-வா.மு.கோமு
மனோகரனுக்கு வயது ஐம்பத்தைந்து ஆகிவிட்டது. இதுகாலம் வரை அவன் உடலில் குளுக்கோஸ் கூட இறங்கியிருக்கவில்லை. ஊசிபோடுவதற்கு அவனுக்கு இன்னமும் பயம் தான். அதற்காகவே காய்ச்சல் சளி இப்படியான தொந்தரவிற்கெல்லாம் மருத்துவரை நாடி அவன் செல்வதில்லை. வீட்டில் அவன் மனைவி கூட காய்ச்சலில் இவன் அணத்தும்போது, ‘உள்ளூரு செல்வராசு ஆட்டோவை கூப்புடட்டுமுங்களா? போயி ஒரு ஊசியக்குத்தீட்டு நாலு மாத்திரை வாங்கிட்டு வந்துடலாம்!’ என்று கூப்பிடுகையில் நெற்றிக்கு நனைத்த ஈரத்துண்டைப் போட்டுக்கொண்டு படுத்துவிடுவான். அவனுக்கு காய்ச்சல் என்றால் பாராசிட்டமால் மாத்திரையின் பெயர் தான் ஞாபகத்துக்கு வரும். அதுவும் இந்த கொரனாவிற்குப் பின்னால் தான். இப்போது அதையும் சாப்பிடக்கூடாதென்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அலைபேசியும் கையுமாக இருப்பவனுக்கு உள்ளுர் செய்திகளிலிருந்து உலகச் செய்திகள் வரை தெரிந்து வைத்திருப்பது பொழுது போக்குக்காகத்தான்.
முன்பாக காய்ச்சல், சளி என்று மெடிக்கலில் போய் சொல்லி மாத்திரைகள் வாங்கிவந்துவிடுவான். ஊசி போடக்கூடாது என்ற நினைப்பிலேயே இவன் மாத்திரைகளை விழுங்குவதால் காய்ச்சலும் சீக்கிரமே குணமாகிவிடும். சளித் தொந்தரவுக்குத்தான் இருக்கவே இருக்கிறதே ஓக்வாட் ரம்! அந்தக்கருமத்தின் நாற்றம் இவனுக்கு ஒமட்டிகொண்டு வருமென்றாலும் சளிக்கு டானிக் அதுதானே என்று சளி தீரும்வரை ஓக்வாட் தான் முகத்தை அஷ்டகோணலாக்கிக்கொண்டு குடிப்பான். சளி காலியான பிறகாக எம்.சி, ஹனிபி என்று பிராந்திக்கு தாவிடுவான்.
இப்படியான மனோகரனுக்கு பெரிய தொந்தரவாக இருப்பது டாஸ்மார்க் கடைகள் இருக்கும் தூர அளவுகள் தான். இவன் ஊர் தெரியாத்தனமாய் நடுவில் சிக்கிக்கொண்டதாய் இன்னமும் நினைத்துக்கொண்டே சங்கடப்படுகிறான். வடக்குதிசையில் சென்றால் பதினொரு கிலோ மீட்டர் தூரம் வருகிறது. தெற்கு திசையில் சென்றால் எட்டு கிலோ மீட்டர் வருகிறது. கிழக்கே ஏழு தான் என்றாலும் அங்கே வரிசையில் முப்பது பேர் எந்த நேரமும் நிற்பார்கள். இவன் போய் வரிசையில் நிற்பதாவது? செல்லலாம் தான் என்றாலும் வரிசையில் இந்திக்காரப்பயல்களே நிற்பார்கள். நம் ஆட்கள் அப்படி நின்றிருந்தால் சைசாய் ஒரு கோட்டருக்கு கையில் திணித்துவிட்டு வந்து ஓரமாய் மரநிழலில் அமர்ந்திடலாம்! அதற்கு அங்கே வழியில்லை. இன்னும் கொஞ்சம் அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் கிழக்கே சென்றால் லெவன் டு லெவன் இருக்கிறது. அங்கே பாட்டிலுக்கு நாற்பது அதிகம் கொடுக்க வேண்டுமே! பிச்சையெடுக்குதாம் பெருமாளு அதையும் புடுங்குதாம் அனுமாரு!
சரி இவன் இருக்கும் ஊரின் பெயரோ அல்லது இவன் குறிப்பிடும் டாஸ்மார்க் கடை இருக்கும் ஊரின் பெயர்களையோ தெரிந்து கொண்டால் இதை வாசிப்பவர்கள் மாபெரும் மகிழ்ச்சி மனநிலைக்கு தாவிடுவார்களா? என்றால் அதெல்லாம் இல்லை தானே! மனோகரன் என்றுகூட இவனுக்கு பெயர் வைப்பதற்குப் பதிலாக ’மதுவிரும்பி’ என்றுகூட வைத்திருக்கலாம். அப்படியானால் இந்தக்கதையானது மதுவிரும்பிக்கு வயது ஐம்பத்தைந்து ஆகிவிட்டது என்று இந்தக்கதை துவங்கியிருக்கும்.
ஆக மனோகரன் பெட்ரோல் அடித்து வண்டியோட்டி கட்டுபடி ஆகாதென மின்சார வாகனம் ஒன்றை வாங்கி ஒருவருடகாலமாக சத்தமில்லாமல் சாலையில் போய்வந்து கொண்டிருந்தான். சாலையில் படுத்திருக்கும் நாய்களுக்கு இந்த சத்தமில்லா வாகனம் மீது என்ன அதிருப்தியோ தெரியவில்லை.. எப்போதும் படுத்திருக்கும் நாய்கள் இவன் வண்டியைக்கண்டால் மட்டுமே ரெஸ்ட் எடுப்பதை விட்டுவிட்டு மளாரென கிளம்பி இன்றோடு இவனை வண்டியோடு சேர்த்து விழுங்கிவிடுகிறேன் பார்! என்று முடிந்த மட்டிலும் பல்லைக்கிஞ்சிக்கொண்டு துரத்த ஆரம்பித்துவிடுகின்றன. மனோகரன் குடிப்பதற்காக செல்கையில் மட்டுமே நாய்களின் துரத்தல்களுக்கு பயப்படுவான். குடித்துவிட்டு திரும்புகையில் நாய்களே மிரளும் அளவு வண்டியை நிறுத்திவிட்டு அவைகளை துரத்துவான் கையில் ஓடைக்கல்லோடு! ‘அட உடுங்க வாயில்லா ஜீவன் அது!’ என்று பார்ப்போர் யாரேனும் சொன்னால், ‘பின்ன எப்பப்பாருங்க.. எம்பட வண்டியைக் கண்டாமட்டும் எளக்காரம் அதுங்களுக்கு!’ என்பான்.
கணக்கான போதையில் கடையிலிருந்து வண்டியை எடுத்துக்கிளம்பலாமென்றால் சக குடிவிரும்பிகள் பீடிப்பொகையை ஊதியபடி, ‘தலைவரே! எத்தன கிலோமீட்டரு இது கிடைக்குது?’ என்னமோ காலையில் தூங்கி விழித்ததும் மொத வேலையாய் பஸ் ஏறிப்போய் இந்த வண்டியை வாங்கிக்கொண்டு நாளை புதுவண்டியில் வந்திறங்கி குடித்துவிட்டு பீடி குடிக்கும் பாவனையில் விசாரிப்பார்கள்.
“இந்த வண்டீங்களா? இது நூத்தம்பது கிலோமீட்டரு போவுமுங்க! பெருசா கணக்கு வச்சிக்கறதில்லீங்!”
“என்னுங்கொ சொல்றீங்கொ.. முந்தாநேத்து ஒன்னேகால் லச்சத்துல எங்கூருக்காரரு நெம்பர் வண்டி வாங்கிட்டு வந்தாரு.. நூத்தி இருவது கிலோ மீட்டர் போவுமின்னு சொன்னாரு!”
“என்னட வண்டி அம்பது ரூவாங்க!”
“வெறும் அம்பதா? வண்டியை பார்க்க லட்சணமா சைடு பிட்டிங்ஸெல்லாம் போட்டு தகத்தகன்னு மின்னுதுங்களே! அம்பதா?”
“அம்பது தானுங்க!’’ என்றவன் வண்டியை கிளப்ப, ‘சித்த டீட்டெய்லு சொல்லிட்டு போங்க!’ குரல் கேட்கக் கேட்கவே.. ‘இந்த வண்டி நம்ம எமலோகத்துலயே சீப் அண்டு பெஸ்ட்’ என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டான். இன்னம் சித்தங்கூரியம் அங்கே பேசிக்கொண்டு நின்றால் இருக்கும் கொஞ்சம் கிர்ர்ரும் காலியாகிடுமே!
ஆக தெற்கு திசையில் எட்டு கிலோ மீட்டரில் இருக்கும் கடைக்கு கடந்த இரண்டு மாதமாக மனோகரன் மாலையில் ஆறு மணியைப்போல கிளம்பி ஆறரைக்கு கடையில் கோட்டரை வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தான். இந்த ஒழுங்கு அவ்வப்போது மாறிவிடவும் கூடும். வடக்கே பதினொரு கிலோமீட்டர் செல்கையில் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும், கட்டடம் கட்டுவதற்கு தேவையான பொருட்களையும் கூட வாங்கி வந்துவிடலாம். இங்கே அதற்கு வாய்ப்பில்லை.
மனோகரன் ஊரிலிருந்து கிளம்பினால் இரண்டாவது கிலோமீட்டரில் ஒரு சிற்றூர் இருக்கிறது. இவன் ஆறும்பத்து என்கிற சமயத்தில் ஊரை கிராஸ் செய்து போவான் என்பதை உணர்ந்திருந்த சிலர் அங்கே ஊர்ச்சாலையில் கொடிக்கம்பத் திண்டிலும், விநாயகர் கோவில் திண்டிலும் அமர்ந்திருப்பார்கள். சில சமயம் இவனிடம், ’எம்.சி ஒரு கோட்டர் வாங்கிட்டு வா மனோகரா!’ ‘எதாச்சி ஒரு ரம்மு வாங்கிட்டு வா மனோகரா!’ ‘ஆரஞ்சி வோட்கா ஒன்னு!’ என்று பணம் கொடுத்து விடுவார்கள். இது தினமும் சல்லையாய் இருந்தது இவனுக்கு. மறுக்கவும் முடியவில்லை! இதற்காகவே இவன் சரக்கை கடையிலேயே செலவானாலும் பரவாயில்லையென அடித்து முடித்துவிட்டு சாவுகாசமாய் வந்து சேர்ந்தாலும் ‘அப்பலையா புடிச்சு தெக்கையே பார்த்துட்டு இருந்தேன் மனோகரா.. வண்டிகீது பஞ்சராயிடுச்சா வர்ற வழியில?’ என்று கொஞ்சமும் சங்கடப்படாமல் வாங்கி டவுசர் ஜோப்பில் போட்டுக்கொள்கிறார்களே!
ஆனாலும் அதில் சண்முகன் என்கிற இவனுக்கும் மூத்தவன் ஒருவன் ஒருநாள் சொன்னான்.. ’இவனுகளுக்கு பாட்டலு வாங்கீட்டு வந்து குடுக்காதெ மனோகரா.. நீ வர்ற வரைக்கிம் கண்டபடி உன்னை திட்டுறானுக.. எல்லாரும் என் பங்காளிங்க தான். ஆனா உனக்கு இதெல்லாம் தேவையா? போனவன் டிச்சுக்குழியில உழுந்து நொறுங்கீட்டானாட்ட இருக்குதுன்றானுக.. செத்துப்போயிட்டானோ என்னமோன்னு பேசுறானுங்க.. ஊட்டுச் சோத்தை தின்னுட்டு இவனுங்க வாயில உழுவறதெல்ல்லாம் நல்லதா உனக்கு சொல்லு? அட நீ கொண்டாந்து குடுக்கறதுக்குள்ள இவனுக தலையெல்லாம் வெடிச்சிப்போயிருமா என்ன? தேவையின்னா ஆளாளுக்கு ஊட்டுல டிவிஎஸ் வச்சிருக்கானுங்கள்ள.. எடுத்துட்டு போக வேண்டீது தான! போக மாட்டானுங்க.. பொண்டாட்டிங்க பொழுதானா வண்டியை கையில தொட உட்டுருவாளுங்களா? கையை திருப்பி உட்டுருவாளுங்க! சொல்லிட்டேன்.. அப்புறம் உன்பாடு!’
அடுத்த நாள் நான்கு நபர்கள் இவனிடம் ‘ஆரஞ்சி வோட்கா, டைமண்ட் ரம், எம்.சி ரெண்டு’ என பணம் கொடுத்துவிட்டார்கள். இதில் எம்.சி வேணுமென்றவனுக்கு முப்பது ரூபாய் மனோகரனே கைக்காசு போட்டு வாங்கி வந்து தரவேண்டும். நேற்று சண்முகம் சொன்னது இவன் மனதை குடைந்துகொண்டேயிருந்தது. இவன் ஹனிபி ஒன்றை வாங்கிக்கொண்டு சாக்னா கடையில் நுழைந்தான். முட்டை போண்டா தயாரகிக்கொண்டிருந்தது. இன்று வெள்ளிக்கிழமை. மனோகரனுக்கு தன் மனைவியின் குரல் காதில் கேட்டது. ‘வெள்ளிக்கிழமை அதையெல்லாம் தொடப்புடாது’
கொய்யாக்காயை வெட்டித்துண்டுகளாக்கி தந்தார்கள். முட்டை போண்டா வாசனை இவனை இழுத்துக்கொண்டேயிருந்தது. பக்கத்து டேபிளில் இருவர் அதை வெளுத்து வாங்குவதை ஓரக்கண்ணால் பார்த்து துக்கப்பட்டான். இவன் பாட்டிலை மெதுவாக ஐந்து கட்டிங்குகளாக காலி செய்யும் முடிவில் கொய்யாத் துண்டுகளை கொஞ்சிக்கொண்டிருந்தான். ‘ஏனுங்! ஒரு பீசு குடுங்!’ ‘ஏனுங்! ஒரு கொய்யா பீசு குடுங்!’ ஓசியில் இவன் துண்டுகள் ஒவ்வொன்றாய் தட்டிலிருந்து கிளம்பின. பக்கத்தில் ஒருவன் மண்டையை சொறிந்துகொண்டே நின்றிருந்தான். அவன் முகத்தை மட்டும் ஏரிட்டு பார்த்திடல் கூடா வென தலையை வேறுதிசையில் வைத்திருந்தான் மனோகரன். அவனும் சளைத்தவனல்ல போன்றே இவன் பார்வை திசைக்கே வந்து நின்றான். இறுதியாக அவன் ஜெயித்தான். ‘உனக்கு என்னதான் வேணும்?’ கேட்டிருந்தான் இவன்.
“காலி பாட்டிலை குடுத்தீங்கன்னா பத்து ரூவா கிடைக்குமுங்க எனக்கு. கட்டிங்குக்கு பத்துரூவா பத்தல எனக்கு!”
“அதுக்காக நான் சீக்கிரமா குடிச்சி முடிச்சி உனக்கு பாட்டிலை குடுக்கணுமா?”
“நீங்க மவராசரு மெதுவா குடிங் சாமி!”
“நீ காவலுக்கு நிக்கிறேங்கறியா?”
“சாமி இப்பிடி ஓரமாத்தானுங்க நான் நிக்கேன்! இல்லீன்னா குக்கிக்கறனுங்!”
“போயி வேற யாராச்சிம் பாட்டல் குடுப்பாங்களான்னு பாரு போ! இந்த பாட்டல் உனக்குத்தான். போறப்ப உனக்கே குடுத்துட்டு போயிடறேன் சாமி! நீ பக்கத்துல நின்னுட்டே இருந்தா எனக்கு போதையே ஏற மாட்டீங்குது!” தயங்கி தயங்கி அவன் நகர்ந்தான் வேறு டேபிள் நோக்கி.
பின்பாக கொஞ்சம் ஊற்ரிக்கொண்டு அலைபேசியில் ரீல்ஸ் பார்த்து மகிழ்ந்தான்.
“ஊர்ல ஹான்ஸ், பான்பராக்கு வித்துட்டு இருந்த கடைங்களுக்கெல்லாம் சீல் வச்சிட்டாங்க மாப்ளெ! ரெண்டு நாளா ஹான்ஸ் போடாம பைத்தியம் புடிச்சாப்ல இருக்குது! ஏம் மாப்ளெ.. அதுங்கெல்லாம் போதைப்பொருள்கள்னா இந்த சாராயம் எந்த லிஸ்ட்டுல வருது? இதென்ன சரக்கா? சரக்குன்னா பாண்டிச்சேரில, பெங்களூர்ல கிடைக்கிறது தான் சரக்கு மாப்ளெ! இதுக ஸ்பிரிட்டுக! கண்ணு முன்னால போயிரும்! அப்புறம் கொடலு போவும்! அப்புறம் குந்தாமணி போவும்! ஆமா எப்பத்தான் நல்ல சரக்குங்களை விசய் நமக்கெல்லாம் ஏற்பாடு பண்டி குடுப்பாப்ல? ஆமா.. இந்த பீடி சிகரெட்டெல்லாம் என்ன கணக்குல வருது? அதை மட்டும் கட்டுக்கட்டா வித்துட்டு இருக்காங்க? அதுங்களுக்கும் தடையை போடச்சொல்லி நீ விசய் அண்ணாக்கு ஒரு போனைப் போடு! எல்லாத்தையும் முடிச்சு உட்டுட்டா ஊருக்குள்ள பைத்தியகாரங்க ஜாஸ்த்தியா சுத்துவாங்கள்ள! ஒரு கணக்குத்தான் மாப்ளெ!” -பக்கத்து டேபிளில் மாப்பிள்ளை போதையில் கண்ணீர் மல்க மாமனின் திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலையில் அமர்ந்திருந்தான்.
மனோகரன் திரும்பவும் ஒரு கோட்டர் வாங்கிக்கொண்டு வந்து அமர்ந்தான். முன்னே குடித்த பாட்டிலை கொடுத்து பத்துரூபாய் காசாக வாங்கி சட்டை மேல்பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். பாட்டிலை கேட்டுக்கொண்டு நின்றிருந்த ஆளை சாக்னா கடைமுழுதும் கண்ணை ஓட்டிப்பார்த்தும் காணவில்லை. மீண்டும் கொய்யா வாங்க மனமில்லாமல் பச்சைப்பட்டாணி பாக்கெட்டில் ஒன்றை வாங்கிக்கொண்டுவந்து அமர்ந்தான். கட்டிங்கை இரண்டாக போட்டுவிட்டு மணியைப் பார்த்தான். எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது. போதையும் கொஞ்சம் தூக்கலாக இருந்தது. அரைக்கட்டிங்கை ஜோப்பில் போட்டுக்கொண்டு முகப்பிலிருந்த டாஸ்மார்க் கடைக்கு வந்தான்.
“ஆப்பிள் வோட்கா ஒன்னு, டைமண்ட் ரம் ஒன்னு, ஒரு எம் சி!” சொல்லி வாங்கிக்கொண்டு கிளம்பினான். ‘இன்னொரு எம்.சி?’ வாசகர் ஒருவர் இவன் காதில் ஞாபகப்படுத்த குரலிட்டார். அதைக்கண்டுகொள்ளாமல் வண்டியை முறுக்கினான். ‘வேணுக்குனே ஏன் மனோகரா ஆரஞ்சி வோட்கா வாங்காம ஆப்பிள் ஃப்ளேவர் வாங்குனே?’ கார்னர் திரும்புகையில் இந்திக்காரன் ஒருவன் பெரிய கட்டைப்பையை கையில் வைத்துக்கொண்டு லிப்ட் கேட்டான். எப்போதுமே மின்சார ஸ்கூட்டரில் டபுள்ஸ் ஏற்றாதவன் சரக்கு வீசியிருந்ததால் நிப்பாட்டினான். ‘சார்! சிற்றூர்க்கா போறீங்க!’ ‘ஏறுடா பையா!’ என்றதும் அவன் பின்னால் தொத்திக்கொண்டான். கட்டைப்பைக்குள் சலங் புலங்கென சப்தம் வந்தது.
“அங்கே கம்பெனி பில்டிங் ஒன்னு ஆகுதுல்ல சார்.. அதுல ஜாப்ல இர்க்கோம்”
“பையில என்னடா பாட்டலா?”
“ஆமா சார்.. இர்பது கோட்டரு, நால் பீரு”
“ஆமா எந்த ஊரு நீங்கெல்லாம்?”
“ஒரீசா”
“அங்கெல்லாம் உங்களுக்கு பிழைக்க வழியில்லியாடா?”
“அங்க ஒன்னுமில்ல சார்! இங்க ஜாப் நிறைய இர்க்கு”
“உன் பேரு என்ன?”
“பரிச்சன்”
“பரிச்சன்.. என்னடா பேரு இது குழி பறிச்சேன், வங்கு பறைச்சேன்னு”
“சாரை டெய்லியு நான் பார்த்திருக்கேன் சார்.. டெய்லியு இந்த பைக்கில டாச்மார்க்குக்கு ஈவினிங் வரும் போகும்!”
“அடங்கொன்னியா! ஆமாண்டா..”
“பில்டிங் டூட்டி ஆறுமணிக்கி எங்கள்க்கு குளோஸ் ஆயிடும். அப்போ குளிச்சிட்டே இர்ப்போம்! அதுக்கும் மேல சைக்கிள்ல இங்கே ஜாமான் வாங்க வர்வோம். இன்னிக்கி சைக்கிள் பஞ்ச்சர். நடந்தே வந்தேன்! சார் நாளைக்கி வரும்?”
“ஆறுமணிக்கி வருவேண்டா..நீ பில்டிங் முன்னால ரோட்டும்பேர்ல நில்லு. நாம வருவோம்!”
“தேங்யூ சார்! பில்டிங் வந்தாச்சு சார். அப்ப சார் போகட்டும்!” இறங்கிக்கொண்டான் பரிச்சன்.
ஊரு விட்டு ஊரு வந்து பிழைப்பை பார்க்கிறான்கள். பணங்காசு சேர்த்து ஊரிலிருக்கும் மனைவி, அம்மாக்கு அனுப்புகிறார்கள். குடிக்கவும் பழகியிருக்கிறார்கள். கடந்த ஒருவருடமாகவே இங்கே பெரிய கம்பெனி ஒன்று வரப்போவதாய் கட்டிடப்பணி துவங்குகையில் பேசினார்கள். என்ன கம்பெனி என்கிற விவாதமெல்லாம் ஓடியது. பின் அதுவும் நின்றுபோனது. இப்போது கட்டிடம் உயர்ந்துவிட்டது. அப்படியொன்று ஆகிக்கொண்டிருப்பதை சாலையில் செல்வோர் யாரும் பெரிதாய் கவனிப்பதுமில்லை. அப்படித்தான் மனோகரனும் அதை பார்த்தபடி கிராஸ் செய்வதோடு சரி.
சிற்றூரில் இவன் வண்டிக்காகவே அந்த நால்வர் மட்டுமே இப்போது விநாயகர் கோவில் திண்டில் காத்திருந்தார்கள். மணி எட்டரையைத்தாண்டியிருந்தது. ‘ஆரஞ்சி வோட்கா இல்ல.. ஆப்பிள் தான் இருந்துச்சு!’ என்று எடுத்து நீட்டினான். ‘எதோ ஒன்னு.. இருந்தாச்செரி மனோகரா.. ஆமா ஏன் லேட்டு?” ‘தெரிஞ்சவன் ஒருத்தன் வந்துட்டான்.. அவன்கூட குடிச்சிட்டே லேட் ஆயிடுச்சு.. இது ரம்மு.. பிடிங்க.. இது எம் சி!”
“எனக்கு எங்க மனோகரா எம் சி?”
“அது வந்து நண்பர் வந்ததால சாக்னா கடையில இருந்த காசெல்லாம் செலவாயிடுச்சு! நாளைக்கி வந்து தர்றேன்னு கடையில சொன்னேன். கடையில அப்பிடியெல்லாம் ஏவாரம் பண்றதில்லீங்கன்னு சொல்லிட்டாங்க! இந்தா உன்னோட நூத்தம்பது ரூவா!”
கையில் வாங்கிக்கொண்டே, ‘இன்னாவரைக்கிம் நீயி வாங்கிட்டு வந்திருவீன்னு நாயி மாதிரி காத்துட்டு குக்கீட்டு இருந்தேன் மனோகரா.. ஒரு முப்பது ரூவா உங்கிட்ட இல்லாமப் போயிடுச்சா?’ என்றவனுக்கு பதிலெதுவும் சொல்லாமல் மனோகரன் கிளம்பினான்.
அடுத்த நாள் மாலையில் மனோகரன் சிற்றூர் வழியே செல்கையில் வழக்கம்போல ஏழெட்டுப்பேர் விநாயகர் கோவில் திண்டில் அமர்ந்திருந்தார்கள். இவன் வண்டியை அங்கே செல்கையில் மெதுவாகத்தான் செலுத்துவான். அங்கே சாலையில் ஒரு ஸ்பீடு பிரேக்கர் இருக்கிறது. மெதுவாக அதில் ஏற்றித் தாண்டியவன் வேகமெடுத்தான். யாரும் ‘மனோகரா!’ என்று அன்று கூப்பிடவேயில்லை. மனோகரன் நேற்றிலிருந்து அவர்களுக்கு எதிரி ஆகிவிட்டான். அடுத்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கே எதிரியாகிவிடுவது என்பது இவன் மண்டையோட்டில் எழுதியிருக்கிறது. அவர்களுக்கு அடுத்த வண்டி சாலையில் வராமலா போய்விடும்?
கட்டிடமாகிக்கொண்டிருந்த இடத்தில் சாலையில் கட்டைப்பை இரண்டோடு பரிச்சன் நின்றிருந்தான். மனோகரனுக்கு அவனைப்பார்த்ததும் தான் நேற்று இவனை கூட்டி வந்து விட்ட ஞாபகம் வந்தது. வண்டியை நிப்பாட்டினான். என்னதான் போதையில் இவன் இருந்திருந்தாலும் அவன் பெயர் உடனே ஞாபகத்திற்கு வந்தது. ’பரிச்சன் போலாமா? ஏறிக்கோ!’ என்றான். பரிச்சனுக்கு வாயெல்லாம் பல் போல! பரிச்சன் என்று இவன் கூப்பிட்டது அவனுக்கு அவ்வளவு மகிழ்வை கொடுத்திருக்கலாம். ‘சார் வரும்னு ஆப்பன் அவரா வெய்ட்டிங்ல நின்னன் சார்! சார் வந்துச்சு பரிச்சன் ஏறிட்டான்!’
“ஏண்டா எப்பட்றா இங்க வந்ததீம் தமிழ் பேச கத்துக்கிட்டீங்க?”
“நான் டமிழ்நாட்டுக்கு வந்து நால் வர்சம் ஆச்சி சார். சென்னைல ஒர் வர்ஷம், மதுரெல ஒர் வர்ஷம், இப்ப திர்ப்பூர்ல ஒன்னரை வர்ஷம்.. திர்ப்பூர்ல சம்ப்ளம் ஜாஸ்த்தி சார். திர்ப்பூர் காண்டேக்ட் ஓனர் என்னையும் ஆக்களையும் இங்க பில்டிங்குக்கு அனுப்பி வச்சிருக்கு சார். வந்து ஒரு வர்ஷம் ஆச்சு! டமிழ் அப்டியே பழகிர்ச்சு.. சார் நேம்?”
“மனோகரன்”
“அச்சா நேம் சார்! சார் விஜய் சூப்பர் ஏக்டர் சார்.. டமிழ் நாட்டு சி.எம்”
“அவரு இருந்து சாட்டாரு உடு.. மேரேஜ் ஆயிடுச்சா உனக்கு?”
“இல்ல சார். அம்மா ஒரீசாவுல இர்க்கு. அண்ணன், அண்ணி புள்ளாச்சில இர்க்காங்க”
பின்னால் பாட்டில் சப்தம் சலங் என்றது மனோகரனுக்கு.
‘காலி பாட்டில்களை தூக்கிட்டு வந்துட்டியா பரிச்சன்?”
“ஆமா சார் இர்வது பாட்டில்.. டூ ஹண்ட்ரட் ரூபீஸ் டாஸ்மார்க்ல தரும்”
பரிச்சனோடு மனோகரன் திரும்ப வருகையில் ஒரு பாலத்திண்டில் இருவரும் அமர்ந்தார்கள். பரிச்சன் மளிகை ஜாமான் ஒரு பை நிறைய வாங்கி வைத்திருந்தான். வாங்கின கோட்டரையும் தண்ணீர் கேனையும், டம்ளரையும் எடுத்தான் மனோகரன். காற்றே இல்லாமல் அந்த இரவு நேரம் வெக்கையாய் இருந்தது. நிலா அவர்களைத் தாண்டியிருந்தது. கருவேல மரக்கூட்டத்தில் இன்னமும் பறவைகளின் சலசலப்பு சப்தம் கேட்டபடியிருந்தது.
பரிச்சனுக்கும் டம்ளர் வைத்து அதில் மனோகரன் தன் சரக்கை ஊற்றப்போகையில் செல்போன் டார்ச்சைப் பிடித்திருந்த பரிச்சன் அதை தடுத்தான். ‘சார், நம்மட்ட பாட்டில் இர்க்கு!’ என்றான். ‘இருக்கட்டும்டா.. கொஞ்சம் குடி!’ என்று அவனுக்கென இருந்த டம்ளரில் ஊற்றினான். ஒரு கோட்டரை ஆளுக்கு பாதியாய் ஊற்றியிருந்தான். தண்ணீர்க்கேனை எடுத்து வழிசூர நிரப்பினான் மனோகரன்.
“டொமேட்டொ இருக்கா?” என்றான் அவனிடம். ‘இர்க்கு சார்’ என்றவன் எழுந்து போய் வண்டியின் முன்புறத்தில் வைத்திருந்த அவன் ஜாமான் பையிலிருந்து இரண்டு பழங்களை எடுத்து வந்தான். சியர்ஸ் போட்டு விட்டு இருவரும் குடித்தார்கள் தக்காளியை கடித்துக் கொண்டே.
“எத்தனை பேரு தங்கியிருக்கீங்க? எல்லாம் தகரகூரை போட்ட பொட்டி பொட்டி ரூம்களா தெரிஞ்சுதேடா!” என்றான் மனோகரன்.
“டீம் ஒன், டீம் டூ, டீம் த்ரீ சார். இருபது இருபது பேரு இர்க்கோம். நான் டீம் டூ. கலவை கலக்குறது.. வண்டீல கொண்டு போறது.. ஹாலோப்ளாக் கல் தூக்கிட்டு போறதுன்னு எங்க வேலை. சிலபேர் குடிக்கும், சிலபேர் குடிக்காது. ஒருத்தர் சாப்பாடு செய்யும். டெய்லியும் குடிக்கும்.. சிலபேர் டெய்லி குடிக்காது”
“இன்னிக்கி ஜாமான் வாங்குனியே உருளைக்கிழங்கு எத்தனை கிலோ வாங்குனே?’
“பொட்டேடோவா சார்.. சன்டேவே வாங்கியாச்சு சார் டொண்டி பைவ் கிலோ!”
“அதேண்டா அத்தனை சாப்பிடறீங்க?”
“ஸ்ட்ரெந்த் சார்.. சார் பாரு சார்” என்று மனோகரனுக்கு தன் அலைபேசியில் ஒரு குஞ்சுவாய் பிள்ளையை காட்டினான். பார்க்க பதினைந்து வயது பாப்பா அது. இதை எதற்கு காட்டுகிறானென அவனைப்பார்த்தான் மனோகரன். ‘யார்றா இது?’
“சார் என் லவ்வர் சார் சுஷ்மா! திர்ப்பூர்ல கம்பேனில இர்க்கா”
“அவளைத்தான் கட்டிக்குவியா?”
“ஆமா சார்.. ரெண்டு வர்ஷ லவ்.. கால் பண்ணவா சார்?”
“வேண்டாண்டா சாமி.. கிய்யா புய்யானு ரெண்டு பேரும் பேசுவீங்க.. எனக்கு ஒரு எழவும் தெரியாது.. ஊமைக்கோட்டானாட்டம் உட்கார்ந்துட்டு இருக்கோணும் நானு. நீயி சாப்டுட்டு அப்புறம் சாமத்துல பேசு அவகூட.. இப்ப நாம கிளம்பலாம்” என்று மனோகரன் எழுந்தான்.
ஆயிற்று மேலும் பத்து நாட்கள். பரிச்சனும் மனோகரனும் ஒன்றாய் டாஸ்மார்க் வாசலில் வந்து இறங்குவதை ஆச்சரியமான விசயமாய் பார்த்தார்கள் மற்றவர்கள். டாஸ்மார்க் கடைக்காரரே கேட்டுவிட்டார். ‘என்னுங்க புது ஜோடி போட்டுக்கிட்டீங்களாட்ட இருக்கே? பார்த்து பழகுங்க.. எதாச்சிம் பண்டிட்டு திடீர்னு காணாம போயிடுவானுங்க! நாம தேடீட்டு சுத்த முடியாது. ஸ்டேசன்ல போயி கம்ளெய்ண்ட் பண்ணாலும் அவங்க நம்மளைத்தான் திட்டுவாங்க.. பெழைக்க வந்தவனோட உனக்கென்ன சாவுகாசம்? அப்படிம்பாங்க!’ மனோகரன் மண்டையை ஆட்டிக்கொண்டான்.
“சார் நாளைக்கி எல்லார்க்கும் ரெண்டு மணி நேரம் கலவை போடுற வேலை இர்க்கு சார். காங்கரீட் போடுது. ஏழரைக்கி முடிஞ்சிடும். எனக்காவ பாட்டில் நீங்க வாங்கிட்டு வரமுடிங்ளா? தப்பு தான்!”
“இதுல என்னடா தப்பிருக்கு.. நாளைக்கி நான் வாங்கிட்டு வந்து தந்துடறேண்டா!”
“பணம் பிடிங்க இப்பவே.. ஒன்பது கோட்டர் அஞ்சு பீர் சார்” அவன் கொடுத்த பெரிய சாக்குப்பை கட்டைப்பையை வாங்கி இவன் வண்டி சீட்டை உயர்த்தி அதனுள் போட்டுக்கொண்டான். வழக்கம்போல அவனை கட்டிடத்தின் முன்பாக இறக்கி விட்டுவிட்டு கிளம்பினான் மனோகரன்.
அடுத்த நாள் மனோகரன் தாமதமாகவே வீட்டிலிருந்து கிளம்பினான். இங்கிருந்து கிளம்புகையில் மணி ஏழுக்கும் கிட்டே இருந்தது. இவன் கட்டிடமாகும் இடத்தை தாண்டுகையில் உள்ளே பரிச்சன் சொன்னதுபடியே வேலை முடியாமல் ஓடிக்கொண்டிருந்தது தெரிந்தது. பாட்டில்களை வாங்கிக்கொண்டு வழக்கமான இடத்திலமர்ந்து ஒரு கட்டிங் போட்டுக்கொண்டு கிளம்பி வருகையில் கட்டிடத்தின் முகப்பில் மூன்று நபர்கள் நின்றிருந்தார்கள். கேட் அருகே சோலார் விளக்கு பிரகாசித்துக்கொண்டிருந்தது. பரிச்சன் இவனைப்பார்த்ததும் மகிழ்ச்சியாய் கையசைத்தான். அருகில் நின்றிருந்த இருவரையும் அறிமுகப்படுத்தினான். ஒருவன் பங்கஷ் மற்றொருவன் விக்காஸாம். வாயில நுழையுதா ஒன்னாவென மனோகரன் நினைத்தான்.
“சார் இன்னிக்கி உள்ள வரும்!” என்றான் அந்த புதியவன்.
“உள்ள வந்து காங்கரீட்டாடா நான் போடப்போறேன்? நீங்க போயி குடிச்சுட்டு சாப்பிடுங்கடா பயலுங்களா?”
“சார் அப்படி சொல்லக்கூடாது.. இன்னிக்கி சிக்கன் செஞ்சிர்க்கோம். வாங்க! துளி டேஸ்ட் பார்க்கணும் சார். அப்புறம் போய்க்கோ!” பரிச்சன் அன்பொழுக கேட்டான். சரி இழவு இன்னிக்கி வியாழன் தானே! வண்டியை உள்ளே செலுத்தினான் மனோகரன்.
முகப்பிலேயே இருந்த தகரக்கூரைக்களுக்கருகில் ஆங்காங்கு குட்டானாய் நான்கு நான்குபேர் அமர்ந்திருந்தார்கள்.
பாட்டில்களை உடனே ஆள் ஆளுக்கு ஒவ்வொன்றாய் எடுத்துக்கொண்டார்கள். பாக்குத்தட்டில் சிக்கன் சூடாய் வந்து சேர்ந்தது மனோகரனுக்கு என்று தனியாக. இத்தனை திங்கப்போகிறானா இவன்? அரைக்கட்டிங்கிற்கு நாலு துண்டுகள் இருந்தால் போதுமே! பரிச்சனிடம் ‘இவ்ளோ வேண்டாம்டா’ என்றான்.
“சாரும் நானும் சாப்பிடும்!’ என்று அமர்ந்தான். பாதிகட்டிங்க அடிக்கலாமா? இல்லை முழுதாய் கிடக்கிறதே ஒரு கோட்டர்.. அதை அடிக்கலாமா? அதான் சிக்கன் சூடாய் இருக்கே! மனசு சொல்ல ஒரு கோட்டரை சீட்டை உயர்த்தி எடுத்துக்கொண்டு வந்தமர்ந்தான். ஆங்காங்கே பாக்குத்தட்டத்தில் கறி போட்டுக்கொண்டு அமர்ந்தவாறு குடித்தார்கள். மனோகரனுக்கு கறித்துண்டின் காரம் அதிகமாயிருந்தது. இப்படித்தான் சாப்பிடுவார்கள் போல என்று நினைத்துக்கொண்டான்.
கறி ஆறிடுமே என்பதற்காக இரண்டு கட்டிங்காய் கோட்டரை காலி செய்தான் மனோகரன். கிஷோர் தாசு என்று ஒருவரை அழைத்தான் பரிச்சன். அவருக்கு அறுபது வயதிருக்கலாமென்ற தோற்றமிருந்தது. ’இவர் தான் எங்க சமையல்காரர் சார்.. இவர் பீகார்’ என்றான். ‘இருக்கட்டும்’ என்றான் மனோகரன். இன்று ஹனிபீ கிடைக்கவில்லை கடையில். எம் சி கிடைத்ததால் அதை வாங்கியிருந்தான். அவசரமாய் குடித்ததில் குப்பென போதை ஏறியிருந்தது.
“சார் சாப்பிடுங்க!” குரல் கேட்டது. போதும் என்று மனோகரன் கையை அசைத்தான். ஒரு ஐந்து நிமிடம் அப்படித்தான் குப்பென போதையாய் இருக்கும். அப்புறம் மெலிதாய் வடியும். வடிய வடிய தெளிவாகும்! மனோகரனுக்கு தெரியாதா என்ன!
“எனக்கு எங்க கோட்டரு?” கிஷோர் தாசு என்கிற சமையல்காரர் பரிச்சனிடம் கேட்டார்.
“நீ எடுத்துக்கலியா?”
“இல்லியே! இருந்தாத்தானே எடுப்பேன். எத்தனை கோட்டரு வாங்குச்சு?”
”ஒம்பது கோட்டர் அஞ்சு பீர்” மனோகரன் எண்ணிக்கையை சொன்னான்.
“சார் பத்து கோட்டர் அஞ்சு பீர் சார்.. நேத்து அப்படித்தானே குடுத்தேன்! நீ குடிச்சிட்டியா சார்?” பரிச்சன் கேட்கவும் மனோகரனுக்கு பகீரென்றது.
“இல்லடா.. பொய் சொன்னா எனக்கு பிடிக்காது! நீ குடுத்த பணத்துக்கு ஒன்பது கோட்டர் அஞ்சு பீர் சரியா இருந்துச்சு. அப்புறம் என்கிட்ட ரெண்டு கோட்டருக்கு பணம் இருந்துச்சு. வாங்கியாச்சு! ஒரு டம்ளர், ஒரு கடலை பருப்பி, சின்னகேன் தண்ணிக்கி இருபது ரூபா இருந்துச்சு.. வாங்கிட்டு வந்து கட்டிங் போட்டேன்! என் மணிபர்ஸ் காலிடா!”
“இல்ல சார் பத்து கோட்டருக்கு பணம் குடுத்தேன்!” திடீரென நான்குபேர் அருகில் வந்து நிற்கவும் மனோகரனுக்கே பீதியானது. ஆங்கிலப்படங்களில் வரும் ஜாம்பீஸ் கூட்டம் போல தெரிந்தது இவனுக்கு. எல்லோரும் மனிதக்கறி உண்பவர்களாக இருந்தால்? இருந்தும் ஜமாளிக்கணும் என்றே முடிவெடுத்தான்.
“யாரு குடிக்கலை? வண்டில அரைக்கட்டிங் கிடக்கு.. எடுத்துக்குடுடா.. இப்ப குடிக்கட்டும்! போயி நாம வாங்கிட்டு வந்தாக் கிடக்குது!” என்று எழுந்தான் மனோகரன். ‘வா போலாம் கடைக்கி!’ என்று வண்டிக்கருகில் இவன் வந்து சீட்டை தூக்கி உள்ளே கிடந்த கட்டிங் பாட்டிலை எடுத்து பின்னாலே வந்தவனிடம் நீட்டினான். அவன் அதை வாங்கிக்கொண்டான். ‘நீ தான் குடிக்கலையா? இதை முதல்ல குடி!’ என்றபோது பரிச்சன் வண்டிக்கருகில் வந்து வண்டிச்சாவியை எடுத்துக்கொண்டான். சமையல்கார கிஷோர் தாஸ் வேகமாய் வந்தவர் மனோகரனின் சட்டையை பின்புறமாக காலரோடு பிடித்து ஒரே இழுப்பில் ’டர்ர்ரெனக்’ கிழித்தார்.
000

நடுகல் வெளியீட்டில் ‘நெருஞ்சி’ ‘ஆகாவழி’ ‘மங்கலத்து தேவதைகள்’ ‘தானாவதி’ ‘ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி’ ‘வார்டு எண் 208’ என்கிற நாவல்கள் வெளிவந்து இப்போது விற்பனையில் உள்ளன.

