சாவகாசமாகத் திருப்ப முடியாதவாறு

துரு ஒட்டி இருக்கிறது

அசைக்கும் ஒவ்வொரு முறையும்

எண்ணிறைந்து விழும் துரு துகள்களின்

ஈரம் நிறைந்த சொற்கள்

திருக்கப்பட்டு ஒழுகும் நீரில்

அடித்துச் செல்லப்படுகிறது

,

அமுக்கி அழுத்திக் குமுறி வரும் நீரால்

என்றைக்கும் துருப்பிடித்த சொற்களை

நெருங்க முடிவதில்லை

ஓட்டைகள் தெரியுமாறு

திருகாணிகள் பொத் பொத்தென

கிழட்டுப் பற்களின் வயோதிகத்துடன் உதிர்கின்றன

 ,

ஒரு துளி திரவத்தால்

ஒட்டுமொத்த கதவுகளையும் நனைக்கும்

வித்தையின் மந்திரம் அல்லது இலாவகம்

இப்போது கலைக்கப்படுகிறது

இனி எவராலும் துருவின் தடங்களைத்

தண்ணீரிலிருந்து பிரிக்க முடியாதென

திருகும் கீல்கள் விழுகிறது

 ,

நகக்கண்களில் இரும்புத் துகள்களைச் சுமந்து வரும்

பாட்டில் பொறுக்கும் மனிதன்

பிரித்து அள்ளிச் செல்லும்

ஆகாத பொருட்களுக்குள் நுழைந்து

எத்தனையோ இடங்களுக்கு பயணப்படலாம்

போகும் திசையிலேயே திரும்பி வர

கால் தூக்கி தீர்த்தம் தெளித்துச் செல்லும்

நாய்களைப் போல

துருவைத் தூவி  அவனுடன் செல்லும்

திட்டம் தீட்டலாம்

உருக்காலை வரை சென்று உருகி ஓடலாம்

இன்னும் இங்கு இருக்க வேண்டாம்

கொஞ்சம் அமைதி, கருணை, ஒளி வேண்டும்

,

*******

 ,

அசைவற்று கிடக்கும்

மணிகள் சிந்திய உடுக்கையில் ஒட்டியுள்ள

மண் துகள்கள் ஒலிக்கும் பாடலுக்குள்

பதுங்கியுள்ள கதைகளில் கௌரவங்களும்

கடும் குளிரினில் நடுங்கும்

போர்வை மூடாத பற்களும்

ஆட்டம் காண்கின்றன

 ,

நறுமணம் பூசி சிரிக்கும் கண்களில்

வெட்கத்தின் தழும்புகள்

வேர் விட்டு முளைத்து

கிளை விரிக்கின்றன

 ,

ஒவ்வொரு இலையும்

உடைந்து முளைத்து

அசைவு கொடுக்காமல் நிற்க

மழையின் நனைதலற்ற வெயிலில்

புரட்டப்பட்ட நிலம் தெரிகிறது

 ,

நிலத்தின் விரிசலுக்குள்ளிருந்து படையெடுக்கும் அனல் வீரர்கள்

செருப்புகளையும் கால்களையும் பொசுக்கி

உடல் மீதேறி நடனம் புரிகின்றனர்

 ,

கதைகளின் வால்கள் சுருட்டிப் பிழிந்த தேள் கொடுக்குகளாக

ஒய்யாரமாய் ஆடும் போது

ஒலிகளற்ற  வெளிச்சத்தைச் சுற்றிய

இருளின் அலங்காரம் சிண்டுகளை அவிழ்த்து

கேவும் சத்தத்தை ஊர் கேட்கவில்லை,

,

*******

 ,

எலும்புகளற்ற கோழிக்கறிகளும்

முட்களற்ற மீன்களும்

பொத்தான்களற்ற கைபேசிகளும்

பிடிகளற்ற செருப்புகளும்

பற்களற்ற சீப்புகளும்

நார்களற்ற தூரிகைகளும்

வாளிகளற்ற கழிப்பறைகளும்

சுற்றாத கடிகாரங்களும்

தீயற்ற அடுப்புகளும்

நூல்களற்ற சட்டைகளும்

மையற்ற பேனாக்களும்

காகிதமற்ற புத்தகங்களும்

சுற்றிலும் நிறைத்து வைக்கப்பட்டிருக்கும்

தூக்கமற்ற இரவுகளில்

சூரியனற்ற வானில்

பிரகாசிக்காத வெளிச்சத்தில்

பார்த்திடாத முகம் ஒன்று

வடிவமற்ற உடலுடன்

மொழியற்ற பேச்சை

நாக்குகளற்ற வாயில்

சத்தமற்ற ஒலிகளில்

விட முடியாத கைகளின்

அசைவுகளற்ற சிலையாக

ஆட முடியாத கோணத்தில்

தீட்டப்படாத சித்திரமாக

மூடுதலற்ற வெட்ட வெளியில்

தொங்கி தொங்கி விழுந்து திரும்பிப் பார்க்கிறது

,

*********

 ,

பட்டுப்பூச்சியின் ஆன்மாவாக அலைந்த பின்

கூடு கட்டப்பட்டது

எச்சிலைத் துப்பி துப்பி ஒழுகவிட்டு

தேய்த்து மொழுவி

பின்னிச் சாய்த்து கட்டப்பட்ட

கூட்டின் வாசனை

ஜொலிக்கும் ஒளியின்

மினுமினுப்பு மீது

சூடான சூரியனின் வியர்வை ஈரம்

ஒரு குண்டா நீராக

‘சலப்’பென ஊற்றப்பட

உருகி ஓடிய பட்டிழைகளால்

பின்னப்பட்ட பெயரின் பின்

ரகசியம் இருக்கிறது.

,

+++

,

முட்டியுயர மேற்கத்திய மலங்கழிக்கும் கோப்பை மீதேறி

கால் மடக்கி உட்கார எனக்குப் பழக்கமில்லை

இக்கோப்பையில் ஏறும்போதெல்லாம்

பாறாங்கல் மீதேறி

எல்லோருக்கும் தெரியுமாறு

கீழ் அரை நிர்வாணத்தில் உட்கார்ந்து

மலங்கழிக்கும் கூச்சம் அப்புகிறது

 ,

குலைந்து விழும் மலத்தினில்

எந்தப் புழுக்களும் ஆரம்பத்தில் இல்லை

புள்ளி புள்ளி விதைகளில் திடீரென எழும்பி

உயரத் தொடங்கும் முயற்சியில்

இப்போது அவை இருக்கின்றன

 ,

தண்ணீரைக் காற்றில் தெளித்து

உறைய விட்டு படியேறி வரும்

அப்புழுக்களின் நெளிவில்

நிர்வாண சூத்திரத்தின் கயமைகளற்ற பசியின் தூய்மை

எழுத்துகளாக வடிக்கப்படுகின்றன

ஒவ்வொரு எழுத்தையும்

சிகரெட் கருமைகளால் பூசப்பட்டுள்ள கதவில்

தண்ணீர் நனைத்த விரல்களில் வரைகிறேன்

 ,

வரையப்பட்ட எழுத்துகளின் வடிவம்

மூதாதைகள் அதிகாலை நாலரைக்கு

முன்னொரு காலத்தில்

குத்த வைத்து உட்கார்ந்து பாடிய பின்

துடைத்துக் கீழே போட்ட இலைகள் பதிந்து இருந்தன

அன்று துடைத்துப் போட்ட சொற்களின் வடிவங்களை

ஏந்தி பறந்த இலைகள்

இன்று உலர்ந்த தடங்களோடு

ஒவ்வொருவர் தலையிலும் விழுந்து

விக்கல் அமர்த்துகிறது

,

******

அரா

அரா என்ற பெயரில் கவிதை எழுதி வரும் அழகுராஜ் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்.

சுதந்திரச் சிந்தனை இலக்கிய அமைப்பில் பயணிக்கும் இவர் கூதிர் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *