-பிறைநுதல்

கொஞ்சம் சிந்தித்தப்பின் அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது.ஆனால் அவன் என்ன சொல்ல இயலும் “சரிங்க சார்” என்பதைத்தவிர?!.

அவன் தனது அலுவலக அறைக்குள் வந்து அமர்ந்தான். கொஞ்சநேரம் அவர் சொல்லிவிட்டு சென்றதையே எண்ணிக்கொண்டிருந்தவன் அந்த அறையை நன்றாக நோட்டமிட்டான். ஏறத்தாழ நூற்றியைம்பது சதுர அடியில் மிக அழகான குளிரூட்டப்பட்ட அறை அது. ட-னா வடிவில் மேசை அமைக்கப்பட்டிருக்க, பின்னால் வெறும் இரண்டரை அடி உயரம் கொண்ட அழகான அலமாரிகள். மேசையின் மேல் இடதுபுறமாக அவனது கோப்புகள் அழகாக அடுக்கப்பட்டிருக்க,வலது புறம் எழுதுகோல்,பலவண்ண பென்சில்கள், அளவுகோல் மற்றும் ஐந்து மீட்டருக்கான அளவை நாடா ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. நடுவில் அவனது மடிக்கணினி ஒரு முதலாளியைப் போல் அமர்ந்திருந்தது.மேசையில் மிகத் தாராளமாக ஏ ஜீரோ அளவிலான வரைபடத்தை விரித்து வைத்து கலந்தாலோசிக்குமளவிற்கு இன்னமும் இடம் மீதமிருந்தது. அவன் அமர்ந்திருக்கும் சுழல் நாற்காலி மிக அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்க மேசைக்கு முன்பாக விருந்தினர்களுக்கான மூன்று உயர்ரக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. விருந்தினர் நாற்காலிகளுக்குப் பின்னால் சிறிய அளவிலான அச்சு இயந்திரம். மேலே பொய்க்கூரையும் அதில் அழகான மின் விளக்குகளும் ஒரே ஒரு மின்விசிறியும்(அவனுக்குப் பிடித்த பால் வெள்ளை நிறத்தில்) பொருத்தப்பட்டிருந்தன. அவனுக்கு இடப்புறச்சுவற்றில் மென்தகடில் ஒட்டப்பட்டு சட்டமிடப்பட்ட அந்த வளாகத்தின் வரைபடம். அதனை ஒட்டி ஒரு வெள்ளை நிறத்திலான எழுதும் பலகை. வளாக வரைபடம் மற்றும் கதவு இருக்கும் சுவர்களைத் தவிர மற்ற இரண்டு சுவர்களும் கைப்பிடி உயரத்திற்கு செங்கல் சுவராலும். அதற்குமேல் கண்ணாடிகளாலும் ஆனவை. திரைச்சீலைகளால் கண்ணாடி சுவர்கள் மறைக்கப்பட்டிருந்தன. திரைசீலைகளும் மிகவும் சுத்தமாக சாம்பல் நிறத்தில் அந்த அறைக்கு மென்மேலும் அழகு கூட்டிக்கொண்டிருந்தன. கதவு இருந்த பக்கம் மட்டும் மொத்தமும் கண்ணாடியால் ஆனது. அதில் அழகான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உட்புறமிருப்பதை வெளியே காட்டாமல் இருக்கும் சாம்பல் நிற மெல்லிழை(Film) ஒட்டப்பட்டிருந்தது. இடையில் இடுப்புயரத்தில் இரண்டங்குல அகல இடைவெளி விடப்பட்டிருக்க. அதன் வழியாக யாரேனும் வருவதையோ அல்லது காத்திருப்பதையோ பார்க்க இயலும். உடனடியாக “உள்ளே வரலாம்” என்ற உத்தரவைப்பிறப்பிக்க இயலும். திரைசீலையை விலக்கினால் அவனது ஒரு வேலைக்களம்(site) தெரியும். இங்கிருந்தே அந்த வேலைக்களத்தை பார்வையிடவும் முடியும். மற்ற இரண்டு வேலைக்களங்களும் சற்று தொலைவிலிருந்தன.

     உண்மையில் இந்த அறைதான் அவன் சிறுவயது முதலே கனவுகண்டுகொண்டிருந்த கனவு அலுவலக அறை. அதிலும் பொறியியல் படிக்கும்பொழுதே அவனுக்குத் தினமும் ஒரு பெரிய அலுவலகத்தில் மிகவும் உயர்தர வசதிகள் கொண்ட அறையில் கணிப்பொறி முன்பாக அமர்ந்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருப்பதைப்போல் கனவு கண்டுகொண்டிருந்தான். ஏறத்தாழ இருபத்தியிரண்டு வருட அனுபவத்திற்குப்பிறகு இந்த அலுவலக அறை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. முதன்முதலாக இந்த அறையை அவர்கள் ஒதுக்கியிருப்பதாக சொன்னபொழுது வேலைக்களத்தின் அருகிலேயே அவனை இருத்திவைக்கும் வலிந்து திணிக்கப்பட்ட முயற்சிதான் இது என்பதை உணர்ந்ததால் ஆர்வமில்லாமல்தான் வந்து அறையைப்பார்வையிட்டான். முதல் பார்வையிலேயே இவ்வளவு வசதியான அறையா?! அதிலும் அவனைப் போன்ற ஒப்பந்த அடிப்படையிலான வெளிமுகமை(outside agency) பொறியியலாளனுக்கா?! என்ற பெரு வியப்பினூடே சாவியைப் பெற்றுக்கொண்டு அன்று மாலையே அந்த அறையில் வந்தமர்ந்துவிட்டான். காரணம் இதற்கு முன்பாக அவனுக்கென்று தனித்த அலுவலக அறை இதுவரை கிடைத்ததேயில்லை என்பதுதான் உண்மை.

           பொறியியல் முடித்து முதன்முதலாக ஒரு சிறிய கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்தபொழுது அவனுக்கான அலுவலக அறை   என்பது ஒரு மூலையில் இடப்பட்டிருந்த பழைய இரும்பு நாற்காலி மட்டுமே. அந்த நிறுவனமே வெறும் நூற்றியைம்பது சதுர அடியில் இயங்கிக்கொண்டிருக்க அவனுக்கு அந்த மூலையும் இரும்பு நாற்காலியும் கிடைத்ததே பெரிய விஷயம்தான். வேலை நடைபெறும் இடங்களை மேற்பார்வை இட செல்கையில் ஒரு மரத்தடியோ, கீற்றுக்கொட்டகையோ அல்லது கட்டுமானப்பொருட்களை இட்டு வைத்திருக்கும் அறையோ தற்காலிக அலுவலகமாக உருமாறும்.

          அதன்பிறகு நாயலை பேயலை அலைந்து பெங்களூருவில் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான். இரண்டு படுக்கையறைகள் பட்டவாசாலை, அடுக்களை மற்றும் இரண்டு கழிப்பறைகள் கொண்ட  சற்றே பெரிய அலுவலகம் அது. ஒன்றுமில்லை குடியிருக்கும் வீட்டைத்தான் அலுவலகமாக மாற்றியிருந்தார்கள். நிறுவனர் பெரிய படுக்கையறையில் அமர்ந்திருக்க, நிறுவனத்தின் கணக்காளர் (ஒரு அழகான, கெட்ட வார்த்தையில் திட்டுமளவிற்குத் தமிழ் தெரிந்த மராட்டியப்பெண்மணி) சிறிய படுக்கையறையில் அமர்ந்திருக்க, நிறுவனரின் அல்லக்கைகள் பட்டாவாசாலையை பட்டாப்போட்டுக்கொள்ள அவனுக்கு எஞ்சியது அடுக்களை மட்டுமே. ஆனால் அவன் அதற்குள்ளே நுழையவே அஞ்சுவான். காரணம் தேநீரையும் சிற்றுண்டிகளையும் சுடச்சுட தயாரித்துத் தரும் பத்மா. பத்மாவிற்கு பூர்வீகம் ஆந்திர ராயலசீமா.மதர்த்த உடலும் சிரித்த முகமுமாய் அந்த அடுக்களையை ஆண்டுகொண்டிருந்தாள். ஒருவகையில் நிறுவனரின் தூரத்து சொந்தமென்பதாலும் வேலையில் சமர்த்து என்பதாலும் மராட்டியப்பெண்மணியும் பத்மாவும் பலவருட நண்பர்களென்பதாலும் அவளின் கொடி அங்கே உயரப் பறந்து கொண்டிருந்தது. அவனின் அச்சத்திற்குக்காரணம் அவளின் உருவம்தான். பத்மாவிற்கு இரட்டைநாடி சரீரம். அதற்கேற்றவாறு உயரம். ஆனால் அவன் அவளின் மார்பு  உயரத்திற்குக்கூட வரமாட்டான். ஆதலால் எப்பொழுதும் அவனைப்பிடித்து கழுத்தை ஒற்றைக்கையால் வளைத்து கணீர்க்குரலில்..

“நல்லாத்தின்னு சீக்கிரம் ஒடம்ப ஏத்து சார். இல்லன்னா வர்றவ ஒன்ன கக்கத்தில வச்சிக்கிட்டுப்போறமாதிரி ஆயிடும்” என்பாள். அப்பொழுதெல்லாம் கணக்காளரும் நிறுவனரின் அல்லக்கைகளும் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு விரசமாக ஏதேனும் சொல்வார்கள். நல்லவேளையாக அந்த நிறுவனத்தில் அவனுக்கு வேலை எப்பொழுதும் வெளியில்தான். திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமை மட்டுமே அவனுக்கு சிலமணிநேரங்கள் அலுவலகத்தில் வேலை இருக்கும். அப்பொழுதும் அவனுக்கான வேலை நிறுவனருடனும் கணக்காளருடனும் மட்டுமே. மராட்டியப் பெண்மணியிடம் இவன் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கையில் இரண்டு உளுந்த வடைகளையோ அல்லது பருப்பு வடைகளையோ தட்டில் வைத்து கூடவே சிறிய கோப்பைநிறைய நாட்டு வெல்லமிட்டு காய்ச்சியப்பாலும் கொண்டுவந்து வைத்துவிட்டு அவன் முதுகில் செல்லமாகத் தட்டிவிட்டு அவள் வழக்கமாக சொல்லும் வார்த்தைகளை ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தொனியில் சொல்வாள். சில சமயங்களில் அவமானமாகப்பட்டாலும், நோஞ்சானாக அவனிருப்பதால் அவள் பரிதாபப்படுகிறாளோ என்றும் கூட அவனுக்குத் தோன்றுவதுண்டு. எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளக்காரணம் அவளின் அக்கறையும் கைமணமும்தான். பலமுறை முகவாட்டத்திலேயே அவனின் பசியறிந்து கொஞ்சம்போல் ரவா உப்புமாவோ,சேமியா அல்லது அவல் உப்புமாவோ உடனடியாக கிண்டி கொடுத்து சாப்பிட வைத்துவிடுவாள். மெதுவடைகள் அவ்வளவு மிருதுவாக இருக்கும். பருப்பு வடைகளின் சுவை அவன் இதுவரை சுவைத்திராத ருசியில் இருந்தன. மாலை வேளைகளில் அவள் செய்யும் வாழைக்காய் பஜ்ஜிக்காகவே எல்லோரும் காத்துக்கொண்டிருப்பார்கள். நிறுவனம் சிற்றுண்டிகளில் கணக்கு வழக்குப் பார்ப்பதில்லையென்பதால் எப்பொழுதும் கூடுதலாகவே தேவையான பொருட்களை அடுக்களையில் மிக நேர்த்தியாக அடுக்கி வைத்திருப்பாள். அலுவலகத்தில் எல்லோரும் அடிக்கடி தேநீர் அருந்துகையில் இவன் மட்டும் எதுவும் வாய்திறந்து கேட்பதில்லை. தேநீர் காப்பி எதுவும் பழக்கமில்லை என்று முதல்நாளே சொல்லிவிட்டதால், அவன் வரும்போதெல்லாம் அவனுக்கென்றே பால் காய்ச்சிக்கொடுப்பாள். கூடவே அவனை சீண்டும் படி ஏதேனும் சொல்வாள்.அப்பொழுதெல்லாம் மராட்டியப்பெண்மணி 

“பத்து(பத்மா)!, பால்குடி மாறாத பாலகனை கெடுக்காதடி” என்று கண் சிமிட்டியவாறே பத்மாவை விரட்டுவாள். அவனுக்கு அங்கிருந்து கிளம்பினால் போதும் என்றிருக்கும்.

      அதன் பிறகு அவனுக்கு வேலை கிடைத்தது எலஹங்கா தாண்டி தொட்டபள்ளாபுரா செல்லும் வழியில் கானகத்தினுள்ளே இருந்த ஒரு தொழிற்சாலையில். அங்கு அலுவலகம்,தங்கும், தூங்கும் அறை எல்லாம் ஒன்றுதான். சுவரும் கூரையும் உலோகத்தடுகளால் வேயப்பட்டு சிமெண்ட்டால் பூசப்பட்ட தரையையும் கொண்ட குடிசை அது. வெய்யில் காலத்தில் வெக்கையும்,மழைக்காலத்தில் மழைத்துளிகள் தகடுகளில் பட்டுத் தெறிக்கும் ஓசையும்,மெல்லக்கசிந்து வரும் ஈரமும் உள்ளே அமரவே விடாது.

     அதன்பிறகு அவனுக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கிடைத்து சென்றபொழுது தனித்த அலுவலகம் என்பது அவ்வளவு சுலபமல்ல என்பது புரிந்தது. அதற்கு முன்பு அவன் வேலை பார்த்திருந்த நிறுவனங்களில் ஓரிருவர் மட்டுமே பொறியியலாளர்களாக இருந்ததினால் பொறியியலாளர்களுக்கென்று தனித்த அறையென்று ஒன்று இல்லையென்றாலும் மரியாதை இருந்தது. பன்னாட்டு நிறுவனங்களில் அதுகூட இல்லையென்பது புரிந்தது.காரணம் ஒரே திட்டத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள் இருந்தனர். குழுத்தலைவர்கள் மட்டுமே பத்துபேர்கள் இருந்தார்கள். குழுத்தலைவர்களுக்கென்று தனித்த ஒரு கூடம். ஒவ்வொருவருக்கும் ஒரு நாற்காலி ஒரு மேசை. அந்தத் திட்டத்தின் தலைவருக்கு மட்டுமே தனித்த அறை இருந்தது. பொறியியலாளர்களுக்கு ஒரு பெரிய கூடம் .அங்கே வரிசையாக மரப்பெஞ்சுகள் இடப்பட்டிருக்கும். கோப்புகளோ தலைக்கவசமோ வைக்கக்கூட இடமிருக்காது. விளைவு அவன் கோப்புகளையும் தலைக்கவசத்தையும் தங்கும் அறைக்கு எடுத்துச்சென்று எடுத்து வருவான்.

       காலங்கள் உருண்டோட, அவன் திட்டத்தலைவன் ஆனதும் அவனுக்கென்று தனித்த அலுவலக அறையை அவனே உருவாக்கிக்கொள்ள வேண்டிவந்தது. ஏறத்தாழ இந்த கட்டுமானத்துறையிலேயே ஏழெட்டு வருடங்கள் ஊறியபிறகு அவனாலும் அலுவலகம் குறித்த வசதிகளை உலோகத்தகடுகளைத் தாண்டி சிந்திக்க முடியவில்லை. காரணம் அவை அனைத்தும் தற்காலிகமானவை. திட்டங்கள் அல்லது கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு வந்தவுடன் அவை மொத்தமும் காலிசெய்யப்பட வேண்டியவை இருப்பினும் அவன் கொஞ்சம் விசாலமாகவே அலுவலகத்தை அமைக்க ஆரம்பித்தான். அவனுக்கு அடியில் வேலைப்பார்த்த பத்துக்கும் மேற்பட்ட பொறியியலாளர்களுக்கும் தனித்தனியாக மேசை நாற்காலிகளை தருவித்து கொடுத்தான். தனித்த கணினி என்பது அலுவலகத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கும் மேலாளருக்கும் மட்டுமென்பதை மாற்றி பொறியிலாளர்களுக்கும் இரண்டு கணினிகளை வைத்துக்கொடுத்தான். அவனது அறையின் வேலைமட்டும் முடியாமல் வளர்ந்துகொண்டேபோனது. காரணம் அவனின் எதிர்பார்ப்பு கொஞ்சம் கூடுதலாக இருந்ததால் திட்டமிட்டதைவிடவும் சில ஆயிரங்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருந்தது. அதில் அவனுக்கும் அவனது பொது மேலாளருக்கும் உரசல் வந்தது. அவனுடைய பொது மேலாளராக இருந்தவனுக்கு இவன் அலுவலத்தில் அமர்ந்தாலே நவதுவாரங்களும் பற்றியெரிந்தன. எப்பொழுதும் வேலைக்களத்திலேயே அவன்(மூத்த திட்ட மேலாளர் ஆனபின்னும்) இருக்க வேண்டும் என்றான். வரைபடங்கள் படிப்பது,ஆலோசனைக்கூட்டங்கள் நடத்துவது,வேலை செய்யும்  ஒப்பந்ததாரர்களுக்கான வாராந்திர கணக்குகளை ஆய்வு செய்து கணக்காளர்களுக்கு அனுப்பி வைப்பது போன்றவற்றை அவன் இரவு பத்துமணிக்கு மேல்தான் செய்ய இயலும். வேலையில் தனக்கென்று சுதந்திரம் இல்லாதபொழுது என்னவெல்லாம் நேருமோ அத்தனையும் அங்கே நேர்ந்தன. விளைவு அவனுக்கென்று உருவாக்கிய அலுவலகத்தில் சில நாட்கள்கூட உருப்படியாக அமராமலேயே வேலையை உதறித்தள்ளிவிட்டு சொந்த ஊருக்கே சென்று விட்டான்.

           ஆறுமாத ஓய்வுக்குப்பிறகு அவன் தற்சமயம் வேலைசெய்யும் நிறுவனத்தில் சேர்ந்தான். இந்த நிறுவனம் பெரு நிறுவனங்களின் கட்டுமானங்களை நிர்வகிக்கவும் ஆலோசனைகளை வழங்கவும் செய்யும். ஏறத்தாழ பெருநிறுவன அதிகாரிகளுக்கு அல்லக்கைகள் போல செயல்பட பொறியியலாளர்களை வழங்கும் நிறுவனம் என்று பச்சையாகச் சொல்லலாம். இந்த நிறுவனத்திலும் அவனுக்கென்று தனித்த அலுவலக அறையில்லை என்றாலும் அவனுக்கென்று தனித்த ஒரு நாற்காலியும் மேசையும் கிடைத்தன. அடுத்ததாக அவன் மாற்றலானது வட கர்நாடகத்திற்கு. அவன்தான் திட்டத்தலைவன். வழக்கம்போலவே அங்கே அவனின் நிறுவனத்திற்கென்று ஒரு கூடம் ஒதுக்கப்பட அவன் அவனுக்கென்று தனித்த அறையொன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கினான். ஆனால் அந்தப் பெருநிறுவனத்தின் அந்தக் கிளையின்  அதிகாரியான நமல் (பேஷ்வா காலத்து பெயரின் பின்னொட்டுகளை இன்னமும் பெருமையாக கருதும் அறிவாளி) அதற்கு ஒப்புக்கொள்ளவேயில்லை.காரணம் கேட்டபொழுது அவனது நிறுவனத்திலிருந்து பொறியியலாளர்களை வேலைக்கு எடுத்திருப்பது வேலைக்களத்தில் நின்று வேலைபார்ப்பதற்குத்தானேயன்றி அலுவலகத்தில் அமர அல்ல என்றார். வரைபடங்களை பார்க்க, படிக்க வேண்டாமா, கலந்தாலோசனைகளை நடத்த வேண்டாமா? வேலை சார்ந்த மின்னஞ்சல்களை அனுப்ப வேண்டாமா? என்று எத்தனையோ முறை வாதிட்டுப்பார்த்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவனுக்கென்று கிறுக்கன்கள் எங்கிருந்துதான் வருவார்களோ?

          வேறு வழியின்றி அவன் ஒரு வார இறுதியில் அவர் இல்லாத நேரம் பார்த்து அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கூடத்தில் ஒரு ஓரத்தைத்தடுத்து அவனுக்கென்று தனித்த எந்த வசதிகளுமற்ற அலுவலக அறையை உருவாக்கிக்கொண்டான். திங்கள்கிழமை ஏகப்பட்ட சண்டை நடந்தது. நல்லவேளையாக அவன் இப்படி ஒரு அலுவலகம் ஏற்படுத்துவதை முன்கூட்டியே அவனது நிறுவனருக்கு சொல்லியிருந்தான். அவனது நிறுவனர் அந்தப் பெருநிறுவனத்தின் முன்னாள் அதிகாரி. இப்பொழுதும் அவரது வார்த்தைகளுக்கு அப்பெருநிறுவனத்தில் மதிப்பிருந்தது. அதனால் அந்த அதிகாரியால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இருப்பினும் அலுவலக அறை உருவாக்கிய ஒப்பந்ததாரருக்கு அறைக்காக செலவிடப்பட்ட சில ஆயிரத்தொகையை அந்தத் திட்டம் முடிந்தபின்னும் நமல் கொடுக்கவே இல்லை. அடிக்கடி நமல் சொல்லும் வாசகம்

 “காலடியில நின்னு குரைக்கிற நாயிங்களுக்கெல்லாம் சொகுசைக்குடுத்தா நாமதான் பின்னாடி தெருத்தெருவா நின்னு குரைச்சாகனும்”.

    அடுத்ததாக தெலுங்கானாவிற்கு மாற்றலானதும் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தான். அவனுக்கு இராசி, நட்சத்திரம், நேரம், விதி என்பவற்றில் எப்பொழுதுமே நம்பிக்கையிருந்ததில்லை.ஆனால் இதெல்லாம் உண்மைதானோ?! என்று எண்ணுமளவிற்கு அடுத்தடுத்து அவனுக்கொவ்வாத விஷயங்கள் நடக்க ஆரம்பித்தன. அடுத்த ஒரே வாரத்தில் நமலுக்கும் தெலுங்கானாவிற்கே, அவனது திட்டத்திற்கே மாற்றலானது. விளைவு ஆரம்பத்திலிருந்தே தனியறை கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் இல்லாமல் பதினோரு பொறியியலாளர்கள் கொண்ட குழுவிற்கு வெறும் எட்டு பேர் அமரக்கூடிய அறை அலுவலகமாக ஒதுக்கப்பட்டது. கேட்டதற்கு வழக்கமான அதே பதில் கிடைத்தது.கொரானா கால முழுவடைப்பிற்குப் ஒரு பெரிய அலுவலகமே ஒதுக்கப்பட்டு ஒவ்வொருவரும் சற்றுத்தள்ளி வெவ்வேறு வரிசையில் அமரவைக்கப்பட இவனுக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கை அவனது குழுவின் கடைநிலை பொறியியலாளனின் அருகே இருந்தது. வழக்கம்போல் அதற்கும் ஒரு விளக்கம் வந்தது.

“யாரை எங்கே வைக்கவேண்டுமென்பது எனக்குத் தெரியும்”

     அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் முழுதாக குறையாதபொழுதும் இரண்டு மாதம் மட்டுமே என்று சொல்லி, அந்த நகரத்திலேயே இருந்த அப்பெருநிறுவனத்தின் மற்றொரு வளாகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கேயே நிரந்தரமாக வலுக்கட்டாயமாக இருத்திவைக்கப்பட்டான். தினமும் காலையில் இரண்டுமணிநேரமும் மாலையில் இரண்டரை மணிநேரமும் பயணம் செய்தாக வேண்டிய கட்டாயம். வீட்டை மாற்றிக் கொள்ளலாமென்றால் வாங்குகின்ற சம்பளத்தில் முப்பது சதவிகிதத்திற்கும் மேல் வாடகைக்கேத் தாரை வார்க்கவேண்டியநிலை. காரணம் அந்த வளாகம் இருந்த பகுதி முழுவதும் மென்பொருள் நிறுவனங்களே நீக்கமற நிறைந்திருந்தன.

        இங்கே அவனுக்கு வாய்த்தது ஒரு பெரிய அலுவலகம். எதிரெதிரே இருபது பேர் அமருமளவிற்கு நேரியல் பணிமேசைகள்(Lenear workstations) பத்து வரிசைகளுக்கும் மேலாக இடப்பட்டிருக்கும் பெரிய கூடம். அவனுக்கென்று ஒதுக்கப்பட்டது இரண்டாம் வரிசையின் கடைக்கோடி. அவனது கோப்புகளை வைக்க அடுத்த வரிசையின் கடைக்கோடியில் ஒரு சிறிய அலமாரி. உண்மையில் தனித்த அலுவலக அறையென்பது பெரும்பாலும் தற்கால பெருநிறுவனங்களில் அதிலும் பொறியியலாளர்கள் தேனீக்கள் போல் மொய்க்கும் மென்பொருள் நிறுவனங்களில் ஏறத்தாழ அழித்தொழிக்கப் பட்டுவிட்டது. இராணித் தேனீப்போல் யாரோ ஒரு மூத்த அதிகாரிக்கு மட்டுமே ஒரு தனித்த அறை உருவாக்கப்பட்டிருக்கும்.  ஆலோசனைகளை  நடத்த பல கொள்ளளவுகளில் காணொளிக்காட்சி வசதியோடு ஆலோசனைக்கூடங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். கூட்டங்களை நடுத்துபவர்கள் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். அவனுக்கும் இது போன்ற கலாச்சாரத்தில் உடன்பாடு இல்லாமல் இல்லை. காரணம் இந்தக் கலாச்சாரம் அலுவலகங்களில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்கியிருந்ததுதான். ஆனால் ஒப்பந்ததாரர்களுடன் அவன் மேற்கொள்ள வேண்டிய ஆலோசனை கூட்டங்களை பெரிய ஜனத்திரளினூடே நடத்த இயலாததால் தனித்த அறையாக இருந்தால் நன்றாக இருக்குமேயென்றெண்ணினான். ஏனென்றால் அவனிருந்த அலுவலகத்தின் கலந்தாலோசனைக்கூடங்களில் அவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

               தற்பொழுது அதே வளாகத்திலும் அதே அலுவலகத்திலும் நான்கு வருடங்களுக்கு மேல் ஓடிவிட்டன. ஆரம்பத்தில் அறுவர், பின்பு மூவர், அதன் பின் இருவர் எனக் குறைக்கப்பட்டு கடைசியாக அவன் ஒருவனே எஞ்சினான். இருபது வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்ற ஒருவனை ஒரு குழுவை மேலாண்மை செய்யவிடாமல்,பெரிய திட்டங்களை முன்னெடுத்துச்செல்லவிடாமல் ஒற்றை மனிதனாக வேலைசெய்யவைப்பது என்ன மாதிரியான மனநிலை என்பதுதான் அவனுக்கு இன்னும் புரியவில்லை.

        மாதமொருமுறையோ அல்லது அப்பெருநிறுவனத்தின் மூத்த செயல் அதிகாரிகளோ வருகையில் மட்டும் நமல் வருகை தருவார். அவனிடம் ஏதோ பலநாட்கள் பார்க்காத உயிர்நண்பனிடம் பேசுவதைப்போல் உரையாடுவார். வேலை முடிந்து கிளம்பும்பொழுது வழமையாக அவர் உதிர்க்கும் ஒரே பொன் வாக்கியம்

“உன்ன இங்கயே வச்சிருக்கிற காரணம், உன்னால மட்டும்தான் இதத் தனியாப்பண்ண முடியும். பாத்து நல்லபடியாப்பண்ணு”

    அவர் சென்றவுடன் தனக்குத்தானே சிரித்துக்கொண்டு அவனுக்கான வேலைகளில் மூழ்கிவிடுவான். ஏறத்தாழ ஐம்பது ஏக்கர்கள் கொண்ட அந்த வளாகத்தின் முகப்பை உடைத்து தற்காலத் தேவைக்கேற்ப மாற்றியமைக்கும் பணியைத்தான் அவன் தற்சமயம் மேற்கொண்டிருந்தான். முகப்பு அவனது இருக்கையிலிருந்து வலதுபுற வளாகச்சாலை வழியாக நடந்து சென்றால் ஏறத்தாழ ஒரு கிமீ தூரம்.அதே இடதுபுறவளாகச்சாலை வழியாகச்சென்றால் முக்கால் கிமீ தூரம். வழக்கமான தினசரி மேற்பார்வைகளையும் ஆய்வுகளையும் முடித்துவிட்டு அலுவலக வேலைகளை முடிப்பதற்காக வேகவேகமாக வந்து அமர்ந்து மடிக்கணினியைத் திறக்கையில் யாரேனும் அவனை மீண்டும் வேலைக்களத்திற்கே அழைப்பார்கள். அப்பெருநிறுவனத்தின் உச்சாணிக் கொம்புமுதல் சல்லிவேர்கள்வரை யார் வந்தாலும் உள்கட்டமைப்பு (Infrastructure) சார்ந்த விஷயங்களுக்கு அவனே பதில் சொல்லியாக வேண்டுமென்பதால் மறுப்பெதுவும் சொல்லாமல் மீண்டும் வேலைக்களத்திற்கே செல்வான். இப்படியாக நடந்து நடந்து தினசரி அவன் எப்படியும் பதினைந்தாயிரம் தப்படிகளுக்கும் மேல் நடந்துவிடுவான். எப்பொழுதெல்லாம் மீண்டும் மீண்டும் அலுவலகத்திற்கும் வேலைக்களத்திற்கும் வர நேர்கிறதோ அப்பொழுதெல்லாம் வேலைக்களத்தின் அருகிலேயே அலுவலகம் இருந்தால் நன்றாக இருக்குமே என்றெண்ணுவான்.

      ஏறத்தாழ தனித்த அலுவலக கனவுகளை மறந்துபோனபொழுதுதான் நமல் இந்த அறைக்கு அவனது அலுவலகத்தை மாற்றிக்கொள்ளும்படி செல்பேசிவழியாக உத்தரவிட்டிருந்தார்.. உண்மையில், வளாக முகப்பைப் புதுப்பிப்பதினால், அந்த அறையில் இருந்துகொண்டு மொத்தவளாகத்தின் பாதுகாப்பையும் தினசரி நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த முன்னாள் இராணுவ அதிகாரியான கர்னல் ஒருவரின் அறை அது. புதுப்பிப்பதற்கான வேலைகள் ஆரம்பித்ததும் அந்தக்கர்னல் வளாகத்தின் உள்ளே மாறிக்கொண்டுவிட்டார். உண்மையில் அந்த அலுவலக அறை இருக்கும் சிறிய கட்டிடமும் உடைக்கப்பட வேண்டியதுதான். ஆனால் அது திட்டவரைவில் கடைசியாக இருந்தது.அதற்கு எப்படியும் இன்னும் இரண்டு வருடங்கள் ஆகலாம். தற்காலிகமேயென்றாலும் இரண்டு வருடங்கள் வசதியான தனி அலுவலக அறையில் இருப்போமே என்ற எண்ணத்தில்தான் அவன் இந்த வாய்ப்பை ஒப்புக்கொண்டான்.

        அந்த அறைக்கு மாறியபிறகு வேலைகள் இன்னும் சுலபமாயின. எத்தனை அதிகாரிகள் வந்தாலும் மிகவும் உற்சாகத்துடன் எதிர்கொண்டான். மணிக்கொருமுறை வேலைக்களத்தைப் பார்வையிட்டு வேலைகளும் விரைவாக நடைபெறுமாறு செய்தான். பிடித்தமான, வசதியான மற்றும் அண்மையில் உள்ள ஒரு அலுவலக அறை அவனது வேலைத்திறனில் இத்தகைய மாற்றங்களை கொண்டுவருமென்று அவன் ஒருபோதும் நினைத்திருந்ததில்லை. ஆனால் அதனைக் கண்கூடாகக் கண்டு அனுபவித்தான். ஆனால் அவனது வேலை முழுவதும் வளாகத்தின் முகப்பிலேயே இருந்ததினால் வளாகத்தினுள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. அவ்வப்பொழுது நடைபெறும் கொண்டாட்டங்களை பார்வையிடும் வாய்ப்புகள் அவனுக்குக் கிடைக்கவில்லை. உண்மையில் இதுபோன்ற பெருநிறுவனங்கள் அவனைப் போன்ற வெளிமுகமைப்(outside agencies) பொறியியலாளர்களை மிகக்கேவலமாகவே நடத்தும். அவர்களின் கொண்டாட்டங்களை இவனைப்போன்றவர்கள் பார்க்கக்கூட அனுமதிக்க மாட்டார்கள். வளாகத்தினுள்ளே இயங்கும் உணவகங்களுக்கு செல்லக்கூட அனுமதியிருப்பதில்லை. ஆனால் இவன் ஒருவனே இருந்ததினாலும், நான்கு வருடங்களுக்கும் மேல் அங்கேயே இருந்ததினாலும், மிகவும் சுதந்திரமாக வளாகத்தினுள்ளே அவ்வப்பொழுது நடைபெறும் நிகழ்வுகளையும் கொண்டாட்டங்களையும் கண்டுக்களித்துக் கொண்டிருந்தான். தற்சமயம் அவனால் அது முடியவில்லை. அதில் அவனுக்கு வருத்தமுமில்லை

       இரண்டு மாதங்களுக்குப்பிறகு இன்றுதான் நமல் வந்து வேலைக்களத்தைப் பார்வையிட்டார். முதல் கட்ட வேலைகள் ஏறத்தாழ முடிவடைந்திருந்தன. இனி முகப்பிலேயே கட்ட வேண்டிய சில சிறிய கட்டிடங்களுக்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். அதனை அப்பெரு நிறுவனவளாகத்தின் மற்ற அதிகாரிகளுக்கு முறைப்படி அறிவிப்பதற்காககத்தான் வந்திருந்தார். வேலைக்களங்களை பார்வையிட்டபின், வளாகத்தினுள்ளே சென்று முக்கியத்துறைகளின் தலைவர்களை சந்தித்துவிட்டு. மீண்டும் வேலைக்களத்திற்கு வந்து சிறிய கட்டிட வேலைகளை உடனடியாகத் தொடங்கும்படி சொல்லிவிட்டு வழக்கம்போல் அவனிடம் அந்த வார்த்தைகளைச் சொன்னார்.

“சந்துரு ,இப்பப் புரியுதா ஏன் உன்ன இங்கயே வச்சிருக்கேன்னு? யார் இருந்தாலும் இல்லேன்னாலும் நீ உன் வேலைய மட்டும் பாத்துக்கிட்டேயிருப்ப. அதுவுமில்லாம இந்தளவுக்கு அனுபவம் உள்ளவங்களாலதான் இந்த மாதிரி ஆபரேஷனல் கேம்பஸ்ல உள்ள வேலைகளைப் பொறுமையா சரியாச் செய்ய முடியும்.”

“……” அவன் மெலிதாகப்புன்னகைத்தான்.

“ஆமா,நான் கேக்கனும்னு நெனச்சேன் .எப்படியிருக்கு ஒன்னோட புது ஆஃபீஸ்?”

அவனுக்குள் ஏதோவொன்று கட்டுடைந்தது. மிகவும் உற்சாகமாக

“சூப்பர் சார்!.இத்தனை வருஷத்துல இவ்வளவு வசதியான ஆஃபீஸ் கெடைச்சதேயில்லை சார்!!. அருமையான ஆஃபீஸ் சார்!”

“அப்படியா!?.நான் கொஞ்சம் பாக்கனுமே?”

“வாங்க சார் காட்டுறேன்” என்றவாறே அவரை அலுவலக அறையை நோக்கி அழைத்துச் சென்றான்.

        அறையைத்திறந்து அவருக்குக் காட்டினான். அவர் மிகக்கவனமாக அந்த அறையைப்பார்த்தார். அழகான மேசையையும் அலமாரிகளையும் பார்த்தவர், அறையின் அளவுகளைக்கேட்டார். அவனும் அனைத்தையும் சொன்னான். வழக்கமாக அவனமரும் நாற்காலியிலமர்ந்து அறையை மென்மேலும் நோட்டமிட்டவர் எதுவும் சொல்லாமல் மெதுவாக எழுந்து வெளியில் வந்து ஏதோ ஒரு சிந்தனையிலாழ்ந்தார். பின்னர் அவனிடமிருந்து கொஞ்ச தூரம் விலகிநின்று யாரிடமோ செல்பேசியில் பேசினார். சில நிமிடங்களுக்குப்பிறகு அவனிடம் வந்து

“சந்துரு,இந்த ரூம்ல இருக்கிற டேபிள்,சேர், கப்போர்ட் எல்லாத்தையும் பிரிச்சி பேக் பண்ணி அந்த கேம்பஸ்ல இருக்கிற என் ரூமுக்கு அனுப்பிவை. ஏசி ஃபேனல்லாம் கழட்டிட்டு இந்த பில்டிங்க ஒடைக்க ஆரம்பி. இன்னும் ஒரு வாரத்தில வேல முடியனும்.சரியா?”

“சார் .இது நம்மளோட பைனல் ஃபேஸ்லதான் சார் வரும். புது பில்டிங்லாம் ரெடியானப்புறம்தான பழச ஒடைக்கனும்?. இப்பவே ஏன் சார் ஒடைக்கனும்? ”  

“இல்ல சந்துரு,இத ஒடச்சாத்தான் உள்ள நடந்திருக்கிற வேல வெளில தெரியும். இப்பப்பாரு மெயின் ரோட்டுல இருந்து பாக்குறப்போ உள்ளார இருக்குற எல்லாத்தையும் இந்த பில்டிங் நந்தி மாறி மறைக்குது”

“நான் எங்க சார் உக்காருறது.? இது சைட்டுக்கு பக்கத்துலயே இருக்கிறதுனால ரொம்ப கம்ஃபர்ட்டபிளா இருந்துச்சு”

“எங்க இருந்தியோ அங்கேயேப் போய்டு”

“!!….!!”

 கொஞ்சம் சிந்தித்தப்பின் அவனுக்கு சிரிப்புத்தான் வந்தது. ஆனால் அவன் என்ன சொல்ல இயலும்? “சரிங்க சார் ” என்பதைத்தவிர இவன் சரியென்று சொன்னதும் எதுவும் சொல்லாமலேயே கிளம்பிப் போயிருந்தார் அவர்.

  மனம் மிக கணக்க,உள்ளே ஏற்பட்ட ஏமாற்றத்தையும் வலியையும் பொருட்படுத்தாமல், இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்த அதே அலுவலகக் கூடத்திற்கு மீண்டும் செல்லும் வேலைகளில் மிக வேகமாக இயந்திரகதியில் இயங்க ஆரம்பித்தான் அவன்.

00

பிறைநுதல்

இயற்பெயர் :சு.சந்திரசேகரன்.

ஊர் :நாட்டார்மங்கலம் ,ஆலத்தூர் வட்டம்,பெரம்பலூர் மாவட்டம்

படிப்பு :பொறியியலில் இளங்கலைப் பட்டம் (அமைப்பியல் துறை)

பணி : தற்சமயம் தெலுங்கானாவில் ஒருதனியார் நிறுவனத்தில்

வயது : 45

ஆக்கங்கள் : சொல்வனம்,பதாகை,வாசகசாலை மற்றும் பண்புடன் இணைய இதழ்களில்.

இதுவரை பதினைந்து சிறுகதைகள் மற்றும் எட்டு கவிதைகள் வெளியாகியிருக்கின்றன..அமேசான் கிண்டிலில் ஒரு புதினம் (தொலைந்(த்)த முகவரி) வெளியாகியிருக்கிறது.

.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *