பரிபூர்ண வணங்குதலில்
நெகிழ்ந்துருகுகிறது சிவம்.
லாயத்திலிருந்து அவிழ்க்கபட்ட
குதிரைகள் திசைகளற்று
தெறித்து ஓடின
கடவுளின் ஜீவ சமாதி நோக்கி.
0
விளக்கம் தேடி புறப்பட்ட
கனவின் மறு முனையிலிருந்து
விழித்து எழுகிறேன்..
கடனைக் கழிப்பது போல
வடிவமற்று நீர்த்துப் போனவைகளை உதறிவிட்டு
நிலையத்தின் வாசலில்
எனக்குப் பிடித்த ஆவி பறக்கும்
காபியை பருக விரைகிறேன்.
0
குளிரும் வேண்டும்
போர்வையும் வேண்டும்.
மெய்மையும் வேண்டும்..
மெய்மறத்தலும்…
0
உயர் ஆளுமைகளுடன் பழக கூசுகிறேன்..
சற்றும் நெகிழாத
விறைப்பான சுயத்துடன்..
0
என் தேவைகளின் நிமித்தமே
என் நகர்வுகள் ..
0
நாம் வடிவமைக்கும்
ஒலிச்சேர்க்கைக்கு அப்பால்
என்றும் அணுகமுடியாத
அமைதியின் இசை..
நம் உபகரணங்களை உதறிவிட்டு பெருஞ்சுழலில்
குதித்தால் ஒழிய..
கூட்டமாய் நடக்கிறார்கள்
விலகிச் சென்றாலும்
நடந்துதான் ஆக வேண்டும்..
0
இறக்கி விடப் பட்ட இடம்
அக்னிக் காடு ..
ஒவ்வொரு மரமும் அக்னி ஜுவாலை
என வடிவம் கொள்கிறது.
அணைக்க அழைக்கும் கரங்கள்
சிதறும் ஒளிக்கற்றையினால் ஆனது.
0

சுரேசுகுமாரன்
இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.

