– பாலமுருகன்.லோ
“ஏண்டி குருவம்மா, சேதி தெரிஞ்சுதாடி?”
“அக்கோவ், நீ என்னான்னு விவரமாச் சொன்னாதானே தெரியும்.”
“அடியே குருவம்மா, நம்ம கோமதி இருக்காளே…”
“ஆமாம், கோபாலு சம்சாரம் பத்தித்தானே பேசுற?”
“அவளைப் பத்திதான் பேசுறேன்.”
“அவளுக்கென்ன, நல்லா குத்துக்கல் மாதிரிதானே இருக்கா? என்ன ஆச்சு அவளுக்கு?”
“ஏண்டி, ஒரு பத்து வருஷம் இருக்குமில்ல, கோபாலு – கோமதிக்குக் கல்யாணம் முடிஞ்சு?”
“அட ஆமாம்க்கோவ், பத்து வருஷம் இருக்கும்.”
“இல்ல, இப்ப வரைக்கும் அவள் வவுத்துல ஒரு புழுப் பூச்சி உண்டாகலையே!”
“என்ன குறையின்னு தெரியலையே! இந்தச் சாமி அவங்களுக்கு ஒரு வழியைக் காட்ட மாட்டேங்குது.”
“அடப்போடி, கோபாலு மாதிரி குடிக்கிறவன் கிட்ட வேற என்னத்த எதிர்பார்க்கிறது? தினம் வந்தா அடிதடிதான் நடக்கும். இவளும் ஒப்பாரி வச்சிட்டு, அடுத்த நாளே மறந்துடுவா.”
“எக்கோவ், நீ வேணும்முன்னா நல்ல வைத்தியராச் சிபாரிசு செய்யேன்.”
“போடி வீணாப்போனவளே, நாம சொன்னா மட்டும் கேட்டுடுமா இரண்டும்?”
“அதுவும் சரிதான், நாமச் சொன்னா கேட்கவா போறாங்க? அவங்களுக்குத் தோணணும். சரிக்கோவ், நேரமாகுது, நான் கிளம்புறேன். சாயங்காலம் சோறுப் பொங்கும் போது மீதியைப் பேசலாம்” என்று குருவம்மா அந்த இடத்தைவிட்டு வெளியேறினாள்.
இப்படி ஊருல உள்ள பாதிப்பேரு கோபாலு, கோமதி கதையைப் பேசாத நாளில்லை. இவங்க கதை மட்டுமில்ல, இந்த மாதிரி அடுத்தவங்க கதையைச் சுவாரசியமாகப் பேசுவது அந்த ஊர் வழக்கம்; அப்படியே பழகிட்டாங்க அங்க வசிக்கிற ஜனங்க. ஏதாவது பேசலேனாத்தான், அந்த நாளே முடியாத மாதிரி தோணும். வெறும் வாயில அவிலப் போட்டு மெல்லலைன்னா அவங்களுக்கு அன்னைக்கு நாளே “பொக்குன்னு” போயிடும்.
இவர்கள் சும்மா பேசுகிறார்கள் என்று சொல்ல முடியாது; கோபாலுவின் நடவடிக்கையினால்தான் ஊரே இவர்களைப் பற்றிப் பேசுது. இப்பக் கூட கோபாலு எங்கே இருக்கிறான் என்று பார்த்தால், சாராயக்கடையில்தான் இருப்பான்.
“சக்கர, கோபாலுவிடம், அண்ணே, போதுமுண்ணே. தொண்டை முட்டக் குடிச்சேனா எப்படி? இனி நீ குடிச்சீன்னா, உன்னை அள்ளிப் போட்டுத்தான் கூட்டிட்டுப் போகணும்.”
“சக்கரே, குடிக்கிறவனுக்குத் தெரியாதாடா எவ்வளவு குடிக்கணுமுன்னு? இதுக்கூட மத்தவன் சொல்லித்தான் தெரியணுமா என்ன?”
“சக்கர, நீ வேணுமுன்னா போறதா இருந்தா போயேண்டா. நான் வந்துடுறேன்.”
“நல்லா சொன்னியே நீ. ஊருல இருக்கறவனெல்லாம் நாம ரெண்டு பேரும் கிளம்புறதைப் பார்த்திருக்கிறானுங்க. இப்ப நான் மட்டும் போனேன்னா, என்ன சந்தேகப்பட மாட்டாங்க? இன்னேரத்துக்கு, உன் சம்சாரத்துகிட்ட நம்மைப் பற்றிச் சொல்லியிருப்பானுங்க.”
“அது வெளக்குமாத்தை எடுத்து வச்சுக்கிட்டு காத்திருக்கும். இப்ப கிளம்புனீன்னா வெளக்குமாத்தோட போயிடும். இல்லேனா, உன் சம்சாரத்துக் கையில் என்ன இருக்குமுன்னே தெரியாது.”
“அவ கடக்கிறா, செத்த மூதி. அவளாலதான் நான் தினம் தினம் குடிச்சுட்டு இருக்கேன். அவளுக்கு நெனப்பு, அவத்தான் பெரிய இவன்னு. ஊருல உள்ளவனுங்கெல்லாம், ‘பாவம் கோபாலு, அவன் ஒரு வேலைக்கும் ஒத்துவரமாட்டான். ஏதோ அவன் சம்சாரம் கொஞ்சம் கெட்டி, அதான் குடும்பம் ஓடுதுங்கிறானுங்க.’”
“ஏண்டா சக்கர, இவனுங்க வந்து பாத்தானுங்களாடா எங்க வீட்டுல? போற போக்குல ஏதாவது சொல்லிட்டுப் போயிடுறானுங்க. அவளும் அதைக் கேட்டுக்கிட்டு என்னைச் சீண்டிப் பாக்கிறா. பொம்பள மேல கை வைக்கக் கூடாதுன்னு ஒரு வைராக்கியத்துல இருக்கிறதால, அவளுக்குத் தொக்காப் போயிடுச்சு.”
“சப்பளையர் கிட்ட இந்தா பிடி. வா, சித்த. இந்தாளைப் பத்திரமா ஆட்டோவுல ஏத்திவிடு. நான் போயி ஆட்டோ பிடிக்கிறேன்” என்று சொல்லி, சக்கர ஆட்டோ பிடித்துக்கொண்டு வந்தான்.
ஒரு வழியாகக் கோபாலுவை அந்தச் சரக்குக் கடைச் சப்ளையர் ஆட்டோவில் ஏற்றிவிட்டான். ஆட்டோ கோபாலுவின் வீட்டுக்கு வந்து நின்றது. சக்கர முதலில் ஆட்டோவிலிருந்து இறங்கி, கைத்தாங்கலாகக் கோபாலுவை இறக்கி, ஆட்டோவைச் செட்டில் பண்ணினான்.
“எக்கோவ், கோமதிக்கா!” என்று கூப்பிட்டான் சக்கர.
“யாரு? இதோ வர்றேன்னு” வீட்டுக்குள்ளிருந்து குரல் கொடுத்தாள் கோமதி. வெளியே வந்தவள், கணவன் இருந்த கோலத்தைப் பார்த்து, ‘அடிச்செருப்பால…’ என்றாள். “இந்த மனுஷனுக்கு இதுவே பொலப்பா போச்சு.”
நான் இங்க அவதிப்பட்டுகிட்டு இருக்கேன், இந்த மனுஷனுக்கு பொழுது சாஞ்சா போதுமே ஏதாவது சாராயக்கடையைப் பார்த்து ஒதுங்கிடுவான். ஊருல உள்ளவனுங்க சொல்லுற மாதிரியே இந்த மனுஷன் நடந்துக்கிறானே. அவனுங்களைச் சொல்லிப் பிரயோஜனமில்லை, இவனுக்குத்தான் அறிவு வேணும். நானும் வேண்டாத சாமியில்லை, போகாத கோவிலில்லை. என்ன வேண்டி என்னப் பண்ண? இந்த மனுஷன் இந்தப் பழக்கத்தை விட்டு முழுமையா ஒழிக்கணுமே.
அந்த ஆளையும் சும்மா சும்மா வசைபாடுறது நல்லா இல்ல, அந்த மனுஷன் குடிக்க ஆரம்பிச்சதே ஊருல பேசப்படுற புறணியாலத்தான். எங்களுக்கு மட்டும் அந்த கடவுள் ஒரு புள்ளப் பூச்சியை வவுத்துல கொடுத்திருந்தான்னா, இன்னேரத்துக்கு இந்தப் பாலாப்போன சிறுக்கிகளின் வாயை ஒட்ட நறுக்கியிருப்பேன்.
“ஏம்பா சக்கர, இந்த ஆளோடவே சுத்திக்கிட்டு இருக்கேல, நீயாவது சொல்லக்கூடாது, ‘குடிக்காத. இல்ல, அளவோட குடி’ன்னு.”
“எக்கோவ், நான் எவ்வளவோ சொல்லிட்டேனுங்க. அவரு கேட்கிற மாதிரியே இல்ல.”
“பாரு, அந்த ஆளால நிக்க முடியுதா? அந்த மனுஷன் கட்டியிருக்க வேட்டிய ஒழுங்காக் கட்ட முடியுமா பாரு? இடுப்புல நிக்காம நழுவிகிட்டு வருது. ரோட்டுல வேட்டி இல்லாம வெறும் பட்டாப் பட்டி டிராயரோட இருந்தா யாருக்கு அவமானம்? அந்த ஆளுக்கு இல்ல, எங்களுக்குத்தானே!”
“யாரைச் சொல்லி என்ன ஆகப்போறது? இந்த ஆளுக்கு நாளை சரியா மந்திரிச்சுவிட்டாத்தான் சரிப்பட்டு வரும்” என்றாள்.
“சரிக்கா, நான் இப்ப கிளம்புறேன்” என்று சொல்லி, கோமதி வீட்டிலிருந்து சக்கர வெளியேறினான்.
கோபாலுவைப் போராடி வீட்டினுள் படுக்க வைத்தாள் கோமதி. அடுத்த நாள் விடிந்தது. ஒன்றும் தெரியாத மாதிரி எழுந்து, காட்டுக்குப் போயிட்டு வந்து, குளிச்சுட்டு, ஒரு காபித்தண்ணிக்கோசரம் உட்கார்ந்திருந்தான். வேண்டுமென்றே நேரம் ஆக்கினாள் கோமதி.
“அடியே, எவ்வளவு நேரமா உட்கார்ந்திருக்கிறேன், ஒரு காபித்தண்ணிக்கோசரம். நீ கொடுத்தையா?”
“ஏன் நான் கொடுக்கணும்? வேணுமுன்னா நீயே போட்டுக் குடி. இப்ப மட்டும் கோமதி தேவையோ?”
“இல்லடி, நீ நேத்து நடந்தத மனசுல வச்சுக்கிட்டுத்தான் இப்படிப் பேசற.”
“ஆமாம், அதுக்கென்ன இப்போ? என்னைக்காவது குடிக்காம இருந்திருக்கையா? இல்லையே.”
“நான் குடிக்கிறது உன்னாலதானே?”
“என்ன, என்னாலவா! அப்படி நான் என்னையா செய்தேன்?”
“பின்ன, ஊருல உள்ளவங்க எல்லாம் நான் ஒண்ணுக்கும் ஆகாதவன். ஏதோ கோமதியால வாழ்க்கை ஓடுதுங்கிறாங்க. எப்படிச் சொல்லாம இருப்பாங்க? முதல்ல அவனுங்க முதுகைப் பார்க்காம, அடுத்தவன் முதுகையே பார்க்கிறானுங்க.”
“ஏதோ பேசிட்டுப் போறானுங்கன்னு விட்டுட வேண்டியதுதானே! நீ ஏன் எல்லாத்தையும் தலையில ஏத்திக்கிற?”
“நீ சும்மா சொல்லுவ. அந்த இடத்துல இருந்தாதானே வலி தெரியும்.”
“யோவ், உனக்கு மட்டும்தான் வலின்னு நீ நினைச்சு நினைச்சுக் குடிக்கிற. அதே வலிதான் எனக்கும்.”
“எவ்வளவு பேரு என் காதுபடப் பேசியிருக்காங்க. ‘இவ வவுத்துல இதுவரை ஒரு பூச்சிப்பொட்டு தங்கல. பத்து வருஷம் ஆயிடுச்சு. இனி இதுங்களுக்கு புள்ள பாக்கியம் கிடைக்குமா என்ன?’ என்று பலர் சொல்லுறாளுக.”
“எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு நானும் தான் உயிரோட இருக்கேன். ஏன், நான் உன்னை மாதிரி தினம் குடிக்கிறேனா என்ன? அவன் இப்படி சொல்லிட்டான், இவ அப்படி சொல்லிட்டாளுன்னு சொல்லி” என்றாள் கோமதி.
“நீ இன்னைக்கி ஒண்ணும் எங்கேயும் போக வேண்டாம். வா என்னோட.”
“எங்க வரணும்?” என்றான் கோபாலு.
“நம்ம காளியம்மன் கோவிலுக்கு.”
“ஏன் அங்க?”
“இல்ல. நீ ஒரு சத்தியம் செஞ்சு கொடு. இனி குடிக்க மாட்டேன்னு.”
“வா, போகலாம்” என்று கோவிலுக்குக் கூட்டி வந்தாள் கோமதி.
அங்கு அவள் அம்மனுக்கு முன்னால் நின்று, “ஆத்தா, இந்த மனுஷனை நம்பி வந்துட்டேன். என்ன இன்னும் என் வவுத்துல ஒரு புள்ள உருவாகல. இதையே காரணம் காட்டி ஊருல உள்ளவங்க எல்லாம் ஒருவிதமா பேச, இந்தாளுக்கு குடிக்கிற பழக்கமும் வந்திருச்சு. நீயே சொல்லு, பத்து வருஷமா இந்த ஆளோட மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கேன். ஏன், எங்களுக்கும் வவுத்துல ஒண்ணு தங்குமுங்கிற நம்பிக்கையின் பேருலதான். எனக்கு இருக்கிற நம்பிக்கையில் பாதிக்கூட இந்த ஆளுக்கு இல்லையே” என்று அழுதுகிட்டு வேண்டினாள் காளியம்மனிடம்.
இதைக் கேட்ட கோபாலுவின் கண்கள் குளமாகின. அம்மனைப் பார்த்து வேண்டுவதற்குக் கூட்டி வந்தவளைப் பார்த்து, பயபக்தியுடன் கும்பிட்டான். “என்ன பெத்த ஆத்தா” என்று அவளது கால்களில் விழுந்து நமஸ்கரித்தான்.
இருவரும் கோவிலை விட்டு வெளியே வந்து வீட்டை நோக்கி நடக்க முற்பட்டனர். அப்போது கோபாலுவின் காலடியில் சாராயப் பாட்டிலின் மூடி ஒன்று தென்பட்டது. அதை அவன் தன் காலால் எட்டி உதைத்தான். அதைப் பார்த்த கோமதியின் மனசு ஆனந்தமானது.
00

பாலமுருகன்.லோ
பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம் .

