1.
பழத்தோலின் நிறம்
மாறத்தொடங்கிய நாளில் இருந்தே சந்தேகம் வலுத்தது
பழம் சொத்தையென அரிகையில் தான் உறுதியானது.
சதையைத் தின்னும்
ஆதிகாலப் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன
நிலத்தில் வீசியெறிந்தேன்
சின்னஞ்சிறு குருவிகள் ஈக்கள், எறும்புகள் கூட்டம் கூட்டமாய்க்
கூடித்தின்று கொண்டிருந்தன.
அப்போது
நிலம் பச்சைப் பசுமையாய் இருந்தது.
2.
அழைப்பதற்காக வாயிலில் பொருத்தப்பட்ட காலிங்பெல்
எத்தனை முறை அழுத்தியும்
உள்ளேயிருந்து எந்த எதிர்வினையும் வெளிப்படவில்லை.
மனிதர்களின் அல்லது செல்லப் பிராணிகளின் நடமாட்டமும் இல்லை
அவ்வீட்டினுள்ளேயிருந்து.
அவர்கள் அந்த குடியிருப்பை தற்காலிகமாகவேனும் அல்லது நிரந்தரமாகவேனும்
காலிசெய்திருக்கக் கூடும்.
வெளியிலிருந்து வேகமாக அழுத்தியும் காலிங்பெல் ஓசையெழுப்பவில்லை
அக்குடியிருப்பில் இருந்த / இருக்கும் அக்குடும்பத்தினருக்கு உரிய
பொருள் ஒன்றை
நான் டெலிவரி செய்வதற்கென காத்திருக்கிறேன்
அதன் முகவரி சரிபார்க்கப்பட்ட பின்
குரல் வழியாகத் தொடர்புகொள்ள முயன்றேன்
எந்தவொரு எதிர்வினையும் அற்ற மௌனம் மட்டுமே அங்கிருந்தது வந்து விழுந்தது
ஒரு சருகென.
மீண்டும் ஒருமுறை
காலிங்பெல்லை அழுத்தியழுத்திப் பார்க்க எழுந்த ஆவல் மட்டுப்பட்டது
அது சிறார்களின் குதூகல விளையாட்டுப் போன்றது.
அது பழுதடைந்திருக்கக் கூடும்
இன்றோ அல்லது நெடுநாட்களுக்கு முன்பாகவோ
,
ஆனால், காலிங்பெல்லின் ஓசை நினைவூட்டிக் கொண்டேயிருந்தது
அவ்விரவு முழுதும்
எதை? என்பதுதான் தெரியவில்லை.
3.
மெல்லிய முத்தத்தில் தான் எத்தனை சூடு
உன்னுடனான முயக்கத்தின் போது எழுந்த வாசனை
என்னை ஆட்கொள்கிறது.
உனது இருப்பை நீ நினைவூட்டிக் கொண்டே இருக்கிறாய்
போர்ச் சூழலில் காதல் ஒருவனை மாவீரனாக்குகிறது
என்னை ஒரு கோழையாக உனது கைப்பாவையாக ஆட்டி வைத்திருந்தாய்
அதுவரை.
தேசியம், இனம் மதம் மொழி என எல்லா கோடுகளையும் அழிக்கும் சக்தியுன்னுள்
சுடர்ந்தெழுந்தது.
போர்த் தெய்வத்திற்கு ஒப்பானவளாய் உனது தோற்றம்.
போர் களத்திற்குச் செல்லும் முன் நீ தந்த முத்தம் தான் எத்தனை சூடு
அதில் ஒரு மானுடம் மலர்வதற்கான காதலாய் கருவுற்றிருந்தது.
இதோ என்னிடம் உனது காதல் மானுடத்திற்கான காதல்
அத்தனைத் துடிப்போடு
போராடுகிறது.
,
4
,
இப்படி இந்தப் பொழுதை
வெறுமையாய் கழிக்க வேண்டும் போலிருக்கிறது
எந்த இலக்குகளுமற்ற பாதையில் பயணிப்பவன்
எல்லா சவால்களையும் தடைகளையும் தாண்டுகிறான்
ஒரே தாவலில்
அவனிடம் இருப்பதெல்லாம் நம்பிக்கை மாத்திரமே அல்லாமல்
மாயஜாலமொன்றுமில்லை
கடவுளை அனாவசியமாய்
அவன் தொந்தரவு செய்வதில்லை.
குட்டையை நீந்திக் கடக்க துடுப்பொன்றைத் தாவென்று
கடவுளை துணைக்கழைக்கிறது பயந்தாங்கொள்ளி மனம்.
பழம் உரித்து தந்தால்தான் சாப்பிடுவேன் என
அடம்பிடிக்கிறது
,
குழந்தை
எல்லாப் பழங்களையும் உரித்துப் பார்த்துவிட்டேன்
பசிக்கு சாப்பிட்டப் பின்
அவற்றின் கொட்டைகளும் ஓடுகளும் தோலும் நிலத்திற்குத் தான்
சொந்தம்
அதை உள்ளங் கையில் வைத்துக் கொண்டு
நீங்கள் எந்தத் தத்துவ ஞானத்தையும்
உலகிற்குப் புளுத்திவிட முடியாது.
000

இலட்சுமண பிரகாசம்
சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
2019 ம் ஆண்டு கஸல்களைப்பாடும் யாரோ ஒருவன் – இந்த நூலுக்காக கலை இலக்கிய மேடை விருது கிடைத்தது.

