ரவி அல்லது

மாரிமுத்தும் அவரது மகளும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

“எப்போ முடிப்பாங்கப்பா.”

“போலீஸ் இப்பதான் வந்திருக்கு. இனிமேல் தான் அரஸ்ட் பண்ட்றாங்களா. தாசில்தாரைக் கூப்பிடுவாங்களான்னு தெரியல.”

“அவுங்க நேராக அரசாங்கத்துக்கிட்ட மனு கொடுக்காம.ஏம்ப்பா பப்ளிக்க டிஸ்டர்ப் பண்றாங்க.”

“எல்லாத்தையும் செஞ்சுட்டுதான். அவுங்க ரோட்டுக்கு வந்திருப்பாங்க.”

அந்த வழியாக சென்றவரிடம் மாரிமுத்து விசாரித்த விவரத்தை தன் மகளிடம் சொன்னார்.

“நெல் ஈரப்பத அளவைக் கூட்டிக்கேட்டுப் போராடுகிறார்களாம்.”

“ஈரப்பத அளவுன்னா என்னப்பா.”

“அரசாங்கம் நெல் கொள்முதல் செய்யும்போது அந்த நெல்லில் ஈரப்பதம் 17 சதவீதம் இருந்தால் எடுத்துக்கொள்கிறது.இது மழை காலம் என்பதால் விவசாயிகள் 17லிருந்து 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் எடுக்கச் சொல்லி போராடுகிறார்கள்.”

“அரசாங்கம் ஒத்துக்குமாப்பா.”

“வாய்ப்பு ரொம்ப கம்மிம்மா. நெல்லிருந்து உமியை நீக்கி அரிசியாக்குவதற்கு 14 டூ 15 சதவீதத்திற்குள் ஈரப்பதம் இருக்கனும். இன்னொரு முக்கியமான விஷயம் இந்த ஈரப்பத அளவை மத்திய அரசுதான் 17 என்று பிக்ஸ் பண்ணி இருக்கு. மாநில அரசு எதுவும் செய்ய முடியாது. ஒவ்வொரு முறையும் கடிதம் மட்டும் எழுதுவார்கள்.”

“இதுக்கு தீர்வே இல்லையா.”

“ஜப்பான்ல விவசாயிகள் அறுவடை செய்யும் இடத்திலையே அரிசியாக அரைத்து மூட்டைகளாக கொண்டு செல்லும் மிஷின் இருப்பதாக அங்கு சென்று வந்த நண்பர் சேசு சொன்னார். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. விவசாயிகள் விளைவித்தப் பொருளுக்கு விலை வைக்கிற காலம் எப்போது வருதோ அன்னைக்குத்தான். இதுக்கெல்லாம் விடிவு வரும். அது வரையும் மனச் சாந்திக்குப் போராடிக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.”

பேசிக்கொண்டு இருக்கும்போதே மாரிமுத்து சோர்வாகி கலைப்பாகிவிட்டார். மகள் வற்புறுத்தியதால் இருவரும் பக்கத்தில் இருந்த கடையில் தர்பூசணி ஜூஸ் சொல்லிவிட்டு காத்திருந்தனர்.

கடைக்காரர் மாரி முத்துவின் முக வாடலைப் பார்த்து துரிதமாக ஜூஸ்ஸைப் போட்டார்.

வாகனங்கள் சாலையில் நிற்கும் தூரம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.

கல்லூரி முடித்து வீட்டில் இருந்தபோது அந்த வருடத்தின் நெல் சாகுபடியை மாரிமுத்துதான் பார்த்தார். அவரின் ஐய்யா விவசாயம் செய்தபோது அவ்வப்போது வயலுக்கு சென்று வருவதுபோல் தற்போது அவரால் இருக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் செல்ல வேண்டியதாக இருந்தது. நடவு நட்டதும் அடி உரம் போடச் சொன்னார்கள்.அடி உரம் போட்டதும் அதன் பயிர் செழிப்பாக வளர ஆரம்பித்தது. அதோடு களையும் வளர்ந்துவிட அதைப் பிடுங்க ஆளுக்கு அலைய வேண்டியதாக இருந்தது. பயிரைவிட களை விரைவாக வளர்ந்தது.

“மாரி முத்து சீக்கிரம் களையைப் புடுங்கிற்றா.வேரோட வேராப் பின்னிட்டா பயிருயும் சேர்த்து வரும்டா. வெளியூர்லப் போயாவது ஆளைக் கூட்டியாந்து சீக்கிரம் களை எடுக்கிற வேலைப்பாருடா.”

“சரிங்கய்யா.”

பக்கத்து வயல் பங்காளியைப் போல பலரும் ஆலோசனைகள் சொன்னார்கள்.

ஒரு வழியாக களைகளை எடுத்து முடித்த பிறகு சூழ் கட்டி பூ வெளியே தெரிய ஆரம்பித்தபோது சொல்லி வைத்ததுபோல மழை பெய்தது. ‘பூ அலசிறப்போவுதே’ என்று அம்மா கவலைப்பட்டு அழுததால் அவருக்கு தூங்குவதே சிரமமாக இருந்தது.

ஒரு வழியாக உரங்களைப்போட்டு நெல் அரிசிக்கட்டும்போது கல்லூரியில் ரிசல்ட் வந்ததைப் பார்க்க சென்று நண்பர்களைச் சந்தித்துவிட்டு வருவதற்கு ஒரு வாரம் ஆனது.

இங்கு வந்து வயலுக்கு சென்றுப் பார்த்தால் பூச்சி அடித்து வயலே வெள்ளை வெளேர் என்று இருந்தது. மருந்து அடிக்க ஆள் பிடித்து அடித்தப் பிறகு பார்ப்பதற்கு வயலே அழகாக இருந்தது.

பூச்சிகள் பயிர்த் தோகைகளை தின்றுவிட்டதால், உரம் போட்டதும் வயலைப் பார்த்தால் கதிராகவே மட்டும் காண முடிந்தது. ஊர்க்காரர்கள் அத்தனை பேரும் பொறாமைப் படும் படியாக நல்ல விளைச்சல். ‘மாரிமுத்துக்கு மட்டும் பயிர் எல்லாம் கதிராவே விளைஞ்சிருச்சு’ என்று பேசினார்கள். அத்தனை சிரமங்களுக்கும் நல்ல கூலி கிடைத்ததாக மாரிமுத்து நினைத்துக் கொண்டார்.

இன்னும் ஒரு மாதத்தில் பொங்கல் வரத் தயாராக இருந்தது. காரைக்காப் பதத்திலையே பல இடங்களில் நெற்கதிரின் கனம் தாங்காமல் நெல் பயிர் பல இடங்களில் சாய்ந்து கிடந்தது.

இப்பொழுது போல் அப்போது எல்லாம் கதிர் அறுக்கும் இயந்திரங்கள் இல்லை. ஆள் தேடி மாரி முத்து மறுபடியும் ஒவ்வொரு கிராமமாக தேடி புதுக்கோட்டைத் தாண்டி திருமயம் வரை சென்றுவிட்டார். ஆள் கிடைத்தபாடில்லை.

தட்டைப் பச்சையாக இருந்த பருவம் தோகைப் பழுத்து முழு வயலும் கதிர் அறுக்கும் காலத்தைக் கடந்து அறுப்பு தவறிக் கிடந்தது. நெல் அறுக்கும் போது கதிர் குழை முறிந்து போகுமோ என்றுக் கவலைப்பட்டார்.

ஒரு வழியாக ஆட்களைப் பிடித்து வந்து கதிர் அறுத்து முடித்த அன்று இரவு மழை பெய்து விட்டது.

“நான் அப்பவே சொன்னேன். கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து கதிருக் கட்ட கொண்டாந்து அடுக்குங்க. படுதாவைப் போட்டு மூடியிரலாம்ன்னு சொன்னேன். யாராவது கேட்டீங்களா.”

மாரி முத்து கத்திய போது கதிர் அறுக்க வந்தவர்கள் தலை குனிந்து கொண்டு நின்றார்கள். மூன்று நாள் தொடர்ந்து மழை பெய்ததால் வீடே செத்த வீடு மாதிரி மாறி இருந்தது. வந்த ஆட்களில் கங்கானியும் இன்னொரு பையனும் அறுத்துக் கிடந்த நெல்லின் அரிகளை ஒதுக்கி வாய்க்கால் பிடித்து மழைத்  தண்ணீர் ஒவ்வொரு வயல்களில் இருந்தும் வழிவதற்கு வழிகள் செய்துவிட்டு வந்தார்கள்.

எல்லாம் முடிந்து அறுத்து தூத்தி எடுத்த நெல் மொத்தப் பட்டறையாக கிடந்ததைப் பார்த்து மாரிமுத்து கேவிக் கேவி அழுதார். காரணம் கொட்டிக் கிடந்த நெல்லிருந்து  பொடச வாடை அடித்தது.

அவரது நெல்லை அரசு கொள்முதல் நிலையம் எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டது. தனியார் கடைகளில் அலைந்து ஒருவரைக் கெஞ்சி அழைத்து வந்தார். அப்போதைய மூட்டை விலையில் பாதிக்கு கீழே கடைக்காரர் வாங்கினார். வீட்டை விட்டு அப்புறப்படுத்தி விட்டாலேப் போதும் என்ற முடிவுக்கு வந்திருந்தார் மாரிமுத்து. லாரியில் மாரிமுத்துவின் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அந்தக் கடைக்காரர் விற்றது தான் இந்தியா விவசாய அசிங்க அரசியலின் உச்சம் . தன் கண் முன்னால் வாழ்க்கையை இயற்கை வஞ்சித்தது. இங்கு ஒரு அரசியல் யாவையும் தீர்மானித்தது. அதோடு அவர் விவசாயத்தை விட்டு வந்தவர்தான். ஊரில் உள்ள இடங்களை விற்றுவிட்டார்.

தர்ப்பூசணி ஜூஸ் குடித்தது.அவரது  மன நிலையை பழைய நிலைக்கு கொண்டு வந்தது. பேச்சுவார்த்தை முடித்து வாகனங்கள் நகரத் தொடங்கின. போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தீர்வு கிடைத்ததா என்று தெரியவில்லை.

 மீத்தேன், ஈத்தேன் பிரச்சினை என்ன ஆனது என்றேத் தெரியவில்லை. யாராவது ஒரு விவசாயிடம் கேட்கலாமா என நினைத்தார். அது தேவை இல்லாதது என முடிவு எடுத்தார்.

அவருக்கு விவசாய நிலங்கள் வாங்கி மறுபடியும் நெல் பயிரிடும் ஆசை அடி மனதில் அப்படியே இருக்கிறது. அடியாழத்தில் இருக்கும் அந்த வேரைப் பிடுங்கி அடுத்த தலைமுறைக்குள் நட்டுவிட வேண்டும் என்பது அவருடைய கனவுகளில் ஒன்று.அந்த சிந்தனை வயப்பட்டவராக அவர் பைக்கை ஸ்டார்ட் செய்தார்.

அவர் பைக்கை எடுத்து அந்த கிராமத்தை விட்டு வரும்போது சாலை விரிவாக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது. வாகனத்தை ஓட்டுவது சிரமமாக இருந்தது. விரிவாக்கம் என்பதை தொலை நோக்கு பார்வையில் செய்யாமல் மரத்தை வெட்டி பிறகு மரம் நடுகிறார்கள். பிறகு கொஞ்ச காலம் கழித்து அந்த மரத்தை மறுபடியும் வெட்டி மறுபடியும் விரிவாக்கம் செய்கிறார்கள்.

அப்போது அவரது நண்பர் சிதம்பரம் போன் செய்து அழுதார்.

“அப்பா வண்டிய ஓரமா நிறுத்திப் பேசுங்கள்.” அவரது மகள் நினைவுபடுத்தினார்.

“என்னடா ஆச்சு.”

“அசோக்கை இரண்டு நாட்களாக காணலைடா. போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கு. பேப்பர்ல விளம்பரம் செஞ்சாச்சு. உனக்கு அனுப்பி இருக்கேன். உனக்கு தெரிந்த குழுவில் போடுடா.”

மறுபடியும் சிதம்பரம் அழுதார்.

“சரிடா நான் போட்றேன். நிச்சயமாக வந்துருவான்டா. கவலைப்படாதே.”

சிதம்பரத்தின் மகனைப் பற்றி மகளிடம் சொல்லிக்கொண்டு வந்தார்.

‘பாவம் சிதம்பரம் மனைவி ரொம்ப கவலைப்படுவாங்கம்மா. அவரை அவன் எப்படி சமாதானப் படுத்துவான்னு தெரியல.’ என்று மகளோடு பேசிக்கொண்டு வந்தார்.

“சீக்கிரம் போங்கப்பா. அம்மா சாப்பிடாமல் காத்துக்கிட்டிருப்பாங்க.”

அவர் வாகனத்தை வேகமாக சென்று கொண்டு இருக்கும்போது கோழிப் பண்ணைக்குப் பக்கத்தில் சாலைப் பணியில் ஈடுபட்ட வேலைக்காரர்கள் நான்கு ஐந்து பேர் தண்ணீர் அடிக்கும் லாரிக்கு பின்னால் சுற்றி நின்று இருந்தார்கள். தூரமாக  இருந்து பார்க்கும் போது ஏதோ விபத்து நடந்து இருக்கும் என்பது போல இருந்தது.

மாரிமுத்து பக்கத்தில் பைக்கை நிறுத்தினார். அங்கு ஒரு உடும்பின் பின்னங்காலிற்கு முன்னால் அதன் வயிற்றில் கயிற்றைக் கட்டி ஒருப்பையன் பிடித்து இருந்தார்.

“நேத்து தானே உடும்பைப் பார்க்கலைன்ன. இதுதான் பார்த்துக்க.”

மாரிமுத்துவின் மகள் எட்டிப்பார்த்தார். அது வாலிப்பாக இருந்தது. வண்டியை நிறுத்தியதிலிருந்து அது மாரிமுத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தது.

“உடும்புக்கறி உடம்புக்கு நல்லது. இதை உறிக்கும்போது அழகா அறுத்து எடுங்க. அதன் தோலும் கிடைக்காது.”

” அது அடிபட்டு இருக்கிறதால. புடிச்சி வச்சிருக்கோம். பஸ்லப் போனவங்க சொன்னப் பிறகு தான் எங்களுக்கே தெரிஞ்சது சார். இதோட கறி விசேஷமானதுன்னு.”

மாரிமுத்து பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

“ஏம்ப்பா ரொம்ப நேரமா மௌனமா வர்றீங்க.”

“இல்லைம்மா.நானும் அந்த உடும்புக்கறி நல்லதுன்னு அவுங்ககிட்ட சொல்லிட்டேன். அந்த உடும்பு நான் நின்னதுலேர்ந்து , கிளம்புகிற வரைக்கும் அது என்னையேப் பார்த்துக்கிட்டிருந்தது. அப்படியே காட்சியா இருக்கும்மா. அதோட இடுப்புல கயிறு கட்டி அந்த ஆள் பிடித்து இருக்கிறார்.அதுக்குப் பின்னால் நாம் நிற்கிறோம். அது தலையை மட்டும் திருப்பி கடைசிவரை என்னைய பார்த்துக்கிட்டு இருந்துச்சு. ஒரே மாதிரி கழுத்தை வச்சிருந்துச்சே. அதுக்கு கழுத்தை வலிச்சிருக்காது.”

“ஏம்ப்பா இப்படி ஆயிட்டீங்க.”

“இல்லைம்மா. அதை வாங்கி சமைக்கனும்னுதான் தோணுச்சு.அதை அவர்களிடமிருந்து வாங்கி விடுவிக்கனும்ன்னு தோனவே இல்லையேம்மா.”

“சரி அதை விடுங்கப்பா.”

“என்கிட்ட இப்போ பணம் இல்லைப்பா. இருந்தா அதை வாங்கி விட்றலாம்.”

“எவ்வளவு வேணும்ப்பா.”

அவருக்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. தன்னிடம் பணம் இருந்தால் அதற்கு எவ்வளவு கேட்டாலும் கொடுத்து விடுவார். அதை மகளிடம் சொல்ல தயங்கினார்.

“அப்பா என்கிட்ட ஐநூறு ரூபாய் இருக்கு. நீங்கள் அதை வாங்கிறதுன்னா  வாங்குங்க.”

அவர் தயங்கினாலும் எதற்கும் அவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம் என வண்டியத் திருப்பினார். இப்போது அங்கு இரண்டு பேர்தான் இருந்தார்கள். உடும்பை ஒரு செடியில் கட்டி வைத்து இருந்தார்கள்.

“என் மகள் உடும்புக்கறி சாப்பிட்டதில்லைங்குது. பணம் தருகிறேன். தரலாமா சார்.”

“அதைப் புடுச்சவன். அங்கே அதோ ஒயின் ஷாப்புக்குப் பக்கத்தில் தண்ணீரை ரோட்ல அடிச்சிக்கிட்டு இருக்கான் பாருங்க. அவனைக் கூப்பிட்றேன். அவன்கிட்ட கேளுங்கள் சார். பணம் எல்லாம் கொடுக்க வேண்டாம் சார்.”

அந்தப் பையன் வந்ததும் அவன் கொடுக்கத் தயங்கினான். அவன் அந்தக்கறி சாப்பிடுவதில் தன்னைத் முன் தயாரிப்பு செய்து பெரும் கனவு கண்டுவிட்டான் என்பது தெளிவாக தெரிந்தது.

“தம்பி இரு நூறோ முன்னூறோ தர்றேம்பா.”

பணத்தைச் சொன்னதும் அவன் கொஞ்சம் முகம் மாறியது. அதை அவன் வெளிக்காண்பிக்கத் தயங்கினான்.அதை மாரிமுத்து கவனித்ததால் கொடுத்துவிடுவான் என்று முடிவு செய்தார் . பணம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னவன் மாரிமுத்து பணம் தருகிறேன் என்றதும் அவசரப்பட்டதாக கண் ஜாடை செய்தான்.

“டேய். சார் எவ்வளவு கெஞ்சலாக கேட்கிறார். அவர் மகள் இதுவரை உடும்புக் கறி சாப்பிட்டதில்லைங்கிறார். இதை ஒரு வாரம் வச்சிருந்து. ஊருக்குப் போகும்போது அங்க கொண்ட சமைச்சு சாப்பிடனுங்கிறே. இது சரியா வருமான்னு. யோசிச்சுப் பாருடா.”

“இங்கேயே சமைக்கலாம்ன்னு யோசிக்கிறேன்.”

“வடக்குலேர்ந்து வந்தவன். கறிக்கொழம்பை வீணாக்கிடுவான்டா. இது தேவை இல்லாத முயற்சிடா.” பணம் கொடுக்க வேண்டாம் என்ற இளைஞர் சொன்னார்.

தண்ணீர் லாரியின் பக்கத்தில் நின்றவர் இவர்களை அழைக்க, இவர்கள் துண்டை ஆட்டி ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

மாரிமுத்து மகள் கொஞ்சம் தூரமாக நின்று கொண்டு செய்கையில் கேட்டார். கையின் கட்டை விரல் தம்ஸ் அப்பை நேர் கோட்டில் காண்பிக்காமல் கொஞ்சம் சாய்த்துக் காட்டியதும். அவர் ட்ரைப் பண்ணுங்க என்று வடிவேல், சரத்குமாரின் படத்தில் செய்வது போல் செய்தார். மகளை வெறுப்பேத்த அவரை நோக்கி அவர் நகருவதுபோல பாவனை செய்தார். அந்தக் காமெடியைப் புரிந்து கொண்ட மகள் செய்கையிலையே ‘கொலை பண்ணிருவேன்.கொலை ‘ என்பதுபோல செய்ய. அவர் சிரிப்பை முகத்தில் காண்பிக்காமல் குனிந்து கொண்டார்.

வாகனங்களில் செல்கிறவர்கள் இவர்களைப் பார்த்தபடி சென்றார்கள். உடும்பைப் பார்த்தவர்கள் அது மறையும் வரை கழுத்தை சாய்த்துப் பார்த்துக் கொண்டு போனார்கள்.

“தம்பி. நான் மாலை இது வழியாக வேலையாக செல்வேன். அப்போது உடும்புக்கறி குழம்பை கொஞ்சம் கொண்டு வந்து தரவா.”

“இல்லை வேண்டாம் சார். எப்படி இதைக் கொண்டு போவீங்க.”

அவர் தயாராக அவரது பைக்கில் இருந்து எடுத்து வந்த வெள்ளைச் சாக்குப் பையைக் காட்டினார்.

“இடுப்புல இருக்கிற கயித்தோட தூக்கி உள்ளப் போடவா.”

“அதுக்கு முன்னால என்கிட்ட பணம் வாங்கிங்கத் தம்பி.”

“என் தங்கச்சியா இருந்தா. தரமாட்டேனா சார்.”

“இல்லைப்பா.அதுதான் பணம் கொடுத்து வாங்கச் சொன்னிச்சு.”

அவர்கள் இரண்டு பேரும் மாரிமுத்துவின் மகளைப் பார்த்தார்கள். அவர் மாரிமுத்துவின் செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார். மாரிமுத்து கொஞ்சம் பதட்டத்திற்கு ஆளானார். மனைவியிடம் உடும்பு விவரத்தைச் சொன்னால் பரவாயில்லை. மகனிடம் சொல்லி இருக்கக்கூடாது என்று நினைத்தார். அவரைப் பொறுத்தவரை எந்த செய்தியும் ஆளுக்குத் தகுந்த மாதிரி சூழ்நிலையைப் பார்த்து சொல்ல வேண்டும் என்று நினைக்கிறவர்.

“நூறு ரூபாய் மட்டும் கொடுங்க சார்.”

“அத்தனைப் பேர்ல நீ சிரமப்பட்டு புடிச்சிருக்க. அதனால் நான் குடுக்கிறதை மறுக்காம வாங்கிக்க.”

அவர் பையை நீட்டினார். அவன் உடும்பின் வாயைப் பிடித்து  அதன் உடம்பில் அணைத்து அழுத்திப் பிடித்தவாறு கயிறை ஒரு கையால் அவிழ்த்துவிட்டு பையின் வாயை சுருட்டி, உடும்பைப் பிடித்திருந்த இடது கையை வெளியே எடுத்தான். பக்கத்தில் கிடந்த சின்ன நூல் கயிற்றால் கட்டி கொடுத்தான். மாரிமுத்து கீழேக் கிடந்த குச்சியை எடுத்து நான்கைந்து ஓட்டைகளைப் போட்டார். உடும்பு உள்ளே துள்ளிக்கொண்டே இருந்தது.

“சார் கடிச்சாலும் கடிச்சிரும் பார்த்து எடுத்துட்டுப் போங்க.”

“உடும்பு கடுச்சா தடுப்பூசி இருக்கான்னு தெரியல.” பணம் கொடுக்க வேண்டாம் என்று சொன்னவன் சொன்னான்.

மாரி முத்து கவனமாக இடது கையில் தன்னை விட்டு கொஞ்சம் தூரமாக பிடித்தார். வலது கையால் சட்டைப் பைய்யுக்குள் வைத்தே சுருட்டிய, ஐநூறு ரூபாயை  உடும்பு வைத்திருந்தப் பையன் சட்டைப் பையில் வைத்து விட்டு அவர் கிளம்பினார்.

“சார் என்ன நீங்கப் பண்ட்றது.”

“இரண்டு பேரும் பிரியாணி வாங்கி சாப்பிடுங்க. நான் இதற்கு இந்த விலை கொடுத்துதான் வாங்க வந்தேன். நீங்கள் தரமுடியாது என்று சொல்லி இருந்தால் என்னால் என்ன செய்திருக்க முடியும் சொல்லுங்கள். ரொம்ப நன்றி தம்பிங்களா.”

அதற்குள் தண்ணீர் ஊற்ற அந்தப் பையனை அழைக்க, மாரி முத்து மகளை நோக்கி நடந்தார். அவர் இப்போதும் போனில் பேசிக் கொண்டு இருந்தார்.

அவர் செய்கையில் யார் என்றார். தாளி தொங்குவது போல மகள் செய்கை செய்தார். அவருக்கு மனைவி என்று கொஞ்சம் நிம்மதி வந்தது. உடும்பு பையைக் காட்டி ‘இதைச் சொன்னியா’ என்றார். இல்லை என்று மகள் தலையசைக்க அவர் பழைய மன நிலைக்கு மாறிவிட்டார்.

“அப்பா உங்க கண்ணுல மரணப் பயத்தை பார்த்தேன்.”

” அண்ணன்கிட்ட பின்னாடி நான் பக்குவமா சொல்லிக்குவேன்.”

“அய்ய… அண்ணனும் எனக்குப் போன் பண்ணானே.”

அவர் வண்டியில் பைய மாட்டிவிட்டு மகளை முறைத்தார்.

“அப்பா நாம் பைக்ல என் கால் மோதினப் பத்தி சொல்லிகிட்டு இருந்தேன்.”

பையில் இருந்த உடும்பு உள்ளே முண்டியபடியே இருந்தது. மாரிமுத்துவிற்கு வண்டியில் போகும் போது கடித்துவிடுமோ என்ற பயம் வந்தது.

மகள் பின்புறத்தில் உடும்பைப் பற்றி பேசியபடியே வந்தார்.

“அப்பா இப்பதான் ஒரு வீடியோ பார்த்தேன். அரிகரசின்னான்னு ஒரு யூடியூப்பர் உடும்பைப் பத்தி ஒரு வீடியோ போட்டிருக்கார். உடும்பு முதலையின் முட்டைகளைச் சாப்பிட ஒரு உடும்பு முதலையின் கவனத்தை திசை திருப்பி தன் பக்கம் ஈர்த்து, முதலையை தொரத்த அழைத்து விடும்போது காத்திருக்கும் உடும்பு முதலை முட்டைகளைத் தின்குமாம். முட்டைகளைச் சாப்பிட்ட உடும்பு முதலையின் கவனத்தை அதன் பக்கம் ஈர்க்கும்போது அந்த முதலை அதனைத் தொரத்த, முதலில் ஓடிய உடும்பு இப்போது முட்டைகளை உண்ணுமாம். சுவாரசியமாக இருக்குல்ல.”

“…”

“ஏம்ப்பா மௌனமா வர்றீங்க.”

“அதீதமா நடக்கிறேனோன்னு தோனுதும்மா.”

“நான் வேற நினைக்கிறேப்பா.”

“என்ன”

“இதை வளர்ப்போமா.”

அது பையில் துள்ளித் கொண்டு இருந்தது.ஸ்கூட்டி என்பதால் இரண்டு கால்களுக்கு நடுவில் தொங்கிக்கொண்டு இருந்தது அவருக்கு மேலும் பயத்தைக் கொடுத்தது.

“நமக்கு நிறைய வேலைகள் இருக்கு. நீயும் கொஞ்ச நாளில் கிளம்பிப் போயிருவ. நான் அதிகமாக வெளியூர் போகிற ஆள். அக்கம் பக்கம் நம்மை ஏதாவது சொல்வார்கள். அதை வாங்கனும்ன்னு தோனுச்சு. வாங்கிட்டோம். இதே அம்மா கூட அண்ணன் கூட வந்தால் இதை நான் வாங்கி இருக்கமாட்டேன். அப்படி ஒரு எண்ணம் வந்திருக்குமான்னு தெரியல. கூட இருக்கிறவர்களைப் பொறுத்துதான் எண்ணங்களும் ஆசைகளும் தோன்றும்.”

இருவரும் மௌனமானார்கள். அவர் பைபாஸூக்கு முன்பாக உள்ள நசுவினி ஆற்றுப் பாலத்திற்கு முன்பாக இருக்கும் மர நிழலில் பைக்கை நிறுத்தினார். பாலத்தை ஒட்டிய பகுதியில் குப்பைகள் கொட்டி இருந்தார்கள். முன்பு ஒன்று இரண்டு கிடக்கும். இப்போது ஒரு லாரியில் ஏற்றும் அளவிற்கு கிடக்கிறது. நகரத்தில் மக்களை ‘மக்கும் குப்பை மக்காத குப்பைகளாக பிரித்து தாருங்கள்’ என்று சொன்னதால் அங்கிருந்து மூன்று நான்கு கிலோமீட்டர் பயணித்து வந்து  இந்த இடத்தில் போட்டுச் செல்கிறார்கள். இந்த விசயத்தில் பெங்களூரைப் பாராட்டலாம். காலையில் ஆறு மணிக்கு குப்பை வண்டி வரும். தனித்தனியாக பிரித்த குப்பைகளைக் கொடுக்கவேண்டும். மொத்தமாக குப்பைகள் இருந்தால் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். பிறகு வெளியே எங்கேயும் அந்தக் குப்பைகளைப் போட முடியாது. ஒரு முறை எல்லாம் கலந்து இருந்த குப்பையை கொடுத்தவர் வீட்டின் வாசல் கதவு அருகே குப்பைகளை கொட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் பிரதானமாகப் பகிரப்பட்டது.

சிதம்பரம் போன் செய்தார்.

“ரொம்ப நன்றிடா மாப்பிள்ளை.”

“என்னடா ஆச்சு.”

“திருச்சியில் ஒரு டீக்கடையில் அசோக் இருக்கான்னு.ஒருத்தர் போன் பண்ணாருடா. ஏதோ ஒரு குழுவில் நீ போட்டு இருந்தியாம். உன் நம்பரைத்தான் போன் பண்ணவர் சொன்னாருடா. என் தம்பியோட மச்சான் அங்க எஸ்.ஐயா இருக்கார். அவர் அங்க போயிருக்காருடா. தேங்க்ஸ்டா மாப்பிள்ளை. அசோக் வந்ததும் லதா அவனை அழச்சுக்கிட்டு வந்து உன்னையப் பார்க்கனும்ன்னு சொன்னிச்சுடா. தேங்க்ஸ் டா மாப்பிள்ளை. மச்சான் போன் பண்ட்றாருடா. நான் வைக்கிறேன். அப்புறம் பேசுறேன்டா.”

போனில் பேசியது வெளியே கேட்டதால் மாரி முத்து மகள் இதெல்லாம் எப்போது என்று செய்கையில் கேட்டார்.

“அவன் எனக்கு பேசி முடிச்சதும். அப்படியே ஒரு குழுவில் பார்வேர்ட் பண்ணேம்மா.”

அவரது மகள் அவரின் முதுகில் வழக்கமாக எப்போதும் குத்துவது போல் குத்தினார்.

“எனக்கு ஏன் உங்களைப் பிடிக்குது தெரியுமா.”

“சொல்லும்மா.”

“உங்களுடைய அன்றாட வேலைகளுக்கு இடையில் அவைகளுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் நீங்கள் விரும்புற எல்லாத்தையும் சிறப்பாக செஞ்சிற்றீங்கப்பா.”

“அதுக்கு நான் பல பேருக்கு நன்றி சொல்லனும். அதில் பல பேர் இப்போது உயிருடன் இல்லைம்மா.”

“கால் வலி அதிகமாக இருக்குப்பா.”

“வீட்டிற்குப் போயிட்டு ஹாஸ்பிடல் போகலாம்மா.”

“வேணாம் பார்த்துக்கலாம்ப்பா”

அவர் பைக்கில் இருந்த ஆர்.எஸ் பதியை எடுத்து மீண்டும் அடிபட்ட இடத்தில் ஊற்றினார்.

“இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க.”

இருவரும் திரும்பிப் பார்த்தபோது முதல்சேரி சேசு பைக்கில் நின்று கொண்டு இருந்தார்.

“கால் வலிக்குதுன்னுச்சு. அதான் ஆர்.எஸ் பதி தைலத்தை தடவி விட்டேன்.”

“துவரங்குறிச்சியில ஒரு ஆளைப் பார்க்கனும்.  ஒரு தம்மடிக்கிறதுக்குள்ள. பத்து வாட்டி போன் அடிச்சுட்டான்.நான் கிளம்புறேன். வேல் முருகன் ஊர்லேர்ந்து வந்திருக்காப்ல.”

“நான் போன் பேசிக்கிறேன்.”

மகள் உடும்பு பற்றி சொல்லிவிடுவாரோ என்று பயந்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் சிங்கப்பூர் செல்ல மணிக்கூண்டில் தஞ்சாவூர் பேருந்தில் ஏறுவதற்கு நிற்கும் போது தபால் நிலையத்தில் வேலை பார்க்கும் அருள் செல்வனை அவர் பார்க்க நேர்ந்தது. அவரிடம் விவரங்களைச் சொல்லிவிட்டு பேருந்தில் ஏறும்போது செருப்பின் அடியில் இருந்த மண்ணைத் தொட்டு முத்தமிட்டு பேருந்தில் ஏறினார். அப்போதிருந்த அவருடைய ஏதோவொரு புரிதல் அது. அவர் சிங்கப்பூரிலிருந்து வந்து பல ஆண்டுகள் கழித்து அருள் இதைச் சொல்லி கிண்டலடித்தார். அதுபோல இதுவும் தன் நண்பர்களிடம் பரவிவிடுமோ என்று கவலைப்பட்டார். நல்ல வேளை அதுபோல் எதுவும் நடக்கவில்லை.

அவர் சென்றதும் பையை எடுக்கலாம் என குனிந்த போது யாரும் சாலையில் வருகிறார்களா என்று பார்த்தார். வலது புறம் ஒரு பேருந்தும் அதற்குப் பின்னால் ஒரு பைக்கும் வந்தது.அது கடந்து சென்ற பிறகு இடது புறமும் வலது புறமும் திரும்பிப் பார்த்தார்.யாரும் வரவில்லை. ஆற்றங்கரையில் தூரமாக ஒருவர் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அவருக்கு அங்கிருந்து பார்த்தால் தெரியாது.

பையை எடுத்து அதன் கயிற்றை அவிழ்த்து கீழே உடும்பு விழ பையை உதறினார். உடும்பு இவர்களைப் பார்த்தபடி நின்றது.

“அப்பா நம்மல எதுவும் கடிச்சிறாதே.”

அது பார்த்தபடி அப்படியே இருந்தது. யாரும் வருகிறார்களா என்று மாரி முத்து பார்த்தார். இப்போதும் யாரும் வரவில்லை. மரத்தின் மீது இருந்த காகம் கரைந்து கொண்டு இருந்தது. உடும்பு நின்ற இடத்திற்குப் பக்கத்தில் ஏதோ உணவு மீதம் கிடந்ததில் சுள்ளான் மொய்த்துக் கொண்டு இருந்தது. கொஞ்சம் தூரமாக தண்ணீர் பாட்டில்,பிராந்தி பாட்டில்,காலி கப்கள் கிடந்தது. ‘குடிக்கிறவங்க அதைத் தூக்கி ஓரமாக போடமாட்டேங்கிறாங்களே’ என்று கோவம் அவர்கள் மீது மாரி முத்துவிற்கு எப்பொழுதும் உண்டு.

உடும்பு மெதுவாக நடந்தது. கொஞ்ச தூரம் சென்று நின்றது. செடியாக மண்டிக் கிடந்த வேலிக்குள் சென்றது. அந்தப் புதருக்குள் சென்ற பிறகு தலையை மட்டும் வெளியே நீட்டி இவர்களைப் பார்த்துவிட்டு உள்ளே மறைந்துவிட்டது.

இப்போதுதான் மாரி முத்துவுக்கு மனம் நிம்மதியானது. வண்டியை எடுக்கும் போது தான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம் என்று யோசித்தவாறேக் கிளம்பினார்.

“ஏம்ப்பா அவுங்க ரிலேட்டீவ்ஸ் எல்லாம் அங்க இருப்பாங்களே. நீங்க அதை இங்க கொண்டாந்து விட்டுட்டீங்களே.”

“ஆமல்லா… அவுங்கப் பொண்ணைப் பார்க்கனும்ன்னு நேத்து போன் பண்ணுச்சு. அதான் இங்க கொண்டு வந்து விட்டுட்டுப் போறேன்.”

முதுகில் குத்தி இடுப்பில் கில்லினார் மகள்.

பாலத்தைத் தாண்டியதும் அவர் பைக்கை திடீரென  பிரேக்கை அழுத்தி இடத்து பக்கம் ஒதுக்கி மறுபடியும் வேகத்தைக் கூட்டிய போது அவரது மகள் மீண்டும் முதுகில் குத்திக் கொண்டே வந்தார். ஓணானுக்காக அவர் வண்டியை திடீரெனப் பிரேக் அடித்து ஒதுக்கி ஓட்டியதற்கு நீங்கள் அவருக்கு பின்னால் உட்கார்ந்து இருந்தால் என்ன செய்வீர்கள் என்று தெரியாது.

***

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *