம்.
கம்பெனியில் வாரத்திற்கு மூன்று நாட்கள்தான் வேலை இருந்தது. திடீரென ஒருநாள் மாலை தங்கை ரகமத்னீஷாவை ஏற்கனவே பெண் பார்த்துச் சென்ற உறவினர் வீட்டினர் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று அவர்களின் சொந்த பந்தங்கள் சிலரை கூட்டிக்கொண்டு வந்தார்கள். வாயெல்லாம் பல்லாக சந்தோஷத்துடன் உம்மா அவர்களை வரவேற்றது. வாப்பாவும் எழுந்து வந்து உற்சாகத்துடன் அவர்களை வரவேற்றபடி, “ஒருவார்த்த சொல்லிட்டு வந்திருக்கலாமே? நாஷ்டா ரெடி பண்ணியிருப்போமே..என்ன இப்பிடி பண்ணிட்டீங்க?” என்றார்.
“இவுங்க ஊர்லருந்து இன்னிக்கு ஒரு கல்யாணத்துக்கு வந்தாங்க. கிளம்புறதுக்கு முன்னால பொண்ணப் பாக்கணும்னு சொன்னாங்களா அதா கூட்டிக்கிட்டு வந்தோம். இன்னொரு நாளுக்கு நாஷ்டா சாப்பிட்டுக்காலம் அதுக்கென்ன இப்போ.” என்றார் மாப்பிளையின் உம்மா. தம்பி முபாரக் உடனடியாக கடைக்கு போய் அவர்களுக்கு ஸ்வீட் காரம் எல்லாம் வாங்கி வந்தான். காஜா எங்கோ வெளியே போயிருந்தான். “இனி நாங்க பொண்ணுக்கு பூ வைக்கிற மாரி வர்றோம்..அதுக்கு முன்னாடி நீங்கல்லாம் மாப்பிள பாக்க எல்லார்த்தயும் கூட்டிக்கிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு, அவர்கள் கிளம்பிச் சென்றதும், “என்னங்க இது! இவுங்க திடுதிப்புனு இப்பிடி பூ வைக்க வர்றோம்னு சொல்றாங்க?” வாப்பாவிடம் அங்கலாய்ப்புடன் சொன்னது உம்மா.
“மாப்பிள வூட்டுக்காரங்க எப்பவும் இப்பிடித்தாளா. பொண்ணப் பாத்து புடிச்சிருச்சுனா அப்பறம் கெடந்து தெரக்குவாங்க. தெரியாதாக்கும் ஒனக்கு?அதுக்குத்தா நா அப்பவே சொன்னன்” என்று வாப்பா, உம்மாவை கடிந்து கொண்டார். .
மாப்பிளை வீட்டுக்காரங்க இவ்வளவு சீக்கிரம் கல்யாண காரியங்களுக்கு இறங்குவாங்கணு நானும் நினைக்கவில்லை. முதல் தடவை பொண்ணைப் பார்த்துவிட்டு செல்லும்போது, உம்மா விவரங்களை அவர்களிடம் சொன்னபோது, ‘அவசரம் ஒன்னும் இல்ல மெதுவா பண்ணிக்கலாம்னுதான்’ சொல்லிவிட்டுச் சென்றார்கள். இப்ப திடீர்னு பூ வைக்க வருகிறோம் என்கிறார்களே. அடுத்து, நிச்சயம் வச்சுக்கலாம் என்பார்கள். தங்கச்சியின் கல்யாணம் நிச்சயம் ஆயிட்டா, கல்யாண செலவுக்கு பணம் கொடுக்க வேண்டும். நிச்சய செலவுக்கும் பணம் வேண்டும். நிறைய செலவிருக்கு பணத்துக்கு என்ன செய்வது என நான் யோசிக்க ஆரம்பித்தேன். எனக்குள் புளியைக் கரைத்தது.
