– தயாஜி

நேற்றைய வேலையில் பாரம் அதிகமாய் இருந்ததால், மீண்டும் இடுப்பில் வலி வந்துவிட்டது. இரவு உறக்கமின்றி ரொம்பவும் சிரமப்பட வேண்டியதாய்ப் போயிற்று. இடுப்பு வலி வந்துவிட்டால் உடலை அசைப்பதும் உருண்டு படுப்பதும் வலியை அதிகப்படுத்திவிடும். அதற்காக இயந்திரம் போல அசைவற்றா அமர்ந்திருக்க முடியும். பிழைப்பு நடக்க வேண்டாமா.

பொருட்களை டெலிவரி செய்யும் போது சில சமயங்களில் அந்தந்தப் பொருட்களை நாமே தூக்கி கொண்டு மாடிப்படி ஏறும்படியும் குறிப்பிட்ட இடம் வரை கையில் தூக்கிக் கொண்டே நடக்கும் படியும் ஆகிவிடும்.  பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இது தெரியும். பொருட்களை இப்படி தூக்கி வரும்படி இருந்தாலும் மாடிக்கு கொண்டு வரவேண்டும் என்பதாக இருந்தாலும் கூடுதலாக பணம் செலுத்துவார்கள். அல்லது டெலிவரிக்கு அழைக்கும்போதே சொல்லிவிடுவார்கள்.

பொருட்களின் பாரத்தைப் பொருத்து  ஏறக்குறைய இரண்டு  ரிங்கிட்டில் இருந்து மூன்று ரிங்கிட் வரை கூடுதலாக நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

சில வாடிக்கையாளர்களுக்கு இது தெரிந்திருந்தாலும் அவர்களின் ஒரு ரிங்கிட் இரண்டு ரிங்கிட்டை மிச்சப்படுத்துவதற்காக டெலிவரியில் எதையும் குறிப்பிட மாட்டார்கள். பொருட்களை அவர்கள் தரும் முகவரிக்கு கொண்டு சென்றதும்தான் நம்மிடம் பொருளை தூக்கி கொண்டு வரும் வேலையையோ படியேறுவதையோ சொல்லுவார்கள்.

அப்படி சொல்லும் போது, அவர்கள் அதனை டெலிவரி அப்லிகேஷனில் சொல்லியிருக்க வேண்டும்; அப்போதுதான் எங்களால் அப்படி கொண்டு வரமுடியும். ஏனெனில் இவர்கள் கொடுக்கும் கட்டணத்தில் இப்படி பொருட்களை தூக்கி கொண்டு மாடிக்கு ஏறி வருவதெல்லாம் சேர்க்கவில்லை என குறிப்பிடுவோம்.

சிலர் தங்களின் தவறுகளை புரிந்து கொள்வார்கள் இன்னும் சிலர் அப்போது கையில் இரண்டு வெள்ளியைத் திணிப்பார்கள். இன்னும் சிலர் இருக்கின்றார்கள், தங்களின் தவறை மறைக்கவோ தங்களின் சாமார்த்தியத்தை காட்டுவதாகவோ நாங்கள் வழங்கிய சேவைக்கு கொடுக்க வேண்டிய 5 ஸ்டார்களுக்கு பதிலாக ஒரு ஸ்டாரையும் கொடுத்து எங்களின் வேலை சரியாக இல்லை என்கிற குறையையும் அப்லிகேஷனின் எழுதிவிடுவார்கள்.

அப்படி எழுதிவிட்டால் எங்களுக்கு அடுத்தடுத்த வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால் எங்களுக்கு பாதிநாள் வரை வாடிக்கையாளர்கள் கிடைக்காமல் அள்ளாடுவோம். எங்களின் அன்றைய சோற்றில்  வாடிக்கையாளர்கள் எங்களுக்கு கொடுக்கும் ஸ்டார்கள் இருக்க வேண்டும் என எங்களை நிலமையை நாங்களே கிண்டல் செய்து கொஞ்ச நேரம் சிரித்து கொள்வோம்.

 எங்களின் அன்றைய வயிற்று பிழைப்பிற்கு  எதற்கு இந்த வம்பு என்று, வாடிக்கைளார்கள் சொல்வதை மறுக்காமல் செய்துவிடுவோம். வேறேன்ன செய்ய முடியும் எங்களால். வாடிக்கையாளர்களாக நீங்கள் வரும்போது உங்களால் முடிந்த எதையாவது எங்களுக்கு செய்யுங்கள். உங்களுக்கு புண்ணியமாய்ப் போகும்.

நேற்றைய டெலிவரியிலும் அப்படியான அனுபவம் எனக்கு கிடைத்தது. சில பாரமான பெட்டிகளை  டெலிவரி செய்யும் வேலை வந்தது. தூக்கியும் இறக்கியும்  செய்த வேலை போதாதென்று  மழையும் வந்திருந்தது. ஈரமான தரையில் பாரமான  பெட்டியுடன் நடக்கும் போது வலது கால்  முன்னே இழுத்து  தடுமாற்றம் ஏற்பட்டது. சட்டென என்னை அறியாமலேயே என் உடல் இயந்திரத்தனாமாய் அதன் பாதுகாப்பு கவசமாக ஏதேதோ முன்னெச்சரிக்கை அசைவுகளைச் செய்தது.

என்னைப் பாதுகாப்பதாக நினைத்து ஏற்கனவே கொஞ்சமாய் இருந்த இடுப்பு வலியை இரட்டிப்பாக்கிவிட்டது.

வலி தாங்காமல் வீட்டிற்கு செல்லலாம் என்றால் முடியாது. ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மழைத்தூறல் ஆரம்பமாகிறது. இன்றைய சம்பாத்தியமும் போதவில்லை. எனது கணக்குபடி இன்று குறைந்தது மூன்று டெலிவரிகளையாவது  செய்ய வேண்டும் அப்போதுதான்  பட்ஜெட் போட்டபடி சமாளிக்க முடியும். அதோடு இன்னும் இரண்டு நாட்களில்  அடகு வைத்த மனைவியின் கடைசி தங்க சங்கிலிக்கு தவணைப் பணம் கட்ட வேண்டியுள்ளது. வலியைவிடவும் இதுதான் இப்போது முதன்மையாக இருக்கிறது.

நினைக்கும் போதே கைப்பேசி சத்தமிட்டது. ஆம் அடுத்த டெலிவரி ஆடர் வந்துவிட்டது. வாடிக்கையாளர் ஒருவரின் காருக்கு தேவையான உதிரி பாகங்களைக் கொண்டு போக வேண்டும். 21 கிலோமீட்டர்தான்; வழக்கம்  போல அரை மணி நேரத்தில் பொருளைக் கொண்டு போய்ச்  சேர்த்துவிடலாம்.  ஆனால் இன்று அப்படியான  கணக்கு செல்லுபடியாகாது.  மழையாக இருப்பதால் அரைமணி நேரம் என்பது ஐம்பது நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்தையும் தாண்டலாம். கைப்பேசியில் இருக்கும் வழிகாட்டும் அப்லிகேஷனும் அதைத்தான் சொல்கிறது.

வேறு பாதை இருக்கிறதா என அப்லிகேஷனின் தேடினேன். ஏறக்குறைய நாற்பது நிமிடங்களுக்குள் சென்று சேறும் பாதையைக் காட்டியது. அது ‘டோல் சாவடி’ இருக்கும் பாதை. அதற்கான டோல் கட்டணம் இரண்டு ரிங்கிட் என காட்டியது கைப்பேசி.

 கஸ்டமரை அழைத்து மழையாக இருப்பதாலும் சீக்கிரமே வருவதற்கான பாதையின் டோல் சாவடிக்கு இரண்டு ரிங்கிட் கட்ட வேண்டியது குறித்தும்  பேசினேன். சரி என்றார்கள். ஏனெனில் டெலிவரிக்கு செல்லும் போது டோல் சாவடிகளை பயன்படுத்த மாட்டோம். அது எங்கள் அப்லிகேஷனின் இருக்காது. வாடிக்கையாளர்கள் அதற்கான  பணத்தை தனியாக கொடுத்தால்  மட்டுமே நாங்கள் டோல் சாவடி பாதையைப் பயன்படுத்துவோம்.

ஒரு சிலர் டெலிவரிக்கு அழைக்கும் போதே டோல் சாவடிக்கான பணத்தை கொடுக்க முடியாது என வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள். அப்படி சொல்லிவிட்டால் எங்களால் வேறெதையும் செய்ய முடியாது டோல் சாவடி இல்லாத சுற்றுப்பாதையைத் தேர்வு செய்து அதிக தூரம் பயணம் சென்று இலக்கை அடைவோம்.

இந்த வாடிக்கையாளர் டோல் கட்டணத்தைக் கொடுப்பேன் என சொல்லிவிட்டதில் மகிழ்ச்சி. பொருளை எடுத்துக் கொண்டு ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில் அந்த இடத்தை அடைந்தேன். என்ன செய்வது மழையால் தாமதமாகிவிட்டது. ஆனால் நல்லவேளை வேறு பாதையை எடுத்திருந்தால் இன்னும் அதிக நேரம் சாலையிலேயே இருந்திருக்கும்படி ஆகியிருக்கும்.

தமிழரின் கார் பழுது பார்க்கும் கடை. நடுத்தர வயதில் ஒருவர் காரை பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போதுதான் தெரிந்தது தமிழரிடம்தான் பேசியிருக்கிறேன். அவரிடம் சென்று பொருட்களைக் கொடுத்தேன். “வழியில் ரொம்ப மழையா..? என்றார். ஆமாம் என்று டெலிவரி கட்டணத்தில் டோல் பணத்தையும் சேர்த்து கொள்ளும்படியும் சொன்னேன். “ஆம்” என்றவர், தூரத்தில் இருக்கும் மகனை அழைத்து எனக்கான பணத்தைக் கொடுக்கச் சொன்னார். பொருட்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு அவரது அறைக்குச் சென்றார்.

அங்கிருந்த மகன் கைகால்களை துணியில் துடைத்துக் கொண்டே வந்தார். என்னைப் பார்த்தபடியே கைகளைத் துடைத்த துணியை ஸ்டைலாக வீசினார். அதற்கென்றே அடிக்கப்பட்ட ஆணியில் அது சென்று மாட்டிக்கொண்டது. பழக்கப்பட்ட ஆணி போல சட்டென துணியைக் கவ்விக்கொண்டது.

டெலிவரிக்கான பணத்தை நேரடியாக என் வங்கியில் செலுத்துவதாகச் சொல்லி எவ்வளவு என்று விலையை விசாரித்தார். நானும் அந்த நடுத்தர வயதுக்காரரிடம் சொன்னது போலவே கட்டணத்தையும் டோல் சாவடிக்கு  கட்டிய இரண்டு ரிங்கிட்டையும் சேர்த்து சொன்னேன்.  சட்டென இவர் முகம் மாறியது.

 “என்னது!  என்ன ரெண்டு ரிங்கிட்டை கூடுதலா கேட்கறீங்க என் போன்ல அப்படி காட்டலயே..?” என்று அவரது கைப்பேசியில் டெலிவரி ஆடர் அப்லிகேஷனைக் காட்டினார்.

“அதில் இருக்காது…” என சொல்ல வாயெடுத்தேன்.

“அப்லிகேஷன்ல இல்லாம காசு கேட்டா எப்படி கொடுக்கறது. இதுக்கும் சேர்த்துதானே காசு கொடுக்கறோம்.. கூட கேட்டா எப்படி… எல்லாம் புதுசாதான் இருக்கு….”

“அதில் இருக்காது… ஆனா ‘டோல்’ இருந்தா கஷ்டமர்கிட்ட நாம கேட்கலாம். அந்த அண்ணகிட்ட கேட்டுட்டுதான்  அந்தப் பாதையில வந்தேன்” என்றேன்.

“அதுக்கு….” என்றவரின் முகத்தைப் பார்க்க எனக்கு ஏதோ மாதிரி இருந்தது.

“டொல் காசு கொடுக்கறதும் கொடுக்காததும் கஸ்டமரோட விருப்பம். ஆனால் பொருளை எடுக்கும் போதே நாங்க கஸ்டமரை கூப்டு கேட்போம். டோல் காசு கொடுக்கறதா சொன்னாலும் இல்லைன்னு சொன்னாலும் அதுக்கு ஏத்த மாதிரி பாதையில் வருவோம். அந்த அண்ணகிட்ட கேட்டேன் அவர் கொடுக்கறேன்னு சொன்னாரு அதான் அந்தப் பாதையில் வந்தேன்…”

எங்களது உரையாடல் உள்ளே இருப்பவருக்கு கேட்டிருக்க வேண்டும். “டேய்… நான் தான் கொடுக்கறேன்னு சொன்னேன்.. காசு கொடுத்து அவரை அனுப்பு.. மழையா இருக்குல்ல.. அவரு மத்த இடத்துக்கு போகனும்ல….” என்றார்.

எதிரில் இருந்தவருக்கு கோவம் வந்திருக்க வேண்டும். வங்கியில் பணம் செலுத்துவதாக சொன்னவர். அவரது பாக்கெட்டில் இருந்து டெலிவரிக்கான பணத்தையும் டோல் சாவடிக்கு கட்டிய இரண்டு ரிங்கிட்டையும் கொடுத்துவிட்டு, “காசு என்ன இங்க மரத்துலயா காய்க்குது…” என்று ஆரம்பித்து ஏதேதோ பேசியபடி அவர் வந்த இடத்துக்கே சென்றார்.

எனக்கு அந்த இரண்டு வெள்ளியைப் பார்க்கவும் அவமானமாக இருந்தது. டெலிவரி பணத்தை பாக்கெட்டில் வைத்துவிட்டு, அந்த இரண்டு வெள்ளியை கையில் வைத்து இறுக்கமாக மூடியபடி கடையில் இருந்து வெளியேறினேன்.

அவர்களின் கடை வாசலில் பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தில் மஞ்சள் சிவப்பு துணியைக் கட்டியிருந்தார்கள் அதற்கு கீழ் சின்னதாய் ஒரு கூடாரம் இருந்தது. அதனுள்  மதுரைவீரன் சாமியை வைத்திருந்தார்கள். அவர் காலடியில் உண்டியலும் இருந்தது.  கையில் இருந்து அந்த இரண்டு ரிங்கிட்டை அந்த மதுரை வீரனிடம் கொடுத்துவிட்டு காருக்கு சென்றேன். ஏனோ கைகள் நடுங்கியபடி இருந்தன..

வலியைப் பொருத்து கொண்ட எனக்கு இந்த அவமானத்தை பொருத்துக் கொள்ள முடியவில்லை. வீட்டிற்கு போய்விடலாம் என்ற எண்ணம் எழுந்தது. ஆனாலும் இன்னும் இரண்டு டெலிவரிகலையாவது பார்க்க வேண்டுமே. மான அவமானம் பார்த்தால் வீட்டில் யார் சோறு சாப்பிடுவா! என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

மீண்டும் கைப்பேசி சத்தமிட்டது அடுத்ததாய் ஒரு டெலிவரி கிடைத்தது. மோட்டார் வண்டியின் சக்கரத்தை கொண்டு போக வேண்டும் என எழுதியிருந்தார்கள். இங்கிருந்து ஒரு கிலோ மீட்டரில்தான் பொருளை எடுக்க வேண்டும். உடனே கிளம்பினேன். கடைக்கு சென்றேன். கடையில் ஒருவர் கையில் இரண்டு மோட்டார் வண்டியின்  சக்கரத்துடன் காத்திருந்தார். அவரிடம் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவரிடம் இருந்து இரு சக்கரங்களையும் வண்டியில் ஏற்றினோம். இதற்கான  கட்டணத்தை எனது வங்கியில் செலுத்துவதாகச் சொல்லி வங்கி எண்ணின் கியூ.ஆரைக் கேட்டார்.

அதனைக்  கொடுப்பதற்கு முன் இந்த டெலிவரியைக் கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தை கைப்பேசியில் பார்த்தேன். ஒரே ஒரு டோல் சாவடி இருந்தது. ஒரு ரிங்கிட்  கட்டணத்தை காட்டியது. அவரிடம் சொன்னேன். “ஓ அப்படியா…?” என்றவர் கூடுதலாக ஐந்து ரிங்கிட்டைச் செலுத்தினார். எனக்கு ஆச்சயமாக இருந்தது. நன்றி சொல்லிவிட்டு டெலிவரிக்கு கிளம்பினேன்.

20 நிமிடங்களில் அந்த முகவரியை அடைந்தேன். வீட்டில் இருந்து ஒருவர் வந்தார், அவரேதான் அது. வண்டி சக்கரத்தை என்னிடம்  கொடுத்துவிட்டு எனக்கு முன்னமே அவர் அவரது மோட்டாரில் வந்துவிட்டார். இதனை அவர் மோட்டாரிலேயே கொண்டு வந்திருக்கலாம்தான். ஆனால் ஏனோ டெலிவரியில் அனுப்பியிருக்கிறார். பொருளைக் கொடுத்து பணத்தையும் கொடுத்து அனுப்பினார்.  சிரித்தபடி பொருளை வாங்கி கொண்டார்.  அவரது வீட்டு வாசலில் மூன்று டெலிவரி வேலைகான மோட்டார் சைக்கில்கள் இருந்தன.

இங்கும் எங்களின் டெலிவரி நண்பர்கள் இருக்கிறார்களா என்று கேட்டேன். “ஆமாம்.. நாங்களும் பகுதி நேரமா டெலிவரிதான் செய்றோம்… உங்க நண்பர்களுக்கு இன்னிக்கு விடுமுறை… அதனால்தான் உங்களுக்கு வேலை நாள்….” என்று சிரித்தார்.

எனக்குமே சிரிப்பு வந்தது. மழையும் அதிகமாக சிரிக்க ஆரம்பித்தது. கணக்கு செய்து பார்த்ததில் இன்றைக்கு தேவையான பணம் வந்து சேர்ந்திருந்தது. அதோடு மணி ஐந்தை நெருங்கியது. வாகன நெரிசலில் சிக்காமல் இருக்க இப்போது கிளம்பினால்தான் சரியாக இருக்கும் என்று நேராக  வீட்டிற்கு போகலாம் என்று கிளம்பினேன்.

கைப்பேசி சத்தமிட்டது. இன்னொரு டெலிவரி வந்திருக்கிறது. இந்த டெலிவரி கொடுத்த உற்சாகத்தில் இன்று மேலும் சில டெலிவரிகளைச் செய்யலாம் என்ற உற்சாகம் மனதில் தோன்றியது.

‘இதோ வருகிறேன்..” என்ற செய்தியை வாடிக்கையாளருக்கு அனுப்பிவிட்டு; வாகனத்தைச் செலுத்துகிறேன்.

00

எழுத்தாளர் தயாஜி.

மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *