நி. அமிருதீன்
அப்துல் காதருக்கு 42 வயது இருக்கலாம். ஆறடி உயரம், அதற்கேற்ற படி உடல்வாகு, வெள்ளை வெளீர் என்ற தோல் நிறம். போலீஸ் கட்டிங் செய்யப் பட்டு முன்புறம் மட்டும் எண்ணெய் தேய்க்கப்பட்ட தலைமுடி.. மிடுக்கான உடை என இவரின் தோற்றத்தை பார்த்தவுடனே யாவரும் இவர் பெரிய போலீஸ் ஆபீஸர் என்று கூறி விடுவார்கள். ஆனால் அப்துல் காதர் போலீஸ் ஆபீஸர் அல்ல.
இவருக்கு சொந்த ஊர் மதுரை. இளங்கலை வணிகவியல் படித்து முடித்த உடனே மத்திய அரசு தேர்வு எழுதி வணிகவரித்துறையில் இளநிலை உதவியாளராக பணிக்குச் சேர்ந்து தற்போது மண்டல அலுவலராகப் பணிபுரிந்து கொண்டு உள்ளார்.
மதுரையிலேயே வேலை செய்து வந்தாலும் மாதம் ஒரு முறையாவது சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் வந்து நேரடியாகக் கூட்டத்தில் கலந்து கொள்வது அப்துல் காதரின் வழக்கம். அப்படித்தான் இன்றைய பயணமும் அமைந்திருந்தது.
நேற்று இரவில் மதுரையில் ரயில் ஏறி இன்று அதிகாலை 4 மணிக்கு எக்மோரில் இறங்கி, பெரிய மேடு பள்ளிவாசல் எதிரே உள்ள விடுதிக்கு வந்த போது மணி ஐந்தைத் தாண்டி இருந்தது. பஜர் தொழுதுவிட்டு படுத்தவர் தான், நீங்கள் கதைக்குள் நுழையும் போது எழுந்து விட்டார்.
எப்படியும் ஐந்து நிமிடத்தில் அப்துல் காதர் குளித்துவிட்டு வந்துவிடுவார். அதற்குள் அவர் குறித்த சில ரகசியங்களை உங்களிடம் சொல்லி விடுகிறேன். நீங்கள் எதையும் அவரிடம் கேட்டு விடாதீர்கள்.
அப்துல் காதரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஏனென்றால் அவர் ஒரு தொழுகையாளி, நோன்பாளி, அமைதியானவர், தான் உண்டு தன்பணி உண்டு என இருப்பவர், பிறருக்கு தீங்கு தாராதவர்…என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அவரிடம் அவருக்கே பிடிக்காத ஒன்று இருக்கிறது அதுதான் கஞ்சத்தனம்.
காசை அவ்வளவு லேசில் செலவு செய்து விட மாட்டார். யோசித்து யோசித்து செலவு செய்வார். பெரிதாக சதகா(தான தர்மம்) செய்ய மாட்டார். நாம் தான் வருடம் ஒருமுறை ஜகாத் கொடுத்து விடுகிறோமே என்று எண்ணிக் கொள்வார்.
வணிகவரித்துறையில் பணி புரிவதால் அரசுக்கு குறைவான வருமான வரி செலுத்த, என்னென்ன உத்திகளைக் கையாள வேண்டும் என்பதைத் தெளிவாக அறிந்து வைத்திருப்பவர். அவருடைய சம்பளம் ஒரு லட்சத்தைத் தாண்டி இருந்தாலும் கூட வீட்டுக் கடன், குழந்தைகளின் கல்லூரி செலவு என பணத்தை மிச்சம் வைக்காமல் சரியாகவும்,சிக்கனமாகவும் செலவு செய்து விடுவார்.
வருடத்திற்கு ஒருமுறை அவர் தரும் ஜகாத்(கட்டாய தர்மம்) கூட ஐந்தாயிரத்தைத் தாண்டாது. கஞ்சத்தனத்திற்காக சில நேரங்களில் அவரே அவரை குறைபட்டுக் கொள்வார். ஆனாலும், என்ன செய்வது! அவரின் குணத்தை அவராலேயே மாற்ற முடியவில்லை…
அதற்குள் அப்துல் காதர் குளித்துவிட்டு வெளியே வந்து, புதிய ஆடைகளை அணிந்து, வெளியே கிளம்புவதற்குத் தயாரானார். சாக்ஸ் அணிவதற்காகக் குனிந்த பொழுது அவர் மேல் சட்டையிலிருந்து ஐந்து ஐநூறு ரூபாய் தாள்கள்(2500) கீழே விழுந்து விட்டன.
நல்லவேளை இங்கே விழுந்தது! எங்காவது சாலையில் விழுந்து இருந்தால் என்னவாக இருக்கும்.. என்று எண்ணியவாறு அப்துல் காதர் அவற்றை எடுத்து மீண்டும் மேல் சட்டையில் வைத்து விட்டு, அறைக்கு வெளியே வந்து, அறையை பூட்டி சாவியை வெளியே எடுத்த பொழுது, கை தவறி சாவி கீழே விழுந்தது. மீண்டும் சாவி எடுக்க குனிந்த பொழுது, மீண்டும் அந்த 2500 ரூபாய் கீழே விழுந்தது.
சுதாரித்துக் கொண்ட அப்துல் காதர் உடனடியாக சாவியையும், அந்த பணத்தையும் எடுத்து தன்னுடைய கால் சட்டை பையினுள் திணித்துக்கொண்டு, 2500 ரூபாய் என்பது என்னுடைய ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் இரண்டரை சதவிகிதம் ஆகிறது. நான் எப்படி இப்படி கவனக்குறைவாக இருக்கிறேன்..? என்று அப்துல் காதர் எண்ணிக் கொண்டிருக்கும்போதே, அவர் மூளையில் சுலைமான் பாய் வந்து போய்க் கொண்டிருந்தார்.
விடுதி முதல் தளத்திலிருந்து கீழே இறங்கி, சாலையில் நடந்து, ஒரு வாடகை காரைப் பிடித்து ஏறி அமர்ந்தார், அப்துல் காதர். கார் முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தது. அவர் மனம் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தது.
கடந்த மாதம் இதே போல ஒரு கூட்டத்தை நிறைவு செய்துவிட்டு, விடுதிக்கு வந்த பொழுது மணி இரண்டாகிவிட்டது. முதல்ல தொழுதுட்டு வந்து பிறகு சாப்பிடுவோம் என்று அப்துல் காதர் மனம் எண்ணியது. பெரியமேடு பேருந்து நிறுத்தத்தின் அருகில் பெரிய பள்ளிவாசல் ஒன்று இருந்தது. பெரிய பெரிய இரண்டு இரும்புக் கதவுகளுக்கு அருகில் தலா ஒரு காவலாளி நின்றிருந்தார்கள். அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்த பொழுது செல்போனிலிருந்து ஒரு மெசேஜ் சப்தம் வந்தது. அதைப் பார்த்த பொழுது ”உங்களின் இந்த மாத சம்பளம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 210 உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டது” என்ற செய்தி கண்ணில் பட்டது.
யாருக்காக இருந்தாலும் சம்பளம் வந்து விட்டது என்று சொன்னால், ஒரு சின்ன மகிழ்ச்சிதானே! அதுதான் அப்துல் காதர்க்கும் ஏற்பட்டது. ஷூவைக் கழட்டி வைத்துவிட்டு ஒழு செய்யும் இடத்திற்கு சென்றார்
அந்த இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த காவலாளியைப் (சுலைமான் பாய்) பார்த்தவுடன் அப்துல் காதர்க்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை. உடனே சட்டைப் பையில் இருந்து 100 ரூபாய் எடுத்து அவர் கையில் கொடுத்து முஸாபஹா செய்தார். இருவரும் ஒழு செய்யும் அடுத்தடுத்த திண்டுகளில் அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தனர்.
பாய் உங்க பேர் என்ன? எத்தன வருஷமா இங்க காவலாளியா இருக்கீங்க ?
ஜி! என்னோட பேரு சுலைமான் பாய். ஒரு முப்பது வருஷமா இங்க நான் வாட்ச்மேன்னா இருக்கேன். எனக்கு ரெண்டு பொட்ட பிள்ளைகள். அதுகள நல்ல இடத்துல கட்டி குடுத்துட்டேன். இப்போதைக்கு நானும் என் பொண்டாட்டி தான்…நீங்க கோயம்புத்தூரோ?
சுலைமான் பாய்…நான் கோயம்புத்தூர் இல்ல. எனக்கு சொந்த ஊரு மதுர. நான் அங்கதான் ஆபீஸரா வேலை செய்றேன். மாசம் ஒரு தடவை மீட்டிங்ல கலந்துக்கறதுக்காக சென்னை வருவேன். இதோ இந்த எதிரில் இருக்கிற இந்த லாட்ஜில் தான் தங்குவேன். ஆனா நான் உங்களை அதிகமாக பார்த்ததில்லையே ?
ஜி! நான் பெரும்பாலும் நைட் டூட்டி பாப்பேன். அதனால இங்க வர்ற நிறைய பேருக்கு என்ன தெரியாது. எனக்கும் சதகா செய்றது ரொம்ப பிடிக்கும். நான் ஒவ்வொரு மாசமும் ஜகாத் கொடுத்துட்டு வரேன் என்று கூறிய சுலைமான் பாயைப் பார்த்து அப்துல் காதரின் புருவங்கள் உயர்ந்தன.
என்ன சுலைமான் பாய் சொல்றீங்க? நீங்க ஜகாத் கொடுக்குறீங்களா? உங்களுக்கு சொத்து பத்து ஏதேனும் இருக்கா? உங்களுக்கு சம்பளம் தான் எவ்வளவு?
ஜி! நான் இங்க வேலைக்கு சேர்ந்த போது எனக்கு சம்பளம் 2000. இப்ப நான் பத்தாயிரம் வாங்குறேன். எனக்கு சொத்து பத்து எதுவும் கிடையாது. வாடகை வீடுதான். ஆனாலும் பாருங்க, என்னோட பத்தாயிரம் ரூபாய் சம்பளத்துல 2 1/2 சதவிகிதம் அதாவது 250 ரூபாய் எடுத்து நான் ஒவ்வொரு மாதமும் ஏழைக்கு கொடுத்து விடுறேன். எனக்கு ஜகாத் கொடுக்க ஆசை. ஆனா எனக்கு சொத்து இல்ல. அதனால இந்த சதகாவை ஜகாத்தா நினைச்சு நான் ஒவ்வொரு மாதமும் கொடுத்துடறேன். என்று சுலைமான் பாய் சொல்லச் சொல்ல,
அப்படி எனில், தான் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று அப்துல் காதரின் மனம் கணக்கிட ஆரம்பித்தது.. நான் இப்ப வாங்குற சம்பளத்துக்கு மாசம் 2500 ரூபாய் கொடுக்கணும். ஆனா நான் எவ்வளவு கொடுக்கிறேன்…. ஒண்ணுமே இல்லையே.. மிஞ்சி மிஞ்சி போனா வருஷத்துக்கு ஒரு தடவை ஜகாத்தா ஒரு 4000 மோ, 5000 மோ கொடுக்கிறேன்.. ஒரு சாதாரண வாட்ச்மேன் இவ்வளவு பேணுதலா சதகா கொடுக்கும்போது, எனக்கு ஏன் இந்த அறிவு இல்லாம போச்சு? என்று அப்துல் காதர் எண்ணும் பொழுதே செல்போன் சிணுங்கியது.. தலைமை அலுவலகத்தில் இருந்து மீண்டும் மதியம் வருமாறு தகவல் வந்தது.
சரி சுலைமான் பாய்! இப்ப எனக்கு நேரமாச்சு. நான் தொழுதுட்டு, ஹெட் ஆஃபீஸ் போகணும். இன்னொரு முறை இன்ஷா அல்லாஹ் உங்களைச் சந்திக்கிறேன் என்றவாறு வேகமாக ஒழு செய்ய ஆரம்பித்தார் அப்துல் காதர்.
தலைமையகத்தில் கூட்டம் நிறைவடைந்த பிறகு அன்று இரவே மதுரை திரும்பிவிட்டார். ஆனாலும் சுலைமான் பாயின் பேச்சு அவர் உள்ளத்தில் முள்ளாய் தைத்துக் கொண்டே இருந்தது. அடுத்த வாரத்திலேயே அலுவலகத்தில் ஆடிட்டிங் வந்ததால் சுலைமான் பாயை முற்றிலுமாக மறந்து விட்டார்.. அதற்குப் பிறகு இன்று காலை தான் இரண்டரை சதவிகிதம் என்ற உடன் சுலைமான் பாய் நினைவில் வந்து விட்டுப் போனார்..
இன்றைய கூட்டத்தை நிறைவு செய்துவிட்டு நேரடியாக சுலைமான் பாயைச் சந்தித்து அவரிடம் இந்த 2500 ரூபாயை சதகாவாக வழங்க வேண்டும் என்று அப்துல் காதரின் மனம் தீர்மானித்தது.
இந்த முறை அவரின் மனம் கூட்டத்தில் லயிக்கவில்லை. எப்பொழுது சந்திப்போம் என்ற ஆசை மேலோங்கி இருந்தது. ஒரு வழியாக கூட்டம் நிறைவடைந்த பிறகு வேகமாக பெரியமேடு பள்ளிவாசலை அடைந்தார், அப்துல் காதர்.
சென்ற முறை பார்த்த அதே காவலாளிகள் சலாம் சொன்னார்கள். பதிலுக்கு சலாம் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்த அவரின் பார்வை சுலைமான் பாயைத் தேடியது. ஒருவேளை அவர் நைட் டூட்டியாக இருக்கலாம் என்றெண்ணி அருகில் இருந்த ஒரு காவலாளியை அழைத்து விசாரித்தார்
அஸ்ஸலாமு அலைக்கும்… சுலைமான் பாய் இன்னைக்கு நைட் டூட்டியா?
வ அலைக்கும் அஸ்ஸலாம்.. உங்களுக்கு விஷயம் தெரியாதா? போன வாரம் சுலைமான் பாய் வஃபாத் ஆகிவிட்டார். கிட்னியில் கல்லு. மனுஷன் சரியா உடம்ப பாத்துக்கல. கடைசியில அல்லாஹ்கிட்ட போய் சேர்ந்துட்டாரு.
இதைக் கேட்டவுடன் அப்துல்காதருக்கு திக் என்றது மனம். எனக்கு படிப்பினை தருவதற்காகத் தான் இறைவன் என் கண் முன்னால் சுலைமான் பாயை அடையாளம் காட்டினானோ.. என்று சிந்தித்தவாறே கால் சட்டையில் இருந்த 2500 ரூபாயை எடுத்து எதிரில் இருந்த அந்தக் காவலாளி கையில் கொடுத்துவிட்டு, துவா செய்யுங்கள் பாய்.. என்று கூறியவாறே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார், அப்துல் காதர். கையில் பணத்தோடு அவர் சென்ற திசையை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார் பெயர் தெரியாத அந்த காவலாளி…….
00

முனைவர். நி. அமிருதீன் அவர்கள் ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி), திருச்சி: 18-06-2018 முதல் தற்போது வரை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கருத்தாளர் பல்வேறு நிகழ்வுகளில் 81 முறை (Resource Person)கருத்தாளராகச் செயல்பட்டுள்ளார். கல்வி மற்றும் சமூகப் பணிகளுக்காக 24 விருதுகளையும், தேசிய மற்றும் மாநில அளவில் 5 பரிசுகளையும் பெற்றுள்ளார்.
இலைகளின் மௌனம் கவிதைகளாய் -கவிதைகள், கட்டு(ரை)ச் சோறு -கட்டுரைகள், தடயம்-சிறுகதைகள் என்ற 3 நூல்களை வெளியிட்டுள்ளார் (பின்னிரண்டு நூல்கள் அமேசானில் கிடைக்கின்றன). மேலும், ஆய்விதழ்களில் (UGC/Peer-reviewed) 11 ஆய்வுக் கட்டுரைகளையும், கருத்தரங்கத் தொகுப்புகளில் 14 கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். மின்னணு இதழ்களில் 17 சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியுள்ளார். ஊடகங்களில் 40 மின்னணு பாடப்பொருள் (E-Content)வழங்கியுள்ளார். 88 கருத்தரங்குகளில் (Seminars) பங்கேற்றுள்ளார். 25 ஆய்வுக் கட்டுரைகளை பல்வேறு மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் சமர்ப்பித்துள்ளார். 34 ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் (FDP) கலந்துகொண்டுள்ளார்.
27 பயிலரங்குகளில் (Workshops) பங்கேற்றுள்ளார். 22 இணையவழிப் படிப்புகளை (Online Courses) முடித்துள்ளார் மற்றும் 12 நிகழ்வுகளுக்கு ஒருங்கிணைப்பாளராகச் (Programme Coordinator) செயல்பட்டுள்ளார். இவரது முதன்மை ஆய்வுப்புலங்களாக (Specialization) சங்க இலக்கியம் மற்றும் நவீன இலக்கியம் ஆகியவை அமைகின்றன. தற்போது “நற்றிணையில்அஃறிணைக் கூறுகள்” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வைச் சமர்ப்பித்துள்ளார்.
முனைவர் நி. அமிருதீன் அவர்கள் ஒரு பன்முகத் திறமையாளர் மேஜிக் (Magic) மற்றும் கணித மேஜிக் (Math’s Magic) செய்வதில் வல்லவர், அவர் மைம் (Mime) எனப்படும் ஊமை நாடகம் மற்றும் ஏகபாத்திர நடிப்பு (Mono Acting) ஆகியவற்றில் திறன் கொண்டவர், அவர் ஒரு சிறந்த செய்தி வாசிப்பாளர் (News Reader), ஊக்கப்படுத்தும் பேச்சாளர் (Motivation Speaker) மற்றும் பொதுப் பேச்சாளர் (Public Speaker) ஆவார், (Leadership), தகவல் தொடர்பு (Communication), குழுப்பணி (Team Work), ஆலோசனை வழங்குதல் (Counseling) மற்றும் சமூகப் பணியாளர் (Social Worker) போன்ற தனித்துவமான பண்புகள் உள்ளன.
நர்ஸக்கா என்ற சிறுகதை புதுவை அருங்காட்சியகம் நடத்திய சிறுகதை போட்டியில் தேசிய அளவில் முதல் பரிசு பெற்றது. செவ்வந்தி என்ற மற்றொரு சிறுகதை காரைக்குடி அய்க்கண் நினைவு சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

