புலம்பெயர்ந்த மடமை.
கஞ்சனின் இருதயத்திற்குள் புகுந்த கருணை தவிப்படங்காமல் அவனிடமே தஞ்சம் கேட்டது.
அயலக உட்புகுதலை அனுமதிக்காத கடுமையில் ஒதுக்குப்புற நாற்றத்தில் ஒண்ட வேண்டியதானது.
அங்கே அநேக நல்லவைகள் நலம் கெட கேட்பாரற்றுக் கிடந்தது.
பாரிய நாளொன்றில் புகுந்துவிட்ட ஒளிக்கீற்றில் பைத்தியமாகிவிட்டதாக அவனொத்தவர்கள் பகடி பேசினாலும் நற்குணங்கள் யாவும் இயல் சுவாசத்தில் அவனை இன்பம் துய்க்க வைத்தன.
***
பார்த்தப் புத்தகத்தின் படிக்காதப் பக்கங்கள்.
வாகனப் பிரயாணத்தின் போதான
சாலையின்
இருபுறமும்
வாசிப்பு புத்தகங்கள்
அழைத்த வண்ணமிருந்தது.
முன்னுரையைப்போல
வீட்டின் முகப்பு சுவரின் மூலையில்
வண்ணமிட்ட
திருஷ்டிச் சட்டியில்
இருந்த தண்ணீரைக்
காகமும் ஓணானும் தாகம் தணித்துக் கொண்டிருந்தது.
அநேக சாமிகள்
வறுமையில் இருப்பதால்
சிந்தனைகள் மாறும் தூரத்திற்குள்
சில்லறைகள் போட
பொறி வைத்து அழைத்தது.
ஒற்றைச் செருப்பை மட்டும்
பார்க்கும் உலகில்
கவனக்குறைவால் விழுந்த ஒரு செருப்புக்கு
காட்சி மறையும் தூரம்
இன்னொன்றையும்
கழட்டிப் போட்டிருந்த
சிறுமி
என்ன சொல்லி இருக்கும் வீட்டிலெனத் தெரியவில்லை.
மின் மாற்றி மரத்தில்
மாடுகளைக் கட்டிய மிருகங்கள் தான்
பசுப் பாதுகாப்பென
மனிதத் தோல் போர்த்தி அலைகிறது.
துல்லியக் கணக்கில்
தோற்கும் மனம்
இடி மின்னலுக்காக
எண்ண வேகத்தைக் குறைத்து
வாகனத்தை ஓடவிட்டது.
வாகனத்தைப் பார்த்து ஓட்டச்சொல்லும்
சாலையின் குறுக்கே புகுந்து போகும்
உயிர்களுக்கு அரசுகள்
மனிதப் பெயரிட்ட அடையாள அட்டைகள் கொடுத்திருக்கிறது. சேருமிடம் போகும் முன்பான இருபுறமும் அநேகப்புத்தகங்களின்
வாசிப்பு நிறைந்து இருந்தாலும் மரம் செடி கொடிகள் குளிர்வான மகிழ்வைத்தந்ததால் இவைகளை நான் வாசிக்காமல் போனதையும்
நீங்கள்
அறிய வேண்டிய அற்பமான செய்திகளில் ஒன்றாக இருக்கிறது.
***
பிரதான சமாதானத்தின் அமைதிக் கூப்பாடு.
சற்றைக்கு முன் வீசியக்காற்றில் ஈரப்பதம் இதமாக இருந்தது. சகோதரக் காற்றின் பின் தொடர்வில் அனலாக தகிக்கிறது. சொல்லப்பட்ட மேகம் மழை தராமல் போகிறது.
நாளைய மேகத்திடம் பேச மரங்களிடம் தஞ்சம் புக வேண்டியதாக உள்ளது.
நேற்று குளித்தவர்களுக்காக இன்று தலை துவட்டும் முறைமையில் அலுப்பாகாத ஆச்சரியம் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.
நிலவை நறுக்கித் தின்னும் இரவிற்கு அதனை வளர்க்கும் யுக்தி தெரிந்து இருந்தது.
தீராப் பசியில் தின்ற நட்சத்திரங்கள்
யாவும்
ஒளி முட்டையாக ஒவ்வொரு நாளும் இட்ட இரவு பகலுக்குள் ஓய்வு கொள்கிறது.
மண்ணுக்குள் சென்ற அநேகம் வெளிவந்துவிட்ட
பிறகு
மனிதனை மட்டும் காணாத விநோதத்தை கேட்டுக் கேட்டு சூரியன் சுற்றி சுற்றி வருகிறது.
***
போர்வைக்குள் பிடிபடாத குளிர்மை.
அமைதிக் குளியலில் சொட்டியப் பூரித்தல்
நேற்றையப் பழக்கத்தால் கமல்கிறது.
கடமையாக வாய்த்த அதேக்குளியலில் அமைதி சிறைபட்டும் கிடக்கிறது.
சுத்தீகரிகப்பட்ட சுகாதாரக் பருகலில் பாதுகாப்பு வாடையின் நெடி தெரிகிறது.
மலர்களைக் கைப்பற்றிய மனம் அதன் வாசனையை தக்க வைத்தது.
பற்றிய குறிப்பு கிடைக்காமல் இருக்கும் பொழுது
தேற்றவாளர்களின் ஆதுரங்கள்
தேடலையடையாமலையே
இருக்கிறது.
தட்டுத்தடுமாறி நிதானப்பட்ட
ஒன்றை
பலவற்றிற்குள்
இனம் காணாத தவிப்பு
எப்பொழுதும்
இருந்து கொண்டே இருக்கிறது.
****

