அவளுக்கு முன்னால் பலூடா ஐஸ்கிரீம் இருந்தது. கருப்பு டீசர்ட்டும் நீல ஜீன்சும் அணிந்திருந்தாள். இந்தப் பிரதேசத்திற்கு சம்மந்தமற்ற ஏதோ ஒரு கேளிக்கை உலகத்தில் இருந்து வந்தவள் போல இருந்தாள். அலட்சியமாய் ஒதுங்கி இருக்கும் அடர்ந்த சுருள் முடியும் டீசர்ட்டின் கருப்புப் பின்னணியில் எடுப்பாகத் தெரியும் பலூடாவும் தங்க நிறத்தில் மின்னும் மின்விளக்கின் வெளிச்சமும் எல்லாம் கனவோ என்பது போல ஒரு மயக்கத்தை பாலாஜிக்கு தந்து கொண்டிருந்தது. 

     தினமும் அவளைக் கவனித்துக் கொண்டு வருகிறான். சரியாக மாலை ஏழு மணிக்கு கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு சிரித்தபடி உள்ளே வருவாள். தனியாக மட்டுமே வருவாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தனித்துவமாகத் தெரியும் படி உடை இருந்தாலும் அதை அவள் சிரத்தை இல்லாமல் அணிந்து கொண்டு வந்தவளைப் போல நடந்து கொள்வாள். அவளுடைய ஒவ்வொரு அசைவுமே அப்படித்தான் பாசாங்கும் அச்சமும் இன்றி மனதைக் கொள்ளை கொள்ளும் படி இருந்தது. அது அவளுக்கு இயல்பானதைப் போல மிக இயற்கையாக இருந்தாள். 

     இவன் மட்டும் அல்ல கடை ஊழியர்கள் கூட அவளை எல்லோரையும் கவனிப்பதைப் போலக் கவனிப்பதாகக் காட்டிக் கொண்டு தீவிரமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

     அவளுடைய பெயர் சம்யுக்தாவாய் இருந்தால் பொருத்தமாய் இருக்கும் என்று ஏனோ இவனுக்குத் தோன்றியது.

     வாணியின் டான்ஸ் கிளாஸ் முடியும் மட்டும் அவன் தினம் தினம் அந்த ஹோட்டல் கடைக்கு வருவான். அண்ணனின் மகளான வாணி மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். பள்ளி ஆண்டு விழாவில் நடனமாட பிரத்யேகமான நடன வகுப்பில் அண்ணன் அவளை சேர்த்திருந்தார். இவன் வேலை முடிந்து வந்தவுடன் அண்ணனுடைய செவர்லெட் காரை எடுத்துக் கொண்டு போய் வாணியைக் கூட்டிக் கொண்டு வரவேண்டும் என்பது ஏற்பாடு. வாணியும் இவனும் ஏதாவது பழ ஜூஸ் சாப்பிடுவார்கள். அதே நேரத்தில் தான் சம்யுக்தாவும் வந்துகொண்டிருந்தாள். மற்றபடி அவளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவளைப் பற்றிய புதிரின் அளவு தினம் தினம்  ஏறிக் கொண்டே இருப்பதைப் போல பாலாஜிக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது. வாணி இருந்ததால் அவளுடன் பேச முயற்சிக்கவோ பின் தொடரவோ அல்லது பிரத்யேகமான பார்வையை வீசவோ முடியவில்லை.

     ஒரு வாரம் போல கழிந்த பின் அவள் வாணியைப் பார்த்துப் புன்னகைத்தாள். பக்கத்தில் வரும் படி கையசைத்தாள். வாணி சிரித்துக் கொண்டே அருகில் ஓடினாள். அவளைத் தூக்கித் மடியில் உட்கார வைத்துக் கொண்டு “என்ன செல்லம் தினம் தினம் வர்றீங்களே கிளாஸ் எதுவும் போறீங்களா?” என்று கண்களை ஆச்சரியமாக விரித்துக் கொண்டு கேட்டாள். வாணி, ’டான்ஸ் கிளாஸ்க்கு’ என்றாள். ’அப்படியா’ என்று விட்டு கன்னத்தில் செல்லமாக ஒரு முத்தம் வைத்து “ஒகே நாளைக்குப் பாக்கலாம்” என்று கீழே இறக்கி விட்டாள். இவன் மரியாதைக்காக அவளைப் பார்த்து சிரிக்க நினைத்தான். அவள் இவனைக் கண்டு கொள்ளவே இல்லை. அன்று ஊதா நிற லெகின்ஸ் நீல நிற டாப்ஸ் அணிந்திருந்தாள். காதில் நீல நிற பேப்பர் தோடு பிரகாசமான பெரியதொரு பூவைப் போல இருந்தது.

     வாணியின் டான்ஸ் கிளாஸ் ஒரு மாதத்தில் முடிந்துவிட்டது. பிறகு அந்தப் பக்கம் போகக் கூடிய சந்தர்ப்பமே வரவில்லை. ஒன்றிரண்டு நாளில் சம்யுத்தாவின் நினைவு மறைந்து போய்விட்டது. திடீரென்று ஒருநாள் “ஹாய் யோகேஷ் இங்க என்ன பண்ற?” என்கிற இனிமையான குரலைக் கேட்டான். அது யாரையோ யாரோ கேட்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் சம்யுக்தா அங்கே அவனைப் பார்த்து வெகு நாட்களாகப் பழகியவளைப் போல சிரித்துக் கொண்டு இருந்தாள். அந்த சிரிப்பு ஒரு அலையைப் போல அவனை இழுத்துப் போட்டுக் கொண்டது. “என் பேர் யோகேஷ் இல்ல பாலாஜி” என்றான். “ஐ ம் நித்யா” என்று சொல்லி, அவன் மனதில் சம்யுத்தாவாக இருந்தவள், நித்யாவாக மாறினாள். இப்படித்தான் ஒரு சராசரித் தமிழ் சினிமாவின் கதையைப் போல அது ஆரம்பித்தது.    

     முதலில் அவன் அவளை ஒரு இன்டலச்சுவல் என்று நினைக்கவில்லை. தினம் தினம் அவள் தன்னுடைய பிம்பத்தை அவனுக்குள் மாற்றிக் கொண்டே இருந்தாள். உரையாடலை சட் டென சிறந்த ஜோக்காக மாற்றுவது கேள்விப்படாத தகவல்களை இடைஇடையே சொல்வது. வித்தியாசமான கோணங்களில் சம்பவங்களைப் பார்ப்பது, அழகுணர்வு கவிதை ரசனை எல்லாம் கலந்தவளாய் இருந்தாள். அவன் தன்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு பெண்ணைக் கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை.

     அவளைப் பற்றி அம்மாவிடம் சொன்னான். வீட்டுக்குக் கூட்டிப் போனான். அப்பா அவளை தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் ஒருத்தியைப் பார்ப்பதைப் போலப் பார்த்தார். அவள் அதைக் கண்டுகொள்ளவில்லையா? அல்லது கண்டுகொள்ளாத மாதிரி இருந்துகொண்டாளா? என்பதை இவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

’உங்கள் வீட்டுக்கு என்னைக் கூட்டிப் போ’ என அவன் கிட்டத்தட்ட ஒரு வருடமாக கேட்டுக் கொண்டிருக்கிறான். அவள் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லித் தவிர்த்தாள். அந்தக் காரணங்கள் எல்லாம் நம்பும்படியாக இருந்தாலும், அவள் தன்னை வீட்டுக்கு கூட்டிப் போவதை தவிர்க்கிறாள் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியாமலில்லை. அவளுடைய வீட்டை கண்டுபிடிப்பது அவனுக்கு ஒன்றும் பெரிய விஷயம் இல்லைதான் என்றாலும் அவள் என்னதான் செய்கிறாள் பார்ப்போம் என்று அவனும் அவள் காரணம் சொல்லும்போதெல்லாம் சரி என்று ஒப்புக் கொண்டான்.

திடீரென ஒருநாள் அவள் அவனை தன் வீட்டுக்கு கூட்டிப் போனாள். 

அவளுடைய வீடு சிறிய வீடாக இருப்பதைப் பார்த்து அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. இந்த வீட்டில் இருந்து கொண்டா அவள் அப்படிப் பேசினாள். உறவினர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள். அப்பாவுக்கு பிசினஸ் அது இது என்றாள்.

     நித்யாவின் அம்மா நிறைந்த சிரிப்போடு இருவரையும் வரவேற்றாள். இவனால் சிரிக்க முடியவில்லை. உள்ளே ஒரே புழுக்கமாய் இருந்தது.  பிளாஸ்டிக் சேரில் அவனை உட்காரச் சொல்லிவிட்டு, அதே அறையில் கிடந்த இரும்புக் கட்டிலில் அவள் உட்கார்ந்து கொண்டாள். அவள் முகம் இறுகிக் கொண்டே வந்தது. அவன் இங்கிருந்து உடனே வெளியேறிவிட வேண்டும் என அவனைப் பிடித்து தள்ளிக் கொண்டிருந்த உந்துதலை கட்டுப்படுத்த திணறினான். எதுவும் பேசாமல் சிரித்தபடி இருக்க முயற்சித்தான். வீட்டை விட்டு வெளியே போனதும் இவள் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டான். எப்பேற்பட்ட நாடகக் காரி. என்ன ஒரு அலட்டல், இவனை என்ன முட்டாள் என்று நினைத்துக் கொண்டாளா? அவனுக்கு உள்ளே கோபம் திமிறிக் கொண்டு இருந்தது.  நித்யா எழுந்து உள் அறைக்குப் போனாள். அம்மா அவன் பக்கத்தில் முக்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டு “அப்புறம் கண்ணு நல்லா இருக்கியா? பொண்ணு எப்ப வந்தாலும் உன்னப் பத்திதான் சொல்லிகிட்டு இருக்கும். அடியே காது புளிக்குதுடி வேற எதாவது பேசுடின்னா கேக்கவே மாட்டா. உன்னப் பத்தியேதான் பேசிகிட்டிருப்பா பச்சக் குழந்த மாதிரி.“ என்றாள். வாஞ்சையாக சிரித்தாள். 

     திடீரென்று ஒரு பெருத்த கேவல் ஒலியில் இருவரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். அறைக்குள் நித்யா முகத்தை மூடிக் கொண்டு அழுது கொண்டிருப்பதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது. அவன் எதுவும் பேசவில்லை. அம்மா எழுந்துபோய், அவள் முகத்தைத் தாங்கிக் கொண்டாள். “அம்மாடி இப்ப தம்பி உன்ன என்னா சொல்லிச்சி? இல்ல நான்தான் என்ன சொன்னேன். எதுக்கும்மா அழுவற? இதப் பாரு நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். இதப் பாரு பச்சக் குழந்தையாட்டம் இப்ப எதுக்கு இப்படி அழுதுகிட்டு இருக்க. தம்பி சங்கடப்படுது பாரு.“ என்றாள்.

     நித்யா கண்ணைத் துடைத்துக் கொண்டே அவன் அருகில் வந்து நின்றாள். “நீ ஏமாந்துட்ட இல்ல?” என்று அழுதுகொண்டே கேட்டாள். அவனுக்கு சட்டென்று மனம் இளகிவிட்டது. எழுந்து அவள் தோளைப் பற்றிக் கொண்டான். ”இதா பாரு நித்யா. சீ அழுவாத கண்ணத் தொட இதுக்குப் போயி உன்னைக் கோவிச்சுக்குவனா பைத்தயம்” என்றான்.

     அவள் மெல்ல மெல்ல அமைதியானாள். அவன் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு சரி நான் கிளம்பறேன். நாளைக்குப் பாப்போம் என்று வந்துவிட்டான். வந்ததிலிருந்தே ஒரே குழப்பமாய் இருந்தது. நித்யா எதற்காக இப்படி நடந்து கொள்ள வேண்டும். இது எல்லாம் எதேச்சையாக நடந்ததா இல்லை திட்டமிட்டு நடந்ததா? யோசித்துப் பார்த்தால் எங்கேயோ ஒன்று உறுத்துகிறதே என்று நினைத்துக் கொண்டான்.  அவனுக்கு இது விசித்திரமாய் இருந்தது. அம்மாவும் பெண்ணும் சேர்ந்து ஏதாவது நாடகம் நடத்துகிறார்களா என்று சந்தேகமாய் இருந்தது. இரண்டு நாளாய் அவன் நித்யாவுக்கோ அம்மாவுக்கோ போன் செய்யவில்லை. அவர்களிடம் இருந்து கட்டாயம் போன் வரும் என்று எதிர்பார்த்தான். ஆனால் அவர்களிடம் இருந்து போன் எதுவும் வரவில்லை

     இரண்டு நாளுக்கு மேல் அவனால் தாங்க முடியவில்லை. உள்ளுணர்வு மிகவும் பதட்டமடைந்து கொண்டே இருந்தது. என்னவோ நடந்துவிட்டது. ஏதோ விபரீதமான ஒன்று நடந்திருக்கிறது. மெல்ல மெல்ல அவன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாத நிலையை அடைந்தான். நித்யாவின் அம்மாவுக்கு போன் செய்தான்.

     போனை எடுத்தவுடன் அந்த அம்மாவிடம் இருந்து அலறல் போன்ற சத்தம் கேட்டது. “அவ தூக்க மாத்திரய சாப்டுட்டாப்பா.. சாகக் கிடக்கறாப்பா.” என்றாள். அவன் வெலவெலத்துப் போனான். கால்கள் மடிந்து கொண்டு விழப்போனான். “என்ன சொல்றீங்க? என்ன ஆச்சு ஏன் எனக்கு தகவல் சொல்லல எங்க இருக்கீங்க?” என்று படபடத்தான். ”கிருஷ்ணா ஆஸ்பிடல்லதான்பா இருக்கோம் வாப்பா வந்து பாருப்பா நான் என்னான்னு சொல்லுவேன். கடவுளே” என்றாள்.

     இவன் போகும் போது நித்யாவுக்கு ஆக்சிஜன் மாஸ்க் போட்டிருந்தது. இறந்துவிட்டவளைப் போல அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள்.  இவன் நித்யாவின் அம்மா உமாவிடம், ’என்ன நடந்தது?’ என்றான்.

    அவள் ஒரு சேரை இழுத்து போட்டு உட்காரச் சொன்னாள். பெருமூச்சொன்றை விட்டுவிட்டு மெல்லிய குரலில் சொல்ல ஆரம்பித்தாள்.

     ”என்னன்னு தெரியலை தம்பி சின்ன வயசில எல்லாம் நல்லாத்தான் இருந்தா. புத்திசாலித்தனமா பேசுவா. எழுதுவா. மாநில அளவில கட்டுரைப் போட்டில ஜெயிச்சி பிரைஸ் எல்லாம் வாங்கியிருக்கா. நல்லா படிப்பா. யாரு கண்ணு பட்டுதோ என்ன ஆனதோ. திடீர்னு எல்லாத்திலயும் நாட்டம் குறைஞ்சி போச்சி. நடிகைங்க மாதிரி டிரஸ் பண்ணிக்கறது. மேக்கப் போட்டுக்கறதுன்னு அவிங்க அப்பா கிட்ட நச்சு பண்ணி காசு வாங்கி வாங்கி செலவு பண்ணினா. அவ அப்பாகிட்ட அவ்வளவு செல்லம். வரவுக்கும் செலவுக்கும் பத்தாத வருமானம்னாலும் மக கேக்கறத அவர் வாங்கிக் கொடுத்துகிட்டிருந்தார். பிளஸ்டூ ல பெயிலாயிட்டா. கொஞ்ச நாள் கம்ப்யூட்டர் கிளாஸ் இன்டீரியர் டெக்கரேசன் அது இதுன்னு கிளாஸ்க்குப் போனா. நாங்க சரி கல்யாணத்தையாவது பண்ணி வைப்போம்னு வரன் பாக்க ஆரம்பிச்சோம். வர்ற வரன்களையெல்லாம் தட்டிக் கழிச்சிகிட்டே இருந்தா. சின்னவ மஞ்சு எம்.பி.ஏ முடிச்சா சின்னவளுக்கு வேணும்னா கல்யாணத்தப் பண்ணிருங்க. நான் அப்புறம் பண்ணிக்கறேன்னா. ரெண்டு பேருக்கும் வயசு ஏறிகிட்டே போகுதே ன்னு சரி அவளுக்காவது ஒரு கல்யாணத்தப் பண்ணுவோம்னு ஒரு நல்ல இடமா பாத்துக் கல்யாணத்தப் பண்ணி வச்சோம். அந்த மருமகன் ஜெர்மன்ல ஏதோ கெமிக்கல் கம்பனியில கெமிஸ்ட்டா இருக்கார். இவளும் எம்.பி.ஏ படிச்சதனால ஜெர்மன்லயே ஒரு வேலயத் தேடிகிட்டா. இப்ப அவங்க ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க.

     இவ போக்குதான் எனக்கு ஒண்ணும் புரிய மாட்டேங்குது. திடீர்னு ஒருநாள் ரொம்ப சந்தோசமா இருப்பா. கொஞ்சநாள் கழிச்சி பயங்கர சோகமா இருப்பா. ஒரு தடவை எம் மடியில படுத்துகிட்டு “அம்மா எங்கூட படிச்சவங்கள்லாம் டாக்டர் இன்ஜினியர்னு ஆயிட்டாங்க. நான் மட்டும்தான் இப்படி இருக்கேன். சுமாரா படிச்ச மஞ்சுகூட இப்ப நல்லா செட்டில் ஆயிட்டா. நல்லா படிச்ச நான் இப்ப இப்படி வீணாப் போயிட்டேன்.  உங்கப் பேச்சக் கேட்டு நடந்திருந்தா நானும் நல்லா இருந்திருப்பேன்னு அழுதா. நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க. இவளோட துக்கத்திலயே எங்க வீட்டுக்காரரும் போய் சேந்துட்டார்.

     திடீர்னு ஒருநாள் எக்கச்சக்கமா தூக்க மாத்திரைய போட்டுகிட்டா அடிச்சிப் பிடிச்சிக் கொண்டு வந்து ஆஸ்பத்திரியில போட்டுக் காப்பாத்தினேன். அதுக்கப்புறம் சில சமயம் திடீர் திடீர்னு பயங்கரமா கத்துவா. ராத்திரியில எழுந்து வெளிய போகப் பார்ப்பா. விடாம கதவைத் தாழ் போட்டு வச்சா ஆர்ப்பாட்டம் பண்ணி எல்லாத்தையும் எடுத்துப் போட்டு உடைப்பா. என்னையே பல தடவை அடிக்க வந்துட்டா. நாளஞ்சு நாளைக்கு அப்படி இருப்பா. அப்புறம் சரியாயிடும். கேட்டா நான் என்ன பண்ணேன்னு எனக்கே தெரியலைம்பா.

     அப்புறம் கொஞ்ச நாள் அமைதியா இருப்பா. ஐயாயிரம் குடு பத்தாயிரம் குடுன்னு வாங்கிட்டுப் போய் படாடோபமா செலவு பண்ணுவா. போவா வருவா, நானும் எதோ அவ சந்தோசப் படி இருந்துட்டுப் போகட்டும்னு விட்டுட்டேன். அப்புறம்தான் உன்னப் பத்தி எங்கிட்ட சொன்னா. நானும் சரி ரெண்டு பேருக்கும் கல்யாணத்தப் பண்ணி வச்சிடுவோம்னுதான் இருந்தேன்.

 வீட்டுக்கு நீ வந்துட்டுப் போன பின்னாடி அவன் என்னப் பெரிய பணக்காரின்னு நினைச்சிகிட்டிருந்தான். நான் தான் எப்படியும் உண்மை தெரிஞ்சிதானே ஆகாணும்னு அவனை வீட்டுக்குக் கூட்டிகிட்டு வந்தேன். ஆனா உண்மை தெரிஞ்சதும் விட்டுட்டு ஓடிப்போயிட்டான். என்ன ஏமாத்திட்டான். இனிமே அவன் வரமாட்டான்னு புலம்பிகிட்டே இருந்தா. உங்கிட்ட இருந்து ரெண்டு நாளா போனும் இல்ல தகவலும் இல்லன்னதும் ரொம்ப மனசொடிஞ்சி போயிட்டா. நானும் எவ்வளவோ தூரம் ஆறுதல் சொன்னேன். தம்பியப் பாத்தா அப்படி நினைக்கறவரா தெரியலை. எப்படியும் உன்னத் தேடி வருவார் பாரேன்னு சொல்லகிட்டே இருந்தேன். ஆனா நேத்து திரும்பவும் தூக்க மாத்திரைய சாப்டுட்டா. நான் என்ன பண்ணுவேன். என்ன ஆனாலும் உங்கிட்ட எதுவும் சொல்லக் கூடாதுன்னுதான் இருந்தேன். நீயே போன் பண்ணிட்ட. நான் என்ன பண்ணுவேன் நீயே சொல்லு தம்பி” என்று கசந்து போய் அழுதாள்.

    சட்டென அவன் மனதின் இறுக்கம் எல்லாம் தகர்ந்தது. நித்யாவுக்கு இருப்பது அப்படி ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. ஒரு சைக்யாரிஸ்ட்டிடம் கூட்டிப் போய்க் காட்டினால் அவள் சரியாகிவிட வாய்ப்பு இருப்பதாக பாலாஜி நம்பினான்.

பாலாஜியின் அப்பா, அவர்கள் கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை. நித்யா அம்மாவின் முன்னிலையில் இருவரும் கல்யாணம் செய்து கொண்டனர். இரண்டு வருடம் போல எந்த பிரச்னையும் இல்லை. அவளுக்கு உண்மையிலேயே மனப் பிரச்னை இருக்கிறதா? என அவனுக்கு சந்தேகமாக இருந்தது. எதற்கும் ஒரு டாக்டரிடம் கன்சல்ட் செய்து கொள்வது நல்லது என நினைத்தவனாய், நித்யாவை டாக்டரிடம் போகலாம் என்று கேட்டான். ஆனால், அவள் எந்த சைக்யாரிஸ்ட்டையும் வந்து பார்க்கப் போவதில்லை என திடமாக மறுத்துவிட்டாள்.

     அவர்களுடைய படுக்கை அறையில் ஒருநாள் அவன் கத்தியால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கொலையுண்டு கிடந்தான். நித்யா என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் தெரியாது என்றுவிட்டாள்.

பின்குறிப்பு

 நித்யாவை கல்யாணம் செய்து கொண்டதால் பாலாஜி வீட்டுக்கு வரக் கூடாது என அவன் அப்பா திட்டவட்டமாக சொல்லிவிட்டார். அவன் ஒரு தங்க நகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். கொஞ்சநாள் நித்யாவின் அம்மா வீட்டிலேயே குடியிருந்தனர். பிறகு ஒரு வாடகை வீட்டுக்குக் குடிமாறினர்.

இரண்டாண்டுகள் வாழ்க்கை சுமுகமாகப் போனது.

நித்யா நகைக்கடை முதலாளியின் மகனைக் காதலிக்க முயற்சி செய்தாள். பாலாஜி அதைக் கடுமையாகக் கண்டித்தான். தினம் இருவருக்கும் சண்டையும் சச்சரவும் நடந்தது.

     சம்பவத்திற்குப் பின் பாலாஜியின் அப்பா நித்யா ஒரு மோசமான பெண் என்றும் அவள் திட்டமிட்டே தன் மகனைக் காதலித்தாள் என்றும், நான் அவனை வீட்டைவிட்டு அனுப்பிவிட்ட ஏமாற்றத்தில் இன்னொரு பணக்காரனை வளைத்துப் போட்டுக் கொண்டு இவனைக் கொன்று விட்டாள் என்றும் நிரூபிக்க தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உமா, தன் மகள் நித்யா மனநிலை சரியில்லாதவள் என்றும் அவளை தண்டனையில் இருந்து காப்பாற்றுமாறும், தெரிந்தவர்களிடமெல்லாம் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். 

000

குமாரநந்தன்

இரண்டாயிரத்திற்குப் பிற்கு எழுத வந்த புதிய தலைமுறை சிறுகதையாளர்களில்

கவனிக்கப்பட, அதிகம் பேசப்பட வேண்டியவர்களில் எழுத்தாளர் குமாரநந்தனும் ஒருவர்.

இதுவரை பதிமூன்று மீன்கள், பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப் பாடகன், மகா

மாயா ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் பகற்கனவுகளின் நடனம் என்னும் கவிதைத்

தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவரின் கதைகள் ஆரவாரமற்றவை. ஆனால் ஆழம்

நிரம்பியவை.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *