ஒலி மாசு விழிப்புணர்வு
முகாமை புறக்கணிக்கிறார்
விசைத்தறி நெசவாளி
0
குப்பைமேடான பிறகும்
பூங்காவின் பெயர்
பூங்கா
0
நடு இரவிலும்
நினைவிற்கு வரவில்லை நிலா
வீட்டிற்குள் புழுக்கம்
0
குறைகுடம்
கூத்தாடுவதில்லை
தூக்கி சுமக்கும் வரை
0
ஊர் கூடி இழுக்கிற போதுதான்
வடம் பிடிப்பேன்
அது வரை அடம் பிடிப்பேன்
0
தற்காலிக இயலாமைக்காக
முகக்கவசம் அணிந்தவர் முன்பில்
நிமிர்கிறார் மாற்றுத்திறனாளி
0
மூடிய பள்ளிக்கூட வாசலில்
அமர்ந்து புகை பிடிக்கிறார்கள்
குழந்தைத் தொழிலாளர்கள்
0
கொசுபத்திக்கு ஊதுபத்திக்கான
மரியாதையைக் கொடுக்கிறது
பிடிவாதக் குழந்தை
0
ஒரு துளி கூட
காமம் கலக்காத முத்தம்
பறக்கும் முத்தம்
0
ஒரு விலையில்லா விளக்கு
அவ்வளவுதான் சூரியன்
உழைக்கும் வர்க்கத்திற்கு
00

ஆதன் ஆரா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதும் க.ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர். ஒரு மாற்றுத்திறனாளியான இவர் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விசைத்தறி நெசவுத்தொழில் செய்து வருகிறார். இவர் தன்னுடைய மகள்களின் பெயர்களான ஆதன்யா, ஆராநிலா என்பவற்றின் தொடக்கச் சொற்களை எடுத்துதான் தன்னுடைய புனைப்பெயரை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

