-வன்மி

மிதுன் எப்போழுதும்போலவே பள்ளிக்கு கிளம்பிவிட்டான். வழக்கமான தெரு வழியாகத்தான் சைக்கிளில் போவான். அந்தத் தெருவின் வடக்குப்பக்கம்தான் மாரியின் வீடு இருக்கிறது. அவன்தான் மிதுனுக்கு நெருங்கிய நண்பன்.

மாரியிடம் சைக்கிள் இல்லை என்பதால் அவனை அழைத்துக்கொண்டு போவதைத்தான் மிதுன் வழக்கமாக வைத்திருக்கிறான்.

மாரியை விட மிதுன் நன்றாக படிப்பான். வீட்டுப்பாடங்களை கவனமுடன் ஆர்வமுடன் முடித்துவிடுவான். மாரி எப்போதும் படிப்பைப் பற்றி சிந்திக்காதவன் போலத்தான் இருப்பான். ஆனால் கடைசி நேரத்தில் படித்துவிடுவான். தேர்வு காலங்களில் அவன் சேர்த்து வைத்தார்போல் படிப்பான். ஆனால் மாரிக்கு ஓவியம் வரையும் திறமை உண்டு.

அது  எல்லா மாணவர்களுக்கும் தெரிந்த ஒன்றுதான். சின்னச் சின்ன கோட்டு ஓவியங்கள் வரைவதில் அவன் கைதேர்ந்தவன். வகுப்பின் ஓய்வு நேரங்களில் அவன் அதற்கென்று வைத்திருக்கும் நோட்டில் வரையத்தொடங்கி விடுவான். கிளி, பறக்கும் பறவை, பூனை, ஓடும் குதிரை, என எல்லாவற்றையும் அவன் நேர்த்தியாக வரைந்துவிடுவான்.

சில நேரங்களில் பக்கத்தில் இருப்பவர்களின் தோற்றத்தையும் பார்த்தும் வரைவான். அப்படி அந்த வகுப்பில் இருக்கும் எல்லோரையும் அவன் வரைந்து காண்பித்துவிட்டான். மிதுனை அவன் பல்வேறு கோணங்களில் நிறைய முறை வரைந்து தந்திருக்கிறான். அவ்வாறு அவன் இளம் ஓவியனாக அந்தப் பள்ளிமுழுவதும் அறியப்பட்டான்.

ஒரு நாள் சண்முகம் வாத்தியார் பாடம் நடத்தியபின் ஓய்வாக உட்கார்ந்திருந்தார். மாரி அவரை அப்படியே வரைந்துவிட்டான். அச்சு அசலாக இருந்தது அவர் ஓவியம். அப்போது பின்னால் இருந்த கபிலன் எழுந்து சண்முகம் வாத்தியாரிடம் சொல்லிவிட்டான். மாரி சட்டென்று வரைந்த தாளை மறைத்துவிட்டாலும் அவன் முகத்தில் பயம் இருந்தது. மிதுனுக்கும் அதைப்போலவே மாரி மாட்டிக்கொள்வானோ என்ற பயம் ஏற்பட்டது.

சண்முகம் வாத்தியார் எழுந்து மாரியும் மிதுனும் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு அருகே எழுந்து வந்தார்.

“மாரி என்கிட்ட காட்டு…” என்றார் சண்முகம் வாத்தியார்.

மாரி தயங்கியவாறே எழுந்து நின்றான். பின்னர் தான் வரைந்த தாளை ஆசிரியரிடம் நீட்டினான்.

சண்முகம் வாத்தியார் அதனை வாங்கிப் பார்த்தவாறே தன் நாற்காலியை நோக்கி நடந்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சியும் இல்லை கோபமும் இல்லை. பின்பு உட்கார்ந்தார். உட்கார்ந்த பின்பும் மாரி வரைந்த தன் ஓவியத்தை பார்த்துக்கொண்டேயிருந்தார்.

“மாரி இங்க வா!”

மாரி எழுந்து சண்முகம் வாத்தியரிடம் போனான். கைகட்டி நின்றான். அவன் முகத்தில் கூடுதலான பயம் இருந்தது. ஆனால் இப்போது சண்முகம் வாத்தியார் எழுந்து நின்று எல்லா மாணவர்களையும் எழுந்து நிற்கச் சொன்னார்.

“மாரிக்கு எல்லோரும் சேர்ந்து கைதட்டி பாராட்டுங்கள்… அவன் திறமை அபாரமானது…” என்ற பின்னால் எல்லோரும் ஆர்வமாக எழுந்து கூட்டாக கைத்தட்டினார்கள். மாரியின் முகம் மாறிவிட்டது. மகிழ்ச்சி பொங்க சிரித்தான். சண்முகம் வாத்தியார் மாரியின் தோளைத் தட்டிக்கொடுத்தார்.

“நீ பெரும் ஓவியனாக வருவாய்…வாழ்த்துகள்..” என்று சிரித்தார். அதனைப் பார்த்த மிதுனுக்கும் கொள்ளை மகிழ்ச்சி. ­அது பற்றி மிதுனும் மாரியும் பள்ளிவிட்டதும் சைக்கிள் ஓட்டியபடியே பேசிக்கொண்டே வந்தனர்.­

சுண்ணாம்புக்காரத்தெருக்கு திரும்பும் பாதைக்கு வந்திருந்தனர். அப்போதுதான் பின்னால் சைக்கிள் ஓட்டிக்கொண்டு வந்த விழியன். அவர்கள் அருகில் வந்தான்.

“கொஞ்சம் நிறுத்தேன்…” என்று விழியன் சொன்னதும் மிதுன் சட்டென்று கால்களை தரையில் ஊன்றி சைக்கிளை நிறுத்தினான்.

“என்னாச்சுடா?…” என மாரியும் சைக்கிளைவிட்டு இறங்கி நின்றான்.

“மாரி எப்புர்றா இப்டி வரயறே… யாரும் சொல்லிக்கொடுக்கறாங்களா? ”

“ஏன்டா இதக்கேக்கதான் சைக்கிள நிறுத்துனீயா? ” மிதுன் அவனை பார்த்துக் கேட்டான்.

“டேய் இருடா… மாரி நானும் வரையக் கத்துக்கிட்டிருக்கேன்… காசங்குளத்துக்கிட்ட வரையறதுக்கு கிளாஸ் போறேன்… ஏய் உன்ன மாதிரி எனக்கு வரய வரமாட்டேன்குதுடா…”

அதனைக் கேட்டு மிதுன் சிரித்தான். மிதுன் சிரித்ததும் மாரியும் புன்னகைத்தான்.

“விழியா நான் இவங்கூட ஒன்னாத்ததான் சுத்துறேன்… எனக்கே வரமாட்டுங்குது… அது அவனுக்கு வருது… வரயறான்… ஏய் அவன் சின்ன வயசிலேருந்தே வரயறான்டா…”

“டேய் அதான் எப்புர்றா… நான் டிராயிங்கிளாஸ்க்கு போனாலும் வரமாட்டேங்குதுடா… எங்க அப்பா வெளிநாட்டிலருந்து நிறைய புத்தகம் அனுப்பியிருக்காரு… அதல்லாம் பாத்து நான் வரஞ்சுதான் பாக்குறேன்… வரமாட்டேன்குதுடா மிதுனு…”

அவன் சொன்னதும் மாரிக்கு ஆர்வம் வந்தது.

“ஏய் அதுக்கு புத்தகமெல்லாம் இருக்காடா? எடுத்துட்டு வாடா நான் பாக்குறேன்… நான் எந்தப் புத்தகத்தையும் பார்த்ததில்லடா?”

“அய்யயோ அதெல்லாம் எடுத்துட்டு வரமுடியாதுடா எங்கம்மா திட்டுவாங்க.”

“டேய் ரொம்ப பண்ணதே… அவன் ஆசையாத்தானே கேக்குறான்… பள்ளிகொடத்துக்கு எடுத்துட்டு வா… பாக்கலாம்…”

“அதெல்லாம் முடியாது நீங்க வேணுன்னா ஞாயித்துக்கிழமை எங்க வீட்டுக்கு வாங்க… காட்டுறேன்…” என்று விழியன் சொன்னதும் மாரிக்கு கொஞ்சம் நிம்மதி வந்தது.

“ஆனா எனக்கு எப்படி வரயறேன்னு கொஞ்சம் சொல்லிக்கொடு… அப்பத்தான் காம்பிப்பேன்…” என்ற விழியனைப் பார்த்து மிதுன் சிரித்தான்.

“என்னடா மிரட்டுறே” என்றான் மிதுன்

அதற்கு மூவருமே சிரித்தார்கள். மாரிக்கு அந்த நிமிடத்திலிருந்தே அந்த ஓவியப் புத்தகங்களை பார்க்க ஆர்வம் வந்துவிட்டது. மிதுனும் மாரியும் அவர்கள் வீடு போகும் வரைக்கும் அந்தப் புத்தகங்களைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தனர்.

மாரி வீட்டிற்கு வந்தபின்னும் அந்தப் புத்தகங்கள் பற்றியே நினைத்திருந்தான். அதன் வழியாக அவன் நிறைய தெரிந்துகொள்ளலாம் என்று நம்பினான். அன்றைக்கு புதன் கிழமை என்பதால் அவன் ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருக்க வேண்டுமே என்றும் கவலையும் வந்தது.­

அம்மா சாப்பாடு தந்தபின் வீட்டுப் பாடங்களை படித்தான் மாரி. ஆனாலும் அவனுக்கு அந்தப் புத்தகத்தின் நினைவுகள் அகலவில்லை. விழியனின் அப்பா வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். அவனுக்காக அந்தப் புத்தகங்களை வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார். நமக்கு அப்படி ஒரு வாய்ப்பில்லையே என்று அவன் மனம் சற்று வருந்தினாலும் எப்படியும் அந்தப் புத்தகத்தை ஒரு முறை பார்த்துவிடலாம் என்ற வியப்பும் மகிழ்ச்சியும் அவனை அன்று தூங்க வைத்துவிட்டது.

காலையில் எழுந்ததும் அவன் உற்சாகமானான். மிதுன் வருவதற்குள் கிளம்பியிருந்தான். அன்றைக்கு மிதுன் அவனுக்காக இனிப்புகள் எடுத்து வந்திருந்தான். மிதுன் எப்போதும் தன் வீட்டில் எது வாங்கினாலும் அடுத்த நாள் அவனுக்காக எடுத்துவந்துவிடுவான். மிதுனுக்கு மாரிமேல் அளவற்ற நட்பு இருந்தது. இருவருமே இரண்டாம் வகுப்பிலிருந்தே நண்பர்கள்.

அம்மாவிடம் சொல்லிவிட்டு மிதுனின் சைக்கிளில் ஏறிக்கொண்டான்.

“மிதுனு… இன்னும் எத்தனை நாளிருக்கு ஞாயித்துக்கெழமைக்கு?” என்றதும் மிதுன் அவன் கேள்வியை புரிந்துகொண்டான்.

“அந்தப் புத்தகத்தையே நீ நெனச்சிட்டிருக்கியா மாரி?”

அதற்கு மாரி சிரித்தான். மிதுனின் சைக்கிள் பிள்ளையார் கோவிலைத் தாண்டி போனது.

“விழியனின் வீடு எங்கருக்கு தெரியுமா உனக்கு?” என்றான் மிதுன்.

“உனக்குத் தெரியுமா?”

“நான் ஒருதடவை அவன் வீட்டுக்கு போயிருக்கேன். நல்ல பெரிய வீடு. நரியம்பாளையத்தில இருக்கு. எங்கப்பா அந்தப் பக்கமாத்தான் கடைக்கு போவாங்க… அதனால ஒரு நாள் அப்பா கூட போகும்போது அவன அங்க பாத்தேன்… வீட்டுக்கு கூப்பிட்டான். அப்பத்தான் போனேன்.”

“அப்பன்னா நாம ஏன் ஞாயித்துக்கெழமை வரைக்கும் காத்திருக்கனும் நாம இன்னைக்கே போலாமா?” என்று மாரி சொன்னதும் மிதுன் எதுவும் பேசாமல் வந்தான். மாரி அவனை சைக்கிளில் உட்கார்ந்தவாறே எட்டிப்  பார்த்தான்.

“இன்னைக்கு முடியாது மாரி… அம்மா எனக்கு வேற வேலை சொல்லியிருக்காங்க… போகனும்.”

சரி என்று மாரி அதனை ஏற்றுக்கொண்டான். பள்ளி வகுப்பில் விழியன் மாரியை பார்த்தும் சிரித்தான்.

“டேய் கண்டிப்பா இந்த ஞாயித்துக்கெழமை ஒன் வீட்டுக்கு நாங்க ரெண்டுபேரும் வருவோம்… புத்தகத்த காண்ப்பிப்பில்ல…” என்றதும் விழியன் சரியென்று தலையாட்டினான். அதற்குள் வகுப்பாசிரியர் வந்துவிட்டார். பாடவேளை தொடங்கியது.

அன்று ஞாயிற்றுக்கிழமைதான்.

மாரி மிதுனுக்காக வீட்டில் காலையில் இருந்தே காத்திருந்தான். அம்மாவிடம் விழியனின் வீட்டிற்கு செல்வதாக சொல்லியிருந்ததால் அம்மா அவனுக்கு காலையிலேயே சாப்பாடு தயார் செய்து கொடுத்துவிட்டார். வீட்டின் உள்ளே மாரி பென்சிலைக் கூர்மையாக்கிக்கொண்டிருந்தான். அப்போதுதான் மிதுன் வீட்டிற்கு வெளியே வந்து நின்றான். அவன் வந்ததும் சைக்கிள் மணியை அடித்தான். அதனைக் கேட்டதும் மாரி வெளியே வேகமாக ஓடி வந்தான்.

மிதுன் சைக்கிளை நிறுத்திவிட்டு “போலாமா மாரி” என்று கேட்டான்.

“நான் உனக்காகத்தா காத்திருக்கேன்… சட்டுன்னு வா  போலாம் விழியன் வீட்ல இருப்பான்தானே…” இருவரும் சைக்கிளை நகர்த்தி மிதுன் ஓட்ட மாரி பின்புறம் உட்கார்ந்துகொண்டான். மாரியின் முகம் மலர்ந்திருந்தது. அவன் மனம் முழுவதும் மகிழ்ச்சியாயிருந்தது.

சாமியார்மடம் தாண்டித்தான் நரியம்பாளையத்துக்கு போகவேண்டும். குறுக்கே ஒரு சிறிய வழியிருக்கிறது. அந்தப் பாதையில் மிதுன் சைக்கிளை ஓட்டினான். மிதுனுக்கு எல்லாப் பாதைகளும் தெரிந்திருந்தது. வண்டிப்பேட்டை வழியாகச் சைக்கிள் உருண்டோடியது.

அரைமணி நேரம் ஆகிவிட்டிருந்தது. மிதுன் ஒரு பெரிய விட்டின் முன் சைக்கிளை நிறுத்தியதும். மாரி இறங்கி அந்த வீட்டை அண்ணாந்து வியப்புடன் பார்த்தான்.

“இதான் விழியன் வீடாடா… அழகா இருக்குடா…”

“உள்ள வா… இன்னும் நீ அசரப்போறே…” என்றவாறே வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான் மிதுன். உடனே விழியன் வந்து கதவைத் திறந்தான். விழியனின் அம்மாவும் வாசலுக்கு வந்துவிட்டார்.

“உள்ள வாங்க பசங்களா…” என்று அவன் அம்மா கூப்பிடவும் வீட்டின் உள்ளே நுழைந்தார்கள். இளம் ஊதா வண்ணத்தில் சுவர்கள் பளிச்சென்று இருந்தது. நுழைந்ததும் வரவேற்பறை இடதுபக்கம் இருந்தது. கண்ணாடியால் ஆன ஓர் அழகிய சிறிய தேநீர் மேசையிருந்தது. அதற்கு முன்னால் சிவப்பும் பழுப்பும் கலந்த வண்ணங்களில் இருக்கைகள் இருந்தன. அதில் இருவரும் உட்கார்ந்தனர்.

விழியன் அவர்களுக்காகத் தேநீர் எடுத்து வந்து அவர்களுக்கு எதிரே இருந்த கண்ணாடி மேசையில் வைத்தான். அழகான பீங்கான் குவளையிலிருந்த தேநீரிலிருந்து மெல்லிய புகை வெளிவந்தது.

மாரி மிதுனைப் பார்த்தான்.

“மிதுனு அவன்ட்ட கேள்டா…”

மிதுன விழியனைப் பார்த்தும் விழியன் அதனைப் புரிந்துகொண்டவன்போல வீட்டினுள்ளே ஓடிய சில நிமிடங்களில் கையில் நான்கைந்து புத்தகங்களை கொண்டுவந்து மேசையில் வைத்தான்.

அதனைப் பார்த்ததும் மாரி தேநீரை ஓரமாக வைத்துவிட்டு புத்தகங்களை கைகளில் எடுத்தான். வழவழவென கண்களை பறிக்கும் புத்தகங்கள். சட்டென்று ஒவ்வொரு இதழாய் புரட்டினான். அவன் கண்கள் விரிந்திருந்தது.

அற்புதங்களை கண்டவன் போல் இமைக்காமல் பக்கங்களை புரட்டினான். அழகிய வண்ண ஓவியங்கள். ஆமைகள் பறவைகள் கடல் உயிரினங்கள் என நிறைய படங்கள் வரையப்பட்ட ‘வழ வழ’வென தாள்கள். அவன் எடுக்க எடுக்க மலைப்பாய் இருந்தது.

மிதுன் தேநீரைச் சுவைத்துக்கொண்டே பார்த்தான். அவனுக்கும் ஆச்சர்யம்தான். அதற்குள் விழியன் வருவதாகச் சொல்லி வீட்டிற்குள் போய்விட்டான்.

முதல் புத்தகம் இரண்டாம் புத்தகம் என மாறி மாறி பார்த்தான். திரும்பவும் திருப்பி திருப்பி பார்த்தான். மிதுன் ஒரு புத்தகத்தை கைகளில் எடுத்து பார்த்துக்கொண்டிருந்தான்.

மாரிக்கு மனம் முழுவதும் சந்தோசம் மிகுந்தது. அதில ஒரு சிறிய புத்தகம் அவனை மிகவும் கவர்ந்திருந்தது. மனிதர்களின் நடவடிக்கைகளை பற்றி வரைந்த புத்தகம் நிற்பவர்கள், உட்கார்ந்திருப்பவர்கள், படுத்திருப்பதுபோல், தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பதுபோல் இப்படியான ஓவியங்கள் நிறைந்திருந்தது.

அப்போதுதான் மாரியின் மனம் தடுமாறியது. அவனது கைகள் அப்புத்தகத்தை இறுகப்பற்றியது. அப்புத்தகத்தின் மீதான ஆர்வத்தில் மனம் கோளாறானது. சட்டென்று மாரி அதனை எடுத் தன் சட்டையின் பின்புறமாக மறைக்க முயன்றான். மிதுன் அதனைக் கவனித்துவிட்டான். உடனே திடுக்கிட்டுப் பார்த்தான்.

“மாரி ஏன்ட்டா… விழியன் பார்த்தா தப்பா நினைப்பான்ட்டா… நீ இப்படி செய்யாதே…” என்று மாரியிடமிருந்து அந்தச் சிறிய புத்தகத்தை வாங்கி மற்ற புத்தகங்களோடு வைத்துவிட்டான்.

மாரிக்கு முகம் வாடிவிட்டது. அவன் ஆர்வ மிகுதியால் இம்மாதிரி செய்துவிட்டோமே என்று வருந்தினான். தலை குனிந்து உட்கார்ந்துவிட்டான். இப்போது விழியன் வந்து அவர்கள் எதிரே உட்கார்ந்தான்.

“புத்தகமெல்லாம் எப்டியிருக்கு?” அவன் கேட்ட கேள்விக்கு மாரியால் சட்டென்று பேசமுடியவில்லை. அமைதியாயிருந்தான். மிதுன்தான் பேசினான்.

“எல்லாம் நல்லாயிருக்குடா… நேரமாகுது நாங்க கௌம்புறோம்… ” என்று மாரியை எழுப்பினான். மாரியும் சட்டென்று எழுந்துவிட்டான். விழியனிடம் சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறி அந்தத் தெருவைக் கடந்தார்கள். கோட்டைக்குளத்தை தாண்டியதும் மிதுன் சைக்கிளை நிறுத்தினான். மாரி சைக்கிளில் இருந்து என்னவென்று புரியாமல் இறங்கினான்.

“மாரி அது தப்பில்லயா? அடுத்தவங்க புத்தகத்த கேக்காமா ஒளிக்க நெனச்சியே ஏன்டா?”

“இல்லடா மிதுனு… அந்தப் புத்தகம் என்கிட்டேயே இருந்தா நான் நிறைய கத்துப்பேன்னு தோனுச்சுடா… அதான் ஆர்வத்துல எடுத்துட்டேன்… மன்னிச்சிக்கோடா…”

“சரிடா… அத அவன்கிட்ட கேட்டிருக்கலாமே… இந்த மாதிரி நடந்துக்காதே…”

மாரிக்கு தன் தவறு புரிந்தது அதற்காக என்ன செய்வதென்று தெரியவில்லை.  மீண்டும் சைக்கிளில் ஏறி மிதுன் ஓட்டினான். மாரி பின்னால் உட்கார்ந்தவாறு ஆழமாக சிந்தித்துக்கொண்டே வந்தான். மாரியின் வீட்டை அடைந்ததும் சைக்கிளை நிறுத்தியபோது மாரி இறங்கிக்கொண்டான்.

“மன்னிச்சிக்கடா மிதுனு எனக்கு அந்தப் புத்தகம் ரொம்ப புடிச்சிருந்தது. அதிலேருந்து கத்துக்கலான்னு தோணுச்சி… நான் அவன்கிட்ட ஞாயமா கேட்கனும்… ஏன் எனக்கு அப்படி தோணுச்சின்னு தெரியல மிதுனு…” கண்ணீர் வழிந்துவிடுமோ என்ற நிலையில் மாரி மிதுனைப் பார்த்தான்.

“பரவால்லடா… நாளைக்கு பாக்கலாம்” என்று மிதுன் சைக்கிளில் ஏறிப் போனான். மிதுன் போவதையே பார்த்தவாறு நின்ற மாரிக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றான்.

மறுநாள் எப்போதும் போலவே மிதுன் வீட்டிற்கு வந்திருந்தான். மாரி கிளம்பியதும் இருவரும் பள்ளிக்கு சைக்கிளில் ஏறி போனார்கள் நேற்று நடந்தது பற்றி எதையும் நினைக்காதவனாக மிதுன் பேசிக்கொண்டே வந்தான். மாரிக்குத்தான் மனதில் வருத்தம் இருந்துகொண்டேயிருந்தது.

நாம் செய்தது தவறுதான் என்று நினைப்பு அவனுக்கு இருந்துகொண்டேயிருந்தது. வகுப்பின் இடைவேளை வந்தது. விழியன் மாரியைத் தேடி வந்தான். அவன் கையில் அந்தப் புத்தகம் இருந்தது. அதனை மாரியிடம் தந்தான். அப்போது மாரிக்கு ஒன்றுமே புரியவில்லை.

“மாரி இந்தா எடுத்துக்கோ… அம்மா உனக்கு கொடுக்கச்சொன்னாங்க..” மாரி மிதுனைப் பார்த்தான். மிதுன் மெல்லிய புன்னகையுடன் பக்கத்தில் நின்றிருந்தான்.

மாரிக்கு பதற்றமாக இருந்தது. ஒருவேளை நாம் அதனை எடுத்ததை விழியன் அம்மா கவனித்துவிட்டாரா? அல்லது விழியன் கவனித்துவிட்டானா? என்று குழப்பமாக நின்றான். ஆனாலும் அந்தப் புத்தகத்தை கைகளில் வாங்கிக்கொண்டான். விழியனை நன்றியோடு பார்த்தான்.

“மாரி நேத்து திரும்ப மிதுன் எங்க வீட்டுக்கு வந்து எங்க அம்மாகிட்ட அந்த புத்தகத்த தரமுடியுமான்னு கேட்டான். எங்க அம்மா எடுத்துக்கோப்பான்னு சொல்லிட்டாங்க… உனக்கு அந்தப் புத்தகம் ரொம்ப பிடிச்சிருக்குன்னு என்கிட்ட மிதுன் சொன்னான். அத என் கையாலேயே வகுப்புல வந்து கொடுன்னு அவன்தான்  கேட்டான். அதான் எடுத்துட்டு வந்தேன்.” என்று விழியன்  சொன்னதும். மிதுனை மாரி கட்டிகொண்டான்.

சட்டென்று மாரிக்கு கண்கள் பனித்தன.

00

வன்மி என்னும் பெயரில் அச்சு இதழ்களில் சில கவிதைகள் வந்திருக்கிறது. பட்டுக்கோட்டைதான் சொந்த ஊர். புகைப்படக் கலைஞன், வடிவமைப்பாளன், எழுத்தாளன், ஓவியன் எனும் பணிகளில் விருப்பத்துடன் இயங்குகிறேன். தற்போது பள்ளிக் கல்வித்துறையிலிருந்து வரும் ‘தேன்சிட்டு’  ‘ஊஞ்சல்’ சிறார் இதழ்களின் வடிவமைப்பாளராக பணி செய்கிறேன். ‘பறக்கும் வெண்குதிரை’ ‘எறும்புகளின் நகரம்’ என இரண்டு சிறார் நாவல்கள் எழுதியிருக்கிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *