கார்வேல் நல்லான்,
கால்கள் ஒவ்வொரு முறையும் கடல் மணலில் புதைந்து எழும்போது வெயிலின் உச்சம் புரிந்தது, அரசு கோப்புகளில் கையெழுத்திடுவது, பெரும்புள்ளிகள் உடனான சந்திப்பு என அலுவலகத்தில் எத்தனையோ வேலைகள் இருந்தாலும், இங்கு இந்த நேரத்தில் வருவதுதான் அவசியம் என்று தோன்றியது. சில நாட்களாக செருப்புக்கும் பாதத்திற்கும் இடையே சிக்கித்தவிக்கும் மணலைப்போல இருந்தது என் மனம், எதிரே அலைந்த அலையைப்போல என்னுள் பெரும் ஒலி எழுப்பி பல கேள்வி பதில் என, என்னை தூங்கவிடாமல் அலைக்கழித்தது. எப்பவுமே திடமாக இருக்கும் என் மனம், கேள்விப்பட்ட சில செய்திகளுக்கு காட்சி வடிவம் கொடுத்து, தினமும் புலம்பியது. சற்றுப்பொறு, நானே நிச்சயம் விசாரிக்கிறேன் என்று, என் மனதிற்கு ஆறுதல் சொல்லி, பொசுக்கி எடுக்கும் வெயிலில் வேர்வையை துடைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்திருந்தேன். நல்லவேலை மனைவியின் கட்டளையின் பேரில் தினமும் காலை மாலை என ஒரு மணி நேரம் நடப்பதால், அந்த படர்ந்த கடற்கரையில் சமாளித்து நடந்தேன்.
என் கல்யாணம், பெரும் கலவரத்தினால் தெரியாத ஊரில், புரியாத மொழியில் மந்திரம் சொல்லி, மிக எளிமையாக நடந்திருந்தது. கோவில் பிரசாதங்களை மட்டுமே இரவு உணவாக கொண்டோம், பிறகு படித்துக் கொண்டே பல வேலை செய்து, வாடகைக்கு வீடு எடுத்து அந்த பெரும் போராட்டமாக இருந்த காலங்களை கடந்து, சற்று சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் நாங்கள் தலை தூக்கும் நேரத்தில் தான் எங்கள் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. எங்களின் முதல் குடும்ப விழா என்பதால் அதை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று, நாங்கள் அப்போது குடியிருந்த அந்த சிறிய தெருவில் தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரையும் விழாவிற்கு அழைத்திருந்தோம். வந்த அனைவரும் எங்களிடம் கேட்ட ஒரே கேள்வி
-கண்ணகியா? அது ஒரு விளங்காத பெயராச்சே, வேணாமே வேறு பெயரே கிடைக்கலையா உங்களுக்கு? ஏதாவது ஜோசியத்துக்கு பரிகாரமா, ? ஓஹோ! “க” என்ற எழுத்தில் தான் வைக்கணுமா? அப்போ, கண்மணி ஸ்ரீயின் வையுங்களேன் ! இந்த பேர வைத்தால் ஒரே பிரச்சனை தான் வரும், தயவுசெய்து யோசிச்சு வைங்க. பெரியவங்க கூட இருந்தா பரவால்ல, இதுங்க ஓடிவந்ததுங்கதானே, இதெல்லாம் எங்கே புரிய போகுது. என்று சிலர் காதுபடவே பேசினர், நலம் விரும்பிகளுக்கு காரணம் ஏதும் சொல்லாமல், குழந்தையின் காதில் மூன்று முறை பெருமையாக கண்ணகி, கண்ணகி, கண்ணகி எனக்கூறி தொட்டிலில் சீராட்டினேன்.
எங்களின் காதலை ஊரே எதிர்த்து இருந்த நிலையில், கண்ணகி அக்கா மட்டும் தான் எங்களை காப்பாற்றி, குட்டியாண்டவர் கோயிலில் பதுக்கி பின்பு அவள் தங்கச்சங்கிலியை கொடுத்து வண்டி ஏற்றிவிட்டாள், அந்த உதவி இல்லையென்றால், இந்நேரம் எங்களின் வாழ்க்கை தினசரி நாளிதழில் சிறு செய்தியாக முடிந்திருக்கும். அந்த பெரும் உதவியின் நன்றிக்கடனாக ஓடும் ரயிலில் அன்று இரவே குட்டியாண்டவரை வேண்டிக்கொண்டேன், எனக்கு பிறக்கும் குழந்தை, பெண் குழந்தையாக இருக்க வேண்டும், அதற்கு கண்ணகி என பெயர் சூட்ட வேண்டும் என்று.
என் வேண்டுதலை நிறைவேற்றி 20 வருடங்கள் ஓடிவிட்டது. முதல் முறை சொந்த ஊருக்கு சென்ற போது, கவர்மெண்ட் என்று ஸ்டிக்கர் ஒட்டிய அந்த காரை முதலில் கண்ணகி அக்கா வீட்டின் முன் தான் நிறுத்தினேன். கையில் கம்பும் கத்தியுமாக என்னை விரட்டியவர்களும், எந்த வீட்டின் முன் நின்று வராத சளியையும் வலுக்கட்டாயமாக இழுத்து காரித்துப்பிச் செல்வார்களோ, அதே வீட்டின் முன் ஆளுக்கொரு மனுவை வைத்துக்கொண்டு அசடு வழிய நின்றார்கள்.
முதல் முறை என் மகளின் பெயரை சொல்லும் பொழுது, என்னை ஊரார், உற்றார் முன், பெருமையாக உச்சிமுகர்ந்து குழந்தையை தூக்கிக்கொண்டு, என்னையும் என் மனைவியும் ஆரத்தழுவி அழுது சிரித்தது கண்ணகி அக்கா. பின் குழந்தையை ஆசீர்வதித்து கையில் 50 ரூபாய் கொடுத்தாள். அருவாமனையை கையில் தூக்கி விரட்டிய என் அம்மா, அன்று ஆரத்தி ஏந்தி இந்தக் காட்சிகளை எல்லாம், வெறுக்க பார்த்து நின்றாள்.
-எல்லாம் சரிதான்டா, நான் ஒத்துக்குறேன், நாங்க பண்ணது தப்புதான். ஆனா, குழந்தைக்கு போய் கண்ணகியின் பேர் வச்சிருக்கியே, அது விளங்காத பேர் டா. அந்த முண்டைய பார்த்தியா? அவ தொட்ட ஒரு காரியம் விளங்குமா ? என் மனைவிக்கான காபி டம்ளரை அவள் கையில் கொடுக்காமல் அருகில் வைத்துவிட்டு கண்ணகி அக்காவின் மேல் இருக்கும் வன்மத்தை கொட்டினாள் அம்மா.
-இல்ல அத்தை, அது சாமி பேராம், சில ஊர்ல கண்ணகிக்கு கோவிலே இருக்கு . என்று சமாளித்துக் கொண்டே, நான் பெயர் வைத்த காரணத்தை மாற்றிய என் மனைவியின் கண்கள், முல்வெளியில் பூவை தேடும் பட்டாம்பூச்சி என பல்லாயிரம் முறை துடித்தது.
என் கையில் இருந்த காபி டம்ளரைக் கீழே வைத்து விட்டு என் மனைவியின் கண்களை ரசிப்பதை நிறுத்திக்கொண்டு, அம்மாவின் கண்களை நேராகப் பார்த்து உள்ளிருக்கும் சொந்தங்களின் காதில் கேட்கும்படி பெயர் வைத்த காரணத்தை சத்தமாகவும் திமிராகவும் சொன்னேன். அன்று வீட்டை விட்டு கிளம்பும் வரை கண்ணகி, கண்ணகி என்று, என் குழந்தையை அப்படி கொஞ்சி தீர்த்தேன். குழந்தையின் கையால் என் அம்மாவிற்கு 500 ரூபாய் காசு கொடுக்க வைத்தேன். மாமாவ அடி, தாத்தாவ அடி, பாட்டி அத்தை சித்தி என அனைத்து சொந்தங்களையும், அவள் பிஞ்சு பாதங்களால் தலையிலும், முதுகிலும் எட்டி உதைக்க வைத்தேன். இரவு படுக்கையில், நான் செய்த அத்தனை காரியங்களையும், விளக்கி சொல்லி ஓங்கி சிரித்தாள் என் மனைவி.
சுட்டெரிக்கும் கடல் மணலிலும் கண்ணகி அக்காவின் அந்த ஈரமான அழுகையும், என் மனைவியின் சிரித்த முகமும், இன்றும் பெரும் பசுமையாக இருந்தது. அண்ணார்ந்து பார்த்து சூரியனை முறைத்துக் கொண்டே நடந்தேன், அமைதி நீங்கி மீண்டும் பெரும் குழப்ப நிலைக்கு மாறியது என் மனம்.
அம்மா சொன்னது போல், கண்ணகியின் ஆசிரியர்கள் கூட சிலர் என்னிடம் கேட்டார்கள், ஏன் சார், நல்லா மாடர்னா இருக்கீங்க, ஏன் இந்த பழைய பெயர் வச்சீங்க? சில பெயர் ராசிகள் கூட குழந்தையை ஒழுங்கா படிக்க விடாது என்றனர், அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை, கண்ணகி என்று அவர்கள் காது கிழிய கத்தி கூப்பிட்டேன். கைகளை அசைத்து போய் வருகிறேன் என்று சொல்லி சூரியனை முறைத்தது போல் ஆசிரியர்களை முறைத்துக்கொண்டு, பள்ளியை விட்டு வெளியேறியிருந்தேன்.
சினிமாவில், நகைச்சுவை வில்லன் கதாபாத்திரங்களின் பெயர்கள் கொண்ட பிள்ளைகளும், ஏதோ ஒரு தீய செயலை செய்து, சமுதாயத்தில் வாழத் தகுதியற்ற நபர்களின் பெயரை கொண்ட சாதாரண மனிதர்களும், வழக்கத்தில் இல்லாத வித்தியாசமான பெயர் கொண்டவர்கள் படும் கஷ்டங்களை மனதில் கொண்டு கண்ணகியை மிகவும் தைரியமாக வளர்த்தேன். ஒருவரின் பிறப்பையோ, பெயரையோ, நிறத்தையோ வைத்து யாரையும் ஒரு வட்டத்துக்குள் அடக்காமல் அவரிடம் பழகி அவர் எண்ணங்களையும், நடத்தையும் வைத்தே அவரிடம் பழக வேண்டுமா இல்லையா என்பதை, முடிவெடுக்க வேண்டும் என்றும், எதையுமே பொதுப் பார்வையிலும், குழு பார்வையிலும் நின்று பார்க்காமல், பகுத்தறிந்து முடிவெடுக்க வேண்டும் என்பதையும் அவ்வப்போது, இனிய அமைதியான தருணங்களில் சொல்லி வளர்த்திருந்தேன்.
கடல் எது? வானம் எது? என்று தெரியாத அளவிற்கு எங்கும் பெரும் நீலம் படர்ந்திருந்தது. கொதிக்கும் மணலில், நெடுக பல நிறங்களில் குடைகளை கேடயமாக்கி சூரியக் கதிர்களையும், இந்த சமூகப்பார்வையின் கதிர்களையும் தவிர்த்துக் கொண்டிருந்தனர் காதல் ஜோடிகள்.
இறகுகள் மட்டும் தான் இல்லை எனக்கு, ஆனால் ஒரு ராசாலி பறவை போல் நேர்கொண்ட பார்வையில் மிக நுட்பமாக என் விழிகள் தேடியது, எங்கள் வீட்டின் குடையை தான். போன வருடம் பெய்த பெரும் மழையில் அதே குடையில்தான், நானும் கண்ணகியும் தெருமுனை கடைக்கு செல்வது, மொட்டை மாடியில் துணி எடுப்பது, சூடான காபியை கையில் வைத்துக்கொண்டு பால்கனியில் மழைத்தூறலை தடுத்து கொண்டே, குடைக்குள் சினிமா கிசுகிசு, உலக அரசியல், ஆன்மீகம், விஞ்ஞானம், என் பழைய காதல் கதை என அந்தப் பெரும் மழையில் தினம் ஒரு தலைப்பை அலசி ஆராய்ந்தோம்.
வெறும் மழைக்காக வாங்கிய அந்த குடை, பாவம் இப்பொழுது அடிக்கடி வெயிலில் சுடும் கடற்கரையில் எங்கோ காய்ந்து கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு தேடி வந்தேன்.
குடையின் உள் தோற்றம் மங்கலாக நினைவில் இருந்தாலும், வெளித்தோற்றம் நன்றாகவே நினைவில் இருந்தது. கண்ணகிக்கு மிகவும் பிடித்த நிறத்தில் வாங்கியது, அவள் அம்மா எவ்வளவு மறுத்தாலும் அந்த நிறம் தான் வேணும் என்று அடம்பிடித்து வாங்கினாள். அதற்கு அவள் சொன்ன காரணம் திருவிழாக்களிலும், பீச்ச்சிலும் அப்பா வாங்கி கொடுப்பாரே பஞ்சுமிட்டாய், அதே மாதிரி இருக்குமா, இதே வாங்கிக்கலாம் என்றாள். பெருமிதத்தில் சிரித்துக்கொண்டே என் மனைவியைப் பார்த்து கண்ணடித்துவிட்டு ஆசையாக வாங்கிக் கொடுத்திருந்தேன் .
மூச்சை நன்றாக ஒருமுறை இழுத்து விட்டுக்கொண்டு, பலநூறு குடைகளுக்கு நடுவே எங்களின் பளிச்சென்றகுடைக்கு அருகில் சென்றேன். அனல் காற்று லேசாக குடையை அசைத்த போது சுடிதார் அணிந்திருந்த கண்ணகியின் கால்கள் அலைகளில் நனைந்து கொண்டிருந்தது, காற்று சற்று வேகமாக வீச மேலும் ஜீன்ஸ் அணிந்திருந்த இரண்டு நனைந்த கால்களும் தெரிந்து மறைந்தன.
என் மனம் உண்மை நிலவரம் அறிந்து, ஒரு சிறு கோபமும், சோகமும் ஒட்டிக்கொண்டது. எதை மறைத்து வளர்த்தேன் அவளை? ஏன் என்னிடம் சொல்லவில்லை?, எங்களிடம் பொய் சொல்லிவிட்டு இப்படி கொதிக்கும் வெயிலில் ஒளிந்து கொண்டிருப்பது வேதனை அளித்தது.
கண்ணகிக்கு கல்யாணத்திற்கு முன் கிடாவெட்டி பொங்கல் வைப்பது என வேண்டிக் கொண்டது முதல், அவளுக்காக செவ்வாய் தோறும் விரதம் இருப்பது, அவள் வேண்டியதை கேட்கும் முன்னே செய்து கொடுப்பது, எங்கள் காதல் கதை அதை ஜெயிப்பதற்கு நாங்கள் கடந்து வந்த பாதை, இப்படி எதையுமே மறைக்காமல், ஒரு சிறந்த நண்பனாகவே இருந்து வந்தேன். இருந்தும், என்னிடம் ஏன் இதை மறைக்க வேண்டும்? இதை அவளே என்னிடம் சொல்லி இருந்தாள் நான் மறுத்து இருப்பேனா ? மாட்டேன்.
இந்த நிலையை எப்படி கையாள வேண்டும் என்று யோசித்தேன், அதற்கு முதல் படியாக, தென்னந்தோப்பில் என் அப்பா எங்களை அழைத்து அசிங்கபடுத்தியது போல் இல்லாமல், என் குரலை மெல்லியதாக தாழ்த்தி, அன்பையும், அமைதியும் கலந்து கண்ணகி, கண்ணகி, கண்ணகி என்று மூன்று முறை அழைத்தேன்.
காற்றில் அதிர்ந்து கொண்டிருந்த குடை சற்றும் அதிராமல் நின்றது. குடை மெதுவாக சாய்ந்தது, குடைக்கம்பியை இறுகப் பிடித்த கண்ணகியின் கையில் பச்சை நரம்புகள் புடைத்துக்கொண்டு இருந்தன, முகம் கருத்து வியர்வையால் நனைய தொடங்கியது, என்றுமே என்னை பெருமை கலந்த அன்பினால் பார்க்கும் அவள் கண்கள், சற்று குற்ற உணர்ச்சியிலும், பயத்திலும் திருதிருவென மின்னின.
கலங்கிப் போனேன், அதை நொடியில் மாற்றிக்கொண்டு, ஹாய் என்று அவள் ஆண் நண்பருக்கு கையை நீட்டிக் கொண்டு மற்றொரு கையால் சாய்ந்த குடையை தூக்கிப்பிடித்தேன்.
அப்பா, அப்பா, என்று தயங்கிக் கொண்டே, தன் ஆண் நண்பரை எனக்கு அறிமுகம் செய்தாள். தனியாக சிரிப்பது, வானத்தைப் பார்த்து நடப்பது, தனிமையில் இருப்பது என, காதலுக்கான அத்தனை செயல்களும் சில நாட்களாக கண்ணகியிடம் இருந்தன, அவள் அம்மா என்னிடம் இதைப்பற்றி சொல்லியும் நான் நம்பவில்லை, காரணம் கண்டிப்பாக என் மகள் என்னிடம் தான் முதலில் சொல்வாள் என்று ஆணித்தரமாக நம்பி இருந்தேன். இடையில் என் மனைவியின் தோழி, அரசல்புரசலாக இதைப்பற்றி பேச, ஊரார், உற்றார் மற்றும் அம்மாவின் பேச்சுக்கள் நினைவில் வந்து என்னை சிறிதாக கலங்கடித்தன.
கைகளை குலுக்கி விட்டு, என் பெரும் புன்னகையால் அவர்களை அமைதிப்படுத்தினேன். பின்பு பரஸ்பரம் விசாரித்து விட்டு, வாங்களேன் பக்கத்தில் என் நண்பரின் ஐஸ் கிரீம் பார்லர் இருக்கு என்று இருவரையும் அழைத்தேன். அடித்த வெயிலில் பெட்டியில் இருந்து வெளியே வந்த உடனே உருகத் தொடங்கிய ஐஸ்கிரீம் போல் இல்லாமல், மிகப் பொறுமையாக தொடங்கியது எங்கள் உரையாடல். அவர்களின் நோக்கம், எதிர்காலத் திட்டம் என மிகப் பொறுமையாகவும், அமைதியாகவும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினார்கள். கேள்வி, குழப்ப நிலையிலிருந்து அந்த கணமே தெளிவு பெற்றது என் மனம்.
ஒருவேளை தென்னந்தோப்பில் அப்பா எங்களை கத்தியை காட்டி மிரட்டாமல் ஒரு இளநீரை கொடுத்து, எங்களின் எதிர்கால திட்டத்தையும், நோக்கத்தையும் கேட்டு இருந்தால், இவ்வளவு தெளிவாக நாங்கள் பேசி இருப்போமா என்ற கேள்வி மட்டும் எழுந்து மறைந்தது.
அன்றிலிருந்து மிக வேகமாக இரண்டு மாதத்திற்குள் பெண் பார்ப்பது, மாப்பிள்ளை பார்ப்பது என்று, வேலைகள் மிக வேகமாக நடந்தது. எங்கள் குடும்பத்தின் முதல் திருமணம் என்பதாலும் மாப்பிள்ளை வீட்டார் வேற்று மதத்தினர் என்பதாலும் வரைமுறைகளை கடைப்பிடிப்பதில் சற்று தள்ளாடி போனேன்.
-கண்ணகி கல்யாணத்துக்கு முன் குட்டி ஆண்டவர் கோயில்ல கெடா வெட்டி பொங்கவச்சி என் வேண்டுதல நிறைவேத்தனும், எப்ப போலாம் ? என்று என் மனைவியிடம் விசாரித்தேன்.
ஏதும் பேசாமல் அமைதி காத்தாள் என் மனைவி, நீ பயப்படாத அம்மு, எல்லாம் நல்லபடியா நடக்கும். இதைவிட சிறந்த வரன் அமையாதுனு தோணுது, தெரிஞ்ச முன்று எஸ்.ஐ மூலமாகவும் விசாரிச்சேன், மாப்பிள்ளை குடும்பத்தை பற்றி எல்லாரும் நல்லா தான் சொல்றாங்க… கண்ணகியும் ரொம்ப சந்தோஷமா இருக்கா. என்ன கல்யாணம் மட்டும் அவங்க முறைப்படி செய்யணும்னு கேட்கிறாங்க, அதுக்குஎன்ன, பரவால்ல. நமக்கு என்ன கண்ணகியோட சந்தோஷம் தான் முக்கியம். அவளுக்கு புடிச்சதை சந்தோஷமா செய்வோம்.
வேகமாக நடக்கும் அனைத்தையும் கண்டு சற்று பயந்த என் மனைவிக்கு மொட்டை மாடியில் அமர்ந்து அவள் கையைப் பிடித்துக்கொண்டு தைரியம் சொன்னேன்.
பிடித்த பெண்ணை காதலிப்பது முதல், குழந்தைக்கு பெயர் வைப்பதற்கு கூட இந்த சமூகத்தில் நான் சந்தித்த எந்த பிரச்சனைகள் எதுவும் என் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்றும், எங்கள் காதல், கல்யாண தருணங்களில் நாங்கள் இழந்த அனைத்து சந்தோஷமும் கண்ணகிக்கு கிடைக்க வேண்டுமென்று மிக கவனமாக செயல்பட்டேன்.
வேண்டுதலுக்காக வாங்கி இருந்த கிடா வின் புகைப்படத்தை அனுப்பி இருந்தார் பூசாரி, கொம்பு கோணலாகவும் முதுகு தண்டு தெரிய ஈரப்பற்கள் நிறைந்த ஒரு கிழட்டு ஆட்டை மிகக் குறைவான விலைக்கு வாங்கினார் என்று தெரிந்ததும் அவரிடம் பல நாள் கழித்து கடுமையான கோபத்தில் பேசிக்கொண்டிருந்தேன். என் வேண்டுதல் எவ்வளவு முக்கியம் அதற்கு என்ன செலவானாலும் பரவாயில்லை நல்ல லட்சணம் பொருந்திய ஆட்டை வாங்குமாறு கூறிக் கொண்டிருந்தேன்.
கல்யாணத் தேதி, மேடை அலங்காரம், உணவுப்பட்டியல், பத்திரிக்கையின் நிறம் வடிவமைப்பு என, என எல்லாம் சரியாக நடப்பதாக சொல்லிவிட்டு ஒரு சிறு காகிதத்தை என்னிடம் நீட்டினார் மாப்பிள்ளையின் அப்பா, சகல, பத்திரிக்கையில் பெயர் போடணும், இதுல மூணு பெயர் எழுதி இருக்கேன் என்று அன்னிய மொழியில் மூன்று பெயர்களை தாழ்மையான குரலில் வாசித்தார். என் மௌனத்தை உற்று நோக்கிய கண்ணகி, அதற்கு வீரம், அஞ்சாமை, பொறுமை என்று சிலப்பதிகாரத்தின் கண்ணகியின் குணங்களை பொருளாக விலக்கினாள்.
கல்யாணம் சடங்கு சாங்கியம் எல்லாம் உங்க முறைப்படி பண்ணலாம் பட் பெயர் எதுக்கு மாத்தணும் என்று இப்பொழுது மாப்பிள்ளையை பார்த்தேன் ?
ஒரு நாள் கூத்து சகல, அதுக்கப்புறம் எல்லாம் அவங்க இஷ்டம்தான் என்று தனக்கு இதில் எதுவும் நம்பிக்கை இல்லை என்றும் தங்களின் சொந்தங்களுக்காகவே மதம் சார்ந்த கல்யாணம் என்று மாப்பிள்ளையின் அப்பா விளக்கினார் .
20 வருஷம் அப்பாக்கு பிடிச்ச பேர்ல வாழ்ந்தேன் ஒரே ஒரு நாள் எனக்கு பிடிச்சவனுக்காக வேற பேர்ல நிக்க போறேன், பெரும் தியானத்திலிருந்து விழித்தது அருள்வாக்கு சொல்வது போல் தன் விருப்பத்தை பேசி முடித்தாள் என் மகள்.
பூசாரியிடம் ஆடு வாங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நல்லா இருக்குமா, மூணுமே நல்லா இருக்கு, ஆனா உதவி என்று அர்த்தம் வர மாதிரி ஏதாவது பேர் இருக்குமா என்றேன். உதவியா ? சிலப்பதிகாரத்தில் கண்ணகி யாருக்கு பா உதவி செஞ்சாங்க ? என்று கேட்டுவிட்டு, சரிப்பா, நான் தேடிப்பார்க்கிறேன் என்று செல்போனை கையில் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக ஓடினாள் தனக்குப்பிடித்த பெயரை தேடி.
குட்டியாண்டவர் கோவிலில் வேண்டுதலை முடித்துக்கொண்டு, கண்ணகி அக்கா வீட்டிற்கு சென்றேன், என்னப்பா கெடா வெட்ட போறேன்னு சொல்லிட்டு ஏன் கடைசி நேரத்தில் மொட்டை அடிச்சுகிட்டயாமே?
என்னுடைய வேண்டுதலுக்கு நான் ஏன் பாவம் அந்த ஆட்டை பலி கொடுக்கணும் என்று சொல்லிக்கொண்டே என் மகளின் கல்யாண முதல் பத்திரிக்கையை கண்ணகி அக்காவிடம் கொடுத்தேன்.
00

கார்வேல் நல்லான்,
புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், திரையுலகில் உதவி இயக்குநராகவும் உதவி ஒளிப்பதிவாளராகவும் அனுபவம் பெற்றவர். இதுவரை ஐந்து சுயாதீனக் குறும்படங்களை இயக்கியுள்ளார். தானே இயக்கும் நோக்கில் முழுநீளத் திரைப்படங்களுக்கான திரைக்கதைகளையும் எழுதி வருகிறார்.