எங்கேயோ பார்த்தபடி யோசித்துக்கொண்டிருந்த வாப்பாவைப் பார்த்து, ”என்னங்க, ரகமத் கல்யாணத்துக்கு ஊருப்பட்ட செலவு இரிக்குது. அவுங்கபாட்டுக்கு திடீர்னு இப்பிடி சொல்றாங்க. நாம இன்னும் ஒன்னுமே சேத்திட்டில்லங்க. துணிமணியிலிருந்து அத்தனையும் வாங்கிச் சேத்தணும். திடீர்னு நிச்சயம் வைக்கலாம்னு சொல்லுவாங்க. இதாங்கிறதுக்குள்ள நாளு ஓடிப்போவுங்க. மக்க கிட்ட சொல்லி நக, நட்டு வாங்குறதுக்கு வழியப்பாருங்க.” என்றது உம்மா. .
விசுக்கென்று முகத்தை திருப்பிய வாப்பா, கோபத்துடன் உம்மாவை முறைத்தபடி, ”நா அதுக்குத்தாளா அப்பவே சொன்னன். புள்ள கல்யாணத்த முடிச்சுட்டு, அப்பறமா காஜா கல்யாணத்த வய்க்கலாம்னு. நா எதச் சொன்னத்தா நீ கேக்குறே? எல்லாம் ஒன் இஷ்டம்தா! இனி இப்பிடித்தா மாப்பிள ஊட்டுலருந்து வந்துட்டே இரிப்பாங்க. அதப்பண்ணனும் இதப் பண்ணணும்னு தெரக்குவாங்க. எப்பவும் கைல காசு வேணும். நா சொன்னப்ப எதுவும் ஒம் மண்டைக்கு ஏரல. இப்பதா ஒனக்கு தெரியுதாக்கும்?” என்று சத்தம் போட்டார்
உம்மா எதுவும் பேசாமல் முகத்தை உம்னு வைத்துக் கொண்டிருந்தது. நானும் பேசாமல் இருந்தேன்.
“இப்ப பேசுளா” என்றார் வாப்பா.
“என்னத்த பேசுறது? எல்லாத்துக்கும் நேரம் காலம் வரணுமல்லங்க.. நாம நெனச்சா போதுமாக்கும்? அவன் நாடனுமல்லங்க.? திடீர்னு மாப்பிள ஊட்டுக்காரங்க இப்டி குண்டத்தூக்கிப் போடுவாங்கணு நாம நெனச்சமாக்கும்?” என்றது உம்மா.
வாப்பா பதிலேதும் சொல்லாமல் உம்மாவை முறைத்துப் பார்த்துவிட்டு எதோ முணுமுணுத்தபடி கோபத்துடன் திரும்பிக்கொண்டார்.
“எல்லாம் நல்லாவே நடக்கும் வாப்பா. பாத்துக்கலாம் விடுங்க..நீங்க ஒன்னும் சங்கடப்படாதீங்க வாப்பா” என்றான் தம்பி முபாரக்.
முபாரக் இப்படி சொன்னதும், “நாலு பேரு சம்பாரிக்குறாணுங்க. தங்கச்சியோட கல்யாணத்த நடத்த மாட்டாங்களாக்கும்?” பாயிண்டைப் பிடித்த வெற்றிக் களிப்புடன் வாப்பாவுக்கு மறுபடியும் பதில் சொன்னது உம்மா..
வாப்பா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். நான்தான் அமைதி இழந்தவனாக தவிக்க ஆரம்பித்தேன்.
வாப்பாவைப் போலவே நானும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தேன். மூத்தவன் என்பதால் எதைச் சொன்னாலும் பிரச்சனைதான். பணம் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் செய்யலாம். பணம் இருப்பவன் எதை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் உலகம் இது. ஆனால் வெறுங்கையில் நான் முழம் போடுவதால்தான் பிரச்சனையே. என் பேச்சு எடுபடுவதில்லை. முபாரக் மட்டும்தான் கை நிறைய கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கான். நாங்க மூணு பேரும் டம்மி பீசுங்க. வீட்டு செலவுக்கு பணம் கொடுக்கவே திண்டாடிக்கிட்டு இருக்கோம். எத வச்சு உம்மா இப்படி சொல்லுது என எனக்கு கோபம் வந்தது. காஜா இப்ப இருந்திருந்தானா ஏதாவது சூடா பதில் சொல்லியிருப்பான் என நினைத்துக்கொண்டேன்..
. ஜெமியும், நபீசாவும் உள் அறையின் வாசலில் நின்றபடி நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தார்கள். ரகமத்துல்லாவும் பதில் பேசாமல் மௌனமாகவே இருந்தான். நாங்கள் மூவரும் எப்போது கை நிறைய சம்பாதித்து பணம் சேர்த்துவது? அதுவரைக்கும் தங்கச்சி கல்யாணத்தை தள்ளிப்போடவா முடியும்? நிறைய சம்பாதிக்கும் முபாரக் ஒருவனின் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு தங்கச்சி கல்யாணத்தை நடத்த முடியுமா என்ன? அதுவும் அவன் இப்போதுதான் தனியாக பட்டறை வைத்திருக்கிறான். தனி ஒருவனாக ஒரு கல்யாணத்தையே நடத்தும் அளவுக்கு அவனிடம் பணம் இருக்குமா என்ன? ஏதோ எல்லோரையும் விட அதிகமாக பணம் கொடுத்து உதவுவான். பிறகு எப்படி எந்த நம்பிக்கையில் வாப்பாவிடம் முபாரக் ‘விடுங்க வாப்பா பாத்துக்கலாம்னு’ சொன்னான்? எனக்குள் இப்படியாக பல கேள்விகள் தொக்கி நின்றன.
மறுபடி யாரும் எதுவும் பேசாமல் உறைந்த நிலையில் இருப்பதைப் போல அமைதி நிலவியது. பகல் மங்கி இருட்டு கவிய ஆரம்பித்ததை அறிவிக்கும் விதமாக அருகில் இருந்த கோயில் மரத்திலிருந்து கூடு திரும்பிய பறவைகளின் களேபரமான ஒலி கேட்க ஆரம்பித்தது. முன் அறைக்கு வந்து, அறை விளக்கின் ஸ்விட்ச்சைப் போட்டாள் ஜெமி. . வலது புற சுவரின் மூலையில் நகர்ந்து கொண்டிருந்த பல்லியை பார்த்தபடியே நான் உட்கார்ந்திருந்தேன். கொஞ்சம் தள்ளி ஏதோ ஒரு சிறிய பூச்சி கறுப்பு பொட்டாகத் தெரிந்தது. பல்லி அதை நோக்கித்தான் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது.
முன் அறைக்குள் மௌனம் வேடிக்கை பார்த்தபடி அலைந்து கொண்டிருப்பதாகப்பட்டது. நான் மெல்ல திரும்பி வாப்பாவைப் பார்த்தேன். சிந்தனையில் ஆழ்ந்தவரைப் போல வெறித்தபடி உட்கார்ந்திருந்தார். அவரிடமும் எந்த பதிலும் இல்லை போல. கொஞ்ச காலமாகவே வாப்பாவிடம் இந்த மாறுதலைப் பார்க்கிறேன். தன்னால் சம்பாதிக்க முடியாமையின் இயலாமை அவருக்குள் வருத்திக்கொண்டிருப்பதாக என்னால் உணரமுடிந்தது. உம்மா கடினமாக பேசும்போது மௌனமாகவே அமர்ந்திருப்பார். ஒரு எல்லைக்கும் மேல் அவரால் தாங்க முடியாத போதுதான் கோபத்தை காட்டும் விதமாக உம்மாவிடம் கத்திப் பேசுவார். பணம் சம்பந்தமான விஷயம் என்றால், இப்படித்தான் எதையும் சொல்லாமல் மௌனமாகவே இருப்பார்.
வாப்பாவை பார்க்க எனக்கு வருத்தமாக இருந்தது. அவரின் மௌனத்தை மட்டுமல்ல, அறையின் மௌனத்தையும் உடைக்கும் விதமாக, “என்னங்க வாப்பா! ஒன்னுமே பேசாம இருக்கீங்க?” என்றேன். அவர் மெல்லத் திரும்பி என்னைப் பார்த்த பார்வையில் விரக்திதான் தெரிந்தது. விட்டால் அழுது விடுவார் போல இருந்தது வாப்பாவின் முகபாவம்.
அவரை சமாதானமாக்கும் விதமாக, “நீங்க ஒன்னும் சங்கடப்பட்டுட்டு இருக்காதீங்க வாப்பா, முபாரக் சொன்னது போல தங்கச்சி கல்யாணம் நல்லபடியா நடக்கும்” என்றேன்.
“இனி ஆகுற காரியத்தப்பாருங்கனு” என்றபடி உம்மா எழுந்து அடுப்படிக்குள் போனது.
என்னைப் போலவே ஜெமியின் முகமும் இருண்டு போயிருந்ததைப் பார்த்தேன். சங்கடம் மேலும் அதிகமானது. எதுவும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்திருந்தோம்.
துணிமணிகள் லோனுக்கு வாங்கிய பெண்களிடம் என்னால் கறாராக வசூல் செய்ய இயலவில்லை. பணம் வசூல் ஆகாமல் நின்றுவிட, இதுகுறித்து வருத்தப்பட்ட அய்யூப், ”நீங்க இப்பிடியிருந்தா செம நஷ்டம் ஆயிருங்க. இனி ஏவாரத்த நானே தனியா பாத்துக்கிறேன்” என்று என்னை கழற்றிவிட்டார். அதுமட்டுமல்ல, “அவுங்ககிட்ட வசூல் பண்ணி உங்க பணத்த எடுத்துக்குங்க” என்று கறாராக சொல்லிவிட்டார் அய்யூப். ‘அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டேனு’ அப்பவே உம்மா சொன்னாங்களே. சரியாத்தான் இருக்கு. ஜெமியோட செயின் அநியாயமா போச்சே. உம்மாவிடமும் பயங்கரமாக திட்டு விழுமே. எதுவும் செய்ய இயலாதவனாக நான் இடிந்து போனேன்.
இந்த நிலையில் ஒரு ஞாயிறு மாலையில் எங்கள் எல்லோரையும் அழைத்து முன் அறையில் உட்கார வைத்து, “தங்கச்சி கல்யாண செலவுகளை அண்ணன் தம்பிங்க நாம டிவைடு பண்ணிக்காலம். அண்ணா நீங்க உங்க பங்குக்கு இவ்வளவு குடுத்துருங்க” என்று தம்பி முபாரக், வாப்பா உம்மா முன்னிலையில் அவனுடைய திட்டத்தை முடிவாகச் சொன்னான். இப்போதெல்லாம் வீட்டில் அவனுடைய பேச்சைத்தான் எல்லோரும் கேட்கிறார்கள். பெயரளவில்தான் நான் அண்ணன்! அவன்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கிறான்.
எங்களிடம் எதுவும் கேட்காமல் அவனாகவே இப்படி முடிவு செய்துகொண்டு இதை எப்படி சொல்லலாம் என்று எனக்குள் கோபம் எழுந்தது. என்னுடைய நிலைமை தெரிந்தும் தம்பி முபாரக் இப்படி ஒரு முடிவை சொல்கிறானே என்று அதிர்ச்சி விலகாமல் நான் வாப்பாவைப் பார்த்தேன்.
“சீக்கிரம் பணத்துக்கு ஏற்பாடு பண்ணு இக்கு. கடைசி நேரத்துல என்கிட்ட ஒன்னும் இல்லனு கைய மலத்தீராத. நா இப்பவே சொல்லிட்டேன் பாத்துக்க” என்று உம்மா என்னைப் பார்த்து கறாராக சொல்ல, நான் எதுவும் பேசாமல் சங்கடத்துடன் ஜெமியை பார்த்தேன். ‘இனி இந்த வீட்டில் நாம ரெண்டுபேரும் எவ்வளவு கேவலத்துக்கு ஆளாகப் போறோமோ’ என்று ஜெமி சங்கடத்துடன் நினைத்துக்கொண்டதை அவள் முகம் இருளடைந்திருந்ததில் நான் உணர்ந்து கொண்டேன்.
என்னைக் கட்டிக்கிட்டு எவ்வளவு கஷ்டப்படுகிறாள். பாவம். இரவு அவளை ஆறுதல்படுத்த வேண்டும் என நினைத்துக்கொண்டேன். எதுவும் பேசாமல் பரிதாபத்துடன் எங்கள் இருவரையுமே மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தார் வாப்பா. ‘நீ சொந்தமா பட்டறை வச்சிருக்கே முபாரக். உன்னல முடியும். ஆனா நானும் அண்ணனும் கூலிக்கு வேலைக்குப் போறவங்க. எங்களால அவ்வளவு பணம் புரட்டி குடுக்க முடியாது’ என்று காஜா வாக்குவாதம் செய்வான் என்று பார்த்தால் எதுவும் பேசாமல் அவன் ஒத்துக்கொண்டது எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது.
வெளிச்சம் மங்கி, வெளியே இருள் மெல்ல பரவிக்கொண்டிருந்தது. .
00
இந்தக்கதையில் நாயகன் சாதாரண நடுத்தர வர்க்க மனிதன். நடுத்தர வர்க்கத்தில் மாதச்சம்பளத்திற்குச் செல்லும் பலர் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து தவறாமல் பணிக்குச் செல்வார்கள். கூட்டுக்குடும்பத்தின் ஆரம்ப கட்ட அற்புதங்களை ரசித்தவர்கள் தான் இவர்கள். கட்டுப்பாடு காரணமாக விலக முடியா சூழ்நிலையில் திருமணம் முடிந்து சிக்கிக்கொள்கிறார்கள். இதில் மாட்டிக்கொண்ட கணவனின் கதையிது! போக சுய விபரம் பத்தாத மனைவிகளுடன் வாழ்வது போன தலைமுறை செய்திகள் ஆகிவிட்டது! இன்றைய தலமுறை இப்படியல்ல என்பது எழுதிய ஆசிரியருக்கும் தெரியும்!
-நடுகல்.

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
இயற்பெயர் . H. நஸீர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் (TWAD Board) வரைவு அலுவலராக ( Draughting Officer ) பணி புரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளேன்.
· எனது முதல் சிறுகதைத் தொகுப்பு (இரண்டு குறுநாவல்களும் 4 சிறுகதைகளும் கொண்டது) 2010 ல் “நகரமே ஊளையிடும் பாலைவனம் போல..” (முரண் பதிப்பகம் – சென்னை வெளியீடு)
· இரண்டாவது தொகுப்பு (14 சிறுகதைகள்) 2011 ல் “போன்சாய் மரங்கள் “ (உயிர் எழுத்து பதிப்பகம் – வெளியீடு) .
· நகரமே ஊளையிடும் பாலைவனம் போல – முதல் தொகுப்பு இரண்டாம் பதிப்பாக 2014 ல் கறைபடிந்த காலம் என்கிற பெயரில் “புது யுகம்” பதிப்பகம், சென்னை வெளியிட்டுள்ளது.
· மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு (12 சிறுகதைகள் மற்றும் ஒரு குறுநாவல்) “கர்வம் பிடித்தவனின் கதை (தூண்டில் பதிப்பகம் , திருச்சி) சென்னை புத்தகத் திருவிழா – 2016 ல் வந்துள்ளது.

