–ஆதிரை தமிழ்.

“ஏய் ஈஸே..அந்தப் புள்ள எம்புட்டு நேரமா வந்து திண்ணையிலே உட்காந்து இருக்கு ..நெதமும் இதே பொழப்பாப் போச்சு உனக்கு..அதும் உன்கூட படிக்கிறப் பிள்ளே தானே அது சீக்ரமா கிளம்பி வரல ..இவ என்னமோ புதுப்பொண்ணு படத்துக்கு கிளம்புற மாதிரி கிளம்பிட்டு இருக்கா”..என்று ஈஸ்வரியின் அம்மா உள் வீட்டை பார்த்து கத்தினாள். இரண்டு பக்கமும் திண்ணை வைத்து பாதி வரை செங்கலும் மீதி மண் சுவருமாக கட்டப்பட்ட சிறிய வீடு ஈஸ்வரியுடையது. ஒரு பக்க திண்ணையில் லல்லி என்கிற லலிதாம்பிகை தன் புத்தக பைக்கட்டுடன் அமர்ந்து இருந்தாள். எதிர்பக்க திண்ணையில் ஈஸ்வரியின் அப்பா தவிலுக்கு அதன் வார்க்கட்டுகளை சரிப்பார்த்து கொண்டிருந்தார்.  பக்கத்தில் அவளின் ஆறாம் வகுப்புப் படிக்கும் கடைக்குட்டி தம்பி நாதஸ்வரத்தில் காற்றை உள் இழுப்பதா வெளிய தள்ளுவதா என புரியாமல் அப்பாவை ஒரக் கண்ணால் பார்த்துக் கொண்டு இருந்தான். ஈஸ்வரியுடன் சேர்த்து மூணு பெண் பிள்ளைகள் ஒரு பையன் மொத்தம் ஆறு பேர் அந்த வீட்டில்.  ஊரில் இருக்கும் ஒரு மாரியம்மனுக்கும் எல்லையில் இருக்கும் வெட்டவெளி அய்யனாருக்கும் ஒரே ஆதர்சன வித்வான் ஈஸ்வரியின் அப்பா தான். வித்வான் என்றதும் பட்டுவேட்டி சட்டை அங்கவஸ்திரம் எல்லாம் கிடையாது.  கதர்வேட்டியும் சட்டையும் ஒரு துண்டும் தான். நன்றாக மழிக்கப்பட்ட முகம். நெற்றியில் எப்போதும் சந்தனப்பொட்டு உண்டு. வீட்டில் வறுமை தங்கி விடாமல் இருப்பதற்கு  ஈஸ்வரின் அம்மா பூ கட்டி விற்பதும் ஒரு காரணம்.  விஷேசமும் மூகூர்த்த நாட்களும் இல்லாத சமயத்தில் வீட்டில் உள்ள அனைவருமே பூக்களைத் தொடுப்பார்கள். ஒரு பக்கம் பின்னி கட்டிய சடையுடன் மறுபக்க சடைக்கு ரிப்பனைத் தேடி வெளிய வந்த ஈஸ்வரி லல்லியையும் அம்மாவையும் ஒரே நேரத்தில் முறைத்தாள்.  லல்லி அவளுக்கு ஒரு தெய்வக்குழந்தை சிரிப்பை வழங்கினாள்.  ஒருவழியாக ஈஸ்வரியும் லல்லியும் வாசலுக்கு வரவும்  வீரா என்கிற வீரலட்சுமி சைக்கிளில் வந்து பெல் அடிக்கவும் சரியாக இருந்தது. “இந்தா ..அடுத்த ஆளு வந்தாச்சு” என்றுச் சொல்லி சிரித்தப்படியே வந்த ஈசுவின் அம்மா மூன்று பங்காக வைத்திருந்த முல்லைச் சரத்தை மூவருக்கும் தலையில் வைத்து விட்டாள். “ஒழுக்கமா பள்ளிகூடம் போனமா வந்தமானு இருக்கனும் ..எங்கயாம் நின்னுட்டு வாயிப் பேசிட்டு பாராக்கு பார்த்தா…அம்புட்டு தான் சொல்லிட்டேன். நல்லா மார்க்கு வாங்கினா அடுத்த வருசமும் பள்ளிக்கூடம் போகலாம் இல்லேனா பஞ்சு மில்லு தான். நெனப்புல வைச்சுக்கோ ஈசு. ம்.. போய்ட்டு வாங்க” என்றாள்.

