-வீ.வைகை சுரேஷ்.
முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள்
பெரும்பொழுது சிறுபொழுது என
உற்சாகமாக படிக்கும் குரல் கேட்டு
சங்க கால நிலங்கள்கூறும் நீ
சம காலத்தில் நீயறிந்த நிலங்களை கூறென்றேன் மகளிடம்
கூறுகிறேன் கேளுங்கள்
நானறிந்த நிலங்களை நீங்கள்
,
கல் குவாரிகளும் கனிம வளங்களும்
உடைத்தெடுக்க காற்றெல்லாம்
தூசும் மாசும் நிறைந்த குறிஞ்சி
,
நான்கு வழிச் சாலையும் எட்டு வழிச் சாலையுமென நீளும் நெடுஞ்சாலை
நடுவில் நட்டு வைத்த
செவ்வரளி பூக்கள் சிரிக்க
சாலையோரம் முளைத்த அங்காடிகளில் மாதம் தவறாமல்
வாடகை மகசூல் தரும் முல்லை
.
நெடுவயல் நிறைய நீர் பாய்ச்சியும்
நடவு செய்த நெற்ப் பயிர்களும்
விரிசல் விழுந்த நிலத்தில் வாடி நிற்க
கொத்தி தின்னும் கோழியென
குணம் மாறிப் போன கொக்கு நிற்கும் மருதம்
,
எல்லைக் கல் ஏதும் ஊண்றாத
கடல் நீரில் துடுப்பசைத்து
துணிவுடன் செல்லும் மீனல்ல
அலை விளையாடும் கடலில்
தம் எல்லை எதுவென்று தெரியாது
மீன் வலை வீசிய மீனவன்
சுட்டும் கைதுமென செய்தி தரும் நெய்தல்
,
பச்சிளம் பள்ளிக் குழந்தைகள் குண்டு வீசிக் கொலை
கச்சா எண்ணெய் வாராது
எரிவாயும் எரி பொருளும் இல்லையென செய்தி கூறும் பாலை
,
நெடுஞ்சாலை பள்ளி கல்லூரி கோவில் என சில நூறு அடிகள் கடந்து
நீக்கமற இறைந்து கிடக்கும்
கண்ணாடி போத்தல்களும்
சிறு பொழுதோ பெரும் பொழுதோ
போதை பொழுதே எனக் கடக்கும்
போதை ஆசாமிகளும் நிறைந்த குடியும் குடி சார்ந்த டாஸ்மாக் நிலமென
நானறிந்த அறுவகை நிலங்கள் வாழ்வியல் திணைகளென
குழந்தை கூறி முடிக்க
சமகால திணைகளின் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள்
உணர்ந்தவனாக உருக்குலைந்து
உட்கார்ந்தேன்.
000

வீ.வைகை சுரேஷ்,
மேக மலையில் பிறந்து தேனி மாவட்ட மண்ணில் வைகை நதி பாயும் வயலும் வயல் சார்ந்த நிலமான மருத நிலம் நிறைந்த வைகை ஆற்றின் கரையில் உள்ள பள்ளபட்டி எனும் கிராமத்தின் விவசாயக் குடும்பத்தில் பிறந்த வீ.வைகை சுரேஷ்
தற்போது கோவையில் சுகாதார ஆய்வாளராக பணி புரிந்து வரும் சுரேஷ் ஆனந்த விகடன், குமுதம், நடுகல், இந்து தமிழ் திசை என கவிதைகள் கட்டுரைகள் கதைகள் நகைச்சுவை துணுக்குகள் என எழுதி வருகிறார்.

