-ஆதிரை தமிழ்
வீட்டிலிருந்து கிளம்பி ஒரு மாதம் ஆகிவிட்டது. கிளம்பும்போதே சத்யன்
சில திட்டவட்டமான கட்டளைகளை தனக்கே விதித்துக் கொண்டான்.
முதலில் கைப்பேசியை அணைத்து வீட்டிலேயே தன் அறை அலமாரியில்
வைத்து பூட்டி விடுவது, கையில் இருந்த ஐயாயிரம் சொச்சம் தவிர வங்கி
அட்டைகள் எதையும் எடுத்துகொள்ளக் கூடாது, அவனாக வேண்டியவர்கள்
யாரையும் தொடர்பு கொள்ளவதில்லை, எல்லாவற்றையும் விட மிக
அவசியம் என்றால் மட்டுமே பேசுவது என்று. திருவண்ணாமலை வந்து
இரண்டு வாரங்கள் ஆயிற்று. ஆரம்பத்தில் சில ஆஸ்சிரமங்களில்
தங்கினான் ஆனால் அவற்றுக்கு என்று சில வரைமுறைகளும்
கட்டுபாடுகளும் இருந்தன. சத்யன் அவனிருந்த மனநிலையில் எங்கும்
பொருந்தி போக முடியமால் வெளியேறி ஒரு மடத்தில் குறைந்த
வாடகையில் தங்கிக் கொண்டான்.
இன்று கோவில் நகரங்கள் மாபெரும் வணிக நகரங்களாகி விட்டது. இருந்தாலும் அலைந்து திரிபவர்களுக்கும் அமர விரும்புகளுக்கும் அதே நகரில் இடமும் இருப்பது அவனை வியப்பில் ஆழ்த்தியது. மடத்தின் பொறுப்பில் இருந்த எழுபது வயதை நெருங்கும் தாத்தா அவனிடம் எதுவும் கேட்கமால் ஒருமுறை ஏறிட்டு பார்த்துட்டு அறையை காண்பித்தார். நான்கு நாட்களுக்கு பிறகு அவனிடம் “ஊரிலே கடன் அதிகமாயிடுச்சா” என்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு சத்யன் வாய்விட்டு சிரித்து “இல்லை” என்று தலையை ஆட்டினான். அவரும் உடன் சிரித்து
“அப்படினா சரி..நீ எவ்ளோ நாளுனாலும் இங்க இரு..பைசா இல்லேனாலும்
பரவலா ..நான் பாத்துக்குறேன் ..என்ன இப்போ” என்றார். அவனை போல
ஆயிரம் பேரை பார்த்து இருப்பார் என எண்ணினான். பகலில் படுத்து உறங்க குளிக்க ஒரு இடம். இரவு முழுக்க நகரை சுற்றி வருவான். ஆள் அதிகம் இல்லாத இடத்தில் அமர்ந்து எதிரே தெரியும் மலையை உற்று
பார்த்துக்கொண்டு இருப்பான். வந்த நாளில் இருந்தே உணவுக்கு என்று ஒரு காசு செலவு செய்யவில்லை. பசியோடவும் இருந்ததில்லை. எப்படியோ யாரோ உணவளித்து விடுவார்கள். குறைந்த பட்சம் இரு
வாழைப்பழங்களாவது கிடைத்துவிடும்.
மாலை மணி நான்கு. சத்யன் எழுந்து வழக்கம் போல தான் உடுத்தி இருந்த ஆடையை துவைத்து குளித்து முடித்தான். நேத்து காயப் போட்டு இருந்த ஜிப்பாவையும் வேட்டியும் அணிந்து கொண்டான். அவன் எடுத்து வந்து இருந்த அவனுடைய உடைகள் இப்படி அலைந்து திரிவதற்கு ஏற்றார் போல் இல்லை என்று எண்ணி இரண்டு ஜிப்பாக்களை வாங்க யோசித்த தினத்தில் வரிசையாக படுத்து இருந்த சாமியார்கள் மத்தியில் இவன் அமர்ந்திருந்தான்.
ஒரு கும்பல் அங்கிருந்தவர்களுக்கு கலர் வேட்டிகளை தானம் வழங்கியது.
இவனிடமும் ஒன்று கொடுக்கப்பட்ட போது ஒன்றும் புரியாமல்
விழித்தவனை பார்த்து, கொடுத்த பெண் ஏதோ தவறு என்று உணர்ந்து
கையை பின்னுக்கு இழுத்தாள். இவன் சுதாரித்து கையை நீட்டி
புன்னகையுடன் பெற்றுக்கொண்டான். அம்மாதிரி வந்த இரண்டு காவி
வேட்டிகளுக்கு ஏற்ற மலிவுவிலையில் இரண்டு ஜிப்பாகளை வாங்கிக்
கொண்டான். ஆடையை அணிந்து அங்கிருந்த கண்ணாடியில் தன்னை
பார்த்தான். ஒரு மாதத்திற்கு மேலான தாடியும் கலைந்த தலையுமாக
தெரிந்தவனை யார் என்று உள்ளிருந்த ஒன்று திகைப்போடு நோக்கியது.
வெளியேறிய நாளை சத்யன் நினைவு கூர்ந்தான். ஒரு நொடியில்
அகல்வதற்கு எந்த ஒரு அதிர்ச்சியும் துயரமும் அவன் வாழ்க்கையில் நடந்து விடவில்லை. ஆனாலும் மெதுவாக ஏதோ ஒன்று வந்துக்கொண்டும் நடந்துக்கொண்டும் இருந்தது. அன்று நடுஇரவு இரண்டு மணியை தாண்டியும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தவனுக்கு சுவர்களும் மேற்கூரையும் அழுத்தி மூச்சு திணறுவதாக தோன்றியதும் கிளம்பிவிடலாம் என்று நினைத்தான். அந்த எண்ணம் வந்ததுமே மனம் முதலில் உணர்ந்தது விடுதலையை தான். மூச்சை இழுத்து சீராக்கி சில நிமிடங்கள் அமர்ந்து இருந்தவன் செய்ய வேண்டியவைகளை தீர்மானித்து கைகளுக்கு சிக்கிய நாலு டிரஸை பையில் வைத்து அறைக்கதவை திறந்தான். அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. மூன்று நண்பர்கள் சேர்ந்து தங்கி இருந்தார்கள். பக்கத்து அறையில் ஒருவன் தூங்கிக் கொண்டு இருந்தான், இன்னொருவன் இரவு பணிக்கு சென்று இருந்தான். தான் இல்லாததை அவர்கள் அறிய குறைந்த பட்சம் நான்கு நாட்களாவது ஆகும் என்று எண்ணினான். கீழே வந்ததும் குளிர்க்காற்று காதுமடல்களை வருடியது. சட்டென்று கண்களில் நீர்க்கோர்த்து கொண்டதும் அம்மாவின் முகம் நினைவில் ஆடியது. வலிந்து அந்நினைப்பை தள்ளி மைய சாலையை நோக்கி விரைந்தான்.
கோவில் வெளி பிராகாரத்தை முழுமையாக சுற்றி வந்தான். இத்தனை
நாட்களில் ஒருமுறை கூட உள்ளே மூலவரை தரிசிக்கவில்லை. வெறுமே
நாலு கோபுரம் வழியாகவும் சென்று சுற்றி இருட்டியதும் வெளியேறி
விடுவான். இந்த 38 வயதுவரை பக்தியோ ஆன்மீக தேடலோ அவனுக்கு
இருந்ததில்லை. சிறுவயதில் குடும்பத்துடனும் அதன் பிறகு நண்பர்களின்
விருப்பத்தின் பேரிலும் சென்றால் தான் உண்டு கோவில்களுக்கு. இப்போது
எல்லாம் அம்மாவின் தொடர் வற்புறுத்தலில் வருடத்துக்கு ஒரு தடவை
குலத்தெய்வ கோவில் செல்வதோடு சரி. அதனாலேயே அவனுடைய இந்த
கோலம் அவனுக்கே சமயத்தில் கேலியாக இருக்கிறது. கிரிவலப் பாதையில் எப்போதும் கூட்டம் இருந்தாலும் ஆள் அதிகமும் இல்லாத இடங்களும் இருக்க தான் செய்கிறது. அப்படியான ஒரு இடத்தை தேர்ந்து மலையை பார்த்தவண்ணம் விடிய மட்டும் அமர்ந்து விடுவான் சத்யன். அன்று நடுநிசியை தாண்டியும் மக்கள் சென்று கொண்டிருந்தார்கள். தன் அருகில் யாரோ ஒருவர் வந்து அமர்வதை உணர்ந்து அவன் திரும்பி பார்த்தான். அதே வெளிநாட்டு பெண். ஏற்கனவே இருமுறை அவளை சுற்றுப் பாதையில் பார்த்து இருக்கிறான். அவள் அவனை பார்த்து சிரித்தப்படியே “அன்னா” என்று கையை நீட்டினாள். அத்தனை ஒளி பொருந்திய கண்களை அவன் பார்த்ததில்லை. பதிலுக்கு கையை நீட்டி “சத்யன்” என்றான். “அப்போ உனக்கு பேச்சு வரும்” என்றாள். அவன் சிரித்ததும் “சிரிக்கவும்” என்று தமிழில் சொல்லிவிட்டு உடலை எளிதாக்கினாள். அவன் பார்ப்பதை உணர்ந்து “நாங்க இரண்டு தலைமுறையா பாண்டிச்சேரி ஆரோவில் வசிக்கும் பிரான்ஸ் குடிகள்..அதனால உன்னை விட சிறப்பா எனக்கு தமிழ் வரும். அதைவிட நல்ல தூய கெட்ட வார்த்தைகளும் தெரியும்” என்று சொல்லி அவனை கேலியோடு பார்த்தாள். அவனுக்கு அவள் ஒருமையில் பேசுவது அந்த தருணத்தில் அவ்வளவு பிடித்தது. கொஞ்ச நேரம் கழித்து அன்னா “வா..நடப்போம்..டீ குடிக்க தோணுது” என்றாள். மறுக்க முடியாத அழைப்பு
சத்யன் எழுந்து உடன் சென்றான். டீயை குடித்து இவனின் கப்பையும் வாங்கி குப்பையில் போட்டு பணமும் தந்து வெளிய வரும் வரை அவள் ஒன்றும் பேசவில்லை. பிறகு நடந்துகொண்டே அவள் “நான் ஒரு பத்து வருடமாக இங்க வந்துட்டே இருக்கேன். ஏது என்னை இழுக்குதுனு எனக்கு தெரியாது. ஆனா ஒவ்வொரு முறையும் கடும் பசியில் அம்மாவை தேடும் குழந்தையை போலதான் நான் இங்க வருவேன் ..இந்த நகரமும் என்னை அம்மாவை போல தான் அணைத்துக் கொள்ளும், சலிச்சு பிள்ளையை இறக்கி விட்டுட்டு கொஞ்ச நேரத்திலேயே தேடி மறுபடியும் மடியில் இருத்திக் கொள்ளும் ..இந்த ஆடலை தான் நாங்கள் ஆடிக்கொண்டிருக்கிறோம் ஆண்டுக்கணக்காக” என்றாள். தொடர்ந்து “இத்தனை காலத்தில் ஒரேஒரு முறை மட்டுமே சன்னதிக்கு சென்று இருக்கிறேன் ..அதன் பிறகு எனக்கு தோன்றியது, வெளியே இல்லாத எதுவும் உள்ளே இல்லை என்றும் உள்ளே இருப்பது தான் இங்கே எங்கும் உள்ளது என்றும்..”. சாலையோர நடைப்பாதையில் அமர்ந்துக் கொண்டர்கள் இருவரும். அங்கங்கே சிலர் உட்கார்ந்தும் படுத்தும் இருந்தார்கள். சுற்றியும் ஒரு பார்வை பார்த்துவிட்டு “ நீ சொல் சத்யன்” என்றாள். அவன் சிறிது நேரம் கழித்து “எனக்கு சொந்த ஊர் விருதுநகர் ..அப்பா இரண்டு வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். அம்மாவும் தங்கையும் உண்டு..தங்கை திருமணமாகி டெல்லியில் இருக்கிறாள். அவளுடைய இரண்டாவது பிரசவத்துக்காக அம்மா உடன்போய் இருக்கிறார் ..நான் படிச்சது மதுரைல. காலேஜ் முடிச்சுட்டு அங்கேயே இரண்டு வருஷம் வேலை பார்த்தேன்..அப்புறமா சென்னைக்கு வந்து ஒரு எம்என்சி கம்பெனியில் H.R பிரிவில் வேலை ..நல்ல சம்பளம்” என்றான்.
அன்னா அவனை உற்று பார்த்து மெல்லிய புன்னகையோடு “காதல்..கல்யாணம்..? உங்க ஊரிலே சாதாரணமா இந்த வயசிலே இது எல்லாம் முடிஞ்சு இருக்குமே” என்றாள். அவன் தயங்கி “முதல் காதல் கல்லூரியில் ஆரம்பித்து நாலு வருஷத்தில் முடிந்தது. அந்த பிரிவு கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது..மீள சில வருடங்கள் தேவையா இருந்தது எனக்கு. அப்புறமா இப்போ ஒரு காதல் உறவில் இருக்கேனு நினைக்கிறேன்” என்றான். கிண்டலாக “ இருக்கியா ..இல்லே..முடிஞ்சுதா” என்றவளை நோக்கி “அநேகமா முடிஞ்சு இருக்கும் இந்நேரம்” என்றான். அன்னா வெடித்து சிரித்தாள். பிறகு “அதான் இந்த இன்சென்ட் துறவு இல்லையா? எனக்கு 35 வயதாகிறது சத்யா..என்னோட 15 வயதில் இருந்து ஆண் நண்பர்கள் உண்டு .. இரண்டு வருடத்திற்கு மேல் நீடித்தவர்கள் என்று யாருமே கிடையாது..ஒருவன் இருந்தான் ஆனா அவன் இறந்து விட்டான்..ஆரம்பித்து இரண்டே தினங்களில் முடிந்த உறவு எல்லாம் உண்டு..காதல் என்று நீங்கள் சொல்லும் அல்லது நம்பும் விஷயத்தில் ஆண்டுக் கணக்கில் என்ன இருக்கிறது என்று எனக்கு புரிவதில்லை”
என்றவளிடம் சத்யன் ஒன்றும் சொல்லவில்லை.
“நான் ஒரு ஆர்கிடெக்ட் சத்யா..பிரான்ஸில் தான் படிச்சேன். கலைகளின்
தாயகம்னு பிரான்ஸை சொல்லுவாங்க. கட்டிடக்கலைக்கும் அது
முன்னோடி. படிப்பு முடிஞ்சதும் உடனே ஒரு நிறுவனத்தில் வேலையும்
தயாராக இருந்தது. ஆனா எங்க பேராசிரியர் அடிக்கடி ஒண்ணை
சொல்லிட்டே இருப்பார். கட்டிடக்கலையில் எவ்வளவு பிரமாண்டம்
இருக்குகோ அதே அளவுக்கு நுணுக்கமானவைகளும் உண்டுனு. அதை
இந்தியாவில் உள்ள கோவில்களில் அதிகமா காண முடியும்னு சொல்வார்.
அதனால நாங்க நண்பர்கள் சேர்ந்து ஒரு சுற்றுப்பயணம் இந்தியாவில்
மேற்கொண்டோம். ஏற்கனவே தமிழ்நாடும் பாண்டிச்சேரியும் எனக்கு
அறிமுகம் தான் என்பதால் பயணம் உற்சாகமாகவே இருந்தது..எத்தனை
எத்தனை கோவிலுகளும் சிற்பங்களும் ..ஒரு தூணில் இருப்பதை பார்க்கவே ஒரு நாள் போதாது ..வடமாநிலங்களில் ஆரம்பித்து அப்படியே தென்திசை வந்தோம். முக்கியமானவைகள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் கூட மாதக் கணக்கில் நீளும் என்று தெரிந்தப்போது திகைப்புதான் வந்தது. வண்டிகள் போக திணறும் குக்கிராமங்களில் கூட அத்தனை பிரமாண்டமும் கலைநயம் மிக்க சிற்பங்கள் கொண்ட கோவில்கள் இருந்தது. நாங்கள் தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோவிலை வந்து அடைந்து இருந்தோம். அது மலையடிவாரத்தில் இருந்த ஆலயம். மலைமேல் சிவன் உண்டு. அம்மன் ஆலயம் சிற்பங்கள் நிறைந்தது. சோழர்களாலும் பிறகு வந்த நாயக்கர்களாலும் நிர்மாணிக்கப்பட்டது. அதற்குள் அதைபோல நிறைய பார்த்துவிட்டு இருந்தாலும் கண்ணுக்கும் நம் கற்பனைக்கும் அளவில்லா தேவை இருந்தது. அங்கு என்னை கவர்ந்தது மேற்கூரை முழுக்க நிறைந்து இருந்த தேன்கூடு. எல்லாமே மிகப்பெரியவை. “விம்” என்ற முழக்கம் அந்த வளாகம் எங்கும் கேட்டது. அங்கிருந்த ஆழ்ந்த அமைதியில் அந்த இசை நம்மை நாம் அறியா காலத்திற்கு இட்டு செல்லக்கூடியது. அங்கிருந்து நாங்கள் பெங்களூர் செல்வதாக இருந்தது. ஏனெனில் அங்கு ஒரு பன்னாட்டு கட்டிடக்கலை நிறுவனம் கருத்தரங்கம் ஏற்பாடு செய்து இருந்தது. அதில் பங்கேற்க நண்பர்கள் முடிவு செய்தோம். ஆனால் போகும் வழியில் திருவண்ணாமலை செல்ல நண்பன் ஒருவன் விரும்பினான். அவனுக்கு ரமணர் அறிமுகம் ஆகி இருந்தார். உண்மையை சொல்ல வேண்டும்
என்றால் நான் சலித்து இருந்தேன்..போதும் என்றிருந்தது. ஆனால் குழுவில் இருந்த மற்றவர்கள் உடன்பட்டதால் போவதாக முடிவாயிற்று. நாங்கள் சென்ற போது நடு இரவு நெருங்கிவிட்டது. விடிந்து தான் ஆஸ்சிரமத்திற்கு செல்ல முடியும் என்பதால் வண்டியிலேயே சும்மா சுற்றி வந்தோம். ஓரிடத்தில் இறங்கி எல்லோருமே ஏதாவது அருந்த விழைந்து கடைகளை நோக்கி சென்றார்கள். நான் தனியாக கொஞ்சம் தள்ளி பாதி வெளிச்சமும் பாதி இருளும் இருந்த இடத்தில் மலையை பார்த்தவாறு அமர்ந்தேன். திருவண்ணாமலைக்கு இதுவே நான் வருவது முதல்முறை. சுற்றும் பார்த்துவிட்டு வானையும் மலையையும் நோக்க தொடங்கினேன். சிறிது நேரத்தில் பிறைநிலா மலையின் இடதுப்புறத்திற்கு வந்திருந்து …அந்த கணத்தில் நான் பார்த்ததும் உணர்ந்ததும் என்னவென்று இன்று என்னால் சொல்லமுடியாது..உடல் முழுக்க ஒரு பரவசம் போல ஒரு அதிர்வு தொடங்கி நான் மயங்கி விழுந்துவிட்டேன். நீண்ட நேரத்திற்கு பிறகே விழிப்பு வந்தது. பதறிய குரலில் நண்பர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் என்னிடம் விடை இல்லை..அன்று என் கண்களில் வழிந்த கண்ணீரை போல ஆனந்தமான ஒன்றை அதற்கு முன் நான் அனுபவித்ததில்லை சத்யா”
என்றவள் நன்றாக கால்களை நீட்டி அங்கேயே படுத்துக்கொண்டாள்.
மறுநாள் மாலை சத்யன் அன்னா வரச்சொல்லி இருந்த இடத்திற்கு முன்னதாகவே வந்துவிட்டான். விடியும் நேரத்தில் தான் அவள் எழுந்து போலாம் என்றும் மாலை சந்திப்போம் என்றும் சொல்லி சென்றாள். அவன் கொஞ்சம் கூட தூங்கவில்லை என்பதால் நேரே அறைக்கு சென்று படுத்துவிட்டான். எழுந்து குளித்து வெளிய வந்து ஒரு டீயை மட்டும் அருந்தி அங்க வந்து காத்திருந்தான். அவனுக்கு அவளை பற்றி எதுவும் புரியவில்லை என்றாலும் அவள் அருகாமையை மிகவும் விரும்பினான். காதலும் காமமும் இல்லாமல் முதல்முறையாக ஒரு பெண்ணிடம் அவனுக்கு ஈர்ப்பு உண்டாகியது. அதற்கு ஒரு பெயரை இட அவன் முயற்சிக்கவில்லை. மெல்ல இருள தொடங்கிய நேரத்தில் அன்னா வந்தாள். இம்முறை உடன் ஒருவனை அழைத்து வந்திருந்தாள். அவனின் குளிர் புன்னகையை சத்யன் விரும்பினான். மூவருமாக நடக்க தொடங்கி ஒரு ஊடுபாதையில் சென்று மலையின் மேலே ஏற தொடங்கினார்கள். நன்கு அறிந்தவர்கள் மட்டுமே செல்ல முடிந்த பாதை. இவர்கள் ஆஸ்சிரமவாசிகள் என்பதால் பிரத்யேகமாக சில வழிகளும் அனுமதிகளும் இருக்கும் என்று சத்யன் நினைத்தான். ஆனால் எதுவும் கேக்கவில்லை. கால்களை திடமாக ஊன்றி மேலே ஏறினான். வெகு சீக்கிரத்திலேயே மலையின் விளம்பிற்கு வந்து விட்டார்கள். காற்று மிதமாக இருந்தது. அங்கிருந்து நோக்கும் போது சுற்றி இருக்கும் நகரங்கள் ஒளிர்ந்தது. அன்னாவுடன் வந்திருந்தவன் அவளிடம் தலையசைத்தும் இவனிடம் புன்னகைத்தும் விட்டு சற்றுதள்ளி இருந்த பாறைக்குடைவில் சென்று அமர்ந்துக்கொண்டான். சிறிது நேரத்திலேயே அவன் அங்கில்லாதவன் போல் ஆனதை வியப்புடன் பார்த்தான் சத்யன்.
வானில் நட்சத்திரங்கள் மலர்ந்து இருந்தன. காற்றில் குளிர் ஏறிவந்தது. கீழே இருந்து வரும் இரைச்சல்கள் குறைந்தன. இரவு பூச்சிகளின் ஓசையும் மங்க துவங்கியதும் அன்னா சத்யனை அழைத்து சென்று ஓரிடத்தை சுட்டிக் காண்பித்தாள். மகாதீபம் ஏற்றப்படும் இடம். அதிலிருந்து சற்று தள்ளி ஒரு பெரிய பாத தடத்தையும் பார்த்தார்கள். மலையுச்சியில் வெட்டவெளியில் தனிமையில் ஒரு பாத தடம் ..எப்படி வந்திருக்கும்? யாருடையதாக இருக்கும்? இம்மலை நெருப்பு குழம்பாக இருந்து பின் குளிர்ந்ததாக புராணம் சொல்கிறது. அந்த தழலில் கொதிக்கும் அனலில் நின்றிருந்தது மகத்தான ஒன்றாக தான் இருக்க முடியும் இல்லையா என்னும் எண்ணம் வந்தது சத்யனுக்கு. அருகிருந்த கற்களின் மேல் இருவரும் அமர்ந்தனர். அன்னா,
“உனக்கு என்ன குழப்பங்கள் சத்யன்?” என்றாள். அவன் அவளை திரும்பி
பார்த்தான். “உறவுகளை கையாளுவதில் அதில் நீடிப்பதில் என்ன சிக்கல்”
என்றாள். அவன் தயங்கி பின் “எங்கே அதிகமான வலி இருக்கோ அங்கே
தான் திரும்ப திரும்ப காயம் ஏற்படுது” என்றான்.
“அப்போ முதல் தடவை வலிக்கும் போதே ஏன் அங்க மட்டும் வலிக்குதுனு யோசிக்கனும்..மற்ற இடங்களை விட அந்த இடம் நோஞ்சையா இருக்க என்ன காரணம்னு பார்க்கனும்..எப்பவுமே வலியை உற்று கவனிக்க ஆரம்பிச்சாலே பாதியா குறைஞ்சுடும்” என்றாள். மேலும் “இருவருக்கான உறவில் ஒருவர் மற்றவரை முழுசா ஆளவும் வெல்லவும் நினைக்கிறது சரினு நீ நினைக்கிறியா? என்றாள். உடனே அவன் “ஏன் முடியாதா” என்றான்.
“முடியுமா..முடியாதாங்கிறது அப்புறம்..முதலில் ஏன் அப்படி நினைக்கனும்?
இங்கே எல்லாமே அளந்து வரையறை செய்துதான் கொடுக்கப்பட்டுள்ளது.
அப்படி இருக்க எல்லையில்லா பெருங்காதலையும் பேரன்பையும்
எதிர்பார்க்கறது எவ்ளோ அபத்தம்? நீ எல்லைகளே இல்லாதவனா?
கட்டுபாடுகளோ வரையறைகளோ உனக்கு இல்லையா சத்யா?” என்றாள்.
அவன் மெளனிக்கவே தொடர்ந்து “அப்படி ஒரு வரையறையில் இருக்கும் நீ அந்த பக்கமும் அதே வரையறையில், அளவுகளில் இருக்கும் ஒரு
உயிரியிடம் எல்லையில்லாத ஒன்றை எதிர்பார்க்கறது எப்படி சரியாகும்?
நாம பார்க்குற இந்த நட்சத்திரங்களுக்கும் காற்றுக்கும் கூட எங்கேயோ
கணக்கும் அளவும் இருக்கும்..நம்மால் அளவிடமுடியாது என்பதால் அவைகள் எல்லையில்லாதது ஆகிடுமா என்ன?. முடியுமா? முடியாதானு கேட்டே ல அந்த முடியுமா முடியாதாவில் தான் இங்க எல்லாமே துவங்குது..கசப்பு,வஞ்சம், நஞ்சு எல்லாம் ..எத்தனை இனிமையா ஆரம்பித்த உறவுகள் இந்த ஆட்டத்தினால் எவ்ளோ கசப்பில் முடியுது..உனக்கு வெண்படம் டையாகரம்ஸ் தெரியும் தானே..இரு வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணையும் போது, வெட்டும் போது ஒரு குறிப்பிட்ட அளவு தான் அதன் சேர்க்கை இருக்கும். மீதி முழுக்க வெற்றிடம் தான் நிறைந்து இருக்கும். ஒன்றில் மற்றதுடையது எதுவும் இருக்காது ..அது மாதிரி தான் உறவுகள். எந்த உறவனாலும் யாராக இருந்தாலும் ஒரு பகுதி இங்கே வெற்றிடம் தான்.. அதன் அளவு வேறுபாடு இருக்கும் நிச்சயமாக. அது அதன் தீவிரத்தை பொறுத்தது.. முற்றிலும் இணையும் வட்டங்கள் அநேகமா இல்லை..நாம் நம்முடைய முழு வட்டத்தையும் நிரப்ப பேராசைக் கொள்கிறோம். அது வெற்று அகங்காரம்..நல்ல நீடித்த உறவுக்கு அந்த மீதி இருக்கும் தனித்த இடம் ரொம்ப அவசியமாகிறது..அதையும் சேர்த்தே வட்டம் முழுமையாகிறது”. சத்யன் ஒன்றும் சொல்லவில்லை.
பிறகு “ அப்போ மனுஷனுக்கு இங்க எல்லையில்லாததுனு எதுவுமில்லையா? என்றான் இடறிய குரலில் ..அவனை கூர்ந்து பார்த்து “எல்லையில்லாததை விரும்பும், தேடும் நீ இங்கே என்றும் இருக்கும் அளவில்லாத ஒன்றை முதலில் உணர வேண்டும்..அவற்றில் பரந்து விரிந்து உள்ள ஒன்றுதான் உன்னில் அணுவாக ஒரு துளியாக இருக்கிறது..அதை நீ அறியும் கணத்தில் வேறு எதுவும் உனக்கு பொருட்டாக இருக்காது” என்றாள். சத்யன் அவளை நோக்கி தன்
அகத்தை செலுத்திய நொடியில், அன்னா “வேண்டாம் சத்யா…நீ எதுவும்
என்னிடம் சொல்ல வேண்டியதில்லை..” “ஏன்” என்றவனிடம் “என் குரு
ஒருமுறை சொன்னார்..நீ எதுவோ அதுவாகவே ஒருவர் முன் உன்னை
திறந்து வைக்க வேண்டுமானல் அவர் உன்னை முழுதாக ஏற்றுக்கொண்ட
குருவாக இருக்க வேண்டும் அல்லது நீ நம்பும் தெய்வமாக இருக்க
வேண்டும்.. அது அல்லாமல் வேறு ஒருவரிடம் உன்னை திறந்து வைப்பது
உனக்கு துயரத்தையே கொண்டு வரும் என்று”.
விடியலின் ஒளி கீழ்வானில் மெல்லிய தீற்றலாக தெரிய தொடங்கியது.
அன்னா சத்யனை நெருங்கி இறுக அணைத்து “நீ திரும்பி போ சத்யன்..வந்த பாதை உனக்கு தெரியும்ல ..நீ கிளம்பு” என்றாள். அவன் தலையை மட்டும் அசைத்து சிறிது நேரம் வானை நோக்கி விட்டு திரும்பி பாராமல் இறங்கினான்.
000

ஆதிரை தமிழ்.
இயற்பெயர். க. தேவி. சென்னை ஆவடியில் வசிக்கிறேன். இதுவரை கவிதைகளை பற்றிய கட்டுரைகள் திரு. ஜெயமோகன் தளத்திலும், சொல்வனம் மற்றும் கவிதைகள் இதழிலும் வெளிவந்துள்ளது. என்னுடைய சிறுகதைகள் நடுகல், சொல்வனம் மற்றும் தடாரி இணைய இதழ்களில் வெளிவந்துள்ளது.

