ஏசுக்கள் கொண்டாடிய கிருஸ்மஸ்
தச்சன் வாழ்வை முறிக்க கடலில் குதித்தான்…
மரச்சீவல் போல சுழலலைகள்
அவனை உருட்டி விளையாடின..
தமுருகூடாகிய உடலை இழுகயிறு சுற்றி
சுண்டி இழுத்தது சூறாவளிக் காற்று…
விண்ணுயரப் பறந்தான்…
வானில் மிதந்த நாள்மீன் கடலில் நீந்த
ஆசைப்பட்டு மின்னலாக விழுந்தது…
முட்தோதலிகளின் மூதாயரைக் கண்ட நொறுங்கு
வீண்மீன்கள்…
அவனும் கண்டான் கடவுளை…
அவர் இவனைப் புதுவாழ்வுக்கு வித்திட்டார்…
மட்டம் சரி பார்க்கச் சொல்லி பலகை ஒன்று
இவனிடம் கெஞ்சி வேண்டியது..
அதனைத் தொற்றிக் கரை அடைந்தான்…
மரத்துண்டில் மடித்து அடிக்கப்பட்ட ஒராயிரம் ஆணிகள்…
அனைத்தையும் கொரடு வைத்துப் பிடுங்கி எறிய எறிய…
ஏசுப்பிரான்கள் பிறந்தார்கள்…
அவர்களோடு கடற்கரையில் உலாவினான்…
கூடவந்த அனைவரிகளின் கைகளில் அரத்தால் வருவின
கூர்மிகு இரும்புத் துண்டுகள் சொருகி இருந்தது…
நஞ்சாகிய ஆயுள்ரேகைகள்…
பல்லாயிரம் திசையறிந்த மணிக்கட்டுகள்
முறிந்த கிளை போல் தொங்கியது…
பாரபாஸ் நிம்மதி பெருமூச்சுவிட்டான்…
இவை யாவும் நீ நாளை அணியும் புத்தாடைக்கும், புளித்த
திராட்ச்சை ரசத்திற்க்கு மட்டுமே…!!!
***
— மோட்சம் வேண்டி அம்மன் —
கிழக்கு வாசலை வேகமாக மூடினார் பூசாரி
பூங்கரகத்திற்கு கத்திப் போட்ட மலையபெருமாள்
இறுதியாக கோவிலைக் கடக்கிறான்
அம்மன் சாத்திய கதவின் சாவித் துவாரம் வழியே பார்க்கிறாள்
அவளை விட அவனுக்கு மாலைகள் அதிகம்
கொள்ளிச்சட்டி தூக்கிய சிறுவனின் கைகளில் இன்னும் ஆறாத
தீப்புண்கள்
இருவரும் சேர்ந்து பூக்குழியில் தவறி விழுந்தவர்கள்
ஆறு மாதம் படுக்கையில் பிழைத்தவன் சிறுவன் மட்டுமே
தாலி அறுத்தவளின் சாபத்தைக் காது கொடுத்துக் கேட்க
முடியமால்
அம்மன் கடைசி ஆளாக ஊர்வலத்தில் சென்றாள்
களிமண்ணைப் பூசி விறட்டியைப் பற்ற வைத்துப் புகை
மூட்டினார்கள்
மலையபெருமாளை
அனைவரும் சென்ற பின் தீ மித்தாள் அம்மன் !!!
***
— மீச்சமன ஆணி —
சிலுவையின் அருகிலிருந்த ஆணிகளைப் பொறுக்கினாள்
தனது வீட்டில் கை உடைந்திருந்த மர ஏசுவைச் சரி செய்ய…
***
— நல்லாசிரியர் —
‘சாதிகள் இல்லையடி பாப்பா’ பாடம் எடுத்த ஆசிரியர்
அவசரம் அவசரமாக கிளம்பினார் சாதி சங்க மாநாட்டிற்கு
வாழ்த்துரையில் தலைவரின் பேனரைக் கிழித்தவனை,
கடுங்சொற்களில் வசைப்பாடினார்…
மணிக்கு ஒரு முறை ஆசிரியர் பேசிய
வீடியோவைப் பார்க்கிறான்,
சேரியில் அரிவாளுடன் திரிகிறான்
கையில் கலர் கயிறு கட்டியிருக்கும்
முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவன்
சக மாணவனின் வீட்டைக் கொளுத்துகிறான்
சதீஷ் கிரா எனது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள துறையூர். கோயம்புத்தூரில் பொறியியல் படித்தேன். தற்போது சினிமாத் துறையில் பணியாற்றி வருகிறேன். இலக்கிய வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.