பெருமாள்பட்டியில் இருந்து புதூர் மூன்று கி.மீ தூரம். புதூரில் இருக்கும் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் தான் மூவரும் பத்தாம் வகுப்பு படிக்கிறார்கள். 3 கி.மீ என்றால் நேரான தார்ச்சாலை வழி கிடையாது. அரைக் கிலோமீட்டர்க்கு சீமை முள் காடு இருக்கும்.  அதன் பிறகு வயல் வரப்பில் நடந்து பாறை மட்டுமே இருக்கும் மேட்டை ஏறி கடக்க வேண்டும். புத்தகப் பைக்கட்டுகளை சைக்கிளில் வைத்து விட்டு மூவருமாக சேர்ந்து தள்ளி ஏறுவதற்குள் ஒரு வழியாகி விடுவார்கள். பள்ளிக்குள் நுழையும் போது வியர்வையில் உடல் நனைந்து விடும். மழைக்காலங்களில் பாறை மேடு சறுக்கி விடும் அபாயம் உண்டு. மேலும் ஆளைத் தூக்கும் ஆடி மாதக் காத்து பெரும் அயர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்று. ஆனாலும் அவர்கள் அவ்வழியே தான் ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் சென்றாக வேண்டும்.

ஆரம்பக் கல்வியை பெருமாள்பட்டியில் முடித்து ஆறாம் வகுப்புக்கு புதூர் வந்தப்போது பதற்ற நிலையில் இருந்தனர். பள்ளியின் முகப்பு வளைவில் பெரிய எழுத்துக்களில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி புதூர் என்று இருப்பதை பார்க்கும் போதே வயிற்றில் ஏதோ பிசைய ஆரம்பித்து விடும்.  தினமும் தயங்கி தயங்கி தான் பள்ளிக்கு வருவார்கள்.  மொழிப் புரியாத வேறு ஏதோ கிரகத்திற்கு வந்தவர்களைப் போல ஒருவர் கையை ஒருவர் விடாமல் ஒட்டிப்படியே திரிந்தார்கள். சுற்றிலும் இருக்கும் கிராமங்களில் இருந்து வந்திருந்த பிள்ளைங்களும் இவர்களை ஒத்தவர்கள் தான். இங்கே வந்து பெருக்கலும் வகுத்தலும் கற்றுக்கொண்டவர்கள் உண்டு.  மெல்ல அங்கிருந்த சூழலைப் புரிந்துக்கொண்டு பயம் தெளிந்து புதிய சிறகு ஒன்றை அடைந்தப் போது மூவருக்குள்ளும் மகிழ்ச்சி நிறைந்து இருந்தது. இப்போது பள்ளிக்கூடம் அவர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனிப் போல. வாயில் போட்டு உருட்டிக் கொண்டு அதன் துவர்ப்பைத் தாண்டியும் இனிப்பை ருசிக்கக் கற்றுக்கொண்டவர்கள். இப்பள்ளியில் இருந்து ½  கி.மீ தூரத்தில் ஆண்கள் படிக்கும் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதாவது பத்தாவது வரை ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியாகவும் +1, +2 இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியாகவும் இருந்தது அது. அடுத்த வருடம் அங்கே செல்லும் கனவோடும் மனதில் குறுகுறுப்போடும் இருந்தவர்களுக்கு பேரிடியாக வந்து விழுந்தது அச்செய்தி. அவர்கள் படிக்கும் பெண்கள் பள்ளியிலேயே +1, +2 தொடங்கப்பட இருப்பது தான் அந்த இடி. தங்களின் துரதிருஷ்டத்தை எண்ணி மனம் புழுங்கியவர்களில் லல்லிக்கு முதலிடம்.  அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. படிப்பை பொறுத்தவரை ஈஸ்வரியும் வீராவும் முதல் பத்து இடங்களுக்குள் வந்துவிடுவார்கள். லல்லி எப்போதுமே அவரேஜ் தான். மற்ற பாடங்களை விட இந்த ஆங்கிலமும் அறிவியலும் அவளை பயமுறுத்தின. மூச்சை இழுத்து பிடித்து 50 க்குள் வாங்கிவிடுவாள் அவற்றில். அதற்கு மேல் எதிர்பார்த்தால் மூச்சை விட்டுவிடுவாள் என்பதால் வீட்டில் படிப்பில் அத்தனை கெடுபிடி பண்ணுவதில்லை. அதனால் அவளும் அலட்டிக்க மாட்டாள். அவளின் அப்பாவிற்கு தனியார் பஞ்சு மில்லில் வேலை. நிலையான வருமானம். அவளுக்கு ஒரு அண்ணனும் தம்பியும் உண்டு. வீட்டின் ஒரே பெண் பிள்ளை என்பதால் சலுகைகளும் செல்லமும் கூடுதல். அவளின் மேற்ப்படிப்பை பற்றி குடும்பத்தில் எந்த பேச்சும் இருந்ததில்லை. ஒரே பேசு பொருள் திருமணம் தான். அதைப் பற்றிய உரையாடல்களே எப்போதும். லல்லிக்கு இவை எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தும். எப்படியாவது தன் எதிர்ப்பை திருமணத்திற்கு காட்டிவிட விரும்பினாள். அதற்காக மூவரும் சேர்ந்து எடுத்த தீர்மானம் யாரையாவது ஒரு பயலை காதலிப்பது என்பது. அது சுலபமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்ததே முக்கிய காரணம். அதற்கு ஒரே வழி இருபாலர் படிக்கும் பள்ளிக்கு மேற்படிப்புக்குச் செல்வது. அதற்கான முன் வேலைகளை இப்போதே துவங்கி விட்டார்கள். முதலில் ஒரு பையனை தேர்ந்து எடுக்க வேண்டும். ஈஸ்வரி தான் அந்த யோசனையை சொன்னாள். இவர்களின் பள்ளி மைதானம் தான் பெரியது. அதனால் விளையாட்டு போட்டிகள் இரு பள்ளிக்கும் சேர்த்து இங்க தான் நடக்கும். அப்படியான நேரத்தில் தேடலை வைத்துக்கொள்ள முடிவுச் செய்தார்கள். ஒவ்வொரு போட்டியின் போதும் போய் நின்று வெயிலில் காய்ந்து வந்தார்கள். போகப் போக வீரா கடுப்பானாள். ஒருவனை இவர்களுக்கு பிடித்தால் லல்லிக்கு பிடிக்கவில்லை. அவளுக்கு பிடித்தவனை இவர்கள் ஒப்பவில்லை. கடைசியாக ஒருவனை லல்லிக்கு மிகவும் பிடித்தும் போய்விட்டது. எந்த போட்டியிலும் கலந்துக்கொள்ளாமல் இவர்களைப் போலவே வாயை பார்த்துக்கொண்டிருந்தவன். மற்ற இருவருக்கும் அவ்வளவு சம்மந்தமில்லை என்றாலும் லல்லி பிடிவாதமாக இருந்தாள் காரணம் ஒன்றே தான் அவனுடைய சிரிப்பு. வீரா கொதித்துப் போய் “ஏலா..சிரிப்புல என்ன கிடக்கு.ஒரு போட்டில கூட விளையாடலை சோணங்கி மாதிரி நின்னுட்டு இருக்கான். அவனப் போய் சொல்ற” என்றாள். அதற்கு லல்லி வேகமா “கூமுட்டை மாதிரி பேசாதலே..சிரிக்கான் ல அதுபோதும். அதும் இல்லாம தெத்து பல்லு வேற. சிரிக்கும் போது பாரு” என்றாள். வீரா அவளை விட்டு ஈஸ்வரியை முறைத்தாள். அவள் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டாள். ஒருவழியாக அவனையே முடிவு செய்தார்கள். லல்லியின் தம்பியை வைத்தே அவனின் பெயரையும் வகுப்பையும் அறிந்துக் கொண்டர்கள். இன்னும் ஒருமுறை கூட பேசியதில்லை. அப்படியான ஒரு தருணத்தில் தான் இப்படி ஒரு வரலாற்றுப் பிழை நேர்ந்து விட்டது.

மதியஉணவு இடைவேளை முடிந்து வரும் முதல் வகுப்பே அறிவியல் பாடத்திற்கு தான். அது குறித்து லல்லிக்கு எப்போதும் புகார் உண்டு. “ஏய்..பிள்ளைகளா எந்த கோமூட்டி பய இப்படி வச்சது. சும்மாவே கிரகத்தை நடத்தும் போது தூக்கம் சொக்கும். இதில சோத்தை தின்னுட்டு வந்து உட்காந்து இருக்கும்போது நடத்தினா என்னத்த விளங்கும்” என்பாள். வகுப்பு துவங்கியதும் அரை மயக்க நிலைக்கு சென்று விடும் அவளை உசுப்பி எழுப்புவதே தோழிகள் இருவருக்கும் முக்கிய வேலையாக இருக்கும். அதுவும் இன்று சிறப்பான சம்பவத்திற்கு வாய்ப்பு இருப்பதால் வீராவும் ஈஸ்வரியும் ஆவலோடு இருந்தார்கள்.  ப்ராட்டிகல் நோட்டுகளை எல்லோருமே டீச்சரின் மேஜை மேல் வைத்தாகிவிட்டது. கட்டக்கடைசியாக லல்லியும் வைத்தாள். லல்லிக்கு ஒரு கோடு கூட வளையாமல் போட வராது. பெரும்பாலும் அவளின் ஆய்வு நோட்டுகளில் இவர்கள் இருவரும் தான் படம் வரைந்து கொடுப்பது. சென்ற முறை அது ஆசிரியைக்கு தெரிந்து மிக கண்டிப்பாக அழைத்து சொல்லி விட்டார்கள். லல்லிக்கு வரைந்து கொடுத்தால் மூவருக்குமே கடுமையான தண்டனை உண்டு என்று. அதனால் லல்லியே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். சூரியகாந்தி தண்டின் குறுக்கு வெட்டு தோற்றத்தை பலமுறை குறுக்கும் நெடுக்கும் வெட்டியதுப் போல வரைந்து வைத்திருந்தாள். அதைவிட நோட்டை அத்தனை துணிச்சலோடு மேஜையில் வைத்துவிட்டு வந்த அவளை எண்ணி திகில் அடைந்தார்கள் இருவரும்.  டீச்சர் வந்ததும் முதலில் எடுத்ததே லல்லியின் நோட்டை தான். அவர்கள் முகத்தில் தோன்றிய ஒன்றை என்னவென்று கண்டுபிடிப்பதற்குள் நோட்டும் லல்லியும் வராண்டவைத் தாண்டி பள்ளி மைதானத்திற்குள் சென்று விழுந்தார்கள். ஈஸ்வரியின் முகம் வாடியதைக் கண்டு வீரா “ ஏலே நீ எதுக்கு சுணங்குற. அவ அதுக்கு எல்லாம் கவலப்படமாட்டா. இன்னும் செத்த நேரத்துல அவள மாதிரியே வெளிய வந்த புள்ளைங்க கூட சேர்ந்து சினிமா கதை பேசிட்டு பாட்டுக்கு பாட்டு நடத்திட்டு இருப்பா. வேணுமின்னா வந்ததும் நீயே கேளு. சும்மா ..பாடத்தை கவனி டி” என்றாள். வீரா அப்படிதான். யதார்த்த நிலையில் இருப்பவள். சீக்கிரத்தில் உணர்ச்சிவசப்பட மாட்டாள். வீரா விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவள். பெருமாள்பட்டியின் எல்லையில் இருக்கும் தோட்டத்தில் அவளின் வீடு. அவளுக்கு ஒரு அண்ணன் உண்டு. தென்னை மரங்கள் சூழ்ந்த பம்புசெட்டில் நேரம் போவது தெரியாமல் விழுந்து கிடப்பதே தோழிகள் மூவருக்கும் விருப்பமான பொழுதுப்போக்கு. சமீபமாக வீராவின் தலைமேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.  அது அவளின் அத்தை ஆந்திராவில் வட்டிக்கடை நடத்தும் தன் மகனுக்காக அவளை கொத்திக் கொண்டு போக காத்திருந்தது தான். ஆனால் வீராவின் அப்பா அவளுக்கு ஒரு வாக்கு அளித்து இருக்கிறார். அதாவது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் மேலே படிக்க வைப்பதாக. அவள் அதை இப்போது கெட்டியாக பிடித்துக் கொண்டு இருக்கிறாள்.

அறிவியல் முடிந்ததும் அடுத்தது பாட்டு வகுப்பு. மொத்த பள்ளிக்கூடத்திலும் ஒரு மாணவி கூட வெறுக்காத, ஒரு மாணவியை கூட முகம் சுளிக்காத ஒரே ஆசிரியை பாட்டு டீச்சர் சாரதா தான். சமயங்களில் ஆசிரியர் பற்றாக்குறையால் ஆறாம் ஏழாம் வகுப்புகளுக்கு சமூகஅறிவியல் டீச்சராகவும் அவர்களே வருவதுண்டு. கொண்டைப் போடாத ஒருவர் அவர் மட்டுமே பள்ளியில்.  நல்ல பெரிய கண்கள். கண்ணாடி அணிந்து இருப்பார். வயது முப்பதுக்கு மேல் இருக்கும் திருமணம் ஆகாதவர். அதனால் தான் மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் நடந்துக் கொள்ளுவதாக லல்லி அடிக்கடி சொல்லுவாள். எந்த இசைக்கருவியும் இல்லாமல் அவர் பாடும் பாரதியார்ப் பாடல்கள் பள்ளியில் பிரசத்தி. பக்கத்து வகுப்பில் பாடத்தை நிறுத்திவிட்டு மாணவிகளோடு ஆசிரியர்களும் சேர்ந்து கேட்ட நிகழ்வுகள் உண்டு. ஒருமுறை பள்ளி ஆண்டுவிழாவுக்காக ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தி “அழகு மலர் ஆட” என்றப் பாடலை நடனத்திற்காக தேர்ந்து எடுத்து இருந்தாள். ஒத்திகை அறையில் ஒலிநாடா சிக்கிக் கொள்ள சாரதா டீச்சர் முழுப்பாடலையும் பாடினார். லேசாக கண்களை மூடியபடி பாடலில் ஒன்றிப்போய் பாடி முடித்ததும் பிள்ளைகள் பலமாக கரகோஷம் செய்தார்கள். ஒன்றிரண்டு ஆசிரியைகள் கண்களை துடைத்துக் கொண்டார்கள். அன்றிலிருந்து  அப்பாடலை எப்போது கேட்டாலும் சாரதா டீச்சர் பாட்டு என்றே ஆகிவிட்டது. பத்தாம் வகுப்பு துவங்கியதில் இருந்தே வாரத்தில் இரு வகுப்புகள் இருக்கும் பாட்டு வகுப்பின் நேரத்தை மற்ற பாடத்தின் ஆசிரியைகள் எடுத்துக் கொண்டார்கள்.  அது மாணவிகளிடம் சலிப்பையும் முணுமுணுப்பையும் ஏற்படுத்தவே வாரத்தில் ஒரு வகுப்பை கட்டாயமாக்கினார்கள். இரண்டு வாரங்கள் அவர் வகுப்புக்கு வரமால் இருந்த போது ஈஸ்வரி தான் அதன் காரணத்தை வந்து சொன்னாள். சாரதா டீச்சர்க்கு கல்யாணமாம். அவள் அப்பா தான் தவில் நாதஸ்வரம் வாசிக்க சென்றிருந்தார். சிறிது நேரத்தில் முழு வகுப்பும் பற்றிக்கொண்டது. லல்லி “ஏம்லே..பார்த்தியா டீச்சர் ஒத்த வார்த்தை நம்ம கிட்ட சொல்லலையே” என்றாள். வீரா “ஆமா இவ ஒரு பெரிய மனுஷி சொல்லுவாங்க..போடி வேலைய பாரு” என்று அடக்கினாள்.  விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய பாட்டு டீச்சரின் முகம் மலர்ந்து இருந்தது. ஸ்டிக்கர் பொட்டுக்கு பதிலாக நல்ல பெரிய சாந்து பொட்டு வைத்திருந்தார்கள். வகுப்பில் கலகலப்பு கூடியது. ஒரு மாசம் சென்றிருக்கும் பாட்டு டீச்சர் மறுபடியும் விடுப்பில் சென்றார். இம்முறை நீண்ட விடுப்பு. இரண்டு மாதங்களுக்கு மேலே ஆகிவிட்ட போது வகுப்பு ஆசிரியைகளிடம் மாணவிகள் கேட்க முனைந்த போது அவர்கள் அதட்டி அமர வைத்தார்கள். இன்று அவர் பள்ளிக்கு வந்து இருப்பதாக காலைலே வகுப்பில் பேச்சு இருந்தது. பிள்ளைகள் எல்லோருக்கும் மகிழ்ச்சியாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. பள்ளி மைதானத்தில் இருந்து திரும்பிய லல்லியின் முகம் இருண்டு இருந்தது. ஒரு வார்த்தை கூட பேசாமல் இருவருக்கும் அருகில் வந்து அமர்ந்தாள். ஈஸ்வரி வீராவை பார்த்துவிட்டு அவளிடம் “ என்னடி ஆச்சு” என்றாள்.  அப்போதும் அவள் பேசவில்லை.  வீரா “ஏலா ..உனக்கு என்ன இது புதுசா விடு. அடுத்த தடவை நல்லா வரைஞ்சுடுவே” என்றாள். ஈஸ்வரி அவள் தோளைத் தொட்டு “ஏ..லல்லி” என்றதும் அவள் அழ ஆரம்பித்து விட்டாள். தோழிகள் இருவரும் பதறிப்போய் அவளை விசாரிக்க லல்லி தேம்பிக் கொண்டே சொல்ல ஆரம்பித்தாள். கேட்ட இருவர் மட்டுமல்லாமல் வகுப்பு முழுவதும் உறைந்து போய் நின்றது. சிறிது நேரத்தில் வகுப்பிற்கு பாட்டு டீச்சர் வந்தார்கள். முகத்தில் முன்பைவிட அமைதி கூடியிருந்தது. சிறிய ஸ்டிக்கர் பொட்டு வைத்திருத்திருந்தார்கள். அன்றைய பாட்டு வகுப்பில் மெளனமே நிரம்பி வழிந்தது.

மாலை பள்ளி முடித்து பெருமாள்பட்டிக்கு வரும்வரை ஒத்த வார்த்தையும் பேசவில்லை மூவரும். தோட்டத்திற்கு செல்லும் மண்பாதை வந்ததும் வீரா அமைதியாக சைக்கிளில் ஏறி அமர்ந்துக் காலை ஊன்றி இருவரையும் பார்த்தாள். லல்லி மெதுவாக ஆனால் திடமாக “நான் இங்கிலிஷ்க்கும் சைன்ஸ்க்கும் டியூசன் போக போறேன். நீங்களும் எனக்கு சொல்லிக் கொடுங்கலே. படிச்சிடுவோம்..என்ன” என்றாள். மேய்ச்சல் முடிந்து கடந்துச் சென்ற மாடுகளின் மணியோசை அந்த சாலையில் வெகு தூரத்திற்கு ஒலித்தது.

00

ஆதிரை தமிழ்.

இயற்பெயர்.  க. தேவி. சென்னை ஆவடியில் வசிக்கிறேன். இதுவரை கவிதைகளை பற்றிய கட்டுரைகள் திரு. ஜெயமோகன் தளத்திலும், சொல்வனம் மற்றும் கவிதைகள் இதழிலும் வெளிவந்துள்ளது. என்னுடைய சிறுகதைகள்  நடுகல்,  சொல்வனம் மற்றும்  தடாரி இணைய இதழ்களில் வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *