அ.மான்விழி

நான் எனக்கான ஆளை தேடிக் கொண்டிருக்கிறேன். நின்று ஒரு மணி நேரம் ஆகியது. இன்னும் என் ஆளை கண்டுபிடிக்கவில்லை.. மீண்டும் சாலையை உற்று நோக்கத் தொடங்கினேன்.. இதுவா… நல்ல உயரம் தான் நடுத்தர வயது..…சிவத்த தேகம்… பணக்காரக் களை… தொப்பையும்… கொஞ்சம் சொட்டையும்… கழுத்தில் தெலுங்கு பட ஹீரோ போல  கனமான செயின் அணிந்திருக்கிறது தான்…. ம்ஹூம்… ஒத்து வராது கோடி ரூபாய் கிடைத்தாலும் இது வேண்டாம்..

     பேருந்து நிலையம் செல்லும் பாதையில் நான் நின்றிருந்தேன். நிறைய பேருக்கு இந்த வழி இருப்பதே தெரியாது. ஒரு பக்கம் அடர்ந்த முள்வேலி. மறுபக்கம் ரயில் பாதை…எப்போதாவது ஆட்டோக்கள் செல்லும்…வெகு சிலரே இந்த பாதையில் செல்லுவர் சில நாள் இப்படிதான்… நின்று கொண்டே இருக்க நேரிடும்.

     இந்த வழியில் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்காது. என் வேலைக்கு இது போன்ற இடம் தான் லாயக்கு…

     அவ்வபோது சில பேர் வண்டியில் சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவரின் முகங்களையும் பார்த்தேன்…சில முகங்கள் சிந்தனையில்.  இருந்தன…..சில தொங்கி போய்..சில இருண்டு போய்…சில கவலையில்…. அத்தி பூத்தது போல் ஏதோ ஒன்று தான் சிரித்துக் கொண்டே சென்றது …

இதில் என் டார்கெட்…குழப்பத்தில் இருப்பது தான்….

       அடுத்ததாக சற்று மெல்லிய தேகம் தான் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி.. சட்டைப் பையை என் கண்கள் ஸ்கேன் செய்தன. அதற்குள் ஜெயலலிதாவின் புகைப்படம் அப்பட்டமாக வெளியே தெரிந்தது. இன்னும் சில சீட்டுகள் இருந்தன. என் கண்கள் ட்ரவுசரை துழாவியது.. பணத்துக்காக தானே…கால்சட்டைப் பை அவ்வளவு கனம் இல்லை என்றதும் அம்மாவின் ரசிகரை என்னால் ரசிக்க முடியவில்லை.

      என் மனம் சலிப்படைந்தது. அடுத்து வந்தது நன்கு பட்டை அடித்த பழுத்தக் கிழம், ஐம்பதை முப்பதாக மாற்றி காட்ட முயற்சிக்கும் பேரிளங் கிழவி …ரெட்டை ஜடையுடன் கட்டம் போட்ட சுடிதார் அணிந்து சென்ற பள்ளிச் சிறுமி…உள்ளிட்ட மற்றும் பலர்… ஆக……இன்று எனக்கானவனை தேர்ந்தெடுப்பதில் இவ்வளவு சோதனைகளா? முருகா சுந்தரேசா… வானத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டேன்…லேசாக பசிக்க தொடங்கியது..

   இப்போது அடுத்த ஆள்… சற்று குண்டாக இருந்தது. தனக்குள்ளாகவே எதையோ பேசிக் கொண்டே சென்றது. நடந்து தான். வயது அதிகம் தான்….என்றாலும் பரவாயில்லை சரியாக சொன்னால் அதுதான் எனக்கு வசதி…குண்டு நடப்பது எனக்குள் சிரிப்பை வரவழைத்தது… மலை நடனம் ஆடுவது போல கையை வீசியும் காலை ஆட்டியும் நடந்தது அது.

மெல்ல அதனை நோக்கி அடி எடுத்து வைத்தேன்…

     தொப்பை முன்னோக்கி செல்ல அதனை தூக்கிக் கொண்டு  சுவாரசியமாக அலைபேசியில் யாருடனோ சிரித்துக் கொண்டிருந்தது குண்டு.. அதனுடைய பேன்ட் பாக்கெட் கனமாக இருந்தது…

     நான் மெல்ல பின்னால் நடந்து கொண்டு இன்னும் ஓரிரு கணங்கள் தான்…. உரசி இருப்பேன்… எனக்கு கிளிக் ஆகியிருக்கும்..

     “அண்ணா”…மனதைப் பிசைவது போல் ஒரு குரல்…குரல் குண்டுவைதான் அழைத்து இருக்கக்கூடும்..

     போன் சுவாரசியத்தில் குரல் குண்டுவின் காதில் விழவில்லை. ஆனால் நான் திரும்பினேன்.

   அழைத்தவன் ஒரு சின்னப் பையன்…மூன்றாவது  நான்காவது படிப்பான்.. அழுக்கு சட்டை. கடைசி ரெண்டு பட்டன் இல்லை ..கவலை இல்லாமல் திறந்து விட்டிருந்தான்…(டிரௌசரையும்)

  கவனிப்பாரற்றவனாய் …போவோர் வருவோரைப் பார்த்து கை நீட்டிக் கொண்டிருந்தான்….வண்டியில் ஏற விரும்பினான் போல…அவன் அழைத்தது குண்டுவை அல்ல. எங்களைக் கடந்த வண்டியில் சென்றவனை.

     அவன் மூக்கு ஒழுகிக் கொண்டிருந்தது… உச்சந்தலையில் முடிகள் நேராக குத்திட்டு நின்றன…(பாவம் பணக்காரர்கள் நிறைய செலவு செய்கின்றனர் ) விழிகள் லேசாய் சிவந்திருந்தன. இரவில் தூக்கம் கெட்டு இருக்கும் போல. முன்பற்கள் சற்று நீண்டு மஞ்சள் கரையுடன் இருந்தன. என்னைத் தவிர வேறு யாராக இருந்தாலும் இவ்வளவு நேரம் அவனை பார்க்க மாட்டார்கள்.

   இப்போது ஒரு பெண் வண்டியில் எங்களைக் கடந்து சென்றாள். ”அக்கா…அக்கா…பஸ் ஸ்டான்ட் வரேன்…செத்த கூட்டிக்கிட்டு போயன்…”ஏறத்தாழ கத்தினான்…

     அவள் திரும்பிக் கூட பார்க்கவில்லை…அவள் துப்பட்டாவை போல அவளும் பறந்து கொண்டிருந்தாள். அதுகூட பரவாயில்லை…லேசாக முகம் திருப்பி எச்சில் துப்பிச் சென்றாள். அவள் மூஞ்சியிலேயே காரி மொழிய வேண்டும் என்று இருந்தது எனக்கு.

   நான் அந்த குண்டை மறந்து சிறுவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்  அவன் என்னை கவனிக்காமல் மீண்டும் யார் வருகிறார்கள் என்பதில் கவனம் செலுத்தினான். தூரத்தில் ஒரு வண்டி வந்து கொண்டிருந்தது உடனே சிறுவன் தன்னுடைய கைகளை நீட்டி வண்டியை நிறுத்த முயற்சித்தான்.

       வந்தவன் தலையை கலரிங் செய்திருந்தான். நல்ல நாளிலேயே கலரிங் போன்ற பசங்கள் எல்லாம் நாயகம் …புடவையை கூட திரும்பி பார்க்காதவர்கள் அவர்கள்… இவனை கவனிக்குமா…. இந்த சூட்சமம் சிறுவனுக்கு புரியவில்லை.

இப்படி ஒரு ஜீவன் இருந்ததும் அழைத்ததும் கலரிங்கின் நினைவில் பட்டிருக்கவே வாய்ப்பு இல்லை… காதில் ஹெட் போனை மாட்டிக் கொண்டு ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்து. என்னை பார்த்தபடியே லேட்டஸ்ட் மாடல் வண்டியில் (ஏறத்தாழ படுத்த படி)சென்றது. கலரிங்க்கு பின்னால் யாராவது உட்கார்ந்தால் அவர்கள் முழுவதும் கட்டிப் பிடித்த படியே செல்ல வேண்டும் பின்சீட் சற்று தூக்கி இருந்த புது மாடல் வண்டி அது.. இந்த வண்டியில் சிறுவனா?? அந்த காட்சியை கற்பனித்த என் மனது இதழ்களில் புன்னகையை வரவழைத்தது   

   திடீரென்று எனக்கானவனை  தேடுவதை விட்டு இந்தப் பையனையே பார்த்துக் கொண்டிருக்கும் என்னை நினைத்து எனக்கே ஆச்சரியமாக இருந்தது .ஏன் அவன் மேல் இவ்வளவு அன்பு தெரியவில்லை ஆனால் மீண்டும் அவனையே பார்க்க என் மனம்  தூண்டியது. அடுத்த வேலை சோற்றுக்கு காசு இல்லை.

     இப்பொழுது மூக்கில் ஒழுகக் கூடிய சளியை தன்னுடைய சட்டையை தூக்கி அப்படியே துடைத்து சட்டையை கீழே விட்டு விட்டான்…

      வெயில் என்றும் பாராமல் மெல்ல கீழே அமர்ந்தான். இப்பொழுது தான் கவனித்தேன் அவனுடைய கால்கள் மிகவும் மெல்லியதாக இருந்தன ஒருவேளை காலில் ஏதேனும் ஊனமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றியது அவனை நடக்க வைத்து பார்க்கலாம் என்று நினைத்து ”தம்பி.. டேய் தம்பி “என்று அழைத்தேன்

         ஊரில் நல்லதுக்கு காலமில்லை என்பார்கள்.. அன்போடு அழைக்கிறேனே  என்கின்ற உணர்வே இல்லாமல் கீழே இருந்த கல்லையும் மண்ணையும் எடுத்து நோண்டிக்கொண்டு மண்ணை அள்ளி அள்ளி தூர எறிந்து விளையாடிக் கொண்டிருந்தான். அவ்வபோது அவனுடைய கண்கள் தூர பாதையை கவனிக்கத் தவறவில்லை.

     அவன் கால்கள் மீது என் கவனம் இருக்க அவனை விசாரிப்பதற்காக மெல்ல அவன் அருகில் சென்றேன்… போலீஸ்காரர்கள் தொல்லையால் நேற்று இரவு முழுக்க உறக்கமே இல்லை…

       அந்தப் பையன் எழுந்து மெல்ல கை நீட்டினான். அடுத்து நான்கைந்து வண்டிகள் அவனுடைய நேரமோ என்னவோ வேக வேகமாக வந்து அவனை கடந்து சென்றன. ஏமாற்றம் சிறிதும் இன்றி கடமையே தன்னுடைய காரியம் போல கை நீட்டும் வேலையை தெளிவாகச் செய்து கொண்டிருந்தான்.

      ஏறத்தாழ அவனை நான் நெருங்கி விட்டேன் “தம்பி “என்கின்ற என்னுடைய அழைப்பிற்கு இணங்காத அவனுடைய தன்மை என்னுள் லேசான கோபத்தை வரவழைத்தது. இவனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் “ஆட்டுக்கு வாலை அளந்து தான் வைத்திருக்கிறான்” என்று பலவாறாக மனம் அவனை திட்டியது

      அவன் அருகில் நின்று அவனை நான் பார்த்துக் கொண்டிருந்தேன் அந்தப் பிரஜை சிறிதும் இன்றி அவன் விளையாட்டில் கவனமாக இருந்தான். இப்பொழுது என் மனதில் அவனுடைய நோக்கம் நான் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது எனினும் மனம் கேட்காமல் “தம்பி எங்க பள்ளிக்கூடம் போறியா? டேய் “… என்று அழைத்தேன்

     அப்போதும் அவன் பதில் கொடுக்காமல் மணலை அள்ளி அள்ளி வெளியே கொட்டி விட்டு சாலையின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தான்

     மெல்ல அவன் அருகில் அமரப்போன தருணம் மெதுவாக எங்கள் அருகில் ஒரு வண்டி வந்து நின்றது. அந்த வண்டியில் நடுத்தர வயது நபர் மாநிறம் நடுத்தர உயரம் அமைதியாக அந்த பையனை பார்த்தார்.

      டேய் ….கண்ணா ….பள்ளிக்கூடம் போகணுமா நான் வேணா விடவா ஏறிக்கோ வா வா…. என்றார்

    சட்டென.அவனுடைய முகம் பூவாக மலர்ந்தது…. தலையாட்டி சிரித்துவிட்டு சந்தோஷமாக தன்னுடைய பையை எடுத்து பின்புறம் மாட்டினான். வேகமாக வண்டியில் அமர்ந்து பின்புறமாக இரண்டு கைகளையும் இறுக்கி பிடித்துக் கொண்டு “போலாம் ரைட் “…என்று கண்டக்டர் போல கத்தினான்.

    “ஏலே சத்தத்தை பாரு சரி பத்திரமா பிடிச்சுக்கோ வேணும்னா மாமாவை கூட புடிச்சுக்கோ …என்ன” என்று நான் நிற்பதையே இருவரும் கண்டு கொள்ளாமல் நகர தொடங்கினர்….

      லேசான பெருமூச்சு என்னிடமிருந்து வெளிப்பட்டது ..

பச்… அந்தப் பையனுக்காவது ஒரு வழி கிடைத்து விட்டது எனக்குத்தான் ஒரு வழியையும் காணோம். சரி பேருந்து நிலையத்திற்கு சென்றால் நம் வேலையை முடிப்பது சுலபம் என்று நினைத்துக் கொண்டு வேக வேகமாக பேருந்து நிலையம் நோக்கி நடந்தேன்.

      ஒரு பத்து நிமிட நடை பயணத்தில் பேருந்து நிலையம் வந்தது. பேருந்து நிலையத்தின் முகப்பிலேயே சிறுநீர் கழிப்பவர்களுக்கு தண்டனை என்கின்ற வாக்கியத்திற்கு கீழே சிறுநீர் கழித்த தடயங்களும் ….

   அசிங்கம் பண்றவங்களுக்கு எல்லாம் அறிவே இல்ல…. என்ற சொல்லியது ஒரு குழு … மூக்கை பிடித்துக் கொண்டு சென்றது சில குழு. காரி துப்பியது பல குழு…ஆக மொத்தம் அனைவரையும் ஈர்த்தது அது தான்.

      அவரவருக்கு அவரவர் கவலை எனக்கு இரவு சோற்று கவலை.  இவர்களில் யார் எனக்கானவர்? என் எண்ணம் மீண்டும் அதிலேயே சுழன்றது .சரி… ஒரு பேருந்தில் ஏறி விடுவோம் இன்று பேருந்தில் இருந்து நமக்கானவனை தேர்ந்தெடுப்போம் என்று நான் முடிவெடுத்து ஒரு கூட்டமான பேருந்தில் ஏறினேன்.

   மக்கள் நெருக்கி அடிக்க மனித வாடை என் முகத்தில் அறைந்தது குளிக்காதவர்கள் ….சென்ட் போட்டவர்கள்… வியர்வை வாடை….என அனைத்தும் கலந்து என் நாசியை த் தாக்க எதைப்பற்றியும் கவலைப்படாமல் என் குறிக்கோளில் நான் கவனமாக இருந்தேன்.

     மெல்ல மெல்ல அங்கிருந்தவர்களின் முகங்களை கவனிக்க ஆரம்பித்தேன். வழக்கம்போல் சொட்டை ஒன்று சிக்கியது… சொட்டை மட்டுமல்ல பல் சொத்தையும் கூட என்று அதனுடைய வாயை பார்த்து விட்டு என் மனதில் சொல்லிக்கொண்டு மெல்ல அடுத்தவரை நோக்கி நகர்ந்தேன். எவரும் என்னைக் கேள்வி கேட்கக் கூடாது என்பதனால் “ஏன் இப்படி புடிச்சு தள்ளிக்கிட்டே வரீங்க ?”என்று பின்னால் இருப்பவர்களை கேட்டு முகம் சுளித்து கொண்டேன்.

     ஆமா உன்னை இடிக்கணும்னு ஒரே ஆசை பாரு கூட்டத்துல அங்குட்டும் இங்கிட்டும் தள்ற தள்ளுல தானா வந்து விழுவுறோம்? இதுல கேள்வி வேற என்றது ஒரு மப்பும் மந்தாரமுமாய் இருந்த ஒன்று… என் உதடுகளில் மந்தகாச புன்னகை..

      மெல்ல இன்னும் சற்று முன்னால் நகர்ந்தேன்.

     அங்கிருந்த சந்தன நிற சட்டை ஒன்று  சிக்கியது. இது எனக்கானது என்ற எண்ணம் தோன்றியுடன் அதை நோக்கி மெல்ல முன்னேறினேன். சந்தன சட்டை இந்த உலகத்தையே மறந்து வேறு உலகத்தில் இருந்தபடி கண்ணை மூடிக்கொண்டு கைகளை பேருந்தின் மேல் கம்பியில் பிடித்துக் கொண்டு இருந்தது.

    ஆ ஹா ஆஹா நமக்கானஆள் சிக்கி விட்டார் என்று நினைத்து மெல்ல அவர் அருகில் சென்றேன். என்னுடைய கைகள் அவருடைய பேண்ட் பாக்கெட்டின் பின்பகுதியில் மெதுவாக ஊர்ந்தன.. எதிர்பார்த்தது போல கெட்டியான மணி பர்சை என் கைகள் ஸ்பரிசித்தன..

    மெல்ல மணி பர்ஸ் க்குள் கையை விட்டு உள்ளிருந்த தொகையை கை வைத்து எடுத்தேன் லம்சமான தொகை தான்.. சந்தன சட்டை நான் எடுத்ததை  கண்டுபிடிக்கவே முடியாது. மெதுவாக அந்த பணத்தை என் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன் .அப்படியே பின்னால் நகர ஆரம்பித்தேன் . சந்தன சட்டை கண்டக்டர் வரவும் திரும்பி என்னை பார்த்து “கொஞ்சம் தள்ளி நிக்கிறீங்களா சார்”என்று கேட்டது. சந்தன சட்டையின் முகத்தைப் பார்த்தவுடன் ஸ் த ம் பி த் து நின்றேன். என் கைகள் எடுத்த பணத்தை மெதுவாக அவருடைய பாக்கெட் பர்சுக்கு வெளியே செருகியது. மெல்ல என் கால்கள்பின்னால் நகர்ந்தன. இன்று சோறே இல்லையென்றாலும் பரவாயில்லை .மனதில் ஒரு தெளிவான முடிவு….

    சந்தன சட்டை வேறு யாரும் அல்ல அந்த சிறுவனை ஏற்றிச் சென்ற மாமா.

00

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *