சுகதேவ்

புதிர்

அங்கே ஒரு மரம் தெரிந்தது.

பின்னால் இரண்டு பேர் ஒளிந்திருப்பது போல தெரிந்தது.

தூரத்தில் போலீஸ் விசில் சப்தம் கேட்டது.

எதிரேயிருந்த புதருக்குள் யாரோ ஓடுவது போல தெரிந்தது.

போலீஸ் ஜீப் வேறு பாதையில் சென்றது.

படம் முடியவில்லை.

Part 2 வரலாம்.

எண்

பத்துக்குள் ஏதாவது ஓர் எண் சொல் என்றான் நண்பன். ஐந்திலக்க சம்பளம் வாங்குகிறான்.

எனக்கும் ஆசை. ஐந்து என்றேன்.

உன் எண்ணம் பாதிக்குப் பாதியைக்கூட தாண்டவில்லையே… சலித்துக் கொண்டான்.

அதுக்குப் பெயர்தான் கார்ப்பரேட் உலகில் Think Big.

டாட்டா காட்டிவிட்டு பைக்கில் சீறிப் பாய்ந்தான்.

நான் அதே இடத்தில் நின்றேன்.

பூங்கா

காதலர்கள் இருவரும் அந்தப் பூங்காவில் நுழைந்தார்கள்.

தனியாக அமர்ந்து உரையாட இடம் தேடினார்கள்.

சுற்றிலுமிருந்த கண்கள் இவர்களை மொய்த்தன.

இடம் கிடைத்துவிட்டது. அமர்ந்தபின், எல்லோரையும் ஒரு நோட்டம் விட்டார்கள்.

அனைவரும் அப்போதுதான் பூங்காவுக்குள் நுழைந்தது போன்ற பாவனையை வெளிப்படுத்தினார்கள்.

உரையாடல் தொடங்கியது.

*****

சுகதேவ் –

மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *