–ஆர்கி

1 — மறுபுறம் ஒலி எழவில்லை

விடியலுக்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன.

போர் இன்னும் துவங்கவில்லை என்றாலும், அதன் இருப்பு அந்த நிலத்தை முன்னரே சூழ்ந்திருந்தது.

அமைதிக்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து, இனி போர் மட்டுமே ஒரே தீர்வு என்ற முடிவுக்கு இரு தரப்பினரும் வந்துவிட்டதால், வேறு வழியின்றி நாடு இரண்டாகப் பிளந்து கிடந்தது. இந்த அணியில் இல்லையென்றால், எதிரணியில். அன்றைய நிலையில், ஒவ்வொருவருக்கும் இருந்த ஒரே தேர்வு இதுதான்.

போர்க்களம் பல்வேறு நிலப்பரப்புகளைக் கடந்து, தொலைதூரப் பகுதிகளிலும் விரிந்திருந்தது. சில இடங்களில் மலைத்தொடர்கள் குறுக்கிட்டன; சில இடங்களில் அடர்ந்த காடுகள் இருந்தன. இன்னும் சில பகுதிகளில் ஆறுகள் படைகளுக்கு இடையே இயற்கையான தடைகளாக ஓடிக்கொண்டிருந்தன.

ஒவ்வொரு பகுதியும் தனித்தனி அரசர்கள், இளவரசர்கள், படைத்தலைவர்கள் மற்றும் அவர்களுக்குக் கீழிருந்த ஆயிரக்கணக்கான வீரர்களால் நிர்வகிக்கப்பட்டிருந்தது.

யானைப்படைகள், குதிரைப்படைகள், தேர்ப்படைகள், வில்லாளர்கள், காலாட்படைகள் என ஒவ்வொரு பிரிவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பகுதியில் தயாராக நின்றன.

ஒரு முனையில் நடப்பது இன்னொரு முனையில் இருப்பவர்களுக்கு உடனடியாகத் தெரியாது. ஒரு கட்டளை முழுப் படையையும் சென்றடைய வேண்டுமென்றால், அது வீரர்களின் குரலால் மட்டும் சாத்தியமில்லை.

அதற்காகவே சங்கொலிகளும், முரசுகளும், கொடிகள் போன்ற சைகைகளும் பயன்படுத்தப்பட்டன. தொலைதூரப் பகுதிகளுக்குச் செய்திகளை எடுத்துச் செல்ல தூதர்களும், பறவைகளும் பயன்படுத்தப்பட்டன.

அந்தப் படைகளுக்கு நடுவே, ஒரு சிறிய குருவி யானையின் உயரத்திற்கும் கீழாகத் தாழ்வாகப் பறந்துகொண்டிருந்தது.

சில நிமிடங்கள் அது ஒரு கொடியின் கம்பத்தில் அமர்ந்திருந்தது. பின்னர் தரையில் குதித்து, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குத் தாவியது. வீரர்களின் கால்களுக்கிடையே கூட அது பயமின்றி சென்றது.

இந்தப் போரில் சார்பற்ற சிலரில் அந்தக் குருவியும் ஒன்று.

அது வரவிருக்கும் போரின் எழுதப்படாத பக்கங்களுக்குச் சாட்சியாக, அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது.

யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எந்தப் போரிலும் ஆராய்ந்தாலும், அதற்கான விடை எப்போதும் வியப்பாகவே இருக்கும்.

ஒரு போரின் காரணத்தை மேலோட்டமாகப் பார்க்கும்போது, ஒரு தரப்பு நியாயத்திற்காகப் போராடுகிறது என்றும், மற்றொரு தரப்பு அநியாயத்திற்காகப் போராடுகிறது என்றும் தோன்றலாம். தர்மம் ஒரு பக்கத்திலும், அதர்மம் மறுபக்கத்திலும் இருப்பதாகவும் தோன்றலாம்.

ஆனால் எந்தப் போரும், மனிதர்களுக்குள் ஒளிந்துகிடக்கும் இருளை வெளியில் கொண்டு வந்து, அதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான ஒரு கருவிதான்.

இது உலகம் சந்திக்கும் முதல் போர் அல்ல; இதுவே கடைசிப் போரும் அல்ல.

சகோதரர்களுக்கும், குடும்பங்களுக்கும் இடையே நடக்கவிருக்கும் இந்த மாபெரும் போரில், அவர்களின் வாழ்வோடு தொடர்புடைய அனைவருமே ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படப் போகிறார்கள்.

இந்தப் போரின் முடிவில், இவர்களின் குலமே அழிந்துபோகும் வாய்ப்பும் இருந்தது.

இந்த நிலையில், போரின் முதல் நாள் ஒவ்வொருவருக்கும் முன்னமே ஒரு பங்கைக் கொடுத்திருந்தது. ஒரு புறம் தருமன் துரோணரையும், அர்ஜுனன் பீஷ்மரையும், பீமன் துரியோதனனையும் எதிர்கொள்ளும் வகையில் களம் அமைந்திருந்தது. மறுபுறம், நகுலனும் சகாதேவனும், துச்சாதனன் மற்றும் பிற கௌரவர்களை எதிர்கொள்ளத் தயாராக இருந்தனர்.

சூரியனும் உதித்தான்.

போர் துவங்குவதற்கான வழக்கப்படி, கௌரவர் தரப்பின் மூத்தவரான பீஷ்மர் சங்கை முழங்கினார்.

எதிர்முனையில், பாண்டவர் தரப்பில் கிருஷ்ணர் தனது சங்கை முழங்க வேண்டும். பின்னர், கடல் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கரையைத் தொடுவது போல, தொலைதூரப் பகுதிகளில் இருந்த படைப்பிரிவுகளிலும் சங்குகள் ஒன்றன்பின் ஒன்றாக முழங்கி, அந்த முழக்கம் போர்க்களம் முழுவதும் பரவி, போர் துவங்கவேண்டும்.

ஆனால் மறுபுறம், சங்கின் ஒலி எழவில்லை.

2 — போர் புரிய மாட்டேன்

சற்று முன்.

சூரியன் இன்னும் உதிக்கவில்லை.

போர்க்களத்தின் ஒரு பகுதியில், அர்ஜுனனின் தேர் அமைதியாக நின்றுகொண்டிருந்தது.

கிருஷ்ணர் தேரின் முன்புறத்தில் தேரோட்டியாக அமர்ந்திருந்தார். அர்ஜுனன் வெகு தொலைவில் விரிந்திருந்த படையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுக்கு முன்னால் இருந்தது வெறும் எதிரிப் படை அல்ல.

அவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களும், அவனைத் தூக்கி வளர்த்த உறவுகளும், அவனுக்கு வில்வித்தையைக் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களும் இருந்தனர்.

அவர்கள் அவனால் வீழ்த்த முடியாதவர்கள் அல்ல.

வீழ்த்தப்படக்கூடாதவர்கள்.

போரில் வெற்றி முக்கியம்தான். ஆனால் அந்த வெற்றிக்கு அவன் கொடுக்க வேண்டிய விலை என்ன?

அந்தக் கேள்விதான் அவனது மனதில் தொடர்ந்து எழுந்துகொண்டிருந்தது.

அப்போது தொலைவில் இருந்து ஒரு சங்கின் முழக்கம் கேட்டது.

பீஷ்மர் சங்கை முழங்கியிருந்தார்.

அந்த ஒலி அர்ஜுனனின் காதுகளை அடைந்ததும், அவனது இதயம் சற்றே வேகமாகத் துடித்தது.

அவனது முகத்தைப் பதற்றம் சூழ்ந்தது.

—

ஹஸ்தினாபுரம்:

திருதராஷ்டிரரின் அரண்மனையில், அவருக்கு அருகில் சஞ்சயன் நின்றுகொண்டிருந்தான்.

திருதராஷ்டிரர், கவலையுடன் சஞ்சயனிடம் கேட்டார்:

“சஞ்சயா, போர் ஆரம்பமாகிவிட்டதா?”

சஞ்சயன் மிகவும் அமைதியான குரலில் கூறினான்:

“அரசே, பீஷ்மரின் சங்கொலி கேட்டுக்கொண்டிருக்கிறது.”

திருதராஷ்டிரரின் கவலை மேலும் அதிகரித்தது.

“மேலும் சொல், சஞ்சயா.”

சஞ்சயன் பதிலளித்தான்:

“எதிர்ப்புறம் வெறும் அமைதிதான் நிலவுகிறது, மன்னா. இன்னும் மறுபுறம் சங்கொலி எழவில்லை.”

திருதராஷ்டிரர் கேட்டார்:

“கிருஷ்ணன் இந்த நேரத்தில் சங்கொலி எழுப்பியிருக்க வேண்டுமே? சற்று கவனமாகப் பார்த்துச் சொல், சஞ்சயா. முழுமையாகச் சொல்… என்ன நடக்கிறது?”

சஞ்சயன் பதிலளித்தான்:

“மன்னா, அர்ஜுனன் காண்டீபத்தைத் தரையில் போட்டுவிட்டு, கிருஷ்ணரிடம் சங்கினை முழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.”

—

அர்ஜுனனின் தேருக்குத் திரும்புவோம்.

பீஷ்மரின் சங்கொலி கேட்ட பிறகும், அர்ஜுனன் எதிரே விரிந்திருந்த படையைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

அவனது பார்வை படையின் மீது இருந்தாலும், அவனது மனம் வேறெங்கோ சென்றுகொண்டிருந்தது.

கிருஷ்ணர் அவனின் சைகைக்காக அமைதியாகக் காத்திருந்தார்.

சில நொடிகள் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அர்ஜுனன், இறுதியாக கிருஷ்ணரை நோக்கித் திரும்பினான்.

“கிருஷ்ணா, நன்றாக யோசித்துவிட்டேன். இந்தப் போரில் நான் பங்கேற்கப் போவதில்லை.

நான் வெல்ல விரும்பும் போர் இது அல்ல.

இது என்ன முட்டாள்தனம்? நான் எப்படி இந்தப் போருக்கு உடன்பட்டேன்?

என் பெரியப்பாவை வீழ்த்தி, என் குரு துரோணரை கொன்று, என் சொந்தங்களின் உயிரைப் பறித்து கிடைக்கும் வெற்றியை நான் எப்படி ஏற்றுக்கொள்வேன்?

அத்தகைய வெற்றியைவிட, என்னை ஒரு கோழை என்று அழைப்பதே எனக்கு ஏற்றது.

என் கைகளாலேயே என் குடும்பத்தின் முடிவுக்குக் காரணமாக இருப்பதைவிட, கோழை என்ற பெயருடன் வாழ்வதே மேல்.

நான் இந்தப் போரில் பங்கேற்கப் போவதில்லை.”

என்று கூறியபடி, அர்ஜுனன் காண்டீபத்தைத் தரையில் வைத்தான்.

“நான் இங்கிருந்து செல்கிறேன்.”

அர்ஜுனன் அருகிலிருந்த காட்டை நோக்கிப் புறப்பட்டான்.

கிருஷ்ணர் “நில்…” என்று கூறுவதற்குள், அவன் தேரை விட்டு விரைந்து விலகிச் சென்றான்.

3 — குழப்பம், கலக்கம், ஆரவாரம்

கிருஷ்ணர் தேரின் கடிவாளத்தைப் பிடித்து, கலங்கியிருந்த குதிரைகளை அமைதிப்படுத்தினார்.

அர்ஜுனன் சென்ற திசையை ஒரு கணம் பார்த்தார்.

பின்னர் அருகிலிருந்த படைத்தலைவர்களை அழைத்தார்.

“காண்டீபத்தைப் பாதுகாக்க சில வீரர்களை இங்கேயே நிறுத்துங்கள். யாரும் அதைத் தொடக்கூடாது. நான் திரும்பி வரும் வரை அது பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார்.

கட்டளையைப் பெற்ற வீரர்கள் உடனடியாக காண்டீபத்தைச் சுற்றி பாதுகாப்பை அமைத்தனர்.

பின்னர் கிருஷ்ணர் இரண்டு தூதர்களை அழைத்தார்.

ஒருவனை தருமனிடம் அனுப்பி,

“சங்கொலி முழங்குவதில் சற்று தாமதம் ஏற்படும். அடுத்த தகவல் வரும் வரை காத்திருக்கச் சொல்லுங்கள்” என்றார்.

மற்றொரு தூதனை பீஷ்மரிடம் அனுப்பினார்.

“போர் துவங்குதல் சற்று தாமதம் ஏற்படும் என்பதைத் தெரிவியுங்கள்.”

அதற்கு மேல் எந்த விளக்கமும் அளிக்க வேண்டாம் என்று இருவரிடமும் கூறினார்.

அர்ஜுனனின் தலைமையில் இருந்த அணிக்குள் ஒரு சலசலப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணர் அதைப் பொருட்படுத்தாமல், தளபதியின் காதில் ஏதோ சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

பின்னர் கிருஷ்ணர் அர்ஜுனன் சென்ற காட்டை நோக்கிப் புறப்பட்டார்.

நேரம் செல்லச் செல்ல, பாண்டவர் அணிக்குள் குழப்பமும் சோர்வும் தென்பட்டது. அதே வேளையில், கௌரவர் படை போர் துவங்கும் தருணத்தை எதிர்பார்த்து ஆரவாரத்துடன் காணப்பட்டது.

போர் ஏன் இன்னும் துவங்கவில்லை, என்ன நடக்கிறது என்பதும் பலருக்கும் தெரியவில்லை.

அந்த நேரத்தில், கிருஷ்ணர் அனுப்பிய தூதன் தருமனை வந்தடைந்தான். அதேபோல், மற்றொரு தூதன் பீஷ்மரிடமும் சென்று சேர்ந்தான்.

தருமர் பாண்டவர்களில் மிகவும் தெளிவாகவும், அவசரப்படாமலும் சிந்திப்பவர். எதிர்காலத்தில் நடக்கக்கூடிய ஆயிரம் நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே சிந்தித்திருந்தாலும், இது அவர் எதிர்பார்த்திருக்காத ஒன்று.

கிருஷ்ணரிடமிருந்து வந்த செய்திக்குப் பிறகு, அடுத்து என்ன நடக்கிறது என்பது தெரியும்வரை காத்திருப்பதே சரி என்று தருமர் முடிவு செய்தார்.

நிலைமை விரைவில் சீராகவில்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார்.

பீஷ்மரிடம் தூதன் வந்து செய்தியைத் தெரிவித்ததும், அவர் அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டார். தன் கடமையையும், தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளையும் மனதில் கொண்டு, உடனடியாக துரியோதனனுக்கும் மற்ற முக்கியத் தலைவர்களுக்கும் தகவல் அனுப்பினார்.

“போர் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாண்டவர் தரப்பிலிருந்து அடுத்த தகவல் வரும் வரை காத்திருக்க வேண்டும்.”

—

ஹஸ்தினாபுரம்:

அதே நேரத்தில், அந்தக் குருவி ஹஸ்தினாபுரத்தின் மீது பறந்துகொண்டிருந்தது.

அரண்மனையின் அருகே பறந்துகொண்டிருந்தபோது, திருதராஷ்டிரரின் குரல் அதன் காதுகளில் விழுந்தது.

“சஞ்சயா, சூரியன் உதித்து வெகுநேரமாகிவிட்டதே. போர் துவங்கிவிட்டதா? என்ன நடக்கிறது? என் மகன்கள் எப்படி இருக்கிறார்கள்?”

சஞ்சயன் அமைதியாகப் பதிலளித்தான்:

“மன்னா, போர் இன்னும் துவங்கவில்லை. அர்ஜுனனும் கிருஷ்ணரும் இப்போது போர்க்களத்திலேயே இல்லை.”

திருதராஷ்டிரர் கைகளைப் பிசைந்தபடி, செய்வதறியாமல் அமர்ந்திருந்தார்.

பின்னர் திருதராஷ்டிரர் சஞ்சயனிடம் கேட்டார்:

“இப்போது கிருஷ்ணன் எங்கே? அர்ஜுனன் எங்கே? அவர்கள் ஏன் போர்க்களத்தில் இல்லை?”

சஞ்சயன் பதிலளித்தான்:

“மன்னா, அர்ஜுனன் முன்னே செல்ல, கிருஷ்ணர் அவரைப் பின்தொடர்ந்து அருகிலுள்ள காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கிறார்.”

“வேறு என்ன நடக்கிறது, சஞ்சயா?”

“மன்னா, பாண்டவர் தரப்பில் குழப்பம் நிலவுகிறது. ஆனால் கௌரவர் தரப்பு ஆரவாரத்துடன் காணப்படுகிறது.”

இதைக் கேட்ட திருதராஷ்டிரரின் மனம் சற்று தணிந்தது. குருவியும் அங்கிருந்து பறந்து சென்றது.

4 — இனியும் காத்திருக்க முடியாது

அர்ஜுனன் காட்டுக்குள் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில், கிருஷ்ணரும் அவனை அடைந்தார்.

கிருஷ்ணர் சற்று உரக்கக் கூறினார்:

“அர்ஜுனா, நில்!”

குருவியும் அவர்கள் புறப்பட்டதிலிருந்தே அவர்களைப் பின்தொடர்ந்து வந்தது.

பின்னர் கிருஷ்ணர் பேசத் தொடங்கினார்.

அந்த உரையாடல், இந்தப் போரின் போக்கையே மாற்றப்போகும் ஒரு நீண்ட உரையாடலாக மாறியது.

இவை அனைத்தும் நடந்துகொண்டிருக்கையில், பீஷ்மர் சங்கை முழங்கியதிலிருந்து ஒரு மணி நேரம் கடந்திருந்தது.

அதே நேரத்தில், பீமனின் மனதில் சிறிது பதற்றம் கலந்த குழப்பம் எழுந்திருந்தது. அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாத நிலையில், எவ்வளவு சிறந்தவர்களாக இருந்தாலும், எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் போகும்போது மனதில் கலக்கம் ஏற்படுவது இயல்புதானே.

அதிலும், தனது சபதத்தை முதல் நாளிலேயே முடிக்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்கும் அவனுக்கு, ஏன் இந்தத் தாமதம்? என்ன ஆயிற்று? நாம் சென்று பார்த்துவிடலாமா? என்று பல கேள்விகள் எழத் தொடங்கின.

அதே வேளையில், ஆரவாரத்துடன் இருந்த கௌரவர் படையினரின் குரல்கள் மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டிருந்தன. போர் துவங்குவதற்குமுன்பே வெற்றியைப் பெற்றுவிட்டதைப் போல, அவர்களின் ஆரவாரத்திற்கு நடுவே முரசுகளும் முழங்கத் தொடங்கின.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும், கிருஷ்ணரிடமிருந்தோ தருமரிடமிருந்தோ எந்தத் தகவலும் வராததால், பீமன் இறுதியாக தனது தம்பிகளான நகுலனுக்கும் சகாதேவனுக்கும் அழைப்பு விடுத்தான்.

சிறிது நேரத்தில், நகுலனும் சகாதேவனும் பீமனை வந்தடைந்தனர்.

“இவ்வளவு நேரம் கடந்தும் போர் துவங்கவில்லை. ஏதோ சரியாக இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. எதிரிகள் ஏதேனும் மறைமுகத் தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்களோ என்னவோ. அப்படி ஏதாவது நடந்தால், நம் அண்ணனையும், அர்ஜுனனையும் பாதுகாக்க வேண்டும்,” என பீமன் கூறினான்.

அதற்கு, சகாதேவன் பீமனை அமைதிப்படுத்தும் விதமாகக் கூறினான்:

“அண்ணா, அர்ஜுனனுக்கு நம்முடைய பாதுகாப்பு தேவையா? கிருஷ்ணர் அருகில் இருக்கும்போது, அர்ஜுனனுக்கு எதுவும் நடக்க அவர் அனுமதிப்பாரா? அல்லது அண்ணன் தருமனைத்தான் யாரால் நெருங்க முடியும்? இந்தத் தாமதத்திற்குக் கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும். சற்று பொறுமையாக இருங்கள். கூடிய விரைவில் போர் துவங்கும்.”

சகாதேவனின் வார்த்தைகளில் இருந்த நியாயத்தை பீமனும் ஏற்றுக்கொண்டான். இருந்தாலும், அவனது மனதில் இருந்த சந்தேகம் முழுமையாக விலகவில்லை.

“நீ சொல்வது சரிதான். இருந்தாலும், நான் சொன்னதைச் செய்யுங்கள். ஒருவர் அண்ணன் தருமனுடன் இருங்கள். மற்றொருவர் கிருஷ்ணரையும் அர்ஜுனனையும் சந்தித்து, என்ன நடக்கிறது என்று அறிந்துகொண்டு வாருங்கள்.”

நகுலனும் சகாதேவனும் பீமனின் கட்டளையை ஏற்று, சகாதேவன் அர்ஜுனனை நோக்கியும், நகுலன் தருமனை நோக்கியும் புறப்பட்டனர்.

காலம் செல்லச் செல்ல, குழப்பமும் கலக்கமும் அதிகரித்துக்கொண்டே இருந்தன. அந்தச் சூழ்நிலை அவர்களின் செயல்களைத் தீர்மானிக்கிறதா, அல்லது அவர்களின் செயல்களே அந்தச் சூழ்நிலையைத் தீர்மானிக்கின்றனவா என்று தெரியாத ஒரு நிலை உருவானது.

இவை அனைத்தையும் குருவியும் பார்த்துக்கொண்டிருந்தது.

5 — எதற்கும் ஆராய்ந்து பார்ப்போம்

ஆரவாரங்களுக்கும், கூச்சலுக்கும் நடுவே, குருவி துரியோதனனின் தேரின் மீது வந்து அமர்ந்தது.

துரியோதனன் கலக்கமின்றியும், மிகவும் மகிழ்ச்சியாகவும், தயார்நிலையிலும் இருந்தான். பீஷ்மர் அனுப்பிய செய்தி அவனுக்கு விந்தையாக இருந்தது. அதே நேரம், வெற்றி தன்னை நெருங்கிவிட்டது போன்ற உணர்வும் அவனுக்குள் ஏற்பட்டது.

உரக்கச் சிரித்துக்கொண்டு, “வெற்றி, மருமகனே! வெற்றி!” என்று சகுனி தேரை மெல்ல அருகில் கொண்டுவந்தார்.

சகுனி வந்து சேரும் நேரத்தில், துச்சாதனனும் இடியைப் போன்ற சிரிப்புடன் அவர்களை நோக்கி வந்தான்.

சற்று அளவளாவிய பிறகு, சகுனி சற்றே இறுக்கமான முகத்துடன்,

“மருமகனே, இது கவனமாக இருக்க வேண்டிய நேரம்,” என்றார்.

துரியோதனன் வானத்தில் இருந்த தனது மனதை பூமிக்குக் கொண்டு வந்தது போலவும், நல்ல கனவிலிருந்து யாரோ எழுப்பியது போலவும் உணர்ந்து, பொறுமையாகக் கேட்டான்:

“ஏன், மாமா?”

சகுனி சற்று அமைதியாக இருந்து, பின்னர் கூறினார்:

“எதிர்முனையில் இன்னும் ஏன் சங்கொலி எழவில்லை என்பது நமக்குத் தெரியவில்லை. நமக்குக் கிடைத்திருக்கும் தகவலும் நேரடியாக வந்ததல்ல; இரண்டாம் நிலைத் தகவல்தான். ஆகையால்…”

துச்சாதனன் குறுக்கிட்டு,

“ஏதோ சதி நடக்கிறது என்கிறீர்களா?”

அப்போது, குருவி சகுனியின் தேருக்குத் தாவியது.

சகுனி துச்சாதனனைப் பார்த்து, ஒரு கள்ளச் சிரிப்புடன்,

“இல்லை, மருமகனே. நான் அப்படிச் சொல்லவில்லை…” என்றார்.

துரியோதனன் சற்றுக் கோபத்துடன்,

“பின்னே என்ன சொல்ல வருகிறீர்கள், மாமா?” என்று கேட்டான்.

சகுனி துரியோதனனை அமைதிப்படுத்தும் விதமாக,

“மருமகனே, கோபப்படாதே. நான் சொல்வதைச் சற்று காது கொடுத்துக் கேள். நீ அதற்கு உடன்பட்டால், உனக்கும் அதில் ஏதேனும் வாய்ப்பு இருப்பதாக நீ எண்ணினால், நாம் மேலும் ஆராய்வோம். இல்லையென்றால், இந்த வயதான காலத்தில் நான் ஏதோ பிதற்றுகிறேன் என்று எண்ணி, நீ உன் வேலையைப் பார்த்துக்கொள். எப்படியிருந்தாலும், வெற்றி நமக்குத்தான்.”

சகுனி சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, துரியோதனனை நோக்கி,

“மருமகனே, இன்னொரு கோணத்தையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இவை அனைத்தும் கிருஷ்ணனின் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தால்?”

துரியோதனன் சகுனியை உற்றுப் பார்த்தான்.

“பீஷ்மருக்கு இதில் ஏதேனும் பங்கு இருக்கிறது என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால், அவருக்கு பாண்டவர்களின் மீது, குறிப்பாக அர்ஜுனன் மீது, இன்னும் ஒரு மென்மையான இடம் இருக்கிறது. அதனால், அவர் அறியாமலேயே இந்தச் சூழ்ச்சியில் ஒரு பங்காக மாறியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.”

துரியோதனன் சிரித்தபடி சகுனியைப் பார்த்தான்.

“என்ன மாமா? மரணத்தின் வாயிலில் நிற்கும் அர்ஜுனன் எங்கும் ஓடி ஒளிய முடியாது. நாம் முன்னெச்சரிக்கையாக, அந்த மாயக் கண்ணனை ஒரு தேரோட்டியாகச் சுருக்கிவிட்ட பிறகு, பாண்டவர்களின் முடிவு அன்றே உறுதியானது.”

தேர் குலுங்கும்படி துரியோதனன் மறுபடியும் சிரித்தான்.

சகுனி அவனைப் பார்த்தபடி, மெதுவாகச் சிரித்தார்.

“நீ சொல்வதும் உண்மைதான். ஒரு ஆயுதமற்ற தேரோட்டியால் என்ன செய்துவிட முடியும்? அடைப்பட்ட பாம்பிற்கு நஞ்சு இல்லை என்கிறாய், நான்தான் குழம்பிப்போய், உன்னையும் குழப்பப் பார்த்தேன். இப்போதுதான் எனக்கு மன ஆறுதல் வந்தது. என்னை மன்னித்துவிடு.”

“அவர்களால் என்ன செய்துவிட முடியும்? அவர்கள் முதல் முறையே அனைத்தையும் இழந்துவிட்டார்கள். இனி அவர்களிடம் விடுபட்டிருப்பது உயிர் ஒன்றுதான்.”

அதைக் கேட்டதும், துரியோதனன் திடுக்கிட்டான். அவனது நினைவு குருகுல காலத்திற்குப் பின்னோக்கிச் சென்றது.

குறிப்பாக, குருகுலக் காலத்தில் துரோணர் கூறிய ஒரு வாக்கியம் அவன் நினைவில் மீண்டும் ஒலித்தது:

“என் நண்பன் என்னை இழிவுபடுத்தியதைவிட, என்னை உயிருடன் விட்டதுதான் அவன் செய்த மிகப்பெரிய பிழை.”

துரியோதனன் சகுனியை நோக்கி, சற்றே தலைகுனிந்தபடி கூறினான்:

“மாமா, தவறு செய்துவிட்டேன். மன்னியுங்கள். உங்கள் ஆழ்ந்த அனுபவத்தை நான் சந்தேகித்திருக்கக் கூடாது.”

துச்சாதனன் இதைக் கேட்டதும் உற்சாகமடைந்தான். அவனது முகத்தில் மீண்டும் பெருமிதமும் வெற்றியின் நம்பிக்கையும் மலர்ந்தது.

துரியோதனன் அவனை நோக்கி,

“துச்சாதனா, உன்னிடம் இருக்கும் சிறந்த ஒற்றனை உடனே அனுப்பு. ஏன் இன்னும் சங்கொலி எழவில்லை என்பதையும், அர்ஜுனனும் கிருஷ்ணனும் என்ன சதி செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் விசாரித்து, விரைவாகத் திரும்பி வந்து தகவல் சொல்லச் சொல். இந்தக் காரியத்தில் விரைவும் மதிநுட்பமும் இரண்டும் முக்கியம். கவனமாக இரு.” என்றான்.

சகுனி துரியோதனனை நோக்கி,

“மருமகனே, கவனமாக இருப்பதில் குறை ஒன்றுமில்லை. அந்தப் பாண்டவர்கள் அழியும் வரை நாம் உறக்கம் கொள்ள இயலாது. நீ என்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நான் எவ்வாறு கைமாறு செய்வேன்? என் உயிர் உனது, மருமகனே. உனது.” என்றார்.

துச்சாதனன் இருவரிடமும் விடைபெற்று, அங்கிருந்து புறப்பட்டான்.

6 — எதையோ நோக்கி

மூன்று மணி நேரம் கடந்தது. சகாதேவன் அர்ஜுனனின் தேரை வந்தடைந்தான்.

அங்கு இருந்த தளபதி நடந்தவற்றை விளக்க, சகாதேவன் நிலைமையைப் புரிந்துகொண்டான்.

அர்ஜுனன் இல்லாமல் தனியாகக் கிடந்த காண்டீபத்தையும் அவன் கண்டான். அதை எடுத்துத் தனக்கு அருகில் வைத்துக்கொண்டான்.

உடனே இரண்டு தூதுவர்களை அழைத்து, ஒருவரைத் தருமனிடமும், மற்றொருவரை பீமனிடமும் செல்லப் பணித்தான். கிருஷ்ணரைப் போல அல்லாமல், அவர்களிடம் நடந்த அனைத்தையும் முழுமையாகத் தெரிவிக்குமாறு கூறினான்.

கடைசியாக, ஒரு சிறு படையைத் திரட்டி, காண்டீபத்தையும் எடுத்துக்கொண்டு காட்டை நோக்கிப் புறப்பட்டான்.

குருவியும் நடப்பதைக் கவனித்துக்கொண்டே, தேரில் இருந்த கிருஷ்ணரின் சங்கின் மீது பறந்து சென்று அமர்ந்தது.

பிறகு, வெயிலின் தாக்கம் அதிகரிக்க, குருவி காட்டிற்குள் இருக்கும் சுனையை நோக்கிப் பறந்தது.

சிறிது நேரத்தில், சில வீரர்கள் காட்டிற்குள் தண்ணீர் அருந்தவும், இயற்கையின் தேவையை நிறைவேற்றவும் வந்தனர்.

அவர்களில் ஒருவன் சத்தமாகக் கூறினான்:

“அர்ஜுனனும் கிருஷ்ணரும் என்னதான் காட்டுக்குள் பேசிக்கொண்டிருக்கிறார்களோ? அது இவ்வளவு நேரம் எடுக்கும் அளவுக்கு என்ன முக்கியமானதோ? மூன்று மணி நேரம் ஆகியும் போர் ஆரம்பிக்கவில்லை. நாம் என்னதான் செய்வது? இப்படித்தான் திருட்டுத்தனமாக வர வேண்டியிருக்கிறது. இப்போது அர்ஜுனனின் தம்பியும் காட்டுக்குள் போயிருக்கிறான். அங்கே அப்படி என்னதான் நடக்கின்றதோ?”

அருகில் இருந்தவர்கள் மெல்லப் பேசச் சொல்லியும், கேட்காமல், அவன் தொடர்ந்து உரக்கப் பேசிக்கொண்டிருந்தான்.

இவை அனைத்தையும் அருகிலேயே மறைந்திருந்த துச்சாதனனின் ஒற்றன் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான்.

அதே வேளையில், தருமன் நகுலனின் எதிர்பாராத வருகையால் சற்றே குழப்பமடைந்திருந்தார்.

“நகுலா, உனக்குக் கொடுக்கப்பட்ட வேலை துச்சாதனனின் படையை எதிர்கொள்வது. அதை விட்டுவிட்டு, பீமன் சொன்னான் என்பதற்காக இங்கு வந்திருக்கிறாய்.”

சற்று அமைதியாகிய பிறகு, தருமன் தொடர்ந்தார்:

“அர்ஜுனனும் கிருஷ்ணரும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. இப்போது நீயும் உன் இடத்தைவிட்டு இங்கு வந்திருக்கிறாய். அதோடு, சகாதேவனும் தனது இடத்தில் இல்லை என்கிறாய்.”

அவர் சற்று யோசித்துவிட்டு,

“எனக்கு இவை அனைத்தும் எதையோ நோக்கி நகர்வது போலத் தோன்றுகிறது. ஆனால், யாருடைய திட்டத்தில் இது நடக்கிறது என்றுதான் தெரியவில்லை. இருப்பினும், உன் இடத்தைவிட்டு நீ வந்திருக்கக் கூடாது.”

நகுலன் அமைதியாகத் தருமனை நோக்கினான்.

“அண்ணா, இந்தப் போரில் வெல்வது எவ்வளவு முக்கியமோ, அதனினும் முக்கியம் உங்களைப் பாதுகாப்பது. அதுதான் உங்கள் சகோதரர்களான எங்கள் அனைவரின் முதல் பொறுப்பு.”

சற்று இடைவெளிக்குப் பிறகு அவன் தொடர்ந்தான்:

“அண்ணன் பீமனின் சந்தேகத்தில் தவறில்லை. கிருஷ்ணரும் அர்ஜுனனும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியவில்லை. அப்படியிருக்கும்போது, என்னை உங்களிடம் அனுப்பியது அண்ணன் பீமன் செய்த சரியான செயல்தான்.”

“அண்ணா, என்னை மன்னியுங்கள். ஆனால், போர் துவங்குவதற்கு முன்பே நாம் இந்தப் போரில் தோற்றுவிடக் கூடாது. சிறிதளவேனும் சூழ்ச்சி நடந்திருக்க வாய்ப்பு இருந்தால், நான் உங்களுக்கு அருகில் இருப்பதுதான் சரி.”

நகுலன் சற்று தயங்கியபடி மீண்டும் கூறினான்:

“அதோடு, நான் என் இடத்தை முழுமையாக விட்டுவிட்டு வரவில்லை, அண்ணா. என் கொடியின் கீழ் என்னைவிடப் பல போர்களைக் கண்ட, அனுபவம் வாய்ந்த மூத்த அரசர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் படையின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.”

நகுலனின் விளக்கத்தை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் முடியாமல், தருமன் அமைதியாக நின்றார்.

7 — நாம் முந்திக்கொண்டால் என்ன?

துச்சாதனன் செய்தியுடன் துரியோதனனையும் சகுனியையும் நோக்கித் திரும்பி வந்தான்.

“கோழை அர்ஜுனன் காண்டீபத்தைப் போட்டுவிட்டு, போர்க்களத்தைவிட்டு காட்டிற்குள் ஓடிவிட்டான். செய்வதறியாமல் கிருஷ்ணனும் ஓடிவிட்டான். இவர்களுடன் நகுலனோ அல்லது சகாதேவனோ ஓடிவிட்டான்.”

“நம் படையையும், பெரியப்பா பீஷ்மரையும் பார்த்து ஓடிவிட்டான் அர்ஜுனன்… அருமை! அருமை!” என்று ஆரவாரத்துடன் முழங்கினான் துச்சாதனன்.

பின்னர், சிரித்துக்கொண்டே சகுனி,

“சற்று நிதானம், துச்சாதனா. நல்ல செய்தியைக் கொண்டுவந்திருக்கிறாய். ஆனால், மகிழ்ச்சியிலும் நிதானம் அவசியம்.” என்றார்.

துரியோதனன் சிரித்தபடி,

“இதைவிட நல்ல செய்தி வேறென்ன வேண்டும்? துச்சாதனா, நீ உண்மையிலேயே சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறாய். வெற்றி முரசு கொட்டட்டும்!” என்றான்.

சகுனி மெதுவாகச் சிரித்துக்கொண்டே தலையசைத்தார்.

“ஆம்… நாம் வெற்றிபெறுவோம். ஆனால்… அந்த மாயாவி கிருஷ்ணனும் அர்ஜுனனும் அந்தக் காட்டுக்குள் ஏதாவது திட்டம் தீட்டிக்கொண்டிருந்தால்? நாம் இப்போது செய்துகொண்டிருப்பதையே செய்ய வேண்டும் என்று அவர்கள் நம்மை நம்ப வைத்துக்கொண்டிருந்தால்? இதுவும் அவர்களின் மிகப்பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தால்?”

சற்று அமைதியாக இருந்த சகுனி, பின்னர் கூறினார்:

“தோல்வி என்ற பரிசுக்கு ஆயிரம் வேர்கள் உண்டு. அதில் ஒன்று, வெற்றி அடைந்துவிட்டதாக எண்ணும் மனோபாவம்.”

துச்சாதனன் சற்றுக் குழப்பத்துடன் குறுக்கிட்டுக் கேட்டான்:

“மாமா, நான் நினைப்பது தவறு என்கிறீர்களா? அல்லது என் ஒற்றன் சொன்ன தகவல் தவறு என்கிறீர்களா?”

அவர்களுக்கிடையே மேலும் உரையாடல் நீள்வதற்குமுன், துரியோதனன் குறுக்கிட்டான்.

“மன்னிக்கவும், மாமா. ஆனால் நாம் இப்படியே நமக்குள் பேசி காலத்தைப் போக்கிக்கொண்டிருந்தால், அது வெற்றிக்கு உதவாது.”

சகுனி துரியோதனனைப் பார்த்து புன்னகைத்தார்.

“மருமகனே, நானும் அதைத்தான் சொல்ல விரும்பினேன். காலம் நமக்கு ஒரு பொன்னான வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. அதை வீணாக்கக் கூடாது.”

சற்று இடைவெளிக்குப் பிறகு சகுனி தொடர்ந்தார்:

“காட்டிற்குள் நமக்கு வேண்டாத மூவர் உள்ளனர். அதே வேளையில், தருமனுக்குத் தேவையான மூவரும் அவனிடம் இல்லை. நமக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு.”

—

ஹஸ்தினாபுரம்:

திருதராஷ்டிரர் சஞ்சயனை நோக்கிப் பதற்றத்துடன் கேட்டார்:

“சஞ்சயா, போர் துவங்கிவிட்டதா? என் மகன்களுக்கோ, பெரியப்பா பீஷ்மருக்கோ, பாண்டுவின் மகன்களுக்கோ ஏதேனும் பெரும் இடர் நேர்ந்துவிட்டதா? என்ன நடக்கிறது?”

சஞ்சயன் சற்று தயக்கத்துடன் பதிலளித்தான்:

“அரசே, போர் இன்னும் துவங்கவில்லை. சகாதேவனும் காட்டிற்குள் சென்றிருக்கிறார்.”

“மன்னிக்க வேண்டும், அரசே. இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஏதாவது செய்ய சகுனி திட்டமிட்டிருக்கிறார். அவர் இப்போதும் அதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கிறார்.”

—

அதே நேரத்தில், போர்க்களத்தில் சகுனி துரியோதனனுக்கும் துச்சாதனனுக்கும் மட்டும் கேட்கும் வகையில் குரலைத் தாழ்த்திக் கூறினார்:

“மருமகனே… இப்போது நாம் அவர்களைத் தாக்கினால் என்ன?”

துரியோதனன் உடனே இடைமறித்தான்.

“மாமா, நாம் போரின் விதிகளின்படி நடந்துகொள்வோம் என்று ஒப்புக்கொண்டிருக்கிறோம் அல்லவா?”

சகுனி அமைதியாகச் சிரித்தார்.

“ஆனால், மருமகனே… போர் இன்னும் துவங்கவே இல்லையே.”

அதைக் கேட்டதும் துச்சாதனனின் முகத்தில் ஆர்வம் தெரிந்தது.

“ஆமாம், அண்ணா! போர் இன்னும் துவங்கவில்லை. மாமா, என்ன செய்யலாம்? யாரை வீழ்த்தலாம்? தருமனையா? பீமனையா? அல்லது…”

சகுனி அவனை இடைமறித்தார்.

“முட்டாள்தனமாகப் பேசாதே, துச்சாதனா. தருமனும் பீமனும் போர்க்களத்தில்தான் இருக்கிறார்கள்; அவர்கள் தனியாக இல்லை. மேலும், பிதாமகர் பீஷ்மருக்கு முன்னால் உன்னால் என்ன செய்துவிட முடியும்?”

துச்சாதனன் அமைதியானான்.

சகுனி தொடர்ந்தார்:

“மருமகனே, தனியாக இருப்பவர்களைத்தான் நாம் வீழ்த்த வேண்டும்.”

துரியோதனன் சகுனியைப் பார்த்தான்.

“மாமா, நீங்கள் சொல்வது முன்னுக்குப் பின் முரணாகவே இருக்கிறது. நீங்கள்தான் அந்த மாயாவி கிருஷ்ணன் ஏதோ சதி செய்வான் என்று சொன்னீர்கள். இப்போது அவர்களையே வீழ்த்த வேண்டும் என்கிறீர்கள்.”

சகுனி சற்றே சிரித்தார்.

“மருமகனே, அவர்கள் நம்மை எதிர்பார்க்கலாம். ஆனால், வெறும் மூன்று பேரால் எப்படி ஆயிரம் பேரைச் சமாளிக்க முடியும்? அதுவும் ஆயுதங்கள் இல்லாமல்?”

சிறிது நேரம் துரியோதனனைப் பார்த்துவிட்டு அவர் தொடர்ந்தார்:

“இந்த ஆயிரம் ஒரு முன்னோட்டம்தான். நினைத்துப் பார். அர்ஜுனன் வீழ்ந்தால், இந்தப் போர் இன்றோ நாளையோ முடிந்துவிடும். கிருஷ்ணன் சாய்ந்தால், நமது வெற்றி உறுதி. நகுலனோ அல்லது சகாதேவனோ சாய்ந்தால், அதைவைத்து தருமனையும் பீமனையும் மனதளவில் கொன்றுவிடலாம்.”

சகுனி சற்று நெருங்கி, குரலைத் தாழ்த்தினார்.

“வேண்டுமென்றால் ஒன்றைச் செய்யலாம். துச்சாதனா, நீ காட்டுக்கு வெளியே நில். நம் வீரர்களை மீறி அவர்கள் யார் முதலில் வெளியே வந்தாலும், அவர்களின் கதையை முடித்துவிடு.”

துச்சாதனன் உடனே ஆர்வத்துடன்,

“இதுதான் சரி, மாமா!” என்று கூறினான்.

துரியோதனன் சற்று சிந்தித்துவிட்டு கேட்டான்:

“மாமா, நீங்கள் ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்ப நினைத்தாலும், தர்மநெறியில் இருந்து விலகாத பெரியப்பா பீஷ்மர் அதைக் கவனிக்காமல் அவர்கள் காட்டிற்குள் செல்வது எப்படி?”

எங்கும் நிறைந்திருந்த அந்தக் குருவி இவை அனைத்தையும் உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தது.

8 — ஏதோ சரியில்லை

பீஷ்மரின் படைப்பிரிவு கூர்மையான விழிப்புடன், எவ்வித சலனமுமின்றி அமைதியாக இருந்தது. எத்தனை நேரம் கடந்திருந்தாலும், வீரர்களின் விழிப்பிலும் ஆயத்தத்திலும் சிறிதும் குறைவில்லை.

மெதுவாக, ஆயிரம் போர் வீரர்களுடன் அங்கு வந்து சேர்ந்த துச்சாதனன், நேரத்தை வீணாக்காமல், “பெரியப்பா, வணங்குகிறேன். இதை உங்களிடம் கொடுக்குமாறு அண்ணன் துரியோதனன் கூறினார்,” என்று சொல்லியபடி ஒரு குறிப்பை நீட்டினான்.

அதைப் படித்த பீஷ்மர், சற்று இறுகிய முகத்துடன் துச்சாதனனை கூர்மையாகப் பார்த்தார். “இதைக் கொண்டு வருவதற்குப் பதில், நீயே தருமனைச் சென்று பார்த்திருக்கலாமே” என்று கேட்பது போல இருந்தது அந்தப் பார்வை.

பின்னர், அவன் கூட்டி வந்த போர் வீரர்களை உன்னிப்பாகக் கவனித்த பீஷ்மர், தன்னுடைய தளபதியை அழைத்து காதில் ஏதோ கூறினார்.

உடனே, துச்சாதனன் பீஷ்மரைப் பார்த்து, “நீங்கள் அனைவருக்கும் பொதுவானவர். ஆகையால், நீங்கள் போனால் நன்றாக இருக்கும் என்று அண்ணன் விரும்பினார்,” என்று சுயவிளக்கம் முடிப்பதற்குள், பிதாமகர் கையை உயர்த்தி, “போதும்” என்பதுபோல் உணர்த்தினார்.

பின்னர், தனது ரதத்தை முன்னோக்கிச் செலுத்தினார்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவருடைய குதிரைகளும் அறிந்திருந்ததுபோல், பிதாமகரைத் தருமனிடம் அழைத்துச் செல்லும் நோக்கில் அவை ரதத்தை வேகமாக முன்னோக்கிச் செலுத்தின.

பீஷ்மர் சென்ற பிறகும், அவருடைய தளபதி துச்சாதனனுக்கு அருகிலேயே, அவனுக்குத் துணையாக நின்றுகொண்டிருந்தது அவனுக்கு சற்றே எரிச்சலை ஏற்படுத்தியது.

இப்போதுதான், பீஷ்மர் தனது தளபதியிடம் காதில் என்ன சொல்லியிருப்பார் என்பதை துச்சாதனன் உணர்ந்தான்.

இப்படியே போனால் தனது திட்டம் செயல்படாது என்பதை உணர்ந்த துச்சாதனன், முதலில் தளபதியிடம், “பீஷ்மர் வரும் வரை நீங்கள் ஓய்வெடுக்கலாம்,” என்று கூறி அவரை அங்கிருந்து அனுப்பிவைத்தான்.

துச்சாதனன் சொன்னபடியே அந்தத் தளபதியும் அங்கிருந்து வெளியேறினார். இதுவும் பீஷ்மரின் திட்டமாகத்தான் இருந்திருக்குமோ?

பின்னர், தன்னுடன் வந்த ஆயிரம் வீரர்களையும் கூட்டிக்கொண்டு, அருகிலிருந்த காட்டை நோக்கிச் செல்லத் தயாரானான்.

மறுபுறம், தருமரின் தேரில், காலம் கடந்து கொண்டிருப்பதை உணர்ந்த அவர், சகாதேவனின் தூதுவன் கொண்டு வந்த செய்தியை அறிந்ததும், ஒரு முடிவெடுத்தார்.

“நகுலா, நீ பிதாமகர் பீஷ்மரிடம் சென்று நடந்ததை கூறி, நமது சார்பில் மன்னிப்பு கேள். போகும் வழியில் ஒருமுறை அர்ஜுனனின் எல்லைக்குச் சென்று பார்த்துவிட்டு செல்,” என்றார் தருமன்.

நகுலன் உடனே விடைபெற்றான். சற்றும் தாமதிக்கவில்லை.

மறுபுறம், பீஷ்மரின் எல்லையில், நடந்துகொண்டிருப்பதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்த பீஷ்மரின் தளபதி, உடனே தருமனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பீஷ்மருக்கு தகவல் அனுப்பினார்.

“துச்சாதனன் படைகளுடன் காட்டிற்குள் செல்கிறான். ஏதோ சரியில்லை.”

9 — முடிவிற்கு முன்

அர்ஜுனனும் கண்ணனும் இன்னும் காட்டைவிட்டு வரவில்லை என்பதை அவர்களின் ஆளில்லாத தேர் நகுலனுக்கு உணர்த்தியது. பின்னர், தருமரின் கட்டளையின்படி பிதாமகர் பீஷ்மரைச் சந்திக்கத் தயாரானான்.

காட்டை ஒட்டிய பாதையில் அவன் குதிரையைச் செலுத்தினான்.

பாதி வழியில், அவனுக்கொரு திடுக்கிடும் காட்சி காத்திருந்தது.

கௌரவர்களின் படை காட்டிற்குள் செல்வதைப் பார்த்த அவன், ஏதோ ஒரு சூழ்ச்சி நடப்பதை உணர்ந்தான்.

உடனே வந்த வழியிலேயே திரும்பிச் செல்ல முடிவெடுத்தான்.

மறுபுறம், பீஷ்மரும் தருமனின் எல்லையை அடைந்தார்.

அவரை வரவேற்ற தருமன், போர் தாமதத்திற்கு வருத்தம் தெரிவித்து, அதற்கான காரணத்தையும் விளக்கினார். நிலைமையை உணர்ந்த பீஷ்மர், அர்ஜுனனின் எண்ணத்தையும் முன்னமே அறிந்திருந்தார்.

அதன்பின், துரியோதனனின் கோரிக்கைக்கு இணங்க, பீஷ்மர் துரியோதனனைச் சந்திக்கத் தயாரானார். அதே நேரம், அவரது தளபதி அனுப்பிய தூதுவனும் அங்கு வந்து சேர்ந்தான். அவன் பீஷ்மரிடம் ஒரு ஓலைக் குறிப்பைக் கொடுக்க, அதைப் படித்த அவரது முகம் சிவந்தது.

இதற்கிடையில், நகுலனும் அர்ஜுனனின் எல்லைக்கு வேகமாகத் திரும்பி வந்தான்.

வந்தவுடன், தளபதிகளை அழைத்து ஒரு சிறிய படையைத் திரட்டி, விரைவாகக் காட்டிற்குள் சென்றான்.

சற்று முன், காட்டிற்குள்:

கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூற வேண்டிய அனைத்தையும் சொல்லி முடித்திருந்தார்.

“அர்ஜுனா, நீ கேட்க வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டேன். இனி, நீ விரும்புவதைத் தேர்ந்தெடுத்துக்கொள். நான் தேருக்குத் திரும்புகிறேன்.”

என்று கூறிவிட்டு, கிருஷ்ணர் தேரை நோக்கி நடந்தார்.

மறுபுறம், துச்சாதனன் காட்டிற்குள் யார் தென்பட்டாலும், குறிப்பாக அர்ஜுனனையோ அவனது தம்பிகளையோ வீழ்த்துமாறு தனது படையினருக்குக் கட்டளையிட்டான். பின்னர், அவர்களை காட்டிற்குள் அனுப்பிவிட்டு, காட்டின் நுழைவாயிலில் தனக்கு நம்பிக்கையான பத்து வீரர்களுடன் காத்திருந்தான்.

இந்நிலையில், தேரை நோக்கித் திரும்பிச் சென்றுகொண்டிருந்த கிருஷ்ணருக்கு, “பரந்தாமா…” என்று ஒரு குரல் கேட்டது.

“வா, சகாதேவா. அர்ஜுனன் உள்ளே, பறவைகள் நிறைந்த ஓர் ஆலமரத்தின் அடியில்தான் இருக்கிறான். நீ சரியான நேரத்திற்குத்தான் வந்திருக்கிறாய். பலே! காண்டீபத்தையும் வீரர்களையும் அழைத்து வந்திருக்கிறாய். போய் பார். உனக்கு ஆச்சரியமோ… அதிர்ச்சியோ… இரண்டில் ஒன்று காத்திருக்கிறது.” என்று கூறி, கிருஷ்ணருக்கே உரிய புதிரான சிரிப்புடன் விடைபெற்றார்.

10 — போர் துவங்கியது

காட்டிற்குள், பறவைகளின் ஒலி ஒரு திசையிலிருந்து அதிகமாகக் கேட்கத் துவங்கியது. யாரோ தன்னைப் பின்தொடர்வதை அந்த ஒலியின் மூலம் சகாதேவன் உணர்ந்தான்.

கண் இமைக்கும் நேரத்தில், அவனுடன் வந்திருந்த வீரர்களில் பாதிப் பேர் அம்புகளுக்கு இரையாகினர்.

சங்கொலி எழாமலேயே போர் தன்னை நெருங்கியதை சகாதேவன் உணர்ந்தான். இதையும் அவன் எதிர்பார்த்துத்தான் உள்ளே வந்திருந்தான்.

அவனுடன் வந்த வீரர்கள் அவனைச் சூழ்ந்து பாதுகாக்கும் வகையில் நின்றனர். ஆனாலும், அதனால் பெரும் பயனில்லை. ஒருவர் பின் ஒருவராக அவர்கள் மடியத் தொடங்கினர்.

நிலைமை மோசமாகிக்கொண்டிருந்த அந்த நேரத்தில், நகுலன் தனது படையுடன் வந்து சேர்ந்தான். துச்சாதனனின் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது.

நகுலனின் வீரர்கள் மிகத் திறமையாகப் போராடி, அவன் சகாதேவனுடன் இணைய ஒரு இடைவெளியை உருவாக்கினர். இருவரும் ஒன்றிணைந்ததும், அவர்களைச் சூழ்ந்திருந்த பத்துக்கும் மேற்பட்ட வீரர்களைச் சமாளித்தனர்.

பின்னர், அங்கிருந்து அர்ஜுனன் இருந்த இடத்தை அடைந்தனர்.

அர்ஜுனன் ஆலமரத்தின் அடியில், கண்மூடி ஆழ்ந்த தவத்தில் இருந்தான்.

துச்சாதனனின் வீரர்களில் சுமார் நூறு பேர் நகுலனையும் சகாதேவனையும் சுற்றி வளைத்தனர்.

காட்டிற்குள் நிலைமை இப்படியிருக்க, கிருஷ்ணர் அதற்குள் காட்டைவிட்டு வெளியேறியிருந்தார்.

அவர் மெல்ல அர்ஜுனனின் எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, துச்சாதனனும் அவனது ஆட்களும் கிருஷ்ணரைச் சுற்றி வளைத்தனர்.

கிருஷ்ணர் முன்னமே போரில் ஆயுதம் ஏந்தமாட்டேன் என்று உறுதியளித்திருந்தார். இப்போது, அந்த உறுதியைக் காப்பதே அவருக்கு ஒரு கடினமான நிலையாகியது.

கிருஷ்ணர் சிறு புன்னகையுடன் சுற்றிலும் நின்றவர்களை ஒருமுறை பார்த்தார். அவரது வலது கை மெதுவாக நகர்ந்தது. சுதர்சனச் சக்கரம் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்த்துவதுபோல், அது சற்றே உயர்ந்தது.

திடீரென, எட்டு குதிரைகள் பூட்டிய ஒரு தேர் களத்திற்குள் பாய்ந்து வந்து, துச்சாதனன் அமைத்திருந்த அணிவகுப்பை உடைத்தது.

கிருஷ்ணர் காப்பாற்றப்பட்டார்… அவரைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இருந்ததா என்பது வேறு விஷயம்.

துச்சாதனனும் அவனது ஆட்களும் முதலில் கோபமடைந்தாலும், தேரில் இருந்தவரைப் பார்த்ததும் வெட்கித் தலைகுனிந்தனர்.

பீஷ்மர் தேரிலிருந்து கிருஷ்ணரை நோக்கிச் சங்கை வீசினார். கிருஷ்ணர் அதை லாவகமாகப் பிடித்து, உடனே சங்கை முழங்கினார்.

—

ஹஸ்தினாபுரம்:

சஞ்சயன், “மன்னா, சங்கொலி முழங்கியது. போர் ஆரம்பமாகிவிட்டது,” என்றான்.

திருதராஷ்டிரர் கவலையுடன் தன் இருக்கையில் சாய்ந்தார்.

—

காட்டிற்குள்:

சங்கொலி முழங்க, அர்ஜுனன் கண்விழித்தான்.

00

ஆர்கி எனும் ராஜசிம்மன், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது கனடாவில் வசித்து வருகிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கல்லூரிக் காலம் முதலே கதைகள் மற்றும் கற்பனையில் ஆர்வம் கொண்டிருந்தாலும், சமீப காலமாகவே எழுத்தில் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.

தனக்குத் தோன்றும் சுவாரஸ்யமான எண்ணங்களையும் கதைகளையும், தனது எண்ணங்களுக்கும் கற்பனைக்கும் ஏற்ற வகையில் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

00

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *