மாரி கிருஷ்ணமூர்த்தி
ரயிலில் ஏறியதிலிருந்து என்னையறியாமல் முகங்களை கவனிக்க ஆரம்பித்தேன். விதவிதமான முகங்கள்,பாவங்கள்,உற்சாக துளிர்ப்புகள்,சோக பிரமைகள், அன்றாடங்களின் சாயல்கள் என புழுக்கத்தின் வேர்வை போல அத்தனை முகங்களிலும் ஒரு சோபை ஒட்டியிருக்க பார்வையை வேறு பக்கம் திருப்பினேன்.
ஏற்ற,இறக்கமென ரயில் தடத்தின் ஒலிக்கு ஏற்ப என் மனதடங்களும், நான் பார்த்த முகங்களின் நினைவுகளும் ஓடிக்கொண்டிருக்க. வெளியில் மஞ்சள் சூரியன் அந்த ஒலிக்கேற்ப அசைந்தபடி பின்னாடியே வந்துக்கொண்டிருந்தது.
மனத்தடங்களின் வேகம் கூடும் போதெல்லாம் அடைக்கலம் தேடும் இடமாக திருப்பதிக்கு போவது இப்பொழுது வழக்கமாகியிருந்தது. காற்றின் திசைக்கு அடங்காமல் மரம்,செடி,கொடியெல்லாம் பின்னோக்கி ஓடிக்கொண்டிருக்க ரயில் வேலூரை கடந்துக்கொண்டிருந்தது. சட்டென கோதை அக்கா நினைவுக்கு வந்தாள் .
கோதை அக்கா இந்த ஊருக்குத்தான் வாக்கப்பட்டு வந்திருக்கிறாள்.
அவளை கடைசியாக எப்போது பார்த்தேன் என்று நினைவுகளில் தேடிய போது அவள் அம்மாவின் எட்டாம் நாள் கிரியையில் வெளி திண்ணையில் கோட்டை மலையை வெறித்து பார்த்தபடி உட்கார்ந்திருந்த சித்திரம் அலையாடியதும் மனமும்,ரயிலின் ஓசையும் வேகம் பிடித்தது.
“கடைசியா கோதை கிட்டதான்டா பேசியிருக்காங்க அப்புறம் போய் என்ன நினைத்தாளோ கிணத்துல இறங்கிட்டா”
‘’உப்பி பெருத்து போன தாயின் முகத்தை பார்க்கமுடியாம கோதையிட்ட ஓலம்
கோட்டை மலையையே உலுக்கியிருக்கும். அன்னியிலிருந்து கோதை முகத்துல இருந்த அம்சம் அப்படியே கலைஞ்சு போச்சுடா! உன்ன பார்த்தாலாவது அவ முகத்துல பழைய கல வருதான்னு பார்க்கலாம் நீ வந்துட்டு போடா’’ என்று அக்கா சொன்ன போது கூட போக கூடாது என்று தான் இருந்தேன். ஆனால் மடி பால் தேடி ஓடும் கன்று குட்டி போல எத்தனை தடவை பால்யத்தில் அவளை தேடி ஓடியிருக்கிறேன். அவள் கஷ்டத்தில் இருக்கும் போது பார்க்காமல் இருந்தால் எப்படி என்று போயிருந்தேன்.
ஜூவாலை மினுங்கியிருக்கும் அவள் கண்களில் பாழேற்றி போன துயர கண்ணீரை பார்த்ததும் தாங்கமுடியாமல் அக்கா எவ்வளவு தடுத்தும் நாணலோடை நோக்கி ஓடினேன்.
புதர் மண்டி கிடந்த ஓடை நீர் வற்றி போய் நாணல்கள் காய்ந்துகிடந்தன. தூர்ந்து போன காவாய் மணலில் உடைந்த நந்தை ஓடுகள் சிதறிகிடக்க கரையில் பெருத்து வளர்ந்திருந்த மஞ்சணத்தி மரத்திலிருந்து வாடிய பூக்கள் அவ்வோடை முழுக்க விரவியிருக்க இருளின் பாடலை துயர வீட்டிலிருந்து கருவண்டுகளின் ரீங்காரமென காற்றில் கொண்டு வந்து காதை அடைத்தது.
அந்த சத்தம் தாங்கமுடியாமல் காதை பொத்திக்கொண்டு அழுது தீர்த்த பிறகும் அந்த ஒப்பாரியின் பாடலோசை முழுக்க கோதையக்காளின் குரலாக கேட்க
பெண்ணை கால்வாய் பக்கம் ஓடினேன். ஒப்பாரி பாடல் கேட்காத தூரம் வந்த பிறகு அப்பிகிடந்த இருள் விலகி கோட்டை மலையில் நிலவு எழுந்திருந்தது.
பால் பொழியும் நிலவின் சாந்தத்தில் மனதை விட்டுவிட்டு அப்படியே தான் தோன்றியம்மன் பாறையில் படுத்துகிடந்தேன். தூங்கி எழுந்து பார்த்த போது நடுச்சாமம் கடந்திருந்தது. கோட்டை மலைக்காடு மெளனத்தில் முகிழ்ந்திருக்க பால் பொழியும் நிலவின் வெளிச்சத்தில் தான் தோன்றியம்மன் கோயில் கருவறையில் ஒற்றை சுடர் மட்டும் சுடந்துக்கொண்டிருந்தது.
தூரத்திலிருந்து பார்க்கும் போது அந்த சுடர் கோதையக்காவின் நெற்றியில் எப்பொழுதும் இருக்கும் “திருச்சாந்து” போலவே இருந்தது. கோதையரின் கண்ணனாய் அவள் மடியில் விளையாடிய நாட்கள் எல்லாம் பால் பொழியும் நிலவை போல துலங்கியது
அந்த தெருவில் இருந்த அத்தனை கோபியருக்கும் நான் தான் கிருஷ்ணன். என் சில்மிஷங்கள் தான் அவர்களுக்கு விளையாட்டு. யாதவ குலத்தில் பிறந்த கிருஷ்ணன் இல்லை ராமனுஜ தாசரால் கண்டெடுத்த கிருஷ்ணன்.
ரத்த பந்தம் இல்லாத என் மேல் இவ்வளவு அன்பை ஏன் சொறிகிறாள் என்று அக்காவிடம் கேட்கும் போதெல்லாம் ’ன் பெயர் மேல் இருந்த கிருஷ்ண பிரேமை தாண்டா’ என்பாள்.
மூன்று பக்கமும் கோட்டை மலை சூழ பெண்ணையாற்றின் பேரோடை நீர் சொறிய முற்றி இருக்கும் நெல் வயல்களும்,கரும்பு தோட்டங்களுக்கும் நடுவே பனிப்படலத்தோடு துயில் எழும் கிராமத்தில் அக்காவை கட்டிகொடுத்த
இரண்டாவது வருஷமே மூன்று வயதாக இருந்த என்னையும் கூடவே கூட்டி போய் விட்டாள்.
அக்காவின் எதிர்த்த வீடுதான் கோதையாக்கா வீடு. பத்து தூண் வைத்த பரந்த விரிந்த திண்ணை. அதை தாண்டி போனால் நடு முற்றம். அதைச் சுற்றி ஆறு அறைகள். பின் பக்கம் பெரிய சமையலறை. அதை தாண்டி போனால் வாழையும்,பூமரங்களும் சூழ்ந்திருக்கும். தோட்டத்துக்கு நடுவே துளசி மாடம் வைத்த பெரிய சுற்று கிணறு, அதையும் தாண்டி போனால் மேற் கூரையில்லாத நூறு மாடு அடையும் மாட்டு பட்டி, அதையும் தாண்டி போனால் தென்னையும்,மாமரமும் சூழ்ந்த இருபது ஏக்கர் பெண்ணை நீர் பாயும் வயக்காடு.
கோதையக்காவின் அப்பா திருக்கோவிலூர் ஜீயரிடம் முத்திரை பதித்து பாகவதர் ஆன பிறகு சாதி,மதம் பார்க்காமல் நாள் தோறும் ஆட்கள் வீட்டுக்குள் வந்து சாப்பிட்டு போனார்கள். வெளியூரிலிருந்து வரும் பாகவதர்களோடு இணைந்து ஆண்டு தோறும் திருப்பதியில் நடக்கும் பத்து நாள் உற்சவத்தில் பாகவத கீதம் பாடுவதை கேட்க சுற்றியிருக்கும் அறுபது ஊர்சனமும் ரயிலேறி போய் காத்து கிடப்பார்களாம்.
பாகவத கீதத்தோடு சொத்துக்களும் கரைந்து போய்விடுமோ என்று பயந்த அவளது சித்தாப்பாக்கள் பாகம் பிரித்தது போக கோதையக்கா குடும்பத்துக்கு மிஞ்சியது என்னவோ நான்கு தூண் வைத்த திண்ணையும் இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே.
அந்த திண்ணையையே தடுத்து வீடாக்கி பாகவத பாடல்களை கோதையக்காவுக்கு கையளித்துவிட்டு பரமபதம் போன போது கோதையக்காவுக்கு பத்து வயது .
அதன் பிறகு
ஏழு மாதம் பனி பொழியும் ஊரில் சிற்றுயிர்க்கும் கோதையக்காவின் பாடல் தான் துயிலெழுப்பும் “அந்தாதி” மாலையில் கோட்டை மலையின் ஈர மேகத்தோடு பட்டி திரும்பும் ஆயிரம் பசுக்களின் கழுத்து மணியோடு கலந்து திவ்ய பிரபந்தத்தின் பக்தி ரசம் ஊரை நிரப்புமாம்.

முன்னிரவு காட்டோடையின் சலசப்பு போல தனித்து பாசுரம் கேட்கும் திருமாலை மங்களம் பாடி தூங்க வைப்பது போல அவள் மடியில் இருந்த என்னையும் பாடி தூங்க வைப்பாள் என்று அக்கா சொல்லியிருக்கிறாள்.
கள்ளகபட்மற்ற அவள் இளமை காலம் முழுக்க அவள் நிழல் போல என்னை தூக்கி சுமந்திருக்கிறாள் .
பெரும் கூவலோடு ரயில் நின்ற போது சனங்கள் போட்ட சத்தத்தில் கோட்டை மலைகாட்டின் பூரண நிலவொளி நினைவுகள் மறைந்து பூஞ்சையான நினைவுகளாக ரயில் பெட்டிக்கு வெளியே கோதையக்கா போவது போல இருந்தது.
ஒளி சிதறல்களாக மின்னிய நகரத்துக்கு மேலே மலை முகட்டில் திருநாமம் தெரிய ரயிலிருந்து இறங்கிய எல்லோரும் கோவிந்தா கோவிந்தா என்று போட்ட கோஷம் அந்த அந்த மலையை போய் முட்டியது போல இருந்தது.
அங்கிருந்து வெளியேறி டீ கடையில் நின்ற போது என் பின்னாடி ஒரு உருவம் தொடர்வதை போல பிரமை தட்டியது. தூரத்தில் நாத மணியோசையில் கோவிந்தம் பாடியபடி வெண்ணிற ஆடையில் உடலெல்லாம் திருநாமம் போட்டுக்கொண்டு ஒரு பஜனை கூட்டம் வந்துக்கொண்டிருக்க அந்நாதத்தில் இருந்த பரவசம் உடலெல்லாம் மெல்லிய காற்று போல பரவ அவர்கள் பின்னாடியே என் கால்கள் தானாக போனது.
ஆத்மத்தின் குரலும்,காற்றும் இசைந்தெழும் மோன ரூப தருணத்தை முதல் முறையாக உணர்ந்தது ஒரு மாலையில் நாணலோடையில் இருக்கும் தாமரை குளத்தில் குளித்துகொண்டிருக்கும் போதுதான்.
அப்பொழுது எட்டொ, ஒன்பதோ படித்துக்கொண்டிருந்தேன்.
நாணல் பூக்களும் வெண்தாமரையும் பூத்திருக்கும் குளத்தை சுற்றி வியாபித்திருக்கும் பூவரச மரசெறிவில் கேட்கும் குயிலோசையோடு கோதையக்காளின் பாடல் மெல்லியதாக காற்றில் வந்துக்கொண்டிருந்தது.
பூவரச மரத்திலிருந்து வந்த மெல்லிய காற்று பட்டதும் உடலெல்லாம் காதுகளாக புடைக்க கோட்டை மலையில் சுனை திறந்து வழியும் நீரோசை கூட துள்ளியமாக கேட்டது. அக்காற்றில் எழுந்த திருஞ்சாந்து மனம் கமிழ சுற்றியிருந்த ஒவ்வொரு பூக்களிலும் கோதையக்காவின் ரூபங்களாய் தெரிந்தன.
சலனமற்றிருந்த அந்தியின் மோன பரப்பில் நட்சத்திரங்கள் மினுங்களாக அத்தனையிலும் அவள் நின்றிருந்த பிரேமை எழ அக்குரல் வந்த திசையை நோக்கி கால்கள் ஓடின.
வெளி திண்ணையில் நடுசாந்திரமாக உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்த அவள் முகத்தில் வெளிப்பட்ட சாந்தமும்,கண்களில் ஒளிரும் கருணையும்
அவளை சுற்றி இருந்த அத்தனையிலும் பிரதிபலிக்க தாயீன்ற கன்று போல அவளை பார்த்துக்கொண்டிருந்தேன்.
பாடல் நின்று நாத பரவசம் வெளியேறி தன்னுணர்வு வந்த நேரம் மென்மையான காலை புலர்வு சுற்றிலும் தென்பட அலமேலு மங்காவரம் குளக்கரையில் நின்றிருப்பது தெரிந்தது.
கிருஷ்ண தாச மடம் பழமை மாறாமல் பெரும் நாமத்தோடு என்னை வரவேற்றது.
கோதையக்காவுக்கு திருமங்கல கோலம் பூண்ட நாளில் எழுந்த மங்ளா ஓசை இன்னும் அப்படியே நினைவில் எழுந்தது. பூந்தோரண மேடையில்
ஆண்டாளாக வீற்றிருந்த கோதையின் கழுத்தில் மாலையிட்ட முகம் நானாக உருவகித்த அந்த கணம் வர என் கால்கள் பின்னுக்கிழுத்தன. மோன பரப்பின் அவள் முழு உடல் நிர்வாணத்தில் என்னை கட்டி தழுவிக்கொண்டிருக்க ஆத்மம் சொரூபம் மங்ளாம் மங்களாம் மங்களாம் என தீநினை எழா அவள் சொல்லிக்கொடுத்த மந்திர உபதேசத்தை மாலையிட்டுக்கொண்டே இருக்க உடல் சில்லித்து நின்றேன்.
என் கண்கள் கனவிலியில் முழ்கியது.
அவளின் சாயலாய் அந்த இடத்தில் தேவி வந்து நின்றாள். அவளின் குறும்பான கண்களில் சிறு தீற்றலென கோதையக்கா வந்த கணம் நாணலோடையில் நீர் இல்லாத நாட்களில் பசு தழைகளைகளில் போர்த்தியிருக்கும் சிலந்தி வலையென அவள் நினைவுகள் மேலெழுந்தன.
அவளை கண்கொண்டது இதே குளத்தில் பத்தாம் நாள் உற்சவத்தின் மங்கா நீராடும் நாளில் தான் மெண்ணுடை அணிந்து நீர் சொட்ட குளமேறி வந்த அவளின் பாதகொலுசின் சினுங்கலோடு அவள் பின் பற்றிப்போனேன்.
பட்டத்து யானை சூழ வெண்குடையேந்தி ரங்கன் பள்ளியெழந்து வீதி உலா போக கிருஷ்ண ராதை கோலத்தோடு குழந்தைகள் கோலாட்டம் போட்டபடி போய்க்கொண்டிருக்க, அந்த நாட்டிய பேரொலியில் திரும்பி சிறுமுகையென பூத்த அவள் அதரத்தில் எங்கள் காதல் முகிழ்ந்தது. லட்ச திரளில் அவள் மட்டும் மங்காவுக்கு கொண்டு போகும் ரத்தின சீர் வரிசை போல ஜொலித்தாள். செந்தாமரை பூவை கையேந்தி போன அவள் கைகளில் இருந்த நளினம் ரங்கதாதனின் மார்பகத்தில் சேர துடிக்கும் பத்மாதேவியின் மோன நடனம் போலவே இருக்க..
இதோ என் கோதையென அவள் வசமானேன். மூன்று வருடம் உற்சவத்தை பார்த்த எங்கள் காதல் எங்கே எக்கணம் என்றறியமுடியாத சிறு காரண கணத்தில் எங்களை விட்டு வெளியேறியது.
மங்களா உச்சாடனம் நிலைத்து அடங்கிய பிறகு கண்கள் தெளிய பார்த்தேன். கல் பாவி கிடந்த மங்கா குளம் யாறுமற்று வெயிலில் தனித்திருந்திருந்தது. பாசி சூழ்ந்திருந்த குளத்துக்கு நடுவே இருந்த மண்டபத்தில் ஒரு நாய் மட்டும் நிழலுக்கு படுத்திருக்க கிருஷ்ண தாச மடத்துக்குள் நுழைந்தேன்.
பெரும் தூணெடுத்து நின்ற மடத்தில் ஒவ்வொரு அசைவிலும் கிருஷ்ண அவதார ஓவியங்கள் பாவிக்கிடந்தது. மூலவரையில் இருந்த ரங்கனும்,பத்மாவதி தாயாரும் திருக்கோலத்தில் தனிமையில் வீற்றிருக்க யாத்திரை தேடி வந்தவர்கள் படுத்துக்கிடந்தார்கள்.
மங்கா கோயிலில் அபிஷேக ஒலியடித்ததும் கோவிந்தம் பாடியவர்கள் எழுந்து போக ஆரம்பித்தார்கள். கொஞ்சம் தூரம் போனதும் கோவிந்த ஓசை சோபையாக வந்தது. முன்னேயிருந்த நாத வெளி ஒட்டாமல் பிசிறி காற்றில் கலைய சட்டென தேவி விட்டகழ்ந்த அந்த காரணவெளி துலங்கியது.
மறுபடியும் ஆத்மம் சொரூபம் மங்களாம் மங்களாம் மங்களாம் என்று உச்சாடனம் இட்டபடி வெளியேறி நடக்க ஆரம்பித்தேன்.
பெரு மலை பாதை நெருங்கும் போது இரவு கவிழ்ந்திருந்திருந்தது. மேகதிரளில் மலை முகிழ்ந்திருக்க மெல்லிய குளிர் போர்த்தியது. பாதையில் இரண்டொரு நபர்களாக போய் கொண்டிருந்தனர். மூன்று மலை தாண்டி கொஞ்சம் தூரம் போனதும் இருளின் வெளிச்சம் துலக்கமாக தெரிய என்னை கடந்து ஒருவள் போக காற்றில் திருஞ்சாந்து மனம் எழுந்து என் நாசியை நிரப்பியது. காற்றின் மென் நடனத்தில் தாள லயத்துடன் மங்களா பாடல் ஒலிக்க காட்டோடையின் நீர் சல சலப்பு ஆழமாக கேட்டது. பூந்தூரலாய் மழை பொழிய அவள் திரும்பி ‘ஆத்ம பந்தம்’’ என்றாள். ஒரு கணம் அவள் கண்ணில் கோதை எழ துயர் கலைந்த பூரண வெளி எங்கும் தூய நிர்வாணம் துலங்கியது.
000

மாரி.கிருஷ்ணமூர்த்தி
திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தை சேர்ந்தவர். கடந்த பதினைந்து வருடமாக தீவிர இலக்கிய வாசிப்பும், கடந்த பத்து வருடமாக இணைய இதழ்களில் அவ்வபோது சிறுகதைகளை வெளியீட்டு வருகிறார்.”தளம்” சமூக உறையாடல் மையம் வழியாக இலக்கிய கூட்டங்களும், ஊர் பொது கிணறு புணரமைப்பு இயக்கம் வழியாக மூன்று பொது கிணறுகளை மக்களோடு இணைந்து தூர் வாரி மக்களிடமே ஒப்படைப்பு வேலையும் செய்திருக்கிறார். அத்தோடு சொந்த ஊரில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான கல்வியை நோக்கி “தும்பட்டான்” சிறார் மாலை நேரப்பள்ளியும் நடத்தி வந்திருக்கிறார். தற்சமயம் the film school லில் படித்து முடித்து சுயாதீன சினிமா எடுக்கும் பணியில் இருக்கிறார். அப்பா மாரிமுத்து. அம்மா ஜெகநாதம்மாள். மனைவி சுகன்யா கிராமத்தில் வசிக்கிறார்.

