ரா.சண்முகவள்ளி

சிறார் நீதிமன்றம் (Juvenile Justice Board – JJB) என்ற அறிவிப்புப் பலகை தாங்கிய அந்த அரசு கட்டட வளாகத்தின் வரவேற்பறைக் கடைசி இருக்கையில், கைகளைப் பிசைந்தவாறு அமர்ந்திருந்தான் குற்றாலிங்கம்.

​மகன் தன்னை எதற்காக இந்த இடத்திற்கு அழைத்துவந்துள்ளான், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற எந்தவொரு புரிதலும் இன்றி, கலங்கிய கண்களோடு மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தாள் அவனது தாய் செண்பகம்.

​குற்றாலிங்கத்தைப் போலவே இன்னும் ஏராளமான சிறுவர்கள் அந்த அறையில் அமர்ந்திருந்தனர். அனைவரும் தங்களின் பெற்றோர்களுடனே வந்திருந்தனர். பெரும்பாலும் அங்கிருந்த பெற்றோர்களில் உலகப் படிப்போ, பட்டறிவோ பெற்றவர்கள் யாருமில்லை. அனைவரும் அன்றாடக் காய்ச்சிகளாகவும், நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களாகவுமே இருந்தனர்.

​முதன்மை நீதித்துறை நடுவரும், அவருடன் இரு சமூக ஆர்வலர்களும் அருகில் இருந்த அறைக்குள் சென்றனர். வழக்கு விசாரணை தொடங்கவிருப்பதாக அறிவிப்பு வந்ததைத் தொடர்ந்து, குற்றாலிங்கத்தின் இதயம் படபடக்கத் தொடங்கியது.

​நினைவுகள் பின்னோக்கி நகர, தான் இந்தச் சட்ட வலையில் வந்து சிக்கிய நாட்களை அவன் மனம் அசைபோடத் தொடங்கியது.

​பத்தாம் வகுப்பில் முதல் பாடவேளையிலேயே கடைசி பெஞ்சில் தலை சாய்த்துக் கிடந்தான் குற்றாலிங்கம். வகுப்புக்குள் வந்த கணித ஆசிரியை மேரி அவனை எழுப்ப முயன்றார்.

​”டேய் குற்றாலிங்கம்… எந்திரிடா! காலங்காத்தால என்ன தூக்க வேண்டியிருக்கு?” என்றபடி அவனது பெஞ்சில் டொக் டொக்கென்று தட்டினார். அவனிடம் எந்த அசைவும் இல்லை. அருகில் இருந்த மாணவன் ஒருவனிடம், “அவனை எழுப்புடா” என்று கூற, அவனது முயற்சியும் தோல்வியைத் தழுவியது.

​நீண்ட போராட்டத்திற்குப் பின் கண் விழித்தவன், ஒருவித மந்தமான மயக்கத்தில், “எவன்லே என்னை எழுப்புனது?” என நாக்குக் குழறக் கத்தினான். அப்போதுதான் வகுப்புக்கே புரிந்தது, அவன் தூக்கத்தின் அசதியில் இல்லை; போதையின் கிறக்கத்தில் இருக்கிறான் என்பது.

​அடுத்த சில நிமிடங்களிலேயே தலைமை ஆசிரியர் அறையில் கொண்டு போய் நிறுத்தப்பட்டான் குற்றாலிங்கம். தலைமை ஆசிரியர் முன் இருந்த மேஜையில், சிறிய தலையணை வடிவிலான ‘கூல் லிப்’ புகையிலைப் பொட்டலங்கள் சில பறிமுதல் செய்யப்பட்டுப் போடப்பட்டிருந்தன. போதையின் வீரியத்தில் நேராக நிற்கக் கூட முடியாமல் தள்ளாடியவனை, அறையின் மூலையில் ஒரு ஓரமாக அமர வைத்தனர்.

​நேரம் கடந்து, போதை கொஞ்சம் தெளிந்ததும் தலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் என அனைவரும் அவனைச் சுற்றி வளைத்துக் கேள்விகளால் துளைத்தனர்.

​”என்னலே இது? விடிஞ்சா ஸ்க்கூலுக்கு வராம இந்த நாசமாப் போற வேலையா? உங்க வீட்டுக்கு போன் போடுலே மொतல்ல!”

​”சார்… சார்… தெரியாம பண்ணிட்டேன் சார். இனி இப்படி பண்ணமாட்டேன் சார்.”

​”எங்கேயிருந்துலே வாங்குன இந்த உருப்படாத பொருளை?”

​”நம்ம தெருவுல சந்தோஷ்னு ஒரு அண்ணன் இருக்கான் சார்… அவன்தான் கொடுத்தான்.”

​”எத்தனை நாளா இந்த லவட்டிக்கேடு நடக்குது உன்கிட்ட?”

​”இதுதான் சார் மொத தடவை… இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் சார்…” என்று அழுது கதறினான்.

​”படிக்க வாரியா, இல்ல பஞ்சாயத்து பண்ண வாரியா? ஹெச்.எம் சார், இவனை இப்படியே விட்டா நம்ம ஸ்கூல் மானமே போயிரும். வீட்டுக்கு போன் போட்டு வரச்சொல்லி, டிசியைக் கிழிச்சு கையில கொடுங்க சார்” என்றார் உடற்கல்வி ஆசிரியர் ஆக்ரோஷமாக.

​”சார்… சார்… அப்படிலாம் பண்ணாதீங்க சார். எனக்கு அப்பா கிடையாது சார். அம்மா மட்டும்தான். இது மட்டும் என் அம்மைக்குத் தெரிஞ்சா தாங்க மாட்டா சார்…” குற்றாலிங்கத்தின் கதறல் தலைமை ஆசிரியரையும், உதவித் தலைமை ஆசிரியரையும் கொஞ்சம் யோசிக்க வைத்தது. “இதுவே முதல் தடவையும் கடைசித் தடவையுமா இருக்கணும். இனி இப்படி நடந்தா டிசியைக் கிழிச்சு கைல கொடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவோம்” என்ற எச்சரிக்கையுடன் அன்று அவனைக் கண்டித்து அனுப்பிவைத்தனர்.

​சில நாட்கள் கடந்தன. ஒருநாள் கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த குற்றாலிங்கத்தை வழிமறித்தான் சந்தோஷ். “என்னலே… இப்பல்லாம் தெருப்பக்கம் ஆளையே காணோம்?” என்று அதிகாரமாக அவனது தோளில் கைப்போட்டான்.

​”கொஞ்சம் படிக்க வேண்டியதிருந்ததுண்ணே.”

​”அதான் பரீட்சையே ஆரம்பிக்கல, அதுக்குள்ள என்னத்தப் பெருசாப் படிக்கப் போறவன் நீ?”

​”இல்லைண்ணே… பாடம் நிறைய இருக்கு. இப்பவே படிக்க ஆரம்பிச்சாதான் பாஸ் பண்ண முடியும்.”

​”சரிடா சரிடா, படிக்கலாம்… இப்ப வா, குளத்தங்கரை வரைக்கும் போயிட்டு ஒரு இழுப்பப் போடலாம்.”

​”இல்லைண்ணா… நான் வரல.”

​”ஏன்டா?”

​”நீ அன்னைக்குக் கொடுத்ததுல ஸ்கூல்ல பெரிய பிரளயமே ஆகிப்போச்சுண்ணே. மறுபடியும் ஏதாச்சும் ஒன்னுன்னா டிசியைக் கொடுத்து வெளிய தொரத்திடுவாங்க.”

​”அப்படினு அந்த வாத்தியாருங்க மிரட்டுனாங்களா? ஏலேய்… அவனுங்க பூச்சாண்டி காட்டுவானுங்கலே, அதுக்கெல்லாம் பயப்படலாமா? உங்க ஸ்கூலைச் சுத்தி நம்ம சாதிக்காரப் பயலுகதான் மெஜாரிட்டியா இருக்கானுங்க. உனக்கு ஒன்னுன்னா சும்மா விட்டுடுவாங்களா? பயப்படாதலே, வா போகலாம்” என்று சாதிப் பெருமையைப் பேசி, குற்றாலிங்கத்தை வலுக்கட்டாயமாகத் தன்னுடன் இழுத்துச் சென்றான் சந்தோஷ்.

​அவர்கள் சென்ற இடம் ஊர் எல்லையில் இருந்த குளத்தங்கரை. காய்ந்த சருகுகளுக்குள் ஒளிந்துள்ள ஈரப்பசை போல, அந்த வறண்ட குளத்தில் ஆங்காங்கே சில நீர்த்துளிகள் காட்சியளித்தன. குளத்தின் நடுவில் முளைத்திருந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்த எருமைகளை விரட்டிவிட்டு, அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர் இருவரும்.

​தன் இடுப்பில் கட்டியிருந்த கைலிக்குள் சுருட்டி வைத்திருந்த ஒரு பொட்டலத்தை வெளியே எடுத்தான் சந்தோஷ். “இந்தாலே… இது புது சரக்கு. ஒரு இழுப்பு இழுத்துப்பார்” என்று குற்றாலிங்கத்திடம் நீட்டினான்.

​”இதென்னண்ணே… புதுசா இருக்கு, வேண்டாம்ணே” என்றவனிடம், “அட, எவன்லே இவன்… எதைக் கொடுத்தாலும் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு! கைல வாங்கி ரெண்டு இழுப்பு இழுத்துப் பார்த்தாதானே தெரியும் இதோட சொகம் என்னன்னு!” என்று சீறினான் சந்தோஷ்.

​”இல்லைண்ணே எனக்கு…” அவன் ஆரம்பிப்பதற்குள் அவன் கைகளில் அந்தப் பொட்டலத்தைத் திணித்தான்.

​பொட்டலத்தை திறந்து பார்த்தான் குற்றாலிங்கம். வெள்ளை நிற மாவு போன்ற பொடி அதில் இருந்தது. “என்னண்ணே இது?”

​”கஞ்சாடே!”

​”கஞ்சாவா?” அதிர்ந்து போனான் குற்றாலிங்கம்.

​”ஆமாலே… இதை ஒரு இழுப்பு இழுத்துப்பார், சொர்க்கமே கண்ணுமுன்னாடி வந்து நிற்குமாக்கும்” என்றான் சந்தோஷ்.

​முதலில் தயங்கியவன், பின் அந்தப் போதை தரும் போலித் தைரியத்தில் அதை நுகரத் தொடங்கினான். நாட்கள் செல்லச் செல்ல, புகைக்கும் அளவும் போதையின் வீரியமும் அவனுக்குள் கூடிக்கொண்டே போனது. ஒருநாள் மாலையில், தள்ளாடியபடி சுயநினைவற்றவனாய் வீட்டுக்குள் வந்து விழுந்தான் குற்றாலிங்கம்.

​செண்பகம் அதிர்ந்தே போனாள். தன் பலம் கொண்ட மட்டும் மகனை அடித்துத் திருத்த முயன்றவள், அவனது மரத்துப் போன உடலின் முன்னால் தோற்றுப் போனாள். தன் இயலாமையை எண்ணி வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழத் தொடங்கியவள், வீட்டின் மூலையில் ஒடுங்கினாள். அவளின் எந்தக் கூப்பாடும் அவனது செவிகளுக்கு எட்டாதவாறு, அவன் சுவாசித்த அந்தப் போதை அவனது மூளையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

​நாட்கள் கடந்தன. குற்றாலிங்கத்தின் போதைப் பழக்கம் அவனைக் கடந்து காசைக் கேட்கத் தொடங்கியது. பள்ளியில் நடந்த பெற்றோர் கூட்டத்தில், அவன் எல்லாப் பாடங்களிலும் தோல்வி அடைந்ததாக வகுப்பு ஆசிரியர் கூற, செண்பகம் நெஞ்சில் கை வைத்தாள்.

​”நல்லா படிச்சுக்கிட்டுதானேலே இருந்த… இப்ப என்ன கேடு வந்ததுன்னு இப்படி கஞ்சாப்பயலுகளோட சேர்ந்து சுத்திக்கிட்டு திரியிற?” என்று வீட்டில் வச்சுக் கத்தியவளிடம், “இப்படியே கத்திக்கிட்டு இருந்தா வீட்டை விட்டு ஓடிப் போயிருவேன் பார்த்துக்கோ!” என்றான் குற்றாலிங்கம்.

​”நல்லா படிச்சு ஒரு வேலைக்குப்போயி, நாலு காசு சம்பாதிச்சு நம்ம குடும்பத்தைக் காப்பாத்துவன்னு நினைச்சா… ஏம்லே இப்படிப் பாவியா மாறுற?”

​”உனக்கு என்ன… காசுதானே வேணும்? நான் சம்பாதிச்சுப் போடமாட்டேன்னு சொன்னேனா? படிச்சாதான் காசு கிடைக்கும்னு இல்ல. நீ புலம்பாம உன் வேலையைப் பாரு, எனக்குப் புத்தி சொல்லாத!” என்றபடி வாசல் கதவை எட்டி உதைத்துவிட்டு வெளியேறினான்.

​வீட்டில் கத்திக்கொண்டு வந்தவன் நேராக வந்ததென்னவோ சந்தோஷிடம் தான். “என்னலே… மூஞ்சியே சரியில்ல?”

​”ஒன்னுமில்லண்ணே… அம்மை காலங்காத்தாலே கத்திட்டு கிடக்கா, அதான் கொஞ்சம் மண்டை சூடாயிருச்சு.”

​”ரைட்டு விடு… மண்டைச் சூட்டைத் தணிக்கலாம் வா” என்று குற்றாலிங்கத்தை அழைத்துச் சென்ற இடம், அந்த ஊரின் எல்லையில் இருந்த சுடுகாடு.

​”இங்க எதுக்குண்ணே கூட்டிட்டு வந்த?”

​”காரணம் இல்லாம உன்னை இங்க கூட்டிட்டு வருவேனாடா?” என்றபடி அங்கிருந்த ஒரு புளியமரத்தின் அடியில் மண்ணைத் தோண்டினான் சந்தோஷ். அந்தப் புழுதிக்குள்ளிருந்து புதையல் போல வெளிவந்தது ஒரு மஞ்சள் பை. அது தனக்குள் இரண்டு பிராந்தி பாட்டில்கள், ஊறுகாய், வறுகடலை, பிளாஸ்டிக் கப்புகள் என அத்தனையையும் அடக்கி வைத்திருந்தது.

​”என்னலே… இங்க எப்படி இது வந்ததுன்னு பார்க்கிறியா? நான் தான்லே இதையெல்லாம் வாங்கிட்டு வந்து இங்க பொதச்சு வச்சிட்டுப் போயிருவேன். எப்ப எப்பத் தேவையோ அப்ப அப்ப வந்து எடுத்து ஊத்திப்பேன். வீட்டுல கொண்டு வச்சா எங்க அம்மை பார்த்துட்டு சாமி ஆட்டம் ஆடிப் பாட்டிலையும் உடைச்சுப் போடுவா, அதான் இந்த ஐடியா!” என்று பெருமையாகக் கூறினான் சந்தோஷ்.

​மரத்தடியில் இருவரும் அமர்ந்தனர். “அப்புறம்டா… படிப்புலாம் எப்படி போகுது?” எனக் கேட்டவாறே பாட்டிலைத் திறந்து ஊற்றினான் சந்தோஷ்.

​”எனக்கு இப்பல்லாம் படிக்கப் போகவே பிடிக்கலண்ணே. கூடப் படிக்கிற பயலுகளாம் பைக்குல வாரானுங்க, ஆண்ட்ராய்டு போன் வச்சிருக்கானுங்க. போதாக்குறைக்கு ஒவ்வொருத்தனுக்கும் ஒரு ஆள் (Girlfriend) இருக்கு. நான் மட்டும் மொட்டப் பயலாட்டம் சுத்திக்கிட்டு திரியுறேன்.”

​”அட லூசுப் பயலே… காசு சம்பாதிக்கிறதுலாம் ஒரு மேட்டரே இல்லைலே!”

​”என்னண்ணே சொல்லுத?”

​”உண்மையத்தாம்லே சொல்லுறேன். உனக்கு பணம் தானே வேணும்? நம்ம செந்தில் அண்ணாச்சி குத்தாலத்துல சிப்ஸ் கடை போட்டுருக்காரு. இப்ப ஐயப்ப சாமி சீசன் டைம். காலைல ரெண்டு மணி நேரம், சாயந்தரம் ஒரு நாலு மணி நேரம் மட்டும் கடையில போய் நின்னேன்னா சொலையா எட்டாயிரம் ரூபா தருவாரு. என்ன சொல்லுற… அவர்கிட்ட பேசவா?”

​”போலாம் அண்ணே… ஆனா வீட்டுல அம்மை என்ன சொல்லுமோன்னுதான் யோசனையா இருக்கு.”

​”அதெல்லாம் ஒன்னும் சொல்லாதுலே. நீ என்ன சும்மாவா போற, துட்டுக்குதானே போற? வீட்டுக்கு ஒரு ரெண்டாயிரத்தைக் கொடுத்துடு, உங்காத்தா அப்புறம் ஒன்னும் சொல்லாது.”

​”சரிண்ணே… நான் நாளைக்கே வந்துடுறேன்.”

​மறுநாள் விடியலுக்காக ஆவலோடு காத்திருந்தான் குற்றாலிங்கம். “என்னலே… ஏழு மணிக்கெல்லாம் கிளம்பி நிக்கிற?” என்றாள் செண்பகம் ஆச்சரியமாக.

​”இன்னைல இருந்து டென்த் ஸ்பெஷல் கிளாஸ் எடுக்காங்கம்மா… சாயந்தரமும் லேட்டாதான் வருவேன்” என்றவாறு புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு ஓடினான். பொய்களைச் சொல்வது அவனுக்கு மிக எளிதாகப் பழகியிருந்தது.

​தினமும் கடையிலும் வேலை பார்த்து, கையில் பணப்புழக்கமும் வரத் தொடங்கியது. வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே, மேலத்தெரு கதிரின் மூலம் குற்றாலிங்கம் வேலைக்குப் போகும் தகவல் செண்பகத்தின் காதுகளுக்குச் சென்றது.

​”ஏலேய்… உனக்கு இப்ப என்ன குறைச்சல்னு வேலைக்கு ஓடுற? ஒழுங்கா நாலு எழுத்து படிச்சு என்னைக் கடைசி காலத்துல காப்பாத்துவன்னு பார்த்தா, நீ அந்த விளங்காதவன் கூட சேர்ந்து நாசமாத்தான் போவ போல இருக்கே! உங்கப்பன் போனதுக்கு அப்புறமும் இந்த உசுரைக் கைல பிடிச்சுக்கிட்டு நான் உனக்காகத்தானேலே ஓடிக்கிட்டு இருக்கேன்…”

​”சும்மா ஒப்பாரி வைக்காதம்மா! நான் ஒன்னும் படிக்கமாட்டேன்னு சொல்லலையே. வேலைக்கும் போயிட்டு படிக்கவும் செய்றேன். மாசம் பொறந்தா உனக்கு மூவாயிரமாத் தாரேன், இதோட இந்தப்பேச்சை விட்டுடு. இதுக்கு மேல ஏதாச்சும் நொய்யு நொய்யுன்னு உயிர வாங்குன… எங்கேயாச்சு ஓடிப்போயிருவேன் பாத்துக்கோ!” என்று தாயையே மிரட்டினான்.

​பணம் ஒரு மாயப்பிசாசு. மனிதர்களைத் தன் ஆசை வார்த்தைகளால் ஆட்டிப்படைக்கும் வல்லமை கொண்டது. அந்த மாயப்பிசாசின் பிடியிலும், போதையின் நரகத்திலும் இப்போது முழுமையாகச் சிக்கிக் கொண்டான் குற்றாலிங்கம். பள்ளிப் படிப்பு முற்றிலும் நின்றது.

​அளவுக்கு அதிகமான பணமும், ஆடம்பரமும் அவனுக்குள் ஒரு அகந்தையை உருவாக்கியது. அவன் வகுப்பில் படித்து வந்த மீனா என்ற பெண்ணை ஒருதலையாகக் காதலிப்பதாகத் திரிந்தான். ஒருநாள் அவளிடம் தன் காதலைக் கூறினான். அவளோ, அவனது நடத்தை பிடிக்காமல் முகத்திலடித்தாற்போல் மறுத்துவிட்டாள். நிராகரிப்பை ஏற்கும் மனப்பக்குவம் அந்தப் போதை ஆசாமியிடம் இல்லை.

​அன்று மாலை, மீனா தன் காதலை நிராகரித்ததைப்பற்றி குடிபோதையில் சந்தோஷிடம் சொல்லிப் புலம்பினான்.

​”அவ என்ன பெரிய உலக அழகியாடா உன்னை வேண்டாம்னு சொல்லுறதுக்கு? சும்மாவா விட்டுட்டு வந்த அந்தச் சிறுக்கிய? இதே நானா இருந்தா அவளை ஒரு வழி பண்ணியிருப்பேன்!” என்று சந்தோஷ் அவனுக்குள் விஷத்தை விதைத்தான்.

​”என்னண்ணே பண்ணச் சொல்லுற… பிடிக்கலேன்னு சொன்ன பின்னாடி என்ன செய்ய முடியும்?”

​”ச்சீ… வெட்கமா இல்லே? ஆம்பளை மாதிரியாலே பேசுற? இங்க பாரு, நாம ஆசைப்பட்டது நமக்குக் கிடைக்கணும்னா அதுக்காக என்ன வேணாலும் பண்ணலாம். என்னை லவ் பண்ணலனா உன்னை ஏதாச்சும் பண்ணிடுவேன்னு மிரட்டுலே… தானா வழிக்கு வந்துடுவா. அதை விட்டுட்டுப் பொட்டச்சி மாதிரி கண்ணக் கசக்கிக்கிட்டு இருக்கான்!”

​சந்தோஷின் அந்தப் போலி ஆண்பிள்ளைத்தனமான அறிவுரை குற்றாலிங்கத்தின் மூளையில் சுள்ளென்று ஏறியது.

​மறுநாள் பள்ளி முடிந்து மீனா வீட்டுக்குச் செல்லும் வழியில் அவளை வழிமறித்தான் குற்றாலிங்கம். சட்டென முன்னால் வந்து நின்றவனை எதிர்பாராத மீனா, பயந்து தடுமாறி கீழே விழப் போனாள். அவளைத் தாங்கிப் பிடிப்பது போல நடித்த குற்றாலிங்கம், தன் இடது கையால் அவளை இறுக அணைத்து, வலது கையில் இருந்த கைபேசியில் சட்டென்று அதை ஒரு புகைப்படமாக எடுத்தான். நடப்பதை அவளோ சுற்றியிருந்தவர்களோ புரிந்து கொள்வதற்குள் அத்தனையும் முடிந்திருந்தது.

​அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் எவருக்கும், அவர்கள் இருவரும் நெருக்கமாகக் கட்டிப்பிடித்திருப்பது போலத்தான் தோன்றும். புகைப்படத்தை உடனே அழிக்குமாறு மீனா கதறி அழுது கெஞ்சினாள். அவனோ கொடூரமான புன்னகையோடு, “என்னை நீ காதலிக்கணும்… இல்லன்னா இந்த போட்டோவை இன்ஸ்டாகிராம்லயும், பேஸ்புக்லயும் போட்டு உங்க குடும்ப மானத்தையே கப்பலேத்திடுவேன்” என்று மிரட்டினான்.

​பயந்து நடுங்கிப் போனாள் மீனா. நாள்தோறும் பள்ளி முடிந்ததும், பயத்தின் காரணமாகவே அவன் சொன்ன தெருமுனைக்கு வந்து அவனிடம் கெஞ்சினாள். ஆனால், ஒருநாள் அவர்கள் இருவரும் அந்தத் தெருமுனையில் பேசுவதை மீனாவின் உறவினப் பெண் ஒருத்தி பார்த்துவிட்டாள்.

​வதந்தி, காற்றை விட வேகமாகப் பரவக்கூடிய வல்லமை கொண்டது. அன்று மீனா வீட்டுக்குச் செல்லும் முன்பே, அவளைப் பற்றிய தவறான செய்திகள் அவளது வீட்டை அடைந்திருந்தன. வீட்டில் அவளுக்குக் கிடைத்த நம்பிக்கையற்ற வசவுகளும், அவமானச் சொற்களும் அவளது பிஞ்சு மனதைத் துளைத்தன. தான் செய்யாத தவற்றுக்குப் பழி சுமப்பதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

​அன்று இரவே, நடந்த உண்மைகள் அனைத்தையும் ஒரு கடிதமாக எழுதி வைத்துவிட்டு, மீனா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாள்.

​மீனாவின் தற்கொலைக்குத் தூண்டுகோலாக இருந்த குற்றத்திற்காக, ‘போக்சோ’ (POCSO) மற்றும் தற்கொலைக்குத் தூண்டிய கொலைப்பழி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு, இன்று இந்தச் சிறார் நீதிமன்ற வளாகத்தில் வந்து நிற்கிறான் குற்றாலிங்கம்.

​வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆதாரங்கள் அனைத்தும் அவனுக்கு எதிராக இருந்தன. போதை தெளிந்த நிலையில், ஒரு நல் உயிர் தன் பிடிவாதத்தால் போனதை நினைத்துக் குற்ற உணர்வில் துடிதுடித்த குற்றாலிங்கம், நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

​அவனைச் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு (Juvenile Home) மூன்று ஆண்டுகள் அனுப்ப நடுவர் தீர்ப்பு வழங்கினார்.

​காவலர்கள் அவனது கைகளைப் பிடித்து அழைத்துச் செல்ல முற்பட்ட போது, குற்றாலிங்கம் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். குற்றத்தின் மைப்புள்ளியாக இருந்த சந்தோஷும் சாதியும் முற்றுப்புள்ளியாகிப் போனதை உணர்ந்தவனின்  கண்களில், கடைசியாக விழுந்தது என்னவோ அவனது தாய் செண்பகத்தின் கண்ணீர்த்துளிகள் மட்டும்தான்!

00

ரா.சண்முகவள்ளி

கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன்.

இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம்,  வானவில், நான் போன்ற  மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *