–   பா.ரேவதி

முரளிக்கு தன்னை யாருமே கவனிக்காதது போல் தோன்றியது. உலோகம், இரப்பர் இவற்றோடு  வியர்வையும் கலந்த ஜிம்மின் பிரத்யேக மணம். அவன் தயக்கத்தோடு நுழைவாயிலில் நின்று, அங்கிருந்த உறுப்பினர்களின் வருகைப் பதிவேட்டைப் பார்ப்பதைப் போல பயிற்சியில் ஈடுபட்டிருப்பவர்களைப் பார்த்தான்.. 

கூடத்தின் நடுவில்,புடைத்திருக்கும் மார்புகள் விரிந்து சுருங்க பெஞ்ச்பிரஸ் எடுக்கும் ஒரு இளைஞன்,  ஒரு கண்ணாடிக்கு முன் நின்று,  தன் கைகளில் புடைத்திருக்கும் நரம்புகளை விரல்களால் தடவி பரிசோதிக்கும் பாவனையில் இன்னொருவன், இறுக்கமான காற்சட்டைகள் அணிந்து இயந்திரங்களில் தங்களை வனைந்துக் கொண்டிருந்த பெண்கள் என அந்தக் கூடத்துக்குள் உடல்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. 

நடைமேடையில் மூச்சு வாங்க நடந்து கொண்டிருந்த பெண்களின் முன்  இரண்டு கைகளிலும் கனத்த எடைகளைத் தூக்கியபடி நடந்து கொண்டிருந்தவனைப் பார்க்க அவனுக்குச் சற்று எரிச்சலாகவும் பொறாமையாகவும் இருந்தது.

லேசாக முன் சரிந்த தொந்தியும் இடுப்பைச் சுற்றி  மென்மையான சதைப்பற்றுமாய் இருந்த அவனது உடலைக் குனிந்து பார்த்தான் அது சட்டென வடிவமற்றதாகத் தெரிந்தது. அவர்கள் அனைவரும் அவனைக் கேலி செய்வதற்காகவே பயிற்சியில் வேகத்தைக் கூட்டியதாகத் தோன்றியது.

அந்தக்  கூடத்தின்  மூலையில் ஏதோவொரு இயந்திரத்தைத் துடைத்துக் கொண்டிருந்த பயிற்சியாளன் இவனைக் கவனித்து விட்டு  அருகில் நெருங்கி வந்தான். புன்னகையுடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு   ”ஜிம்மில் சேர வந்திருக்கிறீர்களா?”, என்று ஆங்கிலத்தில் கேட்டான்.

 ‘ஆமாம்’


”எப்போது கடைசியாக ஜிம்முக்குச் சென்றீர்கள்?, உடல் உபாதைகள் ஏதும் இருக்கிறதா?, எதாவது இலக்குகள், மாடல் உடற் தோற்றங்கள்?”.

கடந்த  பத்து நாள்களாகவே முரளி  குழப்பங்களோடு போராடிக்கொண்டிருக்கிறான்.  

ரதியினுடைய அலங்கார மேசையின் இழுப்பறையில் அந்தப் பொருளைப் பார்த்ததிலிருந்து ஆரம்பித்த அலைக்கழிப்பு,  தான் பலகீனமாகி விட்டது போன்ற தவிப்பு . 

தனது தவிப்புகளையும் சந்தேகங்களையும் பற்றி அவனிடம் சொல்ல முடியாது என்பதால், வயது நாற்பதை தாண்டிவிட்டது, அதனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்புவதாக முரளி பதிலளித்தான்.

‘நல்லது’. சற்றுத் தள்ளிச் சென்று முரளியைத் தலையிலிருந்து பாதம்  வரை பார்த்தான்  .

‘அத்தனை மோசமில்லை, கொஞ்சம் கோர் பகுதி, கைகள், கால்களுக்குப் பயிற்சி அளித்தால் ஒரு வருடத்தில் மேன்லியான உடலைப் பெறலாம்‘ என்றான். 

 ‘மேன்லியான உடல்’ என்பதை அவன் அழுத்திச் சொன்னதாக முரளிக்குத் தோன்ற தனது வலது மார்பை  அனிச்சையாக நீவிக் கொண்டான்.

தனது குழப்பங்களுக்கான பதில்கள், இரும்பும் உடல்களும் உரசும் இந்த உடற்பயிற்சி நிலையத்தில் கிடைக்கும் என்று நூறு சந்தேகங்களுக்கு நடுவே அவன் நம்ப விரும்பினான்.  

அடுத்த ஒன்றரை மணிநேரமும் பயிற்சியாளன் சொல்லிக்கொடுத்த உடற்பயிற்சிகளில் தன்னை  முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டான். பெருகிய வியர்வையைத் துடைத்த பின் ஒரு தற்காலிகத் தன்னிறைவோடும், உற்சாகத்தோடும் வீட்டிற்குத் திரும்பினான். 

‘இவ்வளவு காலையில எங்கே போனீங்க’, ஷூக்களைக் கழற்றிக் கொண்டிருந்த முரளியைப் பார்த்து ரதி கேட்டாள்,’வாக்கிங் போனீங்களா முரளி?

‘இல்ல, ஜிம்முல சேர்ந்திருக்கேன்’.

‘ஜிம்மா?, என்ன திடீர்ன்னு?’

‘சும்மா தான்.. ஃபிட்டா இருக்கலாமேன்னு’

ஃபிட்டா  இருக்கணுமா, முதல்ல இந்த நொறுக்கு தீனி சாப்பிடறத நிறுத்துங்க ,

நானே சொல்லணும்னு நெனச்சேன், ஜிம்முக்கு தொடர்ந்து போனா ஸ்டாமினா பில்ட் ஆகும்‘

முரளிக்கு சுருக்கென்றது. அவனது வலிமை அவளுக்கு போதவில்லையா?

அவளுக்குப் பதில் சொல்லாமல், சோபாவில் அமர்ந்து மேசையில் கிடந்த செய்தித்தாளைப்  படிக்க முனைந்தான்.  செய்திகள், படங்கள் எதிலும் மனம் ஒன்றவில்லை.

சட்டென எழுந்தவன்  குளியலறைக்குள் புகுந்து கொண்டான். ஷவரிலிருந்து வழிந்த நீரில்  உடல்  எடையற்று போவதை உணர்ந்தான்.  சற்று முன் ரதியின் பேச்சு அளித்த பதட்டம் தணிந்தது.

குளியலறையிலிருந்து வெளியே வந்த முரளிக்கு  வீட்டில் இருக்க விருப்பமில்லை.

அவசர அவசரமாக உடை மாற்றிக்கொண்டவன் ‘நான் வெளியே போறேன்’ என்று கூடத்திலிருந்ததே உரக்கச் சொன்னான். ‘சாப்பிட்டுட்டுப் போங்க’  என்று அடுக்களையில் இருந்து கத்திய ரதியிடம், ‘வெளியே சாப்பிட்டுகறேன் நேரமில்லை’  என்றவன் அவள் அடுக்களையிலிருந்து வருவதற்குள் வெளியேறி வேகமாக  லிஃப்டுக்குள் நுழைந்தான். 

கார் பார்க்கிற்குச் சென்று கார் கதவைத் திறந்து அமர்ந்தான் . 

அந்த எட்டு  அங்குல கருவி அவனது  தலைக்குள் சுழன்றது.  அதைப் பார்த்ததில் இருந்து அவனால்  ரதியோடு முகம் கொடுத்துப் பேசமுடியவில்லை. நேரடியாகக் கேட்டு விடவும் முடியாமல், அதனை பார்க்காத்தைப் போல் நடிக்கவும்  இயலாமல் தவித்தான்.  

ரதி வீட்டை நிறைப்பவள். இயல்பான நளினமும்  மென்மையும் கொண்ட அவளை பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு உள்ளான் குருவியின்  நினைவுக்கு வரும். அவர்களது இல்லத்தின் சீரான இயக்கத்துக்குக் காரணம் ரதி தான். 

அவனிடம் இல்லாத நிதானம் அவளிடம் இருந்தது. இல்லாவிடில் இரண்டு பெண் குழந்தைகளோடு பதினேழு வருட திருமண வாழ்க்கை தடுமாறாமல் சென்றிருக்காது.    

முரளி சிக்கல்கள் வந்தால் சட்டெனக் கலங்கிப் போவான். முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவான். அப்போதெல்லாம் ரதி தான் பொறுப்பெடுத்துக் கொள்வாள். 

அவனுடைய சுயதொழிலில் அவ்வப்போது  அலுவலகத்தில் பணியாளர்களுக்கு நேரத்தில் சம்பளம் கொடுக்கத்  திணறும் அளவுக்கு கடினமான காலங்கள்   ஏற்படும் . 

அந்நேரங்களில் ரதியினுடைய  நிலையான சம்பளமும்  நகைகளுமே அலுவலகம் வீடு இரண்டும் தடையின்றி இயங்கக் கைகொடுத்தன. .  

ரதிக்கு எதையும் மனதில் வைத்துக்கொள்ளத் தெரியாது.  மனதில் தோன்றிய எண்ணம் புத்தியை எட்டிய விநாடியே வாய் வழியாக வெளியே வந்துவிடும். ஏதாவது தவறாக பேசிவிட்டால் உடனடியாக மன்னிப்பும் கேட்டு விடுவாள்.

முரளியைக் காட்டிலும் அவளுக்கு நிறைய நண்பர்கள். வீட்டிற்கு வரும் அவனுடைய நண்பர்களிடம் தயக்கமின்றி பேசக் கூடியவள்.

இவனுடைய நண்பர்கள் கூடப் பிரச்சனை என்றால் அவளிடம் தான் பேசுவார்கள். 

எதையும் அவனிடம் மறைக்காதவள், அந்தக் கருவியை வாங்கியதை தன்னிடம் மறைக்காமல் இருந்திருக்கலாம் என்று நினைத்தான். எங்கு செல்வதென்று முடிவெடுக்க முடியாமல் காரில் வெகுநேரம் அமர்ந்திருந்தவன் அவர்கள் வழக்கமாகச் செல்லும் உணவகத்திற்குச் சென்றான். வயிறு நிறையும் வரை வேறு எதையும் யோசிக்கவில்லை. பரிமாறப்பட்ட உணவிலும் கவனம் செல்லவில்லை.

வெளியே வந்த பிறகே அடுத்து  எங்கே போகலாம் என்ற யோசனை எழுந்தது.   

அந்த உணவகத்துக்கு எதிரே ஒரு  பெரிய மால் இருந்தது. உள்ளே நுழைந்தான்.

ஆடைகள், கைப்பைகள், நகைகள்,  கைக்கடிகாரங்கள், அலங்காரப் பொருட்கள் என அதிப் பணக்காரர்களுக்கான உயர்ரகப் பொருட்களை மட்டுமே விற்கும் கடைகள்.  வீட்டிற்குத் திரும்பவதை முடிந்த வரை தள்ளிப் போடுவதற்காக ஒவ்வொரு கடையாக நிதானமாகப் பார்த்துக் கொண்டே நடந்தான். மனிதர்களைத் திருப்தியில்லாதவர்களாக ஆக்கி, அவர்களது சுயமோகத்தை வளர்க்கவே எழுப்பப்பட்டவை இந்த மால்கள் என்று நினைத்தான். அந்தக் காலை நேரத்திலும்  அங்கு ஏராளமான விளக்குகள் ஒளிர்ந்தன.

அவன் அந்த முடித்திருத்தகத்தின் முன் நின்றான். உலக  புகழ்பெற்ற முடி திருத்தும் நிபுணர்கள் என்று கடைவாசலில் இருந்த  பெயர் பலகை  அறிவித்தது.

உள்ளே சென்றான்.    

வாயிலுக்கு அருகே ஒட்டப்பட்டிருந்த  சுவரொட்டியில் மர்லின் மன்றோவின்  ஜாடையில் ஒருத்தி அண்ணாந்து பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள் .   

ஹோட்டல்களில் இருப்பது போன்று சலூனின் நுழைவாயிலில்  வரவேற்பு பகுதி . 

அங்கு  நின்றிருந்த பெண் , சற்றுமுன் பார்த்த கடையில் இருந்த ஜெர்மன் பொம்மையை போல் கைக்கு அடக்கமாக இருந்தாள். கறுப்பு நிறத்தில் ஆண்கள் அணிவது போன்ற சட்டை அணிந்திருந்தாள். வலது மார்பில் கடையின் பெயர் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது.

மைதாமாவைப் பிசைந்து உருட்டி  ஈர்க்குச்சியால் கண் ,மூக்கு,  வாய் என்று கீறி விட்டதைப்போன்ற முகம். இவனைப் பார்த்ததும் மஞ்சள் பற்கள் தெரியப் புன்னகைத்து வரவேற்றாள். இவனுக்கு என்ன மாதிரியான சேவை தேவைப்படுகிறது என்று விசாரித்தாள். முடி வெட்ட வேண்டும் என்று இவன் சொல்லவும், ஷிவானி!, என்று  யாரையோ   அழைத்தாள்.  

 உயரமான பாட்டில்களை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருந்த ஷிவானி இவனை உள்ளே அழைத்துச் சென்றாள். உள்ளே வரவேற்பு பெண்ணைப் போலவே  கருப்பு  சட்டை பேண்டில் ஆணும் பெண்ணுமாய் மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர். பெரும்பாலும் வடகிழக்கு முகங்கள்.    

இவனை ஷிவானி உயரமான ஒரு நாற்காலியில் அமரவைத்தாள். முரளி அந்தக் கூடத்தைச் சுற்றிப் பார்த்தான்.  

அருகே இருந்த இன்னொரு நாற்காலியில்  இருந்த ஆண்  அவனது தலையை நெருப்புக்கோழியினுடைய முட்டை போன்ற  ஒரு கருவிக்கு கீழ் கொடு்த்து விட்டு உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.

அந்தக் கருவிக்கு மேலிருந்த ஒட்டைகளில் இருந்து நீராவி புகை சுருள் சுருளாக விரிந்து ஏற்கனவே இருட்டாக அந்த இடத்தை ஒரு கனவுலகமாக மாற்றிக்கொண்டிருந்தது.  

கூடத்தின் இன்னொரு மூலையில்  ஒரு பெண் அமர்ந்திருந்தாள் .அவளது கூந்தலை ஒரு இளைஞன்  இஸ்திரி செய்து கொண்டிருந்தான். அவனது கையில் இருந்த கிடுக்கி போன்ற அந்தக்  கருவியின் முனையில்  இரு செவ்வகத்  தகடுகள் .அந்தப் பெண்ணின் காதுகளுக்கு அருகிருந்து ஒரு மெல்லிய  கூந்தல் கற்றையை  எடுத்து அந்த இரும்பு தகடுகளுக்கிடையே பொருத்தியவன்,கிடுக்கியைக் கையால் அழுத்தியபடி  மேலிருந்து கீழாக அந்தக் கருவியை நகர்த்தினான். நெளிநெளியாய்  கிடுக்கிக்குள் சென்ற குழல் இஸ்திரி செய்யப்பட்டு நேராக வழுவழுப்புடன் வெளிவந்தது.  அத்தனை இருட்டிலும் பூனையின் கண்களைப்போன்று பளபளத்த குழல் கற்றை. அலையும் கூந்தலை அடக்கி நேராக்கவும், சுருட்டையாக்கவும், பம்மென்று அலையலாய்  காற்றில் அசையச் செய்யவும் ஆயிரம் சாதனங்கள் . 

கரும்புள்ளிகளை அகற்றி முகத்தைப் பளபளப்பாக்க, கோணல் மூக்கைச் சீராக்க, உதடுகளைப் பருக்க வைத்துக் கவர்ச்சியாக்க, சிறிய மார்புகளைப் பெரியதாக்க பெரிய மார்பகங்களை சிறியதாக்க என எல்லாவற்றுக்கும் கிரீம்களும்  லேசர் சிகிச்சைகளும் மலிந்து கிடக்கின்றன. அங்கு நிறைந்திருக்கும் மின்கருவிகளைக் கவனித்த முரளி, அவை போன்ற மின்கருவிகளால் நிறைந்திருக்கும் வீடுகளை, தொழிற்சாலைகளை, அலுவலகங்களை நினைத்தான். உடலுழைப்பால் செய்து கொண்டிருந்த எல்லாவற்றையும் இன்று  எலக்ட்ரானிக் உபகரணங்களைக் கொண்டு செய்யலாம். எல்லாவற்றுக்கும் மாற்று  சந்தையில் உண்டு .

கையில் அணிந்து இருந்த ஸ்மார்ட் வாட்ச், விலையுயர்ந்த கைபேசி,   காதிலிருந்து கழற்றி கையில் வைத்திருக்கும் ஹெட்போன் என  அவனது உடலே ஒரு மின்கருவியாக மாறி விட்டதாக முரளிக்குத் தோன்றியது  .

ஷிவானி அவனை மெலிதாக உலுக்கினாள்..

எந்த மாதிரி முடி வெட்ட வேண்டும் என்று கேட்டு, அவன் பதிலளிப்பதற்கு முன்,  ‘உங்களை ஃபைவ் இயர்ஸ் யங்கா காட்டற மாதிரி கட் பண்றேன் சார்  என்றவள்,  அவனது தலைமுடியைக்  கைகளால் அளைந்து பார்த்தவள்  ‘  அங்கங்கே கொஞ்சம் ஒயிட் ஹேர்ஸ் இருக்கு அதனால் கலரிங் செய்தால் நல்லாருக்கும், என்றாள். அவள் பேசுவதைக் காதில் வாங்காமல் எல்லாவற்றிற்கும் சரியென்றான் முரளி.

பீங்கான் கிண்ணங்களில் ஏதேதோ க்ரீம்களைப் பிதுக்கி எடுத்து வந்தாள். அவற்றைப் பிரஷ்ஷால் கலக்கி  அவனது தலையில் பூசினாள். அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு அவனது தலை அவளது கையில் இருந்தது. அவள்  ஒவ்வோரு க்ரீம்மாக தடவிப்  பதினைந்து நிமிடம் ஊற வைத்து நுரைக்க நுரைக்க ஷாம்பூ தேய்த்துத்  தலைக்குளித்து விட்டாள்.  மூன்று நான்கு  முறை தலைக் குளியல்,  பிறகு  அந்த டினோசர் முட்டைக்குள்  தலையை விட்டு அடை காத்தல், மீண்டும் தலைக் குளியல், டிரையர், பிரஷ் என்று இரண்டு மணிநேரங்களுக்கு  அங்கிருந்த அனைத்து விதமான கருவிகளையும் அவன் தலையில் உபயோகித்தபின் ஒருவழியாக அவனை விடுதலை செய்தாள்.  

கண்ணாடியில் அவன் முகத்தைப் பார்த்தபோது  ஐந்து வயது  குறைந்து விட்டதாகத் தான் தோன்றியது. 

இன்னும் வீடு திரும்ப மனம் வரவில்லை.  மீண்டும் வீட்டுக்குப் போவதை  தள்ளிப் போட நினைத்தான்.  

அடுத்த தளத்தில் இருந்த ஆடவர்களுக்கான துணிக்கடைக்குச் சென்று ஒவ்வொரு அடுக்காக நிதானமாகப் பார்த்து, தனக்குத் தேவையில்லாத போதும், சில ஆடைகளை வாங்கினான். பின்மதியத்தின் இறங்கு வெய்யிலில் தன்னுடைய காருக்கு அருகே செல்லும் ஒவ்வொரு வாகனமும் தளர்ந்திருப்பதாக உணர்ந்தான்.  மிக மெதுவாகக் காரை ஓட்டி வீட்டிற்குத் திரும்பினான். 

கதவைத் திறந்த ரதி , கண்கள் விரிய ஹை,”இதென்ன புது ஹேர்ஸ்டைல், நல்லாருக்கு முரளி, என்ன திடீரென்று? என்று படபடத்தாள். . 

‘சும்மா தான் ஒரு சேஞ்ச் வேணும்னு தோணுச்சு’  என்றவன் சோபாவில் அமர்ந்திருந்த ரத்னாவை அப்போது தான் கவனித்தான். 

ரத்னா ரதியின் நெருங்கிய தோழி.  மூன்று வருடத்துக்கு முன்பு அவளுக்கு விவாகரத்து ஆகி இருந்தது. வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன், ‘வாங்க  எப்படி இருக்கீங்க‘என்றுவிசாரித்தான். அவள் பதில் சொல்லும் முன் ரதி  குறுக்கிட்டு, ‘இன்னிக்கு அவளுக்குப் பிறந்தநாள், விஷ் பண்ணுங்க’  என்றாள். 

அப்படியா, பிறந்தநாள் வாழ்த்துகள்! என்றான் முரளி . 

‘நன்றி’   என்றவளை ரதி  அவசரமாக அவர்களது  அறைக்குள் அழைத்துச் சென்றாள்.  

இரண்டு பெண்களும்  சிறுமிகளைப் போலக் கிசுகிசுவென வெகு நேரம் பேசிச் சிரித்துக்  கொண்டிருந்தார்கள். தான் புதிதாக வாங்கின துணி நகை என்று எதையாவது  ரதி அவளிடம் காட்டக்கூடும் என்று முரளி  நினைத்துக்கொண்டான். 

ஒருவழியாக இரவு உணவுக்குப் பிறகு  ரத்னா கிளம்பினாள். அவளை வழியனுப்பி வைத்துவிட்டு , ரதி அடுக்களையைச் சுத்தம் செய்யச் சென்றாள்.  

இரவு நெருங்க நெருங்க, வீட்டில் இன்னொரு ஆள் இருந்தவரை இருந்த மனநிலை சட்டென  மாறி மீண்டும் குழப்பம் வந்தமர்ந்தது.  

நண்பர்களோடு பேசிப் பார்க்கலாம் என்று தோன்றியது. சனிக்கிழமை என்பதால் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் கிடந்தார்கள். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் ரதியும், முரளியும் திரைப்படம் பார்ப்பார்கள். இன்று அவனுக்கு அவளுடன் படம் பார்ப்பதற்கான மனநிலை இல்லை.

நண்பர்கள் குழுவில் நாளைச் சந்திக்கலாமா எனக் குறுஞ்செய்தி அனுப்பினான்.  வெகுநேரம் கழித்து இரண்டு நண்பர்கள் பார்க்கலாம் என்று பதில் அளித்தார்கள். அவர்களிடம் தனது குழப்பத்தைப் பற்றி பேசலாம் என்று யோசித்தான்

அடுக்களை வேலை முடித்து ரதி வருவதற்குள் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டான். தூக்கம் வரவில்லை. ஆனால்  ரதி அவன் அருகில் வந்து பார்த்தப்போது உறங்குவதைப்போல நடித்தான்.  ரதி  எப்போதும் போல்  படுத்தவுடன் தூங்கி விடாமல் புரண்டு கொண்டே இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. தன்னையும் சிரமப்படுத்திக்கொண்டு அவளையும் சிரமப்படுத்துகிறோமோ என்று கவலையாக இருந்தது.  வெகுநேரம் விழித்தே கிடந்தான்.  

மறுநாள் அதிகாலை விழிப்பு வந்த போது ரதி அவனது தோளில் கன்னம் அழுந்தத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது முன்நெற்றி  கேசம் அவனது முகத்தை வருடியது. .பத்து நாள்களுக்கு முன்பு  என்றால்,  அவள் பக்கம் திரும்பி அவளைத் தன்னுடலோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவளையும் தூங்க விடாமல் செய்திருப்பான்.  அது மட்டும் இவனது கண்ணில் படாமல் இருந்திருந்தால் எப்போதும் போல் உறக்கமும் விழிப்புமாய்ப் படுக்கையில் இருவருமாய் அணைத்துக்கொண்டு கிடந்திருக்கலாம்.

பகலில் நண்பர்களோடு படம் பார்த்தபோது மனம் அதில் ஒன்ற மறுத்தது. யாரிடம் பேசலாம்,  எப்படிப் பேசலாம் என்று யோசித்தபடி இருந்தான். ஆனால் படம் முடிந்தவுடன் சாப்பிட்டு விட்டு நண்பர்கள் அவசரமாகக் கலைந்து சென்றார்கள்.  நண்பர்களிடம் பேச இவனுக்கும் தயக்கமாக இருந்தது.

மீண்டும்  அவன் வீட்டுக்குத்  திரும்பிய போது மாலை ஆறு மணிக்குமேல் ஆகி விட்டது. ரதி பால்கனியில் அமர்ந்திருந்தாள். யாரிடமோ கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தாள். அவளது முகத்தில் குறும்பும் சிரிப்பும் விகசித்தன. குழந்தைகளைக்  காணவில்லை. வெளியே சென்றிருக்கலாம். இவனைப் பார்த்ததும் ‘அப்புறம் பேசறேன் ‘ என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தவள், அவனிடம்  ‘காபி குடிக்கறீங்களா‘ என்று கேட்டாள்.  உம் என்றவன், பால்கனியில் இருந்த சேரில் அமர்ந்தான். அவனுக்குக் காப்பி எடுத்து வரத் துள்ளலுடன் எழுந்து  சென்றவளது முதுகையேப் பார்த்தான். 

இதற்குமேல் தாங்காது, அவளிடம் நேராகக் கேட்டுவிடலாம் என முடிவெடுத்தான்.

ரதி  கையில் காபியோடு வந்தாள். உரையாடலைத் தொடங்கும் பொருட்டு, ‘யார் போன்ல?’ என்றான்.

‘ரத்னா தான் கூப்பிட்டாள், நான் அவளுக்கு வாங்கிக் கொடுத்த பிறந்த நாள் பரிசு ரொம்பப் பிடிச்சிருக்காம், அதுக்கு ஒரு  நன்றி சொல்லிட்டு அதைப் பற்றி பேசத்தான் கூப்பிட்டா’ .

சட்டென உற்சாகம் அடைந்தவளாக, ‘முரளி, நான் அவளுக்கு என்ன வாங்கிக்  கொடுத்தேன்னு கெஸ் பண்ணுங்க’. என்றாள்.

அவளது  கன்னக் கதுப்பு, காது மடல்கள், மூக்கு நுனி,  கண்கள் அனைத்தும் அந்தியின் செம்மஞ்சள் வெளிச்சத்தில் ஓளிர்ந்தன. முகத்துக்கு நேராக  விரல்களை நீட்டி இரண்டில் ஒன்றைத் தொடச் சொல்லும் சிறுமியின் எதிர்பார்ப்பு குறுகுறுத்த பார்வை.

அவளுக்குள் இருக்கும் உள்ளான் குருவி சிறகுகள் படபடக்க வெளிப்படும்  தருணங்களில் அதுவும் ஒன்று என்று முரளிக்குப் புரிந்தது. 

-நீயே சொல்லு, என்ன வாங்கிக் கொடுத்த?

அவன் குரலில் இருந்த எரிச்சலை உணராதவளாக, அவனருகே வந்து,

ரகசியம் சொல்லும் குரலில் குதூகலம் வழிய,  “நான் அவளுக்கு ஒரு டில்டோ வாங்கிக் கொடுத்தேன்” என்றாள்.

அவள் சொல்வதைச் சரியாகக் கேட்கிறோமா என்று சந்தேகம் முரளிக்கு வந்தது.  “என்ன வாங்கிக் கொடுத்த?” அழுத்தமாகக் கேட்டான்.

‘டில்டோ!  வைப்ரேட்டிங் டில்டோ’ என்றாள் .

ஓ!

வியப்பில்  கண்கள் விரிய முரளி அவளைப் பார்த்தான்   .

“அவளுக்கு  விவாகரத்து  ஆனதில் இருந்து  மூணு வருஷமா தனியா இருக்கா.  அதுவும் இல்லாம அவங்க ரெண்டு பேருக்கும் ஐஞ்சாறு வருஷமாகவே பிரச்சனை.  புருஷன் பெண்டாட்டி அன்னியோன்யமா இருந்தே ரொம்ப நாள் ஆயிடுச்சு. அவனுக்கு என்ன, டைவோர்ஸ் ஆன கையோடு இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டான். இவள் என்ன செய்வா. குழந்தையோட தனியா வேற இருக்கா.  

போன தடவை பேசிகிட்டு இருந்தபோது சொன்னாள், எல்லாத்தையும்  தனியாச் சமாளிக்க முடியுது, இது தான் கஷ்டமா இருக்கு, யார் கிட்டயும் சொல்ல முடியலன்னு. அதனால  தான்  பிறந்த நாள் பரிசா  அதை  வாங்கிக் கொடுத்தேன்,  இதையும் தனியாச் சமாளிக்கட்டும்’ .

வியர்வை கசகசத்த  ஆடைக்குள், காற்று  புகுந்ததைப் போல, அத்தனை நேரம் இருந்த இறுக்கங்கள் தளர, முரளி ஓ! வாவ் ‘ என்றான். தலைக்குள் சுழன்று கொண்டிருந்த அந்தக் கருவி காணாமல் போயிருந்தது.

“உன்னால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்கமுடியும் ரதி,”  என்றவன் சட்டென அவளை இழுத்து  அணைத்து முத்தமிட்டான்.

அவனது அணைப்புக்குள் வாகாக ஒண்டிக் கொண்டவள், அதெல்லாம் இல்ல. நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கும்போதெல்லாம் தோணும், ரத்னாவுக்கு ஒரு பார்ட்னர் இல்லையேன்னு. அதான்..

கொஞ்ச நேரம் முன்னாடி போன் பண்ணினாள், பரிசு  அருமையா வேல செய்யுதாம். பதினெட்டு செட்டிங்ஸ் இருக்காம். அவளுக்கு ஒரே சந்தோஷம். பதினெட்டு செட்டிங்கில்  பார்ட்னர் யாருக்குக் கிடைப்பான்? 

அவனது அணைப்பிலிருந்து சற்று விலகி , அவனது கண்களை நேராக சந்தித்தவள், எனக்கும்  ஒண்ணு   ஆர்டர் போடலாமான்னு யோசிக்கறேன், நீங்க என்ன சொல்றீங்க முரளி? என்றாள். 

00

என் பெயர் ரேவதி. சிங்கப்பூரில் வசிக்கிறேன். பா. ரேவதி என்ற பெயரில்  கதைகள், கட்டுரைகள், மொழிப்பெயர்ப்பு கவிதைகள், கதைகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன். எனது படைப்புகள்  அகழ், 

நீலி ,நுட்பம், மெட்ராஸ்பேப்பர் ஆகிய மின்னிதழ்களில் வெளி வந்திருக்கின்றன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *