-அப்புசிவா
“ஜெயேந்திரனை முதல்பரிசுக்கு தேர்ந்தெடுத்திருக்கிறேன், சரிதானே?” கேட்டார் எடிட்டரும் எம்டியுமான பாலாஜி.
எதிரே அமர்ந்திருந்த விக்னேஷ், மோகன், மூர்த்தி மூவரும் மகிழ்ச்சியாக தலையாட்டினர்.
“அருமையான செலக்சன் சார், யாரும் தட்டமுடியாத தேர்ந்தெடுப்பு” என்றான் மோகன்.
“நம்ம பத்திரிக்கை பரிசுன்னா தமிழ்நாடே ஆவலா எதிர்பார்க்கும் சார், கண்டிப்பா இந்த தடவையும் நல்லவிதமா போட்டி பேர்வாங்கும்” என்றான் மூர்த்தி.
“ஆனாசார், ராஜீவ்னு ஒருத்தர் சொன்னேனே…” என்று இழுத்தான் விக்னேஷ்.
எடிட்டர் டேபிள்மேல் இருந்த தண்ணீரை நாசூக்காக அருந்தினார். தன் வெள்ளைநிற கைக்குட்டையால் உதடுகளின் ஈரத்தை ஒத்திக்கொண்டார். எல்லாவற்றிலும் மிக நாகரீகமானவர் அவர். தூய்மை என்று கூகிள் செய்தால் அதற்கு அர்த்தமாக அவர் பெயரும் வரும்.
“விக்னேஷ், அதை எப்படி மறப்பேன்? ஆனா பாரேன்… நான் ரிசல்ட் ஃபைனல் பண்ணிட்டேன். இருந்தாலும் அந்த ராஜீவ் பேரை ஆறுதல் பரிசுக்கு சேர்த்திடலாம்னு நினைக்கிறேன். உன்ட்ட சொல்லிட்டுதான் செய்யணும். என்ன? சரிதானே?”
வேகவேகமாக சம்மதம் சொல்லித் தலையாட்டினான் விக்னேஷ். ராஜீவ் அவன் மாமா பையன். முதல்தடவையாக ‘எரும்பு ஊற தேயும் கள்’ என்று அவன் எழுதிய கதையை ஏற்கனவே எடிட்டர் வசம் கொடுத்திருந்தான். ஆறுதல்பரிசே ஐந்தாயிரம் ரூபாய். அவன் தலையாட்டுவதை வேடிக்கையாக நிமிர்ந்து பார்த்துவிட்டு திரும்பவும் காமிக்ஸில் மூழ்கினான் பாலாஜியின் அருகில் அமர்ந்திருந்த எதிர்கால எம்டி ராகுல்.
அவர்களின் ‘தங்கத்திரை’ பத்திரிக்கை அறுபதாண்டு பாரம்பரியம் கொண்டது. ஆரம்பகாலம் தொட்டே அதன் சிறுகதைப் போட்டிகள் மிகவும் புகழ்பெற்றவை. அதிலும் தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகளின் முதல் முகவரியாக அமைபவை ‘தங்கத்திரை’யின் சிறுகதைப் போட்டிகள். தாத்தா, தகப்பனார் அடுத்து எம்டியாக வந்தவர் பாலாஜி.
இரண்டாயிரமாம் ஆண்டுக்குப்பின் ஆஹாவென எழுந்த செல் யுகப்புரட்சியில் விற்பனையில் தர்மஅடி வாங்கியது தங்கத்திரை. அதனால் போட்டிகள் சிலகாலம் நிறுத்தப்பட்டு சமீப ஆண்டுகளாக மீண்டும் நடத்த ஆரம்பித்தார் பாலாஜி. முதல்பரிசு முப்பதாயிரம். இரண்டாம்பரிசு இருபதாயிரம். மூன்றாம்பரிசு பத்தாயிரம். எட்டு பேருக்கு ஆறுதலாக ஐயாயிரம். ஆக ஒருலட்ச ரூபாய் பரிசுடன் மீண்டும் களைகட்ட ஆரம்பித்தது போட்டிகள்.
முதல்ஆண்டில் சிலநூறுகளில் வந்த கதைகளின் எண்ணிக்கை கடந்த இரண்டுஆண்டுகளில் பல ஆயிரம் என்ற வகையில் பெருகிப் போயிற்று. செல் இருப்பவர் எல்லாருமே கதை எழுதி அனுப்புவார்கள் என்பார் பாலாஜி.
‘தங்கத்திரை’யின் சிறப்புகளில் ஒன்று அதன் நடுவர்கள் யார் என்று யாராலுமே கண்டறிய முடியாது என்பதுதான். தவிர தேர்வான கதாசிரியர்களின் தரம் எப்போதும் கேள்விக்கு ஆளாகாது.
“இதான் நான் ஃபைனல் பண்ணின லிஸ்ட். இதில் கடைசியா இருக்கும் பேரை அடிச்சுட்டு ராஜீவ் சேர்த்திருக்கேன். ஓகேவா பாருங்க கைஸ்” என்று அந்தப் பேடை அவர்கள் பக்கம் நகர்த்தினார் பாலாஜி. எப்படியும் அதுதான் கடைசி என்பதும் அதில் ஒரு புள்ளியைக்கூட மாற்றமுடியாது என்பதும், கூடவே அந்த ஒரேஒரு நடுவரும் பாலாஜிதான் என்பதும்… ஆமாம், அதே என்பதும் அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும் அந்தப் பட்டியலை ஏதோ தீவிரமாக பரிசீலிப்பது போலவும் தங்களுக்குள் விவாதிப்பதுபோலவும் விவாதித்து முடிவெடுத்து சொல்வதுபோலவும் பட்டியலை திரும்ப அவரிடம் நீட்டி ஒப்புக்கொண்டதாக தலையாட்டினர்.
எல்லாவற்றையும் பார்த்து சிரித்தபடி காமிக்ஸில் மூழ்கியிருந்தான் ஜூனியர்.
“ஓகே நண்பர்களே, நீங்க போய் இறுதி வொர்க் முடிச்சுட்டுவாங்க” என்றார் எம்டி.
கணக்குவாத்தியாரின் வகுப்பில் இருந்து பெல் அடித்து காப்பாற்றப்பட்டதுபோல அவசரஅவசரமாக கிளம்பினர் மூவரும். அவர்கள் சென்றதும் தன் அலைபேசியை எடுத்துப் பேச ஆரம்பித்தார் பாலாஜி.
“ஹலோ…”
“….”
“ஆமாய்யா, நான்தான். எப்படிஇருக்க?”
“…..”
“சரிசரி, எல்லாம் நல்லவிஷயம்தான். போனவருஷம் அவனுக்கு குடுத்திட்டேன்னு ஃபேஸ்புக்ல போட்டு தாளிச்சயே… அவசரக்காரன்யா நீயி”
“…..”
“புரிஞ்சுக்கோ நண்பா, நூறுபேர் லிஸ்ட்ல இருக்காங்க. வருஷம் மூணுபேர்தானே செலக்ட் பண்ணமுடியும் சொல்லு? அதும் உன்னை முதல்பரிசுக்குதான் எடுக்கணும். உன் பழைய கதை ஒன்னு எங்கிட்ட இருக்கு. போதும்னு அதையே எடுத்துட்டேன்”
“…..”
“அதெல்லாம் வேணா, மேடைல அனவுன்ஸ் பண்றப்போ முதல்பரிசு, முப்பதாயிரம்னு சொல்லுவோம். கவர்ல ஐயாயிரம்தான் இருக்கும். கண்டுக்காதே”
“…..”
“அதானே, உனக்கென்ன, ஏதாச்சும் கிறுக்கிப்போட்டாகூட பணமா கொட்டுது”
அடுத்து இரண்டுபேரிடம் பேசிவிட்டு வைத்தார் பாலாஜி. ராகுல் ‘கபகபா’ வென சிரித்துக் கொண்டிருந்தான்.
“டேய்… என்னடா இளிப்பு… நாளைக்கு ஹோம்வொர்க்லாம் இல்லையா, உக்காந்து கதை புஸ்தகம் படிச்சுட்டு இளிச்சுட்டு”
“அய்யோ டாடி, இந்த லக்கிலூக் காமிக்ஸ் கதையில் ஒரு பத்திரிக்கை நடத்தறாங்க. இவங்களுக்கு ஆப்போசிட் வில்லன் கோஷ்டியும் பத்திரிக்கை ஆரம்பிக்கிறாங்க. வில்லனுங்க விடிகாலையிலேயே 12 மணிக்கு பாங்க்ல குண்டு வெடிச்சுதுன்னு மாலைபேப்பரை பிரிண்ட் பண்ணிட்டு அப்புறம் 12 மணிக்கு அவங்களே குண்டுவைக்க ஆள் வச்சு, அந்த வெடிக்க வைக்கிற கையாள் தூங்கி, குண்டு வெடிக்காம போக, அது தெரியாம இவங்க கூவிகூவி பேப்பரை வித்து…”
“போதும் நிறுத்து , இதுமாதிரி ஒரு ஜெய்சங்கர் படத்தில்…”
அவர்கள் மூவரும் உள்ளேவர இவர்களின் பேச்சு நின்றது.
“முடிஞ்சது சார்” என்றான் மூர்த்தி. அவன் காட்டிய விளம்பரத் தாளை சத்தமாக படிக்க ஆரம்பித்தார் பாலாஜி.
“ம்ம்… தங்கத்திரையின்… ம்… மாபெரும்.. ஒரு லட்சம்… ஆயிரம் வார்த்தைகள்… ஏற்கனவே பரிசு பெற்றோர்… ம்ம்… வேண்டாம்… ஆரம்பதேதி… என்னப்பா தேதி போடலையா?”
“நீங்க சொன்னா”
“இப்போ ஜூலை இருபத்தைந்து. ஆகஸ்டு ஒன்னுமுதல் கடைசிநாள் இந்தியநேரம் இரவு 12வரை அனுப்பலாம்னு போடு. எப்படியும் மூவாயிரம் கதைகள் வரும்னு நினைக்கிறேன்”
“ஓகே சார்”
“ரிசல்ட் அக்டோபர் இரண்டாம் தேதினு போடு. காலஇடைவெளி சரியா இருக்கும். அப்புறம் வரப்போற மூவாயிரம் கதைக்கும் ‘உங்கள் கதை தேர்வு பெறவில்லை, எனினும் அருமை, வேறு போட்டிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்’னு மெயில் போட்டுட்டு இந்த ரிசல்ட் பேப்பரை வின்னர்னு அறிவிச்சிடு”
“ஓகே சார்”
இப்படியாக சபை கலைந்தது. ஜூனியர், காமிக்ஸில் மூழ்கி சிரித்துக் கொண்டிருந்தான்.
000

அப்புசிவா
வரைவதும், கதைகள் எழுதுவதும், வாசிப்பதும் பிடித்தமானதாக கொண்டவர். நான்கு புதினங்கள், மூன்று சிறார் நூல்கள், ஒரு சிறுகதைத்தொகுப்பு ஆகியவை புத்தகமாக வந்துள்ளன. மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், கவிதைத்தொகுப்பு ஒன்றும் அமேசான் கிண்டிலில் படிக்கக்கிடைக்கிறது.
பல சிறுகதை போட்டிகளில் இவரது சிறுகதைகள் பரிசுகள் பெற்றுள்ளன. “பூஞ்சிட்டு” (www.poonchittu.com) எனும் சிறார் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளார். நூல்களுக்கு அட்டைப்படங்கள், மற்றும் கதைகளுக்கு ஓவியங்கள் என இவரது ஆர்வம் தொடர்கிறது.

